எண்ணற்ற நல்லோர் !

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,073 
 
 

வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது.
ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்ததைத் தவிர, வேறு இயக்கமில்லை. எதிர் வீட்டு மஞ்சள் மரம் மட்டும், கர்மசிரத்தையாக பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருந்ததை பெருமூச்சுடன் பார்த்தாள்.
“”வேலை முடிஞ்சுட்டதும்மா… கிளம்பட்டுமா?” என்று, ஈரத்துணியை காம்பவுண்டில் உதறிப் போட்டபடி கேட்டாள் வேலம்மா.
“”கிண்ணத்துல சாம்பார் சாதம் வெச்சிருந்தேனே… சாப்பிட்டியா?” என்று, தெருக்கோடியைப் பார்த்தபடியே கேட்டாள் கஸ்தூரி.
“”ரொம்ப ருசியா இருந்திச்சும்மா… அதுவும், இந்த குளிருக்கு சூடா சாதமும், சாம்பாரும் அமிர்தம்ன்னு சொல்வாங்களே… அப்படித்தாம்மா இருந்துச்சு… உன் நல்ல மனசு யாருக்கும்மா வரும்?” என்றாள் வேலம்மா நெகிழ்ச்சியுடன்.
எண்ணற்ற நல்லோர் !“”நிஜமாத்தான் சொல்றியா வேலம்மா… நான் நல்லவளா?” என்றாள் கஸ்தூரி. குரல் கம்மியிருந்தது.
“”ஏம்மா… இப்படி கேக்குற?”
“”எதுவும் நல்லதா நடக்கலியே வேலம்மா?”
“”புரியலேம்மா… எதை சொல்ற?”
“”கார்த்திகா வளர்ந்து நிக்கிறா… பத்து இடம் பாத்துட்டோம்; நமக்கு தோதுப்படல… இதோ, இப்பக் கூட அவங்கப்பா, ரமணன்னு ஒரு வரனைப் பாக்கத்தான் போயிருக்கார். என்ன ஆகப் போகுதோ? கதிர், இன்டர்வியூவுக்குப் போயி, நாலு மணி நேரம் ஆகுது. ஒரு போனும் வரலே… போஸ்ட் ஆபிஸ் போய் பென்ஷன் வாங்கிட்டு வர்றேன்னு போன எங்கப்பா, இன்னும் ஆளைக் காணோம்.
“”விடிஞ்செழுந்தாப் போதும், ஏதோ ஒரு பிரச்னையோடத் தான் ஆரம்பிக்கிறதா இருக்கு,” பெருமூச்சுடன் சொன்ன கஸ்தூரியைப் பார்த்து, ஆறுதலாக, “”கவலைப்படாதம்மா… எல்லாம் சரியாகும்…” என்று, புன்னகைத்துவிட்டு கிளம்பினாள் வேலம்மா.
“மணி ஒன்றாகி விட்டது. இன்னும் ஒரு உருவம் கூட வீடு வந்து சேரவில்லை. இதென்ன வாழ்க்கை…’ என்று, ஒரு பக்கம் சலித்துக் கொண்ட மனதை, உடனே தேற்றினாள்.
மனமே, நம்பிக்கை இழக்க வேண்டாம். எந்த தனி மனிதனுடைய வாழ்க்கை யிலும், திடீரென அற்புதங்கள் நிகழ முடியும். ஒரே ஒரு நொடியில் கூட, பெரும் திருப்புமுனைகள் ஏற்படக்கூடும். வருவதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மட்டும் போதும்!
“”வந்து பத்து நிமிஷமாச்சு… என்ன யோசனைல இருக்கே?” என்ற கணவரின் குரல் கேட்டு, அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
“”எப்ப வந்தீங்க? கவனிக்கவே இல்லயே… போன வேலை என்ன ஆச்சு?” என்று, ஓடிப் போய், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“”ஒரு மண்ணும் ஆகலே… ஜாதகம், பொருத்தம், ராசி எல்லாம் ஒத்துப் போகுதேன்னு சந்தோஷப்பட்டேன். பாங்கில என் பிரெண்ட் சம்பந்தம் இருக்கான் இல்ல… அவன் வீடு, பையனோட எதிர் வீடுதான்… விஷயத்த கேட்ட அவன், “எல்லாம் சரி தான், பையன் பயங்கர ஷேர் பைத்தியம்… ஒரு பைசா கையில நிக்காது… எதையாவது வாங்கறது, விக்கிறதுன்னு பரபரப்பான். கிட்டத்தட்ட அடிக்ட் தான். பரவாயில்லையா…’ன்னு கேட்டான். தலை சுத்திடுச்சு… கையெடுத்து கும்பிட்டுட்டு வந்துட்டேன். திக்கா காபி போடு,” என்றார் சலிப்
புடன் பாலகோபால்.
“”என்னது… இப்படி ஒரு போதையா… என்னங்க இது?” அவள் முகம் கறுத்தது.
நல்ல படிப்பு, அளவான குடும்பம், அம்சமான உருவம் என்று நம்பினால், கடைசியில் இப்படி ஒரு குறையா? அட கொடுமையே!
காபிப் பொடியை எடுத்து பில்டரில் போட்டு, நீர் ஊற்றி, சுவிட்சைப் போட்டாள். பாலை அடுப்பில் வைத்தபோது, “சே.. என்னடா உலகம் இது?’ என்று, கதிரின் அலுப்பும், தொடர்ந்து அவன் தொப்பென்று சோபாவில் வந்து விழும் சப்தமும் கேட்டது.
“”என்னப்பா கதிர்… என்ன ஆச்சு இன்டர்வியூ?” என்று விரைந்தாள்.
“”பிராடுமா எல்லாரும்…” என்றான், விரக்தியான தொனியில்.
“”கெமிக்கல் கம்பெனிம்மா அது… அவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? “மலை மேல ஆசிரமம் அமைத்து வாழ்ந்த துறவிகள், குங்பூ கலையில் தேர்ச்சி பெற்று இருந்தது ஏன்…’ன்னு கேட்கிறான்மா… “அவங்க பெயர் ஷாவோலின் என்பது தவிர, வேற எதுவும் தெரியாது…’ன்னு சொன்னேன்… “இந்த கம்பெனிக்கும், இந்தியாவுக்கும், அந்த துறவிகளுக்கும் சம்பந்தம் உண்டு…’ன்னு சொல்றான். “சாரி’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்… எல்லாம் கண்துடைப்பும்மா… வேலை இல்லாதவன்னா அவ்வளவு அலட்சியம்…” என்றபோது, அவன் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
அவளுக்கும் பற்றிக் கொண்டு வந்தது. நேர்காணல் என்று தானே அழைத்தனர். படிப்பு, அனுபவம், குடும்பம் என்று கேட்பது தானே முறை. சீனத் துறவிகளைப் பற்றிக் கேட்டு நையாண்டி செய்வது, எந்த விதத்தில் நியாயம்?
“”கஸ்தூரி… கொஞ்சம் தேங்காய் எண்ணை கொண்டு வாயேன்…” என்று, அப்பாவின் குரல் நலிவாகக் கேட்டதும், சடாரென்று விரைந்தாள்.
முழங்காலைப் பற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். முகத்தை சோர்வு பற்றியிருந்தது.
“”இதென்னப்பா சிராய்ப்பு, ரத்த காயம்… அய்யோ… என்னப்பா இது, ஒரே சேறும், சகதியுமா கெடக்கு. போக வேண்டாம்னா கேக்கறீங்களா?” என்று, பதறியபடி பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“”அட ஒண்ணும் இல்லம்மா… லேசா வழுக்கிடுச்சு. சின்ன காயம் தான். காபி வாசனை மூக்கை துளைக்குதே… போ, போ… சூடா ஒன்றரை டம்ளர் கொண்டு வா…” என்று அவர் சிரித்தபோது, கஸ்தூரி அழுதபடி உள்ளே ஓடினாள்.
அய்யோ… ஏன் இப்படி எல்லாமே எதிர்மறையாகவே நடக்கிறது? காலையில் அவள் பயந்த மாதிரியே ஆகிவிட்டதே. மூன்று விஷயங்களை நினைத்தாள்… மூன்றும் ப்ளாப் ஆகிவிட்டதே!
நாலு நாள் முன்னால், “பழையது வேண்டாம்…’ என்று, ராப்பிச்சைக்காரன் திட்டி, “சைத்தான் பிடிச்ச வீடு…’ என்று சாபமிட்டுப் போனானே… அது பலிக்கிறதா? அய்யோ!
“”காபி பிரமாதம்மா… வா இங்கே… என்ன பிரச்னை உனக்கு, சொல்லு?” என்று, கையை பிடித்து அழைத்துப் போனார் அப்பா.
“”எதை எடுத்தாலும் பிரச்னைதாம்பா… கார்த்திகா வரன், கதிர் இன்டர்வியூ, உங்க அடி… எனக்கு எதுவுமே பிடிக்கலப்பா… அடுத்த நிமிஷம் என்ன கெட்ட செய்தி வருமோன்னு பயமா இருக்கு.”
“”அய்யோ கஸ்தூரி… எல்லாமே நல்ல செய்திதாம்மா… புரியலயா உனக்கு?” என்று, “கடகட’வென்று சிரித்தார் அப்பா. அவள் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.
“”நீங்களும் கிண்டல் செய்யறீங்களாப்பா?” என்றாள் கண்ணீருடன்.
“”இல்லம்மா கஸ்தூரி… ஷேர் பைத்தியம்ன்னு தெரிஞ்சது. எப்ப கல்யாணத்துக்கு முன்னாடி, ஜாதகம், ராசி பொருத்தம் இதையெல்லாம் விட, பையனோட பினான்ஸ் டிசிப்ளின், ஸ்பெண்டிங், வைசஸ்லாம்தான் முக்கியம் என்ற பாடமும் தெரிஞ்சுது…
“”கதிர்… யோசித்தால் விடை கிடைச்சிருக்கும்… அது கெமிக்கல் கம்பெனி. கல்பாக்கம் அணுமின் சக்தி தொடர்பான கம்பெனி. நெட்டுல அவங்களோட சைட்டைப் பாத்தேன்… அணுகுண்டு தயாரிக்கிறதுக்கு, அரசுக்கு இவங்க பாக்சைட் மாதிரி ரசாயனப் பொருளை சப்ளை பண்றாங்க… அகிம்சையை மனதில் ஏற்ற துறவிகள், குங்பூ கத்துக்கிட்டு, தாய் நாட்டுக்கு பிரச்னை வரும் போது, எதிரிகளை போரிட்டு அழிக்கிறாங்க… அது போலத்தான், இந்தியா அணுகுண்டு தயாரிக்கிறதும்… போதுமா? இன்டர்வியூவுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி, போகும் இடத்தைப் பத்தி ஆழமா தெரிஞ்சுகிட்டு போகணும் என்ற உண்மையை, கதிர் இன்னிக்கு தெரிஞ்சுகிட்டான் இல்லையா?
“”அடுத்தது நான்… வயசு எண்பது ஆகப் போகுது. ஹவாய் செருப்பு போட்டுக்கிட்டு சேத்துல நடந்தால், பிடிமானம் இல்லாம, காலை வாரி விடும் என்ற விஷயத்தை மறந்தேன் பாரு… சின்ன மறதியும், சமயத்துல பெரிய நஷ்டத்தைத் தரும் என்ற உண்மை புரிஞ்சுது தானே?
“”எங்க ஸ்கூல் சயின்ஸ் வாத்தியார், எப்பவும் சொல்வார்… சின்ன சின்ன தோல்விகளே நம் பரிசு… அவை தான் பெரிய பாடங்களை சொல்லித் தருகின்றன… சரி தானே கஸ்தூரி?”
அப்பா சிரித்தார்.
கூடவே, வீட்டின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *