பத்து வருடங்களாக தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் நட்சத்திரம் ஸ்வர்ணலதா. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தாகி விட்டது!
முதலில் தன் கவர்ச்சியால் திரை உலகைக் கட்டிப் போட்ட ஸ்வர்ணலதா, இப்பொழுது நடிப்பில் சாவித்திரிக்கு ஈடாகப் பேசப் படுகிறார். பாசமுள்ள குடும்ப பாங்கான வேடத்திற்கு ஸ்வர்ணலதாவை விட்டால் இன்று ஆள் இல்லை!
இரவு பகலாக கால்ஷீட் கொடுத்தும் அவளால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய இரண்டு வயசு குழந்தை சிநேகா மேல் அவளுக்கு உயிர். காலையில் சிநேகா எழுவதற்கு முன்பே ஷூட்டிங்கிற்கு கிளம்பி விடும் ஸ்வர்ணலதா, நள்ளிரவு வீடு திரும்பும் பொழுது, குழந்தை சிநேகா ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்.
வீட்டில் ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஆட்கள். சிநேகாவோடே எந்த நேரமும் கூட இருந்து கவனித்துக் கொள்ள பரிமளா என்ற ஒரு படித்த இளம்பெண்ணை நியமித்திருந்தாள். வீட்டில் நவீன வசதிகளுக்கு குறைவில்லை.
பரிமளா எவ்வளவோ முயற்சி செய்தும் சிநேகாவை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள அவளால் முடிய வில்லை.
சிநேகா ரூமில் ஒரு மூலையில் ஒரு டி.வி.யும் டி.வி.டி. பிளேயரும் எப்பொழுதும் இருக்கும். நேரம் கிடைக்கும் பொழுது எப்பொழுதாவது பரிமளா அதில் சினிமா பார்ப்பாள். சமீபத்தில் ஸ்வர்ணலாதா நடித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த ‘பாசத்தின் அடிமை!’ திரைப் படத்தை ஒரு முறை அதில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையும் அதைப் பார்த்துக் கோண்டிருந்தது! அதில் ஸ்வர்ணலதா ஒரு குழந்தையை கட்டியணைத்து அடிக்கடி முத்தம் கொடுத்து கொஞ்சும் காட்சிகள் நிறைய அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன.
சிநேகா கண் இமைக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் பரிமளா ஸ்வர்ணலதா குழந்தைகளோடு நடித்த கேசட்டுகளை போட்டு விட்டு, நிம்மதியாக படிக்க ஆரம்பித்து விடுவாள்.
சிநேகா திரையில் அம்மா கொடுக்கும் முத்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே பொம்மைகளுக்கு நடுவே ஒரு பொம்மையாக அமைதியாக உட்கார்ந்து விடுவாள்!
– பாக்யா ஆகஸ்ட் 21-27