ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன்.
சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப் பார்த்து குளித்துக் கொண்டு இருந்த கீதா கூறினாள்.
சரி சரி,வைக்கிறேன். என பாலை அடுப்பில் வைத்தான்.
குளித்து முடித்து வந்த கீதா, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லே, பாலை வைன்னா அப்படியே வச்சுடறதா? அடுப்பை மூட்ட வேணாமா? அப்படி என்னத்தான் கத்துக்கிட்டிங்களோ,
என்ன செல்லோ, கொஞ்சும் கூட ஒத்தாசையா இல்லைன்னா, கஷ்டம்தான், இப்படியே இருபது வருடமாக நான் உழைக்கிறேனே, ஏதாவது உங்களை வேலை வாங்கியிருப்பேனா? ஒரு பாலைக் கூட கவனமாக அடுப்பிலே வைக்க முடியலை இல்ல உங்களால? என வழக்கத்திற்கு மாறாக திட்டினாள்,
அதுவே அவள் வாழ்வில் கடைசி கலக்கும் காபி என அறியாமல்.
தம்பீ,தம்பீ,கீரை வேணுமா? நல்லா இளசா இருக்கு, பாரு,என்று கூவினாள்,காய்கறிப் பாட்டி ,
நினைவு கலைந்துப் பார்த்தான், கூடையைச் சுமந்தபடி நின்றிருந்தாள், மாரியம்மா.
இங்கு ஜாகை வந்ததிலிருந்து இவதான் இருபது வருடமாக காய் கறிகள் கொடுப்பார்.
விலை கூடுதல் என்றாலும்,கீதா இவளிடமே வாங்குவாள்,
பாவம்,நம்மளை நம்பித்தான் இவ சுமந்துகிட்டு வருகிறாள்,நாம வாங்கினாத்தான் இவளுக்கும் குடும்பம் நடக்கும், பாட்டி மற்றும் அவள் விதவை மகள் மட்டுமே வீட்டில்.என்பதை அறிந்து அவள் கனிவாக நடத்துவாள்.
ஒன்டிக்கட்டைக்காக ஏன் நீங்க இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வாரிங்க? ஏதாவது வேணுமுன்னா நான் வாங்கிக் கொள்கிறேன் என்றான் சந்தானம்.
மவராசி,அவ நினைப்பாவே இருக்கு, இங்க வந்து கொஞ்ச நேரம் குந்தினா நிம்மதியா இருக்கு, முகத்தைப் பார்த்துப் புரிந்து மோர்தண்ணி,சாப்பாடு கொடுக்கும். என்ன வாழ்க்கையோ?
நானெல்லாம் பூமிக்கு பாரமா இங்கே கிடக்கிறப்போ, இந்த வயசிலே உன்னைய தனியா விட்டு விட்டு போயிடுச்சே? என கண் கலங்கி,அவன் மனதை கலங்கடித்தாள்.
தனியா வாழறது எவ்வளவு வலி என்பதை நானும் உணர்ந்து, என் மவளும் அனுபவிக்கறதை நான் பார்க்கும் படி பண்ணிட்டானே இந்த ஆண்டவன்.
ஏம்மா,உன் மகளுக்கு என்ன வயசு இருக்கும்?
சரியா தெரியலை,ஆனா விதவையாகிற வயசில்லப்பா!
எனக் கூறி மனத்தில் ரணம் கூட்டி கண்ணில் நீர் வைத்தாள்.
குலை தள்ளாமலே வெட்டின வாழை கணக்கா யாருக்கும் உபயோகம் இல்லாம அது போயிடுச்சுப்பா!
மணமாகி இரண்டே வருடம் வாழ்ந்து வாரிசும் இல்லாம புகுந்த வீட்டாலயேயும் விரட்டப்பட்டு வந்திடுச்சுப்பா!
மறு கல்யாணம் பண்ற நினைப்பு ஏதாவது இருக்கா? என கேட்க.
நல்லா இருக்கிற புள்ளையை கட்டிக்கறதுக்கே, ஆயிரம் கேள்விகள், அதுக்கெல்லாம் இது காலமும், ஆளும் இல்ல. நீ வேறப்பா. என்றார்.விரக்தியாக!
உங்களுக்கு சம்மதமா?
எனக்கு விருப்பம் தான் ,நான்தான் ஒத்தையா மாட்டிகிட்டு அவதி படறேன்,எனக்கு பிறகு அதை என் மவளும் படனுமானு, என் நெஞ்சுக்குழி கிடந்து உருத்தும்,
ஆனா ஊர்,சாதி சனம்,பார்வையில் விழுந்து கிளம்புமே என நினைக்கும் போது இப்படியே ஓட்டி விடலாம்னு தோனுதப்பா!
ஊர்,சாதி சனம் எல்லாம் வா கிழிய பேசுவாங்க, உனக்கு ஏதாவதுனா உன் மவளும்,மவளுக்கு ஏதாவதுனா நீயும் தான் அனுபவிப்பிங்க! இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.
நானும் கலந்துகிட்டு சொல்றேன்,
இரும்மா டீ போட்டுத் தருகிறேன், எனக்கூறி உள்ளே சென்றான்.
கேட்டுவிடலாமா? தப்பா நினைக்குமா? என மனத்தில் பல கேள்வியுடன் காத்திருந்தாள் டீக்காகவும் அவனின் வருகைக்காகவும்,தன் மகளின் வாழ்வில் ஒரு நம்பிக்கை கீற்று கண் முன்னே தெரியக் கண்டாள்.
இந்தாங்க! சாப்பிடுங்க!
உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையாப்பா?
எதுக்கு?
இரண்டாம் தாரமா என் மவளைக் கட்டிக்கிறதுக்கு? என ஆர்வத்துடன் கேட்டாள்.
நானா? எனக்காக கேட்கலை அம்மா, நான் வாழ்ந்து முடிச்சுட்டேன்.
அவ எனக்கு பெண் மாதிரிமா.
என் கூட பணி செய்த நண்பர் வயது 42 ஆகியும் பெண் கிடைக்காம, ஏதோ தோஷம்,அது இதுனு, திருமணம் செய்யாமா இருக்கார்.
ஆனா இளகிய மனசுக்கு சொந்தக்காரர், அவர் உங்க பெண்னை பத்திரமாக பார்த்துப்பார்னு நான் நம்பறேன். தனிமையின் கொடுமையை நான் படறதைப் போல அவரும் படக்கூடாது, அவருக்கும் உலகத்திலே யாருமில்லை, நானாவது வாழ்ந்துப் பார்த்துட்டேன். இன்னும் அது முளைக்கவே இல்லைமா, இனி அவருக்கு துணையும், அனுசரனையும் தானம்மா வேனும்.
அந்தப் புள்ள என் பூ இழந்த மவளை தாராம ஏத்துக்குமா?
உங்க காய்கறிக் கூடையில் நல்லதும் கெட்டதும் கலந்துக் கிடக்குது. வேண்டியதை தேர்ந்தெடுத்து , பயன் படுத்திறதிலேதான் இருக்கு. வாழ்க்கை.
வெண்டைக்கா பிஞ்சாயிருந்தா கறிக்கும் , முற்றியதை சாம்பார்லேயும் போடறதில்லையா?
குலை தள்ளாத வாழை கூட அலங்காரத்திற்கு பயன்படும். படைப்பில் எதுவும் கோணலில்லை. பயன்பாட்டில் தான் உள்ளது.
நீங்க உங்க மகள்கிட்ட பேசி மனசை மாத்துங்க,சின்னஞ் சிறுசுகள் வாழ்ந்துட்டுப் போகட்டும் என கரிசனம் காட்டினார்.
கூடைச் சுமையை சுமந்து மனச்சுமை இறங்கி நிம்மதியுடன் சென்றாள்.
தன் மனைவி போட்டோவின் அருகே சென்று, கீதா..நீ நினைச்சதை இன்றைக்கு ஆரம்பித்து வைத்துள்ளேன். நீதான் துனையா இருந்து முடிக்கனும் என வேண்டி நின்றான்.