ஊரும் ஒருத்தியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,669 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.

இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.

ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். நாகரிகம் பயின்றவள் என்ற நினைப்பு.

அவள் கல்யாணமாகி வந்த ஊர் சின்ன கிராமம். கடை வீதி கிடையாது. ஒரே ஒரு கடைதான் இருந்தது. இஷ்டப்பட்டபோது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தின்ன ஆசைப்பட்டால், அதற்கு உதவும்படியாக ஒரு மிட்டாய் கடை உண்டா? ருசி ருசியா வடை, காப்பி என்று சாப்பிட ஒரு ஒட்டல் இருக்குதா? சினிமா தியேட்டர் இல்லை. இதுவும் ஒரு ஊரா?

ரஞ்சிதம் எப்பவும், எல்லோரிடமும் இப்படி குறை கூறிக் கொண்டிருப்பாள்.

அவளுக்கு கணவன் வீட்டாரையும் பிடிக்கவில்லை. என்ன சனங்க நாகரிகம் தெரியாதவங்க! இவ்விதம் மனசில் சொல்லிக் கொள்வாள்.

கணவன் குப்புசாமியைக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை தான். பேரைப் பாருங்க! குப்புசாமியாம். அழகான பேரு எத்தனை இருக்கு. அதிலே ஒண்ணு இதுக்குக் கிடைக்காமல் போச்சுதே. ஆளும் அழகு வழியுது ஒவ்வொருத்தர் என்னென் னமா இருக்காங்க! சினிமாவிலே வருகிற கதாநாயகனுக மாதிரி. அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது லெட்சணமா இருக்கப்படாது? என் தலையெழுத்து எனக் கென்று இப்படி வந்து வாச்சிருக்குதே என அவள் அலுத்துக் கொள்வாள்.

குப்புசாமி நன்றாக உழைக்கக் கூடியவன். பக்கத்துச் சிறு நகரிலிருந்த மில் ஒன்றில் வேலை பார்த்தான். காலையில் ஆறு மணிக்கே சைக்கிளில் போக வேண்டும். சாயங்காலம் திரும்பி வருவான். வந்ததும் தோட்ட வேலை அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு பொழுது போக்குவான்.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குப் பிடிக்கவில்லை. இது என்ன வேலை டவுனில் ஒரு ஜவுளிக் கடையில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறிவிடலாம். நல்லா டீசன்ட்டா வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நாகரிகமா இருக்கலாம். பொழுதுபோக்காக சினிமாக்கள் பார்க்கலாம் என்று அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். புருசனிடமும் சொன்னாள். பிறத்தியாரிடமும் புலம்பினாள்.

அவள் பேச்சை அவன் சட்டை செய்யத் தயாராக இல்லை. இது பெரும் மனக்குறையாக இருந்தது அவளுக்கு.

ரஞ்சிதத்துக்கு தான் ரொம்ப அழகானவள் என்ற பெருமை. அவள் பிரமாத அழகி இல்லை. ஆனாலும் இருக்கிற அழகு அம்சங்களை அலங்காரமாக, எடுப்பாகக் காட்டி, வசீகரமாக விளங்கக் கூடிய திறமையில் அவள் தேர்ந்திருந்தாள். தான் ரொம்பவும் புத்திசாலி என்ற கர்வமும் அவளுக்கு இருந்தது.

“எங்க வீட்டுக்கு எதிர்வீட்டிலே ஒரு ஸார்வாள் இருந்தாக. ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு சினிமாவிலே உனக்கு சான்சு கிடைக்கும்; நீ சீக்கிரமே ஸ்டாரு ஆகிவிட முடியும்னு அடிக்கடி சொல்லுவாக, நீ மட்டும் எட்டாவதோடு படிப்பை நிறுத்தாமல், மேல் கொண்டு படிச்சிருந்தால், உனக்கு இருக்கிற அறிவுக்கு, உனக்கு நல்ல வேலை எத்தனையோ கிடைக்கும். டீச்சராக வரலாம். அல்லது வேறு ஆபீஸ்களிலே வேலை தேடிக் கொள்ளலாம் என்பாக, ஊம்ம் என் விதி, நான் இந்தப் பாடாவதிப் பட்டிக்காட்டு ஊரிலே வந்து, இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்திருக்கு”

இதுவும் ரஞ்சிதத்தின் புலப்பம் தான். தனிமொழியாகத் தன்னுள் “பலநூறு தடவை” புலம்பியிருப்பாள் இதை. அவ்வப் போது உரத்த சிந்தனையாகவும் இது வெளிப்பட்டு விடும்.

குப்புசாமி சிடுசிடுப்பான். “உனக்கு இங்கே என்ன குறைச்சல்? இந்த ஊருக்கு என்ன குறை? அமைதி நிறைந்த அழகான ஊரு. வசதியான வீடு. டவுனிலே நெருக்கடியும் கும்பலும் பரபரப்பும் தான் மிகுதி” என்பான்.

அவன் மனப்போக்கு அவளுக்குப் பிடித்த்தாக இருக்க வில்லை. பேன்ட் மற்றும் ஸ்டைலான ஷர்ட் அணிந்து, விலை உயர்ந்த ஷூ மாட்டிக் கொண்டு, பவுடரும் ஸெண்டும் பூசி, ஜம்மென்று இருக்க வேண்டும் தன் கணவன் என்று அவள் ஆசைப்பட்டாள். அவை அவனுக்கு உவப்பான விஷயங்களாக இல்லையே.

ரஞ்சிதம் அவ்வாறு அலைகிற ஸ்டைல் ஆசாமிகளை விழி அகலப் பார்த்தாள்.
டவுனிலிருந்து அப்படி யாராவது வந்தால், அவர்களோடு பேச்சுக் கொடுத்து, சினிமாக்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.

éரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு நீ இருக்க வேண்டிய இடம் சினிமா உலகம்தான். உனக்கு சுலபமா சான்சு கிடைக்கும், நான் அதுக்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஒருத்தரு சொன்னாரு. ஆள் ஜோரா இருப்பாரு. எங்க வீட்டுக்கு மூன்றாவது வீட்டிலே இருந்த வக்கீலுக்கு உறவு. பட்டணத்திலேயிருந்து வந்து பத்து நாள் தங்கியிருந்தாரு பட்டணத்தைப் பத்தியும், சினிமா படம் பிடிக்கிறவங்க, அதிலே நடிக்கிறவங்க பத்தியும் நிறைய நிறையச் சொன்னாரு. சிரிச்சு சிரிச்சுப் பேசுவாரு. ரொம்ப நல்லவரு. அடுத்த முறை வாரபோது, என்னையும் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போயி சினிமாவிலே நடிக்கதுக்கு சான்சு வாங்கித்தாறேன்னு கூடச் சொன்னாரு, தெரியுமா!”

ரஞ்சிதம் ஒருத்தியிடம் ரகசியமாகவும் பெருமையாகவும் இதை சொன்னாள். அவள் பொறாமைப்படுவாள் என்று இவள் நினைத்தாள்.

ஆனால் அந்த அவளோ, இவளை ஒரு தினுசாகப் பார்த்தாள். “இது ஒரு மாதிரிதான் போலிருக்கு. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே கண்டபடி அலைஞ்ச கழுதை” என முடிவுகட்டிப் போட்டாள். “நம்ம குப்பையா அண்ணனுக்கு போயும் போயும் இப்படி ஒரு சின்னச் சவமா பெண்டாட்டியா வந்து வாய்க்கணும்?” என்று உளம் புழுங்கினாள். ரஞ்சிதம் நடத்தை மோசம் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ரகசியமாகச் சொல்லி வைத்தாள்.

எந்த ஊரையும் ஊர்காரர்களையும் ரஞ்சிதம் மட்டமாகக் கருதினாளோ, அவர்கள் அவளை மட்டமாக எடைபோட்டு, முத்திரை குத்தி, உன் பவிஷூ இவ்வளவுதான் என்று ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும், அவளைப்பற்றி மனம் போன போக்கில் பேசி மகிழத் தயங்கவில்லை.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குத் தெரியாது. இதுவும் ஒரு ஊரா? இங்குள்ள சனங்களும் ஒரு சனமா? தரித்திரங்கள். நாகரிகம் தெரியாத முண்டங்கள் என அவள் கரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் போக்கு புருஷன்காரனுக்கு வெறுப்பு தர ஆரம்பித்தது.

“நான் நினைச்சிருந்தால் நல்ல சினிமா ஸ்டாரு ஆகியிருப் பேன், தெரியுமா? என்னை சினிமாவிலே சேர்த்து விடறதாக்கூட ஒருவர் முன்வந்தாரு. அதுக்குள்ளாரே எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க” என்று அவனிடமே அவள் ஒரு சமயம் கூறினாள்.

“யாருடீ அவன்?” என்று உறுமினான் குப்புசாமி.

அவள் சொன்னாள். அவள் பேரில் அவனுக்கு சந்தேகம் தான் ஏற்பட்டது. அவளை உறுத்துப் பார்த்தான்.

“எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்கிறேளோ? எனக்கா தெரியாது? நான் ஸ்கூல்லே படிச்சப்போ, ஆண்டு விழா நாடகங்களிலே நடிச்சிருக்கேன், தெரியுமா?” என்று உற்சாகமாகவும் பெருமையோடும் பேசினாள் அவள்.

அவள் எதிர்பாராதது நடந்தது. அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.

“எனக்கும் எங்க குடும்பத்துக்கும் கேவலம் உண்டு பண்ணனும்னே நீ வந்திருக்கே! சினிமாவாம், நடிப்பாம்! எவனோ சேர்த்து விடுறேன்னு சொன்னானாம். சாக்கிரதையா இருந்துக்கோ. தப்புத் தவறா நடந்தே உன்னை கொலை பண்ணிப் போடுவேன். எலியைக் கொல்லுற மாதிரி உன்னை ஒழிச்சுக் கட்டிருவேன்” என்று கறுவினான் கணவன்.

அவன் பார்த்த பார்வையும், அவன் நின்ற நிலையும், அப்போது அவனுடைய கைகள் – கை விரல்கள் – முன் நீண்டு துடித்த துடிப்பும், அவன் அப்படிச் செய்யக் கூடியவன்தான் என்ற நினைப்பை, அச்சத்தை, அவளுள் விதைத்தன. அவன் மீது அவளுக்கு உள்ளூற பயம் ஏற்பட்டது. அவனிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தது.

ரஞ்சிதத்துக்கு அந்த ஊரும், வீடும், சுற்றமும் சூழலும் பிடிக்காத விஷயங்களாக மட்டுமில்லாது, தன்னை ஒடுக்கி அடக்கித் தனது சந்தோஷங்களை சிதைத்து, தன்னுடைய வாழ்வையே பாழடிக்கிற பாழ் நிலமாய், படுகுழியாய், பயங்கர நரகமாய் தோற்றம் கொண்டன.

தூரத்து டவுனும், நாகரிகமும், உல்லாசப் பிரியர்களும், அவற்றுக்கும் அப்பால் தொலைதூர நாகரிகப் பெருநகரமும், சினமா உலகமும் குளுகுளு பசுமைகளாய் புன்னகைத்தன. கண் சிமிட்டின. அவளுக்கு ஆசை காட்டின.

அவள் இயல்பான சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல், கனவு இன்பங்களுக்காக ஏங்கி, நாட்களை ஒட்டலானாள்.

பிறந்த வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவள் அம்மா வந்து ரஞ்சிதத்தைக் கூட்டிப் போனாள். பின்னர் வருவதாகக் குப்புசாமி சொல்லி அனுப்பினான்.

உழைப்பில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவன் சொன்னபடி போக முடியவில்லை.

அப்புறம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாகி விட்டது.

ரஞ்சிதம் நாகரிக மன்மதன் ஒருவனுடன், அவன் பேச்சையும் சிரிப்பையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி, வீட்டை விட்டுப் போய்விட்டாள். இந்தச் செய்தி குப்புசாமிக்கும் அவன் ஊருக்கும் தெரிந்தது. பரபரப்பான பேச்சுக்கும் ஏச்சுக்கும் தூண்டுதல் ஆயிற்று, சிறிது காலத்துக்கு.

ரஞ்சிதம் சினிமாவில் சேரத்தான் போயிருப்பாள்; அப்படி ஆசை காட்டித்தான் நாகரிகம் மைனர் அவளை கூட்டிக் கொண்டு போயிருப்பான் என்று குப்புசாமியும், அந்த ஊர்க்காரர்களும் நம்பினார்கள்.

அதுதான் நிஜமும்கூட.

நிஜமான சந்தோஷங்களை அனுபவிக்க மனம் இல்லாத, பகட்டி மினுக்கிய நிழல் இனிமைகளையே நாடி அலைந்த ரஞ்சிதம் என்ன ஆனாள் – அல்லது ஆவாள் – என்று அந்த ஊர் கவலைப்படவில்லை.

தன்னை விரும்பி நேசிக்க மனமில்லாது வெறுத்த அவளை தன்னவளாக அந்த ஊர் ஏற்றுக் கொண்டதில்லைதான்.

– சலங்கை

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *