கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 8,613 
 
 

வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு இரண்டாவது பிரசவம்….   மருதுவர் சொன்னபடி பார்த்தால் இன்னும் இரண்டு வாரம் தள்ளித்தான் ஆக வேண்டும்….. இப்பொழுதேவா…..?   உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.  அடுத்த வீட்டு மாமி தகவல் சொன்ன போது தான் உடனே வருவதாகவும் வந்து மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்வதாகவும் கூறினான்….

முதலாளியிடம் விஷயத்தை கூறியவுடன்  உடனே கிளம்புமாறு கூறி, “பண உதவி எதாவது வேண்டுமா..,?” என்றும் விசாரித்தார். வேலு இந்த செலவை எதிர்பார்த்து வங்கியில் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தான். முதலாளியிடம் “வேண்டாம்” என்று கூறிக் கிளம்பினான். இன்னும் சிறிது நேரத்தில் முதலாளியும் கம்பெனியை மூடி, வீட்டுக்கு கிளம்பி விடுவார்.

வெளியே வந்த வேலு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி பயணித்தான். மனம் பின்னனோக்கிச் சென்றது. ஏதோ இப்பொழுதுதான் நடந்தது போல் இருந்தது. கல்லூரியில் மலர்ந்த காதல் தொடர திருமணத்தில் வந்து முட்டிய போது இரு வீட்டாரிடம் இருந்து கடும் எதிர்ப்பு. எந்த வித சமரசத்திற்கும் இணங்காமல் பிடிவாதமாக முயல் கால் மூன்றே என ‘சாதி’த்தனர். வேறு வழி இல்லாமல் காதலே பெரிது என நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடித்து, சென்னையில் வேலை கிடைத்து, ஊர் விட்டு வந்து வருடம் நான்கு. காதல் பரிசாக குட்டிப் பையனுக்கு வயது மூன்று.

சென்னையில் ஒரு சிறிய அபார்ட்மென்டில் அமைதியான வாசம். இங்கே அவரவர்கள் தினம் பிழைக்க ஓடும் கவலையே அதிகமாக இருக்க அடுத்தவர் பற்றி யாரும் அதிகமாக கவலைப் படுவதில்லை. பூட்டிய கதவுக்குப் பின் ஒவ்வோரு வீடும் தனி உலகம். அதிகமாக ஒருவர் மற்றவர்க்கு அளிப்பது வலிய வெளிக் கொணரும் ஒரு புன்னகை. இதில் பக்கத்து வீட்டு மாமி மட்டும் ஒரு விதி விலக்கு. இரண்டு பிள்ளைகளும் வெளி நாட்டில் இருப்பதால், மாமிக்கு வேலுவின் மனைவி மேல் தனிப் பாசம். எந்த உறவுகளும் எட்டிப் பார்க்காத வேலுவின் குடும்பத்துடன் தன்னை ஒரு உறவாகச் சேர்த்துக் கொண்டு விட்டாள். தேவைப் படும் போது வேலுவின் மனைவிக்குத் தன்னால் ஆன உதவிகள் செய்வதுண்டு,. உறவுகள் விட்டு வந்த வேலுவுக்கும் அவன் மனைவிக்கும் நகரம் தந்த புது உறவு. அடுத்த வீட்டு மாமா எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். எப்பொழுதும் கையில் ஒரு புத்தகம் …. இல்லை என்றால் கர்னாடிக் சங்கீதம். நேருக்கு நேர் பார்த்தால் வலிய வரவழைத்த மெல்லிய புன்னகை…

வேலுவின் வண்டி சிக்னலில் நிற்க எண்ணம் கலைத்தான். ஏ.டீ.எம்.- ல் பணம் எடுக்க வேண்டிய ஞாபகம் வந்தது. அடுத்து வந்த ஏ.டீ.எம். முன் வண்டியை நிறத்தினான். வாசலில் மிக வயதான முதியவர் அமர்ந்திருந்தார் – ஏ.டீ.எம். காவலாளி(?) வேலுவுக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. யார் அளவுக்கோ தைத்த சீருடைக்குள் ஒளிந்து கொண்டு வேலு கடக்கும் பொழுது ஒரு முறை இருமினார்.

வேலு அட்டையை சொருகி எடுத்தவுடன் அவனை வரவேற்று

‘ஆங்கிலம் / தமிழ் / ஹிந்தி’ என வினவியது

‘ஆங்கிலத்தை’ வேலு அழுத்த

“ENTER YOUR PIN” என்றது

வேலு PIN நம்பரை அழுத்தி, அது கூறிய இடத்திலும் அழுத்தினான்

“பணம் எடுக்க வேண்டும்” என்பதைத் தேர்வு செய்ய,

“எந்த மாதிரி கணக்கு?” என்பதற்கு

“சேமிப்பு” என்ற பதிலைப் பெற்றபின்

“தேவையான பணத்தைக் குறிப்பிடவும்” என்றது.

வேலுவின் கணக்கில் ஒரு ரூ12,000/- இருந்தது. இப்போதைய செலவுக்கு ஒரு பத்தாயிரம் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து ரூ10,000/- கூறிப்பிட்டான்.

உடனே வந்த “ரசீது வேண்டுமா….?” என்ற கேள்விக்கு “ஆம்” என்ற பதிலை அழுத்திக் காத்திருந்தான்.

ஏ.டீ.எம். இயந்திரத்தை யாரோ அடித்தார் போல் கடமுட வென சத்தமிட்டது. பத்து செகண்ட் காசு வரும் இடத்திற்கு கீழ் பிச்சை வாங்க (பிச்சி எடுக்க?) நிற்பது போல் கை நீட்டி நின்றான்….. எல்லாவிதமான ஓசைக்குப் பிறகு இயந்திரம் அமைதியாகி விட்டது. கேட்ட பணம் வரவில்லை…. எடை பார்க்கும் இயந்திரத்தில் போட்ட காசுக்காக தட்டுவதைப் போல் தட்டிப் பார்த்தான். சத்தம் கேட்ட தாத்தா (காவலாளி) சலனப் பட்டு எட்டிப் பார்த்தார். வேலு பணம் வரவில்லையே எனக் கூற, அவர் அங்கே எழுதி வைத்திருந்த தொலைப் பேசி எண்ணைக் காண்பித்து தொடர்பு கொள்ளச் சொன்னார்.

வேலுவுக்கு பதட்டமாகி விட்டது. தன் பணம் என்னாச்சு? என்று கவலைப் படும்போதே தொலைப் பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தால் வங்கியிலிருந்து குறுஞ் செய்தி

“தாங்கள் ரூ10,000/- எடுத்துள்ளீர், மீதம் உங்கள் வங்கி இருப்பு ரூ2,000/-”

வேலு இடிந்தே போனான். … அதற்குள் ஏ.டீ.எம். வெளியே காத்திருந்தவர்கள் பொறுமை இழக்க, வேலு நடந்ததைக் கூறி பொருமினான். காத்திருந்தவர்கள் கலவரமாகி கலைந்து வேறு ஏ.டீ.எம். தேடிச் சென்றனர்.

வேலு அவனுடைய வங்கிச் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டான்….

“பணம் விழுங்கிய வங்கி உங்களை அன்புடன் வரவேற்கிறது”

“தமிழில் அறிய எண ‘2’ -ஐ அழுத்தவும்” கேட்டவுடன் எண் ‘2’-ஐ அழுத்தினான்

கிரெடிட் கார்ட் பற்றி தகவல் அறிய எண் ‘1’ -ஐ அழுத்தவும்

தங்கள் சேமிப்புக் கணக்கை பற்றி அறிய எண் ‘2’-ஐ அழுத்தவும்

டீமாட் மற்றும் ப்ரத்தியேக சேவைக்கு எண் ‘3’ -ஐ அழுத்தவும்

விட்டுக் கடன் மற்றும் இதர சேவைகளுக்கு எண் ‘4’ -ஐ அழுத்தவும்

எங்கள் வங்கியின் பலவித சேவைகளைப் பற்றி அறிய எண் ‘5’-ஐ அழுத்தவும்

ஏ.டீ.எம். விழங்கிய பணத்திற்கு எதை அழுத்துவது என்ற செய்தி வராமல் வேலு விழித்திருக்க..,

“மன்னிக்கவும் தங்களுக்கு அளித்த கால நேரம் முடிவடைந்து விட்டது. மீண்டும் தொடர்பு கொள்ளவும். எங்கள் வங்கியின் தானியங்கி சேவையைப் பயன் படுத்தியதற்கு மிக்க நன்றி” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு இணைப்பை முறித்துக் கொண்டது.

வேலு மீண்டும் முயற்சிக்க, எதை எதையோ அழுத்தி கடைசியில் “எங்கள் பிரதிநிதியுடன் பேச எண் ‘ 9 ‘-ஐ அழுத்தவும் அடைந்தான். ஒன்பதை அழுத்தி காத்திருந்த வேலுவுக்கு வங்கியின் “தீம் இசையை” போட்டு எரிச்சலைக் கூட்டினர். முடிவாக அன்பர் ஒருவர்

“எங்கள் வங்கியை தொடர்பு கொண்டமைக்கு நன்றி நான் இன்னார் பேசுகிறேன் என்று அவர் பெயரை அவசரமாக நாம் புரியாத அளவுக்கு உச்சரித்து அவர் நமக்கு எந்த வகையில் உதவலாம் என மிகப் பணிவாக வினவினார்.

வேலுவுக்கு “யோவ் என் துட்டு வரல உடனே குடுய்யா” என்று கத்த வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் பொறுமையாக நடந்ததை விவரித்தான்.

எதிர் முனையில் “தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்…. சற்று நேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்…” காத்திருந்த வேலுவுக்கு கணினியில் ஏதோ தட்டும் ஒசை கேட்டது… தன் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு எதிர் முனையில் “காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும்…. காத்திருந்ததற்கு நன்றி.., சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம என கேட்க,”

“ம்ம்…” என்றான்.

உங்கள் பிறந்த தேதி? இதை எதுக்கு கேக்கிறாங்க என்று யோசித்துக் கொண்டே கூறினான்.

“தகவலுக்கு நன்றி…. உங்கள் முகவரி….?” ஒருவேளை வீட்டுக்கே வந்து பணம் தருவார்களோ,,,. என்று நினத்துக் கொண்டே கூறினான்.

“தகவலுக்கு நன்றி திரு வேலு… சற்று நேரம் காத்திருக்வும்…,.” சிறிது நேரம் காத்திருந்தபின் மீண்டும் “காத்திருந்ததற்கு நன்றி… ஏதோ தொழில் நுட்பக் கோளாறு என்று நினைக்கிறோம்.,.. தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று எழுத்து மூலம் தெரிவித்தால் அவர்கள் சரி பார்த்து ஓரிரு நாட்களில் சரி செய்து விடுவார்கள்” என்று கூறி அவசர அவசரமாக அவர்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி கூறி “வேறு ஏதேனும் தகவல் வேண்டுமா….?” என்றார்.

வேலுவுக்கு வேண்டியது அவன் பணம் ரூ10000/- தானே…. மீண்டும் கேட்க மேற் கண்ட பத்தியை மீண்டும் படித்தார் எதிர்முனை. மீண்டும் வேலு மன்றாட எதிர்முனை “எங்கள் உயர் அதிகாரியிடம் இந்த அழைப்பை மாற்றுகிறேன், காத்திருக்கவும்” என தொடர்ந்த ‘வங்கி இசையின் கொடுமைக்குப் பிறகு…’ வந்த உயர் அதிகாரி எதிர்முனை அளித்த பதிலையே இவர் குரலில் அதிக பணிவுடன் கூறினார்…

எதிர்முனை இயந்திரமாக மாறுவதை உணர்ந்த வேலு தொடர்ந்து பேசுவதால் பயனில்லை…. தான் எங்கே மிருகமாக மாறி விடுவோமோ என பயந்து தொடர்பைத் துண்டித்தான்.

செய்வதறியாது பிரமை பிடித்து வீட்டுக்குச் செல்ல அங்கே மனைவியும் மாமியும் கிளம்பத் தயார் நிலை..

உம்மென்று போய்த் தரையில் அமர்ந்தான்.

மாமி: “என்னடா மச மசன்னு உட்கார்ந்துட்ட கிளம்பு,” என்றாள்..

குரல் கம்ம நடந்ததை விவரித்தான் வேலு.

மாமி: “அதுக்காக அப்படியே உட்காந்தா எப்படி …. ? ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டாமா….? கொஞ்சம் இரு ….” வீட்டுக்குச் சென்று திரும்பிய மாமி இவன் கையில் இருபது ஐந்நூறு ரூபாய் தாள்களைத் திணித்து “கிளம்பு” என்றாள்.

சொல்வ தறியாது திகைக்க மாமி “கவலைப் படாதே! ஏ.டீ.எம்.-ல் இதெல்லாம் சகஜம்… மாமாவுக்கு இரண்டு முறை நடந்திருக்கு.., இரண்டு நாள்ள உன் பணம் வந்திடும்…..”

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஏ டீ எம்

  1. நிகழ்வு ஏதோ எனக்கே நடந்தது போன்ற திகிலை ஏற்படுத்தியதே கதை சொல்லப்பட்ட விதத்தின் சிறப்பு.

  2. அறிவியல் முன்னேற்றத்தால் எல்லா வசதிகளும் கிடைத்தாலும் சமயத்துக்கு மனிதம் மட்டுமே நமக்கு உதவும் என்பதை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *