உறவுகள் இப்படித் தானா? – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 3,352 
 
 

அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து கோபால் பேசவில்லை என்பதில் அம்மா ரெஜிக்கு ரொம்ப வருத்தம்.

அப்பா அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தார். “கோபால் என்னாச்சு. ஏன் திரும்பத் திரும்ப கேட்டாலும் பேசாமலிருக்கே?” என்றார்.

“என்ன சொல்றது, அதுதான் எல்லாத்தையும் காலி பண்ணிட்டியள.” எரிந்து விழுந்தான் கோபால்.

உள்ளே இருந்து வந்த அம்மா “எதை காலி பண்ணிட்டோம். நம்ம இந்தக் கிராமத்திலே பொறந்து இந்த மண்ணில் மானத்தோட வாழ்ந்தவங்க. ஏதோ க்ரீன் கார்டு வாங்கிட்டேங்கிறதுக்காக…. எங்கள அங்க வந்து அமெரிக்காவிலே தங்கச் சொல்றியா” கத்தினாள் அம்மா ரெஜி.

“அம்மா யோசித்துப் பேசுங்க. ஒரு ஏக்கர் தோப்பையும் வயலையும் வச்சிக்கிட்டு…அதுக்கு இன்னும் செலவழிக்கிறதுக்கு நான் அங்கிருந்து டாலர் அனுப்பணும், சும்மா இன்னும் பழைய காலத்திலேயே உட்கார்ந்திருக்காதீங்க.” வீம்புக்கு கத்தினான் கோபால்.

“ஆமாண்டா, உன்னப் பெத்து ஸ்கூலுக்கும் காலேஜிக்கும் படிக்கவச்சது இந்த தோப்பும் இந்த வயலுந்தான்… இந்த வயலும் தோப்பும் சோறு என்ன போட்டுச்சி. மழை பொய்ச்சிப்போச்சு. விவசாயத்துல செலவு அதிகமாயிருச்சி…” அழஆரம்பித்தாள்.

“அப்பா அம்மாவை அழாண்டாண்ணு சொல்லுங்க. ஒண்ணே ஒண்ணு சொல்லுகிறேன். அப்பா காலத்துலே இப்படி அமெரிக்கா வய்ப்பு வந்து அங்கே தனி கம்பெனி ஆரம்பிச்சு பெரிய வருமானம் வந்திருந்தா உங்களை இங்கே விட்டுட்டா போயிருப்பாங்க?

“அம்மா காலம் மாறிப் போச்சு. யாராவது ஒரு வயதானவர் முதியோர் இல்லத்திலேயா உங்கள நான் இருக்கச் சொல்றேன்.”

“எனக்கு வருமானம் பெருசா வருது. எங்கூடத்தானே தங்கச் சொல்றேன். எம் பொண்டாட்டி கீதா எப்போ மாமா மாமியைக் கூட்டுண்டு வரப் போறீங்கண்ணு அங்கே இருந்து கத்துறா…”

“அம்மா நான் உங்கள தனியா விட்டுட்டு… நீங்களும் அப்பாவும் இங்க தனியா.. இது தேவையா…. “ என்று அம்மாவின் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

மறுநாள் தோப்பும் வயலும் ஒருவரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டைப் பூட்டிவிட்டு எல்லோரும் விமானநிலையத்திற்கு கிளம்ப அம்மா ரெஜி திரும்பத்திரும்ப தன் ஊரையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *