உயிர் முடிச்சு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,525 
 
 

காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை.

அவள்…. கணவன், கொழுந்தன், பிள்ளைகள், மாமனாரெல்லாம் கண்ணீரும் கம்பளையுமாய் வீட்டுக்கு வெளியே கூடியிருந்தார்கள்.

உள்ளே…. ஊர்ப் பெண்டுகள் காசி படுக்கையைத் சுற்றி அழுத கண்ணும், சிந்திய மூக்கு, சிந்தையுமாக சூழ்ந்திருந்தார்கள்.

ஊரோடு ஒத்து அங்கு நின்ற எனக்கு மனசுக்குச் சங்கடம், கஷ்டமாக இருந்தது.

காசிக்கு சாக வேண்டிய வயசில்லை. அவள் என்னைவிட ஐந்து வயது குறைவு… முப்பது.!

ஆனாலும் சாவு வந்துவிட்டது. எந்நேரமும் உயிரைப் பறிக்க எமன் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறான். எனக்கு நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கியது.

காசி தாவணி போடாத நாளிலிருந்தே எனக்குப் பழக்கம், பரிச்சயம். அவள் இந்த ஊர் பெண்ணல்ல. தெற்கே ராமநாதபுரம்.

கோடை வந்துவிட்டால் போதும் அந்த வானம் பார்த்த பூமியிலிருந்து பல குடும்பங்கள் தங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு.. குடும்பம், பிள்ளை குட்டிகளுடன் பிழைப்புத் தேடி வடக்கு நோக்கி நகரும். பசுமை கண்ட இடங்களில் ஒதுங்கும். பெரும்பாலானவர்கள் காவிரி ஆற்றுப் படுகைப் பக்கமே ஒதுங்குவார்கள். அதுதான் கோடையிலும் செழிப்பான பூமி. ஆடு, மாடு மேய்ச்சலுக்குச் சரியான பூமி. விவசாயிகள் கோடையில் அறுவடை வயல்களில் மண்ணை வளமாக்க… ஆடு, மாடு… கிடைகள் போடுவார்கள். இது ஒதுங்கும் மக்களுக்கு வருமானம்.

அதனால்…. அவர்கள் நாலைந்து மாதங்கள் தங்கி, தங்கள் காடுகளில் மழை பெய்யும் காலம் நெருங்கும்போது செல்வார்கள். தங்கள் ஊருக்குத் திரும்புவார்கள்.

இவர்கள் எங்காவது ஒரு கிராமத்தில் ஒதுங்குவார்கள். அங்கு பெரிய மிராசு, பண்ணை, பெரிய மனிதர்களை அண்டித் தங்குவார்கள். ஓட்டி வந்த தங்கள் ஆடு, மாடுகளுடன் அந்த ஊர் ஆடு, மாடுகளையும் சேர்த்து.. ஐநூறு, ஆயிறரமாக்கி…. பொழுதுக்கும் மேய்த்து, இரவில் எவர் நிலத்திலாவது அடைத்து கூலிக்குக் கிடை போடுவார்கள். கூலியை.. நெல்லாகவோ, பணமாகவோ பெறுவார்கள். அதுதான் அவர்களுக்கு ஜீவனம், வருமானம்.

பாண்டியக் கோனார்….கரவுசரவாக தொந்தி தொப்பை விழுந்து நல்ல தாட்டீகமான ஆள். அவர் குடும்பத்துடன் எங்கள் கிராமத்தில் ஒதுங்கியபோது காசி சிறு பெண். வயசு பத்து. சோமு, சுந்தரவனம்… இவளைவிடச் சிறுவர்கள்.

அவர்கள் வருடா வருடம் அப்பாவிடம்தான் வருவார்கள். அப்பா கிராமத்தில் பெரிய பண்ணை. ஐந்து வெளி மிராசு.

பாண்டியக்கோனார் முதன் முதலாகா அப்பாவைச் சந்தித்தபோது நானும் அப்பாவும் தெரு திண்ணையில் இருந்தோம்.

பவ்வியமாக எங்கள் முன் வந்து நின்றார்.

” யார் நீங்க…” – அப்பா.

” பாண்டியக்கோனார்ங்க…”

” என்ன வேணும்…? ”

” ராமநாதபுரத்திலிருந்து ஆடு, மாடு ஓட்டிக்கிட்டுப் பிழைப்புத் தேடி குடும்பத்தோடு வந்திருக்கோம். சமைச்சி, சாப்பிட்டுப் படுக்க… இடம் வேணும்…”

” ஆடு, மாடு எங்கே..? ”

”பின்னால என் முத்தப் பையன் மதுரையும்,, அடுத்தவன் ராமுவும், பத்திக்கிட்டு வர்றானுங்க.”

இவரோடு நின்ற காசி சிறு பெண். சிறுவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்கள்.

” இவுங்க உங்க புள்ளைங்களா..?”

” பையனுங்க என் புள்ளைங்க. இவ என் தங்கச்சிப் பெண். சமையலுக்கு அழைச்சி வந்திருக்கேன். ”

” இந்த சிறு பெண்ணா சமைப்பாள்…? ” – அப்பா அவளை வியப்பாய்ப் பார்த்தார்.

” அஞ்சு வயசிலேயே தாய், தந்தையை இழந்துடுச்சி. என் அடைக்கலம். அப்போதிருந்து சமையல்தான், நல்ல சமைப்பாள். ”

” உங்க மனைவி…? ”

” இல்லைங்க. அது செத்து நாலு வருசம் ஆவுது..! ”

அப்பா கொஞ்சம் யோசித்தார்.

” சரி. . பக்கத்துல மாட்டுக் கொட்டகை இருக்கு. அதுல தங்குங்க. கோடைக்காலம் மழை வராது. மாடுகளை வெளியே கட்டிக்கலாம். ”

அப்பா தயவு, தாராளத்தைப் பார்த்து…

” ரொம்ப நன்றிங்க. ” அவர் கையெடுத்துக் கும்பிட்டார்.

காசி, சிறுவர்கள்… தங்கள் தலைகளிருந்த சிறு சுமைகளை இறக்கினார்கள்.

அன்றிலிருந்து வருடா வருடம் அவர்களுக்கு அதுதான் வீடு.

கோனார் குடும்பத்தில் சிறுவர்களிரிருந்து பெரியவர்கள் வரை எல்லோருமே ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தான். கிடை மறித்த நிலங்களில் படுக்கை. அவ்வளவுதான்.

காசி எங்கள் வீட்டுப் பெண், பிள்ளைகளுடன் கூடத்தில் ஓராமாகப் படுத்துக்கொள்வாள்.

காசி பெரிய பானையில் உலை வைத்து , அத்தனைப் பேருக்கும் சமைப்பாள். கருவேல முட்கள்தான் விறகு.

இரவில் ஒருவர், இருவர் கிடையில் காவலிருக்க .. மற்றவர்கள் கும்பலாக வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.

காலையில் எவ்வளவு தூரம், எங்கே கிடை கிடந்தாலும் காசி அவர்களுக்கு… ‘நீசத்தண்ணி ‘ எடுத்து தலையில் சுமந்து செல்வாள். நீசத்தண்ணி என்பது நீராகாரம் ! பழைய சோற்று நீர். வெயிலே வாழ்க்கையாய் உள்ள மக்களுக்கு குளுமைக்கு குளுமை. சத்துக்குச் சத்து.

தொலைவைப் பொறுத்து அவள் திரும்ப பத்து, பதினொன்றாகும்.

வந்து அவளுக்கு நிற்க நேரமிருக்காது. கூலியாய் வந்த வருமான நெல்லை அவித்து, உலர வைப்பாள். அடுப்பிற்கு ஆண்கள் வெட்டி சேகரித்து வைத்திருக்கும் கருவேல முட்களை அடுப்பிற்குத் தகுந்தமாதிரி வெட்டுவாள். அப்புறம் சமைப்பாள்.

எவர் துணையுமில்லாமல் இத்தனை வேலைகளையும் இந்த சிறு பெண் மாங்கு மாங்கென்று செய்வதை ஊரே வேடிக்கைப் பார்க்கும்.

காசி பெரியவளானதும் மூத்தவன் மதுரைக்குக் கட்டி வைப்பதாகக் கோனாருக்கு எண்ணம்.

அதனால்….காசிக்கு அப்போதே ‘ மதுரை ‘ பேர் சொன்னால் முகம் பூக்கும், சிவக்கும். அவள் கருநிற களையான முகத்தில் அழகாக வெட்கம் வரும்.

மதுரை பதினைந்து வயது கட்டிளம் காளை. வாட்டசாட்டமான ஆள். இவளுக்குச் சரியான ஜோடி.

அவன் வருங்கால கணவனென்பதால்…. காசி மதுரையிடம் மட்டுமே மட்டு, மரியாதையாகப் பேசுவாள். அடுத்து கோனார். அடுத்துள்ள மற்ற மூன்று மாமன் மக்களிடம்….’ போ ‘ , ‘ வா ‘ என்று சகஜமாகப் பேசுவாள். பழகுவாள். விளையாடுவாள், சிரிப்பாள். வெண்ணிறப்பற்கள் அவள் சிரிப்பு அழகாய் இருக்கும்.

காசி நான்காவது வருடமாக வந்து தங்குகையில்தான் பூப்பெய்தினாள். அம்மாதான் முதன்முதலாகக் கண்டு..” அடிப்பாவி! ” என்றலறி அவளை இழுத்து உட்கார வைத்து, ஆண்களுக்குச் சேதி அனுப்பினாள். நான்தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாண்டியக்கோனாரைத் தேடி சேதி சொன்னேன். அம்மா ஊர் ஜனங்களுக்குச் சொல்லி மஞ்சத்தண்ணி ஊற்றி சடங்கு செய்தாள். தீட்டுக் கழித்தாள்.

அடுத்த வருடம் ஆடுகளை பற்றிக் கொண்டு மதுரை வரவில்லை. அடுத்துள்ள ராமு, சோமு, சுந்தரவனம் மட்டுமே வந்தார்கள்.

” மதுரை என்னாச்சு ..? ” நான் கேட்டதற்கு கோனார் முகம் விழுந்தது.

” சொல்லுங்க கோனார்…” அப்பா கேட்க….. கண் கலங்கினார்.

அப்பா அவரை வியப்பாய்ப் பார்த்தார்.

” கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய்ட்டான்ய்யா. ரத்தத் திமிரு. எவன்கிட்ட , எங்கே கத்துக்கிட்டப் பழக்கமோ..திருடி… மாட்டிக்கிட்டு சிறைச்சாலையில் கம்பி எண்ணுறான். ஊர்ல தலை நிமிர்ந்து நடக்க முடியல. மானக்கேடு. அவன் என் புள்ளையே இல்லே. தொலைச்சி தலை முழிக்கிட்டேன். ” கலங்கினார்.

” காசி வாழ்க்கை…? ! ” அம்மா அவரைத் திகிலாய்ப் பார்த்தாள்.

” அடுத்தவனுக்குக் கட்டி வச்சிடுறதுன்னு அந்த நிமிசமே முடிவு பண்ணிட்டேன். ” – கண்களைத் துடைத்தார்.

காசி முகம் வாடி இருந்தது.

ராமு இவளைவிட இரண்டு வயது மூத்தவனென்றாலும் மதுரை அளவிற்கு அவன் இவளுக்குப் பொருத்தமான ஜோடி இல்லை. சிறுவயதிலிருந்தே அவன் ஆடு, மாடு மேய்ச்சலென்று அலைந்ததால் நோஞ்சானாக இருப்பான். காசியை விட உயரம் கொஞ்சம் கம்மியாகவும் இருப்பான். சிறு வயதிலேயே பாரம் சுமந்த தாக்கம் முதுகு கொஞ்சம் கூன்.

நேர்மை, ஒழுக்கம், நாணயமாக இருக்கும் கோனாருக்கு மதுரை களங்கம் பெரிய அடி. ஊரிலேயே தலை தூக்க முடியாத அவமானம். கொஞ்சம் உடைந்து போய் இருந்தார்.

இவருக்கே இப்படி என்றால் சிறுவயதிலிருந்தே…அவன்…’ புருசன், புருசன் ! வளர்ந்த காசிக்கு எப்படி இருக்கும்…? ஆகையால் அவளும் முகம் தொங்கி, வாடி இருந்தாள். என்றாலும் வயது அதை அவ்வளவாகக் காட்டிக் கொடுக்கவில்லை.

இரண்டு வருடம் கழித்து ராமுவிற்கும், காசிக்கும் ஊரிலேயே திருமணம் முடித்தார் கோனார். ஊரில் அப்பாவிற்கு மட்டும் பத்திரிக்கை தபாலில் வந்தது. அப்பா சென்று மொய்ப்பணம் ஆயிரம் வைத்து விட்டு வந்தார்.

காசி மூத்தவன் மீது ஆசை வைத்து இளையவனை மணக்க எப்படிச் சம்மதித்தாள்..? – அவள் வயதைத் தாண்டியிருந்த எனக்குச் சந்தேகம் வந்தது. ஆனாலும் வழி இல்லை என்று நினைக்கிறபோது வருத்தமாக இருந்தது.

காசி இந்த முறை வந்தபோது வயிறு கொஞ்சம் மேடிட்டு கர்ப்பமாக இருந்தாள்.

காசியின் வயிற்றைப் பார்த்து எங்கள் ஊரே சந்தோசப்பட்டது.

அடுத்தடுத்து அவள் இரண்டு குழந்தைகளைப் பெற்றதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

அடுத்தடுத்த வருடம் பிரசவமென்பதால் காசி கொஞ்சம் உடைந்து போனாள் . மொத்தக் குடும்பத்தைத் தாங்கும் பார வேலைகளை இடைவிடாமல் செய்வதினால் உடம்பு தேறவில்லை.

அதற்காக அவள் கவலையும் படவில்லை. இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் இடைவிடாமலேயே உழைத்தாள் . அடுத்த ஐந்தாறு வருடங்களில் தன் கொழுந்தனுங்களுக்கும் திருமணம் முடித்து கரை ஏறினாள்.

இடையில் கணவனுக்குக் காசநோய் பற்றிக் கொண்டது. அது இவளையும் தொற்றி, முற்றி…எலும்பும் தோலுமாய்…….

இதோ படுத்தப் படுக்கை.

நான் பாண்டியக்கோனாரைப் பார்த்தேன்.

‘ சொந்த பூமியில் மருமகளைப் புதைக்காமல் வந்த பூமியில் இழப்பதா..? ‘ – அவர் முகம் இப்படி கவலை, துக்கத்தில் வாடிப் போயிருந்தது.

கணவன் ராமுவும் உடல் மெலிந்து கண்கலங்கி இருந்தான். அவனது பிள்ளைகள் அவனைச் சுற்றி இருந்தார்கள். கொழுந்தன்கள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தப்படி இருந்தார்கள்.

காசி இவர்களுக்குத் தாயாய், சேயாய் இருந்து எல்லாம் செத்தவள். பெரு வருத்தம் அவர்களுக்கு. அவர்களின் மனைவிமார்கள் அதற்கு மேல் துக்கம். மூத்தாள் பாசம்.

” நாலு நாளா உயிர் போகாமல் அல்லாடிக்கிட்டுக் கிடக்கே. பொறந்த மண்ணுல போகலை என்கிற வருத்தமா காசிக்கு…? ” ஊர் பெரியவர் ஒருவர் தன் சந்தேகத்தைப் பிறர் காதுப்படவே தெரிவித்தார்.

” எடுத்துக்கிட்டு அநேக போனா அடங்கிடுமா…? ” அவரை தொடர்ந்து இன்னொருவர் கேட்டார்.

” என்னப்பா ! ராமாநாதபுரம் என்ன கிட்டத்துலேயா இருக்கு..? ரயில்ல போறபோதே பாதியில போயிடும்..! ” – இன்னொருத்தர்.

” அது வேணாம். ஊர் மண்ணைக் கொண்டு வந்து வாயில போட்டா அடங்கிடும். ! ” இன்னொருவர் யோசனை.

” பாவி மக. மனசுல என்னத்தை வச்சிருக்காளோ..? ! ” பாண்டியக்கோனார் கமறினார்.

” பொசுக்குன்னு போகாம புள்ள புழுவாத் துடிக்கிறாளே…! ” கைப்பிள்ளையாய் இருந்ததிலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்தவர்.

தாங்கமுடியாமல் முகத்தில் துண்டை பொத்திக் கொண்டு அழுதார்.

‘ காசிக்கு எந்த முடிச்சில் உயிர் ஊசலாடுகிறது..? ‘ – எனக்குள் யோசனை ஓடியது.

சட்டென்று …….

‘ அப்படி இருக்குமோ…?! ‘ – மனசுக்குள் பளீரென்று அந்த எண்ணம் தோன்றி மின்னல் வெட்டியது.

யோசிக்க… அலச…. வலுத்தது.

உடன் மெல்ல பாண்டியக்கோனாரை அணுகினேன்.

மனதில் பட்டதைச் சொன்னேன்.

” இருக்காதுங்க. அவ அன்னைக்கே அவனை வெறுத்துட்டா…” சொன்னார்.

” பிஞ்சு நெஞ்சுல வேரோடிப்போன ஆசை. இருந்தாலும் இருக்கலாம். எங்கே இருந்தாலும் மகன் ‘ மதுரை ‘ க்குச் சேதி சொல்லி வரவழைங்க. இல்லே… எந்தச் சிறையில இருக்கான்னு சொல்லுங்க. அழைத்துவர ஏற்பாடு பண்ணலாம். ! ” விடாமல் சொன்னேன்.

” அவன் எங்கேயும் இல்லே தம்பி ! ” கோனார் சட்டென்று அழுதார்.

நான் திகைப்பாய் அவரைப் பார்த்தேன்.

” நாலு வருசத்துக்கு முந்தி அவன் செத்துப் போய்ட்டான்ய்யா. சிறையிலே கைதிகள் கலவரம். துப்பாக்கிச் சூடுபட்டுப் போய்ட்டான். ! ”

எனக்குள் இடி தாக்கியது.

” எனக்கு சேதி வந்தது. போய்ப் பார்த்து அங்கேயே அடக்கம் பண்ணிட்டுத் திரும்பிட்டேன். ” அவர் மேலும் அழுதார்.

” காசிக்குச் சேதி தெரியுமா..? ”

” குடும்பத்துல யாருக்கும் தெரியாது. ! ” விம்மினார்.

சேதி கேட்ட சுற்றயுள்ளவர்கள் சமைந்தார்கள். அவனோடு பிறந்தவர்கள் அழுதார்கள்.

இந்த முயற்சி தோல்வி. எனக்குள் மனசு விழுந்தது.

‘ மதுரை முடிச்சில்தான் காசி உயிர் இருக்கிறது !! ‘ என்பது எனக்குத் திடமாகத் தெரிந்தது.

‘ காசி காதுல மதுரை செத்துட்டான்னு சொல்லலாமா…? ‘ – யோசனை வந்தது.

‘அவன் பெயரைக் கேட்ட திருப்தி, சாந்தியில் உயிர் போகும் ! இல்லே… அதிர்ச்சியில் நிற்கும் ! ‘ – எனக்குள் நம்பிக்கைத் துளிர்த்தது.

‘ காசா, பணமா..?! முயற்சி செய்து பார்க்கலாம்.! ‘ – நகர்ந்தேன்.

பெண்கள் கூட்டம் இடைவிடாமல் இருந்தது.

”கொஞ்சம் நகருங்க…” நகர்த்தினேன்.

அவர்கள் நகர்ந்தார்கள்.

நான் அவள் தலைமாட்டில் அமர்ந்தேன்.

அவள் காதோரம் குனிந்து…

” காசி..! காசி..! ” அழைத்தேன்.

அவள் முடிய இமைக்குள் விழிகள் அசைந்தன.

” மதுரை செத்துட்டான்ம்மா..! மதுரை செத்துட்டான்ம்மா.! ” மெல்ல முணுமுணுத்தேன்.

ஆச்சரியம் !

காசியின் கண்கள் மெல்ல திறந்து….. வெறித்து மோட்டுவளையைப் பார்த்தது.

” நிசம் தாயி…! ” என்னையேக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.

அடுத்த வினாடி……

” ஐயோ காசி…ஈஈ …! ” சுற்றியுள்ள பெண்கள் பெருங்குரலெடுத்துக் கூவி கதறினார்கள்.

நான் கையெடுத்தது… அவள் உயிரற்ற கண்கள் மூடினேன்.

ஆனாலும்… அடக்கமுடியாமல் விம்மினேன்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *