கதை ஆசிரியர்: கி.ரா.
விடிகாலை நேரமாகத்தான் இருக்கும். அவளுடைய இடது கை அவருடைய பரந்த புஜங்களைத் தடவி, ”என்னங்க…” என்றாள்.
”ம்…” என்றுகொண்டே அவர் நெளிர்விட ஆயத்தமானபோது, அதை நிறுத்த முற்படுவதுபோல அவருடைய உடம்போடு பினைந்து பின்னிக்கொள்வது ஒரு சுகம்.
”என்ன இது, சின்னப் பிள்ளைபோல…” என்றார்.
”இன்னிக்கும் ஒரு கனவு கண்டேன்” என்றாள்.
”சொல்லு சொல்லு… கேப்போம்” என்றார்.
ஜானு சொல்லத் தொடங்கினாள். இரண்டாம் சாமக்கோழி கூவியது. போர்த்திக்கொண்டு இருந்த வேட்டியை உடுத்திக்கொள்வோமா என்று நினைத்தார்.
”அம்மாவும் நானும், எங்க வீட்டு அடுப்பங்கூடத்துக்கு மேற்கே உள்ள தரையில் ஈச்சம் பாய்களை விரித்துப் படுத்திருக்கோம். பகல் மாதிரி நிலா காயுது. ராப்பாடியின் குரலும் உடுக்குச் சத்தமும் கீழத் தெரு மூலையில இருந்து கேக்குது. எனக்கு மெனா (முழிப்பு) வந்துட்டது. பக்கத்தில் கட்டிப்போட்டு இருந்த பள்ளை ஆடு கலைஞ்சி எந்திரிச்சு நின்னது. அம்மா குறட்டைபோட்டுத் தூங்கிக்கிட்டு இருக்கா. வழக்கமா வர்ற அதே பாம்புதான் வந்தது. நேரெ வந்து அம்மாவோட சேலையெக் கடிச்சி இழுக்கு. அதெ விரட்டுறதுக்குக் கையெ ஓங்க நினைக்கேம்; கையி வர மாட்டேங்கு. சத்தம் போட நினைக்கேம்… தொண்டையில இருந்து சத்தம் எழும்ப மாட்டேங்கு. ஆடு சத்தம் கொடுக்கு. பாம்பு ஆட்டெப் பாத்துப் படமெடுத்து சீத்தடிக்கி! மாட்டுத்தொழுக் கதவெத் தட்டுற சத்தம் கேட்டது. நா முழிச்சிட்டேம்; நீங்கதாம் இங்கெ குறட்டைவிட்டுத் தூங்கிக்கிட்டு இருக்கீக!”
சிரிப்பு வந்தது அவருக்கு; அடக்கிக்கொண்டார். அவளோடு இந்த வீட்டுலேயே குப்பை கொட்டி இருபத்தி அஞ்சி வருசத்துக்கும் மேலெ ஆகப்போகுது. அவளோட பாம்புக் கனவுகள் கேட்கச் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், ஒரு கனவுகூட இந்த வீட்டில் நடந்ததாக இருக்காது. இதை அவர் ஒருநாள்கூட அவளிடம் சொல்லிக் காட்டியது இல்லை.
அதுக்குக் காரணம் இருந்தது. அவளாகவே அந்த வீட்டைவிட்டு இந்த வீட்டுக்கு விரும்பி வந்தவள். எப்பவாவது அவசியம் கருதி ‘அந்த வீடு’ என்று வாய் தவறி அவர் வாயில் இருந்து பேச்சு வந்தாலே, ”வேண்டாம்; அந்த வீட்டுப் பேச்சு” என்று முகத்தில் அறைந்ததுபோலச் சொல்வதே அவள்தான். கனவைச் சொல்லும்போது மட்டும் அவளுடைய வீடு வரும். கனவுக்குக் கனவு அந்த வீடுதான் வரும்!
ஒருநாள்… நடுச் சாமம் இருக்கும். சோமய்யா தொழு வீட்டின் உள் திண்ணையில் படுத்துஇருந்தார். கனமான கதவு. தாழ்ப்பாள் உண்டு என்றாலும், பூட்டுவது இல்லை. திறக்கும்போதே அந்தக் கதவு திண்ணையை உரசிக்கொண்டுதான் திறக்கும். அதோடு, அதன் குடுமி மெல்லியராகம் இசைக்கும். சின்ன அலுக்கட்டம் என்றாலே சோமய்யாவுக்கு மெனா வந்துவிடும்.
அப்போதுதான் அவர் ‘சோத்துத் தூக்கம்’ முடிந்து எழுந்து, உழவு மாடுகளுக்கு எல்லாம் கூளம் போட்டுவிட்டு வந்து திண்ணையில் சாய்ந்தார். ஒரு வித்தியாசமான மெல்லிய மணம் மூக்கைத் தொட்டது.
விடலைப் பிள்ளைகள் தனித்துப் படுத்திருந்தால், ‘மோகினிப் பேய் தேடி வரும்’ என்று சோமய்யா கேள்விப்பட்டு இருக்கிறார், கதைகளில்.
இப்போது நிஜமாகவே யாரோ வந்து இருக்கிறார்கள். ஒருவேளை அவளாக இருக்குமோ?
அப்போது ஒரு மேல் காற்றுப் பருவம். பெரும்பாலான வீடுகள் மட்டுமல்ல… தொழுவங்கள் அத்தனையும் கூரைகளால் வேயப்பட்டவையே. எப்படித் தீ எழுந்து பரவியது என்று தெரியவில்லை. சோமய்யா தன்னுடைய மாடுகள் அனைத்தையும் அவிழ்த்து, தெருவில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, உழவுக் காளைகள், வண்டி மாடுகளையும் அவிழ்த்துக் கொண்டுபோய், கம்மாக்கரை மரங்களின் வேர்களில் கட்டிவைத்துவிட்டு, ஊருக்குள் ஓடி வந்தார். மொத்த இருட்டும் மறைந்து, ஊருக்குள் அப்படி ஒரு வெளிச்சம். கூரை வீட்டுக் காரர்கள் அத்தனை பேரும் கையில் ஈரச் சாக்குடன் அவரவர் வீட்டைச் சுற்றி வருகிறார்கள். ஓலைக் கூரை வீட்டுக்காரர்களுக்குத்தான் பதைபதைப்பு அதிகம். தட்டைக் கூரைக் காரர்களுக்கு அவ்வளவு பயம் இல்லை. சீகைக் கூரைக்காரர்களுக்குப் பயமே இல்லை. நெருப்புப் பிடித்தாலும் பற்றி எரியாது. ஜானு வின் வீட்டு மாட்டுத் தொழுவில் அப்போது தான் நெருப்புத் தொற்றியது. கம்மந்தட்டையால் நிறைந்த கூரை. அங்கே அந்த வீட்டு ஆண்களில் முக்கியமானவர்களைக் காணோம். வீட்டுக்குள் சாமான்களை ஒதுங்கவைத்துக்கொண்டு இருப்பார்கள்போல் இருக்கு. அது இவர்களுக்குப் பகையாளிகளின் வீடு. பேச்சுவார்த்தை கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்தால் பார்க்காததுபோலப் போவார்கள். இதுக்கும் அவர்கள் தாயாதிகள் இல்லை… சம்மந்தக்காரர்கள்தான். வெறும் சம்மந்தக்காரர்கள் என்று சொல்லுவது இல்லை. கொழுத்த சம்மந்தக்காரர்கள்.
இந்தப் பகை ரெண்டு தலைமுறையாக இருந்து வருகிறது. இதனால், இவர்களுக்குள் நடந்திருக்க வேண்டிய நல்ல சம்மந்தங்கள் எல்லாம் தட்டிப்போயிருக்கின்றன.
ஊர்களில் இப்படி இருப்பது வழக்கம்தான். இவன் மிதித்துச் சென்ற காலடித் தடத்தில் அவன் மிதிக்க மாட்டான். மாட்டுச் சந்தையில் அவன் பார்த்த மாட்டை, இவன் பார்க்க மாட்டான்!
ஆனால், களத்தில் விதை தானியங்கள் மழையில் நனைகிறது என்றால், பகையாளியாக இருந்தாலும் ஓடிப் போய் உதவுவார்கள் என்றாலும், அதன் பிறகும் பேசிக்கொள்ள மாட்டார்கள்!
சோமய்யா ஓட்டமும் நடையுமாகத் தெரு வழியாக வந்துகொண்டு இருந்தார். தெரு எல்லாம் அவிழ்த்துவிடப்பட்ட மாடுகள். ஜானுவின் தொழுவாசல் கதவு மூடப்பட்டு இருந்தது. காலால் ஓங்கி உதைத்துத் தள்ளினார். அந்தக் கதவுக்கு கல் அடைதான் உண்டு, பூட்டு இல்லை.
உள்ளே போன பிறகுதாம் தெரிந்தது… பாய்ச்சல் உழவுக்காளை மட்டும் கயிற்றை அத்துக்கொண்டு, மருண்டு அங்கும் இங்கும் திரிந்துகொண்டு இருந்தது. மற்ற மாடுகளும் அவிழ்த்துவிடப்படாமல் கலைந்த பார்வையில் திகைத்துக்கொண்டு இருந்தன. ஜானு வீட்டார், என்ன செய்ய என்று பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.
யோசிக்க நேரம் இல்லை. அவர்களோடு பேசிக்கொள்ளவும் முடியாது. முறிந்துபோன நீண்ட வண்டிவாரி ஒன்று கிடந்தது. அதை எடுத்தார். வாகாக அமைந்ததால் அதைக் கண் இமைக்கும் நேரத்தில் அதன் கழுத்தில்வைத்தார். உடனே ஓர் அதிசயம் நிகழ்ந்தது! என்னதான் பாய்ச்சல் மாடாக இருந்தாலும், அதையும் மூக்கணாங்கயிறு பூரி வேலையில் கட்டி வசத்தியாச்சே. கழுத்தின் மேல்வைத்த அந்த வண்டிவாரி அதுக்கு மோக்கால் (நுகந்தடி) போல் தெரிந்தது போலும். கடமை ஞாபகம் வந்துவிட்டது போலிருக்கு!
அப்படியே கிட்டத்தில் போய் கபக் என்று மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொண்டார். வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஜானு வீட்டுக்காரர்களின் பதைப்பான முகம் மாறி சிரிப்பாக ஆனது. மற்றவர்கள் ஓடி வந்து கட்டு மாடுகளை அவிழ்த்து தெருவுக்கு ஓட்டினார்கள். அதுவரைக்கும் சோமு மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அந்தக் காட்சி கிடைத்தது பார்க்க. தொழுவையும் வீட்டையும் இணைக்கும் ஒரு சிறிய அறையில், அப்போதுதான் சடங்கான அந்தச் சின்னப் பொண்ணு ஜானு, சோமுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவள் முகம் அப்போதுதான் அரைத்த மஞ்சள் உருண்டைபோல் இருந்தது. அவள் பார்வை மின்னல் இறங்குவதுபோல அவருக்குள் இறங்கியது. வீட்டார்கள் அங்கே இல்லை என்றால், இன்னொரு தடவை பார்க்கலாம். அந்தச் சிரிப்பு முகம் மனசில் இருந்து அழிய மாட்டேங்கு.
ஊரில் பற்றிய தீ அணைந்த பிறகும் இந்தத் தீ அணைவேனா என்கிறது.
அன்று அவர்களின் தொழுக் கதவை இவர் ஓங்கி மிதித்துத் தள்ளித் திறந்துகொண்டு வேகமாகப் புகுந்தார். இன்று இவள் மொள்ளத் தொட்டுக் கதவைத் திறக்க, ராகம் பாடிக்கொண்டே திறந்தது. கண்டுகொண்டார் உடனே, இவள்தான் என்று. அப்படியே அலேக்காகத் தூக்கித் திண்ணையில் வைத்துக்கொண்டார். அதன் பிறகு என்ன என்று தெரியவில்லை; கை கால் இயங்கவோ வாய்கள் பேசவோ மாட்டேன் என்கிறது.
இந்த நேரத்தை எப்படி உடைப்பது. ஜானு சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தாள். கண்ணீரைத் துடைக்க நினைத்துக் கை நீண்டால், நீட்டிய கைக்கு அடி கிடைக்கிறது!
பாய்ச்சல் மாட்டை அடக்கிய கை இது. நேரம் நகர்ந்துகொண்டு இருக்கிறது. இருட்டு காணாமல் போய் முகம் தெரிய ஆரம்பித்தது. திறந்து இருந்த கதவு வழியாக வாசல் தெளிக்க சாணி எடுக்க முதல் ஆளாக வந்தது சோமய்யாவின் அம்மாப் பாட்டி.
பேராண்டியின் இருப்பு பாட்டியைத் திடுக்கிடவைத்தாலும் பிறகு சிரிப்பை வரவழைத்தது. கதவு திறந்துகிடந்ததால் கள்ளம் இல்லே என்று அறிந்து கொண்டாள். பக்கத்தில் வந்து, தொங்கிய முகத்தின் நாடியைத் தொட்டுத் தூக்கி, அடையாளம் கண்டாள். பேரனைப் பார்த்துச் சத்தம் இல்லாமல் சிரித்தாள். ”இனி, இங்கே வேண்டாம்; வா வீட்டுக்கு. எந்திரிரா நீயும்” என்று சொல்லி, ரெண்டு பேரையும் பக்கத்திலேயே உள்ள இவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே நுழையும்போதே
”சீதா கல்யாணமே
சீராமன் கல்யாணமே” என்று
உரத்துப் பாடினாள் பாட்டி.
”பைசா செலவு இல்லாமல் பொண்ணைக் கொண்டுவந்துட்டெடா சோமா” என்றார் தாத்தா.
உடனே, அம்பலக்காரரைக் கூப்பிட்டு அனுப்பி, இன்ன மாதிரி சங்கதி, பெண் பிள்ளையைத் தேட வேண்டாம் பத்திரமாக இங்கே இருக்கிறாள் என்று சொல்லி அனுப்பினார்கள் என்றாலும், அங்கே மவுனமே பதிலாக இருந்தது.
‘ ‘மவுனம் சம்மதத்துக்கு அடையாளம்’ என்று இதை வைத்துத்தான் பெரியவர்கள் சொல்லியிருப்பார்கள் போலிருக்கு’ என்று பேசிக்கொண்டார்கள். வீட்டிலேயே வைத்து ‘கட்டுத் தாலி’ கட்டிக்கொள்ளப்பட்டது. சோமுவின் வீட்டில் பெரியவர்கள், ஜானுவின் அழகைக் கண்டு மெச்சவில்லை; அவளுடைய திடமான உடம்பைக் கண்டுதான் திருப்திப்பட்டுக்கொண்டார்கள். விலை கொடுக்காமல், சந்தையிலிருந்து அரும்பாடுபட ஒரு நல்ல மாடு கிடைத்துவிட்டதெ.
வாய் திறந்து சொல்லாவிட்டாலும், உள் மனசு சொல்லிக்கொண்டது.
கோடை உழவுக் காலத்தில் ஒருநாள்…
கம்மாய் கரை நிழலில் உழவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டே பலதும் பேசுவார்கள்.
அப்போது, பாய்ச்சல் மாடுகளைப்பற்றிப் பேச்சு வந்தது.
”மாடுகளுக்கு நாம எவ்வளவு சவுகரியம் செய்து கொடுத்திருக்கோம். நமக்கு இருக்கிறதைப்போலவே மழையில் நனையாமல் இருக்க வீடு… நேரங்கண்டு கூளம்வைக்கிறது, பருத்திக்கொட்டை புண்ணாக்கு, தவிடு, பச்சைப் புல்லு, சத்துள்ள நாத்துக்கூளம் எப்பிடி எல்லாம் கவனிச்சிக்கிடுதோம். பிரியமா தட்டித் தடவிக்கொடுக்கோம். என்ன செய்தும் என்ன… பாய்ச்சல், கள்ளப் பாய்ச்சல் அதுகளை விட்டுப் போக மாட்டேங்குதெ” – இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இதுகளைக் கேட்டுக்கொண்டே பாப்புத் தாத்தா வந்தார், ”என்ன சொல்றாம் பேராண்டி?” என்றுகொண்டே.
பாப்புத் தாத்தா கரை மரத்தடிக்கு வந்துவிட்டாலே கலகலப்பு வந்துவிடும். கொரு பேசுவதில் சமர்த்தன்.
”என்னத்தடா சவுகரியம் பண்ணிக்கொடுக்கீக? பேப்பய புள்ளைகளா. உயிர் ராசிகளுக்கே உண்டான சொகத்தை அனுபவிக்கவிடாம காயடிச்சிப் போடுதீக. சவுகரியம் பண்ணிக்கொடுக்கீகளா…” – சிரிப்புப் பரவியது.
இன்னும் சொன்னார், டேய், பாய்ச்சல்ங்கிறது அதோட உரிமைடா. அதெக் கூடாதுன்னு சொல்ல நீ யாரு?
கள்ளப் பாய்ச்சலும் அப்படித்தாம். மனுசர்கள்ளெ தீவிரவாதி, பயங்கரவாதிகள்னு இருக்காங்கள்லெ அதுபோலத்தான்டா” என்றார்.
பின்னொரு நாள் சொன்னார்,
”சம்பளம் இல்லாத வேலையாள், வேலை நிறுத்தம் பண்ணாத வேலையாள் என்கிறதுஎல்லாம் இந்த மாடுகள்தாம். நம்ம வீட்டுப் பொம்பளைக எப்படியெல்லாம் ராவாப் பகலா வேலை செய்யுதுக; சம்பளமா கொடுக்கோம். அப்பிடித்தான்டா” என்றார்.
பொம்பளைகளை மாட்டோடு சேர்த்துச் சொன்னது அங்கே சிலருக்குச் சம்மதம் இல்லை.
ஜானு இந்த வீட்டுக்கு வந்த பிறகு, அவளுடைய அம்மா அங்கே ‘சட்டடியாக’ப் படுத்துவிட்டாள்.
மகளைப் பிரிந்த ஏக்கம்; கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும், பிறகு சரியாயிரும் என்றுதான் நினைத்தார்கள். காய்ச்சல், மண்டையடி என்று ஒருநாள்கூடப் படுத்த உடம்பு இல்லை. விழுந்தால் காடு… அடைந்தால் வீடு என்று மாடாய் உழைத்த உடம்பு. முரட்டுப் பாசமும் முரட்டு விரோதமும்தான் தெரியும். அவரவர் வீட்டுப் பெரியவர்கள் சொன்னதும் செய்ததும்தான் இவர்களுக்கு வழிகாட்டி. அபூர்வமாக ஜானு போன்ற யாராவது ஒரு மனுஷி தோன்றித்தான் வழக்குகளை உடைப்பார்கள். மற்றவர்கள் தங்கள் தங்கள் மனசுக்குள் நிகழ்த்திப் பார்த்து மகிழ்ந்த பகல் கனவை, இப்படி ஒரு பெண் வந்து நிறைவேற்றிக்கொண்டாளே என்கிற உள் பொறாமை இருந்தாலும், வாய் திறந்து மெச்ச மாட்டார்கள். திட்டிக்கொண்டே இருப்பார்கள்.
பெரிய குடும்பங்களில், எந்த விசயங்களும் தாமதமாகத்தான் வெளியே தெரியும். அவற்றை முதலில் தெரிந்துகொள்கிறவர்களும், சொல்கிறவர்களும் தினமும் காலை மாலை வேளைகளில் பனை நார்ப் பெட்டியில் கஞ்சி, சோறு என்று வாங்க வரும் குடிமகள்களும் ஏகாலிகளும்தான். ஜானுவின் அம்மா படுத்ததும் இறந்ததும் அப்படித்தான் இவர்களுக்குத் தகவல் தெரிந்தது.
அம்மாவின் சாவுச் செய்தி கேட்டதும் நடுநடுங்கிப் போனாள். அடுத்து அவளைத் தாமரிக்க முடியவில்லை. சுவரில் முட்டி மோதுகிறதும் தூணைக் கட்டிக்கொண்டு அழுவதும்…
பலர் இவளிடம் துக்கம் விசாரிக்க வந்தார்கள். யாருக்கும் இவள் சரியா ‘இளவுகொடுக்க’வில்லை. அளகம்மா வந்த பிறகுதான் சேர்த்துப் பிடித்துக் கதறினாள். அளகம்மா இவளுக்குச் சித்தி முறை. வராதவ வந்திருக்கிறாள். இளவு விசாரிக்க வந்தவர்களை வா என்று சொல்லுவது இல்லை. போகும்போதும் போயிட்டு வர்றேம் என்றும் சொல்லுவது இல்லை.
ஒருநிலையில், அழுகை அமர்ந்த பிறகு பேச்சு தொடங்கியது.
”சித்தி, அம்மாவுக்கு இவ்வளவுக்கு ஆன பிறகும் எனக்குச் சொல்லி அனுப்பணும்னு யாருக்குமே தோணலையா?”
கேள்வி சரியானதுதாம். ஆனால், பதில் சொல்ல முடியாது. பிறகு சித்தி சொன்னாள்,
”ஆத்துமா பிரியிறதுக்கு முன்னாடி கண்ணுக பறவையாடுனது ஆரையோ தேடுதுன்னாங்க. எனக்குத் தெரியும். ஆறு பொட்டப் பிள்ளைக பெத்தாலும், கடைக்குட்டி நீதாம். ஒம்மேலெதாம் அவளுக்கு உசுரு.
அய்யோன்னு இருந்தது எனக்கு. ஜானகி எந்திரி. எடுக்கிறதுக்கு முந்தி பெத்த தாயோட முகத்தெ ஒரு தபா வந்து பாத்துக்கோம்மா” என்றாள். தலையைக் குலுக்கி.
”வேண்டாஞ் சித்தி; இனி அங்கெ எனக்கு என்ன இருக்கு, அம்மாவே போன பிறகு” என்று சொல்லி கொஞ்சம் நிறுத்தி,
”அம்மா எங்கனவுல வருவா; நாம் பாத்துக்கிடுவேம்” என்று தேம்பினாள்.
அப்போது பிடாங்கு வேட்டின் சத்தம் கேட்டது. தன்னை அறியாமலேயே ஜானு எழுந்தவள், மீண்டும் உட்கார்ந்தாள்.
சோமய்யா சொன்னார், ”ஜானு எந்தி… போயி அம்மா முகத்தெப் பாத்துட்டு வந்துரு.”
அதைத் தொடர்ந்து பெரியவர்களும் அவளை வற்புறுத்தினார்கள்.
சித்தி, ஜானகியின் கையைப் பிடித்தாள். எல்லோருமே அவளை அனுப்ப எழுந்திருந்தார்கள். திரும்பவும் ஒரு அழுகை அலை வந்து போனது.
ஜானுவுக்கு அடி எடுத்துவைக்கத் தயக்கம், ஆயாசம். சித்தி கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டாள்.
எல்லோரும் வீட்டுத் தலைவாசலோடு நின்றுகொண்டார்கள். சித்தியும் ஜானுவும் படி இறங்குவதற்கும், அங்கே பெருத்த அழுகையோடு ‘தேர்’ நகர்வதற்கும் சரியாக இருந்தது. சித்திக்குத்தான் அதிகம் அதிர்ச்சியாக இருந்தது. எப்படியும் கூட்டிக்கொண்டு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு வந்தும், இப்படிப் புறப்பட்டுப்போனால் என்ன அர்த்தம்.
தெரு நடுவில் நின்ற ஜானு,
‘நீ போ சித்தி’ என்று சொல்லிவிட்டாள்.
சித்தி போய்விட்டாள்.
தேர் மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்த ஜானு முகம் திருப்பி வீட்டைப் பார்த்தாள். (அவர்கள் உள்ளே போயிருந்தார்கள்) இனி, இது நம்முடைய வீடா என்பதுபோல் இருந்தது அவள் பார்த்தது!