எட்டி மரக்காடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 1,731 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வெப்பமான முற்பகலில் குளு குளு அறைக்குள்; 

“கருணா சார்!” 

“என்ன மேடம்.” 

“தர்ஷா நாளைக்கு உங்கள வீட்டுக்கு வரச் சொன்னான்” என்றாள் நயனா.

அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் தர்ஷன் என்னை வரச்சொல்லி இருப்பாரா என்று பிறகுதான் யோசித்தேன். ஏனெனில் அவர் அலுவல் நிமித்தமாக அடிக்கடி வெளி ஊர்களுக்குச் செல்பவர். 

அதை உறுதி படுத்திக்கொள்ள மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து ஒரு பொது தொலைபேசி வழியாக தர்ஷனின் அலுவலகத்திற்கு போன் செய்தேன். தர்ஷன் விசாகப்பட்டினம் சைட்டுக்கு சென்றுள்ளதால் வர பத்து நாள் ஆகும் என்ற தகவலைப் பெற்றேன். 

தர்ஷன் வரச் சொன்னதாக வீட்டிற்கு அழைத்து என்னை தனியே சந்திக்க நயனா இந்த பொய்யை சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன். 

என் வாழ்க்கை மகிழ்வுடன் நகர்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நான் தற்போது வேலை பார்த்து வரும் கம்பெனியில் மகிழ்வோடு இருக்கிறேன். என் திறமையை முழுதாக வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதற்கேற்ற ஊதியமும் பெறுகிறேன். இந்த கம்பெனிக்கு நான் வர காரணம் நயனாதான் என்பதை தெரிவிப்பதில் ஒரு திருப்தி எனக்கு. 

நானும் அவளும் இதற்கு முன்பு தி.நகரில் ஒரு எக்ஸ்போர்ட் அண்ட் இம்போட் கப்பெனியில் வேலை பார்த்தபோது என்னை அங்கு உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்கள். எனக்கு வேலையே தெரியாது என அவர்களே எடை போட்டுக் கொள்வார்கள். எனது திறமையை வெளிப்படுத்த முடியாதவாறு என்னை நடத்துவார்கள். முயன்று முயன்று முயற்சிகளில் தோல்வியுற்று கேவலப்பட்டு ஒரு கட்டத்தில் மன சோர்வடைந்து நானே என்னை சொங்கியாக மாறிக்கொண்டேன். 

அந்த கம்பெனி ஒரு குஜராத்திக்கு சொந்தமானது. அங்கு பணிபுரியும் எல்லோருக்கும் ஹிந்தி தெரியும். மண்டல இயக்குனர் மற்றும் மேலாளரோடு எல்லோரும் ஹிந்தியில்தான் பேசுவார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு அவர்கள் முகம் சுழிப்பார்கள். அதனால் என்னோடு அவர்கள் அதிகம் பேச விரும்ப மாட்டார்கள். ஏதாவது தேவையென்றால் என் சீனியர் வெங்கடேசன் மூலம் கருத்து பரிமாற்றங்கள் நிகழும். நிர்வாகிகள் குஜராத்தியிலும் மற்றவர்கள் ஹிந்தியிலும் பேசிக்கொள்வதால் எனக்கு நடுக்கடலில் தத்தளிப்பது போல இருக்கும். ஏன்டா இங்கு வந்தோம் எழுந்து ஓடிவிடலாமா என தோன்றும். வழியின்றி வக்கற்று நகராத அந்த நாட்களை கடத்தினேன். 

ஆறு மாதம் கடந்த நிலையில் ஒருநாள் நயனா “நீங்க வேறு கம்பேனிக்கு போறிங்களா? தம்பி தர்ஷா சேத்து விடுறேன்னான்” என்றாள். 

உடனே ஓகே சொல்லிவிட்டேன். 

என் திறமையை முடக்கி 

என் மீதுள்ள இரக்கம். என்னை எல்லோரும் அங்கு கார்னர் பண்ணுவதை புரிந்துகொண்ட நல்ல உள்ளம் கொண்டவள் நயனா எனச் சொல்லலாம். அவளுக்கு நாற்பத்து ஐந்து வயதாகிறது. மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என நான்கு மொழி சரளமாக பெசத் தெரிந்தவள். இந்த கம்பெனிக்கு வந்த பிறகு அறைகுறையாக குராத்தி கூட பேச கற்றுக் கொண்டுவிட்டாள். எனக்கு தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. 

தர்ஷனை இதுவரை நான் பார்த்ததே இல்லை. நயனா சொன்ன தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டபோது “உங்களுக்கு வேலை ஓகே ஆயிட்டுது. நீங்க அக்டோபர் பஸ்ட் ‘குட்வில் பில்டர்ஸ்’ போய் எம்டியை பாருங்க. சாலரி பதினைந்தாயிரம் ரூபாய். ஓகேவா?” என்றார். தற்போது வாங்குவதை விட ஒண்ணரை மடங்கு சம்பளம். சனியன்களில் இருந்து விடுதலை. ஓகேதானே. 

நான்கைந்து மாதம் கழித்து நயனாவும் நான் வேலை பார்த்த குட்வில் பில்டர்ஸ் கம்பெனிக்கு வந்து விட்டாள். 

அவள் தனது சித்தியின் மகனான தர்ஷனுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தாள். குடும்பம் கேரளாவில் இருக்கிறது. அவரது கணவரும் மகளும் ஒருமுறை சென்னையை சுற்றி பார்க்க வந்திருந்தபோது ஒரு நாள் அலுவலகம் வந்தார்கள். மகளுக்கே பதினெட்டு வயதாவதாக தெரிவித்தாள். குடும்பத்தை விட்டு பிரிந்து பெரும்பாலும் ஆண்கள்தான் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பார்கள் என்றால் நயனா நேர் எதிர். என்ன சூழலோ. வாழ்க்கை வெவ்வேறு வகையானது. முறைமைக்கு முரணானதாக இருக்கலாம். 

எப்போதும் கூடுதல் குளுமையில் இருக்கும் எங்கள் அலுவலக அறையில் அன்று மாலை கொஞ்சம் வெப்பம் வியாபித்திருந்ததாக எனக்குப் பட்டது. 

குளிர் சாதனத்தை பாயின்டை குறைத்து கடைசி அடி நிலைக்கு கொண்டு போய் வைக்கலாம் போலப்பட்டது. ஆனால் நான் மட்டுமா அங்கே இருந்தேன். இல்லை. மற்றவர்களுக்கு சயனாவின் வனப்பு கூடவில்லை. இளமை திருப்பவில்லை. காலையில் இருந்து போலவே இருந்தாள். மன பேதளிப்பு வேறு என்ன! பைத்தியக்காரன். பைத்தியக்காரத் தனம். அவ்வளவே. 

“நாளைக்கு வீட்டுக்கு வாரிங்கல்ல கருணா சார்” மாலை அலுவலகம் விட்டு விடு திரும்பும்போது கேட்டாள். 

“ம். வாறேனே” 

“மார்னிங் பிரேக் பாஸ்ட்டுக்கு வந்துடுங்க” 

“ட்ரை டு கம்” 

“ஒய். . . ட்ரை. .. ஷுட் கம்” 

“ஓகே. மேடம்” 

அன்று இரவு முழுக்க நான் தூங்கினேனா அல்லது விழித்துக் கொண்டிருந்தேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மைதானம் முழுக்க வெள்ளைக் குதிரைகள் இறக்கை கட்டி பறந்தன. துள்ளி ஓடும் புள்ளி மான்களுக்கு புலிகள் முத்தம் கொடுத்தன. பிணந்தின்னி கழுகுகள் புறாக்களாக மாறிப்போயின. எல்லாம் வெள்ளை வெள்ளையாய். … வினோதங்களாய். . . ஏஞ்சல்களாய். . . 

போகும் வழியில் அடையார் ஆனந்த பவனில் அரைக் கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். இரண்டு முழ மல்லிப் பூவும், அவளுக்கு; ஏன் எனக்கும்கூட பிடித்த வறுத்த வேர்கடலை பருப்பு அரை கிலோவும் வாங்கிக் கொண்டு போனேன். 

ஹாலிங் பெல் இருந்தும் அடிக்க வேண்டிய தேவை எழவில்லை கேட்டை திறந்து வைத்துக்கொண்டு காத்துக் கிடந்திருப்பாள் போல. 

“வாங்க சார் வாங்க. வெல்கம்” என்றாள் ஒன்பது மணி முக மலர்ச்சியோடு. 

“தேங்க்ஸ். குட் மார்னிங்” என்றேன் பதிலுக்கு. பரவச மனதோடு. .. 

உள்ளே இருந்து கேட்டின் க்ரில் கம்பிகள் வழியை வெளியே கைகளை விட்டு வெளிப்புறமாக பூட்டுப்போட்டாள். 

அதுவரை காத்திருந்தேன். கணம் யுகமாய் பட்டது. பின்னே வாசல் நோக்கி நகர நானும் பின்தொடர்ந்தேன். மரமல்லி மரம் உதிர்த்துக் கொண்டிருந்த மலர்களில் ஒன்றிரண்டு எங்கள் மேல் விழுந்தது. ரம்யமான மணம். எனக்கு வழிவிட்டு உள்ளே போங்க சார் என்றாள். நான் உள்ளே நுழைந்ததும் வெளியே நின்றுகொண்டு வெளிப்புறமாக கதவை இழுத்து அடைத்து பூட்டி விட்டு வீட்டின் வெளிப்புற பக்கவாட்டு வழி சென்று கொள்ளைப்புறம் வழியாக திருடியைப் போல உள்ளே நுழைந்து உட்புறமாக தாழிட்டாள். நான் அதுவரை ஹாலில் நின்று கொண்டிருந்தேன். 

“உக்காருங்க சார் உக்காருங்க. என்ன வேடிக்கையா இருக்கா?” என்றாள். 

“இல்ல. வியப்பா இருக்கு” என்று தெரிவித்தவாறு வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை நீட்டினேன். 

“என்ன இது?” என்றவாறு வாங்கிக் கொண்டாள். ஒரு நமட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தினாள். 

“ஒண்ணுமில்ல. வெருங்கையோட வரக்கூடாதில்ல. அதான். ஜஸ்ட் பார்மாலிட்டி” என்றவாறு என்னை சோபாவில் அமுத்திக்கொண்டேன். புஸ் என அது உள்ளே போனது. மென்மையானது. அவளும் எதிரே கிடந்த இன்னொரு சோபாவில் தன்னை அமர்த்திக் கொண்டாள். 

அவளும் ஒரு ‘ஒண்ணுமில்லயை’ உச்சரித்து “வெளியே பூட்டிட்டா வீட்டில் யாரும் இல்லன்னுட்டு வர மாட்டாங்க. நமக்கு டிஸ்டப் இருக்காது. அதான் இப்படி பூட்டினேன்” என்றாள். 

“ஓகே. தட்ஸ் குட் ஐடியா” 

“பெருசா யாரும் வரமாட்டாங்க. ரெண்டு வீடு தள்ளி இருக்குற மாமி எப்பயாவது வருவாங்க. எதுத்த வீட்டு வாண்டு அடிக்கடி வருவான். வேற யாரு வரப்போறா!” 

“தர்ஷா எங்க?” என்றேன். 

“கம்பெனியில அவசரமா வைசாக் போகணுன்னு காலையில கூப்டாங்க. பொய்ட்டான்” என ஒரு பொய்யைச் சொன்னாள். 

நானும் தெரியாது போல “அடடா வந்தும் மீட் பண்ண முடியாமே போச்சே. தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்” என்றேன். 

“ஏன் அவன் இல்லன்னா வரக்கூடாதா? அவன் போனதும் நல்லதுதான் என எனக்கு பட்டுச்சி” என்றவள் என் முகத்தை உற்று நோக்கினாள். நான் பேசாதிருந்தது எதேனும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்குமோ என ஐயுற்றேன். உண்மையில் என்ன பேசுவதென்று எனக்கு புலப்படவில்லை. 

கொஞ்சம் மெளனம் நகர்ந்தது. 

ஓணத்திற்கு உடுத்தும் கேரளாவிற்கேயான பண்பாட்டு உடையான கசவு எனப்படும் தூய வெண்ணிற சேலை அணிந்திருந்தாள். சேலைக்கு ஏற்றார்போல் சிவப்பு நிற பிளவுஸில் ஒரு ஜெலிப்பு தென்பட்டது. 

சாப்பிட அழைத்தாள். 

அதற்கு முன் வீட்டை பார்த்துவிடலாம் என அழைத்து ஒவ்வொறு அறையாக காண்பித்தாள். இருவருக்கு தேவைக்கு அதிகமான வீடாக கருதினேன். மூன்று படுக்கையறைகள். ஒன்று எப்போதும் பூட்டியே கிடக்குமாம். வீட்டின் உட்புறத்தில் ஐவேரி நிற வண்ணம் பூசப்பட்டிருந்து. அவளுடைய படுக்கையறை பதினைந்துக்கு பதினைந்து அளவில் இருக்கலாம் பெரிய அறை. அது மட்டும் முழுக்க மஞ்சள் நிறத்தால் மெழுகப்பட்டிருந்து. பெரிய அறைக்கு மஞ்சள் நிறம் உகந்தது அல்ல. அது எரிச்சலை, கோபத்தை தூண்டும் என எப்போதோ படித்த ஞாபகம் வந்து போனது. சமையல் அறையில் பாத்திரங்கள் அடுக்கி வைத்திருந்த நேர்த்தி அவளது கலை ஆர்வத்தை பிரதி பலித்தது. நான் வருகிறேன் எற்று ஒழுங்குபடுத்தி இருக்கலாம். 

உணவளித்தாள். 

ஹாட் கேஸ்ஸில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த இளநீர் தேசையும் சோயா பர்கரையும் சுடச் சுட பரிமாரினாள். சேர்ந்து உண்டோம். 

“சோயா பர்க்கர் நல்ல சுவை. பாராட்டுகள்” என்றேன். 

“அப்போ தேசை நல்லா இல்லையா?” என்று சிணுங்கினாள். 

“அதுவும் நல்லாதான் இருக்கு. சொன்னேன். எதாவது சொல்லணுமேன்னு ஆனா உண்மையத்தான் சொன்னேன்.” 

ஹாலுக்கு வந்ததும் எதிரெதிர் சோபாவில் இறுத்திக்கொண்டோம். ஒரு சின்ன மௌனம். அதன் நீட்சியை, குறுக்கை கால அளவில் கணக்கிட இயலாது என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஆதி அந்தம் இல்லை. நடுவில் அவள்தான் முற்றுபுள்ளி வைத்து தொடங்கி வைத்தாள். 

பேச ஆரம்பித்தோம். 

பேசினோம். பேசினோம். நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தோம். 

எல்லாம் ஞாபகம் இல்லை. அவ்வளவு. தொடர்ச்சியாக. துண்டு துண்டாக. 

நடுவில் கொஞ்ச ஞாபகம் உள்ளது. 

“கண்ணீர் வராமல் உங்களால் அழத் தெரியுமா? கருணா சார்!” 

“அழுது அழுது வற்றிப்போனால் கண்ணீர் எப்படி வரும்” 

“அதுதான் இல்லை. கண்ணீர் வற்றுவதே இல்லை. அது ஆழமான பசிபிக் பெருங்கடல். அழ அழ ஆறுதல் அடைந்து கண்ணீர் நின்று போகிறது. தெட்ஸ் ஆல்” 

“அப்போ கண்ணீர்தான் ஆறுதலா?” 

“அதிலென்ன வியப்பு” 

“நீங்கள் அழுது இருக்கிறீர்களா?” 

“இல்லை. அழுதுகொண்டே இருக்கிறேன்” 

“அப்ப கண்ணீர் வந்துகொண்டே இருக்கா?” 

“அதுவும் இல்லை. ஊமை அழுகை. மௌனம் தாண்டிய மோனம் போல” 

“அதுதான் இறுதியென்றால், எதுவும் இல்லையே. பின்னே ஏன்?” 

“நீங்கள் வாழும் பூமியில்தானே நான் இருக்கிறேன்” 

“இல்லை. நீங்க இன்னும் நீங்க சொல்லும் நிலையை அடைய வில்லை. அடைந்திருந்தால் நீங்க வேறு உலகத்தில்தானே வாழ்ந்து கொண்டு இருப்பிங்க” 

“புத்தனுக்கு தங்கதால் சிலை வைத்துள்ளது நீங்க தானே!” 

“இன்னும் நீங்க முழுமையாக வில்லைதானே?” 

“சன்யாசிகள் கூட கஞ்சா குடிக்கிறார்கள்.” 

“அவர்கள் முழுமையற்றவர்கள்” 

“நானும் நீங்களும் யாரை வேண்டுமானாலும் சொல்லுங்கள்” 

“ஆனா நீங்க பின்னோக்கிச் செல்றிங்க. அழ வேண்டும். கண்ணீர் சிந்த வேண்டும். அது மெல்ல வற்றிப்போக வேண்டும். மீண்டும் அழவேண்டும் என்பது போல” 

“இருக்கலாம். புரியாமல் போனது வாழ்க்கை. அது அழுகையா? மாயையா?. இப்போது ஆறுதலே வாழ்க்கை என்று கருதத் தொடங்கிவிட்டேன்” 

“ம்” 

“ஒரு பெஸ்டி தேவைப்படுகிறது. எனக்கென்று இங்கு யாரும் இல்லை. தம்பி ஒரு எதார்த்தவாதிதான் என்றாலும் மனம் விட்டு பேச முடியாதுதானே. நீண்ட காலமாக நெஞ்சு கனத்து போயிருக்கு. சேமித்தவற்றை செலவழிக்க வேண்டும்.” 

“சரி” 

“அதை வாங்கிக்கொள்ள யாரேனும் இருக்கிறார்களா என ஏங்கியபோது நீங்க என் கண் முன்னாடி வந்திங்க. உங்க கன்னியம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அதான். நீங்க நல்ல பெஸ்டியா இருப்பிங்க.” 

“அழுங்க. கண்ணீரை துடைத்து விடுகிறேன். குமுறல்கள் கூச்சமற்ற பேச்சுகள் எதுவானாலும் எனக்கு சாதாரணமே. என்ன இப்படி பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். என் சுபாவம் அது” 

“மனிதர்கள் மாய உலகத்தில் வாழும் நிஜங்கள் இல்லையா?” 

“ஆனாலும் எதிர்பார்ப்பு நீர்த்துப் போவதில்லை” 

“மௌனமாக அடங்கிப்போன கதறல் எப்போதாவது சீறி எழுகிறது” 

“ஒரு கடலாகி அதை சமாதியாக்கி விடுகிறேன்” 

“கருணா சார்?” 

“மேடம்?” 

“நான் ஏன் இங்கு தனியே வந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கேட்கவே இல்லையே!” 

“அதுதான் எரிமலை குழம்பாய் வெளிவரும் என்கிறீர்கள். வரும்போது உணர்கிறேன்” 

“உணர்வீர்களா? சுடுபடுவீர்களா?” 

“நானும் வெந்து தணிந்தவன்தான்.” 

“ம்” 

“தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையில் தள்ளப்பட்டு இங்கே வேலைக்கு வந்ததாக அறிந்தேன்.” 

“பொதுவாக, இவ்வாறான நிலையில் ஆண்கள்தான் மனைவி மக்களை விட்டுவிட்டு தேசம் விட்டு தேசம் போய் வேலை செய்வாங்க ஆனால் நான் எப்படி வந்தேன் என்பது புதிராகத் தெரிகிறதா?” 

“ஆம்…” 

“புரியும் புதிராக இருக்கலாம். புரியாத புதிராக இருக்கலாம்”. 

“புரியும்போது புரியட்டும். இல்லை புரியாமலே போகட்டும்” 

“சரி. அப்படின்னா நீங்க அடிக்கடி இங்க வரணும். தம்பி இருக்கும் போதும். அவன் எதார்த்தமானவன்.” 

“இருக்கும்போது நீங்க மனத்தை விடமுடியாது இல்லையா?” 

“ஆம். ஆனா இறுக்கம் குறையும்.” 

“நல்லது. இருவருக்கும் மனித வாசம் தேவைதானே!” 

“மூவருக்கும். நாம் வளராத செடிகள். திடீரென தழைத்து, பூத்து காய்த்து, கனிவதுபோல தெரிகிறது” 

“தோப்பாகி காடாகலாம்” 

“என்ன மரங்கள்” 

“எல்லாவற்றிற்கும் ஏதெனும் ஒரு பேரு இருக்கும்” 

“ஆனா எல்லா பேரும் எல்லாருக்கும் தெரியாது” 

“நீங்க எட்டி மரத்த பாத்துருக்கிங்களா?” 

“இல்லை” 

“நானும் பாத்ததில்லை. இத எட்டி மரம்ன்னு சொல்லுவோமே” 

“ம். சொல்லுவோமே. எட்டிமரக்காடு” 

“நான் அழைச்சபோது நீங்க என்ன நெனச்சிங்க?” 

“வேற மாதிரி. ஆனா நான் நல்லவன்”. 

“ஒரு ஆரோக்கியமான பெஸ்டி.” 

“ஆரோக்யமே பெஸ்டி” 

“ம்” 

நீண்டு கொண்டே போனது.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *