“மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?”
“ஆனந்தி, இது ஓகேங்களா?”
“பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?”
“மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”
“அது ரொம்ப சென்சிடிவ் ஆன ஏரியா. ஆனந்திய அனுப்புங்க சக்சஸ்ஃபல்லா எல்லாம் முடிச்சுகிட்டு வருவாங்க..”
எதுவாக இருந்தாலும் தலைமை எடிட்டர் ஆனந்தியை அழைத்துத்தான் எதையும் சொல்லுவார்.

ஆனந்தி இன்டர்வியூ என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் யோசனை தான்.
சிஎம் முதல் பிஎம் வரை யாராக இருந்தாலும் மிகவும் யோசித்து பதில் சொல்லுவார்கள்.
‘ஃபிங்கர் டிப்ஸி’ல் இருக்கும் ‘பாயிண்ட்ஸ்’.
அழகான நுனி நாக்கு ஆங்கிலம்.
தெளிவான தமிழ் உச்சரிப்பு.
ஒற்றுப் பிழைகளற்ற தமிழ் ரிப்போர்டிங்.
ஆனந்தியின் ரிப்போர்ட்டிங் மிக வித்தியாசமாக இருக்கும்.
ஒரு இலக்கியம் படிப்பதைப் போல இருக்கும்.
அழகான நடையில் அவள் எழுதும் ரிப்போர்ட்டை படிக்க ஒரு பெரிய வாசகர் கூட்டமே உண்டு.
ஆனந்தியின் ரிப்போர்ட்டிங்குக்காகவே அந்த நாளிதழுக்கு சந்தா செலுத்தியவர்களும் உண்டு.
நிறைய பட்டறிவு படிப்பறிவு ஆனந்திக்கு.
உண்மை. மனசு பூராவும் உண்மை.
கபடு இல்லாத உள்ளம்.
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானதால் அவள் வாக்கில் ஒளி உண்டானது.
படிக்கும்போதே ‘பான் ஜர்னலிஸ்ட்’ என்று அவளைப் புகழ்வார்கள் கல்லூரி விரிவுரையாளர்கள். அவள் கல்லூரியை விட்டு வெளியேறும் வரை கல்லூரி மேடையில் மெயின் கேம்பெயர் ஆனந்திதான்.
அவள் ரிப்போர்ட் எழுதும் கோணமே வித்தியாசமாக இருக்கும்.
யாரும் பார்க்காத ஒரு கோணத்தில் அவளுடைய பார்வை இருக்கும் என்பதால் அவள் ரிப்போர்ட் எழுதுவதையே பலரும் விரும்புவார்கள்.
வாரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு சென்டர் ஆர்ட்டிகளாவது அவளை எழுதச் சொல்வார்கள்.
ஆனந்தியின் நடுப்பக்க கட்டுரைகள் என்று ஒரு புத்தகம் வெளியிடக் கூட உத்தே சித்திருக்கிறது அந்த பத்திரிகை நிறுவனம்.
ஆனந்தியின் எழுத்து எல்லா கட்சிகளையும் எல்லா தலைவர்களையும் சிந்திக்கத்தான் வைத்திருக்கிறிருக்கிறது.
யாரையும் புண்படுத்துவது அவள் நோக்கம் அல்ல.
எதையும் பண்படுத்துவதே அவள் நோக்கம்.
அந்தப் பிரபலமான நாளிதழில் ரத்த ஓட்டமாக இருந்தாள் ஆனந்தி.
“மிஸ் ஆனந்தி”
“எஸ் ஸார்…”
“பத்திரிகை சர்குலேஷன் ரொம்ப டாப்ல இருக்கு…”
“எஸ் ஸார்…”
“லேஅவுட்ல கன்டென்ட்ல சில மாற்றங்களை ஏற்படுத்தணும்.”
“செய்துடுவோம் சார்..”
“சப்ளிமெண்டரி ஏதாவது ஒண்ணு புதுசா ஏற்படுத்தணும். டிரண்டியா ஏதாவது செய்யணும்…?”
“செஞ்சிடலாம் சார்..!”
சொன்னதோடு நிற்கவில்லை அந்தந்த துறையில் உள்ள வல்லுநர்களை எல்லாம் தொடர்பு கொண்டாள்.
என்ன செய்யலாம் என்பதை பத்திரிகை ஆசிரியருடன் உட்கார்ந்து பேசி பத்திரிகைக்கு ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தினாள்.
புதிய வடிவம் மேலும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்து இழுத்தது.
மாற்றம் தானே என்றும் மாறாதது.
“ஆனந்தி உனக்குக் கல்யாணம் பண்ணனும்..”
“இப்போ என்னப்பா அவசரம் ?”
“கல்யாண வயசு தான் உனக்கு வந்தாச்சே… காலத்துல கல்யாணம் செய்வது கூட ஒரு முறை தான்”
அப்பாவின் பேச்சை எதிர்க்கவில்லை ஆனந்தி.
அதில் உள்ள நியாயம் உணர்ந்தாள்.
“ஒரு நல்ல வரன் வந்திருக்கு அவனும் ஜர்னலிஸ்ட் தான் செஞ்சிடலாமா…?”
“சரிப்பா உங்க இஷ்டம்..”
திருமணம் எளிமையாக தான் செய்தார்கள்
உயர்ந்த மனிதர்கள் எல்லாம் வந்தார்கள்.
ஆசீர்வதித்தார்கள்.
திருமணத்திற்காக எடுத்த விடுப்பு முடிந்தவுடன் ஆபீசுக்குள் சென்றாள் ஆனந்தி .
ஒரு மாதத்திற்கு அவளுக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஜெர்னலிசம் படித்த ஒரு 30 பேருக்கு எல்லா துறைகளிலும் பயிற்சி அளிக்க ஆனந்தி நியமிக்கப்பட்டார்.
இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம், ஃபாரன்ஸிக் ஜர்னலிசம் உட்பட அனைத்துக்கும் பயிற்சிகள் ஏற்பாடு செய்தாள்.
அவைகளுகுறிய சிறப்பான பயிற்சியாளர்களை அழைத்து வந்தாள்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் உழைத்து 30 பேருக்கும் பயிற்சி அளித்தாள் ஆனந்தி.
ஆனந்தியின் அருமையான பணியையும், அயராத உழைப்பைப் பாராட்டி, பத்திரிகை நிறுவனம் விமான டிக்கெட்டோடு 15 நாள் விடுப்பு கொடுத்து அனுப்பியது.
தேன்நிலவு சென்று திரும்பிய பின் ஆனந்தியை ஊட்டி பிரான்ச்சுக்கு மாற்றியது தலைமை அலுவலகம்.
தன்னுடைய கர்ப்ப காலத்தை ஊட்டியில் கழித்தாள் ஆனந்தி.
ஆறாம் மாதம் முதல் ஆனந்தியை அலுவலகம் செல்ல வேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதியும் அளித்தது அலுவலகம்.
குழந்தை பிறந்தவுடன் 3 மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளித்தார்கள்.
அதன் பிறகும், தொடர்ந்து ஒரு வருடமாக வீட்டிலிருந்ததே தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆனந்தி.
ஆனந்திக்கு பின் வந்த பூமிகா தலைமை அலுவலகத்தில் காலை ஊன்றிக் கொண்டாள்.
இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட பூமிகா காற்றாய்ப் புயலாய்ச் சீறிப்பாய்ந்துச் செய்திகளைக் கொண்டு குவித்தாள்.
“பூமிகாவைக் கன்சல்ட் பண்ணுங்க!”
சென்சிடிவ் ஏரியாவுக்கு பூமிகாவை அனுப்புங்க…” என்றாகிவிட்டது சமீபத்திய ட்ரெண்ட்.
நடுவில் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து சில பேப்பர்களில் கையெழுத்து போட வேண்டி இருந்தது ஆனந்திக்கு.
தன்னிடம் அப்ரண்டீஸ் ஆக இருந்த பூமிகாவின் தற்போதைய நிலை ஆனந்தியின் மனதில் ஒரு கிலேசத்தை ஏற்படுத்தியது.
குழந்தைக்கு சளி இருமல்.
குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் ஆனந்தி.
வரவேற்பு அறையில் காத்திருந்தார்கள்.
அப்போது வயதில் மூத்த ஒருவர் தன் பேரக் குழந்தையுடன் அங்கு வந்தார்.
அவர் வந்ததைப் பார்த்தவுடன் “உங்களை டாக்டர் சிசிடிவி கேமரா மூலம் பார்த்துட்டாரு. உடனேயே உள்ளே வர சொன்னாரு”என்று அவரிடம் வந்து கூறினாள்.
“நான் டோக்கன் நம்பர்படி வரேன்’னு சொல்லிடும்மா. நன்றி…”
பதில் சொல்லி அனுப்பினார் பெரியவர்.
“நீங்க யாரு…?” என்று கண்களாலேயே கேட்டது போல இருந்தது ஆனந்தியின் பார்வை.
நான் ஒரு ரிடையர்டு எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார். இந்த டாக்டர் என்னோட ஸ்டூடண்ட். நான் எலிமெண்டரி கிளாஸ் எடுத்தேன்ங்கறதுக்காக நான் எல்லாரையும் பைபாஸ் பண்ணிக்கிட்டு உள்ளே போறது முறையா?”
ஆனந்திக்கு அவர் பதில் வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.
“ஹலோ சீஃப் எடிட்டர் சார்”
“சொல்லுங்க ஆனந்தி. பையன் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கேன் சார் இன்னைக்கு ஆபீசுக்கு ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போகணும்னு நினைக்கிறேன்…”
“இது உங்களோட ஆபீஸ்ம்மா எப்ப வேணா வா..”
ஆபீசுக்கு சென்றாள்
பூமிகாவின் இருக்கையை அணுகினாள்.
தன் பையில் இருந்து சால்வையை எடுத்து அவளுக்கு அணிவித்து பூமிகாவின் திறமையை மனப்பூர்வமாகப் பாராட்டினாள்.
பாராட்டு பெற்ற பூமிகா உறைந்து நிற்க, பாராட்டிய ஆனந்தி குன்றென நிமிர்ந்து நின்றாள்.
– 27-09-2022. ஆனந்த விகடன்