எங்கிருந்தோ வந்தேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 2,872 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படி மிதிக்கையிலே வானம் குமுறுது – இல்லை, என் வவுத்தில் என் பசியின் குமுறல்.

பஞ்சடைஞ்ச என் கண்ணிலிருந்தே இத்தினி இருளும்” புறப்பட்டு வந்து அந்தி மங்குதோ?

வாசற்படியில் தயங்கி நின்றான். பெரிய திண்ணையில் இரு உருவங்கள் இருளில் கோடு கட்டின.

அண்ணனும் தம்பியுமாட்டம் இருக்குது. பேசிகிட்டிருக் காங்க. சின்ன திண்ணையில் ஒரு சின்னப் பையன் முழங்காலைக் கட்டி குந்தியிருக்கான்.

மாடத்துலே அகல் சுடர் . கண்ணைக் கசக்கி மனமில் லாமே முளிச்சுப் பார்த்து மங்கி மூச்சு விடுது.

“ஏ பண்டாரம் உனக்கு மூளையிருக்குதா? இன்னும் உலை காயுதோ இல்லியோ அதுக்குள்ளே உன் பஞ்சப் பாட்டுக்கு வேலை கண்டிருச்சா?”

“என்னண்ணா அந்த ஆளாடே கோவம்? கடலைக்காக் கொல்லையிலே குரங்கு இறங்கிட்ட உன் ஆத்திரத்துக்கு பிச்சைக்கு வந்த ஆண்டியா ஆளு?”

தம்பியார் பேச்சு , பூவாலே அடிச்சாப் போல இருளிலே வந்து மெத்துனு இறங்குது . காதிலே மோதி நெஞ்சை ஒத்தி உதிருது. என் கண்ணோரம் தண்ணி- இல்லை சிலும்பல் றாவுது.

“ஐயா சோறு கண்டு மூணு நாளாச்சு!” இது என் குரல் தானா? பூமியின் குடலிலிருந்து வருதே? இருளோன்னு வருது.

“ஏனய்யா, பசிக்கிறவங்களுக்கெல்லாம் மூணு அது என்ன கணக்கய்யா?”

“பசி எல்லாருக்கும் ஒண்ணுதான் அண்ணா. பசி வேளைக்கு ஆனையிலிருந்து எறும்பு வரைக்கும் எல்லாத் துக்கும் ஆனைப் பசிதான்.”

“சரிதாண்டா ! நீ பெரிய தருமராசா! எனக்குத் தெரி யுமே, நாயம் சொல்ல வந்துட்டான் பெரிய நாயம்!”

“சாமியாரே நீங்க சும்மா திண்ணையிலே குந்துங்க. நெஞ்சிலே ஒண்ணும் வெக்காதிங்க. அண்ணனுக்கு பேச்சுத் தான் நெடி. மனசு பிஞ்சு. சமையலாவுது, ஆவட்டும்.”

உஸ் – அப்பாடா, மூச்சோ அல்ல என் உயிர்தான் பிரிஞ்சுப் போச்சோ? இப்போ சாய இந்தத் தூண் மாத்திரம் இல்லாட்டி புடலம் பிஞ்சா சுருண்டுடுவேன். அப்பா என்னைக் குந்தச் சொன்ன வாய்க்கு உன் வவுறு எப்பவும் குளுகுளுன்னு இருக்கணும்! ஐயோ என் வவுத்துக் குழி எனக்கே பயமாயிருக்குதே! பானையிலே வடிச்சதத்தினியும் இலையிலே சாய்ச்சாலும் குழி அடையுமா? ஆண்டவனே! நீ இருக்கையா?

“அப்பா!”

இரு சகோதரர்களும் திடுக்கிட்டுத் திரும்பினர். மூத்த வன் முகத்தின் மாறல் காணச் சகிக்கவில்லை . முகத்தின் மீது அவ்வேளையின் சுழிப்பு தன் முழு வேகத்தில் மோதி உடைந்து விரிசல்கள் அடுக்கடுக்காய் நெற்றியிலும் கன்னங் களிலும் வாயோரங்களிலும் ‘விர்ரென’ ரேகையோடின.

கண்ணாடி உடைஞ்சாப் போலே.

“சின்னதா பேசினது?” அவன் பேச்சு , கேவிய மூச்சில் தொத்தி வந்து வெளிக்காற்றுடன் கலந்தது.

தம்பி தலையை ஆட்டினான், அவனுக்கு வாயடைத்து விட்டது.

‘சின்ன’ தன் முகத்தில் திடீரெனச் செழித்த செந்தழல் இடத்தை ஏற்றும் போல் ஒளி வீசிற்று. சின்னத் திண்ணையி லிருந்து குதித்தோடி வந்து பண்டாரத்தின் முகத்துள் உற்று நோக்கினான். அவன் கைவிரல் நுனிகள் ஆண்டியின் மேல் லேசாய்ப் பட்டன. ஆண்டியின் உடல் மயிர்க்கால் நரம்பு கள் தற்காப்பில், அச்சத்தில் குறுத்து குறுத்து உள்வாங்கின.

ஏன் என்னைத் தொடறான்? என்னண்டை என்னத்தைத் தேடறான்?

பையன் என்ன தேடினானோ என்ன கண்டு ஏமாந்தானோ? அவன் சுறுசுறுப்பு, பற்றிய வேகத்தில் சட்டென விட்டது. கண்களில் அசடு குழம்பிற்று. வாயில் விரல் போட்டுக் கொண்டு நின்றான். பையன் சின்னப் பையன் தான். ஆனால் வாயில் விரல் போட்டுக்கொள்ளும் வயதல்ல. சற்று விளக்குப் பார்வை. ஆனால் விளக்குப் பார்வையு மல்ல என்னத்தையோ தேடித்தேடி அந்தத் திக்கிலேயே சாய்ந்து போன நோக்கு.

பையன் ஆண்டிக்கெதிரே உட்கார்ந்து கொண்டான். வாயில் மாட்டிய விரலை இன்னும் எடுக்கவில்லை, கடை வாயில் எச்சில் வழிந்தது. வாலைக் குழைக்கும் நாய் முகத் தில் காணும் சோகக் கனிவொழுகி, கண்கள் அழகுற்றன.

அவனுள் குமுறும் குழம்பில் மார்பு செவ்விட்டது.

உள்ளேயிருந்து கம்முனு வெங்காயம் மூக்கைத் துளைக்குதப்பா! சாம்பாரிலே முளுசா விட்டிருப்பாங்களா? இல்லே பொரியல்லெ அரிஞ்சு போட்டிருப்பாங்களா? திண்ணையிலே குந்த வெச்சுட்டு இவங்க மாத்திரம் உள்ளே போயிட்டு வெளியே வந்து ஆய்ப்போச்சு பண்டாரம் னு கைவிரிப்பாங்களா? ஆண்டவா! என்மேலே இன்னிக்கு என்ன எண்ணம் வெச்சிருக்கியோ தெரியல்லியே, இருளோன்னு இருக்குதே!

சின்னவரு அகல் விளக்கைத் தூண்டறாரு. என்னை இன்னும் நல்லாப் பார்க்க. அண்ணனும் தம்பியும் என்னைப் பார்த்துப் பார்த்து என்னவோ கிசுமுசுன்னு பேசிக்கறாங்க. மூத்தவர் தன் காதை மடிச்சுக் காட்டறாரு. தம்பி தன் தாடையிறக்கத்துலே தட்டி காட்டறாரு. என்னைக் கேஸ் புடிச்சுக் கொடுக்கப் போறாங்களா? நான் என்ன தப்பு செஞ்சிட்டேன்? என்ன செஞ்சிருந்தாலும் இவங்களுக்கு எப்படித் தெரியும்?

ஆனா தப்பு செஞ்சாத்தான் ‘தண்டா’ வா? நாணயத்தைவிடக் கேஸ்தானே முக்கியம்? ‘செஞ்சியா செஞ்சியா?’

“எசமான் என்னை அடிமேல் அடி அடிக்காதீங்க. அடிச்சே கொன்னு போடாதீங்க. கொன்னு போட்டாலும் என்ன செஞ்சேன்னு சொல்லுங்க; செஞ்சதைத் தெரிஞ்சுகிட்டு சாவறேன். என்ன செஞ்சேன்?

“அது உனக்குத் தெரிஞ்சு ஆவ வேண்டியதில்லே. செஞ்சேன்னு ஒத்துக்கோ.”

ஈதானே போலீஸ் தர்பார் ! செஞ்சியோ இல்லியோ மூணு மாசம் உள்ளே தள்ளிட்டான்னா கஞ்சியோ களியோ மூனு மாசம் வவுத்துக்குக் கவலையில்லே. இதுவரையும் நான் போனதில்லே. ஆனால் போனவங்க அப்படித்தானே சொல்லிக்கிறாங்க. வவுத்துக் கொடுமையை நினைச்சுப் பாத்தா இதுவரைக்கும் போகாதது நம் தப்புத்தானே! புளைப்போ ஆண்டிப் புளைப்பு . உண்றதோ இரந்து. ஆனா இதிலேயும் ஈனமானம்னு ஏதோ இன்னும் ஒட்டிக்கிட்டு உடல் குன்னுது. இதுவே வெக்கக் கேடாயில்லே, சிரிப்பாக் கூட இல்லே?

“சாமியாரே, எளுந்து கால்கை களுவறீங்களா?” சின்னவரே இந்த வார்த்தை எப்போ வரப்போவுதுன்னு தானே காத்துக்கிட்டிருக்கேன். ஆனால் கவுரவத்தை விடாமே கனைச்சு நமசிவாயம்னு கூப்பிட்டுகிட்டு எளுந்திருக்கறேன். என்னவோ நான் கூப்பிட்டவுடனே சிவன் எல்லாத்தையும் தரவன், மேல்முண்டை இடுப்பிலே வரிஞ்சு கட்டிகிட்டு , கைகட்டி வாய் புதைச்சு தவசிப் புள்ளை யாட்டம் என் கால் மாட்டிலே காத்து கிட்டு நிக்கிறாப் போல்.

“அப்பா!”

சின்னப் பையன் குதித்தெழுந்து ஆண்டியின் கையைப் பிடித்தான். நிமிர்ந்த முகத்தில் ஆயிரம் அலைகள் ஊமை வடிவம் ஆடிப் பாய்ந்தன.

அண்ணன் முகத்தில் திரும்பவும் திகைப்பு சூழ்ந்தது. ஆண்டி மேல் ஆழ்ந்த பார்வையில் லேசாய்ப் பகை கக்கிற்று. பையன் தலையில் காடாய்ச் செறிந்த மயிருள் செல்லமாய்த் தன் விரல்களை விட்டுக் கலைத்துக்கொண்டே “இவன் என் மகன். இவன் பேர் நமச்சிவாயம்” என்றான்.

தம்பியார் தொடர்ந்து: “ஆனால் நாங்கள் பேர் கூப் பிட்டு இவன் எங்களுக்கு ஏன்னு கேட்டு எத்தினியோ நாளாச்சு”…..

வெளியே பார்த்து வீடு இம்மாம் பெரிசுன்னு எவன் நினைப்பான்? களுத்துக் குறுகலைக் கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தைக் கணிக்க முடியுமா? நடக்க நடக்க வீடு கூடவே வருது. ஒரு ஒரு கட்டும் கோட்டையாட்டம், ஒரு கட்டு, ரெண்டு கட்டு. மூணாங்கட்டு தாண்டிக் கிணறு. அந்தாண்டை புழக்கடை மதில் எங்கே எழும்புது இருட்டிலே தெரியலே. இடையிலே மரமும் செடியும் தென்னையும் வாழையும் இலையும் மட்டையும் படுதாவா ஆடி மறைச் சிட்டு நிக்கிது.

தண்ணியை வாளி வாளியாக இளுத்து மேலே ஊத்திக் கிறேன் , ரெண்டு முளுங்கு அள்ளியும் குடிக்கிறேன். பால் தித்திக்குது. அம்மாடி! கண்ணு, வாய், காது, களுத்து, முதுகு, அக்குள் எல்லாம் குளுகுளு-

“இந்தாங்க!”

குரல் கேட்டு திடும்புனு திரும்பினா இளையவர் கையிலே மடிச்ச துண்டைத் தாங்கிட்டு நிக்கறாரு. துண்டை என்னண்டை நீட்டறாரு.

“சுருக்க ஈரத் துவட்டுங்க. இந்த தண்ணி ஜீதளம்.”

எனக்கு உடம்பு பதறிப் போச்சு.

“எசமான் ஏழைமீது உங்கள் கருணை ஏற்கெனவே எனக்கு வாயடைக்குது. இனியும் சோதிக்காதீங்க, இத்த னைக்கு நான் தகுதியில்லே. எனக்கே தெரியும்.”

அவர் குஞ்சிரிப்பா சிரிக்கறாரு.

“ஈதெல்லாம் உங்களுக்குன்னு நீங்க ஏன் நினைக் கிறீங்க? ஈதெல்லாம் நாங்க எங்களுக்கே செய்வதாயிருக்கக் கூடாதா?”

இவர் என்ன சொல்றாரு விளங்குதில்லே. ஆனால் இப்படிப் பேசினா நெஞ்சிலே எதுவோ பயங்காணுது.

கொஞ்சம் நெருங்கி வரார். மூக்கு எடுப்பா. எப்படிக் கத்தியாட்டம்!

“சாமியாரே ஒண்ணு சொல்லுங்க; உங்கள் தாடிக்கும் மீசைக்கும் உள்ளே ஒளிஞ்சிட்டிருக்கறது யார்? என்ன அப்படி முளிக்கறீங்க? எனக்கு முன்னாலேயே தெரியும். எதுக்கும் சந்தேகத்துக்குக் கேட்டேன் ; அவ்வளவுதான் சும்மா மிரளாதீங்க.”

“எசமான் எனக்கொண்ணுமே தெரியாது.”

“நான் சொல்றதும் அதுவேதான். நீங்க ஏதுக்கும் பயப் படத் தேவையில்லே.”

“எசமான் நாய்க்கு ஒண்ணும் தேவையில்லே , கையெடுத்துக் கும்பிடறேன். எசமான் எனக்கு இலையிலே கொடுத்துட்டா . மடியிலே சுருட்டிக்கிட்டு எங்கேனாச்சும் காவாய்க் கரையோரம் கண் காணாமே போயிடுவேன்”

“சேச்சே – ”

“எசமான் உண்மையா சொல்றேன்; எனக்கொண் ணுமே தெரியாது. இந்த எல்லையிலே, இன்னிக்குத்தான் சத்தியமா விளக்கு வேளைக்கு காலெடுத்து வெச்சேன் -”

“அப்பா”

“உஷ்- சாமியாரே; பையன் உங்களை அளைக்கிறான். வாயே பேசாதவன் இன்னிக்கி ‘அப்பா’ன்னு அளைக்கிறான். வாங்க, வாங்க உள்ளே வாங்க; பயம் விட்டு வாங்க”

ஐயோ உபசரிக்கிறாங்களா குழி பறிக்கிறாங்களா தெரியல்லியே! முருவா, கண்டுக்க காட்டிக் கொடேன்!

தாழ்வாரத்திலே திருநீறு பல்லா ஆடி ஆடி என்னை விளிக்குது.

“ஏ பண்டாரம்! வவுத்து நினைப்பிலே வேஷத்தை மறந்துடாதே!” என் மனசு எச்சரிக்கை காட்டுது.

நடு வாசல்லே இலை போட்டிருக்காங்க; எனக்கு இலை அவங்களுக்குக் கிண்ணி.

தாழ்வாரத்துலே சுவத்தோரமா ரெண்டு பொம்புள் ளேங்க ஒட்டிக்கிட்டு காத்திட்டிருக்காங்க.

இலைக்குப் பக்கத்துலே மணைமேலே பையன் தந்திக் கிட்டு குள்ள வாத்து ரெக்கை அடிச்சுக்கற மாதிரி. ரெண்டு முழங் கையையும் விலாவுலே அடிச்சுக்கிட்டு, குந்தினபடியே என்னைப் பார்த்துக் கொம்மாளம் போட்டு குதிக்கறான். இவனைப் பார்த்தான் தான் ரொம்ப அச்சமா யிருக்குது. மறை லூஸா? ஆனால் அவங்கல்லாம் அவனைப் பாக்கறப் போல்லாம் அவங்க உசிரே அவங்க கண்ணுலே விளையாடுது. வீட்டு விசையே பையன் கிட்டத்தான் போல் இருக்குது.

பக்கத்திலே பையன்; அண்ணனும் தம்பியும் எதிரே. பெரியவர் உறுமினதும் பதார்த்தம் வெக்க ஆரம்பிச்சுட் டாங்க. தாழ்வாரத்தில் இரும்புக் கம்பியிலிருந்து சிம்னி விளக்கு தொங்குது. என் முகத்திலே மாத்திரம் அடிக்குது.

எல்லாம் ஏற்பாடாத்தான் நடக்குது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன செஞ்சேன்?

தலைக்கு மேலே முழு மைதானத்துலே முக்கா நிலவு நடுவுலே நின்னிட்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். “ஏலே பண்டாரம் ! இன்னிக்கு உனக்கு என்ன வாழ்வு வந்திருக்குது? தண்ணியும் சோறும் விரலிடுக்குலே வளிஞ்சு போவுதேன்னு உஸ் உஸ்ஸுனு அவசர அவசரமா உறிஞ்சி உறிஞ்சி அரையும் முளுசுமா உள்ளே தள்ள கிடைச்சாலே சொர்க்கம் உனக்கு. இன்னிக்கி எல்லாருக்கும் சரியா இலை, மணை, பக்கத்துலே லோட்டாவுலே தண்ணி, விருந்து, ஊம் ஊம் நடத்து ஏக் தின்கா சுல்தான்! ஆனால் ஒரு நாள் ஒருவேளை முழு வவுறு நிறையப்போகும் சொகத் துலே நாய்க்கு வெக்க மறந்துடாதே. இலையைப் புரட்டி ஒண்ணும் காணாமே அது வவுறெரிஞ்சு நடு ராவுலே தலை தூக்கி என்னைப் பார்த்து ஊளையிட்டா. உன் வவுத்துலே பத்து நாளைக்கு மண்ணு! ஆமா சொல்லிட்டேன், இன்னிக்கி உன் சோறுக்கு நான் சாக்ஷி-” கிலியிலே தலையை ஆட்டறேன்.

நிலவின் அழகை எல்லாரும் புகழாறாங்க. ஆனா எனக்கு அவன் அழகா பட்டதில்லே. முகத்தில் கிழவ னாட்டம் எத்தினி வடு! மத்த நாளைக்கு தேஞ்சு தேஞ்சு ஓஞ்சு ஒரு நாள் மாஞ்சே போறான். பசிச்ச வயிறோடு ராவுலே மானம் பார்த்து படுக்கற முகம் உலகத்திலே எத்தினி எத்தினியோ? பார்த்துப் பார்த்து அந்தப் பாவமே அவனை ரோகமா வாட்டுது.

சூரியன் விசயம் கேக்கவே தேவையில்லே; பகலிலேயே எரியற வயிறு கோடி கோடி கண்டு கண்டு, அவன் கொதிப்பு கூடிக்கிட்டே போவுது.

இலையிலே பதார்த்தம் நிறைஞ்சுபோச்சு.

மசாலா பொரியல்.

துவையல்.

சோத்து வத்தல் வறுத்த முளகா

அப்பளப்பூ கிச்சிலிக்கா ஊறுகா

இன்னும் ஒண்ணு ரெண்டு பேர் தெரியாது; இதுவரை கண்ணால் கண்டது கூட இல்லை

இன்னிக்கு ஏதாச்சும் விசேடமா? தினத்திக்கே இவங்க இப்படித்தின்னா கட்டுபடி ஆவுமா? வவுறு ஜரிக்குமா? இல்லே இதெல்லாம் எனக்காவா?

மல்லிப்பூவாட்டம் சோறு இலையிலே புலுபுலுன்னு ஆவி பறக்குது. பரபரன்னு – அண்ணின்னு எண்ணறேன் விசிறியெடுத்தாந்து விசிர்றாங்க எனக்குக் கண்ணுலே சதை பிடுங்கிக்குது.

இம்மாம் பொருட்டா நான்? ஏன் இங்கே வந்தேன்? இவங்க ஏன் இப்படி என்னை வதைக்கறாங்க? கண் கசக்கவுமுடியல்லே முளிக்கவுமுடியல்லே. முழி நீஞ்சுது . பாத்தூடுவாங்களோ? மூக்கு உறிஞ்சுது.

மேலேருந்து அவன் சிரிக்கிறான். மேலே இளக்கம் கண் டிருக்குது. இளநீரிலே வளுக்கைத் தேங்காய்த் தேசலாட்டம் நிலவு மிதக்குது.

“அப்பவே சொன்னேனே கிணத்துத் தண்ணி ஜீதளம். ஜளிப்பு எப்படிப் புடிச்சிக்கிட்டுது பார்த்தீங்களா?”

சின்னவர் வேறே நெஞ்சுலே தூண்டிலை மாட்டி இழுக்கிறாரு.

இலையை இப்படி நிறையக் கண்டாலே வவுறு அடைச்சுப் போவுது. மேலும் இவங்க மேலும் மேலும் நெஞ்சை வேறே நிரப்பறாங்க, உடம்பு கிடுகிடுன்னு ஆடுது. அண்டாவானாலும் கொண்டவரைக்கும் தானே!

வெறுப்பிலேயிருந்து தப்பிடலாம்.

எமன் கிட்டக்கூட ஒரு சமயம் இல்லாட்டி ஒரு சமயம்.

ஆனால் அன்பிலேருந்து, ஓடி ஒளிய திக்கில்லியா?

“என்னா சும்மா குந்திட்டிருக்கீங்க?”

பையன் என் மேலே வெச்ச முழிமாறவே யில்ல. என்ன அப்படிப் பார்த்துக்கிட்டிருக்கான்? லாந்தர்லே கண் சீதாப் பளி விரையாட்டம் பளபளக்குது.

சோறுமேலே சாம்பாரு சரிஞ்ச இடத்துலே, நெய் மினுக் கற பக்கம் பேத்து அப்படியே உருட்டி, அதுலே உருளைக் கிழங்கு பத்தை ஒண்ணு புதைச்சு பையன் கையிலே வெச்சேன். நமசிவாயம்.

பையன் முவத்துலே சந்தோசம் கண்ணுலே வழிஞ்சு கன்னத்திலே குழிஞ்சு, உதட்டோரம் ஒளிஞ்சு விளையாடு தைப் பார்க்கணுமே! பெரியவங்க ஒத்தரை யொத்தர் பார்த்துக்கறாங்க. அவங்க பார்த்துக்கிற அர்த்தம் என்ன? என்னாச்சும் இருந்தூட்டுப் போவட்டும். எனக்கு இனி வவுறு நோவாது இல்லியா?

ஆனால் ஒரு கவளம் காஞ்ச வவுத்துலே விளுந்ததுமே விக்கல் எடுத்துக்கிட்டுது. தொப்புள் சதை கொத்தோடு பிடுங்கிட்டு தொண்டை வரை வந்ததும் முழி மானத்தை முட்டுது. நொடியிலே மூச்சு மலையேறிப்போச்சு. மூக்குக்குக் குறுக்கே ஒரு பருக்கை தளமாட்டம் விளுந்தூட்டுது. பாம் பாட்டம் இருள் பின்னிக்கிட்டுது. அவங்க உரு அடையாளம் அழிஞ்சு குரங்காட்டம் மேலும் கீழும் குதிக்கிது.

“அப்பா! அப்பா!! அப்பா!!!” பையன் தான் துடிச்சுப் போயிட்டான். யாரோ தண்ணியை உதட்டண்டை ஏந்தறாங்க.

“குடிங்க குடிங்க! மயங்காதீங்க! கடிச்சுக்கிட்டே குடியுங்க!!

தண்ணி உள்ளே போனதும் முழியும் கீழேயிறங்கி மூச்சும் மேலே திரும்பி – அம்மாடி; திரும்பாத பயணத்துக்கு பணம் கட்டாத டிக்கட் பருக்கை சோறே பத்தும் போல இருக்குதே!

பையன் தான் தலையை அறுத்த கோழியாட்டம் என்னைச் சுத்தி சுத்தி வர்ரான். பிடிச்சு இழுத்துப் பக்கத் துலே குந்த வெச்ச பிறகுதான் மேலே சோறுண்ண விட்டான்.

பதார்த்தம் பக்குவத்துலே ஒண்ணையொண்ணு மிஞ்சுது, நாக்குலே மணம்தான் தக்குது; அது நிக்கல்லே, அப்படிக் கரையுது. அது தான் கரையுதோ அல்ல அதை ஆக்கின சுகத்தைக் காட்டிலும் அவங்க அதை வெக்கற அன்பிலே என் மனம் தான் கரைஞ்சு போவுதோ?

இவ்வளவு என்னால் தாங்கமுடியாதப்பா. கைகளுவ எழுந்திருக்கும் வரைக்கும் இருப்பேனோ உருகி ஓடிப் போவேனோ?

ஏன்னு கேட்டால்:

ஆண்டிக் கலயத்தில் வேண்டாப் பொருள் தானே பிச்சையா விளுது!

ஊசிப்போன ரசம்.

காடிப் பழையது.

அடிப் பிடிச்ச சுடயது.

கொளந்தைங்களோ பெரியவங்களோ அசிங்கமா கொந்திக் கிளறின எச்சில் பண்டம்.

“இந்தா, பண்டாரம் எங்கே பிச்சுட்டு ஓடறே?
இந்தா தோசைப் புள்ளல் சரியாப் பிடி.
இந்தா இப்பவே சொல்லிட்டேன்.
இந்தப் பக்கம் இன்னும் எட்டு நாளைக்குத் தலை காட்டக் கூடாது -”

ஏழைங்களைக் காட்டிலும் இருக்கப்பட்டவங்களுக்குக் கரிசனம் கூட; நல்லது எப்பவும் தங்களுக்கு. அதிகத்தை வித்து லாபம் பண்ணிடுவாங்க, கெட்டுப்போனதைப் பிச்சையிட்டு புண்ணியம் பண்ணிடறாங்க. இருக்கப்பட்டவங்கிட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லே.

“ஏன் சாமியாரே, பாதிப்பசி அடங்கிச்சா? இப்ப சொல்லுங்க உங்களுக்கு விரதம், ஏதாச்சும் உண்டா?”

இவர் என்ன கேக்கறாரு? மனுசன் வாயைத் திறந் தாலே என்ன புறப்படுதோன்னு அச்சமாயிருக்குதே!

சோத்து சமயம் மவுனம் பளக்கமா? நேரம் வாய்க்கும் கைக்கும் தான்; பேசி வீணாக்க இல்லேன்னு எண்ணமா?”

தம்பி முகம் நிழல் தட்டினமாதிரி மாறிட்டுது.

“என்னண்ணா இது? விருந்தாளி இலையிலே சோத்தை வெச்சிட்டு கிண்டல்? இது தருமமில்லே அடுக்காது -”

“சரிதாண்டா நிறுத்து! நீ பெரிய தருமராசா! தெரி யுமே! நாயம் சொல்ல வந்துட்டான். இதுதாண்டா சமயம் இலையில் குந்தினதிலிருந்து எளுந்திருக்கும் வரை சாப்பிட றவன் மாட்டிக்கிட்ட ஆள் தானே! சாமியாரே இதைக் கேளுங்க. என் அப்பன் எனக்குப் புத்தி சொல்ற நேரம் சாப்பாடு நேரம் தான். ‘என்னடா பெரிய பையா எங்கே போனே? ஏன் போனே; அங்கே ஏன் நின்னே, இங்கே ஏன் குந்தினே? கிளக்கே நின்னியா மேற்கே திரும்பினியா. கண்ணாலமாகி ரெண்டு குட்டிக்கு தகப்பனா பொறுப்பா யிருக் கையா?’ வாயிலே வெச்ச சோறு தாக்குத் தாண்டாமலே விஷம் – அடசட் சோறா இது? ஒருநாள் கையை உதறிக் கிட்டு எளுந்தேன். அப்புறம் எட்டு நாளைக்கு நான் பட்ட பாடு அடேயப்பா!”

“அவர் என்னடா! சொல்லு பொறுக்கமாட்டார்; சொந்த வீட்டிலே இருக்கிறதாவா எண்ணம்? மாமனார் வூட்டுலே மருமவப்பிள்ளை விருந்துக்கு வந்திருக்கார் அல்ல? அப்பன் கிட்டப் பேச்சு கேட்கலாமா?”

சின்னவர் முகம் குருத்தா சுருங்குது. மூணா மனுசன் பிச்சைக்காரன் கிட்ட, வீட்டு மானத்தை கொட்டியாவது கண் ஜாடை காட்டறாரு; கையை ஏதோ ஆட்டறாரு; அண்ணன் கடகடன்னு சிரிக்கறாரு.

“அட நிறுத்தப்பா நாட்டியத்தை! ஆடமாட்டியா? அப்பனுக்கு நீ செல்லம். சின்னதிலிருந்தே சீக்குன்னு உனக்கு நல்ல சாக்காச்சு. அப்பன் தன் கையாலேயே தைலத்தை உன் தலையிலே வெக்கறதும் ஆத்தா உன் முதுகு தேக்கற தும் – ஹூ — ! கலத்திலே உன் கைவழிய நெய்யைக் கண்டு கண்டே – நெய்யைக் கண்டாலே எனக்கு ‘உவ்வே’ ஆயுட்டுது. நானும் கண்டூட்டேன், ஒரு ஆள் தலைநிமிர்ந்து நடந்தாலே வயதிலே பெரிய தலை சொன்ன துக்கெல்லாம் * ஆமாம்’ தலையாட்டாமல் எப்பாச்சனுேம் ‘ஏன்’ னு கேட் டாலே வீட்டிலேயே அவன் ஆவாதவன் தான் -”

இதெல்லாம் எனக்கென்னத்துக்கு?இதெல்லாம் எனக்கா ?

சின்னவர் தலை பூட்டுவிட்டுட்டுது.

‘சாமியாரே உங்களையும் சாட்சி வெச்சுத்தான் பேச றேன். உங்க முகஜாடை எனக்கென்னவோ பளசெல்லாம் நினைப்பு உடைப் பெடுத்துக்கிட்டுது. அப்பன் திண்ணையி லிருந்தா நான் புழக்கடை ; அவர் அங்கே வந்தால், நான் புங்க மரத்தடி புள்ளையாரண்டை. ஆனால் ஒண்ணு. அப்பனும் நானும் எலியும் பூனையுமா – அவர் இருக்கற சமயம் வளையிலிருந்து தலையை நீட்டறது; இல்லாத சமயம் அவர் தலையை உருட்டறது – இப்படி வளைய வந்தோமே, இந்தப் பகைக்கு திடமான காரணம் கேட்டா எனக்குத் தெரியாது. பெரியவங்க தங்கள் மரியாதையைக் காப்பாத்தற முறையோ என்னவோ? பெத்தமவனிடம் பரிவா ரெண்டு வார்த்தை பேசிட்டா தங்கள் சிகரம் இறங்கிடுமோன்னு பயம்!

“பெண்டுங்க என்ன வேடிக்கை பார்க்கறீங்க?” சின்னவர் எரிஞ்சு விழறாரு.

“கலத்தைப்பார்த்து வெக்கறதில்லியா? மாட்டுக்கு வெக்கவா ஆக்கியிருக்கிங்க?”

பொரியலும் சாம்பாரும் இலையிலே பரிவா சாயுது. போதும் போதும், அதிகம் அதிகம்! இலை மேலே அணைச்ச கைமேலே பதார்த்தம் விளுது. இந்த வீட்டுப் பெண்டுக பேசாமடந்தைங்க, அவங்க கைதான் அவங்க வாய்.

“எங்க வீட்டுப் பெரியவர் தன்மை இதல்ல. இன்னிக்கு இவர் நெஞ்சிலே ரத்தம் வடியுது. பேச்சில் கொட்டுது . சமயம் சாப்பாட்டு வேளையாப் போச்சு. மன்னிச்சிடுங்க. மன்னிச்சிடுங்க.”

இப்படி அவங்க கையில் சிப்பலின் உதறல். ஆப்பையின் நடுக்கம் எனக்கு சொல்லுது; கெஞ்சி கேக்குது. அண்ணி புறங்கையில் ஒரு பச்சைத் தேள் கொடுக்கைத் தூக்கிட்டு நிக்குது.

மேலே மலையா கருக்கல் திரளுது ; கண்டு மிரண்டு நிலவு கலங்கி நிக்குது.

“அப்பனுக்குத்தான் பிள்ளை விஷம்; ஆனால் பிள்ளை மகன் மிட்டாய்க்கடைப் பொட்டலம் ; இதென்ன புதிருங்க? பாட்டனும் பிள்ளையும் இழையறது பாக்கணுமே ! சீழோடு சீழாட்டம்னு கேலி பண்ணுவேன். ஒருகணம் பிரியமாட் டாங்க. சதையா ஒட்டிக்கிட்டிருப்பாங்க, தாத்தாவைப் பேரன் ‘அப்பா’ன்னு அழைப்பான். அவர் இவனை ‘இரணியன் வவுத்திலே பிரகலாதன்’ என்பாரு. இவன் எச்சிலை அவர் உண்றதும் அவர் எச்சிலுக்கு இவன் குருவி யாட்டம் – ஜெவ ஜெவ’ன்னு வாயைத் திறந்துட்டு இவன் வாயிலே அவர் ஊட்டறதும் – சீ! என் மவன் தான் ஆனால் எச்சில் எனக்குப் பளக்கமில்லையப்பா!’ இவன் என் கிட்ட ஒட்டல்லே. இவன் தான் பாட்டன் தலைமேலே குந்திட் டிருக்கானே? அவனை நான் அண்ணாந்து பாத்திட்டிருக் கேனே!”

ஆனால் என் மவன் அண்ணாந்து பார்க்கத் தகுதியான ஆள் தான். இப்போ வாயடைச்சுப் போச்சு ; மனம் நம்ப மறுக்குது ; மனம் சமானமாவல்லே. இப்படியா என் மவன் இருந்தான்! ஏத்தச்சாலை சாச்சாப்போல் குளுகுளு கிளுகிளுன்னு எப்படிக் குரல்! என்ன வாக்கு! ஒருநாள் ஐயாவும் பேரனும் குலாவிட்டிருக்காங்க; கேட்டுக்கிட்டே வந்துட்டேன்.

“ஏம்பா, பிறந்தால் செத்துப் போறாங்களே -”

“எவண்டா சொன்னது? சாவைப்பத்தி இப்பவே உனக் கென்ன?”

“அட என்னப்பா நீ ஒண்ணு! இல்லாத்தையா சொல் றேன்! எதிர் வூட்டு ஆயா முந்தாநேத்து இறந்துடலே! தூக்கிட்டுப் போறப்போ என்ன தான் என் மூஞ்சியை நீ மறைச்சாலும் எனக்குத் தெரியாதா? இன்னிக்குக்கூட இந்த வழிதானே ஏணையிலே ஒண்ணு எடுத்துட்டுப் போனாங் களே! சின்னதோ பெரிசோ பிறந்தூட்டாத்தானே சாவ றாங்க? முன்னாலே ஏன் பிறக்கணும்?”

பையனை அப்படியே வாரிக்கிட்டாரு. நான் மூக்கிலே விரலை வெச்சேன். அஞ்சு வயசுப்பேச்சா இது? என் பையன் அஷங்க அம்ஷம்!”

நிழலடிக்குது, முகம் தெரியல்லே, தண்ணி மேலே ஊதினாப்போல குரல் நடுங்குது; அது தெரியுது.

பையன் சாப்பிடறான். என் மடியில ஒருகை. அதிலே அவனுக்கென்ன தைரியமோ தெரியல்லே.

கருக்கல்லே நிலவு புதைஞ்சுட்டுது.

“- இப்படி என் மவனோடு இருந்துட்டு என் அப்பன் என் மவனை விட்டுட்டு ஓடிட்டான்ய்யா!”

தன்னை பட்டையுரிச்ச மாதிரி திடீர்னு அலறல்! எனக்குப் பூமி கிடுகிடுத்துப் போச்சு. கருக்கல்லே விரிச லாட்டம் மின்னல் கிளைபிரிஞ்சு ஓடுது. வானத்தின் கொசு வாட்டம் தூறல் ஒண்ணு ரெண்டு உதிருது.

இந்த மனுசன் நெஞ்சில் இருள் ; ரொம்ப இருள்; ரொம்ப பெரிசு; ரொம்ப பளசு. நெஞ்சின் இளசை நெஞ்சின் இருளில் மறைச்சு தன்னை மறக்கத்தானே மறைஞ்சுட் டான். நிழலாட்டம் முகம் தெரியல்லே. ஆனால் அவன் நெருப்பு என்னைத் தொட்டு உடல் பூரா சுட்டெரிக்குது . மூச்சு ஓடிவந்த மாதிரி இரைக்குது.

“ஒருநாள் உன் மாதிரித்தான் ஒரு பண்டாரம் – உன் மாதிரியில்லே, காவிகட்டி மொட்டைசாமி – ஒரு நாள் வந்து ராத்தங்கி மறுநான் காலை போனது தெரியாது. அப்பவே இது வீடில்லை ; ஆண்டி மடம் ; சோத்து சத்ரம். ஆனால் வந்த சாமி என்ன கெஞ்சியும் பருக்கை தொடல்லே . பேசக் கூட இல்லே. கைகால் களுவிவந்ததும் நெற்றியிலே கையை ஓட்டி ஜாடை காட்டி விபூதி கேட்டான். திருநீறு பல்லாவை அப்பன் கொண்டு வந்து நீட்டினாரு. அதைப் பிடுங்கிக்கிட்டு சோறாட்டம் அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கிட்டான் பாரு , நாங்க அசந்துட்டோம். சிரிச்சுட்டே நீறை அள்ளி அசப்பிலே அப்பன் முகத்திலே பூ’ன்னு ஊதினான். அப்பன் இருமி கண்ணைக் கசக்கி முளிச்சுப் பார்த்தாரு. அப்போ லிருந்தே அப்பனுக்கு பழைய பார்வை போயிட்டுது. நான் சொல்றது கண் போவல்லே; கண் மாறிட்டுது. பார்வை வேறாயிட்டுது. ஆள் சுயத்திலே இல்லை. சரியா இரை யெடுக்கல்லே. கண்ணுக்குக் கண் பேரன் மேலே கூட கவனமில்லே .

“ஏம்பா , நான் இங்கே இருக்கேனே நீ எங்கே பார்க்க றேன்னு?” ஆத்திரத்திலே பையன் ஐயா கையைக்கூடக் கடிச்சுட்டான். உதிரம் கொட்டுது ஐயாவுக்குத் தெரியல்லே. என்ன சொல்றது?

“சாமி வந்து போன மூணாம் நாள் காலை குருவிங்க கீச்மூச்சுன்னு வம்படிக்கிற வேளைக்கு , ஐயா கால்வாய்க் கரைக்குப் போனாரு. கூடவே, பையன் பாட்டன் கையிலே ஆறாம் விரலாத் தொங்கிட்டே போனதைப் பார்த்தேன்.

போனாங்க போனாங்க வெய்யில் மஞ்சள் மாறிப் போச்சு; போனவங்க வல்லே, கால்வாய் தாண்டி கழனிக் கட்டிலே ஏத்தக்கேணி கட்டடம் கரைஞ்சு வருது நினைப்பு வந்துட்டுது! வவுறு குபீர்

கால்வாய்த் தண்ணி காலில் கல்லைக் கட்டி இழுக்குது. கரை தாண்டி வரப்பிலே விழுந்தடிச்சு ஓடினேன். வானம் வாயைத் திறந்து கிட்டு பூமியைக் கவ்வுது. நடுவுலே மாட்டிக் கிட்டு கிணத்தோரம் பையன் கரைமேட்டில் தனியா குந்திருக்கான். என் வவுறு துண்டாச்சு. எட்டிப் பார்த்தேன் அப்பா மிதக்கல்லே . எனக்குத் தெரியும் மிதக்க மாட்டாரு. நீச்சல்லே சூரன். மூணு தென்னை மரம் ஆழம் முழுகி, போட்ட ஊசியை ஒரே மூச்சிலே எடுத்து வருவார்; எனக்குத் தெரியும்.

“அப்பா எங்கே?” தோளைப் புடிச்சுக் குலுக்கினேன். பையன் தன் நினைப்பில்லே; தூக்கிக்கிட்டேன். எப்பவுமே நெட்டி. இப்போ கோழிரக்கையாட்டம் கைக்குத் தூக்கினதே தெரியல்லே. என்னவோ அவன் சத்து அத்தினி’ யும் அவன் கிட்டேருந்து போயிட்ட மாதிரி; பேயறைஞ் சுட்ட மாதிரி .

“அப்பா எங்கே?”

வாய் சிமிழாட்டம் திறந்து மூடுது; ஆனால் அதில் பேச்சு ஓடிப்போச்சு.

“ஐயா எங்கே?”

வெள்ளை முழியிலே பாப்பா தெறிக்குது. ஆனால் கண் ணிலே குறிப்பில்லே. ஒன்பதேகால் அரக்கோணம் ‘பெஸல்’ பாத்திகிட்ட திரியாட்டம் சுரர்’னு ஏரிக்கரை மேலே சீறி வருது பார்க்கப் பார்க்கப் பையனுக்கு அலுக்காது. ஆனால் இப்போ முகத்தில் அடையாளமே இல்லே.

ஆளை அப்பன் தன்னோடு தூக்கிட்டுப் போயிட்டான், உசிர் மட்டும் இருக்கேன்னு பெத்த வவுறைப் புரளிப் பண்ணுது. கார்த்திக்குக் கார்த்தி சரியா வருசம் ரெண்டாச்சு. இப்படியே தான் இருக்கான். இதிலிருந்து என் மவனே உனக்கு விடுதலையில்லையா? என் கண்ணு கடைசி வரை இப்படித்தானா?”

களுத்து தொங்கிட்டுது; தோள் குலுங்குது . சின்னவர் கலத்திலிருந்து எளுந்து வந்து இடது கையாலே அண்ணனை அணைச்சுகிட்டாரு. நான் திருடனாட்டம் இலையிலிருந்து எளுந்துட்டேன். கூடவே பையனும். அவனுக்கும் கைகளுவி முகம் துடைச்சு கால் துடைச்சு நான் திண்ணையில் வந்து குந்திட்டேன்.

ஆண் அழுதா பெண்டுங்க அளுவற மாதிரியில்லே. ஒரு ஆண் வாய் விட்டு அழும்படி ஒரு கஸ்டம் இருந்தால் அது உலகத்துக்கே நல்லதில்லே . ஆண்டவனே அழுதா பூமிக்குத் திக்கேது? இங்கே ஏன் வந்தேன்? இது தாங்க, இன்னும் பத்து நாள் பட்டினி தாங்கலாம். இந்தப் பிச்சைப் பிழைப் பிலே பட்டினி பழக்கமில்லாப் பழக்கமா?

அள்ளிச் சொருவின கொண்டையாட்டம் கருக்கல் திரண்டு தன் உள்ளுக்கே உளையுது. அதிலே திருகு பில்லை யாட்டம் நிலவு சின்னதா பதியுது.

உள்ளே பையன் குரல் கேக்குது . விக்கி விக்கி அழுவ றான். அண்ணி அண்ணன் தம்பி எல்லாம் சேர்ந்து கிசுகிசுன்னு பேசுறாங்க.

“உஷ்- உஷ்”

“ஊஹும்”

“நான் மாட்டேன்.”

எங்கிருந்தோ வந்தேன் – 175

“சே, சே.”

“வேணாம்.”

“பூ…?”

பையனைத் தூக்கிட்டு சிரிச்சுட்டே சின்னவர் வெளியில் வந்தார்.

“சாமியாரே, பையனுக்கு உங்ககிட்டே படுக்கணுமாம். புள்ளே பிடிப்பான்னு அண்ணி பயப்படுது. என்ன சொல்றீங்க?”

பதிலுக்கு நேரமில்லே. பையன் என்னண்டை தாவிட்டான்.

என்னிடம் வந்தாலும் அவன் வெகு நேரம் தூங்கல்லே. என் களுத்தைக் கட்டி நெறிக்கறதும் முகத்தோடு முகம் வெக்கறதும் என் கையை இளுத்து இளுத்துத் தன் மார் மேலே வெச்சிக்கிறது மா, பாம்பின் சுருள் பதுங்கலில் பாஞ்சு கடிச்சுட்ட ஏதோ பழம் நினைப்பில் தவியாத் தவிக்கிறான். தான் நினைச்சது நானில்லே தனக்குத் தெரியுது. ஆனால் நினைச்சது கிடைச்ச மாதிரி நினைச்சுப் பாத்துக்கறான். அப்படியே தேடித்தேடி ஓஞ்சு கண்ணசந்துட்டான். பாலன் களை முகத்தில் களைப்புப் பார்த்து நெஞ்சடைக்குது. இவனால் தானே இந்த வீட்டில் எனக்கு இவ்வளவு கவனம்! அவன் காலை எடுத்துக் கண்ணில் ஒத்திக்கிறேன். என்னை வெள்ளம் அடிச்சுட்டுப் போவுது . என் நினைப்பு ஒரு நொடி என்னண்டையில்லே. இல்லாமலே போயிட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்!

ஆனால் காலை யாரோ என்னிடமிருந்து பிடுங்கறாங்க திடுக்குனு முழிச்சுக்கிட்டேன், அவள் தாய், மவனை என்னிட மிருந்து வாரிக்கிட்டாங்க . பையன் தூக்கத்தில் அப்பா’ன்னு முனகினான். அவங்க உள்ளே போறப்போ அவங்க புடவைத் தலைப்பு என் முகத்தில் பட்டுது. எனக்குக் கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டை வரை உடம்பு ‘ஜிவ்’ விட்டுப் போச்சு; அம்மன் சன்னதிலே கற்பூர ஆரத்தி கண்டாப் போல் . மேலே நட்சத்திரம் பூக்கொட்டுது. அவசரமா தான் போற போக்கில் ஏதோ விசை என்னைத் தொட்டுட்டுப் போவுது. எள்னையும் நட்சத்திரமாக்கி எங்கோ மிதந்து போறேன்.

மரங்கொத்தி டொக்டொக்.

காடையும் மைனாவும் குருவியும் விடிஞ்சு போச்சுன்னு உரக்க ஓதுது. ஆனால் யாருக்கு விடிஞ்சுது? கால், தான் போனவழி என்னைக் கொண்டு போவுது. இனி இங்கே எனக்கென்ன வேலை?

கால்வாயிலே தண்ணி காலில் கல்லைக்கட்டி இளுக்குது. கால்வாய் தாண்டி கழனிக் கட்டிலே அம்மாடி — என்ன பனி! உள்ளே பூந்துட்டேன். என் கை எனக்குத் தெரியல்லே. காலடியில் பூமி தெரியல்லே. உலகத்தின் ஆவியெல்லாம் மந்தையா இங்கேதான் மடக்கிப் போட்டாப் போல பனி புழுங்குது. ஆண்டவனின் பட்டறை இங்கேதான். ஒரு ஒரு ஆவியா அதன தன் பிறப்பிலே அவன் புடிச்சுப்போடற இடம் இதுதான்.

“இந்தா – உன் ஆயி அப்பன் யாருன்னு தெரியாமே. உன்னை எவள் பெத்துப் போட்டாளோ அந்த இடத்தி லிருந்து உன்னை எடுத்து வளர்த்தது யாருன்னு தெரியாமே வளந்து. ஆயுசுக்கும் பிச்சை எடுத்தே. இதுவும் ஒரு புளைப்பா புளைச்சுகிட்டு இப்படியே புழுத்துப் போ’ன்னு ஒரு பிறப்பு.

“எல்லாமிருந்தும் எவனோ வந்தான், வந்து அருள் தந்தான். அந்த மருளில் கைப்பொருளை விட்டுட்டுக் காணாததைத் தேடிப்போய், நீ போனவிடம் உனக்கே தெரியாமே போயிட்டிரு” ன்னு இன்னொரு பிறப்பு.

“கடவுளே! இப்படியெல்லாம் உன் மக்களை ஏன் சோதிக்கறே?’ ன்னு கேட்டால் ஆண்டவன் ஊமைன்னு அவனுக்காப் பேசறவங்க படிச்சவங்க பானை வவுத்திலே சந்தனத்தைப் பூசிக்கிட்டு திண்ணையில் ஏடு படிச்சு விளக்கம் சொல்லி வக்காலத்து:

“உன் கஸ்டம் உன் வினை என் இஸ்டம். எல்லாம் நான் பிறப்பிச்சுது. என் பங்கு , என் விளையாட்டு, நண்டுக் குத் திண்டாட்டம் நரிக்குக் கொண்டாட்டம்தான் நியாயம். இந்த உண்மையை நீ உணர்ந்து, உன் எலும்பு உன்க ஸ்டத் துக்குக் கெட்டிப்படும் வரை நீ திண்டாடிக்கிட்டேயிருக்க வேண்டியது தான்! அன்னன்னிக்கு அன்னன்னிப் பொழுதா தினம் ஒரு புளைப்பாய், இது பிறப்பா, இல்லை இறப் பான்னு என் பாவம் என் மலைப்பு. என்னை இப்போ மலையா பனிமூடுது . திகில் பிடிச்சு நின்ன இடத்திலேயே ‘திக்’னு நின்னுட்டேன் –

– அப்போ அவுத்து விட்ட கன்னுக்குட்டியாட்டம் ஓடி வந்து ஒரு தலை என் மடியில் முட்டிச்சு. நான் மூழ்கிப் போவாமே பையனை கெட்டியா கட்டிக்கிட்டேன். பனி கலைஞ்சுது. அவன் முகம் தான் என் சூரியன். பின்னால் அவன் அப்பன் வாயடைச்சு கண் கலங்கி நிக்கிறான்.

எட்டடி எட்ட திடுதிடுன்னு திடீர்னு பூமி கிடுகிடுக்குது. பனி கலைஞ்சு ஏத்தக் கேணி உள் சரிஞ்சு தண்ணி நுரை கக்கிட்டு மேல் எழும்புது. ஆனால் உள் சரிஞ்சு இப்போ பொங்கி வழியுது கேணியா?

நானா?

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *