இன்று முதல் இவள் செல்வி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 6,828 
 
 

அந்த அறைக்குள் ஒரு கனத்த அமைதி வெகு நேரமாய் சப்பணமிட்டு அமர்ந்திருந்தது.

ஈஸிசேரில் சாய்ந்தபடி மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த நாகராஜனின் மூளைக்குள் சிந்தனைப் பூச்சிகள் தாறுமாறாய் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

தரையில் அவர் மனைவி பார்வதி சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்தாள். அவள் விரல்கள் மடியிலிருந்த முறத்தில கிடந்த அரிசிகளைக் கிளறிக் கொண்டிருந்தது. ஆனால் மனசு மட்டும் வேறு எங்கோ…ஏதோ… சிந்தனையில் லயித்திருந்தது.

“வர… வர… சனங்க புத்தி ரொம்பவே கெட்டுப் போயிடுச்சுடி பாரு” என்றார் நாகராஜன் திடீரென்று ஞானோதயம் வந்தவர் போல்.

விரக்தியாய்ச் சிரித்த பார்வதி “எங்க பெரியண்ணன் இப்படி இருப்பாருன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கலைங்க” என்றாள்.

“பணம்ன்னா பொணமும் வாய் திறக்கும்னு சும்மாவா சொன்னாங்க?”

“சத்தியமான உண்மைங்க அது!… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே அண்ணன்கிட்ட நான் வாய் விட்டே கேட்டேன்… “ஏண்ணா… கொழந்தைகளுக்குத்தான் பரீட்சை லீவு விட்டாச்சே… எங்க ஊருக்கு அனுப்பி வைக்கலாமில்ல?… ஒரு மாசம் எங்க கூட இருந்திட்டு வரட்டும்”ன்னு… அதுக்கு அந்த மனுசன் சொல்றார், “நீங்கெல்லாம் கிராமத்துக்காரங்க! அதுக எல்லாம் டவுன்லேயே பொறந்து… டவுன்லேயே வளர்ந்த கொழந்தைக!… உங்க கல்ச்சரும்… உங்க ஊரும்… உங்க வீடும்… அதுகளுக்கு சரிப்படாது…”ன்னு!…என்னமோ நாமெல்லாம் ஏதோ குக்கிராமத்துல…குடியிருக்கறாப்பல பேசினாரு”

அதைக் கேட்டு “ஹா…ஹா!” வென்று வாய் விட்டுச் சிரித்த நாகராஜன் “இப்ப நாம நல்ல நெலைமைக்கு வந்திட்டோம்…ஒரு குழந்தைய வேற தத்தெடுக்கப் போறோம்!… அப்படி எடுத்துட்டோம்ன்னா நம்ம வீடு… வாசல்… சொத்து… சொகம்… எல்லாத்துக்கும் அதுதான் வாரிசுன்னு ஆயிடும்!. அதான் இப்ப வந்து “எதுக்கு மாப்பிள்ளை வெளிய தேடறீங்க? எங்க வீட்டுக் கொழந்தைகள்ல ஒண்ணைத் தத்தெடுத்து வளர்த்துக்கங்க!…”னு மொத ஆளா வந்து நிக்கறாரு!… இப்ப மட்டும் நம்ம கல்ச்சரும் இந்த வீடும்… ஊரும் அவங்க குழந்தைகளுக்கு சரிப்படுமாக்கும்?”

தலையிலடித்துக் கொண்ட பார்வதி ”கர்மம்…கர்மம்…வெட்கமில்லாம இதை நேர்ல வேற வந்து கேட்டுட்டுப் போறாரு”

சில நிமிட அமைதிக்குப் பின் பார்வதியே தொடர்ந்தாள். “அட பெரிய அண்ணன்தான் அப்படி…சின்ன அண்ணனாவது சரியா இருப்பாரா?ன்னு பாத்தா… அவரு அதைவிடக் கில்லாடியா அல்ல இருக்காரு”

“கில்லாடி…ன்னு சொல்லாத பார்வதி… காமெடி…ன்னு சொல்லு… ஏன்னா…உங்க பெரிய அண்ணன் கூட அவரோட ரெண்டு கொழந்தைகள்ல ஒண்ணைத்தான் தத்தெடுத்துக்கச் சொன்னார்… சின்னவரோ தனக்கு இருக்கற ஒரே பையனைத் தத்துக் குடுக்கறேங்கறார்… கேட்டா… “எனக்கு குழந்தை இல்லைன்னா பரவாயில்லை மாப்பிள்ளை…”ங்கறார்… கேவலம் சொத்துக்காக எப்படியெல்லாம் தியாகம் பண்றாங்க பாருங்க”

பார்வதி முணுமுணுத்தவாறே எழுந்து சமையலறைக்குள் புகுந்தாள்.

அவள் சென்றதும் ஈஸி சேரில் சாய்ந்து படுத்தார் நாகராஜன். மனம் போன வாரம் அவரது இளைய சகோதரி சாவித்திரி வந்து சென்ற போது நடைபெற்ற உரையாடல்களை அசை போட்டது.

“அண்ணே… உனக்கே தெரியும்… நீங்க எல்லோருமாச் சேர்ந்து எனக்குக் கட்டி வெச்ச மாப்பிள்ளை ஒரு பொறுப்பில்லாத மனுஷன்னு… அதை வெச்சுக்கிட்டு இந்த மூணு பிள்ளைகளையம் நான் எப்படி கரையேத்துவேன்னு நெனச்சா… எனக்கு ரொம்ப பயமாயிருக்கண்ணே”

“……………………………”

“க்கும்…நான்தான் கெடந்து பொலம்பிட்டிருக்கேன்….யாரு காதுல வாங்குறா?”

“நான் கேட்டுட்டுத்தான் இருக்கேன் சொல்லு சாவித்திரி”

“சும்மா…வெறுமனே கேட்டாப் போதுமா?… “சரி தங்கச்சி… நீ கவலைப்படாதே… உன் பொண்ணுல ஒண்ணை நான் தத்தெடுத்துக்கறேன்” ன்னு சொல்ல வாய் வருதா?… யாரோ பெத்துப் போட்ட அனாதைக் குழந்தைய தத்தெடுக்க அனாதை ஆசிரமத்திற்குப் போறேங்கறியே… நீயெல்லாம் ஒரு அண்ணனா?” என்று கண்ணைக் கசக்கியவளைச் சமாதானப்படுத்த வந்த பார்வதியிடம்,

“அண்ணி… நீங்களே சொல்லுங்க… நீங்க யாரு?… எங்க வீட்டு மூத்த மருமகள். குத்து விளக்காட்டம் வந்த மகாலட்சுமி! நீங்க சொல்லப்படாதா?”

ஆறு மாதங்களுக்கு முன் இதே சாவித்திரி தன்னை ஒரு திருமண விழாவில் பல பேருக்கு மத்தியில் மலடி என்று கூறியதும், அதற்காக பல நாட்கள் தான் கண்ணீரும் கம்பலையமாய்க் கிடந்ததும் பார்வதியின் ஞாபகத்தில் வந்து போக மெலிதாய் முறுவலித்தாள்.

“சரி…சரி… நான் சொல்றேன்… நீ கொஞ்சம் பொறுமையா இரு சாவித்திரி”

அப்போதைக்கு அவளைச் சமாளித்து அனுப்பி வைத்தாள் பார்வதி.

“சார்… போஸ்ட்” வாசலிலிருந்து அழைப்பு வர, சிந்தனை கலைந்து எழுந்து சென்று வாங்கி வந்த நாகராஜன் அனுப்பியவர் முகவரியை அவசரமாய்ப் பார்த்தார்.

அவருடைய மூத்த சகோதரி சரஸ்வதிதான் அனுப்பியிருந்தாள்.

ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பிரித்தவர் மொத்தத்தையம் படித்து விட்டு “பார்வதி…பார்வதி” சமையலறையைப் பார்த்துக் கத்தினார்.

வந்தவளிடம் கடிதத்தை நீட்டினார். வாங்கிப் படித்தவள் ‘க்ளுக்” கென சிரித்தாள்.

“எப்படியிருக்கு பாத்தியா கதை?… கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு… இது வரைக்கும் நம்ம வீடோ… நாமோ கண்ணுக்குத் தெரியலை… இப்ப நாம தத்தெடுக்கப் போறோம்ன்னு தெரிஞ்சதும்… உறவு ஞாபகம் வந்திடுச்சு… பாசம் பொத்துக்கிடுச்சு… கிளம்பி வர்றாங்களாம்” வெறுப்பாய்ச் சொன்னார் நாகராஜன்.

“ஒரு தமாஷைக் கவனிச்சீங்களா?… அவங்களோட பையன் அசப்புல உங்க மாதிரியே இருப்பானாம்…பொண்ணு என் சாயலாம்… எழுதியிருக்காங்க… படிச்சா சிரிப்புத்தான் வருது”

“படிச்சேன்…படிச்சேன்” என்று சுவாரஸியமே இல்லாமல் சொன்ன நாகராஜன் “பார்வதி… உனக்கு ஒண்ணு ஞாபகமிருக்கா?… அந்தப் பொண்ணு பொறந்தப்ப நாமே வலியப் போய் “இந்தப் பெண் குழந்தைய எங்களுக்குத் தத்துக் குடுங்களேன்”ன்னு கேட்டோமே?”

பார்வதி தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“என்ன சொன்னாங்க?… “நாங்க என்ன குழந்தைகளைத் தயாரிச்சு வியாபாரம் செய்யற கம்பெனியா வெச்சிருக்கோம்”ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரியில்ல பதில் சொன்னாங்க?”

“நல்லா ஞாபகம் இருக்குங்க…நான் “வேண்டாம்..வேண்டாம்” ன்னு சொல்லியும் நீங்கதான்… “என் சகோதரி குழந்தைடி”ன்னு சொல்லிட்டுப் போய்க் கேட்டு மூக்கை உடைச்சுக்கிட்டு வந்தீங்க”

“அது… வேற ஒண்ணுமில்லைடி… அப்ப நான் சாதாரண குமாஸ்தா… வருமானம் கம்மி… ஓட்டு வீடு… ஓட்டை சைக்கிள்… இப்பதான் நான் ஜி.எம்.ஆகி… காரு… பங்களா… ன்னு வசதி ஆயிட்டேனல்ல?… அதான் ஒட்டிக்க வர்றாங்க…”

இருவரும் வேதனையை மறந்து வாய் விட்டுச் சிரித்தாலும் அடி மனதில் ஒரு கெட்டியான சோகத்தின் ஆணி வேர் இறுக்கமாய்ப் பிடித்திருந்தது இருவருக்கும்.

சில நிமிடங்களுக்குப் பிறகு “ஏங்க… எம்மனசுக்கு ஒண்ணு தோணுது… சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்கல்ல?” பார்வதி மெல்லக் கேட்டாள்.

“சொல்லு… சொல்லு… இங்க நாம ரெண்டு பேரும்… “எனக்கு நீ… உனக்கு நான்” என்கிற கதிலதான் கெடக்கோம்… இதுல கோவம் என்ன வேண்டிக் கெடக்கு?”

“வந்து… நம்ம… சொந்தமே அல்லாத ஒரு மூணாம் எடத்துல… இருந்து ஒரு குழந்தைய தத்தெடுத்து வளர்த்தினா என்ன?”

“………………………………”

“ஏங்க நான் ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா?”

நிதானமாக தலையை இட வலமாக ஆட்டிய நாகராஜன் திடீரென்று “பார்வதி… கௌம்பு… மேலத் தெரு வரைக்கும் போயிட்டு வரலாம்” என்று சொல்லிக் கொண்டெ எழ.

சம்மந்தமேயில்லாமல் திடீரென்று மேலத் தெரு கௌம்பச் சொல்லும் கணவரை வினோதமாய்ப் பார்த்தபடி தானும் எழுந்தாள் பார்வதி.

மேலத் தெரு.

சற்றுத் தாழ்வான உயரமிருந்த அந்த ஓட்டு வீட்டினுள் குனிந்து நுழைந்த நாகராஜனைப் பின் தொடர்ந்த பார்வதியின் முகத்தில் தாறுமாறாய்க் குழப்ப ரேகைகள்.

இவர்களின் வரவு கண்டு ஒரு கணம் திகைத்து மறு கணம் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்ற அந்த இஸ்லாமியப் பெண்ணின் காலடியில் மூன்று குழந்தைகள். ஏதோவொரு இனம் புரியாத அச்ச உணர்வு அக்குழந்தைகளின் முகத்தில் ஒரு நிரந்தரமான பீதியை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியிருந்தது.

“நீ…ங்…க…,” அப்பெண் பயந்தவாறே கேட்க,

“பயப்படாதம்மா… நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்”

அவள் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு குழப்பமாய்ப் பார்க்க,

சுற்றி வளைத்துப் பேச விரும்பாத நாகராஜன் படீரென்று போட்டுடைத்தார்.

“அய்யய்ய… நீங்க… எங்க குடும்பத்துக் குழந்தைய தத்துக் கேட்டு….”

“ஏம்மா… பயம்மா இருக்கா?”

“இல்லைங்கய்யா… இது சரிப்பட்டு வருமா..ன்னு”

“ஏன் வராது? தத்து எடுக்கற எங்க மனசும்… தத்துக் குடுக்கற உங்க மனசும் சரியா இருந்தா… எல்லாம் சரிப்பட்டு வரும்”

அவள் தீவிர யோசனையில் மூழ்க,

“ம்..ம்…ம்…வேற யாராவது உங்க குடும்பத்தைச் சேர்ந்த பெரியவங்க கிட்டே பேசணும்னா சொல்லும்மா நாங்களே பேசறோம்”

“தேவையில்லைங்கய்யா… நடந்து முடிஞ்ச மதக்கலவரத்துல எங்க வீட்டுக்காரர் இறந்ததற்குப் பிறகு என்னோட நெருங்கிய சொந்தக்காரர்கள் கூட என்னையும் என் குழந்தைகளையும் விட்டு விலகிப் போயிட்டாங்க… எங்கே நானும் என்னோட குழந்தைகளும் அவங்களுக்குப் பாரமாயிடுவேமோ…ன்னு பயந்துக்கிட்டு யாருமே எங்க பக்கமே திரும்பிக் கூடப் பார்ககறதில்லை…” சொல்லிக் கொணடிருந்தவள் சட்டென அழ ஆரம்பித்தாள்.

சில நிமிட அழுகைக்குப் பின் “இந்த மூணு குழந்தைகளையும் வெச்சுக்கிட்டு தனியா எப்படிப் பொழைக்கப் போறோம்ன்னு நெனச்சு தினமும் அழுதிட்டிருக்கேன்… அந்த அல்லாதான் உங்களை இங்க அனுப்பி வெச்சிருக்கார்”

“அம்மா… பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம்….எங்க மதத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகளாலதான் நீ இன்னிக்கு இப்பிடி நிர்கதியா நிக்கறே… அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமா நாங்க உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கறோம்… அதாவது உங்க சுமைல கொஞ்சம நாங்க சுமக்கறோம்… என்ன சொல்றீங்க?”

“அய்யா… அதோ என்னோட குழந்தைகள்… அதுல எந்தக் குழந்தைய நீங்க எடுத்துக்க விரும்பறீங்களோ எடுத்துக்கங்க” அவள் தன் குழந்தைகளை நோக்கி கை நீட்ட,

பார்வதி ஓடிச் சென்று அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

“இவள் பெயர்?”

“ஷெரீன்”

“இன்று முதல் இவள் செல்வி”

எல்லோரும் “கல..கல” வென்று சிரிக்க.

அதன் எதிரொலி விண்ணில் கேட்க ஈஸ்வரனும் அல்லாவும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *