இதுவும் கடந்துபோகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 9,940 
 

ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும்போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று சீசாவில் எழுதியிருந்ததைப் படித்ததும் நறுநறுன்னு புதுசு புதுசாத் தலை முழுக்க முடி முளைவிட்டு சர்ருன்னு நீளமா வளர்வது போல் இருந்தது. இமைகளில் வழிந்த நுரையை வழித்து விட்டுக் குமிழைத் திருக, பூப்பூவாய்க் கொட்ட ஆரம்பித்தது வெந்நீர் சுகமாய். அருணின் பார்வையைவிடவா இது சுகம்?

பாடிக்கொண்டே பூத்துவாலையைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் அமுதா. அலமாரியில் அந்துருண்டை மணம் அப்பியிருந்த துணிகளை ஒவ்வொன்றாய் விலக்கிப் பார்த்தாள். இந்த மூலையிலிருந்த கருப்புப் பாவாடையையும் அந்த மூலையில் இருந்த ரோஜா நிறச் சட்டையையும் தேர்வு செய்தாள். அருணுக்குப் பிடித்த நிறம்.

உடை மாற்றும் முன் திரைச்சீலையை இழுத்து மூடிவிடலாமென ஜன்னலருகில் வந்தாள். வீட்டுக்குக் கீழிருந்த மைதானத்தில் கையையும் காலையும் தூக்கி உடற்பயிற்சித்துக் கொண்டிருந்தார்கள் மூத்த குடிமக்கள். எதிர் ப்ளோக் எபியின் தாத்தா, மூன்றாவது மாடி மூலை வீட்டின் சம்கியோங் கிழவன், அந்த சாப்பாட்டுக் கடை ஃபௌசியாவின் மாமியார், தேத்தண்ணிக் கடையில் எட்டு வெள்ளிக்கு எடுபிடி வேலைபார்க்கும் ஜேன், பதினைந்தாவது மாடி மதியழகியின் ரெண்டாவது பாட்டி எல்லாருந்தான் இருந்தார்கள், குனிந்து நிமிர்ந்துகொண்டும் இடுப்பில் வளையத்தைச் சுற்றிக்கொண்டும்கூட.

நிமிஷத்தில் ஆடையுடுத்தி, ரொட்டியில் காய்கறி வெண்ணெய் தடவிப் பொன்னிறமாய்ச் சுட்டுப் பொதினா சட்னி வைத்துப் பசியாறி, மெலிவித்திருந்த கைப்பையை எடுத்துப் பொலிவித்திருந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு வீட்டைப் பூட்டி வெளியானாள். பொதினா சட்னி அருணுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இறங்கி நடந்தாள். அந்த மைதானத்தைத் தாண்டித் தான் விரைவுவண்டி நிலையத்துக்குப் போக வேண்டும். பேய் மாசமாதலால் சீனத் தீ தின்றதில் அங்கங்கே பொசுங்கிக் கிடந்தன புற்கள். அருணோடு சேர்ந்து அவளும் கோழிப்பாவு எல்லாம் வைத்திருக்கிறாள் இறந்துபோன மாமியார், மாமனாருக்காக.

மைதானத்தில் உடற்பயிற்சி முடிந்து கல் இருக் கையில் அமர்ந்து மூட்டுவலி, முதுகுவலி, ஓய்வூதியம், இன்னபிறவற்றை எல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆன்னித்தேயைக்கூடச் சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தது ஸ்ரீலங்கா பெண் தனு. சம்கியோங் கிழவன் மூட்டுவலிக்குப் போட்டிருந்த ப்ளாஸ்திரி மேல் தடவிக்கொடுத்து விசாரித்துக் கொண்டிருந்தாள் ஆன்னி.

ஆர்ச்சர்டில் பிறந்தநாள் கேக் செய்ய முன்பணம் கொடுத்திருந்தாள் அமுதா. அருணுக்குத்தான். விரைவுவண்டி எடுக்கப்போகும் முன் அந்தக் கடைக்குள் நுழைந்தாள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வரும்போது தலைமுடிக்குச் சாக்லெட் நிறம் கலந்த கருப்புச் சாயம் பூசியிருந்தாள். இரவு, பிறந்தநாள் கேக்கைவிட அவள் முடிதான் அருணுக்குப் பிரமிப்பாய் இருக்கப்போகிறது. இந்த வண்ணம் பூச வேண்டுமென ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருந் தான். வெயிலில் கண்களும் வெட்கத்தில் கன்னங்களும் கூசின.

வங்கிக்கு, மத்தியச் சேமநிதி அலுவலகத்துக்கு, ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு, அப்புறம், இன்னும் கொஞ்சம் வேலைகளையும் முடித்துவிட்டு, ஆர்ச்சர்டில் அந்தப் பிரமாதமான கேக்கை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர இரவாகிவிட்டது. கேக்கைத் தயாராய் எடுத்து வைத்தாள். மங்கிய மெழுகுவர்த்தியொளியில் வீடே மந்தகாசமாய்ப் புன்னகைத்தது.

அழைப்பு மணி ஒலித்தது. வெடுக்கென எழுந்து திறந்தாள். ஒரு விற்பனைப் பிரதிநிதி கேபிள் மோடம் பற்றிச்சொல்ல ஆரம்பித் தான். அவனை அனுப்பிவிட்டு, கேக் துண்டையும் இனிப்புகளையும் அருணுக்குப் பிடித்த பால்பாயசத்தையும் எடுத்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள். பாதையோரமாய் இருந்த புல்வெளியில் அவற்றைவைத்துப் படைத்து ஊதுபத்தி கொளுத்தி வைத்தாள். பக்கத்தில் அவர்கள் அம்மாவுக்காகத் தாள்களை எரித்துக்கொண்டிருந்த ஹோ ஷி மின் இரட்டையர்கள் அமுதாவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

வானில் நட்சத்திர நட்சத்திரமாய்ச் சிரித்தான் அருண், முதல் நாள் பார்த்தபோது கண்சிமிட்டிச் சிரித்தமாதிரியே. நட்சத்திரங்கள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளை “பாட்டீ!!!” என்றழைத்த குரல்கள் சடக்கெனத் திருப்பின. மகள் வயிற்றுப் பேரன்களும், மகன் வயிற்றுப் பேத்தியும்தான் குடுகுடுவென ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டார்கள். “தாத்தாவ சாமி கும்பிடுறியா அம்மம்மா?” என்றாள் சிந்து.

“ஆமாடா” என்று ஆவர்களை முத்தமிட்டு “அம்மா, அப்பாலாம் எங்க?”என்றாள்.

“தோ, மாடில ஏறிட்டிருக்காங்க” என்றான் நிகில்.

மேலே ஏறிவந்தபோது, “அமுதவள்ளி அருணாச்சலம்” எனப் பெயர் பொறித்திருந்த அவளுடைய வீட்டின் முன் எல்லாரும் வந்திருந்தார்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ஒரு மணி நேரத்தில் எல்லாரும் கிளம்பிவிட்டார்கள்.

“நாளைக்கி ஞாயித்துக்கிழமைதானே, தூங்கிட்டு, நாளை சாயங்காலம் போலாமே” என்றாள் அமுதா.

“ம்ஹூம், இங்க எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமில்ல. நாளைக்கு அங்க கேம் இருக்கு, போணும் பாட்டி” கிளம்பிவிட்டார்கள்.

தனித்துவிடப்பட்டாள். அவளுக்காக ஒளியூட்டி உருகிக்கொண்டிருந்தான் அருண் மெழுகுவர்த்தியில். அவனையே பார்த்துக்கொண்டிருந்ததில் விடிந்துவிட்டது. மெழுகு முழுதும் உருகிப்போனதும் மேஜையிலேயே கவிழ்ந்து உறங்கினாள். சூரியனின் கையொன்று அவள் முகத்தில் தொட்டதில் விழித்தாள்.

“இன்று எங்குச் செல்வது?” அருண் இருந்தபோது இருவருமாய்க் கிளம்பித் தங்கள் மளிகைக்கடைக்குச் சென்றுவிடுவார்கள். அருண் போனபின் கடையை விற்றாயிற்று. நேற்று பிறந்தநாள் பரபரப்பில் நாள் போனதே தெரியவில்லை. இல்லாவிட்டால் எப்போதும் போல் உடற்பயிற்சி மக்களுடன் தானும் கலந்து, கை வீசிக்கொண்டும் பேசிக்கொண்டும் பொழுது போகும்.

இன்று நேரமாகிவிட்டதோ, கிழவரெல்லாம் போயிருப்பரோ? நான் மட்டுமென்ன, கிழவியில்லையா? “ம்ஹூம்! உனக்கும் எனக்கும் வயசே ஆகாது, இல்ல அருண்”, எதிரிலிருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கேட்டாள். இமைக்காமல் சிரித்தான் அருண்.

எழுந்தாள். குளித்துக்கொண்டிருக்கும்போது ‘டொம்’ மென்று ப்ளோக்கே அதிர்வது போன்ற சத்தம். சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒரு ‘டொம்!’ ஜன்னலுக்கு விரைந்தாள். இரும்பு ராட்சஷன் போலொரு மெகா இயந்திரம் அதன் மூக்கில் முளைத்திருந்த கொம்பால் ‘டொம்டொம்’மென்று கான்க்ரீட் மைதானத்தை முட்டி முட்டிப் பெயர்த்துக் கொண்டிருந்தது. “அடக்கடவுளே! நல்லா இருக்கிற இடத்த எதுக்கு உடைக்கணும்? உடைச்சு இப்ப என்ன செய்யப்போறாங்களாம்?”

இறங்கி வந்தாள். வாடிக்கையாய் வரும் வயதானவர்கள் யாரையும் காணோம். திரும்பிப் போய்விட்டார்கள் போல. “யாரைக் கேட்பது?” அந்த மைதானத்தைச் சுற்றி வெள்ளையும் சிவப்புமாய் அபாய ரிப்பன் வேறு கட்டியிருந்தார்கள். மைதானத்தைப் புதுப்பிக்கிறார்களாம். என்ன கெட்டுப் போய்க் கிடந்தது புதுப்பிப்பதற்கு? ஆற்றாமையும் ஆயாச முமாய் வந்தது அமுதாவுக்கு.

வீட்டுக்குள் வந்து கதவைப் பூட்டிவிட்டு அன்றைய செய்தித்தாளைப் பிரித்தபோது ர்ர்ர்ர்ரெனத் தொடங்கி மூடிய ஜன்னல்களுக்குள்ளும் கிர்ர்ர்ர் ரெனப் பாய்ந்து ரத்த ஓட்டத்தைக் கொதிக்கவைத்தது சத்த ஓட்டம். எரிச்சல் மண்ட எட்டிப் பார்த்தாள். எதோ ஒன்றை வைத்து எதோ ஒன்றை ஓட்டை போட்டுக்கொண்டி ருந்தார்கள். மினி மின்னல்போலக் கண்களைப் பறித்துப்போகும் தீப்பொறி பளீர் பளீரென வெட்டியது. பொறி பறக்கச் செய்துகொண்டிருந்தவனைப் போய் நிறுத்துடா எனச் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்போல் ஆவேசம் வந்தது. பொறி வைத்துத் துளையிட்டு ஆணியடித்த தகரங்களை வைத்து மூடிக் கொண்டு, எனக்கென்ன என்று அதையும் இதையும் உடைத்தும் அடைத்தும் புழுதி கிளப்பிக்கொண்டிருந்தனர். பார்வை கூச, திரைச்சீலையை இழுத்துவிட்டாள்.

தொடர்ந்த நாள்களில் பூகம்பக் களமாய்ப் பிளந்து கிடந்தது அந்தப் பிரதேசம். முதல்மாடியில் வேறு இருந்ததால், தினம் ஒன்பதிலிருந்து ஆறு மணி வரை மண்டை பிளக்கும் சத்தம். விர்விர்ருனு பறந்து வந்து வீடெல்லாம் பாழாக்கும் தூசி. மழையும் தோண்டிப்போட்ட சகதியுமாய் வாடைவேறு. ஜன்னல் கதவுகளைத் திறக்கவே முடியாமல் வீடே புழுங்கிற்று. இப்படி இருந்தால் எப்படி வருவான் அருண்? மூச்சு முட்டாது?

மூன்று மாதங்களாகிவிட்டன. சகவயது நண்பர்களும் தோழிகளும் அந்தப் புல்சூழ்ந்த திடலில் இளஞ் சூரியனில் குளித்து, கைகால்கள் விரித்து, மனம் விட்டு சிரித்ததெல்லாம் மறந்தேபோய்விட்டன. சத்தத்திற்கும் சுத்தத்திற்கும் பயந்து அவரவர் வீட்டைப் பூட்டி, ஜன்னல் சாத்திக் கிடந்தனர்.

திரை விலக்கினால் கண்ணாடி வழியே சித்திரக் குள்ளர்கள்போல் தலைக்கவசம், கால்கவசமுமாய், கதாயுதம்போல் கையில் கடப்பாரை, கருவிகள் சகிதமாய் இடி அமீன்களும் உறுமும் உலோக உருளைகளும் கர்ஜிக்கும் கனரக இழுவைகளுமாய்க் காட்சியளித்தன, கண்ணுக்கு வெடிமருந்து வைப்பதுபோல.

மூக்கையும் காதையும் பொத்தியபடி வெயில் சுட்டெரித்த ஒரு பகலில் குடை மடக்கிப் படியேறிய போது, வளைவில் சீனத் தொழிலாளி ஒருவன் சேற்றுடலுடன், வாயில் கொசு மொய்ப்பது தெரியாமல் ஹாவென்று உறங்கிக்கொண்டிருந்தான். முதலாளியை ஏய்த்துவிட்டுப் பூனைத் தூக்கமா போடுகிறாய்? எரிச்சலாய் வந்தது அமுதாவுக்கு.

தாண்டித் தாண்டி ஏறி வீட்டுக்குள் நுழைந்தபோது தான் ஞாபகம் வந்தது அமுதாவுக்கு. நேற்றிரவெல்லாம் குனிந்து, குனிந்து கம்பிகளைக் கட்டிக் கொண்டும், நீளமான கேபிள்களை விழிபிதுங்க இழுத்துக்கொண்டும் வேலை செய்த சிலரில் இவனும் ஒருவன். பாவம் கூடுதல் நேரக் கூலிக்காக மாங்கு மாங்குனு உழைத்ததில் அசதி ஆளை அடித்துப் போட்டுவிட்டதுபோல. ச்ச! தண்ணி எதுவும் வேணுமோ? கேட்கலாமென வெளியே வந்தாள். அங்கே தமிழ்ப் பையன் ஒருவன் அவனை எழுப்பி, உறிஞ்சுகுழலிட்ட தேத்தண்ணிப் பையை அவனிடம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

எட்டி நின்று இடிச்சத்தம் கேட்கும் நமக்கே இப்படி இருந்தால் இடிகளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு எப்படி இருக்கும்? பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்த்தாலே பார்வை பறித்து விடுமோ எனத் திரைச்சீலையை இழுத்துவிடுகிறோமே, இவர்களை நெருப்புப் பொறியிடமிருந்து எந்தச் சேலை காக்கிறது? தாயின் சேலையோ மனைவியின் சேலையோகூட அரவணைக்க அருகிலின்றிக் கருமமே கண்ணாயினராய் இருக்கும் அவர்களைப் புதிதாய்ப் பார்ப்பதுபோலப் பார்த்தாள். முதல் முறையாகத், தன்னிலையிலிருந்து வெளியே வந்து அவர்கள் நிலையில் பார்த்தாள்.

நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் ஓரிரு தினங்களில் வேலை முடிந்துவிடுமாம். அமுதாவும் அன்றிலிருந்து அங்கிருக்கும் தொழிலாளர்களிடம் அன்பாய்ப் பழகியதில் அவர்களும் பிள்ளைகள் போலப் பாசத்தைக் கொட்டினார்கள்.

நிர்மலமான ஒரு காலையில் ஜன்னல் திறந்து திரைச்சீலை விலக்க, ஒலி 96.8இன் ஒலி கீழே கேட்டிருக்கவேண்டும். வேலை செய்துகொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். காலை வணக்கமெனச் சைகை செய்தாள். அவர்களும் பதில் சல்யூட் அடித்தார்கள். “ஆன்ட்டி! ரேடியோ லௌடர் லௌடர்” என்றனர் கலவையோடு கலவையாய் நின்றிருந்த வேற்று மொழித் தொழிலாளர்கள் சிலர். குமிழைத் திருகி வானொலியின் ஒலி கூட்டினாள். “உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லே யா” என்று பாடினார் சூப்பர் ஸ்டார். மொழி புரியாவிடினும் தாளம்போட்டபடி தொழிலைத் தொடர்ந்தனர்.

அத்தனை வேலையும் முடிந்து புதுமாப்பிள்ளை போல் பளிச்சென்று கம்பீரமாய் எழுந்து நின்றது மைதானம். இருபுறமும் கூடைப்பந்துக் கம்பங்களும் சுற்றிலும் விளக்குக் கம்பங்களும் அதைச் சுற்றிலும் வேரோடு நட்டு வைத்த பாக்கு மரங்களும் விசிறி வாழையுமாய் ஜொலித்தது விளையாட்டு மைதானம்.

சற்று நேரத்துக்கெல்லாம், எப்படா கட்டி முடிப்பார்கள் எனக் காத்திருந்ததுபோல் பிள்ளைகளும் குளுவான்களுமாகப் பந்துகளைத் தூக்கிக்கொண்டு, ஓடிக்கொண்டும் கீச்கீச்னு கத்திக்கொண்டும் ஜுராங் பறவைப் பூங்காபோல் இருந்தது அந்த இடம். அட, நம்ம கூட்டாளிகள் எல்லாம்கூட வந்து பொக்கை வாயில் சிரித்துக் கைதட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமுதாவுக்குத் துறுதுறு வென்று இருந்தது சென்று சேர்ந்துகொள்ள. இனி நிம்மதிதான்.

கீழேபோகக் கிளம்பியபோது மகள் வந்தாள் பேரன் பேத்தியரும் அவர்கள் கையில் பந்துகளுமாய்.

“அம்மம்மா, இன்னிக்கு விளையாடிட்டு, இங்கே தூங்கிட்டுத் திங்கக்கிழமதான் போப்போறோம்” என்றார்கள் பேரப்பிள்ளைகள். அள்ளி முத்தமிட்டாள்.

மகள் முகம் சுரத்தின்றி இருக்க, தாவாங்கட்டையை நிமிர்த்தினாள். “அவர் கம்பெனி திவாலாயிருச்சு” என்றாள். கொஞ்ச நேரம் இறுக்கமாய் இருந்தது. ஆதுரமாய் அவள் தலையைத் தடவிவிட்டு சொன்னாள் அமுதா “எந்தப் பிரச்சனையும் யார்க்கும் நிரந்தரமில்லை. எல்லாம் புதுசா ஆரம்பிக்கும்போது அப்படித்தான் பயங்காட்டும். ஒரு வாரமோ பத்து நாளோ நல்ல வேலையா கிடைக்கும், கவலைப்படாத, இப்ப வா, புது விளையாட்டுத் திடல வந்து பாரு” இத்தனை நாள் கஷ்டத்தையும் கண்துடைப்பு செய்ததுபோல் சிரித்து நிற்கும் விளையாட்டுத் திடலுக்குப்போகும் ஆவலில் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டைப் பூட்டும்போதுதான் கவனித்தாள் கதவில் சொருகியிருந்த காகிதத்தை. அவர்கள் ப்ளோக்கை மறுவடிவமைப்புச் செய்யப் போவதாகவும் அசௌகரியத்துக்கு மன்னிக்குமாறும் எழுதியிருந்தது.

———————————————-
கணினித்துறையில் பட்ட மேற்படிப்புப் படித்த சிவஸ்ரீ, தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர். தற்போது சிங்கப்பூர்வாசியாகிவிட்ட இவர் அங்குத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *