உணர்ச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 9,757 
 
 

அவனுக்கு வயது 27 தான் இருக்கும். மூன்று வருடம் இருக்கும்.அவன் தந்தை தான் அறிமுகம் செய்து வைத்தார். அஞ்சு அடிக்கும் குறைவான உயரம். உயரத்திற்கு ஏற்ற திடகாத்திரமான உடம்பு. எண்ணெய் வைத்து படிய வாரிய தலை. நெற்றியில் புருவத்திற்கு மத்தியில் தீக்குச்சியில் வைத்த செந்தூரம். பழைய மாடல் பாகிஸ் பான்ட், கச்சிதமான கோடு போட்ட சட்டை. மேல் சட்டை பையில் கர்சீப் குத்தப்பட்டிருந்து (கே ஜி பிள்ளைகள் போல) சட்டையின் நிறம் மாறுமே தவிர கோட்டின் சைஸ்ஸும், பான்ட் மாடலும் மாறவே மாறாது. ஆடி தள்ளுபடியில பல்க்கா எடுத்திடுவாங்க போல.

“ அண்ணனுக்கு வணக்கம் சொல்லு “

அனிச்சையாக ரெண்டு கைய கூப்பி சாமி கும்புட்டு, தியேட்டர்ல இருந்து வர்ற கூட்டத்தையே வேடிக்கை பாத்தான். நானும் ஒரு வணக்கத்த போட்டேன்.

“ அண்ணகிட்ட என்ன சாப்ட வேணுமோ கேட்டு வாங்கி சாப்டு “

அவன் காதில் விழவேயில்லை. அவன் வேடிக்கை முடியவும் இல்லை. இவ்ளோ கூட்டத்தையே அவன் பாத்ததில்லை போல.

“ டேய்!!, போயி சாப்டு”னு அவரு கோபமா சைகை காமிச்சதுக்கு அப்புறம் தான் என்கிட்டே வந்தான். அவனுக்கு என்ன தேவை என்று சொல்ல தெரியவில்லை. வேண்டிய பதார்த்தங்களை அவனே கையால் எடுத்தான். எனக்கோ இவனால் வியாபாரம் பாதிக்க கூடாதே. அவனை ஒரு டேபிள்ல உக்கார வச்சிட்டு சாப்ட வச்சேன். அவனுக்கு பிடித்த பதார்த்தங்கள் இல்லை போல. அவன் பார்வையிலே தெரியுது.

அப்போ தான் தெரிஞ்சுது. அவன் வாய தொறந்தாலே எச்சில் ஊற்றும் போல. அவன் தந்தை VAO, அம்மா அரசு பள்ளி ஆசிரியை. வரம் வாங்கி எட்டு வருட தவத்தில் கிடைத்த புதல்வன். மூளை வளர்ச்சி குறைவு. அதுவும் மூனு வயசுக்கு மேல தான் தெரிஞ்சிருக்கு. அவனுக்கு எல்லாமே அவன் பாட்டி தான்.

பத்து வயசு வரைக்கும் யூரின் வந்தாலும், வெளிக்கி வந்தாலும் சொல்ல தெரியாது. அப்டியே டவுசர்லயே போயிடுவான். அம்மாவுக்கு ரொம்ப வருத்தம். ஒரே பையன். தினமும் வீட்டுக்கு வந்த உடனே அவனுக்கு தீனி குடுத்து பக்கத்துலயே உக்காந்து நிறைய கதை சொல்லுவா. இவன் அவன் வாய பாத்துகிட்டே சிரிச்சிகிட்டு இருப்பான். அப்பா சாயந்தர நேரத்துல பைக்ல உக்கார வச்சி வெளிய கூப்டு போறதோட சரி. மத்தபடி கொஞ்சம் பயம். அதுவும் ஒரு தடவ டிராயர்லயே ஒன்னுக்கு போயிட்டான்னு அடிச்சிட்டாரு. அப்ப இருந்து தான்.

“ இவனுக்கு ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லு பா “

“ இவனுக்கு எப்படி டா பொண்ணு பாக்கறது, தாலிய கூட எடுத்து கட்ட மாட்டனே “

என் அப்பாவும் அவரும் பால்யசிநேகிதர்கள். அவரு PUC படிச்சிட்டு போஸ்டிங் வாங்கிட்டாரு. எங்க அப்பா கூட படிச்ச சாந்தி(ய) டீச்சர(இப்போ) சைட் அடிச்சி எட்டாவது கூட தாண்டல.

“ எனக்கும் புரியுதுடா. வீட்ல அந்த கெளவி தொல்ல தாங்கல, நா கண்ண மூடறதுக்குள்ள இவன் கல்யாணத்த பாக்கனுங்கிறா “

“ இருக்காதே பின்னே! அதான அவன கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குது, நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா சம்பாதிக்க போயிடறீங்க, இன்னும் யாருக்குடா சம்பாதிக்கிறீங்க? “

“ ஆமா, என்ன சம்பாரிச்சி என்ன பிரயோஜனம். உன்ன மாதிரி முதலாளி ஆக முடியுமா? ஏதாவது நல்ல பொண்ணா, நல்லா வீட்டு வேல தெரிஞ்ச பொண்ணா இருந்தா பரவால்ல. எங்க காலத்துக்கு அப்புறம் இவன பாத்துகனுமே “

ரெண்டு கவுர்மென்ட் சம்பளம்னு எங்க அப்பாக்கு கொஞ்சம் காண்டு இருக்கும். அவருக்கு எங்க அப்பா சொந்த ஓட்டல் முதலாளினு காண்டு இருக்கும். அதெல்லாம் இந்த மாதிரி வெளில காட்டிக்காம அடிக்கடி கேட்டுகுவாங்க. நம்ள பத்தி தான் பேசிக்கிறாங்க, நம்மள கண்ணி கழிய வைக்க போறங்களேனு ஒரு கனவு இல்லாம அவன் எங்கயோ வேடிக்கைப் பாத்துகிட்டு இருந்தான்.

எங்க ஊர்ல இருந்து சேலம் போற வழியில 15 கி.மீ போயிட்டு டோலகேட்கு அடுத்து லெப்ட்ல ரெண்டு கி.மீ போனா அவங்க ஊரு. தண்ணி டேன்க ஒட்டன மாதிரி இருக்கிற கார திண்ணை போட்ட ஓட்டு வீடு தான் பொண்ணு வீடு. அப்பா விவசாய கூலி. அம்மா போன ஆடி காத்துல விழுந்த கரண்டு உயர் ஷாக்ல போயிட்டாங்க. பொண்ணு அப்பாவுக்கு ஒத்தாசையா காட்டு வேலையெல்லாம் செய்யும். வீட்டு வேல அத்தனையும் அத்துபடி. அவனும் பாவம். ஒத்த பொட்ட புள்ளைய வச்சிக்கிட்டு, எப்டி கர சேப்பான். மகராசி அவ இருந்தா கூட பரவால்லனு ஒரு பெருசு ஆரமிச்சி வச்சது.

பொண்ணு கிராமம் தான், நமக்கும் கைக்கு அடக்கமானவங்க தான். நம்பி பொண்ணு எடுக்கலாம்னு எங்க பெருசும் எச பாட்டு பாட, கல்யாண செலவு எங்களோடது, பொண்ண மட்டும் அனுப்பி வையுங்க, நகை நட்டு ஏதும் வேணாம்னு பேசி சுற்றமும் நட்பும் சூழ இனிதே திருமணம் நிறைவடைந்தது.பொண்ணு இவன விட கொஞ்சம் உயரம், அப்பாவி கிராமத்து முகம், காட்டு வேலை செய்யற உடம்பு பாத்தாலே தெரியும். முகத்தில் நல்ல தெளிவு. வரபோகும் கணவனை பத்தி முன்கூட்டியே சொல்லி விட்டதால் அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

சொல்லி வச்ச மாதிரி, கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துலயே பாட்டி கண்ண மூடிட்டாங்க. சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சி ஒரு வாரம் இருக்கும்.

“ இவன உன் கடைல வேலைக்கு வச்சுக்கோ “ VAO

“ இங்க என்ன வேலை இருக்கு செய்யறதுக்கு, இருக்கறதுக்கே( அது நான் தான்) இங்க வேல காணோம். நீ வேற “

“ அதுக்கில்லடா, கெளவி போனதுல இருந்து ஒரு மாதிரி இருக்கான். அந்த புள்ள கூடவும் சரியா ஓட்ட மாட்டேன்றான். இங்கனா நாலு பேரு வந்து போற இடம், புது மனுசாலுங்கள பாத்தா கொஞ்சம் மாருவான்ல. அதான், தினமும் நா வரேன்ல, நானே விட்டுட்டு, கூப்டு போயிடறேன்”

“ சரி விடு, இந்த வெட்டி பய கூடவே (இப்பவும் என்னை தான்) இருக்கட்டும். “

அன்னைல இருந்து என் கூடவே தான் இருப்பான். நா அவனுக்கு ஏதாவது கதை சொல்லிக்கிட்டு, என் நண்பர்கள் கூட அரட்ட பேசிகிட்டு, திருட்டு தம் அடிக்கும் போது கூட கூப்டுகிட்டு (அவ எல்லா இடத்துலயும் அமைதியா வேடிக்கை பாப்பான்) போவேன். அதனால் என் கிட்ட கொஞ்சம் பிரியமாவே இருப்பான். அதுவும் இல்லாம பொண்டாட்டி வந்ததுல இருந்து ஜீன்ஸ் பான்ட், டீ ஷர்ட் போட ஆரமிசிட்டான்.

அவன் மனைவிக்கும் இவன் மேல கொள்ள பிரியம். ஒரு குழந்தைய போல பாத்துக்குவா. இவனுக்கு சாப்பாடு ஊட்டி விடறது, சட்டை போட்டு விடறது, தலை வாரி விடறதுன்னு ஒரு அம்மா மாதிரி பாத்துகிட்டா. வீட்டுக்கு வர விருந்தாளிங்ககிட்ட பணிவா நடந்துக்கறது, இவங்க குடும்பமே குடுத்து வச்சிருக்கணும். ஆனா இவன் எப்பவும் போல டிவி பாக்கறது, சாப்டறது, தூங்கறது எல்லாம் அப்டியே.

சமீப காலமா சுயமா செய்ய வேண்டியதெல்லாம் அவனே செஞ்சிக்கறானாம். எல்லாம் என் கூட பழகுனதாலன்னு சொன்னாங்க. அதனால அவங்க வீட்ல எனக்கு எப்பவுமே ராஜ மரியாதையை தான். நானே கவனிச்சிருக்கேன். இப்பலாம் யாராவது கிண்டல் பண்ணாலோ, டிவில காமிடி பாத்தாலோ சிரிக்கிறான். கை தட்டறான். அவன் தோள்மேல கைய போட்டு பேசினா அவன் முகத்துல அப்படி ஒரு பிரகாசம். இதுக்கு முன்னாடி அவன்கிட்ட யாரும் அப்டி பேசனதில்லையே. இப்ப அவனுக்கு எல்லாமே நல்லதாவே நடக்குது. தோழமையா பேச நான், அரவணைச்சு போற மனைவி, வீட்டுக்குள்ளையே அடங்கி கிடக்காம நாலு வெளி ஆளுகள தெரியுது. இப்ப தான் மனித உணர்ச்சிகளையே உணர்றான்.

என்னவோ அவசரமோ தெரியல. இன்னக்கி பாத்ரூம் போற வழிலேயே ஒன்னுக்கு போயிட்டான். அவனே வந்து ஈரமான பாண்ட காமிச்சி தலை குனிஞ்சி நிக்கறான். ஒரு வேல வருத்தப்படறானா? அழுவறானா? அப்டிலாம் இல்லை. அவன் பாட்டி செத்ததுக்கே அழாதவன். இதுக்காகவா அழ போறான். அழ வேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு அழ தெரியாத. அழுகைன்ற உணர்ச்சியே தெரியாது. இப்ப தானே ஒவ்வொன்னா கத்துகிட்டு இருக்கான். அவனுக்கு பான்ட் மாத்தனும், அது ஈரமாயிடுச்சு. அவனோட அந்த சைகைக்கு அதான் அர்த்தம்.

அவனுக்கு அவ்ளோ சந்தோசம். இருக்காதா பின்ன!! முத தடவ இப்ப தான் அவங்க அப்பா இல்லாத வேற ஆளு கூட வண்டில போறது. என் வேகம் அவனுக்கு புடிச்சிருக்கலாம். அவன் தினமும் வந்து போற வழி இல்லாம நா கூப்டு போற வேற வழி புடிச்ருக்கலாம். எப்பவும் XL சூப்பர்லயே வந்துட்டு புதுசா பெரிய வண்டில போற சந்தோசமா இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? என்னால அவன் முகத்துல மீண்டும் ஒரு மகிழ்ச்சி, உணர்ச்சிய அவன பிரதிபலிச்ச கண்ணாடி காமிச்சது.

அவனுக்காக வெளி திண்ணையில காத்துகிட்டு இருந்தேன். வழக்கமாக சொம்புல தண்ணி கொண்டு வரும் அவன் மனைவிய காணோம். இவன் மட்டும் வெளியே வந்தான். பான்ட் மாத்தல, நேரா போயி வண்டில உக்காந்துட்டான்.

“ ஏன் டா பான்ட் மாத்தல “

அவன் முகத்தில் கனத்த மௌனம். ஒரு இறுக்கம், அது இறுக்கமா இல்லை குழப்பமா ?

“ என்னடா ஆச்சு ? ஏன் இப்டி இருக்க ? “

வீட்டையே பாத்துகிட்டே இருக்கான். ரூம்ல அவளும் அப்பனும். இவன் கண்ணுல கண்ணீர். முதன் முதலாக அந்த கண்கள் கண்ணீரை கக்கின. கற்றுகொள்ளட்டும். இதுவும் ஒரு உணர்ச்சி தானே !!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *