இசக்கி ஒரு சகாப்தம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 6,142 
 

(இதற்கு முந்தைய ‘மூன்று வாரிசுகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

இசக்கி அண்ணாச்சி வேறு எந்த நினைப்பும் இல்லாமல் மூன்று வாரிசுகளை கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதிலேயே கவனத்துடன் இருந்தார். அந்தக் கவனத்தில் வருசங்கள் அது பாட்டுக்கு ஓடியது கூடத் தெரியவில்லை.

பெரியவன் சரவணனுக்கு பதினெட்டு வயதாகி ப்ளஸ் டூ தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அடுத்தவன் முருகனைப் பற்றியும் கேட்க வேண்டாம் – பத்தாவது வகுப்பில் பள்ளிக் கூடத்திலேயே அதிக மார்க் வாங்கியது அவன்தான். சின்னவன் செந்திலும் லேசான பயல் இல்லை. எட்டாவது வகுப்புப் படிக்கும் போதே ப்ளஸ் டூ மாணவனுக்குப் பாடம் சொல்லித் தருகிறானாம். அவ்வளவு கெட்டிக்காரப் பயல். படிப்பில் மட்டும் என்றில்லை. படம் வரைதல்; கட்டுரை; கதை எழுதுதல்; பாட்டுப் பாடுதல் போன்ற எல்லாவற்றிலுமே முதலாவதாகத்தான் இருந்தான்.

சுருக்கமாகச் சொன்னால் மூன்று பயல்களும் இசக்கி அண்ணாச்சிக்கு முக்கனிகளாகத்தான் விளங்கினார்கள். இசக்கிக்கு இதனால் ரொம்பச் சந்தோசம். பாளை சனங்களுக்கும் ஒரே ஆச்சர்யம். இந்த மூன்று கெட்டிக்காரப் பயல்களைப் பத்தி பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்.

“பனங்காட்டு இசக்கி அண்ணாச்சி ரொம்ப யோகக்காரகதேன்.. எப்படியாப்பட்ட வாரிசுகள் அவருக்குப் பொறந்திருக்கு பாரு…” யாரோ போய் பவளக்காரரிடம் சொன்னார்கள்.

“இத்தனைக்கும் இசக்கி பள்ளியூடத்ல ஒருக்காக்கூட மார்க்கே வாங்கினதில்லை… அது ஒனக்குத் தெரியுமா? எப்பவும் முட்டைதேன் வாங்குவான். அஞ்சாம் க்ளாஸ்க்கு வந்தபோதே அவனுக்கு மீசை தாடியெல்லாம் முளைச்சிருச்சுன்னா பாத்துக்கோயேன்” பவளக்காரர் உண்மையைச் சொன்னார்.

“முட்டை வாங்கினார்ன்னா எப்பிடி அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் பாஸ் பண்ணினாரு?”

“அப்பல்லாம் ரெண்டு மூணு வருசம் பாஸ் ஆறானான்னு பாப்பாங்க. பாஸ் ஆகலேன்னா அடுத்த க்ளாஸ்க்கு தூக்கிப் போட்டுருவாங்கடா.”

“அதிலேயும் பாருங்க, அண்ணாச்சியே காக்கா தோத்துப்போற மாதிரியான வண்டிமை கருப்பு! ஆனா அண்ணாச்சியோட வாரிசுகளோ பலாச்சுளை நிறம். பாருங்களேன் இதிலேயும் அண்ணாச்சியோட யோகத்தை. நெசமாகவே கொடுத்து வச்சவகதேன். இத்தனைக்கும் யாரோ சோசியம் பாக்கப் போனபோது இவுகளும் போனாகளாம். அப்ப அந்த சோசியக்காரன்தான் அண்ணாச்சியப் பாத்து சொன்னானாம், கண்டிப்பா ஒங்களுக்கு வாரிசு இருக்குன்னு…”

“ஆமாமா, காவலூர்க்காரன் சொன்னா அது தப்பிதமா போகாது.”

“இப்ப அந்த காவலூர்க்காரனுக்கு ரொம்ப வயசு இருக்குமோ?”

“அறுபது வயசு இருக்கும்… அதுக்கு மேல இருக்காது.”

“ஒரு நாளைக்கிப் போய் கேட்டுட்டு வரலாம்னு பாக்கறேன்.”

“என்னையும் கூட்டிட்டுப் போ. என் மவன் சாதகத்ல நானும் ஒரு வெவரம் கேக்கணும்.”

அடுத்த வாரமே பவளக்காரரும் அந்த ஆளும், காவலூர் ஜோசியனைப் பார்க்க டவுன் பஸ் பிடித்துப் போனார்கள்.

அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. ஜோசியர் நல்ல ‘தண்ணி’யில் இருந்தார். அதுவும் பட்டைச் சரக்கு. ஏராளமான மப்பில் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. அவரை உட்கார வைப்பதே பெரிய பாடாக இருந்தது. ஜோசியர் ஒரு மேல் வெட்டுப் பார்வை பார்த்தவாறே அவர்களை வரவேற்றார்.

“வாங்க பாளையங்கோட்டைக்காரங்களா… ஒக்காருங்க…”

உட்கார்ந்தார்கள். ஒரே சாராய வாடை.

“சாதகம் பாக்கணும்.”

“சாதகம் கொண்டாந்திருக்கீங்களா?”

“கொண்டாந்திருக்கோம்.”

“நா சொன்னா சொன்னபடி ‘டாண்ணு’ நடக்கும் தெரியுமா?

“அது தெரிஞ்சிதான் இவ்வளவு தூரம் பஸ் ஏறி வந்திருக்கோம்.”

“அதுவும் நீங்கதான் இருவது வருசத்துக்கு முந்தி எங்க ஊரு இசக்கி அண்ணாச்சிக்கு சாதகம் பாத்துச் சொன்னீகளாம்” பவளக்காரர் சொன்னார்.

“எந்த இசக்கி அண்ணாச்சி?”

“பனங்காட்டு இசக்கின்னு ஊரெல்லாம் சொல்வாகளே…செந்தூர்க்காரரு.”

“ஓ அவுகளா. ஞாபகம் இருக்கு. எப்படி இருக்காக அண்ணாச்சி?”

“அவுகளுக்கென்ன, நீங்க சாதகம் பாத்துச்சொன்ன மாதிரி அம்பது வயசிலே இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, முத்து முத்தா ஜோரா மூணு மகன்களைப் பெத்துக்கிட்டு ரொம்ப செளக்கியமா ஆனந்தமா இருக்காக.”

காவலூர் ஜோசியருக்கு எதுவோ அவருடைய மூளைக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை. புருவங்களை வெட்டினார். பலூன் மாதிரி மேலே மேலே எழும்பப் பார்த்தார். துண்டால் வாயைத் துடைத்துவிட்டு, “தப்பாச் சொல்றீகளே… நா அந்த மாதிரி இசக்கி அண்ணாச்சிக்கு சொல்லலையே.” என்றார்.

“நாங்க கேள்விப்பட்டதைச் சொல்றோம்.”

“ரெண்டாந்தாரத்து மூலமா அவருக்கு மகன்கள் பிறப்பார்கள்னு சொல்லலை நா. நா சொன்னதொட அர்த்தம் வேற தெரியுமா?”

“அய்யா சொன்னா தெரிஞ்சிக்கிறோம்.”

“அந்த இசக்கி அண்ணாச்சிக்கி ரெண்டாந்தாரத்தால வாரிசுகள் வரும்னுதேன் சோசியம் சொல்லியிருக்கோம்.”

“மகன்கள் பெறக்கும்னு சொன்னாலும், வாரிசுகள் பெறக்கும்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதானே சோசியரே?” பவளக்காரர் கேட்டார்.

“இல்லை ரெண்டும் வேற வேற.”

“என்ன சொல்றீங்கன்னே புரியவே மாட்டேங்குது.”

“கிட்ட வாய்யா சொல்றேன்.”

பவளக்காரர் மூக்கைப் பொத்திக்கொண்டு அருகில் போனார்.

“ரெண்டாவது சம்சாரத்துக்குப் பெறந்திருக்கிற பயல்கள் இருக்கானுங்களே, அவனுங்க நம்ம இசக்கி அண்ணாச்சிக்கி வாரிசுதேன்! மகன்கள் இல்லை! தெரியுதா? அது அவுகளோட சாதகத்ல பச்சையாகவே இருக்கு!”

இதற்குமேல் காவலூர் ஜோசியரால் பேசவும் முடியாமல் உள்ளே கிடந்த சரக்கு பூராவும் ஓங்கார சப்தத்துடன் வெளியில் வந்து, பவளக்காரரின் மேல் அபிஷேகமே நடத்திவிட்டது. குடி போதையில் ஜோசியர் சொன்ன இந்த விசயத்தைக் கேட்டதும் பவளக்காரர் எழுந்து ஓடியே போய்விட்டார். எவ்வளவு பயங்கர விஷயம் இது? உறக்கமே வரவில்லை அவருக்கு. வயித்து வலிக்காரன் மாதிரி ராத்திரியெல்லாம் விரிப்பில் உருண்டு உருண்டு கிடந்தார். ஒரு வாரத்துக்குப் பிசாசு பிடித்தவர் போல் இருந்தார். கடைசியில் இப்படியா விஷயம்? நரைத்த மீசையை பவளக்காரர் முறுக்கி விட்டுக்கொண்டே இருந்தார்.

இதெல்லாம் நடந்து முடிந்த இருபதாம் நாள்…

இசக்கி அண்ணாச்சி அந்த நேரம் கோமதி வீட்டில் இருந்தார். அப்போது பொழுது விடிஞ்சு கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. அவருடைய கடையில் வேலை பார்க்கும் சமுத்திரக்கனி வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து வீட்டுக் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்து சமுத்திரக்கனி இருந்த கோலத்தைப் பார்த்து திடுக்கிட்டு இசக்கி அண்ணாச்சி “என்னடா?” என்றார்.

சமுத்திரக்கனிக்கு சொல்லவே வாய் வரலை. கண்கள் சிவந்து கலங்கிப் போயிருந்தது.

“என்னடா இப்படித் தலைவிரி கோலமா ஓடி வந்திருக்கே?”

“எவனோ அசிங்க அசிங்கமா எழுதிப் போட்டிருக்கான் மொதலாளி.”

“ஆரம்பிச்சுடானுங்களா, சும்மா இருக்க மாட்டானுங்களே, கையையும் காலையும் வச்சிக்கிட்டு…”

“ஒங்களைப் பத்தி சொல்றதுக்கே வாய் கூசுற மாதிரி ரொம்பக் கண்றாவியா எழுதியிருக்கு மொதலாளி,”

“வா பாக்கலாம்.”

இசக்கி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பினார்.

தெப்பத்து மேட்டில் பாளையங்கோட்டை ஊரே கூடிக் கிடந்தது. இசக்கி அண்ணாச்சியைப் பார்த்த கூட்டம் சரசரவென விலகி வழிவிட்டது. என்ன நடக்கப் போகிறதோ, எது நடக்கப் போகிறதோ என்று கூட்டம் பீதியில் உறைந்துபோய் மூச்சுக் காட்டாமல் நின்றது.

நாப்பது அடிக்கும் மேல் நீளமாக இருக்கிற தெப்பத்துச் சுவரின் வடக்குப் பகுதியில் ஒருபுறம் பூராவும் தார் கொண்டு எழுதப் பட்டிருந்த நீளமான வரியை இசக்கி இடமிருந்து வலமாகப் படித்துப் பார்த்தார்.

‘டேய் பனங்காட்டு இசக்கித் தடியா! ஒன் ரெண்டாவது சம்சாரத்துப் பொறந்த மூணு பயல்களும் ஒன் பணத்துக்கும், சொத்துக்கும் வெறும் வாரிசுகள்தாண்டா… அவர்கள் மூணு பேரும் ஒன் மகன்கள் இல்லை. இதை இன்னிக்காவது தெரிஞ்சுக்க.. டீசல் கருப்பான உனக்கு, சிவப்பா அவங்க எப்படிடா பொறந்தாங்க?’

பார்க்கப் பார்க்க இசக்கி அண்ணாச்சியின் அடிவயிற்றில் இருந்து பொறி தெறிக்க எழுந்த தீ அவருடைய உச்சந்தலை வரைக்கும் குபீர்னு பற்றி எரிந்தது. “டாய்” என்று அவர் வானத்தை நோக்கி அலறிய அலறலில் கூட்டம் நடுங்கிச் சிதறி ஓடியது. மதம் பிடித்த யானை போல அவரின் பருத்த கரிய உடம்பு நிலை கொள்ளாமல் அப்படியும் இப்படியுமாக ஆடி உதறிக் கொந்தளித்தது. அறைபட்டு சினங்கொண்ட சிங்கத்தின் குரலென அவரின் மூர்க்கமான குரல் தெப்பத்து மேட்டு வானத்தில் வெடித்து அதிர்ந்தது.

“எந்த நாய்டா எழுதினது? எந்தத் தேவடியாவுக்குப் பொறந்த நாய் எழுதினது? நெசமா நீ ஒரு ஆம்பளையா இருந்தா என் முன்னத்ல வந்து நில்லுடா. ஒருத்தனுக்குப் பெறந்த நாயா இருந்தா வாடா இங்க பாப்பம். எழுதிப் போட்டுட்டு பொட்ட நாயாட்டம் ஓடி ஒளிஞ்சிகிட்டு இருக்கிற பொட்டப் பயலே.. நெஞ்சுல ஒனக்கு வீரமிருந்தா வாடா பாக்கலாம். எச்சக்கலை நாயே, ஒனக்கு மீசை மூஞ்சியலதாண்டா, ஆனா எனக்கு?”

ஒரு கணம் இசக்கி பேச்சை நிறுத்திவிட்டுத் தன்னுடைய வலது பாதத்தைத் தூக்கி உயர்த்திக்காட்டி கையால் கணுக்காலை பலமாக ஓங்கி அறைந்து காட்டி விட்டுச் சொன்னார்.

“கால் கெண்டையில மீசைடா! கால் கெண்டையில மீசை… ராஸ்கல் என்னைப் பத்தியா அயோக்கியத்தனமா எழுதிப் போடுற. எழுதின ஒன் கையை ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் ஓடிச்சி தீ வைக்கிறேனா இல்லையான்னு பாரு. ஒன் காலை ஒடைச்சி நொறுக்கி நொண்டி நாயா திரிய வைக்கிறேன் பாரூ. ஒன் புள்ளைக்குட்டி எல்லாமே தெருத் தெருவா சீரழியப் போகுது பாரு. ஒன் பெண்டாட்டி தாலி அந்து போக, ஒன் ரெண்டு கண்ணும் அவிஞ்சி போக, ஒன் குடும்பமே ஏழேழு சென்மத்துக்கும் நாசமாப் போக நாசமா…”

அதற்கு மேல் கொந்தளித்து கூச்சல் போட முடியாமல் இசக்கி அண்ணாச்சி சுக்கல் சுக்கலாக உடைந்து குலுங்கிக் குலுங்கி அழுதார். ஊரே உறைந்து போய்விட்டது. தெப்பத்து மேட்டைச் சுற்றி உலகமே ஸ்தம்பித்து நிலைகுத்தி நின்றது. வானமும் பூமியும் அதிர இசக்கி அண்ணாச்சி கொடுத்த சாபங்கள் ஆங்காங்கு விழுந்து எரிந்து கொண்டிருந்தன.

யாரோ முன் வந்து இசக்கி அண்ணாச்சியை கைத்தாங்கலாகப் பிடித்து ஆறுதல் சொல்லி மெதுவாக அங்கிருந்து கூட்டிப் போனார்கள். யுத்தம் வந்து அழிந்த காட்சியாக தெப்பத்து மேட்டில் அப்போதே ஓர் நாசத் தோற்றம் தோன்றியிருந்தது. காலை நேரச் சூரியனிலேயே கனல் மூண்டிருந்தது. பல மணி நேரங்களாகியும் கூட தெப்பத்து மேட்டைச் சுற்றி இருக்கும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சனங்கள் வீடுகளுக்குள்ளேயே பேச்சற்று பயத்தில் முடங்கிக் கிடந்தார்கள்.

இந்த விசயம் நடந்து பத்துநாள் கழித்து இசக்கி அண்ணாச்சி பாளை பெரிய பாலத்தின் பக்கத்தில் திருச்செந்தூர் போகிற ரயிலில் அடிபட்டு அநியாயமாய் செத்துக் கிடந்தார். அந்தப் பாலத்தில் இசக்கி அண்ணாச்சி நடந்து போனபோது எதிர்பாராமல் ரயில் வந்துதான் அப்படி அடிபட்டுச் செத்தாரோ! இல்லை ஏற்பட்ட அவமானம் தாங்காமல்தான் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரோ!

விபத்தா; கொலையா; தற்கொலையா? யாருக்கும் புரியவில்லை.

எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டார் அந்த மா மனிதர். இசக்கிப் பாண்டி என்கிற அந்த சகாப்தம் நிரந்தரமாக முடிந்துவிட்டது.

அத்தனை காலமும் மானிடரின் கண்களுக்குப் புலப்படாத பித்ரு லோகத்தில் காத்து நின்ற மிகப்பெரிய உத்தமியான இசக்கியின் அம்மா பூரணி, அருமை மகனின் ஆவியை அந்த நிமிசமே கைவாகு கொடுத்து தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டாள்…,

அது போதும்.

அடுத்த ஆறு மாதத்தில் பவளக்காரரின் ஒரே மகன் டவுன் பஸ்ஸில் அடி பட்டுச் செத்தான். புத்திர சோகத்தில் தவித்த பவளக்காரர் கருட புராணம் படிக்க ஆரம்பித்தார். இசக்கி அண்ணாச்சியின் முதல் திவசத்திற்கு முந்தைய நாள், தெருவில் அலைந்து கொண்டிருந்த சொறிநாய் ஒன்று அவரை தொடையில் கடித்துப் புடுங்க, படுத்த படுக்கையில் சொறிநாய் மாதிரி ஜொள்ளு விட்டு துடி துடித்துச் செத்தார் பவளக்காரர்.

‘சீவலப்பேரி பாண்டி’ நெல்லைச் சீமையில் பேசப்படுவதைப் போல, இசக்கிப் பாண்டியும் நெல்லைச் சீமையில் இன்றும் பேசப்படுகிறார்…

Print Friendly, PDF & Email

2 thoughts on “இசக்கி ஒரு சகாப்தம்

  1. ஜீ அப்ப கோமதி என்ன ஆனாங்க?நம்ம அண்ணாச்சிக்கு இப்டி ஒரு முடிவை குடுத்துட்டீங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *