(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பெய்து கொண்டிருந்த மழை தெருவிலே விழுந்து வழுக்கிக் கொள்ள ஆங்காங்கு சிதறிய சிறு வெள்ளம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடலை நோக்கி தவழ்ந்து கொண்டிருந்தது. வயது முப்பதைத் தாண்டியிருந்தாலும் பெற்றோரின் சொல்லுக்கு இன்றும் கட்டுப்பட்டவனாகவே புவி இருந்தான். இப்போது கூட தாயின் விருப்பத்திற்காகவே வெள்ளவத்தை கடற்கரைக்கு எதிரேயிருக்கும் விசாப்பிள்ளையார் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தான்.
இந்தப் பிள்ளையாரை கும்பிட்டால் விசா கிடைக்கும் எண்டுதான் இங்குள்ள பலரும் நம்புகிறார்கள். அவனது தாயாரும் அந்த அவர்களிலிலே ஒருவர். எனவே தாயாரின் விருப்பத்தைத் தட்ட முடியாதவனாக அந்தக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
விசா வேணுமெண்டா எல்லாரும் தூதுவராலயத்துக்குத் தான் போவினம் நான் மட்டும் விசாப்பிள்ளையாரிட்டை…உள்ளுக்குள் சிரிப்பு வந்தது…?
“போகட்டும்…யாரெண்டாலும் பிழைச்சுக் கொண்டு…”
சாமியை விமர்சனம் செய்யப் போய் ஏதாவது ஏதாவது ஏடா கூடமா நடந்திட்டா.? சாமியின் மேலே அவனுக்கும் கொஞ்சம் பயம் தான்.
தெருவாலே போன ஒரு வாகனம் அவன் மேலே சேத்துத் தண்ணியை பீச்சிவிட்டுச் செல்ல ஆடைகள் எல்லாம் நனைந்து போயிற்று. திரும்பி வீட்டுக்குப் போகலாமென எண்ணியவனின் கண்களிலே எதேச்சையாகப்பட்டது அந்த பெயர்ப் பலகை.
“இவன் அவனா இருப்பானோ…” தனது சந்தேகத்தை தீர்க்கு முகமாக மதிலுக்கு மேலாக உள்ளே எட்டித் தலையை விட்டான் புவி. அவ்வளவு தான் அவனது நாடி நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன.
அவனே தான்…மஞ்சள் காவியிலே அதே சாமியர் தான். அவரை நோக்கி ஓடிப்போனவன் அவனது கையிலே இருந்த பிரம்பை பிடுங்கி எடுத்து அவரை விளாசு விளாசென்று விளாசத் தொடங்கினான்.
“ஏனப்பா..? என்ன நடந்தது உனக்கு.. ? ஏன் இப்படிச் செய்யிறா?” பக்கத்திலே நின்ற ஒரு வயோதிபர் அவனை எட்டி மறித்தார்.
“என்ரை வாழ்கையை நாசம் பண்ணின இவனை…” பல்லை நறுமினான்.
“என்ன சொல்றா தம்பி…?” ஒன்றும் விளங்காதவராக அந்தப் பெரியவரோ அவனைப் பார்த்தார்.
“என்ரை வெளி நாட்டுப்பயணம் தள்ளிக் கொண்டே போனது. என்ன செய்யலாம் எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்கேக்கை தான் இந்த சாமியாரை சந்திச்சிருக்கிறார் என்ர அப்பா. சாமியார் சொல்லி இருக்கிறார் என்னுடைய பெயருக்குரிய கூட்டெண் சரியில்லையெண்டதால இனிமேப் பெயர் எழுதேக்கை ஒரு எழுத்தை இரண்டு தடைவை போட்டு எழுதச் சொல்லி இருக்கிறார். விளைவு…. ஏதோ சுத்துமாத்துச் செய்யிறம் எண்டு சொல்லி சுவிஸ் தூதரகம் எனக்கு விசாவை தராம நிராகரிச்சிட்டாங்கள்.
இப்ப சொல்லுங்க பெரியவரே! இதுக்கெல்லாம் யார் காரணம்…?”
அவன் சொல்லி முடிக்கையிலே சாமியாரையும் பக்கத்திலிருந்த அந்தப் பெரியவரையும் அங்கே காணவில்லை.
– இருக்கிறம் 01-07-09