(1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சாளரத்தின் கனதியான திரைச்சீலையை ஒதுக்கி விட்டுக் கொண்டு வெளியே பார்வையைச் செலுத்தினார் வேங்கடகைலாசசந்திரசேகரமூர்த்தி. வானம் மப்பும் மந்தாரமுமாக நிறைசூல் கொண்டிருந்தது. கொழும்பின் கொங்கிறீற் காட்டில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உயர்ந்த கட்டிடமொன்றில் பதினேழாவது மாடியில் அமைந்திருந்தது அவருடைய செயலகம். அம்மாவும் ஐயாவும் வைத்த அழகிய பெயரைக் குறுகத்தறித்து, மினுக்கிய பித்தளைத் தகடொன்றில் வீ. கே. எஸ். மூர்த்தி என்று பொறித்து வைத்திருந்தது நிர்வாகம். முழுப் பெயரையும் எழுதினால் அவருடைய செயலகச் சுவரின் நீளம் போதாமலிருக்குமென நிர்வாகம் கருதியிருக்கலாம்.
கீழே ஆகாசக்கடை தெரிந்தது. பள்ளிக்கூட நாட்களில் சிறுவர்களும் சிறுமிகளுமாய் கல்விச் சுற்றுலா வந்திருந்த போது பெரியசேர் சிலிங்கோவிற்குக் கூட்டி வந்து பதினான்காவது மாடியில் அமைந்திருந்த ஆகாசக் கடையைக்காட்டினார். மாடிவீடுகளே இல்லாதிருந்த வதிரிக் குக்கிராமச் சிறிசுகள் விழிகள் விரிய அந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தன. எமது நாட்டிலேயே மிகவும் உயரமான கட்டிடம் இதுதானென்று பெரிய சேர் சொன்னார். அப்படியெண்டால் சேர், இதைக் கட்டினவைக்கும் பெரிய கையளும் பெரிய விரல்களும் இருக்குமோ?” என்று கேட்டதையும் பெரிய சேர் ஆதரவாகக் தலையை வருடியபடியே” இல்லைக் குஞ்சு அவையளும் எங்களை மாதிரி ஆக்கள்தான். அவையளுக்கும் எங்கடையளவான கைகளும் விரல்களும் தான். ஆனால் அவையளின்ரை மனசுகள் பெரிசு. நீங்களும் இப்படிப் பெரிய மனசுள்ள மனிசராக வளர வேணும்” என்றார். “நான் இவையளை விடப் பெரிய மனசுள்ளவனாக வளருவேன் சேர்” தான் அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் அவருடைய நினைவுத் தடத்தில் இருக்கின்றன.
சிலிங்கோவின் அருகில் வானளாவ முளைத்துவிட்ட மூன்று கட்டிடங்கள் சிலிங்கோவைச் சிறிதாக்கிவிட்டன. அதன் உச்சியிலிருந்த ஆகாசக் கடை புகை படிந்து, கரி மண்டி, மனித சஞ்சாரமற்றுத் தெரிகிறது. 1995இன் முதல் மாதத்துக் கடைசி நாள் நிகழ்வுகள் இதயம் ஒரு கணம் உறைந்து மீண்டும் மெல்லத் துடிக்கிறது. “இவர்களுடைய மனசு எப்படிப்பட்டது?” பல்சுடற்றுப் பிளவடைந்த அக்கேள்வி மீண்டும் தலைதூக்கி, பதிலறியாமல் மனதுக்குள் மெல்ல அடங்குகிறது.
பேர்சி கொத்தலாவலை கூறிய சம்பவமொன்று நினைவிற்கு வந்தது. பேர்சி கட்டைப்பிரமச்சாரி, வானொலி தொழில் நுட்பவியலாளர் ஹோசி மின்னின் அழைப்பின் பேரில் வியட்நாமிற்குச் சென்று புரட்சியின் வெற்றி விழாவிற் பங்குபற்றித் திரும்பியவர். ஹனோயில் சந்தித்த அமெரிக்கச் சிப்பாய் ஜோர்ஜ் மில்ரனின் அனுபவமொன்றைச் சொன்னார். வியட்நாமில் குடியிருப்பை அண்டிய கோதுமை வயல்வெளி. அதனை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ்சாலைக்கு அப்பால் வியட்நாமிய விடுதலைப் போராளிகள் வயல்களுக்குள் பதுங்கியிருந்து குடியிருப்புப் பகுதியிலிருந்த அமெரிக்கச் சிப்பாய்களை நோக்கி வேட்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். இரு தரப்பிலும் இடைவிடாது வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அருகிலிருந்த குடியிருப்பொன்றிலிருந்து அழகிய பெண் குழந்தையொன்று பெரியதொரு போனிக்காவை அணைத்துப் பிடித்துக் கொண்டு நெடுஞ்சாலையில் ஓடி வந்தது. சாலையின் மறுபுறத்தே பதுங்கியிருந்த வியட்நாமிய விடுதலைப் போராளி இளைஞன், பாய்ந்து வந்து அந்த நீலக்கண் குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு குனிந்தோடினான். அமெரிக்கச் சிப்பாயொருவனின் வேட்டொன்று அந்த விடுதலைப் போராளியின் உயிரைக் குடித்தது, குழந்தை உயிர் பிழைத்தது. மனித நேயத்தின் கொடு முடியான அந்த விடுதலைப் போராளி எதிரிகளின் இதயத்திற்கூட இன்றும் வாழ்கிறான். ஜோர்ஜ் மில்ரன் இந்த நிகழ்வினை யுத்த பூமியில் ஒரு மனித தேவதை என்ற தலைப்பில் குறும் படமாகத் தயாரித்துள்ளார்.
இன்ரகொம்மின் இனிய சிணுங்கல் மூர்த்தியின் கவனத்தைத் திருப்பியது. மனித வள முகாமையாளர் ஒகஸ்ரஸ் சில்வா ஆங்கிலத்தில் கரகரத்தார். “மிஸ்ரர் மூர்த்தி, கிடைத்த விண்ணப்பங்களில் மிகத் தகுதிவாய்ந்த மூவரைத் தெரிந்தனுப்புகிறேன். இரண்டு தமிழ்ப் பிள்ளைகளும் மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள். மூன்றாவது பிள்ளை முஸ்லிம் பிள்ளை ஆங்கிலம் சற்று இடறுகிறது. எப்படியோ, உங்கள் வேலைக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை உங்களுக்களிக்கிறேன். இது சம்பந்தமான கோவைகளை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன். என்னால் தெரிவு செய்யப்பட்ட மூவரும் வரவேற்பறையில் இருக்கிறார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்கட்டும்” இன்ரகொம் மௌனிக்க செயலகக் சேவகர் கோவையொன்றைக் கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுத்தார்.
முதலாவது பெயர் குமுதினி. குட்செப்பேர்ட் கொன்வென்றில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி, செயலாளர் கற்கை நெறியில் உயர் சித்தி, ஐ.டீ.பீ.எம்.மில் டிப்ளோமா இன் கொம்யூட்டர் ஸ்ரடீ, வெஸ்ரேன் ஸ்கூல் ஒப் ஸ்பீச் அன்ட் டிராமா சான்றிதழ்கள் இத்தியாதி, இத்தியாதி. ஓகஸ்ரஸ் சில்வா நேர்முகப் பரீட்சையில் அதிக புள்ளிகளைத் தாராளமாக வழங்கியுள்ளார்.
இரண்டாவது பெயர் ஹிப்பொலிதா முருகவேள். ஜீ.ஏ.கியூ. சித்தி பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவி. தந்தையார் அரசின் உயர் மட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதற்குச் சான்றுபகன்றது பிரதியமைச்சரின் சான்றிதழ். கறுவாக்காடு பிளவர் வீதி மகளிர் கல்லூரி தட – கள விளையாட்டுப் போட்டிகளில், தேசிய மட்டத்திலான நீச்சற் போட்டிகளில் ஏராளமான சான்றிதழ்கள். மனித வள முகாமையாளர் தந்தையாரின் பெயரின் கீழ் நீலப் பென்சிலால் கோடிட்டுள்ளார்.
மூன்றாவது பெயர் ரஹீமா முஹம்மத், யாழ்/இந்து மகளிர் கல்லூரியிற் கல்விகற்று தமிழ் மொழியில் அதி உன்னத சித்தி, தமிழ் தட்டெழுத்தில் சிறப்புச் சித்தி. உயர்தரம் படித்துள்ளார், பரீட்சைக்குத் தோற்றவில்லை. கொழும்பு மத்திய சிறப்பு அங்காடித் தொகுதியில் லங்கேஸியா அச்சகத்தில் தமிழ் ரைப்செற்றராகத் தற்காலிகப் பணி.
மூர்த்தி கோவையினை மூடினார். அவருக்குத் தேவை சுருக்கெழுத்துத் தெரிந்த தமிழ் தட்டெழுத்தாளர். அரச கரும மொழி ஆணையாளரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி சகல சுற்று நிருபங்களிலும் கட்டாயம் சிங்களத்திலும் தமிழிலும் தேவைப்படின் ஆங்கிலத்திலும் வெளியிடப்படவேண்டும். மீறுவது அரச கரும மொழிச் சட்டவிதிகளின்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இன்று வரை ஓர் ஓணான்கூட இத்தண்டனையைப் பெற்றதாக இலங்கை வரலாற்றில் சான்றேதும் இல்லை .
மூர்த்தியின் மேசையில் எலக்ரோனிக் அடிமைகள் ஓரமாக வீற்றிருந்தன. பஸிமைல் ஏதோவொரு செய்தியை அச்சிட்ட வெள்ளைத்தாளைத் துப்பியது. டிகராபோன் எடுத்து சிவப்புப் பொத்தானை அழுத்தி காலஞ்சென்ற கோமல் சுவாமி நாதனின் காலஞ்சென்ற சுபமங்களாவிலிருந்து சிறிய பந்தியொன்றை மெதுவாக வாசித்தார். குட்டி எலக்ரோனிக் அடிமை அமைதியாக ஒலிப்பதிவு செய்தது. றிவைன்ட் செய்து கொண்டே அழைப்பு மணியை அழுத்தி சேவகரை அழைத்து வரவேற்பறையில் காத்திருந்த மூவரையும் அழைத்துவரச் சொன்னார். வந்தோரை அமரவைத்து பெயர்களைக் கேட்டறிந்து மூவருக்கும் சுருக்கெழுத்துத் தாள்களைக் கொடுத்தார். குமுதினியும் ஹிப்பொலிதாவும் நவீன கைப்பைகளைத் திறந்து கிளச் பென்சில்களை எடுத்து காரீயக் கூர்களை வெளியே தள்ளி ஆயத்தமானார்கள். ரஹீமாவிடம் கைப்பை இருக்கவில்லை. மூர்த்தி தனது றிசெப்ராக்கிலிருந்து கிறேற் வோல் சீனத்து பென்சிலை எடுத்து பென்ரோச் பற்றரியில் இயங்கும் திருவியினுள் முனையைச் செலுத்தியதும் அது தன்னியக்கம் பெற்று பென்சிலைக் கூராக்கியது. டிக்ராபோனை மூவருக்கும் மத்தியில் வைத்து பிளே’ பொத்தானை அழுத்தினார். மூவரும் குனிந்து ஒலிவடித்தை சுருக்கெழுத்துக் குறியீட்டுக் கோடுகளாக்கிக் கொண்டிருந்தார்கள்.
மூர்த்தி கண்களால் பெண்களை அளந்தார். குமுதினி மாதிறம், செழுமையான கவர்ச்சிகரமான குழந்தை முகம், நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். ஹிப்பொலிதா எயர் ஹொஸ்ரஸ் போன்ற வசீகரத் தோற்றம்.
இடதுகால் மேல் வலது காலைப் போட்டுக்கொண்டு அலட்சியமாக அமர்ந்திருந்தாள். ரஹீமா அடக்கமான சல்வார் கமீஸ், மெல்லிய உடல்வாகு, துடைத்தெடுத்தது போன்ற முகம். அதில் ஆழமான சோகம் கவிந்திருப்பது போற் தெரிந்தது.
ரைப்பிங் பூலில் இரண்டு தமிழ் தட்டச்சு இயந்திரங்களே இருந்தன. குமுதினியையும் ஹிப்பொலிதாவையும் அங்கேயனுப்பினார். தனது பெரிய எலக்ரோனிக் அடிமையின் முன் – கொம்பியூட்டரின் முன் ரஹீமாவை அமரச்செய்தார். சுழற்கதிரையின் நுனியில் பட்டும்படாததுமாக அமர்ந்தாள்.
“சேர், இதிலை வேர்ட்ஸ் கிடக்கா?” மௌஸ் பாட்டிலிருந்த மௌஸில் விரல்களைப் பதித்தவள் “சேர், இந்த மௌசிலை இரண்டு பொத்தான்கள், நான் வேலை செய்யிற இடத்திலை ஒரு பொத்தான் மட்டுந்தான்” என்றாள்.
“ஓ! இது இரட்டைத் தலை எலி. வலது பக்கப் பொத்தானை நீங்கள் பாவிக்கலாம். வின்டோ – 95இல் ‘வேர்ட்ஸ் இருக்கிறது”
கீபோட்டில் உரிய பொத்தான்களை அழுத்திக் கட்டளை பிறப்பித்தாள். வின்டோ – 95இல் ‘வோட்ஸ்” ஐகனைக் கிளிக் செய்தாள். பைலைத் திறந்து பொன்ற்ஸ்களை நோக்கினாள். அண்மைக் கால கனேடிய பொன்ற்ஸ் – பூபாளம், கார்முகில், கிழவி, பிச்சைக்காரி, ரகசியம், சிங்காரம், சிரிப்பு, சொறிநாய், குஷ்பு வினோதமாகப் பெரிட்டிருந்தார்கள், சிங்காரம் அழகிய பொன்ற், அதனைத் தெரிவு செய்தாள். பைலுக்கு வாணி’ என்று பெரிட்டு சுருக்கெழுத்துக் குறிப்பை வாசிப்புத் தாங்கியிற் பொருத்தி வேலையை ஆரம்பித்தாள். விசைப்பலகையில் தளிர் விரல்கள் நர்த்தனம் புரிந்தன. பிறின்ற்’ கட்டளையிட்டு ஓ. கேயைக் கிளிக் செய்ததும் 600 டீ.பீ.ஐ. லேஸர் பிறின்ரறில் காட்டுப்பூச்சிகள் கீறீச்சிடும் சத்தத்துடன் அச்சிடப்பட்ட வெள்ளைத்தாள் எமது வேகத்தில் வெளியே வந்தது. உருவியெடுத்து எழுந்து நின்று இரு கைகளாலும் மூர்த்தியிடம் பணிவாகக் கொடுத்தாள். குமுதினியும் ஹிப்பொலிதாவும் வந்தார்கள். மூவரையும் வரவேற்பறையில் இருக்கச் சொல்லி விட்டு மூர்த்தி தட்டச்சிட்ட தாள்களை நோக்கினார்.
குமுதினி அடிக்கோடிட்டிருந்த தலைப்பு “ஹோமல் சுவாமினாதனின் சுவமண்கலா”. உள்ளே வரிக்கு வரி கொழும்பு டமில் கொஞ்சியது. ஹிப்பொலிதா பரவாயில்லை . ஆயினும் ரகர றகர, லகர ழகர பேதங்கள் காணப்பட்டன. ரஹீமாவின் தாள் பூரண திருப்தி தந்தது. தனது குறிப்புடன் கோவையை ஓகஸ்ரஸ் சில்வாவிடம் அனுப்பிவிட்டு குமுதினியையும் ஹிப்பொலிதாவையும் அழைத்து முடிவு கூறி, நன்றிகூறி அனுப்பி வைத்தார்.
சேவகர் ரஹீமாவை உள்ளே அழைத்து வந்தார்.
“ரஹீமா, நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். எனது பாராட்டுக்கள்” என்றவாறே வலது கரத்தை அவளை நோக்கி கைகுலுக்க நீட்டினார். ரஹீமா தனது கரங்களைக் குவித்து “உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேணும் சேர்” என்றாள்.
“இன்னும் அரைமணி நேரத்திலை நியமனக் கடிதம் தயாராகிவிடும். அது வரைக்கும் என்னோடை இருக்கலாம். அது சரி, நீங்கள் எப்ப யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தியள்?”
“நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வரேல்லை சேர், துரத்தப்பட்டம்.” “எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவியளோ?”
“தொண்ணூறாம் ஆண்டு ஒக்ரோபர் 30 ஆந்தேதி காலமை வெள்ளெண 5.30 மணிக்கு சுபஹ்தொழுகையை முடிச்சுக் கொண்ட உம்மா அடுப்படிக்கை தேத்தண்ணி கலக்கினா. எல்லா முஸ்லீம் ஆம்பிளையளையும் ஒஸ்மானியா கொலிஜ் தைானத்திலை காலமை 6.00 மணிக்கு கூடும்படி ஒலிப்பெருக்கியிலை எனவுன்ஸ் பண்ணிக் கொண்டு போச்சினம். எங்கடை வீட்டிலை ஆம்பிளையள் இல்லை. எனக்குச் சின்ன வயசிலை வாப்பா செத்துப்போனார். அண்ணா சவூதியிலை. நாங்கள் பொம்பிளைப் பிள்ளையள் நாலுபேர். ஆனால் அண்டைக்கு பெரியக்கா வீட்டிலில்லை அவ மாவனல்லையில் படிப்பிக்கப் போய்ட்டா”
“உங்கடை வீட்டிலையிருந்து ஒருதரும் ஒஸ்மானியா மைதானத்துக்குப் போகேல்லையே?”
“இல்லை சேர், நான் போறனெண்டு வெளிக்கிட்டன். உம்மா விடேல்லை.
“அங்கை என்ன நடந்ததாம்”.
“கையிலை எடுக்கக் கூடிய எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணித்தியாலத்திற்குள்ளை யாழ்ப்பாணத்தை விட்டு எங்கையெண்டாலும் ஓடச்சொன்னவையாம்”.
“நீங்கள் என்ன செய்தியள்?”
“முதல்லை என்ன செய்யிற தெண்டு ஒருத்தருக்கும் தெரியேல்லை. நான் எல்லாற்ற சேட்டிபிக்கற்றுகளையும் வீட்டுறுதி, காணியுறுதிகளையும் பெட்டகத்துக் கையிலிருந்து எடுத்து பொலித்தீன் பேப்பரிலை சுத்தினன். சின்னக்கா அவசர அவசரமாக ஒவ்வொருத்தற்ரை உடுப்புக்களிலையும் ஒண்டிரண்டை எடுத்து மூண்டு சின்ன ரவலிங் பாக்கிலை திணிச்சா. உம்மா வீட்டையிருந்த காசுகளையும், எல்லாவற்றையும் நகையளையும் எடுத்து தன்ரை உள்பாவாடைப் பொக்கற்றிலை வைத்து அவசரமாக மூடித் தைச்சா. மற்றக்கா சின்ன உரப்பையில் கொஞ்சம் சாப்பாட்டுச் சாமானும் பிளாற்ரிக் கானிலை தண்ணியும் எடுத்துக் கொண்டா. சாச்சா வீட்டை ரண்டு லொறிநிண்டது. அங்கை போகப் புறப்பட்டம். வீட்டைப் பூட்டித் திறப்பை எடுத்த உம்மா திடீரெண்டு என்ன நினைச்சாவோ தெரியாது, திறப்பைப் போட்டுக் கதவை அகலத் திறந்து விட்டு ஓவென்று அழுதபடி திரும்பிப் பார்க்காமல் நடந்தா. எங்கடை வீட்டைக் கடைசியாகப் பார்த்துப் போட்டு நானும் நடந்தன். ஆனால் எனக்கு அழுகை வரேல்லை, நெஞ்சை ஏதோ அடைக்கிறமாதிரி இருந்தது.
மூர்த்தியின் கண்கள் பனித்தன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு கைக் குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அப்படியே நேரே கொழும்புக்கு வந்திட்டியளோ?”
“இல்லை சேர், எங்கடையாக்கள் இருந்த இடமெல்லாத்தையுஞ்சுத்தி செக் பொயின்றுகள். ஒரு ஈ காகம் தப்பேலாது. ஐந்து சந்தி என்ற இடத்திலை எங்களை மறிச்சினம். பெட்டையள் பொம்பிளையளையும் பொடியங்கள் ஆம்பிளையளையும் சோதிச்சினம். என்ரை பொலித்தீன் சுருளுக்கையிருந்த உறுதிகள் எல்லாம் எடுக்கப்பட்டன, மறைச்சுவச்ச, மறைக்காமற் போட்டிருந்த நகைகளெல்லாம் குவிக்கப்பட்டன, கையிலும் பையிலுமிருந்த பணமெல்லாம் வாங்கப்பட்டன. குடும்பமொண்டுக்கு நாலாயிரம் ரூபா வீதம் தரப்பட்டது. லட்கக்கணக்கிலை காசு கொண்டந்தவைகூட எல்லாத்தையும் குடுத்துப்போட்டு அவை தந்த, நாலாயிரத்தைக் கைநீட்டி வாங்கிச் சினம். சாச்சாவின்ரை லொரியிலை அடைஞ்சு கொண்டு காட்டுப் பாதையாலை நாச்சிக்குடாவுக்கு வந்து ஒரு கொட்டிற் பள்ளிக் கூடத்திலை கொஞ்சநேரம் தங்கிப் போட்டு அண்டிரவே மதவாச்சிக்கு வந்து சாச்சான்ரை கூட்டாளி அமீன் நானா வீட்டிலை சாப்பிட்டுவிட்டுப் படுத்தம். அடுத்தநாள் காலையிலை ரயிலெடுத்துக் கொழும்பு வந்து மாவனல்லையிலை படிப்பிச்சுக் கொண்டிருந்த பெரியக்கா தங்கியிருந்த வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தம்.”
ரஹீமா நிமிர்ந்து பார்த்தாள், மூர்த்தி விம்மிக்கொண்டிருந்தார். அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக,
“சேர், நீங்கள் எந்த இடம்?”
“வடமராட்சிப் பனங்கொட்டை”
“ஊரெது சேர்?”
“வதிரி, தெரியுமா?”
“வந்ததில்லை, ஆனாக் கேள்விப் பட்டிருக்கிறன்”
“சொல்லிக்கொள்ளப் பெரிசா அங்கை ஒண்டுமில்லை. நிறையப்பனையள், வடக்குத் தொங்கல்லை ஒரு வேதப் பள்ளி, மேற்குப்பக்கத்தில் ஒரு சைவப்பள்ளி. ஊருக்கு நடுவிலை ஒரு பிள்ளையார் கோவில் அவ்வளவுதான். முந்தியொரு கூட்டுறவுச் சப்பாத்துத் தொழிற்சாலை இருந்தது. இப்ப கனகாலமா அந்தக் கட்டிடம் மட்டுந்தான் வெறுமையாக்கிடக்கு. எண்டாலும் உலகத்திலை எனக்கு மிகவும் பிடிச்ச இடம் அதுதான். ஏனெண்டால் அங்கைதான் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே.”
“எனக்கும் அப்பிடித்தான் சேர்; எப்ப யாழ்ப்பாணம் போகலாமெண்டு தவிப்பாக்கிடக்கு. எங்கடை வீட்டு முத்தத்திலை படுத்து உருள வேணும் போலை கிடக்கு. சைக்கிளை எடுத்துக்கொண்டு வாணியையும், வாசுகியையும் கூட்டிக் கொண்டு நாவலர் வீதியாலை போய் மானிப்பாய் வீதியிலையேறி, பிரப்பங்குளத்தாலை வந்து ஹிண்டு லேடீஸிலை எங்கடை ஜனதா ரீச்சரோடை நாள் முழுக்கக் கதைச்சுக் கொண்டிருக்க வேணும்.” இப்பொழுது, அவளுடைய கண்கள் பனித்தன.
அவளுள் எரிந்த சுவாலை மூர்த்தியைத் தகித்தது. சுழற்கதிரையிலிருந்து எழுந்து மேசையைச் சுற்றிவந்து ரஹீமாவின் தலையை மூடியிருந்த முக்காட்டின் மீது வலது கரத்தை வைத்து எனக்கு ரெண்டு பெம்பிளைப்பிள்ளையள் இருக்கினம்., அந்தக் கிளாஸ் பாட்டில்லை இருக்கிற போட்டோக்கள் அவையின்ரைதான். தாயோடை ஊரிலையிருந்து படிக்கினம். ஒவ்வொருநாளும் அதுகளைப் பார்த்துக் கொஞ்சிப் போட்டுத் தான் வேலையைத் தொடங்குவன். நேரிலை பார்த்து ஐஞ்சு வருசமாச்சு. இண்டையிலிருந்து எனக்கு மூண்டு பெம்பிளைப் பிள்ளையள்,” என்றார்.
ரஹீமா விம்மி வெடித்தாள். வெந்து கொதித்த இதயம் வெம்மை தணிந்து ஆறிக்குளிர்ந்தது. திடீரென எழுந்து அவருடைய கால்களைத் தொட்டு வணங்கினாள். விதிர்த்துப்போன மூர்த்தி அவளுடைய தோள்களைப் பற்றித் தூக்கினார். அவளுடை முக்காட்டை சரிசெய்து கன்னங்களில் கோடிட்டிருந்த கண்ணீரை தனது வெற்றுக்கரங்களால் வாஞ்சையுடன் துடைத்துவிட்டார்.
சுழற்கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஓய்ந்தார். இதயம் கனதியிழந்து மென்பஞ்சாகியிருந்தது. மனித வள முகாமையாளர் ஒகஸ்ரஸ் சில்வா ஒப்பமிட்டு சேவகர்மூலம் கொடுத்தனுப்பிய நியமனக் கடிதத்தை ரஹீமாவை நோக்கி நீட்டினார். அவள் எழுந்து நின்று இரு கரங்களையும் நீட்டினாள். அவர் பதறியெழுந்து இரு கரங்களாலும் கொடுத்தார், நன்றி கூறிப் பெற்றுக்கொண்டாள்.
“ஒக்ரோபர் முதலாந்திகதியிலிருந்து நீங்கள் வேலைக்கு வரலாம்.”
‘ஒக்ரோபர் முப்பதாந் திகதி… ஒக்ரோபர் முதலாந் திகதி என்ரை வாழ்க்கையிலை முக்கியமான ரண்டு திகதியள்.”
“எனக்கும் ஒக்ரோபரிலை முக்கியமான ரண்டு திகதியள் இருக்கு. மூத்த மகள் ஒக்ரோபர் ரண்டாந்திகதியும் சின்னமகள் ஒக்ரோபர் இருபத்தி நாலாம் திகதியும் பிறந்தவை. ஐஞ்சு வருசத்துக்கு முந்தி ரண்டு குழந்தைகளை விட்டிட்டு வந்தன். இனிப்போய் ரண்டு குமரியளைத்தான் பார்க்கப்போகிறன்.”
“நீங்கள் போகேக்கை நானும் வாறன் சேர்”
“கட்டாயம், கட்டாயம். வலுகெதியிலை நாங்கள் ரண்டுபேரும் சேர்ந்து யாழ்ப்பாணம் போவமம்மா.”
– 1997 மே மாதம், “மல்லிகை”, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல