அந்த மண் ரோட்டில் சைக்கிளை வேகமாய் அழுத்தி சென்று கொண்டிருந்தவனுக்கு சந்தேகம் வந்து விட்டது.
“அவளோட வீடு, வாட்டர் டேங்க் தாண்டியா, அல்லது முன்பே வருமா “
காலை ஊன்றி நின்று ஒரு கணம் யோசித்தான்.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வந்தது. அப்போது இவ்வளவு வீடுகள் இல்லை. எதிரே ஒரு தேவாலயம் இருந்த நினைவு. அவள் வீட்டு அருகில் பெரிய மைதானமாய் காலி மனை கூட இருந்தது. இன்னுமா காலி மனை இருக்கும்?
யாரிடம் கேட்கலாம் என்ற யோசனை வந்தது.
நடுத்தர வயது மனிதர் ஒருவர் எதிரே வந்தார்.
“இங்க பன்னீர்செல்வம்னு ஒருத்தர்..தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட்ல வேலை பார்க்கார்..அவரோட வீடு எதுன்னு..”
“நானும் இந்த ஏரியாவுக்குப் புதுசு சார்..” அவர் உதட்டைப்பிதுக்கியபடியே சென்று விட்டார்.
உமா பேரை சொல்லி விசாரிக்க முடியுமா ? அவளோட மாப்பிள்ளை பேரு கூடத்தெரியாதே..உமாவின் வீடும், அவளுடைய அண்ணன் பன்னீர்செல்வம் வீடும் அடுத்தடுத்து என்று தெரியும்.
இப்ப என்ன செய்ய ..பேசாம திரும்பி விடுவோமா என்று யோசித்தான்.
முதுகில் வியர்வை ஊற்றெடுத்து, வழிவது தெரிந்தது.
அப்போதே, பன்னீர் மொபைல் நம்பரை வாங்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டான்.
பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை அருகே ஒதுங்கினான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு, மெதுவாக விசாரிக்கலாம் என்று யோசித்தபடியே, “ஒரு வில்ஸ் கொடுங்க” என்றான்.
தெருவில் ஆள்நடமாட்டமில்லை. சிகரெட்டைப் பற்றவைத்தபடியே யோசித்தான் அவன்.
“இதைச்சொல்றதுக்கு இவ்வளவு அவசரமாய் வந்திருக்கணுமா” என்று இப்போது தோணியது. இதை சொல்லாமல் விட்டால், கணேசனின் ஆன்மா தன்னை மன்னிக்காது என்றும் நினைத்தான்.
போன வாரம், தான் என்ன மனநிலையில் இருந்தோம் என்பதையும் நினைத்துப்பார்த்தான். கணேசன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டபோதே அதிர்ந்து போனவன் தான். ஆனால், இவ்வளவு சீக்கிரம் முடிவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நாற்பது வருட தோழமை..பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே அவ்வளவு நெருக்கம். விஷயம் கேள்விப்பட்டவுடன் வயதை மீறி வாய் விட்டு அழுதான். அந்த நாள் முழுவதும் துயரம் நெஞ்சில் அழுத்தியது. கணேசனின் பால்யம் முழுவதும் நினைவுக்கு வந்தது. விஸ்வகர்ம பள்ளி படிக்கட்டில் அமர்ந்து எவ்வளவு விஷயங்கள் பேசியிருக்கிறார்கள்..இவனுடைய காதல்..அவனுடைய காதல் ..
சிகரெட் வாசம் அடிக்கக்கூடாது என்று ரோஜா பாக்குத்தூளை வாங்கி வாயில் ஒதுக்கிக்கொண்டான்.
“என்ன புதுசா எங்க ஏரியாவுல வந்தமாதிரி இருக்கு”
சத்தம் கேட்டுத்திரும்பினான்.
அட..உமா..உமாவே வந்து விட்டாள். பச்சை நிற நைட்டி போட்டு, மேலே ஒரு துண்டைப்போட்டபடி எதிரே நின்று கொண்டிருந்தாள்.
“உமா..உங்களைப் பாக்கத்தான் வந்தேன்..வீடு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..” தட்டுத்தடுமாறினான்.
“ஆளைப்பார்த்தவுடனே சொல்லுவீங்களே..நான் துவையலுக்கு பொரிகடலை வாங்குவோமேன்னு வந்தேன்..அவுக பேரை சொல்லி கேட்டா யாருக்கும் தெரியாது. கோவிந்தன் டாக்டர் வீடு எதுன்னா யாருனாலும் சொல்லுவாங்க..அதுக்கு அடுத்த வீடு தான் நம்ம வீடு..” என்று சொன்னவள், கடைக்காரரைப்பார்த்து,
“அண்ணாச்சி..பொறிகடலைப் பாக்கெட் ஒன்னு கொடுங்க..விருந்தாளி வந்திருக்கு..” என்று சொல்லி விட்டு, இவனைப்பார்த்து,
“இவுக கிட்டே கேட்டிருந்தா கூட சொல்லி இருப்பாகளே” என்று கடைக்காரரை காண்பித்து சொன்னாள்.
“அந்தா..எதிர்த்தால நாலு கடை தள்ளி, ஒரு ட்ரான்ஸ்பார்மர் தெரியுதா..அதுக்கு அடுத்தால உள்ள பச்சை கலர் அடிச்ச வீடுதான்..நீங்க முன்ன போங்க..நான் இந்தா வந்திருதேன்..”
அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்தான்.
சிரித்தமுகத்தில் இருக்கிறாள் உமா. இப்பப்போய் இதை அவளிடம் சொல்லணுமா?
வீட்டைத்திறந்து விட்டு, “உள்ள வாங்க..” என்றபடி உள்ளே சென்றாள்.
பவளமல்லிகை நிறைய பூத்திருந்தது. போனமுறை இது இல்லையே..
பூந்தொட்டிகளில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்கின. கோவில்பட்டியில் கைலாசம் பிள்ளை வளவில் இருந்தபோதே, அவள் வீட்டில் டேபிள் ரோஸ் இருப்பதைப்பார்த்திருக்கிறான்.
பூஞ்செடிகள் என்றால், அவளுக்கு அவ்வளவு இஷ்டம்.
வராண்டாவில் இருந்த மர சோபாவில் அமர்ந்தான். டீப்பாயில் குமுதம், ஆனந்த விகடன் கிடந்தன.
“வீட்ல அக்கா நல்லா இருக்கா..பையன் இப்ப என்ன படிக்கான்”
ஈரக்கைகளை தனது நைட்டியில் துடைத்தபடியே வந்தாள் உமா.
உமாவிற்கும் இப்போது நாற்பதைத்தொடும் வயது தான். உச்சி வகிட்டில்
ஒன்றிரண்டு நரை தென்பட்டது.
இவனுக்கு சொல்லவா, வேண்டாமா என்று மனம் அலைபாய்ந்தது.
“கணேசன் ஞாபகம் இருக்கா..நம்ம தெரு தான்..”
நேரடியாய் ஆரம்பித்து விட்டான்.
“எந்த கணேசன்..” அவள் கண்களை இனுக்கியபடி கேட்டாள்.
அவள் கண்களையே கூர்ந்து நோக்கினான்.
“நம்ம பன்னீர் கூடப் படிச்சாம்ல..எஸ்தர் டீச்சர் வீட்டுக்கு எதிர் வீடு..”
சொல்லி விட்டு,அவள் முகத்தையே நோக்கினான்.
“ஆமாமா…லேசா ஞாபகம் இருக்கு..” சலனமின்றி சொன்னாள்.
“கொஞ்சம் புதுநிறமா இருப்பான்..எப்பவும் சைக்கிளிலேயே வேகமாய்ப்போவான்..”
சைக்கிளில் என்பதை கொஞ்சம் அழுத்தமாய் சொல்லி, அவள் முகத்தை மீண்டும் ஆராய்ந்தான். அவள் அடையாளம் கண்டுகொண்டது போலவே தெரியவில்லை. அடப்பாவி மக்கா..உன்னை அவளுக்கு அடையாளமே தெரியலையேடா..
இடையே உள்ளே சென்று ஐந்தே நிமிடங்களில் காப்பியோடு திரும்பினாள்.
டீப்பாயில் காப்பி டம்ளரை வைத்து விட்டு, சாவதானமாக கேட்டாள்.
“சரி..கணேசனைப்பற்றி என்னவோ சொல்ல வந்தீங்களே..”
எப்படி சொல்ல முடியும் ? கணேசனை மனத்திரையில் கொண்டு வந்தாளா இல்லையா என்றே தெரியவில்லையே..
கணேசன், பன்னீரைப்பற்றி விசாரிச்சான் என்று சொல்லி விட்டு, திரும்பி விடுவோமா என்று கூட யோசித்தான். இல்லை..சொல்லிவிட வேண்டும். அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிய வேண்டும்.
அவனைப்பற்றி ரொம்ப அசிரத்தையாய் கேட்பதுகூட ஆச்சரியமாய் இருந்தது. அவனை உண்மையிலேயே தெரியாதா, இல்லை நினைவில் இல்லையா ?
விஸ்வகர்ம பள்ளி படிக்கட்டில் நான் அமர்ந்திருந்தபோது, வேகமாய் சைக்கிளில் வந்து சேர்ந்தான் கணேசன். எப்பவும் இதே வேகம் தான்.
அவன் கண்கள் ரொம்ப பிரகாசமாய் இருந்தன. சரி. அவன் ஆளைப்பார்த்து வந்த குஷி. இருக்கும் தானே..எத்தனை வருடங்கள் அவள் பின்னாலேயே சுற்றி வருகிறான்?
“என்ன..உன்னோட ஆளைப்பார்த்தாச்சா..”
பதில் சொல்லாமல் உற்சாகமாய் ஒரு சிரிப்பு மட்டும் வந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாரிக்கொண்டான்.
சுருட்டை முடிக்காரன். எதற்கு தலையை சீவணும்?
“உன்னோட காதலை எப்பதான் சொல்லப்போறே?” இவன் கேட்டான்.
“உஷ்.ஷ்..அதெல்லாம் உடனே சொல்லிரக்கூடாது..காத்திருக்கணும். காதல் ன்னாலே காத்திருப்பு தான்..அவ மனசு கனியனும்..மனசு கனிஞ்சு அவளே தன்னோட காதலை என்னிடம் சொல்லுவா..”
கண்களில் மின்னல் கீற்று தெரிய பேசிக்கொண்டிருந்தான் அவன்.
“உமையவன்” என்ற புனைபெயரில் பல காதல் கவிதைகளை தனது டைரி முழுக்க எழுதி வைத்திருந்தான். ஒரு கவிதை கணையாழியில் கூட வந்திருந்தது.
அந்த இதழை, பன்னீரிடம் தற்செயலாய் கொடுப்பது போல கொடுத்தான்.
பன்னீர் அதை தனது சைக்கிள் கேரியரில் வைத்து போவதையே அன்று வெறித்துப்பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது.
உமையவன் என்பது உனது புனைபெயர் என்பதாவது அவளுக்கு தெரியுமா என்று ஒருமுறை கேட்டபோது, “அவள் புரிந்திருப்பாள்” என்று மட்டும் சொல்லி புன்னகைத்தான்.
“இந்த பாரு…சும்மா சைக்கிளில் அவ பின்னாலேயே போய்க்கிட்டு இருக்குறது நல்லால்ல..உன்னோட காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிரு..அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியனும்ல..” என்றான்.
“புரியுது. ஆனால், எப்படி சொல்றதுன்னு தான் தெரியல..ஒருவேளை, அவ முடிவு வேற மாதிரி இருந்துட்டா, அதை தாங்குற சக்தி எனக்கு இல்ல..” கணேசன் கண்கள் தளும்பின.
“அப்படி இல்லடா..அவ வேற யாரையும் லவ் பண்ற மாதிரி தெரியல..” என்று இவன் சொன்னபோது, குறுக்கிட்ட கணேசன்,
“சேச்சே..அது எனக்கு நல்லாவே தெரியும்..இருந்தாலும், என்னை அவ விரும்புறாளா இல்லையான்னு இருக்குல்ல..” என்று வருத்தத்துடன் சொன்னான்.
“எதுன்னாலும், மனசுல இருக்கிறதா வெளிப்படையா சொல்லி புரிய வைக்கிறது தான் சரி..அடுத்த கட்டத்துக்கு நகரணும்ல..” என்றான்.
“அதுக்கு ஒரு நேரம் வரும்..அப்ப நான் கண்டிப்பா சொல்வேன்..” என்றான் கணேசன்.
“சொல்றதுக்கு ஒருமாதிரி இருந்தால், லெட்டர் எழுதி அவள் கையில் கொடுத்துற வேண்டியது தானே..” என்று யோசனை சொன்னான்.
கணேசன் பதிலுக்கு புன்னைகை செய்தான்.
இப்படியே பல்லைக்காட்டிட்டு இரு..அவளை வேற ஒருத்தன் கொத்திட்டு போகப்போகிறான்..மனசுக்குள் இவன் கருவினான்.
உண்மையில் வேற ஒருத்தன் தான் கொத்தி விட்டுப்போய் விட்டான்.
அந்த செய்தி கிடைத்த நாளை மறக்கவே முடியாது.
கணேசனை பார்க்கவே மனசில் தைரியம் இல்லாமல் இருந்தான்.
அவன் வீட்டிற்கு போயிருந்தபோது, அவன் சைக்கிள் மூலையில் சாத்தியிருந்து, அதில் நூலாம்படை படர்ந்து போயிருந்தது. சகிக்க முடியாமல் வீடு திரும்பி விட்டான்.
“காப்பியைக் குடிங்க..” என்றாள் உமா.
“என்னமோ சொல்ல வந்தீங்க..அப்படியே ஒரே யோசனையாய் ஆழ்ந்து போயிட்டிங்களே..” என்றவளிடம்,
மெதுவாய் சொல்ல ஆரம்பித்தான். ஒவ்வொரு வார்த்தைகளை சொல்லும்போதும், அவள் முகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா என்று பார்த்தபடியே சொன்னான்.
அவள் சலனமின்றி கேட்டவள் “அடடா..மனசு கஷ்டமா இருக்கே..பன்னீருக்கு தெரியுமா” என்றாள்.
அவள் மனசு கஷ்டப்பட்ட மாதிரி தெரியவில்லையே..
ஏன் சொன்னோம்னு இவனுக்கு ஆகிவிட்டது.
“கணேசனுக்கு எத்தனை குழந்தைகள்” என்று கேட்டாள்.
“ஒரு பைய்யன்..ஒரு பொண்ணு..” என்று சொன்னவன், பொண்ணு பெயர் உமாதேவி என்று சொல்லி விடுவோமா என்று நினைத்தவன் அதை சொல்வதை தவிர்த்து விட்டான். காப்பியை ஒரே மடக்கில் குடித்து டம்ளரை கீழே வைத்தான்.
நிஜம்மாகவே இவளுக்கு அவன் மேல் எதுவும் இல்லையா?
அடேய்..மடையா..உன்னோட பாதி வாழ்க்கை வெறும் வேஸ்ட் ..
கணேசனை நினைக்கையில் பாவமாக இருந்தது.
அதற்குமேல் அங்கு இருக்க வெறுப்பாய் வந்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல், கிளம்பினான்.
“சார் தூத்துக்குடியில் தான..” எதோ சொல்லணும் என்பதற்காக சொல்லி விட்டுக்கிளம்பினான்.
கிளம்பும்போது கூட, கடைசியாய் அவள் கண்களில் ஏதேனும் சலனம் இருக்கிறதா என்று பார்த்து, ஏமாற்றத்துடன் சைக்கிளை அழுத்த ஆரம்பித்தான்.
உள்ளே சென்ற அவள், ஹாலில் இருந்த மர ஸ்டூலை இழுத்துப்போட்டு, மேலே இருந்த லாஃட்டில் இருந்த பழைய டிரங்க் பெட்டியை கீழே இறக்கினாள். பழைய துணிகள், செர்டிபிகேட் இவற்றிற்கு கீழே இருந்த புகைப்படங்கள் அடங்கிய பாலிதீன் பையை எடுத்தாள்.
படங்கள் கீழே விழுந்து சிதறின.
பன்னீர் கல்லூரியில் எடுத்த போட்டோ.. விரல்களால், தடவி தடவி, தேடி வந்து கணேசன் முகத்தில் வந்து நின்றது.
அவளிடம் இருந்து ஒரு கேவல் சத்தம் எழும்பியது.
பன்னீர் இறுதி ஆண்டு படிக்கையில், கணேசன் சைக்கிளில் பின்னாலேயே வந்து நின்று, புன்னகை சிந்தியபடி, ஒரு கடிதத்தைக் கொடுத்ததையும், அதை அவன் சென்றபிறகு, பிரித்துக்கூட பார்க்காமல் செம்பகவல்லியம்மன் கோவில் தெப்பத்தில் வீசி விட்டதையும் நினைத்து அழுதாள்.
– மரத்துப்போன சொற்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 2023, சந்தியா பதிப்பகம், சென்னை