புண்ணியத்தின் பாதுகாவலர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,516 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரின் ஹோன் சத்தங்கேட்டு, ஆயிஷா அதிர்ச்சியுடன் வீதியின் ஓரத்தில் ஒதுங்கிக் கொள்கின்றாள். தூசிப்படலத்தைக் கிளறிக் கொண்டோடிய காரின் வேகத்தில் அவளுடைய முக்காடு இருக்கை வழுகிச் சரிந்தது. தனது மார்பகத்தைப் பிற ஆடவர் பார்க்கக் கூடாது என்ற சீல உணர்வின் இயக்கம் இடையில் தூசிப்படலம் கண்களுக்குட் புக தலையிலிருந்த சுமை கீழே விழுந்து சிதறுகின்றது.

“ஏடி சனூபா, அது எந்த ஹரபா போனவனிட காரடி” ஆயிஷாவின் மன எரிமலை அக்கினிக் குழம்பைக் கக்கியது.

“டியே ஆயிஷா … அது அப்துல்லா ஆஜியாரிட கார். சோனகத்திக சிங்களவனிட்ட வேலை செய்றது பஸாது செய்கிறாப் போல எண்டு பள்ளிவாசல்ல அவர் சொல்லிப் போட்டும் நாங்க கேக்காததால அவருக்குப் பழைய கோபண்டீ”.

“ஏண்ட வாப்போ! சிங்களவனோ சக்கிலியனோ எங்கட கனாயத்தப் போக்க ஒதவுறானுக. உள்ளோம் ஒரு கொமருக் குட்டி ஊட்டுக்குள்ளுக்கிருந்து கெழவியாப்போறதெண்டு, அவளக்கரை சேக்க ஒதவி கேட்டும் ஒரிசாத்துக்கும் ஒதவல்ல. பள்ளி தக்கியாவையும் வீடுவாசலையும் அலங்கரிச்சி உலகத்துக்குச் சோ காட்டுறானுக. அல்லாத் தாலா நாயன் எல்லாத்தையும் பாத்தோண்டு தானே இருச்சிய”.

“ஆயிஷா இருட்டுப்பட முன்னுக்குப் பெய்த்திடோம்டி குடிகாரனுக. காடயனுக வாறத்துக்கு முன்னுக்கு பெய்திடோம் வா… தூக்கி வச்சிக்கோ”.

தட்டுக்களையும் குச்சிப் பொட்டணத்தையும் அடுக்கிச் சுமந்து கொண்டு தள்ளாடிய வாறே நகருகிறார்கள். காற்றின் எதிர் விசையில் தொடையோடு ஒட்டிய சேலையைச் சரிசெய்ய எடுத்த முயற்சிகள் பலிதமாகாதால் வெட்க அரிப்பு நடை வேகத்தில் பெண்மை உறுப்புக்கள் குலுங்கி நெளிவதால் ஒரு விதமான வதைப்பு.

ஆயிஷாவின் கணவன் அப்துல்லாகாக்கா. அப்துல்லா ஹாஜியாரின் பெக்டரியில் செக்கு மாடாக உழைத்தவர். வேலை நிறுத்தம் ஒன்றுக்குத் தலைமை தாங்கியதற்காக மெஷின் மேற் பார்வையாளர் ஒருவருக்குச் சீட்டுக்கிழிக்கப்பட்டது. அந்த வேலையைப் பொறுப்பேற்கும்படி அப்துல்லா நிர்ப்பந்திக்கப்பட்டார். முன் அநுபவமற்ற வேலையால் இரு கரங்களும் மெஷினுக்குள் இரையாகின. அதிலிருந்து அவர் தொழிலற்று வீட்டு மூலையிலே முடங்கிக்கிடக்கின்றார். அல்லும் பகலும் உழைக்க வேண்டிய சுமையும் ஆயிஷாவின் கொடிவாக்கு உடம்பிலே ஏற்றப்பட்டது.

முஸ்லிம் தனவான்களின் வீடு வாசல்களில் உடல் வருந்த உழைத்தும் போதிய சம்பாத்தியம் கிட்டவில்லை. எனவே, சிங்கள முதலாளி கொடுத்த வேலையுடன் ஒன்றினாள். தீப்பெட்டித் தொழிற்சாலையிலிருந்து தீக்குச்சித் தட்டுக்களைச் சுமந்து கொண்டு ஒரு மைல் சென்று திரும்புவது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. ஒரு தட்டில் ஆயிரம் குச்சிகளைக் குத்தி ஒழுங்கு படுத்தினால் பத்துச் சதம்கிடைக்கும். தாயும் மகளுமாகச் சேர்ந்து பதினைந்து இருபது தட்டுக்களைப் பூர்த்தி செய்வதால் வயிற்றுப் பிரச்சினை ஒருவாறு தீருகின்றது. உழைப்பால் அவள் உடல்தேய்ந்து ஓடாகிக் குறாவியது. நோய் வாய்ப்பட்ட வேளைகளில் சிங்கள முதலாளி தாராளமாக உதவிசெய்து வந்ததால் ஆறுதலடைந்தாள். புதுவருஷ அன்பளிப்பென்றும், ஆண்டு போனஸ் என்றும், வெஸாக் பரிசென்றும், இடையிடையே கிடைப்பதால் தொழிலில் உற்சாகம் குன்றவில்லை.

அன்று ஈதுல் அழ்ஹா தியாகப் பெருறாள். பட்டாசு வெடியும், மத்தாப்பின் ஒளிச்சிதறலும், தக்பீர் முழக்கமும் அந்தப் பிராந்தியத்தை ஆரவாரத்தில் ஆழ்த்தியது.

தென்னையின் வட்டுக்களை உதய சூரியனின் கதிர்கள் உச்சிமோந்து பரவசம் கொள்வதற்கிடையிலேயே குருபான் இறைச்சி பெறச் சனங் கூடிவிட்டது.

“ஏண்ட உம்மோ! குருபான் எறச்சி எடுக்க வந்திருச்சிய கூட்டத்தப் பாருங்கோ…! உம்மா …. நீங்களும் போங்கோம்மா.. சும்மா கெடச்சிய எறச்சி தானே சட்டி நெறய ஆக்கிச் சுவையாத் தின்னலாம்.

தீக்குச்சி குத்துவதில் மூழ்கியிருந்த ஆயிஷாவின் மனத்தை மகளின் வார்த்தைகள் கசக்கின. புதிய ஆடை அணிகள் புனைந்து, தாம்பத்தியத்திலே ஒன்றி மற்றவர்களைப்போல தானும் வாழ்க்கையைச் சுவைக்க வேண்டும் என்பதை அவள் குறிப்பாற்கூட உணர்த்தவில்லை. ஒரு நாளாவது வாய் நிறைய இறைச்சிக்கறி உண்ண வேண்டுமென்ற ஆசையால் அவளது வாயூறுவதை அறிந்து ஆயிஷா உருகினாள். வெட்கம் மானம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு நீண்ட வரிசையில் தவம் கிடக்கும் பட்டினிக் கூட்டத்திலே சேர்ந்து கொள்ள அவளும் துணிந்தாள்.

“டேய்! முஸீபத்துப் புடிச்சவனுக, அறாங்குட்டிக, சத்தம் போடாமல் நில்லுங்கடா. நாசமாப்போன பலாய் முஸீபத்துப் புடிச்சவனுகள் வெல்லனங்காட்டிலும் வந்துட்டானுக….” என்று ஹாஜியாருக்கு எடுபிடி வேலை செய்யும் ஒரு தடியன் கரிந்து தள்ளினான்.

“இந்தப் பிச்சக்காரச் சனியன்களால் சோனகண்ட மானமே போகுது. ஹஜ்ஜிப் பெருநாளிலாவது மனுஷன் ஹிம்மத்தாக இருச்ச உடாம வந்துட்டானுக சோம்பேறிக் கழுதைக” என ஒத்தோதிப் பொரிந்தார் ஹாஜியார்.

வெளியே இரைச்சல் கேட்டு, பத்துப்பேர் சுமக்க வேண்டிய தனது பாரிய உடம்பை தனி ஒருத்தியாகச் சுமந்து கொண்டு முன் வாசலுக்கு வந்தாள் ஹாஜியாரின் தர்மபத்தினி. சதை பிதுங்கி ஆடைக்கு வெளியே வழிந்து விழுந்து விடுமோ என்ற பிரமையில் அங்குள்ளோர் அவளை நோக்கினர்.

“மச்சான் இந்த முழுப்பேருக்கும் போதுமான சாப்பாட்ட இந்த மனுஷி ஒரே முறையில் திங்கிறாப்போல இருக்கு புள் சைஸ்” என்று தாழ்ந்த குரலில் ஒருவன் ‘ஜோக்’ அடித்தான். அது முதலாளியின் காதில் விழவில்லை. அக்கூற்றினைச் செவியிலே ஏற்றுக் கொண்டவர்கள் கலகலத்தார்கள். அங்கு நின்றவர்கள் தன்னை விநோதமாகப் பார்த்துச் சிரிப்பதைச் சகிக்க மாட்டாமல் அவள் திரை மறைவிற்குள் புகலிடந் தேடினாள்.

“இது இந்த எளிய பலாய்களுக்குக் குடுக்க வேண்டியத்தக் குடுத்து தொலைங்க. இது பெரிய தொல்லையாப் போச்சுது. குருபானும் மருபானும் கொடுக்க வேணாண்டு சொல்லியும் கேக்கல்ல பூமரத்தையும் மாமரத்தையும் மிதிச்சி ஹரபாக்கிப் போட்டானுக செய்த்தானுக…” என்று கணவனுக்கு ஆஞ்ஞாபித்தாள் தர்மபத்தினி.

“நெரிசல்படாம வரிசயா வாங்கடா” என்று கூறிக்கொண்டே ஈகைக் கருமத்தை ஆரம்பித்து வைக்கிறார் ஹாஜியார்.

குருபான் இறைச்சி பகிரும் புண்ணிய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தவன் தனக்கு வேண்டியவர்களுக்கு இரண்டு மூன்று பொட்டணங்களைத் தாராளமாக வழங்கினான். “ஹும் நாய்க்கூதி! மொதலாளிட்ட காசயும் எடுத்துக்கொண்டு, குர்ஆனுல சத்தியமும் வெச்சிட்டு அந்த மூஸலயனுக்கு ஓட்டுப்போட்ட தடாவத்தி இப்ப எறைச்சி வாங்க வந்திட்டாள். வெக்கங் கெட்டவள். எங்கட மொதலாளிக்கு ஒட்டுப் போடாத ஒனக்கு எறச்சில்ல போ” என்று ஆயிஷாவை விரட்டினான்.

‘ம் ஸஹிது நாநா நீங்க தான் அஸில் மனுஷன். உங்களைப்போல ஆட்களில்லாட்டி இந்த ஊரே உருப்படாது’ என்று ஹாஜியார் ‘சப்போட்’ செய்தார். ஆயிஷாவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. வெட்கமும் கோபமும் இழையோட ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள். சன்னல் இடுக்கிலிருந்து ஹாஜியாரின் புத்திரிகள் கேலிரஸம் துளும்பக் கெக்கலித்தார்கள்.

“ஹா…. தையார் சுல்தானும் பெரிய கோட்ட கட்டினான். அவனும் ஆண்டவனை மறந்து கூத்தாடிக் கடைசியாத் தரமட்டமாகப் போனான். ம்… மவ்த்த மறந்து துடிக்காதீங்க… மனுஷரிட கல்ப முறிச்சி நடக்காதீங்க…” என்று ஆத்திரத்தைப் பிழிந்து சிந்தினாள் ஆயிஷா,

“ஹஹ்ஹா …” என்று ஹாஜியாரின் திமிர் கொழுத்த சிரிப்பொலி அப்பிராந்தியம் முழுவதையும் ஆக்கிரமித்தது. அச்சிரிப்பொலியே வறிஞரின் மான உணர்விற்கு நெய் ஊற்றியது. கையிலிருந்த இறைச்சிப் பொட்டணங்களை

ஹாஜியாரின் வாசலில் வீசிவிட்டு, வெறுங்கையாக நடந்த ஆயிஷாவை ஏனையோர் பின் தொடர்ந்தனர்.

முகத்திலே தாங்கொணாத துயரை மட்டுஞ் சுமந்து கொண்டு ஆயிஷா திரும்பிய கோலத்தைப் பார்த்த மகள் அலமந்தாள்.

“ம்… இவனுகட கொருபான் எறச்சிய திங்கிறதவிட பண்டி எறச்சிய திங்கலாம்” என்ற யாரோ ஆக்ரோஷத்துடன் கூறிக்கொள்வது இருவருடைய செவிகளிலுந் துல்லியமாக விழுகின்றது.

– இளம் பிறை 1967, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *