மாதவி இயல்பில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவள். அதனால் தான் எதிர்வீட்டில் இருக்கிற தீபாவை அவளது மாமியார் கொடுமைப் படுத்துவதை அவளால் பொறுக்க முடியவில்லை. கணவனை இழந்து, ஒரு குழந்தையுடன் அந்த மாமியாரிடம் அவள் அனுபவிக்கும் கஷ்டம் சொல்லி மாளாது. மாதவி தீபாவைத் தன்னுடைய நெருங்கிய தோழியாகவே கருதி வந்தாள்.
தீபாவின் நிலை பற்றி அடிக்கடி கணவன் ரமேஷிடமும் புலம்புவாள். அவனுக்கு தீபா அதிகப் பரிச்சயமில்லை என்றாலும், அவள் படும் கஷ்டத்தை மாதவியின் மூலம் அறிந்திருந்தான். அன்று கூட மாதவியைச் சமாதானப் படுத்த
“இது உலத்துல நடக்கறது தானே மாதவி…? விட்டுத் தள்ளு! வீட்டுக்கு வீடு வாசப்படி!” -என்று விட்டு ரூமுக்குச் சென்றான்.
இருந்தாலும் தீபாவின் அவஸ்தையை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று மாரியம்மனிடமும், அவள் மாமியார் பக்க வாததில் படுக்க வேண்டும் என்று காளி தேவியிடமும் வேண்டிக் கொண்டாள்.
அப்போது தீபாவின் மாமியார், ஏதோ சண்டையில் அவள் தலைமயிரைப் பிடித்து சுவற்றில் முட்டுவதைப் பார்த்தாள். தீபாவிற்கு இரத்தம் பீறிட்டது. மாதவிக்கு அழுகையும், கோபமும் பீறிட்டு வந்தது. மாதவி ஒரு முடிவுக்கு வந்தவள் போல் பெருமூச்சு விட்டாள். பின் விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அருகில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்துக் கொண்டாள். விடுவிடுவென தீபாவின் மாமியாரை நோக்கி ஓடினாள். அவள் மண்டையைக் குறி வைத்து ஓரே அடி! அவ்வளவு தான். பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்மா கலர் டி.வி காலி!
சத்தம் கேட்டு ரமேஷ் ஓடி வந்தான். மாதவி டி.வி போனதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஓவென அழுது கொண்டிருந்தாள்.
“அய்யோ… நாளைக்கு இந்த சீரியலை எப்படிங்க பார்ப்பேன்!”