ஒரு சிறுவனின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 7,449 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூரத்திலே குரல் கேட்டது:

கண்ணாடே , கரையாரே, காக்கணவம் பூச்சியாரே, முன்னூறு முழங்காலைத், தட்டிக் கொண்டு

வ…ரட்…டோ!

அவர்கள் கூகூவென்று சத்தமிட்டார்கள்.

சிறீக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவனும் கூவென்று குரல் கொடுத்தான். அவன் குரல் சன்னமாகத்தான் ஒலித்தது. குறுக்கும் மறுக்குமாக எல்லோரும் ஓடினார்கள்.

கைகள். இரண்டையும் கோத்தபடி, சிறி, பெரு விரலை நிலத்திலே ஊன்றி, எம்பிப் பார்த்தான்.

ஒருவரையும் காணவில்லை.

அவனுக்குப் பயமாயிருந்தது.

அவனும் விரைவில் ஒளித்துவிட வேண்டும்.

தேகமெல்லாம் மெல்லிய கூதல் ஓடியது. அவன் மெதுவாகக் குதித்தான். அவன் கண்கள் மலர்ந்து பார்த்தன. யாருமே அவனுக்குத் துணையாக இல்லை.

சிறீ ஓடினான்.

திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினான்.

அவனுக்கு இளைத்தது. அண்ணாந்து பார்த்தான்.

கொத்துக் கொத்தாக நாவல் பழம் காய்த்துக் கிடந்தது.

அவன் நாவல் பழம் சாப்பிடமாட்டான். சாப்பிட்டால் பல்லிலே சூத்தை அரிக்கும். ரவியனுக்கு அப்படித்தான் பல்லிலே சூத்தை வந்தது.

சிறீயின் அம்மாதான் அப்படிச் சொன்னாள்.

அவசரமாய் அவன் பொட்டுக்குள் குனிந்தான். குனிந்த போது அவன் சட்டை இறுக்கியது. அது வார்ச் சட்டை .

அவனுக்கு எரிச்சலாக வந்தது.

புறங்கையால் கண்ணை உரசிவிட்டான்.

அது எரிந்தது .

– கட் கடா, கட்கடா, கட்கடா.

சரசக்கா தைத்துக் கொண்டிருந்தாள். அவள் தைக்கும் போது குனிந்தபடி இருப்பாள் ; அவனை அவள் பார்க்கவில்லை.

அவன் மார்பு நடுக்கத்துடன் அடித்துக் கொண்டது.

முழங்கைகள் இரண்டையும் மெஷின் தட்டில் ஊன்றி நாடியைத் தாங்கியவாறு, அவன் சரசக்காவையே உற்றுப் பார்த்தான்.

சரசக்காவின் கழுத்திலே பவுடர் இன்னும் அழியாமலேயே கிடந்தது. அது குட்டிகுறா பவுடர். அவனுக்கு

அந்த மணம் பிடிக்கும். அவனுடைய அம்மா பவுடர் டின்னை எட்டாத உயரத்தில் வைப்பாள். அவனுக்கு கைநிறையப் பவுடர் பூச ஆசை. சரசக்கா தைப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அவன் சொன்னான்:

– சரசக்கா , சரசக்கா, எனக்கு ஒளிக்கிறதிற்கு ஒரு இடம் காட்டுங்கோ :

சரசக்கா அவன் தலையைத் தடவிவிட்டாள். மெஷினுக்குக் கீழே அவனை ஒளிக்கச் சொன்னாள்.

அவனை அவர்கள் கண்டு பிடிக்கவே மாட்டார்கள். அவர்கள் வந்து தேடினாலும் அவன் சத்தம் போடக் கூடாது. இருமல் வந்தாலும் இருமக்கூடாது…

சரசக்காவின் கால்கள் ஆடுவதை அவன் பார்த் தான். அவள் அணிந்திருந்த கிமோனா விலகிய போதெல்லாம் அவளுடைய பாதங்கள் தெரிந்தன. அவை வெள்ளை வெளேரென்று இருந்தன.

அவர்கள் கேட்டார்கள்:

– சரசக்கா , சிறீ வந்தவனே?

அக்கா சொன்னாள்:

– அவன் இஞ்சை வரேல்லை.

சிறீ மகிழ்ச்சியில் அக்காவின் கால்களைக் கட்டிக் கொண்டான். அக்காவின் கால்கள் ஆடாமல் நின்றன.

கீழே குனிந்து அக்கா அவனை எடுத்தாள்.

அக்கா ஒரு கை நிறையச் சிவப்புக் காப்பும், ஒரு கை நிறையக் கறுப்புக் காப்பும் போட்டிருந்தாள்.

அந்தக் கைகள் மெத்தென்று இருந்தன.

அந்தச் சிவந்த உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது.

அதிலே பிரம்பால் அடித்தால் நீலமாகக் கன்றிப் போகும். வாத்தியார் அடிப்பதற்கு கையை ஓங்கும் போது அவனுக்கு நடுக்கமாக இருக்கும்.

ஆனால் அவன் கையை அரைவாசியில் இழுக்கக் கூடாது. அடி விழுந்த பிறகு கையைக் கால் சட்டை யில் துடைத்துக் கொண்டு மறுகையை நீட்ட வேண்டும்.

வாத்தியார் மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி விட்டு கூர்மையாகப் பார்ப்பார்.

என்றாலும் அவன் சொக்குலட் சாப்பிடுவதை அவர் காண மாட்டார். பாதிச் சொக்குலட்டை அவன் ரவியனுக்குக் கொடுத்து விடுவான். சட்டையை வைத்துக் கடித்துத்தான் கொடுப்பான். வெறும் வாயால் கடித்தால் தான் எச்சில்.

அவன் அப்பாவுக்கு கடிதம் எழுதுவான்:

– எனக்கு ஒரு கலப் பெஞ்சில் வேணும், சொக்கு லட் ரெண்டு பெட்டி, நாய்ப் படம் போட்ட கலப் பெஞ்சில், வேறொண்டுமில்லை.

அவனுடைய அப்பா யாழ்தேவியில் வருவார். அவனுக்கு அது தெரியாது. ஏனென்றால் யாழ்தேவி நடுச் சாமத்திலேதான் வரும்.

அவன் விழிக்கும் போது அம்மா அவனைத் தனியே கிடத்தியிருப்பாள்.

தனியாகப் படுக்கிற தென்றால் அவனுக்குப் பயம். பேய் இல்லையென்று அவனுக்குத் தெரியும். வாத்தியார் சொல்லியிருக்கிறார்.

முருக்கமர நிழல் தான் சில வேளைகளில் பேய் போல ஆடும். ஆனால், உண்மையில் அது நிழல் தான்.

இரவில் கடிகாரத்தின் சப்தம் மட்டும் தான் கேட்கும் :

டக் டிக், டக் டிக், டக் டிக்.

இருட்டிலே இரண்டு கம்பிகள் மாத்திரம் தான் தெரியும். ஒன்று பெரியது, மற்றது சிறியது. இரண்டும் மினுங்கிக் கொண்டிருக்கும்.

மகேனுக்கு நேரம் பார்க்கத் தெரியும். அவனுக்குத் தெரியாது. அவனும் மூன்றாம் வகுப்புக்குப் போனவுடன் நேரம் பார்ப்பான்.

***

பாண்காரன் வருவான். அம்மா பாண் வாங்கு வாள். சிறீ பக்கத்திலேயே போய் நிற்பான். பாணை அடிக்கடி தொட்டுப் பார்ப்பான். அது மெல்லிசாகச் சுட்டுக் கொண்டிருக்கும். அவனுக்கு அந்த மணம் பிடிக்கும். சரசக்கா வீட்டுப்பாணையும் அவன் தான் கொடுப்பான்.

அம்மா சொல்லுவாள்:

– இதைச் சரசக்கா வீட்டிலை கொண்டேய் குடு. அம்மா மீண்டும் கத்துவாள்:

– குடுத்திட்டு அங்கை நில்லாமல் கெதியிலை வா.

அவன் விரைவிலே திரும்ப மாட்டான். அவனுக்கு சரசக்காவை நிறையப் பிடிக்கும். அவளுடைய முகம் வட்டமாக இருக்கும்.

அதிலே கருத்தப் பொட்டு போட்டிருப்பாள் ; பெரிய பொட்டு.

அம்மா அவனுக்கு கறுத்தப் பொட்டுத்தான் போடுவாள். போடும் போது கன்னத்தை ஆட்டாமல் இருக்க விரல்களால் இறுக்க அழுத்துவாள். அவனுக்கு வலிக்கும்.

பென்சிலைத் தீட்டி விட்டு கூர் பார்ப்பதற்கு கன்னத்தை உப்பி வைத்து, குத்திப் பார்க்க வேண்டும்.

கல்லுப் பென்சில் தான் நல்லது, உடையாது. மாக்கட்டிப் பென்சில் உடைந்து போகும்.

சோதனைக்கு அப்பா கல்லுப் பென்சில் தான் வாங்கி வருவார். அவன் அதனால் தான் எழுதுவான்.

அவன், தலைக்குமேலே பாணைத் துக்கிக் கொண்டு ஓடினான். துள்ளித் துள்ளி ஓடினான். அவன் போட்டிருந்த சட்டையின் வார் தோளை விட்டு விழுந்தது. அவன் திரும்பவும் எடுத்துவிட்டான்; அது மறுபடியும் விழுந்தது.

சரசக்காவைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான்.

பொட்டுக்குள் அவன் குனிந்தான். ஒரு கையை மண்ணிலே ஊன்றிக் கொண்டு அவன் கூப்பிட்டான்.

– சரசக்கா!

அவன் மறுபடியும் கத்தினான்.

– உந்த நாயைப் பிடியுங்கோ!

முழங்காலில் குறுணிக் கற்கள் குத்தின.

கம்பளப்பூச்சி, சிவப்பாக, அழகாக இருக்கும். அதைப் பிடித்துவைத்து விளையாட அவனுக்கு ஆசை. ஆனால் கூடாது. அது சிவபெருமானுடைய எச்சில் பன்ன வேலை அக்காதான் அப்படிச் சொன்னாள்.

–ரத்-தி-னேஸ்-வரி.

– ரத்தினேஸ்வரி.

ரத்தினேஸ்வரி அக்கா கேட்டாள்:

– உன்ரை பேரென்ன?

அவன் சொன்னான்:

– சிறீ.

ரத்தினேஸ்வரி அக்கா அவனை வியப்புடன் பார்த் தாள். மறுபடியும் அவள் கேட்டாள்:

– நீ எங்கை இருக்கிறனி.

அவன் சொன்னான்:

– தலை வாசலுக்கை .

அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். ரத்தினேஸ் வரி அக்காவும் சிரித்தாள்.

சிறீயும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க முயன் றான். அவனுக்கு அழுகைதான் வந்தது.

– அவர்கள் எதற்காகச் சிரித்தார்கள்?

ரவி கீச்சுக்குரலில் கத்தினான்:

– கொக்குவில்.

அவர்கள் ஒருவரும் சிரிக்கவில்லை.

ஏன்?

சரசக்கா நாயைப் பிடித்துக் கொண்டு அவனைக் கூப்பிட்டாள். அவன் எழும்பி நின்று முழங்கால் மண்ணைத் தட்டி விட்டான்.

சரசக்கா பாடம் சொல்லித் தருவாள். அவ ளுடைய உதடுகள் அசைவதையே அவன் பார்த்துக் கொண்டிருப்பான். றம்புட்டான் பழத்தோலை எடுத்து விட்டது போல, அவளுடைய கண்கள் குளுமையாக இருக்கும்.

அவனுடைய தலை பொலிஸ் குறப்பாக வெட்டி இருக்கும். அக்கா மெல்லக் குட்டுவாள். அவன் கணக்கு பிழை விட்டால் தான் குட்டுவாள்.

அவர்கள் பாடுவார்கள் –

மொட்டைப் பாப்பா,
சட்டி உடைப்பான்.
மூண்டு பானை
கூழ் குடிப்பான்.

அவன் தொண்ணூறு பலாவிலை கூழ் குடிப்பான்; அண்ணை ஆயிரம் பலாவிலை குடிப்பான்; அப்பா தொளாயிரம் பலாவிலை குடிப்பார்.

சரசக்கா திருப்பித் திருப்பிக் கேட்பாள்:

– இருபத்திரண்டிலை ஒம்பது போனால் எத்தினை?

அவனுக்கு நித்திரையாக வரும்.

கைவிரல்களைப் பிடித்துப் பார்ப்பான்; கால்விரலை யும் சேர்த்தால் கூட இருபத்திரண்டு வராது போல இருக்கும்.

சரசக்காவைப் பார்த்து அவன் மெல்லச் சிரிப்பான். கை விளக்கை வாயினால் ஊதி விடுவான்.

அது மௌனமாக அணைந்துவிடும். சரசக்கா குனிந்து அவனை முத்தமிடுவாள்.

அவன் கையால் முகத்தை மூடுவாள்; அவனுக்கு வெட்கம். தங்கையைத்தான் முத்தமிடலாம்; ஏனென்றால் அவள் அரிவரி; அவன் இரண்டாம் வகுப்பு; அவனை முத்தமிடக்கூடாது. என்றாலும் அவனுக்கு சரசக்காவைப் பிடிக்கும். ஆனால், கார்த்திகேசு மாஸ்டரைத்தான் அவனுக்குப் பிடிக்காது. அக்கா கார்த்திகேசு மாஸ்டரைத்தான் சடங்கு முடிப்பாள். அவர் அக்காவிடம் அடிக்கடி வருவார்.

***

சரசக்கா முன்பென்றால் யாரைக் கண்டாலும் ஒளிப்பாள்; எழுத்துக்குப் பிறகு அவருடன் மாத்திரம் கதைக்கலாம். அவன் பெரியவன் ஆனாலும் சரசக்கா வைத்தான் சடங்கு முடிப்பதாக இருந்தான்.

இனிமேல் அவன் முடிக்கமாட்டான்.

நாவல் பழம் என்றால் அக்காவுக்கு ஆசை. அவன் நல்ல பழமாகப் பொறுக்கிக் கொண்டு போவான். அவனுக்கு உள்ளே போக வெட்கமாக இருக்கும்.

கார்த்திகேசு மாஸ்டர் உயரமாய், கறுப்பாய் இருப்பார். அக்கா அவரோடுதான் கதைத்துக் கொண்டு இருப்பாள்.

சிறீ கையைப் பின்னுக்கு மறைத்துக் கொண்டு வாசலிலே நிற்பான். கதவு நீக்கலுக்குள்ளால் பார்ப்பான்.

அக்கா அவனைக் கையைக் காட்டி கூப்பிடுவாள். ஒரு பழத்தை மாத்திரம் தான் எடுப்பாள்.

– எனக்குக் காணும் சிறீ . நீ கொண்டேய் சாப்பிடு.

அவனை மடியிலே இருத்தக்கூட இல்லை; கன்னத் திலே கிள்ளக்கூட இல்லை.

அவனுக்கு அழுகை அழுகையாக வரும்.

நாவல் பழத்தை அவர்கள் வீட்டுக் குந்திலேயே விட்டெறிவான்.

***

அக்காதான் அவனுக்கு அளவெடுத்தாள். அது வார்ச்சட்டை. அக்காவுடைய சடங்கு வீட்டுக்கு அதைத்தான் போடுவான். அதிலே சிவப்புப் பொத் தான் எல்லாம் நிறைய வைத்திருக்கும்.

அக்கா அவனுடைய கண் இமையை நிமிண்டிப் பார்த்தாள் ; சிறீ அவளை வியப்புடன் அண்ணாந்து பார்த்தான்.

அக்கா அவனுடைய அம்மாவை வேலிக்கு மேலால் கூப்பிட்டாள்.

அவள் சொன்னாள்.

– இவன் சிறீயைத் தொட்டுப் பாருங்கோ, தேகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு.

அம்மா அவனுடைய சட்டையைக் கழற்றிப் போட்டு முதுகையெல்லாம் தடவிப் பார்த்தாள். அவளுடைய முகம் கறுத்தது.

சிறீக்குச் சோர்வு சோர்வாக வந்தது. அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு போய்ப் பாயிலே கிடத் தினாள். பாயிலே பழைய சீலையெல்லாம் விரித்திருந் தது. சிறீ கால்களை முடக்கிக்கொண்டு கிடந்தான்; அவனுக்குப் படுக்கை கதகதப்பாக இருந்தது.

மறுபக்கம் திரும்ப அவனுக்கு ஆசையாகத்தான் இருந்தது. தேகமெல்லாம் நோவாக நொந்தது. அம்மா அவனை ஆட அசையாமல் கிடக்கச் சொன்னாள்.

அப்படிக் கிடந்தால் அவனுக்கு வருத்தம் மாறி விடும். சரசக்காவுடைய சடங்கு வீட்டுக்கு அவன் போவான். புது வார்ச்சட்டை போட்டுக்கொண்டு போவான்.

சரசக்கா அளவு சட்டை கொண்டு வந்து அவ னுக்கு போட்டுப் பார்ப்பாள்…ஆனால் இப்போது அவனுக்குக் கிட்ட ஒருவரும் வரக்கூடாது. அம்மா மாத்திரம் வரலாம். அம்மா அவனுக்குக் கொதிக்கும் இடங்களில் எல்லாம் வாயால் ஊதி விடுவாள்; அவனுக்கு சுகமாக இருக்கும்.

முகட்டிலே வேப்பமிலைக் கொத்து சொருகியிருக் கும். அது அவனுடைய தலைக்கு நேரே இருக்கும். அம்மாதான் அதை அங்கே வைப்பாள். அவன் அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அது கண் ணுக்கு வெகு வெகு சமீபத்தில் இருக்கும். அவன் கையை நீட்டுவான்; அது எட்டாது. அது எங்கேயோ தூரத்தில் தெரியும்.

ஒரு மைல், இரண்டு மைல், பத்து மைல் , ஆயிரம் மைல், தொள்ளாயிரம் மைல், கோடி லட்சம் மைல்.

அவன் கஞ்சிதான் குடிப்பான்; அவனுடைய பீலிஸிலேதான் குடிப்பான். அவனுடைய பீலிஸ் பச்சை. அண்ணையினுடையது சிவப்பு. அதன் ஓரம் உடைந்திருக்கும். தங்கச்சியினுடையதும் பச்சை; ஆனால் அதிலே வெள்ளைக் கோடு போட்டிருக்கும்.

தங்கச்சி அவனுடைய பிலிஸை எடுத்தால் அவன் சண்டை பிடிப்பான்.

மணவறையில் இருக்கும் மணியெல்லாவற்றை யும் அவன் தங்கை பிடுங்குவாள் ; அவனிலும் பார்க்க அவள் கூடச் சேர்த்துவிடுவாள்; அவனும் சேர்ப்பான் தான். தங்கைக்குத் தெரியாமல் சேர்ப்பான்.

அக்கா மணவறையில் தான் போய் இருப்பாள். சேலை எல்லாம் உடுத்துப் பெரிய பொம்பிளை போலத் தான் இருப்பாள். ஆனால் உண்மையில் அவள் சின்னப் பொம்பிள்ளை தான்.

பக்கத்தில் கார்த்திகேசு மாஸ்டர்தான் உட்காரு வார். உயரமாய் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பார்; பெரிய ஸ்டைல்; அவனுக்கு எரிச்சலாக வரும்.

மாப்பிள்ளைக் கார் சோடித்து அலங்காரமாக வரும். அதிலே பச்சை, நீலம், சிவப்பு விளக்குகள் எல்லாம் பூட்டியிருக்கும். மாப்பிள்ளைக் காரிலேதான் அவன் ஏறுவான். அக்கா அவரோடு ஒட்டிக்கொண்டு தான் உட்காருவாள்.

சரசக்காவிடம் ஓட அவனுக்கு ஆசையாக இருந்தது. அங்கே நிறைய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். சரசக்கா சிறியை இழுத்து மடியிலே வைத்துக் கொள்ளுவாள்; அவனுக்கு வெட்கமாக இருக்கும். பறித்துக்கொண்டு ஓடுவான்.

அம்மாவுக்குத் தெரியாமல் அவன் அக்காவிடம் போய்விடுவான். ஆனால், அவனுக்குப் பயமாயிருக்கும். அவன் ஈரத்துக்குள் இறங்கக்கூடாது. அம்மா கண்டால் அடிப்பாள்.

***

அவனுக்கு ஒன்றுமே இல்லை. மறுபக்கம் திரும்பிப் படுத்தான். நோகவே இல்லை.

ஆனால் அவன் அம்மா இப்படித்தான் நாளைக்கு நாளைக்கென்று சொல்லுவாள். அவனை எழும்பவே விடமாட்டாள்.

எல்லாம் பொய்; மேளச் சத்தம் கூட அவனுக்குத் தெரியும். லைட்மிஷின் சத்தம் கூட அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும். அவன் ஒன்றும் கூடப் பார்க்கவில்லை. புதுச் சட்டை கூடப் போடவில்லை.

அவனுக்கு அம்மா முழுக வார்ப்பாள். கோயி லிலேதான் வார்ப்பாள். அதற்குப் பிறகு அவன் மீன் கறி சாப்பிடுவான்; ஈரத்துக்குள் இறங்குவான்.

அவன் எழுந்து உட்கார்ந்தான். இலையான் எல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி மொய்த்தன. அவன் அவற்றையே உற்றுப் பார்த்தான்.

அவை சத்தம் போட்டன.

– நொண் , நொண, நொண்.

சிறீ தன்னுடைய சிறிய கைகளால் அவற்றை விரட்டினான்; அவை திருப்பித் திருப்பி வந்தன.

அவனுக்குக் களைப்பாக இருந்தது. அவன் அக்கா விடம் ஓடுவான்; அம்மாவுக்குத்தெரியாமல் போவான்; அக்காவின் மடியில் ஏறி இருப்பான்; அக்கா சங்கி லியை வாய்க்குள் கடித்துக் கொண்டிருப்பாள், சிறீ இரண்டு விரல்களால் அதைப் பிடுங்குவான்.

பாண் காரனின் மணிச் சப்தம் கேட்டது. நாய் குரைத்துக்கொண்டு ஓடியது.

சிறீயின் நெஞ்சு படக் படக்கென்று அடித்தது. சன்னலுக்குள்ளால் எப்டிப்பார்த்தான்; அம்மா குழை ஒடித்துக் கொண்டிருந்தாள்.

சிறீ மெதுவாகச் சொன்னான்:

– ஒரு றாத்தல்.

நிலத்திலே கால் ஊன்ற அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ஒரு கையிலே பானை வாங்கிக்கொண்டு அவன் ஓடினான்; திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடினான்.

தூரத்திலே அம்மா கொக்கைத் தடியைப் போட்டு விட்டு ஓடி வந்தாள்.

அவள் கத்தினாள்:

டேய் சிறீ !

அவள் மேலும் மேலும் கூப்பிட்டாள்:

ஈரத்துக்கை ஓடாதை, இஞ்சை வா!

அவன் கவனிக்காமல் ஓடினான். களைக்கக் களைக்க ஓடினான்.

ஒரு கையால் நிலத்தை ஊன்றிப் பொட்டுக்குள் குனிந்தான்.

அவனுடைய வெறும் முதுகில் சுரீர் என்றது.

குழைக் கம்புடன் அவன் அம்மாநின்றாள்; அவள் மெதுவாகத்தான் தொட்டாள்; அவனுக்கு உயிர் போவது போல இருந்தது.

அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.

கீழே விழுந்த பாணை முகர்ந்து பார்த்து விட்டு நாய் திரும்பி ஓடியது.

***

விம்மி விம்மி அவன் அழுதான்; அவன் மெலிந்த முதுகு எழும்புவதும், விழுவதுமாக இருந்தது. முதுகெல்லாம் எரி எரியென்று எரிந்தது.

அவனுக்கு விக்கல் மாறி மாறி வந்தது. அப்பா வந்ததும் அவன் கட்டாயம் சொல்லுவான்.

கஞ்சி மணம் அவனுக்குத் தெரியும்; ருசிதான் அது. அவனுக்கு வேண்டாம். அம்மா வந்தால் அவன் குப்புறப்படுக்க வேண்டும்.

விம்மல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவனுக்கு விக்குவது நின்று விடும்.

அம்மா குசினிக் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டது. மறுபடியும் அடக்க முடியாமல் அவனுக்கு விம்மல் பொங்கி வந்தது.

சடக் சடக்கென்று புடவைச் சத்தம் கேட்கும். அவன் திரும்பவே மாட்டான்.

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *