ஈசன் விட்ட வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,245 
 
 

நாளை பொழுது விடிந்தால் தீபாவளி. வழக்கத்துக்கு விரோதமாக வெறுங்கையுடன் வேலையிலிருந்து வீடு திரும்பிய வெங்கடாசலத்தைச் சூழ்ந்து கொண்டு, “அப்பா, எனக்குப் பட்டுப் பாவாடை!” என்றது ஒரு குழந்தை; “அப்பா, எனக்குப் பட்டுச் சட்டை!” என்றது இன்னொரு குழந்தை. “எனக்குப் பட்டுப் பாவாடையும் வேண்டாம், பட்டுச்சட்டையும் வேண்டாம்; நிறையப் பட்டாசுதான் வேண்டும்!” என்றது மற்றொன்று; பட்டாசு வாங்கிக் கொண்டு வரும்போது பட்சணம் வாங்கிக் கொண்டு வர மறந்துவிடாதே, அப்பா!” என்றது மற்றும் ஒன்று.

எல்லாவற்றுக்கும், ‘ஆகட்டும், ஆகட்டும்’ என்று தலையை ஆட்டிவிட்டுக் கடந்த ஆறு மாத காலமாக நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் அப்பா ஆதிமூலனாரின் அறைக்குள் நுழைந்தான் அவன். “இப்போதுதான் வருகிறாயா?” என்றார் அவர், ஈனஸ்வரத்தில், “ஆமாம், அப்பா! உடம்பு எப்படியிருக்கிறது?” என்று கேட்டான் அவன்.

“என் உடம்புக்கு என்ன? அறுபதாண்டு விழாவைக் கொண்டாடிய அது, நூற்றாண்டு விழாவைக்கூடக் கொண்டாடும் போலிருக்கிறது! நீ போ, போய்க் காபி சாப்பிடு!”

“காபிக்கு இப்போது என்னப்பா, அவசரம்? டாக்டர் வந்தாரா, என்ன சொன்னார்?”

“வந்தார்; ‘கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்’ என்று சொன்னார்!”

‘கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்’ என்று சொன்னார் – இரு பொருள் கொண்டது போல் தொனித்த இது, அவனை என்னவோ செய்வது போலிருந்தது; இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் – ஏழு மாதத்துக் குழந்தையிலிருந்து எம்.ஏ பட்டம் பெறுகிற வரையில் அவனைப் பல கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அங்கே மாட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு மேலே அவனைப் பெற்றெடுத்த ஆறாவது மாதத்திலேயே கண்ணை மூடிவிட்ட அவன் அன்னையின் படம் மாட்டப்படிருந்தது – அன்றிலிருந்து, அதாவது தன் தாயார் கண்ணை மூடிவிட்ட அந்த நாளிலிருந்து, தாரம் இழந்த தன் தகப்பனார்-இழந்த தாரத்துக்குப் பதிலாக எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுதாரம் தேடிக் கொள்ளாத தன் தகப்பனார்-தன்னைக் காப்பாற்ற என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? எத்தனை பேருடைய தயவை நாடியிருக்க வேண்டும்? அதற்கெல்லாம் பிராயச்சித்தமாக இன்று வரை தான் அவருக்கு ஏதாவது செய்ததுண்டா, செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையாவது அவர் தனக்கு அளித்ததுண்டா? கடந்த ஆறு மாத காலமாகத் தன்னால் இயலாத நிலையில், ‘என்னைக் கொஞ்சம் தூக்கி உட்கார வை, கழிவிடத்துக்கு அழைத்துக் கொண்டு போ, படுக்க வைத்து விடு’ என்பதைத் தவிர!

இந்தச் சந்தர்ப்பத்தைக்கூட அவர் தனக்கு அவ்வளவு எளிதிலா அளித்துவிட்டார்? இல்லை; மருத்துவ மனைக்குப் போய் விடுவதாகவல்லவா சொன்னார்?

அப்படிப்பட்ட ஆத்மா ‘இன்றோ, நாளையோ?’ என்று இருக்கும்போது, இந்த வீட்டில் எப்படித் தீபாவளி கொண்டாடுவது? எனக்கு ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்று நச்சரிக்கும் குழந்தைகளை எப்படிச் சமாதானம் செய்வது?

இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத் தன் மகள் தங்கம் முழுகி மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்னமேயே வந்து விட்டிருந்த அவன் மாமியார் அபயாம்பாள் வந்து, “நான் சொல்கிறேன் என்று நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது; நல்ல நாளும் அதுவுமாக நீங்கள் அந்த மனுஷரை இங்கே வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதில்லை. இதுவோ குழந்தை குட்டிகள் உள்ள வீடு; அக்கம்பக்கத்துக்கு அஞ்சியாவது தீபாவளியை நாம் எப்படியாவது கொண்டாடியே தீர வேண்டும். பேசாமல் அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்; ஈசன் விட்ட வழியாகட்டும்!” என்றாள், அந்த வயதிலும் மருமகனைப் பார்த்து வெட்கப்படுபவளைப் போல் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு.

அதற்குக் கையில் காபியுடன் அங்கே வந்த தங்கம், “அதை ஏம்மா, நீ சொல்கிறாய்? அவருக்கு நல்லது சொல்வதும் தெரியாது; கெட்டது சொல்வதும் தெரியாது!” என்றாள் தனக்கே இயல்பான ‘தனித் தன்மை’யுடன்!

“சொல்ல வேண்டாம் என்றுதான் இருந்தேன், மனசு கேட்கவில்லை!” என்றாள் அவள் பெருமூச்சுடன்.
“வந்ததும் வராததுமாக இருக்கும்போதே அவர் பிள்ளையிடம் சொல்கிறாரே, ‘கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்’ என்று டாக்டர் சொன்னதாக -அவர் அப்படியா சொன்னார்? ‘இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது; இஷ்டப்பட்டதை யெல்லாம் சாப்பிடுங்கள்!’ என்றுதானே சொன்னார்?- ஏண்டா, பாலு! சொல்லேண்டா, நீ கூடத்தானே கேட்டுக் கொண்டிருந்தாய்?” என்று தன் மூத்த மகனைச் சாட்சிக்கு அழைத்தாள் தங்கம்.

“ஏன், உன்னுடைய வார்த்தையில் உனக்கே நம்பிக்கை யில்லையா?” என்றான் வெங்கடாசலம், அவளிடமிருந்த காபியை வாங்கி மேஜையின் மேல் வைத்துவிட்டு.

“என்னுடைய வார்த்தையில் எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது; உங்களுக்கு இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் அவனை நான் சாட்சிக்குக்கூப்பிட்டேன்!” என்று அவனை எரித்துவிடுபவள்போல் பார்த்துக்கொண்டே திரும்பினாள் அவள்.

“நீ சொன்னது சரியாய்த்தான் போச்சு! அவருக்கு நல்லதும் தெரியவில்லை, கெட்டதும் தெரியவில்லையே?” என்று சொல்லிக் கொண்டே அவளைத் தொடர்ந்தாள் அபயாம்பாள்.

***

இவையைனைத்தையும் படுக்கையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த ஆதிமூலனார் சிரித்தார் அவருடைய சிரிப்பிலே ஜீவன் இல்லையென்றாலும், சிந்தனையில் ஜீவன் இருந்தது.

பிறர் வெறுக்கும் வரை இருப்பதைவிட, விரும்பும் போதே இறந்து விடுவது எவ்வளவோ நல்லதுதான்! ஆனால், தான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே?

சம்பந்தியம்மாளுக்கு இன்று தான் இந்த நிலையில் இருப்பது ‘சங்கட’மாக இருக்கிறது என்றால், தன் மகனுக்கோ அது ‘தர்மசங்கட’மாக இருக்கிறது! இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிரவேறு என்ன வித்தியாசம் இருக்கிறது, இப்போதுள்ள சங்கடத்தில்?

மருமகளைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்; அவளுக்கு நான் எப்போதுமே வேண்டாதவன்! அவளுக்கு மட்டுமென்ன, இந்த உலகத்துக்கே இப்போது நான் வேண்டாதவன்தானே?

பேரப் பிள்ளைகளின் சந்தோஷத்தை அவர்கள் விரும்புவது போலவே நானும் விரும்பத்தான் விரும்புகிறேன். ஆனால்……..

இவர்கள் சொல்வது போல் தன் மகன் தன்னை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?

அங்கே நான் தீபாவளியும் அதுவுமாக வாயைப் பிளந்துவிட்டால், இங்கே இவர்களால் தீபாவளி கொண்டாடி விட முடியுமா? அப்போதும் அக்கம்பத்துக்கு அஞ்சியாவது இவர்கள் அதைக் கைவிடத்தானே வேண்டியிருக்கும்?

பார்க்கப் போனால் இந்த வருடத்தோடு முடிந்துவிடப் போவதில்லை இந்தத் துக்கம்; அடுத்த வருடமும் தொடரும் – இது சமூக நியதி; இந்த நியதி ஏன் தெரியவில்லை சம்பந்தியம்மாளுக்கு?

எது எப்படி யிருந்தாலும் தான் இந்தச் சமயத்தில் இப்படிப் படுத்திருக்கக் கூடாதுதான் -ஆனால் அதற்கு நானா பொறுப்பு? எல்லாம் வல்ல இறைவனின் சித்தம் அப்படியிருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

ஒன்று வேண்டுமானால் செய்யலாம் – அதாவது, இவர்களுடைய ஏச்சும் பேச்சும் காதில் விழாமல் இருப்பதற்காகத் தீபாவளிக்கு முன்னால் தன் உயிரைத் தானே வேண்டுமானால் மாய்த்துக்கொண்டு விடலாம்- கையில் வைர மோதிரம் அணிந்திருக்கும் தனக்கு அது ஒரு பெரிய காரியமும் இல்லை …….

இந்த எண்ணம் உதித்ததும் ஒளியிழந்த கண்களால் ஒளி மிக்க வைரமோதிரத்தைப் பார்த்தார் பெரியவர்-‘உன்னை நீர் மாய்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக என்னை நீ ஏன் மாய்க்கப் பார்க்கிறாய்? நான் இருந்தால் உனக்குப் பின்னால் உன் மகனுக்கு உதவ மாட்டேனா? என்று அது தன்னைப் பார்த்துக் கேட்பதுபோல் இருந்தது அவருக்கு-ஆம், எனக்குச் சில சமயம் உதவியது போல் நீ அவனுக்கும் உதவத்தான் வேண்டும் – மாட்டேன்; வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொண்ட உன்னைச்சாவுக்கும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்!

வேறு வழி?…….

விட்டத்தைப் பார்த்தார்; விட்டத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் கயிற்றையும் பார்த்தார் – இரண்டையும் பயன்படுத்தித் தன் வாழ்வை முடித்துக் கொள்வதென்பது அவ்வளவு இலேசா, என்ன? அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து முடிப்பதற்குள் யாராவது எழுந்து விட்டால்? வீட்டில் உள்ளவர்களோடு வீதியில் உள்ளவர்களும் சேர்ந்து விடுவார்கள். அதற்குப் பிறகு போலீஸ், விசாரனை என்றெல்லாம் ஏற்பட்டு, அதனால் தன் மகன் ஏன் அனாவசியமான தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டும்? – கூடாது; தன் மகன் தன்னால் எந்தவிதமான தொல்லைக்கும் உள்ளாகக் கூடாது!

தொட்டதும் உயிர் சட்டென்று போய்விட ஏதாவது வழியிருந்தால்? – ஏன் இல்லை, மின்சாரத்தைத் தொட்டால் அப்படியே போய்விடும் என்கிறார்களே? -ஆம், அதுவே வழி; அதுவே சரியான வழி!

இந்த முடிவுக்கு வந்ததும், ‘பொழுது எப்போது சாயும் இரவு அதை எப்போது தழுவும்?’ என்று காத்துக்கொண்டிருந்தார் அவர்!

“அடே பாலு, இங்கே வாடா! அடி வசந்தி, இங்கே வாடி”-கடைக்குப் போய்விட்டு வந்த சம்பந்தியம்மாள் பெருங்குரலிட்டு தன் பேரக் குழந்தைகளைக் கூப்பிடுவது பெரியவரின் காதில் விழுந்தது. எதற்காகக் கூப்பிடுகிறாள் அவள், அவர்களை?-ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

அதற்குள், “என்ன, பாட்டி? ஏன் கூப்பிட்டாய், எங்களை?” என்று கேட்டுக் கொண்டே வந்த அவையனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டன. பை நிறைய வாங்கிக் கொண்டு வந்திருந்த பட்டாசுக் கட்டுகளை எடுத்து அவர்களுக்கு முன்னால் வைத்து, “அந்தப் பாவி தான் இருந்த பாடும் இல்லாமல், செத்த பாடும் இல்லாமல் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறானே! தீபாவளியும் அதுவுமாக அவன் உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவானோ, என்னமோ என்றுதான் இன்றே நான் இந்தப் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வந்தேன்; எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்துங்கள்!” என்றாள் பாட்டி.

அவ்வளவுதான்!-அடுத்த நிமிஷம் ‘புஸ்’ என்று சீறிப் பொங்கி வழிந்தது பூவாணம்; ‘விர்’ என்று பறந்து சென்று வெடித்து வீழ்ந்தது வாணவெடி; ‘குப், குப்’ என்று கொழுந்து விட்டு எரிந்தது மத்தாப்பு; ‘கிரு கிரு’ என்று சுழன்று சுழன்று வந்தது சங்குச்சக்கரம்; ‘டம் டமார்!’ என்று வெடித்தது யானை வெடி; ‘பட், படார்!’ என்று வெடித்தது ஊசி வெடி குழந்தைகளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை ; ‘குதி குதி’ என்று குதித்துக் கும்மாளம் போட்டன!

ஆயிற்று, பட்டாசும் ஆயிற்று; எல்லோரும் சாப்பிட்டும் ஆயிற்று. இனி தூங்க வேண்டியதுதான் பாக்கி; தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டு விடலாம்……..

இப்படி அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது, “ஏன் அப்பா, நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லையா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் வெங்கடாசலம்.

“கொடு; கடைசியாக உன் கையால் ஏதாவது கொடு” என்று கேட்க வேண்டும்போல் தோன்றிற்று அவருக்கு; ஆனால் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, “எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ போய்ப் படுத்துக் கொள்!” என்று சொல்லிவிட்டார். அவனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த விரும்பாமல் போய்ப் படுத்துக் கொண்டு விட்டான்.

விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன; வீட்டை இருள் கவ்விற்று. ‘நொய்’ என்ற சுவர்க்கோழியின் சத்தத்தையும், ‘கொர், கொர்’ என்ற குறட்டைச் சத்தத்தையும் தவிர வேறு சத்தம் இல்லை.
அதுதான் சமயம் என்று பெரியவர் எழுந்தார்; ‘மீட்டர் போர்’டை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தார்.

ஒரு சந்தேகம்; நின்றார்…….

அழைப்பதற்கு முன்னால் சென்றால் ஆண்டவன் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?-அந்தக் கவலை தனக்கு ஏன்? எல்லாவற்றுக்கும் காரணமான அவன்தானே தான் இந்த முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிருந்திருக்க வேண்டும்? தீர்ந்தது சந்தேகம்; மேலே நடந்தார்………

‘மீட்டர் போர்டு’ கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கைக்குத் தெரிந்தது. ஆம், தடவிப் பார்த்த கைக்குத்தான்! – அதற்குமேல் யோசிக்கவில்லை அவர்; ‘மெயின் ஸ்விட்ச்’சைத் திறந்து, ‘ராமா!’ என்று ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே ‘டக்’கென்று கையை வைத்துவிட்டார்!

ஆனால் என்ன ஆச்சரியம்! எந்த விதமான ‘ஷாக்’கும் அடிக்கவில்லை அவருக்கு. ஒருவேளை ‘ஆப்’பாயிருக்குமோ?

வராந்தா விளக்கைப் போட்டுப் பார்த்தார்; எரியவில்லை! அட, கடவுளே! இதற்குத்தானா இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டேன், நான்? – ஏமாற்றத்துடன் திரும்பினார் பெரியவர்!

இருந்தாலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று தோன்றிற்று அவருக்கு. தம்முடைய அறையின் விளக்குக் குரிய ‘ஸ்விட்ச்’சைப் போட்டுவிட்டுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தார். அது எரிந்ததும் தம்முடைய முயற்சியைத் தொடரலாம் என்ற உத்தேசத்துடன்!

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அது எரியவில்லை ; அதற்குப் பதிலாகத் தம் வாழ்வைத் தாம் முடித்துக் கொள்ளும்வரை எந்தப் பொழுது விடியக் கூடாது என்று அவர் நினைத்தாரோ, அந்தப் பொழுது விடிந்தது; தீபாவளியும் ‘வந்தேன், வந்தேன்!’ என்று வந்தது.

“அப்பா! சாஸ்திரத்துக்காக ஒரு துளி எண்ணெய் தொட்டுத் தலையில் வைத்துக் கொள்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே கையில் எண்ணெய் நிரம்பிய கிண்ணத்துடன் அவரை நோக்கி வந்தான் வெங்கடாசலம்.

அந்தச் சமயத்தில்…….

“ஐயோ, அம்மா! நேற்றுக்கூட நன்றாயிருந்தாயே, இன்று எப்படி அம்மா போய்விட்டாய்?” என்ற தங்கத்தின் அழுகுரல் அவன் காதில் விழுந்து, அவனுடைய நெஞ்சைப் பிளந்தது; கையில் இருந்த எண்ணெய்க் கிண்ணத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு ஓடிப் போய்ப் பார்த்தான்-அபயாம்பாள் இந்த உலகத்தில் இல்லை!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *