உன்பேர் எழுதிய உணவு…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 4,414 
 
 

மினாரில் இன்னும் விளக்குகள் துளிர் விட்டு இருக்கவில்லை. காசிம் தன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அமீரை அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான். அந்த வளர்பருவத்திற்கு உண்டான ஆர்வம் மிகுதியாயும் அந்தக் கண்ணில் மிதந்துகொண்டு இருந்தது.

அத்தனையும் அவனுக்கு வேடிக்கையாய் விசித்திரமாக இருந்தது. முக்காடிட்டு கடந்துபோன பெண்களும், மற்றேனைய மனிதர்களும், அவர்களின் முகக்குறிப்பும், கொஞ்சமும் புரியாத அவர்களதுமொழியும் அவனுக்கு அத்தனை விசித்திரமாக இருந்தது.

ஜந்தர் மந்தரைத் தாண்டி கொஞ்சம் உள்ளே நடக்கவேண்டும் அவர்கள் தேடி வந்த பள்ளிக்கு.குறுகலான சந்துகளில் நிறைய சிறுகடைகளும், வீடுகளும் இருக்க, மெல்லிய அழுக்கு சூழ்ந்திருந்தது அந்தப் பகுதி முழுக்க. அங்கே காரைச் செலுத்துவதும், திருப்புவதும் இயலாது என்பதால், விசாலமான சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு, காசிமும், டிரைவரும் இறங்கிக் கொள்ள, அவர்களைத் தொடர்ந்து அமீரும் இணைந்து கொண்டான்.
தெருக்களில் கால் பதியப் பதிய நடந்தார்கள்.

இன்னும் மினாரில் விளக்குகள் ஒளிர சொற்ப நிமிசமே மீதமிருந்தது. தெருக்களின் குறுகலும், ஜன நடமாட்டமும் வேகத்தடையாக வருகிறது என்றால், இன்னொருபக்கம் அமீரின் தளர் நடை எரிச்சல் படுத்தியது.”இவனை எதுக்கு அழைச்சிட்டு வந்தீங்க காசிம் சாச்சா…” அலுத்துக் கொண்டான் டிரைவர் அன்வர்.

“எனக்கு ஆசை பாரு இந்த சைத்தானை எங்கே போனாலும் இழுத்துக்கிட்டு போறதுக்கு..? எல்லாம் முதலாளியோட கட்டளை. பவிஷ்ய குலாம் (எதிர்கால அடிமை) உருவாக்கத்தான்…” இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.”ஏ சோட்டு ஜல்தி ஆவ்..! தேர் ஹோ ரஹா ஹை…” காசிம் அடிக்கடி நேரமாகிறது என்று கூப்பாடு போட்டுக் கொண்டே முன்னே நடந்தார்.

அவர் அழைப்பில் உடனே நடையில் வேகத்தைக் கூட்டினாலும், நொடியில் பாதையின் சுவாரஸ்யங்கள் அவனை இழுத்துக் கொண்டன.
ரமலான் மாதத்தின் புனிதம் இன்னும் அவருடைய கோபத்தைக் கூட்ட விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. தவிர அமீரின் மீது முதலாளி
களுக்கு இருந்த கரிசனமும் சேர்த்து கொஞ்சம் நிதானிக்கச் சொன்னது.

ஹைதராபாத்திற்கு ஒரு நிக்காஹ்விற்கு சென்ற முதலாளி அம்மாதான் வரும்போது அமீரை அழைத்து வந்திருந்தார்.

“அம்மா இல்லை பையனுக்கு. அத்தாவும் சமீபத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டார். சித்திக்கு இவனை பராமரிக்க இஷ்டமில்லை. அதான் வீட்டோட பார்த்துக்கிறவங்க யார்னு கேட்டு அனுப்பிச்சி வச்சுட்டாங்க.

நமக்கு ஒரு குழந்தையைப் பராமரிச்சு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்த மனதிருப்தி. இன்னொருபக்கம் இப்படி சின்னதுல இருந்து வளர்க்கிற புள்ளைகளுக்கு விசுவாசம் அதிகமா இருக்குமாம்…””என்ன யோசனையோ..? பணக்காரங்களுக்கு ஏழைகளோட அத்தனை பலகீனங்களும் அத்துப்படியா இருக்கு…” சுத்தமான இந்தியில் சொல்லிக் கொண்டே நடையை விரைந்து பதித்தார்கள்.

பணக்காரர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஏழைகள் சிரித்துக்கொண்டார்கள் தலையைக் குலுக்கிக்கொண்டு.ஜாமியாவில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தது முதலாளியின் குடும்பம். இந்த ரமலான் மாசத்தில் நித்தமும் ஏராளமான உணவுப் பொட்டங்களை தயாரித்து இப்தார்க்கு தந்து அனுப்புவது வழக்கம். சுற்றுப் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்களைத் தேடிப் போய் உணவை வழங்கி வருவார்கள் வேலையாட்கள். உணவு தயாரிக்கவே வீட்டில் தனியாக ஆள் நியமித்து இருந்தார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே கூம்பு வடிவ மினார்கள் நெடுமரமாகக் கண்ணில் பட்டன. பொழுது மங்கி, இருள் சாம்பல் நிறத்திட்டாக வெள்ளையின் மீது படியத் தொடங்கி இருந்தது. இரை தேடிச்சென்ற பறவைகள் மினாரை நோக்கி அடைக்கலமாக வந்துகொண்டு இருந்தன. அவற்றின் இரைச்சல் காதுகளுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு இருந்தது. உயரத்தில் இருக்கும் பறவைகளின் சந்தோசம் தரை இறங்கி வந்தால் எத்தனை இதமாக இருக்கும்…

கடந்து சென்றவர்கள் பார்வைகள் மினாரை முகர்ந்தபடியே கடந்தன. கேட்டை சமீபித்தார்கள். இன்னும் மினாரில் விளக்குகள் ஒளிர்ந்திருக்க வில்லை. நோன்பு திறப்பதற்கு சொற்ப நிமிடங்களே மிச்சமிருந்தன.”நீ இங்கேயே நில்லு சைத்தானே… எங்கேயும் ஓடி எங்களைத் தேட வைக்காதே… நாங்க உள்ளே போய் எல்லாருக்கும் பொட்டலங்கள் தந்துட்டு அப்படியே நோன்பு முடிச்சிட்டு வர்றோம்…”காசிம் சொன்னபோது பால் வடியும் முகத்தில் சின்னதாகக் குழப்பம் மேவ நிமிர்ந்து அவர் முகத்தையே பார்த்தான்.

“நானும் உள்ளே வர்றேன் காசிம் சாச்சா… இங்கே தனியா இருக்க பயமா இருக்கு…” மெல்லிய குரலில் சொன்னபோது, அவன் மழலையின் சுகத்தை யோசிக்காமல் முகத்தில் கணப்பைக் காட்டியபடி முறைத்தார்.”சைத்தானை சைத்தான் பிடிக்காது…””சாச்சா, நோன்பு பிடிச்சிட்டு கடுஞ்சொல் பேசக்கூடாது, எங்க நானி சொல்லும்…” மெல்லிய குரலில் தன் மொத்த கோபத்தையும் காட்டிவிடும் குரலில் சொல்ல, திரும்பிப் பார்த்தவர் அவனிடம் வாதிட நேரமில்லாததால், விரலைக் காட்டி எச்சரித்துவிட்டு வேகமாய் பைகளுடன் உள்ளே நகர, அன்வர் பின்தொடர்ந்தான்.

கேட்டை ஒட்டி இருந்த பெரிய கம்பத்தை கைகளில் பற்றிக் கொண்டு நின்றான். சில நொடிகளில் மினாரில் விளக்குகள் பளீரிட, நோன்பு பிடிக்கும் நேரம் வந்துவிட்டதால், வேகமாய் பலர் பள்ளிக்கு விரைந்து கொண்டு இருந்தார்கள்.உள்ளே இருந்து கஞ்சியின் மணமும், தின்பண்டத்தின் வாசமும் வாசலைத் தொட்டு தெருவை நிறைத்தன. முழுநாள் பசியையும் அந்த ருசி இட்டு நிரப்பிக் கொண்டு இருந்தது.

ஆனால், இப்போது மூக்கில் சுவைத்த ருசி மணத்தில் அவனின் சின்ன வயிறு பசிக்க ஆரம்பித்து இருந்தது. கண்கள் உள்ளுக்கும் புறத்திற்கும் நூறு முறை தடவி மீண்டு விட்டன. இன்னும் காசிமையும், அன்வரையும் காணோம்….பள்ளியின் அருகில் கொஞ்சமாய் யாசகர்களின் கூட்டம் குழுமத் தொடங்க, இல்லாமையில் இடுங்கிய கண்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் அமீர் சின்ன ஆச்சர்யத்துடன்.

அத்தனை பேர் நடுவில் அந்தப் பெண், அமீரின் கவனம் ஈர்த்தாள். வயதையெல்லாம் கணிக்கத் தெரியவில்லை. ஆனால், சிறு கோடுகள் முகத்தில் நடமாடத் தொடங்கி இருந்தன. கையில் ஏழ்மைக்கு அத்தாட்சியாய் ஒரு குழந்தை. நெற்றியை அடைத்துக் கொண்டு செந்நிறப் பொட்டு.
அமீர் வேடிக்கை பார்த்துக்கொண்டே நிற்க, முதுகில் அழுத்தமான கை படிந்து, பிடரியை அழுத்தியது. காசிம்தான். கொண்டு போன பைகளின் கனம் முழுசாய் வற்றி இருக்க, பையைச் சுருட்டி வைத்திருந்தார்..

மூவரும் நடந்து வெளியில் வர குழுமி இருந்த கூட்டம் இவர்களை நோக்கி கையேந்திக் கொண்டு நகர்ந்து வந்தது. அதை விசித்திரமாய் பார்த்தபடி அடியெடுத்து வைத்தான் அமீர். எதிரெதிர் திசையில் நடைபயிலும் மனிதர்களிடம் நிலவும் வேறுபாட்டை பார்க்கையில் மனசு இறைவனின் செயல்பாட்டை எண்ணி ஆச்சர்யத்தில் இமைக்க மறந்தது.

அவர்கள் கையேந்திக்கொண்டே பின் தொடர, இவர்கள் கருணையை மறந்து முன் நடக்க, சில அடிகள் நடந்து காருண்யத்தை வாங்கிவிட எத்தனித்து தோற்றுப்போய் அங்கிருந்து நகர்ந்தார்கள், அடுத்தடுத்து வந்தவர்களின் கருணை நெஞ்சத்தை சோதிக்க எண்ணி.ஆனால், அப்பெண்மணி மட்டும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தாள். குரல் மட்டும் விடாமல், வறுமையை வினியோகம் செய்துகொண்டே வர, பக்கவாத்தியமாய் குழந்தை வீரிட்டு அழுது சுதி சேர்த்தது.

“சாச்சா அவங்க பாவம்…” திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னான்.”சாலா..! அமைதியா வா…” முச்சந்தியில் நின்று திரும்பிப் பார்க்க, அப்பெண் தன் முயற்சியில் தோல்வியுற்றவளாய் விளக்குக் கம்பத்தின் அருகிலேயே இருளாக தேங்கிக் கொண்டாள்.காசிம் முகத்தில் நிம்மதி அரும்பியது. பையைப் பிரித்து மீதி இருந்த பொட்டலங்களை கையில் எடுத்துக் கொண்டவர், இஸ்லாமிய யாசகரை எதிர்பார்த்து சாலையை ஆராய ஆரம்பித்தார்.

“சாச்சா, இதை ஏன் அவங்களுக்குத் தரல..?” அமீர் முணுக்கென்ற கோபத்துடன் வினவ, காசிம் வெறுப்பாய் அவனைப் பார்த்தார்.”ம்… இது நோன்பாளிக்கு தரவேண்டியது…””அப்படின்னா…””நோன்பு வச்சவங்களுக்கு தந்தாத்தான் அல்லாஹ் நன்மை தருவார்…”

“வருசம் பூரா நோன்பு பிடிக்கிற இவங்களுக்குத் தந்தா பாவமா தருவார் அல்லா…?” சாட்டையடி!”இதை நோன்பாளிக்கு மட்டும்தான் தரணும்கிறது முதலாளியோட உத்தரவு…””பசிச்ச எல்லாருக்கும் உணவு தரணும்கிறது அல்லாவுடைய உத்தரவுன்னு எங்க நானி சொல்லும். பசியோட இருக்கிறவனுக்கு சோறுதான் கடவுளாம்.

இந்த பொட்டலத்தை தந்தா, அந்த தீதி எத்தனை சந்தோசப்படும்…”கண்ணாடிக் கல்லின் வழியே மலையைப் பார்த்தால், மொத்த மலையும் அந்த சிறு துகள்களுக்குள் அடங்கிவிடும் என்பது போல், அமீரின் அழுத்தமான வார்த்தைகளில் செயலற்று நிற்க, அவர்கள் கையில் இருந்த பொட்டலத்தைப் பறித்துக்கொண்டு விளக்குக் கம்பத்திற்குக் கீழ் நின்ற பெண்ணை நோக்கி ஓடினான் அமீர்.

இவனை இமைக்காமல் பார்த்தபடி நின்றாள் அப்பெண். ஏந்திய அவள் கைகளுக்குள் இன்னும் எவருடைய இரக்கமும் வந்து எட்டிப் பார்த்திருக்கவேயில்லை..! அந்த வெறுங்கைகளில் பொட்டலத்தைத் திணித்தான். அப்பெண்ணின் கண்களில் தித்திப்பு..!”இந்தாங்க தீதி..! இந்த உணவில் உங்கள் பேர்தான் எழுதப்பட்டு இருக்கிறது…” சொல்லிவிட்டு திரும்ப நடந்தான். தெருவிளக்குகள் தலைகுனிந்து அவனுக்கு மரியாதை செய்தன.

– May 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *