கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 7,763 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-19

அத்தியாயம்-15

எண்ணியபடியே வாழ்க்கைத் துணைவி
எனக்குக் கிடைத்திட்டாள் – முன்னோர்
புண்ணியம் போலும் பொருத்த மான
பூவை கிடைத்திட்டாள்!
-இமயபாரதி “நட்சத்திரங்கள்”

அடுத்த சனிக்கிழமை உஷா வந்து சேர்த்தவுடன் ராஜீவ் எங்கோ வெளியே செல்வதற்கு ஆயத்தமாக இருப்பதைக் கண்டாள்.

“வந்துட்டியா உஷா? கம் ஆன் கிளம்பு. சீக்கிரம்!”

“எங்கே போறோம்?”

“ஸஸ்பென்ஸ்! இன்னும் கொஞ்சம் நேரத்திலே உனக்கே தெரியும், கம் ஆன்”

“பட்…”

“நோ பட், நோ ஆர்க்யுமென்ட்ஸ்! சமர்த்தா சொன்னபடி கேளு, வா.”

சென்னை நகர எல்லையைக் கடந்து, பெங்களூர் போகும் வழியில் இருந்தது அந்தத் தோட்டம். மிகவும் அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.

தோட்டத்தைச் சுற்றி அவளுக்குக் காண்பித்தான். மாமரங்கள் தென்னை மரங்கள், ஒரு புறம், இன்னொரு புறம், அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்டிருந்த ரோஜா செடிகள். விசேஷமான ரோஜா வகைகள் அங்கே காணப்பட்டன. ஒரு பெரிய வெள்ளை ரோஜாவைப் பறித்து, ராஜீவ் அதனை உஷாவுக்கு அளித்தான்.

“ஃபார் மை லிட்டில் ப்ரின்செஸ்”

“நீங்களே இதைச் சூட்டிவிடுங்க”.

அவள் திரும்பி நிற்க, அவனே அந்த மலரை அவளுடைய கூந்தலில் சூடினான். “இந்தத் தோட்டம் சுமார் எட்டு ஏக்கரா இருக்கும் உஷா. முந்தி இங்கே அடிக்கடி வருவேன். இப்போ சமீபமா கொஞ்ச நாளா வரலை. இனிமே உன்னோட அடிக்கடி இங்கே வரணும்னு நினைக்கிறேன்.”

“ரொம்ப அழகான, அமைதியான இடமா இருக்கு, ராஜீவ்.”

“உம். இதுக்கெல்லாம் இனிமே நீதானே எஜமானி! எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா? அதான் முதல்லே இங்கே அழைச்சுக்கிட்டு வந்தேன், கல்யாணத்துக்கு அப்புறம் மீதி எல்லாத்தையும் காட்டறேன்.”

“மீதி எல்லாத்தையும்னா?”

“என் சொத்துக்கள் எவ்லாத்துக்குமே இனிமே நீ எஜமானி ஆகப் போறியே! இன்னும் எத்தனை இருக்கு பார்க்கிறதுக்கு! கெமிக்கல் பிளான்ட், கேன்னிங் ஃபாக்டரி – உன்னை அங்கே அழைச்சுக்கிட்டுப் போய் என் ஓர்க்கர்ஸ் எல்லாருக்கும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாமா? அப்புறம் புறம் ஊட்டியிலே டீ எஸ்டேட், ஊட்டி பங்களா, – அதையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா? அதுக்கப்புறம். ஐ வாண்ட் டேக் யூ ஆன் எ வொர்ல்ட் டூர், உலகம் பூராவையும் உனக்குக் காட்டப்போறேன்!”

உஷா சிரித்தாள். “அப்பப்பா! எத்தனை ப்ளான்ஸ் போட்டு வைச்சிருக்கீங்க! என் கூடவே இங்கே அங்கேன்னு உலகம் பூராவும் சுத்திக்கிட்டிருந்தா உங்க ஆக்டிங் ப்ரொஃபெஷன் என்ன ஆகும்?”

“ஒண்ணும் ஆகாது. இனிமே நான் நடித்திற படங்களின் எண்ணிக்கையை ரொம்பக் குறைச்சுக்கப் போறேன், இத்தனை வருஷமா ஓயாமே வேலை செஞ்சது போதும்.இனிமே உன்னோட இருக்கிறதுக்கு நிறைய நேரத்தை ஒதுக்கப் போறேன். வாண்ட்டு ஸ்பெண்ட் ஆல் மாய் டைம் வித் யூ!”

“எப்பவும் என் கூடவே இருந்தா உங்களுக்குச் சலிப்புத் தட்டிப் போகாதா ராஜீவ்?”

”சலிப்பா? நெவர். உன்னோட இருக்க இருக்க, -ஆசை அதிகமாகுமே ஒழிய குறைய மாட்டேங்குதே உஷா.”

“நிஜமா?”

“சத்தியமா”

அந்த நாள் முடிந்து ஹாஸ்டல் திரும்பிய போது, தன் வாழ்க்கையிலேயே அவ்வளவு மகிழ்ச்சிகரமான நாள் வேறு இருந்ததில்லை என நினைத்தாள்.

துரிதமாக நாட்கள் பறந்தன. கல்லூரித் தேர்வுகளுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

அன்று புதன் கிழமை. உஷா தனது ஹாஸ்டல் அறையில் புத்தகங்கரைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அடுத்த புதன் கிழமை முதல் தேர்வுகள் தொடங்கலிருந்தன.

அடுக்காகச் சில புத்தகங்களைக் கையில் வாரிக்கொண்ட பொழுது, ஒரு புத்தகம் தவறிக் கீழே விழுந்தது. உஷா குனித்து அதனை எடுத்தாள். அது அவளுடைய பர்ஸனல் டைரி. அதைப் புரட்டிப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டிருந்தன.

திறந்து விழுந்த டைரியைக் கையில் எடுத்தபோது, ஒரு பக்கத்தின் மீது உஷாவின் பார்வை பட்டது. அதில் அவள் குறித்து வைத்திருந்த சில விவரங்களைப் படித்தாள்.

உஷாவின் நெற்றி சுருங்கியது. “இதில் ஏதோ தவறு இருக்கிறதே? என்ன அது? இதில் என்னவோ சரியாக இல்லையே? எதையோ மறந்து விட்டேனே? எதை மறந்து விட்டேன்….”


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, உஷாவுக்கு மாதவிடாய் சம்பந்தமாகச் சிறு கோளாறு ஏற்பட்டிருந்தது. சரியான தேதிக்கு ஆகாமல் கொஞ்சம் முன்னும் பின்னுமாக வரும். இதற்காக டாக்டரிடம் சில காலம் சிகிச்சையும் பெற்றாள். அப்பொழுது முதல் மாதவிடாய் தேதிகளை குறித்து வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது.

உஷாவின் பார்வை பட்ட அந்தப் பக்கத்தில் கடைசியாக அவள் குறித்து வைத்திருந்த தேதி மார்ச் 5. இன்று என்ன தேதி? மே ஒன்று. மை காட்! கடைசியாக எப்போது அவளுக்கு மன்த்லி பீரியட் ஏற்பட்டது? மார்ச் ஐந்துக்குப் பிறகு ஆகவே இல்லையே! ராஜீவின் நினைவு மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளவே, இதை அடியோடு மறந்து விட்டிருந்தாள்.

ஆண்டவனே! இதற்கு என்ன அர்த்தம்? அதுதானா? ஒரே நிமிஷத்தில் உஷாவின் உடல் வெட வெடவென்று நடுங்கத் தொடங்கிற்று. ஜுரம் பிடித்த மாதிரி உடம்பெல்லாம் பற்றி எரிவது போலத் தோன்றிற்று என்ன செய்வது? ஏதாவது செய்தாக வேண்டுமே! யாரைப் போய் உதவி கேட்பது?

வேறு யாரை? ராஜீவைத்தான், வேறு யார் இருக்கிறார்கள் இப்போது எனக்கு? ஆனால் சனிக்கிழமை வரையில் அவரைப் பார்க்க முடியாதே! உடனே அவருக்கு ஃபோன் செய்ய வேண்டும்! சனிக்கிழமை வரைக்கும் காத்திருக்க முடியாது!

வேகமாகப் படிகளில் இறங்கிக் கீழே இருந்த டெலிபோன் பூத்திடம் சென்றாள். சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் செலுத்தினாள், சுற்றுப்புறத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

மெலிதான ஒரு நபர் மட்டுமே நிற்கக் கூடிய அளவில் இருந்த சிறிய டெலிபோன் பூத்துக்குள் நுழைந்து, பத்திரமாகக் கதவைச் சாத்தினாள். இந்த பூத் சவுண்ட் புரூஃப் என்று பெயர். ஆனால் அதைக்குறித்து அவளுக்குச் சந்தேகமே.

அவசரமாக ராஜீலின் பிரைவேட் டெலிபோன் நம்பரைச் சுழற்றினள், கடவுளே! அவர் வீட்டில் இருக்க வேண்டுமே! எங்காவது வெளியே சென்றிருந்தால்?

ஆறு முறை போன் மணி ஒலித்த பிறகு ராஜீவ் ரிஸீவரை எடுத்தான்.

“ஹலோ”

கடவுளே! தேங்க் யூ! அவசரமாக ஐம்பது பைசா நாணயத்தை ஸ்லாட்டுக்குள் தள்ளினாள்.

“ஹலோ? ராஜீவ்?”

“உஷா!” ராஜீயின் குரவில் ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்திருந்தன.

“திஸ் இஸ் எ ப்ளேஸண்ட் சர்பிரைஸ்! இப்ப உன் போனை நான் எதிர்பார்க்கலை!”

”ராஜீவ், என்னமோ நடந்து போச்சு!”

அவள் சூரலில் வெளிப்பட்ட பதற்றத்தைக் கேட்டவுடன் ராஜீவினுடைய உடல் முழுதுமே விறைத்துப் போயிற்று. உடனே அவன் வேறு விதமாக அவள் சொன்னதைப் புரிந்து கொண்டான்.

”நம்ம விஷயம் காலேஜ்லே தெரிஞ்சு போச்சா? யாராவது உன்னை அதட்டி மிரட்டினங்களா? இத பாரு, நீ எதுக்கும் பயப்படாதே. நான் இப்பவே.அங்கே வறேன்! நீ என்னுடைய ஃபீயான்ஸி, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உங்க ப்ரின்ஸிபால் கிட்டயே சொல்லிடறேன்! இப்பவே உன்னை அங்கேர்ந்து அழைச்சுட்டுப் போயிடறேன்! நீ யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை, நான் இருக்கும்போது உன்னை யார் என்ன பண்ணிவிட முடியும்னு நானும் பார்த்துடறேன்!”

அவன் வார்த்தைகளில் வெளிப்பட்ட அவள்பால் அவனுக்கிருந்த அன்பும் அக்கறையும், அவளுடைய வயிற்றில் பாலை வார்த்தாற்போல் இருந்தது. பதற்றம் நீங்கிச் சற்று தெம்பு திரும்பவே, லேசாகச் சிரித்தாள். “நோ, நோ டார்விங், அப்படி யெல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ம விஷயம் இன்னும் இங்கே யாருக்கும் தெரியல்லை.”

“அப்புறம் வேறே என்ன சமாசாரம்?”

“ராஜீவ்… எனக்கு… இப்பத்தான் ஞாபகம் வந்தது. போன மாசம் மன்த்லி பிரியடே வரலை. மறந்தே போயிட்டேன். அது முணு வாரங்களுக்கு முன்னாலேயே வந்திருக்கணும்… ராஜீவ்! எனக்குப் பயமா இருக்கு!”

அவள் குரலில் வெளிப்பட்ட பயத்தைப் புரித்துகொண்டு உடனே அவளைச் சமாதானப்படுத்தி, தைரியமூட்டி ஆறுதல் கூற முற்பட்டான். “டார்லிங்! டோன்ட் வர்ரி சனிக்கிழமை நீ வரும்போது இங்கே ஒரு லேடி டாக்டரை வரவழைச்சு உன்னைப் பார்க்கச் சொல்றேன். உஷா, நீ நினைக்கிற மாதிரி ஏதாவது ஆகியிருந்தாலும் அதனலே என்ன? உடனே நம்ம கல்யாணத்தை முடிச்சுட்டாப் போச்சு.”

ஆறுதல் அடைந்த வகையில் உஷா தீர்க்கமாக சுவாசித்தாள், மனத்திலிருந்து பயமும் பதற்றமும் நீங்கவே, விறைப்பாக இருந்த அவளது உடல் தளர்ந்து போவதை உணர்ந்தாள். மனத்திலிருந்த பெரியசுமையை இறக்கி வைத்த மாதிரி தோன்றியது.

“உங்க கூடப் பேசினதிலேயே, மனசுக்கு எவ்வளவோ ஆறுதலா, இருக்கு, ராஜீவ், சில நிமிஷங்களுக்கு முன்னாலே எவ்வளவு பயந்து போயிருந்தேன் தெரியுமா?”

“நான் இருக்கும்போது நீ எதுக்கும்மா பயப்படணும்? நான் இருக்கிற வரைக்கும் உன்னை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது! எதுவாயிருந்தாலும் உடனே என்னை கூப்பிடு.”

“தேங்கியூ டார்லிங்,”

“உஷா, சனிக்கிழமை வரைக்கும் காத்திருக்கலாம்னா சொல்லு. இல்லே, நீ விரும்பினா, இப்பவே வந்து அங்கேர்ந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போக நான் தயார். இப்பவே வேணும்னா ஸ்ரீரங்கம் போய் உங்க அம்மாவைப் பார்த்து…”

”பளீஸ், ராஜீவ்! வேண்டாம். சனிக்கிழமை அன்னிக்கு டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுடலாமே. அதுக்குள்ளே அவசரப்படுவானேன்?”

“உன் இஷ்டம். நீ எப்படி விரும்பறயோ அப்படியே செய்யலாம். சீயர் அப், ஸ்வீட் ஹார்ட்! ஒண்ணும் ஆயிடல்லை.”

‘‘ஐ‘ம் ஆல்ரைட் நௌ ராஜீவ், உங்க குரலைக் கேட்டதும் எல்லாம் சரியாப் போச்சு. எதற்காக இப்படிப் பதறிப்போயிட்டேன்னு இப்ப எனக்கே புரியலை.”

”ஓ.கே. டோன்ட் வர்ரி. சனிக்கிழமை நீ வரும்போது டாக்டர் இங்கே ரெடியா இருப்பாங்க.”

“தேங்க் யூ டார்லிங், பை!”

“பை, உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்க.”

“சரி”

“குட் நைட் வவ்.”

“குட் நைட்.”


ராஜீவினுடைய இல்லத்தில் டாக்டர் மதுரம் காத்திருந்தார். அவர் சுரேஷுக்கு உறவு. அதுவுமில்லாமல், சாதாரணமாகவே அதிகம் பேசாத இயல்புடையவர். அவர் மூலமாக எந்தச் செய்தியும் வெளியில் பரவி விடும் என்ற பயத்துக்கே இடம் அளிக்காதவர்.

டாக்டர் மதுரம் உஷாவைப் பரிசோதித்தார். “ப்ரெக்நன்ஸி மாதிரிதான் தெரியுது. எதுக்கும் ஸ்பெசிமனை லேபுக்குக் கொண்டு போய் க்ரேவின்டெக்ஸ் டெஸ்ட் பண்ணிப் பார்த்துடறேன். ஒரு மணி நேரத்துக்குள்ளே ரிஸல்ட்டை டெலிபோன்லே சொல்லிடறேன்.”

டாக்டர் கூறியதைப் புரிந்துகொண்ட உஷா அவர் கேட்ட ஸ்பெசிமனைச் சேகரித்து பாட்டிலை மூடிக் காகிதத்தில் சுற்றிக் கொடுத்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் மதுரம் போன் செய்து ராஜீவுடன் பேசினார். “ஐ ஸீ தேங்க் யூ வெரி மச் டாக்டர்.” ராஜீவ் ரிஸீவரைக் கீழே வைத்தான்.

“டாக்டர் என்ன சொன்னாங்க?” ஸ்ஸ்பென்ஸ் தாளாமல் ஆவலுடன் கேட்டாள் உஷா. விரிந்த புன்னகையோடு ராஜீவ் அவள் பக்கம் திரும்பினான். அவளை இறுகத் தழுவினான். அவள் தலையைத் தனது தோளின் மேல் சாய்த்துக் கொண்டான்.

“ராஜீவ்…நான்..?”

“யெஸ் மை லவ். நான் அப்பா ஆகப் போறேன். யூ ஆர் கோயிங் ஹேவ் மை பேபி! இஸன்ட் இட் வண்டர்ஃபுல்?”

அவள் கண் இரப்பைகளிலுள்ள அடர்த்தியான மயிரின் திரைக்குப் பின்னிருந்து. சந்தேகத்துடன் அவன் முகத்தை எட்டிப் பார்த்தாள். “என்னவோ… ஐ’ம் கன்ஃபியூஸ்ட், ராஜீவ்… நிஜமாகவே இதைப் பத்தி உங்களுக்குச் சந்தோஷமா?” தயங்கியவாறு உஷா கேட்டாள்.

“சந்தோஷமாவா? விட்டா இப்ப டான்ஸே ஆடுவேன்! உஷா, நீ என் மனைவி மட்டுமில்லை. என் குழந்தைக்குத் தாயாகப் போறே! ஓ காட்! என்னாலே நம்பவே முடியலை! ஐ திங்க் இட்ஸ் சிம்ப்லி ஃபென்டாஸ்டிக்!” கரடித் தழுவலில் அவரை அணைத்துக் கொண்டான். அவளுடைய எலும்புக் கூடே நொறுங்கிவிடும்போல இருந்தது.

“ராஜீவ், ஐ’ம் ஸோ ரிலீவ்ட்…. என்னவோ இவ்வளவு சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கறதை நீங்க விரும்ப மாட்டீங்கன்னு நினைச்சேன்.”

“உஷா”அந்த ஒரு சொல்லாலேயே அவளைச் செல்லமாகக் கண்டித்தான், “நீ இன்னும் என்னை முழுமையா புரிஞ்சுக்கலை, பிறக்கப் போற குழந்தை, என்னுடைய, உன்னுடைய ஒரு அம்சம்! அதை எப்படி என்னாலே விரும்பாம இருக்க முடியும்! உஷா, கல்யாணம், குழந்தை – இதெல்லாம் இனி என் வாழ்க்கையிலேயே கிடையாதுன்னு எண்ணியிருந்த எனக்கு, முதல்லே நீ கிடைச்சதும், இப்ப இந்தச் செய்தியும்- ஓ! ஐ ஜஸ்ட் கான்ட் எக்ஸ்பிளேயின் ஹவ் ஐ ஃபீல்!”

“குழந்தை வேணும்னு அவ்வளவு ஆசையா உங்களுக்கு?”

“ஆசையா! அதை எப்படிச் சொல்வேன்! அதுக்கு இந்த ஜென்மத்திலே பிராப்தம் இல்லேன்னு ஆசையை அடக்கிக்கிட்டு இத்தனை நாளா மனசைக் கல்லாக்கிக்கிட்டேன், பட் காட் இஸ் கிரேட்! எதிர்பாராத தருணத்திலே, உன்னை அனுப்பி வெச்சான், உன்னோட ஒரு புது வாழ்க்கையே அமைச்சுக் கொடுத்துட்டான்! உஷா, ஐ லவ் யூ!”

”ஐ லவ் யூ டூ!”

“தென் கம் -ஆன்! இந்த விஷயம் தெரிஞ்சதுக்கப்புறமும் காத்திருக்கிறதுலே அர்த்தமில்லே, புறப்படு, ஒரேயடியா ஸ்ரீரங்கத்துக்குப் போய், உங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி, கல்யாணத்தைச் சட்டுப்புட்டுனு முடிச்சிடலாம்!”

அவன் சொன்னது சரியென்றுதான் அவளுக்கும் இப்போது தோன்றியது. முன்பு அவள் என்ன நினைத்திருந்தாலும், தான் கருத்தரித்திருக்கும் விஷயம் தெரிந்ததும் இனித் தாமதிப்பது நல்லதல்ல என்று அவளும் கருதினாள். “சரி. அப்படியே செய்யலாம். ஆனா…புதன் கிழமை பரீட்சைகள்…”

“பரீட்சைகள்! பிளடி ஹெல்! இப்பக் கூடப் பரீட்சைகள் தானா முக்கியம்?”

“சரி, நீங்க சொல்றபடியே ஊருக்குப் போகலாம்.”

இன்டர்காம் ஒலித்தது, கடுப்புடன் ராஜீவ் ரிஸீவரை எடுத்தான், “என்ன சுரேஷ்? டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லி வைச்சிருந்தேனே?”

“ஸாரி ஸார், ரொம்ப முக்கியமான தகவல்….”

“என்ன?”

“நந்தகோபால் இறந்து போயிட்டார் சார்”

“வாட் டைரக்டர் நந்தகோபாலா? எப்போ?”

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே நர்சிங் ஹோமிலே காலமாயிட்டார் ஸார். இனிமேத்தான் பாடியை வீட்டுக்கு எடுத்துக் கிட்டு வரப் போறாங்க.”

“ஓ காட்! சுரேஷ், சீக்கிரம் ஒரு பெரிய மலர் வளையத்தை வாங்கிட்டு வா. நீ திரும்பி வந்ததும் பஸ்ஸர் கொடு, உடனே அவர் வீட்டுக்குப் போகணும். நீயும் கூட வரணும்.”

“சரி ஸார்.”

ராஜீவ் பெரிய அதிர்ச்சி யுற்றவனாகக் காணப்பட்டான். சோர்ந்து உட்கார்ந்து கண்களைக் கையால் மூடிக் கொண்டான்.

“என்ன விஷயம் ராஜீவ்?” பதற்றத்துடன் கேட்டாள் உஷா. சிறிது நேரம் ராஜீவால் பேசமுடியவில்லை. பிறகு, தலைதிமிர்ந்து உஷாவைப் பார்த்தபோது, அவன் கண்கள் கலங்கி யிருந்ததைக் கவனித்தாள்.

”ராஜீவ்! என்ன நடந்தது?”

“என்னை இன்டஸ்ட்ரீக்கு முதல் முதலா அறிமுகப்படுத்தியவர் – இத்தனை வருஷங்களா எனக்குத் தகப்பனார் ஸ்தானம் வகித்தவர் – டைரக்டர் நந்தகோபால், அவர், அவர் செத்துப்போயிட்டாராம் உஷா!”

உணர்ச்சி வசப்பட்டு அவன் தொண்டை அடைத்துப் போகவே, மேலும் கொஞ்ச நேரம் அவனால் பேச முடியவில்லை.

”ஐ’ம் ஸோ ஸாரி ராஜீவ்.”

சிறிது நேரம் கழித்து, இறந்துபோன நந்தகோபாலைப் பற்றி அவளிடம் பேச ஆரம்பித்தான். மறுபடியும் இன்டர்காம் பஸ்ஸர் ஒலித்தது. ராஜீவ் அதனை எடுத்தான்.

”ஸார், வளையம் ரெடி. காரும் ரெடி.”

”பாடியை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டாங்களா?”

”ஆமாம் ஸார். இப்பத்தான் போன் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“சரி, நான் வந்துக்கிட்டே இருக்கேன்.”

உஷாவிடம் திரும்பினான், ”உஷா, நான் போய் அவருக்கு இறுதி மரியாதை செலுத்திட்டு வந்துடறேன், நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்ததும் ஊருக்குப் புறப்படறதைப் பற்றி முடிவு பண்ணலாம்.”

ராஜீவ் திரும்புவதற்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று. மிகவும் சஞ்சலம் உற்றவனாய்க் காணப்பட்டான்.

”உஷா, இன்னிக்கு ஊருக்குக் கிளம்ப முடியாது போலிருக்கு. அவருடைய மகன் டெல்லியிலே இருக்காராம். நாளைக்குத் தான் வந்து சேருவாராம். அதுக்கப்புறம் தான் இறுதிச் சடங்குகளைச் செய்வாங்க. இங்கே அவருக்கு வேற யாருமில்லை. எல்லா ஏற்பாடுகளையும் நான்தான் மேற்பார்வை இடணும். அது என் கடமை. சினிமா ஃபீல்டுக்கு என்னை அறிமுகப்படுத்தி வச்சு இவ்வளவு தூரத்துக்கு என்னை வளர்த்து விட்டவர் நந்தகோபால். அவருக்காகக் கடைசியா இதை நான் செய்தே ஆகணும். தகனம் முடியறவரைக்கும் நான் இருந்தே ஆகனும். அப்படிப் பார்த்தா நாளைக்குக் கூட நாம் ஸ்ரீரங்கத்துக்குக் கிளம்ப முடியுமோ இல்லையோ தெரியலையே. எல்லாம் அவர் மகன் வத்து சேர்வதைப் பொறுத்து இருக்கு. மார்னிங் ஃப்ளைட்லே வந்துட்டார்னாப் பரவாயில்லை. மத்தியானத்துக்குள்ளே எல்லாம் முடிஞ்சுடும். மார்னிங் ஃபிளைட்லே டிக்கட் கிடைக்கலைன்னா நைட் ப்ளைட்லேதான் வருவார். அப்படீன்னா அவர் வந்து சேர்றதுக்கே ராத்திரி பதினொரு மணி ஆயிடலாம். என்ன செய்யறதுன்னே எனக்குப் புரியலை உஷா!”

சிறிது நேரம் நிலவிய மெளனத்தை உஷா கலைத்தாள், “நான் ஒண்ணு சொல்றேன். கோவிச்சுக்க மாட்டீங்களே?” என்றாள்.

அத்தியாயம் 16

தாய் வீடு போய் விட்டாய் — மானே
தனிவீ டெனைப்படுத் தும்பாடு காணாய்!
நாய்வீடு, நரிவீடு நீ இலாவீடு
நடுவீடு பிணம்எரிக்கும் சுடுகாடு!
எனக்கும் உனக்கும் இடையிலே சிறிதே
இடுக்கிருந் தாலும் துன்பம் பெரிதே.
-பாரதி தாசன்

“என்ன சொல்லு” என்றான் ராஜீவ்.

”எப்படியும் நினைச்சபடி, ஊருக்குக் கிளம்ப முடியாமப் போயிடுச்சு. இப்பத்தான் உங்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு. நந்தகோபாலின் மறைவினாலே நீங்க எவ்வளவு அப்ஸெட் ஆகியிருக்கிங்கன்னு உங்க முகமே தெளிவாக் காட்டுது…”

”என்ன சொல்ல நினைக்கிறே உஷா?”

“ராஜிவ்… கல்யாணம் என்கிறது ஒரு சந்தோஷமான சமாசாரம். அதுக்காகப் புறப்பட்டுக்கிட்டு இருந்த நேரத்திலே, இப்படியொரு துக்ககரமான செய்தி வந்து உங்க மனசையே கலங்க வைச்சிடிச்சு”

“நீ சொல்றது உண்மை உஷா, பட், ஐ வில் கெட் ஓவர் இட்.”

“ராஜீவ்!” மிகவும் மென்மையாக உஷா அவனைப் பார்த்தாள். “இத்தனை நாட்கள் உங்களோடு பழகியிருக்கேன். உங்க மனசை அவ்வளவுகூட என்னாலே புரிஞ்சுக்க முடியாதா? இந்தத் துக்கத்திலிருந்து மீள உங்களுக்குச் சில நாட்களாவது தேவை…”

“அதனாலே?”

”வேறே ஒண்ணுமில்லே… எப்படியும் புதன் கிழமை பரீட்சைகள் ஆரம்பம், சில நாட்களுக்குள்ளே முடிஞ்சிடும். இப்ப என்ன நடந்து போச்சுன்னு நாம் இப்படி அவசரப்படனும்? இதுக்கு முன்னாலே நாம் பேசிக்கிட்டபடியே, பரீட்சைகள் முடிஞ்சதும் நான் முதல்லே ஊருக்குப் போறேன். அப்புறமா நீங்க வாங்க, அதுக்குள்ளே ஒண்ணும் ஆயிடப் போறதில்லை. நம்ம ஓரிஜினல் ப்ளேன்படியே செய்தால் என்ன?”

ராஜீவ் தீர்க்கமாக யோசித்தான். அவள் கூறியதில் நியாயம் இருப்பதாக அவனுக்கும் தோன்றியது. நந்தகோபாலின் மரணம் உண்மையிலேயே அவனைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இத்தருணத்தில் நினைத்தபடி உடனடியாக ஊருக்குக் கிளம்பவும் முடியாமல் போய்விட்டது.

“நீ சொல்றது சரிதான் உஷா. அப்படியே செய்யலாம்” என்று ஒப்புக்கொண்டான்.

பரீட்சைகள் முடிந்தன, ஊருக்குப் புறப்படு முன் கடைசியாக ஒரு முறை உஷா ராஜீவிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள வந்தாள்.

இறுக்கமாக அவளைத் தழுவிக் கொண்ட அவனுக்கு, தன் அணைப்பிலிருந்து அவளுக்கு விடுதலை வர மனமே இல்லை.

“ராஜீவ், நேரமாச்சு! இப்ப நான் கிளம்பலைன்னா ட்ரெயினை மிஸ் பண்ணிடுவேன்!”

அவனால் அவளை அங்கிருந்து போக அனுமதிக்க முடியவில்லை, இன்னும் நெருக்கமாகத் தன்னோடு அவளை அணைத்துக் கொண்டான். அந்த இரும்புப் பிடியிலிருந்து அவளை ஒரு அங்குலம் விலக விட்டாலும், எங்கே காற்றினில் மறைந்துபோய் விடுவாளோ என்ற பீதி அவன் மனத்துள் புகுந்தாற்போல், அவள் விலா எலும்பு நொறுங்கிப் போகும் வண்ணம் தன் பிடியை இன்னமும் இறுக்கினான். அவள் உதடுகள், கண்கள், கன்னங்களின் மீது மழையாய் முத்தங்களைப் பொழிந்தான். அவள் கழுத்தின் இடுக்கில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

”இன்னும் ஒரு வாரம் உன்னைப் பிரிந்து நான் எப்படி இருக்கப் போகிறேன், ப்ளீஸ்! தனியா போக வேண்டாம்! நானும் கூட வறேன்.”

உஷா அவன் முகத்தைத் தன் கைகளில் இடையே எடுத்துக்கொண்டு, ஒரு தாயைப் போலக் கனிவோடு அவன் கண்களுக்கு ஒவ்வொன்றாக முத்தமிட்டாள்.

“ராஜீவ்… இத்தனை நாட்கள் பொறுமையா இருந்திருக்கீங்க, இன்னும் ஒரு வாரம்தானே? தெரியறதுக்கு முன்னாலே அது பறந்து ஓடிடும். இதெல்லாம் நல்லதுக்குத்தான். அதுக்கப்புறம்… “

“அதுக்கு அப்புறம் – இனி நமக்குள்ளே பிரிவு என்ற வார்த்தைக்கே இடமிருக்காது?”

“என் அட்ரஸ் உங்ககிட்ட இருக்கு இல்லை?”

“இதோ பத்திரமா வச்சிருக்கேன்.”

அவள் தன் விலாசத்தை எழுதியிருந்த காகிதத்தை எடுத்துக் காண்பித்தான்.

“அடுத்த வாரம் கண்டிப்பா வந்துடுவீங்க இல்லை?”

“அவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியாது…”

“என்ன?”

“நாளைக்கே வந்தாலும் வந்துடுவேன்!”

உஷா சிரித்தாள்.

“சிரிக்காதே, நிஜமாத்தான் சொல்றேன். ஒரு வாரம் என்னாலே பொறுத்திருக்க முடியாதுன்னு தோணிச்சின்னா, திடீர்னு புறப்பட்டு வந்திடுவேன்!”

“ராஜீவ்…!”

“ஆமாம்…. நாளைக்கே வந்து உன் வாசற்படியிலே நின்னேன்னா, என்ன செய்வே? என்னை விரட்டி அடிச்சிடுவாயா? முடியுமா உன்னாலே?”

“ராஜீவ்…. ப்ளீஸ்!”

*’ஓ.கே.! ஓ.கே. ஸ்வீட் ஹார்ட்! டேக் இட் ஈஸி! சும்மா டீஸ் பண்ணேன், அவ்வளவுதான். அப்படி யெல்லாம் செய்ய மாட்டேன், பயப்படாதே, இன்னைலேர்ந்து சரியா ஒருவாரம் கழிச்சுத்தான் உன் வாசற் படியிலே வந்து நிற்பேன், போதுமா?”

“ஓ ராஜீவ்!” அடி மரத்தின் மீது கொடி ஒட்டிக் கொள்வதைப்போல் அவனைப் பற்றிக் கொண்டாள். இதுவரை அவர்களை எதிர் நோக்கும் பிரிவின் துயரம் தாங்க முடியாமல் தவித்த அவனுக்குத் தைரியமூட்டும் வார்த்தைகளைப் பேசியவள் அவள்தான். ஆனால் பிரிய வேண்டிய கட்டம் நெருங்க நெருங்க, அந்த நினைப்பையே அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த நினைப்பு உண்டாக்கிய வேதனையை அவள் மனம் தாங்கவில்லை.

சில நிமிஷங்கள் இருவரும் அப்படியே மௌனமாக நின்றார்கள். கடைசியில் ராஜீவ்தான் அந்த அணைப்பிலிருந்து அவளை விளக்கினான். “நீ இப்பப் புறப்படலைன்னா, உண்மையாவே ட்ரெயினைத் தவற விட்டுடுவே…”

“ஆ… ஆ… ஆமாம்… ஆனா ராஜீவ்!”

திடீரென்று உடைந்து போனாள்.

“என்ன இது? கண்ணீரா?”

ஒவ்வொரு கண்ணில் அடியிலும் விழுவதற்கு ஆயத்தமாக ஒரு கண்ணீர்த் துளி வைரத்தைப் போலப் பிரகாசித்தது. அந்த உப்புக்கரிக்கும் முத்துக்களை உதிர விடாமல் முத்தமிட்டுத் தன் உதடுகளால் ஒற்றி எடுத்தான்.

“பைத்தியமே! எதுக்காக அழறே? இன்னும் ஏழே நாட்கள் தானே? அப்புறம் உன் கூடவே இருப்பேன்.”

பனித்த கண்கனோடு புன்னகைத்தாள். ஆமாம் என்பது போல் மெல்ல தலையை அசைத்தாள்.

”ஒருவேளை வீட்டிலே ஏதாவது தகராறு ஏற்பட்டா, உடனே எனக்கு ட்ரங்-கால் போடு, என் நம்பர் குறிச்சு வைச்சிருக்கே இல்லே?”

*தேவையில்லை, அது எப்பவோ, மனப்பாடம் ஆயிடுச்சு. வேற எதை வேணுமானாலும், மறப்பேன். அதை மறக்க முடியாது.”

“என்னைக்கூட மறந்திடுவாயா?”.

“ஓ ராஜீவ்! உங்களை மறக்கணும்னா நான் என்னையே மறந்தாகணும்! அது எப்படி முடியும்?”

அவள் கழுத்தைத் தன் கைகளால் வளைத்துக் கொண்டு பாதுகாப்பாக ஒண்டிக் கொண்டான்.

ராஜீவ் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தான், “டைம்’ஸ் அப், ஸ்வீட் ஹார்ட்”

இறுதியாக ஒரு முறை அவன் உதடுகளோடு தன் உதடுகளை இணைத்தாள். போகத் திரும்பினாள். அறைக் கதவு வரை சென்றாள், சடாரென்று திரும்பி ஓடிவந்து மறுபடியும் அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். ஏதோ கெட்ட நிமித்தத்தின் முன்னெச்சரிக்கை மனத்துள் தோன்றியது போல். ஓர் உணர்வு உண்டாகியது. ஆனால் அதனை அவளால் விவரிக்க முடியவில்லை. புரித்து கொள்ளவும் முடியவில்லை.

அவனை விட்டுப் பிரிந்தால் எங்கே தன் உயிரே பிரிந்து விடுமோ என்கிற மாதிரி அத்தனை நெருக்கமாகப் பற்றிக் கொண்டிருந்த அவளது உடல் இலையைப் போல உதறிக் கொண்டிருப்பதை ராஜீவ் உணர்ந்தான்.

“உஷா! என்னம்மா? என்ன ஆச்சு?”

“ஓ….ஓ… ஒண்ணுமில்லே, நான்… நான்… போயிட்டு வறேன்.”

ஒரு அடி பின்னுக்கு எடுத்து வைத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“பை, மை லவ். உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்க, நம்ம குழந்தையையும் பத்திரமாப் பார்த்துக்க..”

கண்ணீர் பிரவாகமாகப் பெருக்கெடுத்த கண்களோடு இறுதியாக ஒரு முறை அவனைப் பார்த்தாள். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினாள். மீண்டும் ஒரே ஒரு முறை திரும்பிப் பார்த்தாலும் கூட அவளால் அங்கிருந்து நகரவே முடியாது என்பது அவள் உள்ளம் அறிந்த உண்மை.

தளர்ந்த நடையோடு அங்கிருந்து அவள் போவதை ராஜீவ் பார்த்தான். தன் பார்வையிலிருந்து அவள் மறைந்ததும், அவனையும் மீறி, கத்திக் குத்துப் போன்ற ஒரு கூர்மையான வேதனை அவன் நெஞ்சைத் தாக்குவதை உணர்ந்தான்.

“போடா பைத்தியக்காரா! ஏழு நாட்கள் அவ்வளவுதானே? என்னமோ அவளை மறுபடியும் இந்த ஜன்மத்திலே பார்க்கவே போறதில்லைங்கிற மாதிரி ஏண்டா இப்படி வேதனைப் படறே!” கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கூறித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சிரிக்க முயன்றான்.


திருச்சி ரயில்லே ஸ்டேஷனில் தனது ஃபர்ஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்டை விட்டு உஷா இறங்கினாள். அவள் தாயாரின் வயதான டிரைவர் பழனியப்பா அவளை வரவேற்க விரிந்த புன்னைகயோடு நின்று கொண்டிருந்தார். ரயில் ஸ்டேஷனுக்குள் நிதானமாகப் புகும்போதே, ரயில் பெட்டி பின் ஜன்னல் அருகே உஷாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, ரயில் நிற்கும்வரை, பெட்டி கூடவே பிளாட்பாரத்தில் ஓடி வந்திருந்தார் பழனியப்பா.

“வாம்மா குழந்தை!”

“பழனி மாமா! எப்படி இருக்கீங்க?” அன்புடன் விசாரித்தாள் உஷா.

“முருகன் அருளாலே சௌக்கியமா இருக்கேம்மா. நீ எப்படி இருக்கே குழந்தை?”

“எனக்கென்ன ஜோரா இருக்கேன்”

“அதான் பார்த்தாலே தெரியுதே! ரோஜா பூ மாதிரி இருக்கே! வீட்டுக்குப் போனவுடனே திருஷ்டி சுத்திப் போடணும்!”

“போங்க மாமா? அம்மா எப்படி இருக்காங்க?”

”வழக்கம் போலத்தான், நீ.எப்பு வருவேன்னு வழி மேல் வழி வச்சுக் காத்துக்கிட்டு இருக்காங்க… யோவ்! இப்படி வாய்யா!”

ஒரு போர்ட்டருக்குச் சைகை செய்து, அவன் உஷாவின் பெட்டிகளைச் சுமந்து வர. “வாம்மா” என்று பழனியப்பா அவளை வெளியே அழைத்துப் போனார்.

கல்யாணி அம்மாவின் பச்சை நிற அம்பாஸிடர் வண்டி வெளியே நின்றது. பழனியப்பா காரை ஓட்ட, ஸ்ரீரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

காரில் செல்லும்பொழுது, எண்ணற்ற பழைய நினைவுகள் உஷாவின் மனத்தில் நிழலாடின. சிறு வயதில் அவள் திருச்சியின் பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் இதே பழநியப்பாதான் தினமும் காரில் அவளை கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் இறக்கி விடுவார். மாலையில் மறுபடியும் அவளை வீட்டுக்கு அழைத்து வருவார், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வரை, இதே சாலையில் எத்தனை முறை சென்றிருக்கிறாள். அதன் பிறகு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னைக்குப் போய்விட்டாள். ஓராண்டு பி.யூ.சி. இரண்டு ஆண்டுகள் பி.ஏ.

“பி.ஏ. பட்டம் பெற இன்னும் ஓராண்டு மீதம் இருக்கிறது. அதை என்னால் முடிக்க முடியுமா? இப்போதே கர்ப்பிணியாக இருக்கிறேன். ஆனால் இன்னும் வெளியே தெரியவில்லை, போகப் போகத் தெரியுமே? பெரிய வயிற்றைச் சுமந்து கொண்டு எப்படி காலேஜுக்குப் போவது? அதிலும். ராஜீவை நான் திருமணம் செய்துகொண்ட செய்தி வெளியே வந்த பிறகா? எவ்வளவு பப்ளிஸிட்டி! ஊரே, மாநிலமே அமர்க்களப்படுமே!”

“அவர் எப்படிப்பட்ட திருமணவிழாவை விரும்புவார்? தடபுடலாக, ஆயிரக்கணக்கில் விருந்தாளிகளை அழைத்து அப்பாட்ஸ் பரியிலே நடக்குமா? இல்லே எளிமையான கல்யாணத்தை விரும்புவாரா? எதுவாக இருந்தாலும் என்ன? அவருக்கு எப்படி விருப்பமோ, அப்படியே செய்யட்டும்.

“வர்ல்ட் டூர் அழைச்சுக்கிட்டுப் போறதா சொன்னாரே! திருமணம் முடிந்த உடனேயே அழைத்துப் போவாரா? ஸ்விட்சர்லேண்ட், லண்டன், ரோம், பாரிஸ்! இந்த இடங்களை யெல்லாம் உண்மையாகக் காண்ப் போகிறேனா! அதுவும் அவரோடு!

“ஆனால் அதன் பிறகு நிச்சயமாகக் கல்லூரிக்குப் போக முடியாது. மற்றப் பெண்களின் கேள்விகளையும் பார்வைக்ளை சமாளிக்க முடியாது? அதை அவரும் விரும்ப மாட்டார். வீட்டிலேயே படித்து முடிக்கலாம். ப்ரைவேட்டாக இறுதித் தேர்வுகளை எழுதலாம்.

“அதற்குள் குழந்தை பிறந்துவிடுமே? என்ன குழந்தை பிறக்குமோ? ராஜீவைப் போலவே ஒரு பையனா, இல்லை என்னைப் போலவே ஒரு பெண்ணா? ஓ! ராஜீவ் மாதிரியே ஓர் ஆண் குழந்தை பிறந்து விட்டால் – வேறு என்ன வேண்டும்!”

எதிர் காலத்தைப் பற்றிய ஆசைக் கனவுகளில் மூழ்கிப் போயிருந்த உஷா, கார் வீட்டை அடைந்து கேட்டுக்குள் திரும்புவதைக் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை.

வராந்தாப் படிகளின் உச்சியில் அவள் தாயார் கல்யாணி அம்மாள், அவளை வரவேற்கக் காத்திருந்தார். கல்யாணி அம்மாளை கண்டவுடன், உஷா திடீரென்று விழித்துக்கொண்டு யதார்த்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள்.

“எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில் எவ்வளவு தூரம் சென்று விட்டேன்! குழந்தை பிறக்கும்வரையில் அல்லவா போய்விட்டேன்! அதெல்லாம் பின்னால், முதலில் இந்தப் பாலத்தைக் கடந்தாக வேண்டுமே! இந்த இடையூறைத் தாண்டிப் போகவேண்டுமே. இந்த விஷயத்தை எப்படி அம்மாவிடம் உடைக்கப் போகிறேன்? எப்படி ஆரம்பிப்பது?”

மனத்துக்குள் உண்டாகியிருந்த பதற்றத்தை முகத்தில் தெரிய விடாமல், உஷா காரை விட்டு இறங்கினாள்.

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *