என்ன செய்யப் போகிறாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 1,507 
 

ஆஸ்பத்திரிக்கு வந்த அம்மா மகேஸ்வரியைக் கட்டிக்கொண்டு அழுதாள். “இப்படி உம்புருஷன் கையைக் காலை உடைச்சுக் கொண்டு இங்கே கொண்டு வந்து கிடத்தியிருக்காங்களே!” என்று மூக்கைச் சிந்திக் கொண்டு அலறினாள்.

எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அம்மா இப்படி அழுது மாய்ந்து கொண்டிருக்கிறாள். என்னுடைய கணவனுடைய கை கால் முறிந்து இப்படி ஆஸ்பத்திரியில் நினைவில்லாமல் படுத்திருக்கிறாரே… என்ன செய்ய? இனி மருத்துவச் செலவு… உணவு, ஆஸ்பத்திரி செலவு எவ்வளவு வரப்போகிறதோ? நினைக்கும் போதே மகேஸ்வரிக்கு அழுகை வேகமாக பொங்கியது.

அடக்கிக் கொண்டாள். தான் அழுதால் வினிதாவும், விஜயவும் அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குத் தேர்வு சமயம் வேறு. கடவுளே… ஏன் என்னை இப்படி சொதிக்கிறாய்… என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா சுந்தரி அறைக்குள் வந்தவள் அவளைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.

“மகேஸ்வரி என் தங்கச்சிக்கு இப்படியான ஒரு நெலமையைக் கொடுத்தீர்.. கடவுளே” எனப் பந்த பாசமாய் அழுது விட்டு மகேஸ்வரியில் கணவனைப் பார்த்தாள். கை கால்களுக்கு மாவுக் கட்டுப் போட்டு நினைவில்லாமல் படுத்திருந்தான். குளுக்கோஸ் மட்டும் ஊசி வழியாக உள்ளே போய்க் கொண்டிருந்தது.

சகஜ நிலக்குத் திரும்பிய சுந்தரி “என் கையிலிருந்த பணத்தை எல்லாம் போட்டுத்தான் இப்போது பக்கத்திலே ரெண்டு சென்டு பிளாட் வாங்கினேன். நகையெல்லாம் கூட அடகிலேதான் இருக்கிறது. மகேஸ்வரி என்னாலெ உனக்கு இந்த வேளையிலே கொஞ்சம் கூட உதவி செய்ய முடியாமல் போய்விட்டதடி. என்னை மன்னிச்சுடும்மா” என்றாள்.

“பரவாயில்லை” மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள் மகேஸ்வரி. எத்தனை முறை இந்த அக்காவிற்கு எத்தனை விதமாக, எனக்குகூட தெரியாமல் என் கணவர் வேணுகோபால் இவளுக்கும் இவள் குடும்பத்திற்கும் உதவி செய்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தாள்.

அப்போதுதான் உள்ளே வந்த அண்ணன் பிரபு “இப்படி மச்சானுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகுமுண்ணு யாரும் எதிர்பார்க்கலையே” என்றான்.

கொஞ்ச நேரம் விபத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். “அம்மா, பெட்ரோல் போடுவதற்கு ஒரு அம்பது ரூபா கொடு. ஆஸ்பத்திரிக்கு வந்த அவசரத்திலே ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட பணம் எடுதுத்து கொண்டுவர மறந்திட்டேன்” என்றான்.

அம்மா இப்படி பக்கறையில் இருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள். வாங்கிக் கொண்ட பிரபு “இனி மச்சானுடைய வருமானம் நின்றுப் போச்சி என்ன செய்யப் போகிறாய் மகி… உனக்கு உதவி செய்யணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் உனக்குத்தான் உன் அண்ணியைப் பற்றி நன்றாகத் தெரியுமே. ஐந்து பைசா சம்பளத்திலே எடுத்தாலும் அரக்கி வேஷம் போட்டு விடுவாள். ஸாரி மகி.” என்றவன் “என் மகனை ஸ்கூலிலிருந்து கூட்டிக் கொண்டு வர வேண்டும், வரட்டுமா?” என்று கிளம்பினான்.

அவன் வந்து விட்டுப் போனதும் ஓதோ புயல் வந்து ஓய்ந்தது மாதிரி தோன்றியது மகேஸ்வரிக்கு.

என் கணவர் வேணுகோபாலன் என்னை மகாராணி மாதிரி தான் நடத்தினார். எனக்கு வெளியுலகம் தெரியாமலே என்னைப் பேணிப் பாது காத்தார்பணம், உடை, நகை எது வேண்டுமோ அதை வாங்கித் தந்தார். தன்னுடைய வருமானம் என்பது அது எப்படி வருகிறது என்று கூட என்னிடம் ஒரு நாள் கூட சொல்வது கிடையாது.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கிறாரா.. ஏதாவது அதில் சேமித்து வைத்திருக்கும் பணம் உண்டா? இல்லை எதையவது விற்றுத்தான் ஆஸ்பத்திரி செலவு அடைக்க வேண்டி வருமா?

என் அருமை கணவனே! கண்ணைத் திறந்து ஏதாவது சொல்லேன், ஏன் இப்படி எதுவும் தெரியமல் என்னைப் பொத்திப் பொத்தி வைத்து விடாய். நான் இனி என்ன செய்யப் போகிறேன், நினைவில்லாமல் கிடந்த கணவனை பார்த்து கொண்டே யோசித்தாள்.

“அத்தான் வேலைக்குப் போவிட்டு வரும் நேரம் நான் போயிட்டு வாறேன். மகேஸ்வரி. மனசைத் தளர விடாதே. கடவுள் காப்பாற்றுவார்.” என சொல்லி விட்டுக் கிளம்பினாள் சுந்தரி.

அக்கா போன கொஞ்ச நேரத்தில் தம்பி சுரேஷ் வந்து மகேஸ்வரியின் கையைப் பிடித்துக் கொண்டு “என்ன மகி அக்கா இப்படி ஆகி விட்டது? எனக்கு இப்போதுதான் செய்தி கிடைத்தது” என்றான்.

“டேய் உன் பொண்டாட்டிக்கு எப்படி இருக்குது?” அம்மா கேட்டாள். “இன்னும் பத்து நாளிலே பிரசவம் இருக்கும் என்று டாக்டர் சொல்லி இருக்காரம்மா”

“தம்பி பார்த்தியாடா… எம்பிள்ளகைள் அப்பாவிற்கு நேர்ந்ததை உணராமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் இனி என்ன செய்யப் போகிறேன்” பொங்கி அழ ஆரம்பித்தாள் மகேஸ்வரி.

“அழாதே மகி அக்கா, நடந்தது நடந்தாச்சு. இனி என்ன செய்யப் போகிறாய்? உனக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஆசையாகத் தானிருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு நாளிலே என் மனைவியை பேறு காலத்திற்காக ஆஸ்பத்திரியிலே சேர்க்க வேண்டியதிருக்கு. டாக்டர் வேற அவளுக்குப் பிரசவம் கொஞ்சம் டெலிகேட்டாக இருக்கும், பணம் நிறைய செலவாகுமென்று சொல்லியிருக்கார். ஸாரி மகி அக்கா” என்றான் சுரேஷ்.

“நீ சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பு. அவள் வேற புள்ளத்தாச்சி” என்றாள் அம்மா.

“நான் மகி அக்காவிற்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாடு வாங்கித் தந்து விட்டு போகிறேன்” என்றான் சுரேஷ்.

“எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு” என்றாள் அம்மா.

சுரெஷ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் “மகி. பிள்ளைகள் எழுந்ததும் ஹோட்டலிலே சோறு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுங்க. நான் வீட்டிற்கு போய் அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு அவங்களை அனுப்பி வைகிறேன்…” என்றாள்.

“அம்மா நீயுமா என் கவலை தெரியாம ஓடுறே?”

“நீ என்ன சின்னக் குழந்தையா? அப்பா வெளியே எங்கேயும் சாப்பிட மாட்டார். இனி நான் போய்ப் பொங்கி தான் சாப்பாடு கொடுக்க வேண்டும். ஆமாம் இனி என்ன செய்யலாங்கிற உத்தேசம்?”

“என்ன செய்யச் சொல்கிறாய் அம்மா.” வாய் விட்டு அழ ஆரம்பித்தாள் மகேஸ்வரி.

“இனி அழுது என்ன பிரயோஜனம் மகி, என்ன செய்ய வேண்டுமென்று தான் அம்மா போனதும் அவள் தோழி வசந்தா வந்தாள். “எப்படி ஆயிற்று மகி?” யோசிக்கனும் என்று துக்கமாக கேட்டாள்.

தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைத்து விட்டது என்ற ஆர்வத்தில் விபத்து எப்படி நடந்தது, வேணுவிற்கு எப்படி அடிப்பட்டது? என்று சொல்லி முடித்தாள்.

பேச்சு முடிந்ததும் வசந்தி மகேஸ்வரிக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி வரப் போனாள். தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரி எல்லோரும் இனி என்ன செய்யப் போகிறாய் என்றுதான் கேட்கிறர்களே ஒழிய, உதவி செய்யா விட்டாலும் கூட நானிருக்கிறேன் பயப்படாதே என்று ஆறுதல் சொல்ல எனக்கு யாருமில்லை. தட்டிக் கொடுக்க.. என்னைத் தாங்கிக் கொள்ள ஒரு ஜீவனும் இல்லை. தங்கள் மேலேயே பாரம் விழுந்து விடக் கூடாதே என்று பயப்படுகிறார்கள். நான் என்ன செய்யப் போகிறேன் என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

இனிநான் உழைத்து சம்பாதிக்க வேண்டும். இவ்வளவு நாளும் நலமாக இருந்த என் கணவன் இப்போது அடிபட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். என் குழந்தைகளுக்கும் என் துணைவருக்கும் அழுதிட்ட நான் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அம்மா பசிக்குது என்றாள் பெண் வினிதா.

ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ, வசந்தா ஆண்டி சாப்பாடு வாங்கப் போயிருக்காங்க. வந்ததும் சாப்பிடலாம் என்ற மகேஸ்வரியின் மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்க, ஏனோ உடல் லேசானது போல உணர்ந்தவள், தானும் குழந்தைகளோடு சாப்பிட்டுத் தெம்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். வசந்தா பார்சல் சாப்பாடோடு வந்தாள். குழந்தைகளோடு நால்வரும் சாப்பிட்டு முடித்தார்கள். வசந்தா புறப்படும் போது மகேஸ்வரியின் கையில் ஐந்தாயிரம் ரூபாயை அளித்து “இதை ஆஸ்பத்திரி செலவுக்கு வைச்சிக்கோ. போத வில்லை என்றால் மேலும் தருகிறேன்” என்ற வசந்தா, “உனக்கு என் ஆபீஸிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சொன்னாள்.

திகைத்துப் போன மகேஸ்வரி தோழியைக் கட்டிக்கொண்டு அழுத போது வழிந்த கண்ணீர் சோகத் துளிகளா? ஆனந்தப் பிரவாகமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *