டும்…டும்…டும்..!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,465 
 

விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை……..!!!!

நிகழும் சார்வரிஆண்டு ஐப்பசி மாதம்……..

என்று தொடங்கிய அந்த திருமண பத்திரிகை ஆர்த்திக்கும் கார்த்திக்குக்குமான திருமண பந்தத்தை உறுதி செய்தது !

மங்களத்தம்மாவுக்கு பத்திரிகையைப்பார்த்து மனசு துள்ளிக்குதித்தது!

நாலு பேரன்களுக்கு மத்தியில் ஒரே பேத்தி ! ‘மாட்டேன் மாட்டேன் ‘என்ற பேத்தியை சம்மதிக்க வைத்து விட்டாளே !

கணேசனைத் தேடினாள் !

“ஏங்க ! எங்க போனீங்க ! வந்து பாருங்க பத்திரிகையை !

அன்று முழுவதும் அமர்க்களம் தான் !

இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் இருக்கிறது!! !!!!!!!

மங்களம் கணேசன் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் !

மூத்தவன் வருண் டாக்டர்! கார்டியோ தொராசிக் சர்ஜன்….

மனைவி ராதிகா மகப்பேறு நிபுணர் ! ஒரு பையன் சுரேந்தர் !

கண்டிப்பாக டாக்டர் ஆக விருப்பமில்லை என்று கூறி விட்டான் ! ஃபார்முலா கார் பந்தய வீரன்….

அடுத்தவள் ப்ரியா ! சமையற்கலை வல்லுநர்.. வீட்டை விட TV யில் நிறைய சமைத்துக் காண்பிப்பவள்!

இரண்டு மகன்கள் ! இருவருமே I.T. யில் ! கணவன் மகேஷ் நிறைய பிஸினஸ் செய்து கையை சுட்டுக் கொண்டவன் ! ஆசாமி கொஞ்சம் சவடால் !

கடைக்குட்டி மது! அம்மா பிள்ளை ! பெரிய கம்பெனியில் C.E.O.! சங்கரி வீட்டில் மாமியார் மெச்சிய மருமகள் !

முதல் பெண்தான் ஆர்த்தி ! சகலகலாவல்லி.

எல்லா துறையிலும் கலக்குபவள் ! கல்லூரி படிப்பை முடித்து விட்டு அடுத்து என்ற என்ற சிந்தனையில் இருப்பவள்…..

தம்பி முகுந்த் பள்ளி இறுதி ஆண்டு !

ஆர்த்தி கல்லூரி படிப்பை முடித்ததுமே மங்களம் ஆரம்பித்து விட்டாள்!

ஆர்த்தி எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படும் பெண் இல்லை !

நினைத்தால் மலையேற்றம் ! நண்பர்களுடன் உல்லாசமாய் சுற்றுலா..!

ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் எல்லோருடனும் சரிசமமாக பழகும் குணம் !

காரை எடுத்துக் கொண்டு நேரம் காலம் தெரியாமல் ஊர் சுத்துவது ,இதெல்லாம் மங்களத்தம்மாவின் தூக்கம் தொலைய போதுமானதாய் இருந்தது !!

கணேசனிடம் சொல்லி ஒரு பயனும் இல்லை ! அவருக்கு பேத்தி மேல் யார் குறை சொன்னாலும் காது கேட்காத மாதிரி இருந்து விடுவார் !

சங்கரி வாயே திறக்கமாட்டாள் !

அத்தை ஒருத்திதான் தைரியமாய் அவளிடம் பேசக்கூடியவள்!

மங்களம் ப்ரியா வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டாள் !

ப்ரியா மங்களம் சொல்வதைப் பொறுமையாக கேட்பாள் ! என்ன இருந்தாலும் அம்மா பெண் நெருக்கம் தனிதான்!

“அம்மா ! நீ ரொம்ப ஓவரா கற்பனை பண்ற! இப்போ பாரு ! சுரேந்தர் படிக்காம கார்..ரேஸ்னு அலையலயா !

ராகுலும் , கிருஷ்ணாவும் ராத்திரி ஒரு மணி இரண்டு மணின்னு வீட்டுக்கு வரலியா ! இந்த காலமே வேற ! ஆண், பெண் எல்லோருக்கும் ஒரே ரூல்தான் !

ஆர்த்திக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது ! அதி புத்திசாலி..! அவள் விருப்பப்படி விட்டுதான் பிடிக்கணும் !

“அதில்லம்மா ! பெண் குழந்தைகள் காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் என்ன வேணா பண்ணட்டும் ! அவ அம்மா இல்ல ! ”

“அம்மா சங்கரி மாதிரி இவளும் வீட்ல உக்காந்து மாமியாரோட சமயல் செய்வான்னு கனவு கூட காணாத!

ஆனா கண்டிப்பா கல்யாணத்தைப் பத்தி நான் சமயம் பாத்து பேசறேன் ! போதுமா??

ஒரு நாள் ஆர்த்தி கடைக்குப் போகணம் ! கூட வரீங்களா அத்தை ???”என்று கேட்டதும் இதுதான் சமயம் என்று கிளம்பி விட்டாள் !

ப்ரூக்ஃபீல்ட் மாலில் ஹாண்ட் பேக் , காலணிகள் ,வாங்கிக் கொண்டு ஃபுட் கோர்ட் அன்னபூர்ணாவில் ஒரு வெங்காய ரவா தோசையும் , ஒரு தயிர் சாதமும் சொல்லி விட்டு உட்கார்ந்தார்கள் !

‘ஆர்த்தி ! உன்னோட ஒடிசி நடனம் எப்படி போயிட்டு இருக்கு ?’

‘சூப்பர் அத்தை ! ராகுலும் , கிருஷ்ணாவும் முன்ன மாதிரி வரதில்லையே ! ‘

‘அதுங்களுக்கு ஆஃபீஸ் வேலையே சரியா இருக்கு ! சனி , , ஞாயிறு கண்ணிலேயே பார்க்க முடியாது !

அது சரி ! நீ காலேஜ் முடிச்சிட்ட..இப்போ என்ன பண்ண போற ? ‘

‘M.B.A. பண்ணனும் அத்தை ! இங்கே பண்ண எனக்கு இஷ்டமில்லை ! அப்பா U.S. போகச் சொல்றாரு ! ‘

‘ம் ! நல்ல யோசனை தான் ! ஆனா பாட்டிக்கு ஒரு ஆசையிருக்கு ஆர்த்தி !

உனக்கு கல்யாணம் பண்ணி …….

ப்ரியா முடிக்கக் கூட இல்லை ! ஆர்த்தி உடனே எழுந்து விட்டாள் !

“என்ன ஆன்ட்டி …??? அவுங்களுக்கு ஏதாச்சும் பயித்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா??? கல்யாணமா ?? விளையாடுறீங்களா ?

ப்ளீஸ் அத்தை! இன்னொரு தடவை அந்த வார்த்தையை சொல்லாதீங்க ! “

ப்ரியா நிஜமாகவே பயந்துவிட்டாள் !

“உக்காருடா ! எதுக்கு இந்த பதட்டம்..??? திருமணம் ஒரு தடைசெய்யப்பட்ட வார்த்தை மாதிரி !!”

“எனக்கு அது பிடிக்காத வார்த்தைதான் அத்தை !

பாட்டி கூட இவ்வளவு பழங்காலமாய் இருப்பாங்கன்னு நான் நிஜம்மா எதிர்பார்க்கலை ! வெரி சாரி…!

“கல்யாணம் இப்போ வேண்டாமா ? இல்லை எப்பவுமே ……..”

“அத்தை! நான் இப்போது என்னோட மனநிலை பத்திதான் சொல்ல முடியும் ! எனக்கு நிறைய கனவுகள் , குறிக்கோள்கள் இருக்கு !

இதே கேள்வியை கிருஷ்ணா , ராகுல் கிட்ட கேட்டிருக்கீங்களா ? என்னை விட வயசு கூடத்தானே ! கேட்டா , ஆம்பள பசங்கன்னு சொல்வீங்க !

இது ஒரு mindset தான் ! !

நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்காதீங்க அத்தை ! உங்க திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கா??

ஆமா..இல்லை..ன்னு மட்டும் பதில் சொல்லுங்க.. !!”

“அப்படி ‘yes or no’ ன்னு ஒரே வார்த்தையில சொல்றது இல்லை திருமண வாழ்க்கை….!!

இப்போ நான் உன்னை ஒண்ணு கேக்கறேன் ! நீ சந்தோஷமா இருக்கியா ?”

‘சிலவேளைகளில் ஆமா.. !!!சிலசமயம் இல்லை…. ! !’

“எல்லாமே அப்படித்தான்! சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவது திருமண வாழ்க்கையில் மட்டுமே கிடையாது !!

‘ஆனால் அத்தை! என் சுதந்திரத்தில் இன்னொருத்தர் நுழைவதை என்னால கற்பனை கூட செய்ய முடியல்லையே!!’

ப்ளீஸ் அத்தை ! இனிமே இந்த பேச்சை எடுக்காதீங்க! ‘

வீட்டுக்கு வந்ததும் ப்ரியா முதல்காரியமாய் தொலைபேசியை எடுத்து அம்மாவிடம் பேசினாள்!

“அம்மா ! நான் ஆர்த்திகிட்ட பேசினேன் ! அவள் கல்யாணம் பண்ணிட்டா சுதந்திரம் போயிருமோன்னு பயப்படறா !

வேற ஒண்ணும் பெருசா இல்லை! கொஞ்சம் டைம் குடுங்கம்மா ! “

மங்களம் சமாதானமானாள் ! ஏதோ பேச்சை ஆரம்பிச்சாச்சு !

சினிமாவிலும் T.V.யிலும் காட்டுவது போல் மங்களம் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்போதாவதுதான் !

வருணும் ராதிகாவும் அந்த வீட்டில்தான் சாப்பிடுகிறார்களா என்றே தெரியாது!

அவர்களுடைய தொழில் அப்படி! சுரேன் கேட்கவே வேண்டாம்! வீட்டிலேயே இருக்க மாட்டான் !

கணேசனும் மங்களமும் டையாபெடிக் ஆனதால் சரியாக ஏழரைக்கு சாப்பிட்டு விடுவார்கள் !

அநேகமாய் முகுந்தும் அவர்களுடன் சாப்பிட்டு விடுவான்!

மது வீட்டுக்கு வர எட்டாகும்! சங்கரி அவனுடன் சேர்ந்து தான் சாப்பிடுவாள் !

ஆர்த்தி தாத்தா பாட்டியுடனோ அல்லது அம்மா அப்பாவுடனோ சேர்ந்து கொள்வாள் !

ஆனால் ஞாயிறு காலை ப்ரேக்ஃபாஸ்ட் மட்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது மங்களத்தின் அன்பு கட்டளை !

சாப்பிட்டு முடியவே பத்து மணியாகும் !

அலமேலு அம்மா மூன்று வேளையும் சமைத்து வைத்து விட்டு போய் விடுவாள் !

ஞாயிறு அவள் விடுமுறையானதால் மங்களமும் சங்கரியும் காலையில் அருமையான ஆப்பம் , மசாலா தோசை என்று அமர்க்களப்படுத்தி விடுவார்கள் !

சில சமயம் மகேஷ் ஊரில் இல்லையென்றால் ப்ரியா சனிக்கிழமையே வந்து விடுவாள்!

சமையல் நிபுணி இல்லையா! பூந்து விளையாடி விடுவாள்!

இத்தாலியன்….கான்டினென்டல்.. எல்லாமே அருமையாக இருக்கும்!!! மங்களத்துக்கும் ஒரே பெருமை !

அன்றைக்கு அதிசயமாய் எல்லோரும் காலையில் ஆஜர் !

வருணும் ராதிகாவும் கூட அதிசயமாய் வீட்டில் இருந்தார்கள் ! ப்ரியாவும் வந்திருந்தாள்!

தீபாவளிக்கு ‌முந்தின வார வீக்எண்ட்… ! ஆனியன் ரவா.. , சென்னா பட்டூரா , பான் கேக் , சர்க்கரைப் பொங்கல் , சாம்பார் , சட்னி என்று தடபுடல் !

மங்களம் வேண்டுமென்றே பேச்சை ஆரம்பித்தாள் !

‘கல்யாண வீடு மாதிரி களைகட்டி இருக்கே ! ‘

‘யார் கல்யாணம் பாட்டி ?? ‘இது சுரேன் ! ‘

‘நான் சொல்லட்டா? தாத்தா பாட்டி சதாபிஷேகம் !!!’ இது முகுந்த் !!

‘எனக்கென்னவோ ஆர்த்தி கல்யாணமாஇருக்குமோன்னு …? ? ?? ‘

ப்ரியா எடுத்துக் கொடுத்தாள் ! கொஞ்சம் பயத்துடன்! ‘எழுந்து போய்விட்டால் ??

பயப்பட்டது மாதிரி எதுவும் நடக்கவில்லை !

‘எல்லாரும் சேர்ந்து என் நிம்மதிக்கு வேட்டு வச்சிடுவீங்க போலிருக்கே!!’

‘கல்யாணம் பண்ணிகிட்டா நிம்மதி போகும்னு யார் சொன்னா ??’

ராதிகா வாயைத் திறந்தாள்!

‘தினம் தினம் உங்களைப் பாக்கறோமே !

தாத்தா , பாட்டியைப் பார்த்து முகுந்த் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள் !

‘ஹாய்.முகுந்த்…! Give me high five !! என்றாள் ஆர்த்தி !

“ஏன் ஆர்த்தி? நாங்கள் தினம் தினம் சண்டையா போட்டுக்கிறோம்? ஒற்றுமையா இல்லையா ?”

மங்களம் கேட்டாள் !

‘சர்க்கரை வியாதி தவிர வேறு எந்த விஷயத்திலும் ஒற்றுமையா எனக்குத் தெரியவில்லை !!! ‘என்று ஆர்த்தி சொன்னதும் எல்லோருக்கும் மறுபடி சிரிப்பு !

“ஆர்த்தி! நான் சீரியசா கேட்கிறேன் ! நீ மேல படிக்க US போறதா தீர்மானம் பண்ணிட்டியா?

அதுக்கு முன்னாடியே நிறைய பிளான் பண்ணணும் ! “மதுவின் குரலில் ஒரு தந்தையின் ஆதங்கம் !!!

“அப்பா ! நான் இங்கேயே படிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ! ”

“சரி ! இங்கேயே மாப்பிள்ளையை பார்க்கலாமா???’

மங்களம் விடுவதாயில்லை !

“அத்தை ! சூப்பர் பான்கேக்! இன்னும் இரண்டு எடுத்துக்கட்டா ?? “

‘முகுந்த் ! உனக்கு பிடிக்கும்ன்னுதானே பண்ணினேன் ! எவ்வளவு வேணாலும் எடுத்துக்க !”

முகுந்த் ப்ரியாவின் செல்லம் !

“ஆர்த்தி! ஏன் கல்யாணம் வேண்டான்னு ஒரு காரணம் சொல்லு…. …. !!!!

“ஒண்ணென்ன !! ஒம்பது சொல்லவா? ”

இப்போ நான் பார்ட்டி போணம்னு நெனச்சா உடனே ‘எங்க பார்ட்டி ? யார் கூட? வர எத்தனை மணியாகும்?

இந்த மாதிரி விளக்கமெல்லாம் என்னால குடுத்திட்டிருக்க முடியாது!!!’

“ஏன் ஆர்த்தி ? அம்மா கூட கேக்க மாட்டாங்களா ? அது மாதிரி நினச்சுக்கோ!! “

“அது வேற, இது வேற பெரியம்மா !! அவனை இதே கேள்வியை நான் கேட்க முடியுமா ? அதுக்கு பதில் சொல்ற பையனா தேடுங்க ! கிடைப்பானா பாருங்க !!’.

அத்தை நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ! மாமா வீட்டுக்கு வர எவ்வளவு லேட்டாகுது ? நீங்க கேள்வி கேட்டா ஒத்துப்பாரா ? ”

“நான் எனக்குன்னு ஒரு ஹாபி வச்சிட்டு , சமையல் நிகழ்ச்சிகள் பண்ணிட்டு எவ்வளவோ நாள் லேட்டா வரும்போது புரிஞ்சிக்கிறாரே !

அது போதுமே ஆர்த்தி !

நாமதான் நம்முடைய சுதந்திரத்தை சரியா யூஸ் பண்ணனும் ! சுதந்திரம் நமது உரிமை…!! கேட்டுப் பெறுவதல்ல..!

“பலே பலே ! ப்ரியா நீ கவுன்சிலிங் ஷோ கூட பண்ணலாம் !

தங்கையை தட்டிக்கொடுத்தான் வருண் !!!

“பெரியப்பா ! உங்களையும் ஒண்ணு கேக்கணும்! நீங்களும் பெரியம்மாவும் எப்போதுமே பிஸி! சேர்ந்து வெளியே போய் பார்த்ததேயில்லை !

தனித்தனியாக வரீங்க , போறீங்க! அதுக்கு தனியாவே இருக்கலாமே ! “

“ஆர்த்தி! நீ வெளியே பாக்குறதை வச்சு முடிவு பண்ணாதே ! நானும் ராதிகாவும் எத்தனை பேப்பர் ஒண்ணா பிரசென்ட் பண்ணியிருக்கோம் தெரியுமா ?

எங்களுடைய தொழில் சம்பந்தமா ஒருத்தருக்கோருத்தர் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ள முடியுது!

மற்றவர்கள் முன்னாடி நிருபிக்க அவசியமில்லாத அருமையான புரிதல் அநேகமாய் பெரும்பாலான கணவன் மனைவிக்கும் இடையே இருக்கும் ஆர்த்தி !

ஆனால் அதற்கு இருவருக்குமே விட்டுக் குடுக்கிற மனப்பான்மை இருக்கணும் ! கல்யாணம் ஆகி மெள்ள மெள்ள அது உனக்கு புரிய ஆரம்பிக்கும் !!

“ஒரு கரண்டி சர்க்கரை பொங்கல் இருக்கு!!!! யாருக்கு வேணும் ?”

பாய்ந்து எடுத்துக் கொண்டான் சுரேன் !

அழைப்பு மணி சத்தம் !

எல்லோரும் எழுந்து போனதும் தனம் மேசையை சுத்தம் பண்ண வந்து விட்டாள் !

இது நடந்து ஒரு மாசம் போயிருக்கும் ! ஒரு நாள் மாலை மணி ஐந்து இருக்கும் !

***

“ஹலோ.. நான் ஆர்த்தி கிட்ட பேசலாமா…???? ”

பரிச்சியம் இல்லாத ஆண் குரல் !

“யெஸ்.. நான் ஆர்த்தி தான் பேசறேன்….”

“நான் கார்த்திக் ! பயப்படாதீங்க!

உங்க தாத்தாவுக்கு ஒரு சின்ன விபத்து… நடக்கப் போன இடத்தில் ஒரு பைக் இடித்து விட்டது ! பாட்டி மயக்கமா விழுந்திட்டாங்க!

இரண்டு பேரையும் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருக்கிற K.G. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்கேன் !

உங்க போன் நம்பர் குடுத்தாங்க ! அரைமணியாகும் ! உடனே வரமுடியுமா. ??

அதுவரை நான் எங்கேயும் போகமாட்டேன் ! ஆனா பயப்படும்படி ஒண்ணுமில்ல….!

ஒரு வேளை hoax call ஆக இருக்குமோ ??

ஆர்த்தி நினைப்பதற்குள்…… …….

“hoax call என்று பயப்பட வேண்டாம் !! ரிசப்ஷனில் செக் பண்ணிக் கொள்ளலாம் !!!”

இவனுக்கு எப்படி நான் நினைத்தது தெரிந்தது ???

ஆர்த்தி உடனே கிளம்பி விட்டாள்!!

ஆர்த்தி ரிசப்ஷனில் நிற்கும்போதே கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன் அவளை நோக்கி வந்தான்!

‘ஆர்த்தி ? ‘

‘கார்த்திக் ?’

‘வாங்க அவசர சிகிச்சை பிரிவுக்கு போலாம்!!’

‘கார்த்திக் ! ரொம்ப நன்றி… தாத்தா ???….’

‘ஒண்ணும் பயமில்லை ! பாருங்க ! ‘

பாட்டிதான். மிகவும் பயந்திருந்தாள் !

‘தாத்தா ? என்னாச்சு ! காமிங்க ! ‘

‘கால் சிராய்த்து வீங்கியிருந்து!

“ஆர்த்திம்மா! கார்த்திக் மட்டும் இல்லைன்னா ….”

“முறிவு இருக்கான்னு x-ray எடுத்திருக்காங்க ! இல்லைனா இன்னிக்கே போலாம் ! ”

“கார்த்திக் நன்றின்னு ஒரு வார்த்தையோட முடிக்க முடியாது !!

தாத்தாவுக்கு sugar வேற! ‘

நல்லவேளை ! ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்றது !

கூடவே புறப்பட்ட கார்த்திக்கை ஆர்த்தி தடுத்தாள் !

தாத்தா விடவில்லை ! வீட்டுக்கு வந்து விட்டுதான் போகணும் என்று பிடிவாதமாய் சொல்லி விட்டார் !

அன்றிலிருந்து கார்த்திக் அவர்கள் குடும்பத்தில் ஒருவனானான் !!

மங்களம் அவனை ஒரு வாரம் பார்க்காவிட்டால் போன் பண்ணி வரவழைத்து விடுவாள் ! ஒரு மாசத்துக்குள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டான் !

சுரேனுடன் ஃபார்முலா ரேஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவான்!

முகுந்தை செஸ்ஸில் திணறடிப்பான்!

ப்ரியா , சங்கரியுடன் கிச்சனில் புகுந்து , Burritos, Tomato Salsa , lasagna , risotto என்று கலக்குவான்!

கணேசன் , மங்களத்திடம் பாகவதம் , பிரபந்தம் என்று பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!

மதுவுடன் மேனேஜ்மென்ட் பாலிசி பற்றி விவாதிப்பான்!

சங்கரியும் ஆர்த்தியும் ஒரு நாள் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் !

மங்களம் கேட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தான் கார்த்திக் !

‘வா ! கார்த்திக் ! இப்பத்தான் உன்னைப் பத்தி பேசிக்கொண்டிருந்தோம் ! ‘

என்ன ஏது என்று கேட்கவேயில்லை!

“நான் கொடுத்து வைத்தவன்..”என்று சொல்லி விட்டு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் !

‘எப்படி உனக்கு எல்லோரிடமும் இப்படி அந்நியோன்யமாய் பழக முடிகிறது என்று பேசிக்கொண்டிருந்தோம் !!

“அதற்கு என்னோட அம்மா அப்பாவுக்கு த்தான் நன்றி சொல்லணும் !!!

கார்த்திக் கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்தவன் !

அம்மா மலையாளி ! சாகித்திய அகாதமி விருது பெற்றவர் ! அப்பா தமிழ்! கல்லுரி விரிவுரையாளர் !

வீடு நிறைய புத்தகங்கள் ! கல்லூரி படிப்பு முடியும் முன்னால் அம்மா தவறிவிட்டாள் !

மேல் படிப்பு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்… தத்துவம் ! முழு உதவித் தொகையுடன்……

தத்துவத் துறையில் மேற்கொண்டு படிக்க இந்தியாவைவிட சிறந்த இடம் ஏது ??

திரும்பி வந்தான் ! திபெத் , தாய்லாந்து , காசி , தரம் சாலா என்று சுற்றி விட்டு கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் தத்துவ பேராசிரியராக சேர்ந்து விட்டான் !

சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நிர்வகித்து வருகிறான் ! அப்பா பாலக்காட்டில் !

சங்கரிதான் கேட்டாள் ! “கார்த்திக் ! திருமணம் பத்தி உன்னுடைய கருத்தென்ன ??”

“நான் திருமணம் எனும் அமைப்பை மிகவும் மதிக்கிறேன் !

அது இல்லாட்டா நாம இங்க இத்தனை சந்தோஷமா பேசிக்கொண்டிருப்போம்னு
தோணுதா ? “

“ஏன் அப்படி சொல்ற??”

“ஆர்த்தி ! நீ உன் குடும்பத்தைப் பத்தி என்ன நினைக்கிற??”

“ரொம்ப பெருமையா இருக்கு!”

“இத்தனை உறவுகளும் உனக்கு கிடச்சதுக்கு காரணம் நமது வாழ்க்கை முறைதானே! “

‘ஒரு நிமிஷம் ! ‘என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் சங்கரி !

“ஆனால் இதில் எவ்வளவு விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கு ? “

“ஆர்த்தி ! எதில்தான் compromise பண்ணாமல் உன்னால் இருக்க முடியும் ?

L.K.G. தொடங்கி பள்ளி , கல்லூரி , ஆஃபீஸ் என்று எல்லா இடத்திலேயும் யாருடனாவது அனுசரித்து போகாமல் வாழமுடியுமா?

அடிக்கடி வேலை மாற்றுவது போல் வாழ்க்கைத் துணையை மாற்ற முடியுமா ?

ஒரே கம்பெனியில் பொறுமையாக இருந்து மேல்நிலைக்கு வருபவர்களும், ஒரு வாழ்க்கைத்துணையுடன் வாழ்ந்து பொன் விழா கொண்டாடுபவர்களும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள்தான்!”

சுடச்சுட போண்டாவும் காப்பியும் கொண்டு வந்தாள் சங்கரி !

சரியான சமயம் கோவிலுக்கு போயிருந்த கணேசன் தம்பதிகள் உள்ளே நுழைந்தார்கள் !“

இன்னிக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போறோம் ! ஆர்த்தி கெஸ் பண்ணு ! “

“வேறென்ன பாட்டி ! என் கல்யாணம் பத்திதானே !”

“எப்படி கண்டுபிடிச்ச ??”

ஆர்த்தி ஓடி வந்து பாட்டியைக் கட்டிக்கொண்டாள் ! ”

“என் பாட்டிக்கு இதைத் தவிர வேறு எது நல்ல செய்தி ? “

“ஆமாம் ! இந்த வைகாசிக்குள் ஆர்த்திக்கு நிச்சியம் கல்யாண யோகம் இருக்குன்னு ஜோசியர் சொல்லிவிட்டார் !!”

“பையன் பெயரும் சொல்லியிருப்பாரே !!”

“ஆமாம் ! முருகனின் ஒரு பெயர் !!”

“பையனையும் பெண்ணையும் கேட்காமல் அவரே நிச்சயம் பண்ணி விட்டாரா ??”

“சம்மதமிருந்தால் பையனும் பெண்ணும் இப்போதே கை குலுக்கிக் கொள்ளலாம் ! ”

சிறிது நேர மௌனம் !!!!

இருவர் கையும் நீண்டன!!! அப்புறமென்ன ???

டும்…டும். ….டும் …. …. . ……….!!!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *