ஒரு பார்வை; ஒரு பயம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 8,104 
 

“இந்த வீட்டில் யாருக்குப் பொறுப்பு இருக்கு எது நடந்தாலும் ஏன் என்னன்னு ஒரு கேள்வி இருக்கா? எனக்கு மட்டும் என்ன தல எழுத்து? எக்கேடோ கெடட்டும்னு நானும் போறேன். போங்க…”

குழந்தைகள் மூன்றும் மிரண்டு போய் ஒருபுறம் நிற்க, தனக்கும் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாத்திமா, “வீட்டில் பொம்பளைங்கன்னு எதுக்கு இருக்கிறது? அழகு பார்க்கவா? நல்லது கெட்டது பார்த்து நடந்துக்க வேணும்? இதெல்லாமா ஒருத்தன் சொல்லித் தரணும்?”

நேற்றிலிருந்து இதே பேச்சு, வசவு…

எந்த ஊரு சைத்தான் பிடிச்சிருக்கு இவருக்கு?

நிஜமாகவே அவளுக்குக் குழப்பமாய் இருந்தது.

கடை அடைத்துவிட்டு எப்போதும் உற்சாகமாக வீட்டுக்கு வருகிறவர் ராத்திரி என்னவோ’உர்’ ரென்று நுழைந்தார். பார்க்கச் சகிக்காத முகம், “ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” எனக் கேட்டதற்குக் கூடப் பதில் சொல்லவில்லை. வாய் கொப்புளிக்கப் பின் பக்கம் போனவர், “சுடுதண்ணி வைக்கலியா என்ன பண்றீக வீட்லா” என்று சுத்தினார். சாப்பாட்டுக்கு உட்கார்ந்தவர் குழம்பில் உப்புக் கூடுதலாகிவிட்டதாகக் கூச்சலிட்டார். அதற்குச் சமாதானம் சொல்வதற்குள் சோற்றில் கல் தட்டுப்பட “யாரு சமைச்சது?” என்று கோபமாகக் கேட்டார். “நான்தான் அத்தா…” எனத் தயங்கியபடியே பதில் சொன்னாள் பெரியவள் பல்கீஸ். “இதான் சமைக்கிற லட்சணமா? இப்பல்லாம் உனக்குக் கவனம் இங்கே இலலை…புள்ளே” சோற்றுத் தட்டு சுவரில் பட்டுத் தெறித்தது.

அப்போதுகூடப் பாத்திமாவுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை, வெளியே போய் வரும் ஆம்பிளைகளுக்கு ஆயிரம் பிரச்னை, வியாபாரத்தில் – கொடுக்கல் வாங்கலில் சிநேகிதத்தில் என ஏதேதோ சிக்கல்கள், வீட்டில் அவை பிரதிபலிக்கின்றன, என்கிற ரீதியில்தான் அவளது யோசனை போயிற்று. விடிந்தும் அவரது கோபம் தணியாதது தான் அவளைக் கிலி கொள்ளச் செய்தது. பொதுவில் பேசுவதை விட்டுக் குறிப்பாகப் பெரியவளையே திட்டுவதும், பேசுவதும்…

“உன் கவனம் இங்கே இல்லை… புள்ளே” என்ன வார்த்தை இது? அதுவும் வயதுக்கு வந்த பெண்ணிடம்?

விவரம் கேட்கப் போய் ‘காய்ச்சல்’ அவள் மீது திருப்பிவிட்டது. எரிந்து விழுந்தார்.

“என்ன கேடு காலம்னு தெரியலியே…அல்லாவே” பாத்திமா பெருமூச்சு விட்டாள்.

“இந்தா புள்ளே…குடிக்கத் தண்ணி கொண்டு வா…” அவர் வாய் மூடுவதற்குள் கடைசிப் பெண், “தப்பித்தேன்” என ஓடினாள், தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் சாந்தமடைந்து போயிருந்தார். ஜாடையில் குழந்தைகளை உள்ளே அனுப்பிவிட்டு, பாத்திமா அருகில் வந்தாள், “வெள்ளிக் கிழமையும் அதுவுமா ஏன் கோவப்படறீங்க? பொறுமையா என்னன்னு சொல்லுங்க…” என்றாள்.

உசேன் ராவுத்தர் ஒருகணம் அவளையே மூறைத்தார். என்னவோ சொல்லப் போகிறார் என அவள் எதிர்பார்த்த தருணத்தில், சரேலெனப் பின் வாங்கி “எல்லாம் உனக்குத் தெரியாதது இல்லை…” என்றார்.

“சத்தியமா எனக்கு ஒண்ணும் தெரியாது…குர் ஆன் மீது ஆனையா…” அவளுக்குக் கண்கள் கலங்கின.

“அப்ப… உன் பொண்ணுகிட்டேயே கேளு.சொல்லும்…சைத்தான் நேரம் பொறந்தது” கோபத்தில் அவருக்கு மறுபடியும் முகம் சிவந்தது. விசுக்கென்று எழுத்து சட்டையையும், தொப்பியையும் மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டுப் போனார்.

பாத்திமாவின் துடிப்பு அதிகப்படவே செய்தது. அவர் சொல்கிறபடி தனக்குத் தெரிந்து என்ன நடந்துவிட்டது?.

இரண்டு நாட்களாய் அவளும் எங்கும் போய்விடவில், முன்பின் வாசல்களில் தொங்கும் படுதா மறைப்புக்குள், மகளைப் போலவே அவளும் அடைந்து தான் கிடந்தாள், வீட்டு வேலை, சாப்பாடு, பேச்சு, உறக்கம் என்பதைத் தவிர இல்லாத அதிசயம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. அவளாவது குழந்தைகள் அடிக்கடி கண்டிப்பதும், ஏசுவதும் உண்டு.

அம்மா, ராசாத்தி என்ற வார்த்தைகளுக்கு மறுசொல் அறியாத மனிதர் இவ்வளவு கோபப்பட வேறு என்ன தான் காரணம்?

அவர் போனதும் மகளிடம், “ஏண்டி, நீதான் சொல்லு. என்ன கோபம் உம்மேல் அவருக்கு” என்று கேட்டாள்.

“தெரியல” எனத் தலையசைத்தாள் பல்கீஸ்.

“உன்னைக் கேளுங்கிறாரு அவரு…”

காலையில் குளித்துவிட்டு வந்ததும், சட்டையை எடுத்து வைக்கச் சொன்னார். சரியாகத் துவைக்காமல் அழுக்குக் கறையுடன் இருந்தது அது.

“யாரு துவைச்சது?”

“நான்தான்…”

பதில் சொல்லவில்லை. முறைத்துப் பார்த்துவிட்டுப் போட்டுக் கொண்டார்.

அந்தக் கோபம்தானோ இது? இவ்வளவு நீளுமா? இந்தச் சின்ன விஷயம் காரணமாக இருக்க முடியாது எனத் தோன்ற அவளது கலக்கம் அதிகப்பட்டது. பாத்திமாவும் பெருமூச்சு விட்டாள். “இதோட சேர்ந்ததுகளுக்குக் கல்யாணமாகி வயித்துல ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமா அலையுதுங்க. இது தலவிதி இப்படி இருக்கே அல்லாவே…”

***

கடைக்கு வந்து விட்டாரே தவிர உசேன் ராவுத்தரும் இருப்பு இல்லாமல் தான் தவித்துக் கொண்டிருந்தார். ‘குபுக்’ ‘குபுக்’ சென்று மண்டைக்குள் இரத்தம் பாய்வதும், பின் ‘விர்’ரென்று ஒரே வீச்சில் வேகம் தணிவதும்…

“இத்தினியூண்டு இருந்துக்கிட்டுப் பயபுள்ள என்ன வேலை காட்டுது… ம்”

நினைக்க நினைக்க ஆறவில்லை. அப்படியா? அப்படித்தானோ என்ற கனம். ஊர்கிற பூச்சி யாய் சந்தேசம் பயம். யோசித்து யோசித்து மூளையே சிதறி விடும் போலிருந்தது. வியாபாரத்தில் புள்ளி வைத்து எப்பேர்ப்பட்ட ஆளையும் அசத்தி விடுகிற மனிதர் அவர். பார்த்த உடனேயே ஆள் இன்ன ரகம் என்று எடை போட்டுச் சாதுர்யமாய் வியாபாரம் பண்ணத் தெரிந்தவர். சக வியாபாரிகள் கிண்டல் செய்வார்கள். “பாய்,.. உம்ம பேச்சைச் கேட்டா வயித்துப் புள்ளை கூட நழுவி வந்து ரூம்யா…” என்று. அப்படிப்பட்ட தன்னையே தன் வயிற்றில் பிறந்தது நோட்டம் பார்க்கிறது என்றால் சாதாரணமா?

நேற்றைக்கு நடந்தது அது. வழக்கம் போலவே மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட்டு முடித்து. அலுப்புக்கு முன் அறையில் பாய் விரித்துப் படுத்திருந்தார்.

ஒண்டுக் குடித்தனம். நீளவாக்கில் நான்கு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் குட்டி குலமானங்களுக்குப் பஞ்சமில்லை. மத்தியான நேரமாதலால் ஸ்கூலுக்குப் போனவை போக, மற்றதுகள் உறங்கிக் கொண்டிருத்தன. நிசப்தம். அவருக்கும் கண் அயர்கிற நேரம்.

வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

சாதாரணமாகத் திறந்துதான் இருக்கும். கோழியோ, நாயோ உள்ளே நுழைந்து விடும் என்பதற்காக அந்த நேரத்தில் மட்டும் தாளிட்டு இருப்பார்கள்.

மூன்றுவது போர்ஷனில் குடி இருக்கும் காதர் மைதீகைத்தான் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் சாமான்கள் விற்றுக் கொண்டிருந்தான், அவரைப் போலவே நேரம் காலம் பார்க்காமல், வியர்பாரம் ஓய்ந்த நேரத்தில் தான் சாப்பிட வருவான். வீட்டில் அம்மா மட்டும்தான். இன்னும் கல்யாணம் ஆசுவில்லை.

“ஆரது?”

“நான் தான்…”

எழுந்து சென்று அவர் கதவைத் திறந்து விட, “இன்னிக்கு நீங்க முந்திட்டீங்களா?” எனச் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான். அவர் மறுபடியும் கதவைத் தாளிட்டு விட்டுத் திரும்பினார்.

அப்போதுதான் அவருக்கு ‘அது’ உணர்த்தப்பட்டது.

பல்கீஸ் அறை உள் வாசலுக்கு வந்து நின்றிருந்தாள். அவன் கடத்து செல்லும் போது இருவரும் ஒருதரம் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் ஈர்த்து ஒரு நொடிக்குள் எதையோ பரிமாறிக் கொள்கிற பார்வை. இருபது வருடங்களுக்கு முன்பு திருமணமான புதிதில் பாத்திமாவும் இந்த விதமாகத்தான் அவரைப் பார்த்தாள். பிரத்தியேகமாகத் தனக்கு உரியவளை மட்டுமே பெண்கள் பார்க்கிற பார்வையாக அது அவருக்குப் பதிந்து போயிருந்தது. கல்யாணமாகாத-வயதுக்கு வந்த பெண், ஒரு வயசுப் பையனை இப்படிப் பார்க்கிறாள் என்றால், என்ன அர்த்தம்?

பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

கடைக்கு வந்த பின்பும் மனம் வியாபாரத்தில் ஒட்டவில்லை. மகளின் பார்வையே திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வந்தது.

“அல்லாவே… முஹையதீன் ஆண்டவரே…”

‘ஜில்’வென்று சூடேறித் தனக்குள்ளேயே புமுங்கி, அழுத்தி, தவிர்க்க முடியாத உந்துத வில் கோபப்பட்டு… இருபத்து நான்கு மணி நேரமும் மகளுடன் இருக்கிறவளாயிற்றே பாத்திமா! அவளுக்கும் இது தெரிந்து இருக்குமோ?

காலையில் அவள் கண் கலங்கியதைப் பார்த்ததும் அப்படி இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. என்னதான் இருந்தாலும் ஒரு தாய் இந்த மாதிரி சங்கதிகளுக்கு இடம் கொடுப்பாளா?

ஒருவேளை ஒன்றுமில்லாத விஷயத்தை தானே ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறோமோ?”

எப்படியோ உடனடியாக மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்ற வெறி வந்துவிட்டது.

தன்னால் எவ்வளவு முடியும் என்று கணக்குப் போட்டுப் பார்த்தார்.

பூர்வீக நிலமும், சில சில்லறை நகைகளும் கவனத்திற்கு வந்தன. கடன் தரும் சாத்தியமுள்ள சில முகங்களும் கூடவே ஞாபகத்திற்கு வந்தன.

“பார்க்கலாம்… இன்ஷா அல்லாஹ்…” என முணுமுணுத்துக் கொண்டார்.

மனம் சிறிது இலேசான மாதிரி இருந்தது.

***

“என்ன ராவுத்தரே… தானா சிரிக்கிறீக. ஏவாரம் பலமா?”

உசேன் ராவுத்தர் நிமிர்ந்து பார்த்தார்.

பெரிய தனக்காரர் மகன் நின்றிருந்தான், கடன் தருகிற முகங்களின் முதல் வரிசையில் அவனது தகப்பனார் உண்டு. பக்கத்தில் மனைவி, சமீபத்தில் தான் சுல்யாணம். சொந்த அக்காள் மகள் தான்.

“வாங்க.. வாங்க… முதலாளிய எங்க ரொம்ப நாளா காணம்?”. உசேன் ராவுத்தர் எழுந்து நின்றார்.

“உக்காருங்க…ஏலே…ரெண்டு காப்பி வாங்கிட்டு வா.”

“போச்சுடா… உங்களை விடப் பெரிய முதலாளியா நாங்க…” கடைப் பலகையின் ஓர் ஓரத்தில் அவன் அமர, அந்தப் பெண் கூசசத்துடன் நின்றாள்.

“அப்படியே இருக்கட்டும். எனக்குத்தான் வடக்கே நாப்பது ஏக்கர் நஞ்சையும், தெற்கே அம்பது ஏக்கர் புஞ்சையும் இருக்கு..”

அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணும் சிரித்தாள். கன்னத்தில் குழி விழுகிற மாதிரி சிரிப்பு.

kalki1987-08-16_0026-pic

பல்கீஸின் வயதுதான் இருக்கும். அதே வட்டமுகம், நிறம், அதென்னவோ பிறந்த வீட்டில் இல்லாத பூரிப்பும், மெருகும் புருஷனைக் கண்டதும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. ‘பெற்று, வளர்த்து, ஆளாக்கி, காரியம் பண்ணி வைப்பதற்கு இப்படிப் பூரித்த முசுமாய்ப் பார்க்கிற சந்தோஷம் ஒன்றுதான் மிச்சம் போலும்.

‘பயபுள்ளைய எப்ப இப்படிக் கண்ணாசை பார்க்கிறது?’

பல்கீசை மனத்தில் நிறுத்திக் கொண்டு யோசித்தார்.

“உமக்கு எதுக்குச் சொத்து ராவுத்தரே…வெறும் வாயாலேயே லெச்சரூபா புரட்ட மாட்டீரு?” தனக்காரர் மகன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவனது மனைவி இதற்கும் சிரித்தாள். திடிரென உசேன் ராவுத்தருக்குத் தமது அக்காள் மகனின் ஞாபகம் வந்தது. ‘என்னவோ சொல்வாங்களே… கையில் வெண்ணெயை வைச்சுக்கிட்டு அலையறதுன்னு, அக்காளையே கேட்டுப் பார்த்துட்டா என்ன?’

இன்னொரு வகைக்குச் சங்கடமாகவும் இருந்தது.

அக்காள் எதிலும் பட்டுக் கொள்கிறவள் அல்ல. “ஏன் அக்காள்’ என்றால், “என்ன தம்பி” எனக் கேட்பதோடு சரி. பெரியவர்கள், ‘மவுத்தான’ பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பு அற்றுப் போயிருந்தது. இந்த நாலைந்து வருடங்களில் போக்குவரத்துக் கூட அதிகம் கிடையாது. மச்சான் பெரிய வியாபாரத்தில் இருந்தார். அவரவர் ஜோலி அவரவர்கட்கு, அவர்களே ஒதுங்கிப் போகும்போது, தாம் ஏன் நெருங்க வேண்டும் என்று அவரும் அதிகம் சட்டை பண்ணுவதில்ல. ஆனால் பல்கீஸ் ‘பெரியவளாக’ பிறகு வேறு மாதிரியான நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. உறவுக்காரர்கள் அவரைத் நாள் குறை சொன்னார்கள்.”பொண்ணைப் பெத்து வச்சுக்கிட்டு வீம்பு பண்ணினா நடக்குமா? பொழைக்கத் தெரியாதவனா இருக்கிறே…?”

சில சமயங்களில் அதன் தொடர்ச்சியாகப் பாத்தியா சொல்வதும் உண்டு. “கேட்டுப்பாருங்களேன். உண்டு இல்லைன்னு தெரிஞ்சாப் பொண்ணுக்கு நாமும் வேற இடம் பார்க்கலாமில்லையா? எதுக்கு இப்படி ரெண்டுங்கெட்டானா புள்ளையை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கணும்.”

பெரும்பாலும் அல்லாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு மௌனமாகி விடுவார். சில வேளைகளில், “பைத்தியக்காரி…அவுங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறியா.? பொறு…எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளைக்கு ஏற்பாடு செய்யறேன்னு பாரு” என்பார்.

இதுவரைக்கும், அக்காளோ, மச்சானோ இதைப் பற்றிப் பேசியதாக அவர் கேள்விப் படவில்லை. தமக்கோ, பாத்திமாவுக்கோ உள்ள வீம்பு ஒரு பக்கம் இருக்கட்டும், வெளிப்படையாக உண்டு இல்லை என்று அக்காள் தான் சொல்லித் தொலைத்தால் என்ன கெட்டுப் போகும்?

“வாழ்க்கையில் ஏறுமுகம்தான் இருக்கணும் முடிஞ்ச வரைக்கும் ஏறிக்கிட்டே போகனும், கஷ்டகாலம் வரும்போது உயிர் போயிரணும்டா…அல்லாவே…”

தன்னைத்தான் ஏதோ சொல்வதாக நினைத்து, “என்னங்க..” என்றான் கடைச் சிப்பந்தி.

“வியாபாரத்தைப் பார்த்துக்க, வீட்டு வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்” எனக் கல்லாவை விட்டு இறங்கினார் உசேன் ராவுத்தர்.

***

சரக்…சரக்கென்று செருப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள் பாத்திமா. புருஷனைக் கண்டதும் ஆச்சரியமாகிவிட்டது. ‘இந்த நேரத்துல எங்க வர்றார்? கடை திறக்கலியா?’ எனக் கேட்க நினைத்தவள், என்ன சொல்வாரோ என்று பயந்து பேசாமலிருந்தாள்.

இன்றைக்குப் பார்த்து இன்னும் உலகூட வைக்கவில்லை, பிள்ளைகளோடு கவலைப் படவே பொழுது சரியாகிவிட்டது. திடீரென, “சோற்றைப் போடு” என்று சொல்லிவிட்டால், என்ன பண்ணுவது?

“ஏய்… இங்க வா…” அவளைத்தான் அழைத்தார்.

முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, “சமைக்கணும்…” எனத் தயக்கத்துடன் பதில் சொன்னாள் பாத்திமா.

“முக்கியமான விஷயம்…வா…”

அவள் கைகழுவிக் கொண்டுவர, முன் அறையில் பனியவேடு உட்கார்ந்து இருந்தார். அவள் வந்ததை அறியாத பாவனை.

“கூப்பிட்டிங்களே..: என்றாள் பாத்திமா.

திடுக்கிட்டவர் போல விழித்தார். “பெரிசுக்குக் காரியம் பண்ணிரலாம்று நெனைக்கிறேன். என்ன யோசனை?”

எதிர்பாராதது இது. அவளுக்கு எதுவும் புரியவில்ல. காலயில் காரணமற்றுக் கோபிப்பதும், மதியம் நிக்காஹ் பற்றிப் பேசுவதும். ஒருவேளை இரண்டுக்கும் தொடர்பு உண்டோ?

“யோசனை என்ன..செய்ய வேண்டியது தான், மாப்பிள்ளை?”

“அதான் ஒன்னை கேக்கறேன். இப்ப உள்ள நிலைமையில் பெரிய இடமெல்லாம் நமக்குத் தாங்காது. உன் உறவில் எவனாச்சும் இருக்கானா?”

“இருந்தாத்தான் தேவலையே…உங்களுக்குத் தெரியாதா?”

“ம்ஹ்ம்…” என்று பெருமூச்சு விட்டார்.

அவளுக்கு என்னவோ, அவர் ஏதோ ஒரு புள்ளி வைத்து அதையே சுற்றி வருவதாகத் தோன்றியது. ஒவ்வொரு சுற்றுக்கும் தரிசனமாகும் ஒவ்வொரு முகம். இதில் எது நிஜம் – பொய்? என்னதான் இது?

“அக்காவையே கேக்கலாம்னு இருக்கேன். என்னதான் சொல்றாங்கன்னு பார்க்கலாமே… ஏன்?” அவளது முகத்தைப் பார்க்காமல் சொன்னார்.

பாத்திமா இப்போது நிதானத்திற்கு வந்து விட்டாள்.

அவரையேகூர்த்து, பார்த்து, “உண்மையைச் சொல்லுங்க… திடீர்னு ஏன் இந்த முடிவு?” என்று கேட்டாள்.

“என்னிக்கு இருந்தாலும் செய்ய வேண்டிய விஷயம்தானே? வீணா ஏன் இழுத்துக் கிட்டே போகணும்?”

அவளுக்கு என்னவோ அது நிஜம் இல்லை என்று தான் தோன்றியது. கேட்கவும் பிடிக்கவில்லை.

பார்த்துக் கொள்ளச் சங்கடப்பட்டவர்கள் போல, இருவரும் வெவ்வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். வெவ்வேறு யோசனை செய்தார்கள்.

ஜூம் ஆ தொழுகைக்கான பாங்கு ஒலி கேட்டது.

தன்னை விடுவித்துக் கொள்வதைப் போல, “சரி… அப்புறம் பேசலாம்” என் எழுந்தார் உசேன் ராவுத்தர்.”குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்க…தொழுதுட்டு வந்துடறேன்.”

உடை மாற்றிக் கொண்டு புறப்படுகிற வரைக்கும் பாத்திமா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாசல் வரைக்கும் போனவர் திரும்பி வந்து, “இனிமேல் வெளிக் கதவைத் தாழ் போட வேணாம். எதுக்கு ஒவ்வொருத்தனுக்கும் திறந்து விட்டுக்கிட்டு இருக்கணும்?” என்றார்.

ஒருபோதும் இல்லாமல் அவர் இப்படிச் சொன்னதில் ஏதோ விசேஷம் இருப்பதைப் போலிருந்தது அவளுக்கு.

பல்கீஸ் உள் வாசலில் நின்று வீதியை எட்டிப் பார்த்துவிட்டு, “போய்ட்டாரா?” என்று கேட்டாள்.

நிம்மதியைப் பிரதிபலிக்கிற தொனி, தான் இவளுக்கு என்ன சொல்ல வேண்டும்?

ஜாக்கிரதை என்று அவர் சொன்னது ஞாபகத்திற்கு வர.”நீ ஏன் இங்கே நிக்கிறே… உள்ளே போ” என்றாள்.

பல்கீஸின் முகம் இருண்டது. திடுக்கிட்ட மாதிரி அம்மாவை ஒருகணம் பார்த்துவிட்டு, ‘விடுவிடு’வென்று உள்ளே நகர்ந்தாள்.

சாதாரண வார்த்தைக்கு மகள் ஏன் இப்படிக் கோணுகிறாள்?

எல்லாமே புதியதாகத்தான் இருந்தது.

புருஷனின் சொல்லையும், மகளின் திடுக்கிடுதலையும் திரும்பவும் யோசித்துப் பார்த்த பாத்திமாவுக்கு ‘பளிச்’ சென்று ஏதோ புரிந்த மாதிரி இருந்தது… “அடியே…அதுதானா விஷயம்” எனத் திகிலடைந்து, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டபடி, மறுபடியும் மகளின் முகத்தைப் பார்த்தாள் அவள்.

– 16-8-1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *