மாதவிக்குட்டி!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,480 
 

காலையில் ஆபிஸ் வந்து, வருகைப் பதிவில் கையெழுத் திட்டு, அவரவர் சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தோம்.
ரகுவும், தன் சீட்டில் உட்கார்ந்து, எல்லாரையும் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்தான். அவனுக்கு டிரேட் மார்க்கே, அந்த சிரிப்பு தான். ஆனால், இன்று அந்த சிரிப்பில், ஏதோ ஒரு விசேஷமிருப்பது போலத் தோன்றிற்று எனக்கு.
எங்கள் ஆபிசில் அனைவரும் திருமணமானவர்கள்; ரகுவுக்கு மட்டும் தான் இன்னும் கல்யாணமாகவில்லை. 30 வயதை எட்டிக் கொண்டிருந்தான் அவன். ஒரேயொரு தங்கையும், கல்யாணமாகி புருஷன் வீட்டிற்குப் போய் விட்டாள். வயதான அப்பா, அம்மா. அப்பா, போஸ்டல் டிபார்ட் மென்ட்டில் வேலை செய்து, சமீபத்தில் தான் ஓய்வு பெற்றிருந்தார்; அம்மா ஸ்கூல் டீச்சர்.
மாதவிக்குட்டிதிருச்சூர் அருகே, வடக்கன் பாதிரியார் தான், ரகுவின் சொந்த ஊர். கேரள மாநிலம். பேச்சில் மலையாள வாடை அடிக்கும். எதை பேசினாலும், “எந்தா வலியது அறியுமோ?’ என்பான். அவனுடன் பேசுவதில், எங்களுக்குக் கூட மலையாளம், “குறைச்சு குறைச்சு…’ வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
“எந்தா ரகு… எப்போ கல்யாணமாக்கும்?’ என, அலுவலகத்தில் உள்ள அனைவரும், ரகுவிடம் அடிக்கடி கேட்போம்.
“குறச்ச நாள்ல!’ என்பான் ரகு.
அந்த குறச்ச நாள், குறச்ச மாதமாகி, குறச்ச கொல்லமாகி விடும். யாரையாவது அவன் காதலித்து, அந்தப் பெண் கிடைக்காமல் போய், அவன் கல்யாணம் நடக்காமலிருக்கிறதோ என்ற, “சம்சயம்’ எங்களுக்கு உண்டாச்சு.
அதையும் அவனிடம் கேட்டோம்.
“எந்தனோட அச்சனும், அம்மையும் பொண்ணு பார்த்துக்கிட்டிருக்கு; சரியான பொண்ணு இன்னம் கிட்டிட்டில்ல?’ என்பான் ரகு.
மேலே பார்த்து, “ஆ குருவாயூரப்பனே அறியும்…’ எனச் சொல்வான் ரகு.
பிறகு எல்லாரும், பதினொன்றரை மணியானதும், கேன்டீன் போய், டீ குடித்துவிட்டு வந்து, மறுபடியும் சீட்டில் உட்கார்ந்தோம்.
பிளாஸ்டிக் பை ஒன்றை திறக்கும் சப்தம் கேட்டது. அந்த சப்தம், ரகுவின் டேபிளின் மீதிருந்து தான் கேட்டது. ஜவுளிக் கடையில் துணி வாங்கினால், அதை சற்று மொட மொடப்பான பிளாஸ்டிக் கேரி பேக்கில் கொடுப்பரே, அது மாதிரி இருந்தது. மஞ்சள் கலர் பை, மஞ்சள் மங்கலத்தின் குறி. மங்களகரமான காரியம் ஒன்று நடக்கும் போது, அதிகமாக உபயோகப்படுவது மஞ்சள் வண்ணம் தான். திருமண அழைப்பிதழ், திருமாங்கல்யம்…
பிளாஸ்டிக் பையை மடித்து, மேஜை மீது வைத்து, அதிலிருந்து எடுத்தவைகளை, ஒருமுறை ஒன்றன் பின் ஒன்றாக தள்ளி பார்த்து, பிறகு எல்லாரும் அவரவர் இடத்தில் இருக்கின்றனரா என பார்த்தான் ரகு. முகத்தில், சிரிப்பும், சந்தோஷமும் தெரிந்தது.
முதலில் என்னிடம் வந்த ரகு, “”கோபி… நீ அடிக்கடி சோதிக்கும் அல்ல, எப்ப என் கல்யாணம்ன்னு?
ஆ கல்யாணம்,” எனச் சொல்லி, என் பெயர் எழுதிய ஒரு திருமண அழைப்பிதழை, என்னிடம் கொடுத்தான்.
“”கன்கிராஜுலேஷன்ஸ்,” என, அவன் கைகளை பிடித்து குலுக்கி, அழைப்பிதழை பெற்று, கவரிலிருந்து எடுத்து பிரித்துப் பார்த்தேன். மணமகன் என்ற இடத்தில், ரகுவின் பெயரும், மணப்பெண் என்ற இடத்தில், மாதவிக்குட்டி என்றும் இருந்தது. மாதவிக்குட்டி என்ற பெயரை படித்ததுமே, முதுகு முழுவதும் கூந்தலை பரவவிட்டு, காதருகே இருபுறமும் ஹேர்பின் குத்தி, நல்ல நிறத்தில், மூக்கும் முழியுமாக, நெற்றியில் சாந்து குங்குமமிட்டு, அதன் கீழ், அரை அங்குல நீளத்துக்கு, கீற்று போல் சந்தனமுமிட்ட ஒரு இளம் பெண் தோன்றி, “நானே மாதவி… ஙென்னை மாதவிக்குட்டி என விளிக்கும்…’ என சொல்லி, “கலகல’வென சிரித்தாள்.
திருமணம் எங்கேயென்று பார்த்தேன். வயநாட்டில், ஒரு பெயர் அறியா ஊராக இருந்தது. கள்ளிக்கோட்டை சென்று, அங்கிருந்து, 50 மைல் தூரம் பயணம் செய்தால் தான், வயநாட்டை அடைய முடியும். அதன்பின், அந்த சின்னஞ்சிறிய ஊருக்குள் செல்ல வேண்டும்.
“”என்ன ரகு… நாங்கள் எல்லாம் எங்கே உன் கல்யாணத்துக்கு வந்து விடுவோமோ என பயந்து, கேரளாவில், சுலபமாக போய் சேர முடியாத ஊரில், உன் கல்யாணத்தை வைத்திருக்கிறாயே?” என்று கேட்டேன்.
“”அது பெண்குட்டியோட சொந்த ஊராகணம். அவடம் தன்னை, பெண் குட்டியோட உறவுமாறெல்லாம் வளர உண்டு,” என்றான் ரகு.
“”கல்யாணத்துக்குப் பிறகு, மனைவியை அழைச்சிக்கிட்டு சென்னை வருவாயல்லவா?”
“”நிச்சயம் ஞானும், எந்தனோட பாரியாளும் சென்னை வரும் கோபி. ஙெனக்கி பணி இவ்விடந்தன்னே? வயநாடு வல்லிய தூரம்ன்னு, நீங்கள் கல்யாணத்துக்கு வராமலிருக்கக் கூடாது. கேட்டோ… அவசியம் வரணம்!” என்று சொல்லி, ஒவ்வொரு டேபிளாக சென்று, கல்யாண அழைப்பிதழை கொடுத்தான் ரகு.
எல்லாருக்கும் சந்தோஷம். ஆனால், அவ்வளவு தூரம் எப்படி செல்வதென்று யோசனை.
சென்னை வந்ததும், ஆபிசளவில் ஒரு பார்ட்டி கொடுத்து, அனைவரின் சார்பிலும் ஒரு பிரசன்டேஷன் கொடுப்பதென்றும், கல்யாணத்தன்று, ஒவ்வொருவரும் மொபைல் போனில் அவனுக்கு வாழ்த்து சொல்வதென்றும் தீர்மானித்தோம்.
அப்படியே செய்தோம். “தாங்க்யூ…’ என அவற்றை ஏற்று, கல்யாணத்துக்கு ஒருவர் கூட வரவில்லையே என, வருத்தப்பட்டுக் கொண்டான் ரகு.

திருமணம் முடிந்து ஒரு சில நாட்களில், அவன் தன் இளம் மனைவியுடன் சென்னை திரும்புவானென்று எதிர்பார்த்தோம்; ஆனால், வரவில்லை. ஒரு மாதமானது. லீவுக்கு அப்ளை செய்திருந்தான்.
திருமணத்தன்று அவன் மனைவி, அருந்ததி பார்க்க அக்னி வலம் வரும்போது, ஹோமகுண்டத்தின் அருகிலிருந்த அம்மிக் கல் தடுக்கி, கீழே விழுந்து, தலையில் அடிபட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் அட்மிட்டாகி இருப்பதாகவும், லீவு அப்ளிகேஷனில் குறிப்பிட்டிருந்தான் ரகு.
“என்ன துரதிருஷ்டம்… வருடக் கணக்காக தள்ளிப் போன திருமணம், ஒரு நாள் நடந்தபோது, யாருடைய கொள்ளிக் கண்ணோ பட்டு, அவள் மனைவி மருத்துவமனையில், “அட்மிட்’ ஆகும்படி ஆகிவிட்டதே…’ என, ஆபிசில் நாங்களெல்லாம் மிகவும் மன வருத்தப்பட்டோம். ரகுவை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னோம். அவன் சுரத்தின்றி இருப்பது, அவன் பேசுவதிலிருந்தே தெரிந்தது.
தொண்டை கரகரக்க, கண்களில் கண்ணீர் ததும்ப, தாடியும், மீசையுமாக அவன் சொன்ன செய்தி, எங்களை திடுக்கிட வைத்தது.
அவன் மனைவிக்கு தலையில் அடிபட்டு, காயம் குணமாகவே இரண்டு மாதமாயிருக்கும். அதன்பின் தான் தெரிந்ததாம், அடிபட்ட வேகத்தில், அவள் சித்தம் கலங்கிவிட்டது என்று. அப்பா, அம்மா உட்பட யாரையும், மாதவிகுட்டிக்கு அடையாளம் தெரியவில்லையாம். “நீங்களெல்லாம் யார்?’ என கேட்கிறாளாம். சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறாளாம்.
திடீர் திடீன்னு சிரிக்கிறாள், அழுகிறாளாம். இதை கண்ட அவளின் அப்பா, அம்மாவின் அழுகைக்கும், புலம்பலுக்கும் ஒரு அளவே இல்லையாம். 24 மணி நேரமும், யாராவது ஒருவர் மாதவிக்குட்டி அருகிலிருந்து, அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக் கிறதாம். தனக்கு கல்யாணமாகி விட்டது என்பதே அவளுக்கு தெரியவில்லையாம். ரகுவை, “எந்தா சேட்டா?’ என்கிறாளாம் மாதவிக்குட்டி.
ஆபிசில் ஒரு மாதம் வேலை பார்த்தபின், மனைவியின் ஊருக்கு ஒருமுறை சென்று, பத்து நாட்களுக்குப்
பிறகு திரும்பி வந்த ரகுவிடம், அவன் மனைவியின் சித்தம் தெளிவாகி விட்டதா என விசாரித்தோம்.
“”அப்படியே தான் இருக்கிறது…” என்று சொல்வதற்குள், கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான் ரகு. அவனை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை எங்களுக்கு. மாதவிக்குட்டியின் பெற்றோர், “எங்கள் மகளால், உங்கள் சந்தோஷமான வாழ்க்கை வீணாகி விட்டதே மாப்பிள்ளை?’ என்று சொல்லி அழுது, வருந்துகின்றனராம்.
அவ்வப்போது, வயநாடு போவதும், வருவதுமாக இருந்தான் ரகு. எப்போது உன் மனைவியை சென்னைக்கு அழைத்து வரப் போகிறாய் என கேட்க, எங்களால் முடியவில்லை. அவனுடைய துயரம் மிகுந்த சோக உருவம், எங்கள் வாயை கட்டிப்போட்டு விட்டது. பித்துப் பிடித்தவனை போலிருந்தான் ரகு. சிரிப்பு அவனை விட்டு போயே போய்விட்டிருந்தது.

இரண்டு நாள் ஆபிசுக்கு வரவில்லை ரகு. மனைவியை பார்க்க வயநாடும் செல்லவில்லை; சென்னையில்தான் இருந்தான். அவன் அட்ரஸ் என்னிடம் உள்ளதால், பார்த்துவிட்டு வரலாமென்று சென்றேன்.
வீட்டில், டேபிளின் மீது, தன் திருமண போட்டோ ஆல்பத்தை பிரித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ரகு. கண்ணீர் தாரை தாரையாக கண்களிலிருந்து கொட்டிக் கொண்டிருந்தது.
“”ரகு…” என்று அழைத்தேன்.
என் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்த அவன், “பட்’டென்று திருமண போட்டோ ஆல்பத்தை மூடி வைத்து, “”வா கோபி…” என்றான்.
“”ஏன் இரண்டு நாளாக ஆபிஸ் வரவில்லை ரகு?” என்று கேட்டேன்.
“”நேற்று எனக்கு பர்ஸ்ட் வெட்டிங்டே கோபி!” என்று சொல்லும் போதே, அவன் குரல் தழுதழுத்தது.
“”சந்தோஷமாக வாழ்த்து தெரிவிக்க முடியவில்லையே ரகு!” என்றேன் குரல் கம்மி.
தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ளக்கூடத் தோன்றாமல், ரகு அவற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தது பார்க்கவே, கஷ்டமாகயிருந்தது.
டேபிளின் மீது கிடந்த போட்டோ ஆல்பத்தை எடுத்தேன்.
“”அதை நீ பார்க்க வேண்டாம் கோபி; மனம் கஷ்டப்படும்,” என்றான் ரகு.
“”பரவாயில்லை ரகு… ஒரு வருடமாக நீ கஷ்டப்படுவதை பார்த்துப் பார்த்து, என் மனம் ஓரளவுக்கு சமாதானமாகி விட்டது,” என சொல்லியபடி, போட்டோ ஆல்பத்தை பிரித்தேன்.
“”உன் கல்யாணத்துக்குத்தான் என்னால வர முடியல… கல்யாண போட்டோ ஆல்பத்தையாவது பார்க்கிறேன். உன் மனைவி மாதவிக்குட்டி, எப்படி இருக்கிறாள் என்று நான் பார்க்கலாமல்லவா?” என்றபடி, போட்டோ ஆல்பத்தை திறந்தேன்.
“நல்வரவு’ சொல்லும் மின் விளக்குகளின் ஜொலிப்போடு, போட்டோ ஆல்பம் ஆரம்பித்திருந்தது. பெரிய கல்யாண மண்டபம், அலங்காரங்கள், திருமண மேடை, மணமகன் கார் ஊர்வலம், நிச்சயதார்த்தம் என, போட்டோக்கள் வரிசையாக வந்தன. நிச்சயதார்த்தத்தில் எடுத்த போட்டோவில், மாதவிக்குட்டி ரொம்ப அழகாகவும், சிரித்தபடியும் இருந்தாள்.
அடுத்த பக்கத்திலிருந்து, திருமண போட்டோக்கள் ஆரம்பமானது.
“சட்’டென்று போட்டோ ஆல்பத்தின் பக்கத்தை புரட்டிய நான்…
“”ரகு… என்ன நடந்தது? ஏன் ஜானவாசம், நிச்சயதார்த்தம் வரை, ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்த உன் கல்யாண நிகழ்ச்சிகள், மறுநாள் காலை நடக்கவில்லை?” என்று கேட்டேன்.
“”கல்யாணம் நடக்கவில்லை என்று நீ எப்படி சொல்கிறாய் கோபி?” என, பதறியபடி கேட்டான் ரகு.
“”கல்யாண போட்டோ ஆல்பம், ஜானவாசம், நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டதோடு, மறுநாள் நடந்திருக்க வேண்டிய காசி யாத்திரை, கன்னிகாதானம், திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், சப்தபதி ஆசீர்வாதம் நிகழ்ச்சி, எதுவுமே போட்டோ எடுக்கப்படவில்லையே,” என்றேன்.
“”அவைகள் எதுவுமே நடக்கவில்லையே கோபி!”
“”ஏன் நடக்கவில்லை ரகு?”
“”அதெல்லாம் நடக்க, மாதவிக்குட்டி இல்லையே கோபி?”
“”என்னவானாள் மாதவிக்குட்டி?”
“”அவள் யாரையோ விரும்பியிருக்கிறாள்; அவனுடன் ஓடிப்போய் விட்டாள். நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் வரை, நிறைய நகைகள் போடும் வரை காத்திருந்து, இந்த திருமணத்தில் தனக்கு மிகவும் பிரியமுள்ளதாக காட்டி, நடுநிசியில் எவனோடோ, ஓடி விட்டாள். என் கல்யாணம் நின்று போய்விட்டது ரகு. இந்த அவலத்தை, இந்த அவமானத்தை எப்படி சொல்வேன். என் அப்பா, இந்த அவமானத்தால் பாதிக்கப்பட்டு, மாரடைப்பில் காலமாகி விட்டார்.
“”நான் பட்ட அவமானம், கேவலம் எவருக்கும் தெரிய வேண்டாமென்று தான், மாதவிக்குட்டிக்கு தலையில் அடிபட்டு, சித்தம் கலங்கி விட்டதென்று உங்களிடமெல்லாம் சொன்னேன் கோபி!” என்று சொல்லி, தேம்பி தேம்பி அழுத ரகுவை, எப்படி தேற்றுவதென்று தெரியாமல், காலியான பாதி போட்டோ ஆல்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

-ஸ்ரீ சங்கரராமன் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *