ஏதோ ஒரு யுகத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 219 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மணியும் அவனது தோழர்கள் ஐந்து பேரும் ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்வதாக திட்டம் போட்டனர். காலை சூரிய உதயம் முதல் மாலை மங்கி இரவு அடங்கும் வரை, கணினியும் மென்பொருளும் இல்லாத ஒரு இடமாக அது இருக்க வேண்டும் என்பது, அவர்களது திட்டத்தின் முக்கிய ஷரத்துகளில் ஒன்று. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் ஒன்று இருக்கிறது. அது தான் அவர்களது வேலைபளுவின் காரணமாக ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம். இறுக்கமான அறையின் சன்னல்களைத் திறந்து விட்டால், எப்படி ஒரு குளிர் காற்று உள்புகுந்து, அறையை நிரப்புமோ, அப்படி இயற்கையும், பணி காரணிகள் கொடுக்கும் மூளைக் கசக்கலும் இல்லாத ஒரு இடத்தை, அவர்கள் தேர்வு செய்ய விரும்பினார்கள்.

இந்த இடத்தில் கதையின் ஆறு நபர்களைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

மணி என்கிற மணிமாறன் நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்தவன். சைவ வேளாளன். குலத் தொழிலை விட்டுவிட்டு, மென்பொருள் படித்து, ஆறு இலக்க ஊதியத்தில் பன்னிரண்டு அங்குல சதுரத்தையே பார்த்து, உலகை வலம் வருபவன். விர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பு படிக்க இருந்தவன். போயிருந்தால் ஒருவேளை உயிரை விட்டிருப்பானோ என்னவோ. அவன் நல்ல நேரம், இந்த வேலை கிடைத்து, இங்கேயே தங்கிவிட்டான். பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு அலங்கார வளைவுக்குள் நுழைந்தால், அவன் அலுவலகம் கிடைக்கும். ஆனால் அவன் கிடைப்பானா என்பது சந்தேகம். அலுவலக வளாகம் பெரியது. கிட்டத்தட்ட பரமத்தி வேலூரை ஒத்த அளவில் இருக்கும் என்று ஒருமுறை அவன் எண்ணியிருக்கிறான். அது ஒரு குட்டி ஐரோப்பா அல்லது அமெரிக்கா. அங்கு நுனி நாக்கு ஆங்கிலமும், பர்கரும் பீட்ஸாவும் புழங்கும். பால் புகட்டிகளை காட்டியபடி சாஃப்ட்வேர் பனியன்களுடன் அலைவார்கள் சிற்றிடைப் பெண்கள். அதைக் கூட காண நேரமின்றி, கண்களில் விண்டோஸ் தெரிய பரபரப்பார்கள் இளைஞர்கள். எப்போதாவது முதுகுக்கு ஒத்தடம் வேண்டும்போது, பெருந்தனக்காரி ஒருத்தியை பில்லியனில் ஏற்றிக் கொண்டு, ஹோண்டாக்களில் சீறிப் பாய்வார்கள் ஸ்பீட் பிரேக்கர்கள் நிறைந்த சாலைகளில் இறங்கும்போது “ நன்றி பெண்ணே “ என்பான் இளைஞன். ” அது எனக்கும் சுகம் “ என்பாள் யுவதி!

மணியுடன் படித்தவர்கள் மென்பொருள்காரர்கள் இல்லை! பெரும்பொருள்காரர்கள். அவர்களில் ஐந்து பேர் அவனுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். மணி இனிக்க பேசுவான். ரசிக்கப் பேசுவான். சிரிக்கப் பேசுவான். அவனுடன் இருக்கும் காலங்கள், ஐவருக்கும் கவலைகள் மறந்த காலங்கள். ரமேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டக்கல் ஜில்லாவில் இருந்து வந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியர். சொந்தமாக தொழிற்சாலை வைத்திருக்கிறான். வருட லாபம் கோடியை எட்டும். அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பம். பணத்திற்கு கவலையில்லை. அவனுடைய தெலுங்கு கலந்த தமிழை கிண்டல் பண்ணி சிரிப்பார்கள் ஐவரும். அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. ரமேஷ் தான் சொன்னான்: “விஜயவாடா பக்கத்துல ஒரு மலையும் காடும் இருக்குதாம். அங்க ஒரு பழைய நரசிம்மசாமி கோயிலு இருக்குதாம். இப்ப கூட ராத்திரி நேரங்கள்ல, சாமி ஆவேசமா அங்க நடமாடிக்கிட்டு இருக்குமாம். அதனால் ஆதிவாசிங்க கூட மாலை ஆறு மணிக்கு மேல காட்டுக்குள்ள வரமாட்டாங்களாம். மலை மேல் ஒரு பங்களா இருக்குதாம். அதுல வேணா தங்கிக்கலாமாம். ஆனா காட்டுல ஏதோ ஒரு அதிர்வு இருக்கறதால, செல்பேசிகள் வேலை செய்யாதாம். அங்க போலாமா? ஜம்பு என்கிற ஜம்புநாதன் கடவுளை மறுப்பவன். அவன் குடும்பமே அப்படி சட்டென்று எகிறி எழுந்தான் ஜம்பு. “ என்னாடா காது குத்தற.. நரசிம்மசாமியாம்.. நடமாடுதாம்.. அதிர்வாம் .. இது இருப்பத்தி ஓராம் நூற்றாண்டு.. நீ எங்கள கற்காலத்துக்கு கொண்டுட்டு போயிடுவே போலிருக்கே’ மணி அவனை அடக்கினான். “டேய் இது ஒரு நம்பிக்கை. காட்டுல விலங்குங்க இருக்கும். பாம்புங்க இருக்கும். அதனால மனுசங்க நடமாட வேண்டாம்ற நல்லெண்ணத்தில் இப்படிச் சொல்லிருக்கலாம். நம்பறவனுக்கு கடவுள்! நம்பாதவனுக்கு கல்லு. அதுலயும் கொஞ்சம் அழகுணர்ச்சி இருக்கறவன், அதை சிற்பம்னு ரசிச்சிட்டு போயிடுவான்.

பிரகாசும் அம்பலவாணனும் மணி பேசுவதையே ரசித்து கேட்டனர். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஜம்பு மணி சொல்வதை ஆமோதிப்பது போல் உட்கார்ந்து கொண்டான். அறுவரில் மணியே தலைவன் என்பது நிருபணமாயிற்று.

ஜம்பு சொந்தமாக துணிக்கடை வைத்திருக்கிறான். ஈரோட்டுக்காரன். அதனால் இயல்பாகவே கடவுள் மறுப்பு இயக்கத்தில் ஊறியிருந்தது அவனது குடும்பம். மீதி ஐவரோடு கோயில்லுக்கூட வருவான். திருநீறை எடுத்து நெற்றியில் போட்டுக் கொள்வான். வெளியே வந்ததும் நிதானமாக முகம் கழுவிக் கொள்வான்.

“என்னடா கடவுள் இல்லைன்ற! திருநீறை போட்டுக்கற”

இது சாம்பல்.. இத நெற்றியில போட்டுக்கிட்டா அது காயக்காய தலையில இருக்கற கெட்ட நீரை வெளியே உறிஞ்சிடும். பையா! இது கந்த கவசம் இல்ல கெமிஸ்ட்ரி கவசம். பிரகாசும் அம்பலவாணனும் நகைக்கடை அதிபர்கள். அப்பா வழி தொழில். படிப்பு ஒரு அந்தஸ்த்துக்குதான். அது எந்த வகையிலும் அவர்களுக்கு உதவவில்லை. வெளிநாட்டுக் காரர்கள் கடைக்கு வரும்போது கொஞ்சம் சரளமாக ஆங்கிலம் பேசப் பயன்படும் அவ்வளவுதான். அதற்கே அவர்களின் அம்மைக்கும் அப்பனுக்கும் பெருமை பிடிபடாது.

இவர்களின் குழுவில் எந்த ஒற்றுமையும் இல்லாது ஆனாலும் ஒன்றிப்போய் இருப்பவன் தான் கவிவாணன். சந்திரசேகரன் என்பது இயற்பெயர். ஆனாலும் இலக்கியம், கவிதை என்று பித்து பிடித்து அலைந்து, பெயரை கவிவாணன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறான்.

“தனிமை தேடி / காட்டிற்கு போனதில் / தொலைந்தது தனிமை / காட்டிற்கு”

இரண்டு முறை உரத்த குரலில் கவிதை சொன்னான் கவிவாணன். மணி அவனைக் கட்டிக் கொண்டான். “நல்லாருக்குடா “ என்று மனம் திறந்து பாராட்டினான்.

மே மாதம் முதல் வாரத்தில் அறுவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு, காட்டிற்கு புறப்பட்டார்கள். ஐந்து நாட்கள் தங்குவதாக ஏற்பாடு. ரமேஷின் கார் விஜயவாடா ரயில் நிலையத்தில் காத்திருந்தது. அது அவர்களை காட்டின் எல்லைக்கு முன்னால் இறக்கி விட்டுவிட்டு காத்திருக்கும். அவர்களது உடைமைகள், செல்போன்கள், லாப்டாப் கணிப்பொறிகள், கடன் அட்டைகள், தானியங்கி இயந்திர அட்டைகள், அடையாள அட்டைகள் என்று சகலமும் காரிலேயே வைத்துவிட்டு அவர்கள் பயணப்பட்டார்கள்.

காட்டின் உள்ளே நுழைந்ததும், ஒரு வித மூலிகை வாசனை, அவர்களைத் தாக்கியது. மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட்டபோது, நுரையீரல்கள் புத்துயிர் பெற்றன. விடிகாலை ஆறு மணி.இருள் பிரிந்து, ஆதவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் மரக்கிளைகளின் அடர்த்தி, அவனை வழி மறித்து, ஓரளவிற்கு வெற்றி கண்டு கொண்டிருந்தது.

“பச்சை என்பது நிறமல்ல ஒரு உணர்வு, ஒரு அனுபவம்” என்றான் கவிவாணன். ரமேஷும் ஜம்புவும் புரியாமல் விழித்தார்கள்.

மணி சொன்னான். “இந்தக் காடும் அதன் பச்சையும் மனசை நிறைக்குது. வெறும் நிறம்னா கண்ணுல பட்டு காணாம போயிரும். இது கண்ணு வழியா உள்ளிறங்கி, மனசை அலைக்கழிக்குது.. என்னா கவி சரியா?”

கவி பலமாக அவனது தோளில் தட்டினான். “சபாஷ் தோழா ” என்றான்.

நரசிம்மசாமி கோயில் என்று சொல்லப்பட்ட ஒரு சிதிலமான புராதனக் கோயிலை, அவர்கள் கடந்தார்கள். உள்ளே கருங்கல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது எதைப் போலவும் இல்லை. முக்கியமாக நரசிம்மசாமி போல இல்லவே இல்லை. இருந்தாலும் ரமேஷ் கன்னத்தில் போட்டுக் கொண்டான். பிரகாசும் அம்பலவாணனும் உதடு தொட்டு நெஞ்சில் கை வைத்து கண்களை மூடினார்கள். மணியும் கவியும் எதிலும் சாராமல் நின்றார்கள்.

ஜம்பு “வௌவால் தலை கீழாத் தொங்குது பார்” என்று ஒரு கல்லை விட்டெறிந்தான். வௌவால் பட படவென்று இறக்கையை அடித்துக் கொண்டு பறந்தது.

மலை பங்களா சமீபத்தில் ஆதிவாசிகளின் குடியிருப்பு இருந்தது. பங்களா யாருடையது என்று தெரியவில்லை. ஆனாலும் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, வசிப்பதற்கு ஏற்ப காணப்பட்டது. ஆதிவாசிகளிடம் தெலுங்கில் கேட்டான் ரமேஷ். “பங்களாவுல தங்கணும். வாடகை எவ்வளவு ” “அதெல்லாம் ஒண்ணுமில்ல சாமி. யாரும் வரதில்ல. ஆனாலும் பெருக்கி கூட்டி சுத்தப் படுத்தி வச்சிருக்கிறோம். அதனால நீங்க பிரியப்பட்டு குடுக்கறதுதான். வருசத்துக்கு ஒரு குடும்பம் பாத்துக்கும். வருமானமும் அந்தக் குடும்பத்துக்குத்தான். இப்ப பொம்மி குடும்பம் பாத்துக்குது.. ஏ! பொம்மி! இங்க வா”

பொம்மி என்பவள் எழுபது வயதுக்காரியாக இருந்தாள். கூடவே இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணும் கூடவே வந்தாள்.

“பங்களா வேணுமாம். பேசிக்க “

“தங்க மட்டுமா, இல்ல சுடுதண்ணி போட்டுத் தரணுமா? சாப்பாடு செய்யணுமா? சாராயம் வேணுமா? ராத்திரி ஒத்தாசைக்கு ஆளும் வேணுமா”

அதிர்ந்து போனார்கள் அறுவரும். ராத்திரி ஒத்தாசைக்கு ஆளா? கவி சிலாகித்து ரசித்து மீண்டும் மீண்டும் பல முறை சொல்லிக் கொண்டான்.

“ஒத்தாசை.. ஒத்த ஆசை.. ஒத்துக் கொள்ள ஆசை”

மணி வேகவேகமாக மறுத்தான்.

“சாப்பாடும் சுடுதண்ணியும் போதும்”

“இவதான் வருவா.. பேரு மல்லி .. ஆறு மணிக்குள்ளார அனுப்பிச்சுரணும்.. நேரமாச்சுன்னா உங்க கூட தங்கிட்டு காலைல தான் வருவா! சம்மதமா?”

முதல் மூன்று நாட்கள் எந்த தொந்தரவும் இல்லை. காலையில் கறுப்பு காபி.. ராகி அடை. மதியம் அசைவ உணவு.. ஒரு நாள் மான்; ஒருநாள் முயல்; ஒரு நாள் கௌதாரி என விதவிதமான, நகரங்களில் கிடைக்காத உணவும் சுவையும். மல்லியிடமிருந்து ஒருவித மூலிகை வாசனை வந்து கொண்டேயிருந்தது. ஆனால் அவள் சமைக்கும் பதார்த்தங்களில் இருந்த சுவையும் மணமும், அவளது வாசனையை மறக்கச் செய்தன.

நான்காவது நாள் காட்டிற்குள் உலாவச் சென்ற ஆறு பேரும் திரும்ப நேரமாகிவிட்டது. புதிய பாதை ஒன்றில் சென்றதில், வந்த வழி மறந்து போய், பங்களாவை அடையும்போது ஆறு மணிக்கு மேலாகி விட்டது. மல்லி வாசற்படியிலேயே காத்திருந்தாள். மேற்கே மறையும் சூரியனைப் பார்த்தபடி இருந்தன அவள் கண்கள். இவர்களைப் பார்த்தவுடன் அவள் எழுந்து கொண்டாள். அவர்கள் உள்ளே சென்றதும் அவள் மறுபடி வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டாள்.

உள்ளே அவர்களுக்கான உணவு வழக்கம்போல தயாராக இருந்தது.

ஜம்பு கொஞ்சம் பதைபதைப்புடன் ஆரம்பித்தான். “டேய் ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. அதனால் அந்தக் கிழவி சொன்னாப்புல மல்லி இங்கதான் தங்குவா போலிருக்கு. இப்ப என்னாடா பண்றது?”

‘தங்கட்டும். தேவைப்பட்டா என்னோட படுக்கையைக் கூட தரேன். நான் வெளியில் படுத்துக்கறேன். இருட்டுல அந்தப் பொண்ண எப்படி தனியா அனுப்பறது? _ மணி சொன்னான்.

பிரகாசும் அம்பலவாணனும் மறுத்தார்கள். “ எப்படிடா நீ மட்டும் தனியா படுக்கறது? நாங்க எல்லோருமே வெளியே படுக்கறம். அந்தப் பொண்ண ஒரு அறைக்குள்ள போயி தாள் போட்டுக்கச் சொல்லு “

“ஆமா அதான் சரி“ என்று மற்றவர்களும் ஆமோதித்தனர்.

வாசலில் வந்து பார்த்தபோது மல்லியைக் காணவில்லை. பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து ஒரு கனமான கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

“புத்திசாலிப் பொண்ணு! நமக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாம்னு மேலே போயிட்டா” என்று சொன்ன ஜம்பு நிமிர்ந்து பார்த்தபோது, கயிறு மெல்ல மேலிழுக்கப்பட்டது.

“புத்திசாலி மட்டுமில்ல ஜாக்கிரதையான பொண்ணும் கூட” என்றான் மணி.

அவனது மனக் கணினியில் புதிதாக ஒரு ஃபைல் திறந்து கொண்டது. அதில் மல்லி நுழைந்து கொண்டிருந்தாள். கடைசியாக அவன் உறக்கம் வந்து கண்களை மூடிய போது, சோளக்காட்டில் பரண் மேல் நின்று கொண்டு கவண் கல் கொண்டு குருவிகளை விரட்டிக் கொண்டிருந்தாள் மல்லி. தூரத்தில் ஒரு யானை வந்து கொண்டிருந்தது.

– மார்ச் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *