நுகத்தடி மாடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 914 
 

என்ன சுலபமாய் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. மனைவி என்றால் இளப்பமா? சீறினால் எதிர்க்காமல் கேட்டுக் கொள்ள..

கை தன் போக்கில் அரிசி களைய.. என் எதிரே விசு முகம் சிவந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் என்னால்தானாம். மாதம் பாதி ஓடுவதற்குள் முதல் தேதி சம்பளம் முழுவதுமாய்க் கரைந்து.. யாரிடம் உதவி கேட்பது என்று அலைய வேண்டியிருக்கிறதாம்.

பேசாதே.. நீ நினைத்தால் செய்யலாம்.

அத்தனை கோபத்திலும் சிரிப்பு வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என் புருஷனே? மாதத் தேவைகள் நீ அறிவாய். கைப் பணம் அளவும் தெரியும். இடைவெளியை ஈடுகட்ட ஒரு வேளை கஞ்சி குடித்தால் மட்டுமே சாத்தியம். முடியுமா?தொட்டுக் கொள்ள புடலங்க்காய் கூட்டா.. எதுவும் பொரிக்கவில்லையா.. வறுக்கவில்லையா.. நாக்கு நீளத்தில் அடுப்பில் இலுப்பச்சட்டி ஏற்றப்பட்டுக் கடைசி சொட்டு எண்ணையும் ஊற்றப்படுகிறது. இத்தோடு ஒன்றே முக்கால் லிட்டரும் காலி.

மாத ஆரம்பத்தில் நிரப்பப்பட்ட டப்பாக்களும், சம்படங்களும், எண்ணைத் தூக்குகளும் , விஸ்தாரமாய்க் கடலை மாவுக் கனவுகளைத் தருகின்றன. சாப்பிட்ட ஜோர் மறந்து நடுவிலேயே புகைச்சல்.

‘என்னால இனிமே தாக்குப் பிடிக்க முடியாது. பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்கு.’

சண்டை வேண்டாம். உக்கிரம் வேண்டாம். வா.. கை குலுக்கு. என்ன வழி ஆராயலாம். குறைந்த பட்சம் உன் மன இறுக்கம் தளர்த்துகிறேன். உன் பலம் புலப்படும். வெளியில் பணம் பல ரூபத்தில் காத்திருக்கிறது. சம்பாதித்து வரலாம்.

மாட்டார்! எப்போதும் சண்டைதான். எல்லாம் என்னால்தான்! குழந்தை வழக்கம் போல மிரண்டு பார்க்கிறது.

பின்னொரு சமயம் விமர்சனம் வெளிப்படும்.

‘அப்பா ரொம்ப மோசம்’

மழலைக்கு சிரித்தால் இவருக்கு ரோஷம் வரும்.

‘இல்லைடி கண்ணே. அப்ப முரடு இல்ல.. பாவம் பணம் இல்லாத கஷ்டம்தான்’ என்கிற நீள வசனம் ஷாம்லியிடம் மட்டும் பேச முடியும். புஷ்பாவிடம் முடியாது.

அவள் என்னைப் போல. இரண்டு வயசில் சத்தத்துக்கு அதிர்கிறவள். எதுவானாலும் அடிக்குரல் போதும். இரைச்சல் எதற்கு என்ற விவேகம்.

சூடாகக் காபி டம்ளரை நீட்டினேன். அதற்கும் சீறிப் பாய்ந்தார்.

“என்ன.. குடிச்சுட்டு தெம்பா கத்தச் சொல்றியா”

“இல்ல.. டம்ளரைத் தரச் சொல்றேன்”

நகைச்சுவை புரியாத மனுஷன் இல்லை. நண்பர்கள் மனைவியோடு வந்தால் சட்டென்று முகம் மாறும். தோரணை மாறும். நிமிஷத்துக்கு ஒரு சிரிப்பு. ஒரு அறுவை. எப்படித்தான் சாத்தியம் ஆகுமோ.

எல்லா மனைவிகளுக்கும் இது விஷயத்தில் ஒரே மாதிரி மனக் குறைதான் போலிருக்கிறது.

நாராயணன் மனைவி ஒரு தடவை வாய் விட்டே சொல்லி விட்டாள்.

“இங்கே இப்படி ஜோக் அடிக்கிறார். வீட்டுல சிரிப்பே வராது”

ஹால் ஒரு நிமிடம் பொலிவிழந்தது. நாராயணன் கவனம் என்னை விட்டு விலகி தன் மனைவியை பரிதாபமாகப் பார்க்க வைத்தது.

“போன மாசங்கூட ஐந்நூறு ரூபாய் கடன் வாங்க வேண்டியதாப் போச்சு. ஞாபகம் இருக்கா”

கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? வேண்டுமானால் கல்யாணத்தைத் தவிர்த்திருக்கலாம். இனி எதுவும் செய்ய இயலாது. புஷ்பா பிரத்தியட்ச சாட்சி. ஐந்து வருட தாம்பத்தியத்திற்கு. அவளைக் கூட முடிந்தவரை தள்ளிப் போட்டோம்.

கல்யாணமான புதிதில் விசுவிடம் கண் பளிச்சிடும் அழகை இருட்டிலும் ரசிக்க முடியும். உதடு விரியாமல் ஓரச் சிரிப்பை ‘ஒன்ஸ்மோர்’ கேட்கத் தோன்றும்.

எல்லாம் குறைந்த காலத்துக்குள் காணாமல் போயின. சிடுசிடுவென்ற சுபாவம் இததனை நாட்களாக மறைத்து வைத்ததாய் இருக்க வேண்டும். எல்லாம் புது மனைவி என்ற ஜோருக்காக.

புஷ்பா வெளியில் ஓடிப் போனது. என்னால் தான் முடியவில்லை. அது இவரை நிராகரிக்கிற மாதிரி. முதுகில் குத்தின மாதிரி படும். இன்னும் அலறுவார். வேண்டாம்.ஆனால் இந்த நிமிஷம் அவருக்குத் தனிமை வேண்டும். அமைதி வேண்டும். நிதானம் வந்தால் பிரச்னை புரியும். தீர்வும் புரியும்.

என் அண்ணனைப் போல அவ்வளவு கஷ்டப்பட்டவனும் அல்ல. நான் மூன்றாவது தங்கை. மூன்று பேரைக் கரையேற்றின புண்ணியவான். என்றாவது சகோதரிகள் மூன்று பேரும் ஒன்று சேரும்போது அவன் தலைதான் விடிய விடிய உருளும்.

‘இவனை யார் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணித் தரச் சொன்னது’

‘நாம எவ்வளவு நிம்மதியா இருந்தோம்’

‘இஷ்டப்பட்டா சமைச்சு.. இல்லேன்னா.. ஹோட்டல்ல வாங்கி..’

‘ச்சே.. ஒரு மூணு முடிச்சு.. என்னமா திசை திருப்பிடுச்சு..நுகத்தடி மாடுகளா’

என் கணவனுக்கு ஒரே தங்கை. அதுவும் காதல் கல்யாணம். காதலித்த பையன் கையில் கரண்டி பிடிக்கிறவன்.அந்தத் தொழிலோடு நாம் தொடர்பு படுத்த முடியாத வசீகரம். புன்சிரிப்பு. டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டு வந்தால் ‘எந்த கம்பெனி டெபுடி மேனேஜர்’ என்று கேட்கலாம். ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் பின்னிருக்கும் சமையற்கட்டில் சற்றே அழுக்கு வேட்டியில் பார்த்தும் பிரமிக்கலாம்.

என்ன தொழிலானால் என்ன.. நேர்மை.. கைசுத்தம்.. பொய் இல்லை. கட்டினவளைக் கைவிடும் உத்தேசம் இல்லை. ‘கடைசி வரை காப்பாற்றுவேன்’ பிளாட் வாங்கியாச்சு. இப்போது காண்டிராக்ட் எடுத்து கல்யாண வேலைகளில் கணிசமாய் பணம் வருகிறது.

இவர் தங்கைக்கும் படிப்பு வரவில்லை. பள்ளி இறுதி வகுப்பு வரை ஏதோ ஒரு உந்து சக்தி உதவியது. சமையல் காதலனுக்கு இவள் படிப்பு அனாவசியம். நேசம் மட்டுமே கொட்டை எழுத்துக்களில். ‘வா’ என்றான் இரு கரம் நீட்டி.

யார் யாரோ சமாதானம் செய்தார்கள். பின்னால் வம்பு பேசினார்கள்.

சிக்கனமாய் எந்த உறவுக்காரனையும் கூப்பிடாமல் கல்யாணம் செய்தார்கள். ‘ஓடிப் போனா நமக்குத்தான் அவமானம்’

‘மாப்பிள்ளை என்ன பண்றார்’

‘பிசினஸ். கை நிறைய பணம்’

சுலபமாய் பதில் சொல்ல முடிகிறது. அதிகம் பழகாத மனிதர்களிடம்.

இவருக்கு மட்டும் இன்னும் வீம்பு விடவில்லை. சொன்ன வார்த்தை.. ‘உன் வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன். போடி.. இந்தக் கல்யானம் நீயா தேடிகிட்டது. நாளைக்கு கண்ணை கசக்கிகிட்டு இந்த வாசப்படி ஏறு.. அப்புறம் பார்க்கலாம்’ இத்யாதி மிரட்டல்கள்.

இவர் வார்த்தை காப்பாற்றப் பட்டது. தனிக்குடித்தனம் வந்து விட்டோம் நாங்கள். தங்கை ‘இவர்’ வீட்டு வாசப்படி இன்னும் ஏறவில்லை.அவள் கல்யாணச் செலவு கூட இவருக்கு இல்லை.

என்ன.. சுபாவத்தில் கொஞ்சம் செலவாளி. கையில் காசிருந்தால் போதும். செலவழித்து விட்டு மறு காரியம். இருட்டில் நான் ‘ரதி’யாவேன். பர்ஸ் காலி என்றால் வேதாளம் முருங்கை மரம் ஏறும்.

‘பெண்டாட்டியா நீ.. உன்னாலதான் எல்லா கஷ்டமும்..’

இப்போதும் அதைத் தான் சொல்லிவிட்டு தடதடவென்று வெளியே போகிறார். இனி இரண்டு மூன்று மணி நேரத்துக்கு வீட்டில் அமைதி. அன்னிய தேசங்களுக்குக் கடன் உதவி கேட்டு வீட்டின் பிரதமர் பயணம். செய்தித்தாள் தலைப்பாய் மனசுக்குள் விரிந்தது.

வெகு நேரங்கழித்துத்தான் திரும்பினார். கையில் ஒரு பை நிறைய பழங்கள்.

லேசாக என்னுள்ளும் கோபம் வந்தது. கடன் வாங்கிய பணத்தில் இது என்ன டாம்பீகம்..

“இந்தா.. பிடி.. புஷ்பாக்குக் கொடு”

வாங்கி அனிச்சையாய் கட்டிலில் வைத்தேன்.

ஷர்ட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினார்.

“நல்லாத்தான் இருக்கு வீடு.. எல்லா பர்னிச்சரும் இருக்கு.. ஃபிரிட்ஜ் கூட இப்போ வாங்கியாச்சு”

யாரென்று கேட்பேன் என்று நினைத்திருக்க வேண்டும்.நான் கேட்கவில்லை.

“அவதான் என் மூஞ்சியைப் பார்த்தே புரிஞ்சுண்டு பையில் திணிச்சுட்டா.. பொல பொலன்னு கண்ணுல தண்ணி.. பாசம் போகுமா”

லேசாக ஏதோ புரிந்தது.

“மாப்பிள்ளையும் ரொம்ப தங்கம். அடிக்கடி வாங்கோ.. இவ முகத்துல இப்பத்தான் சிரிப்பையே பார்க்கறேன்னார்.. நீங்கன்னா ரொம்ப உசிராமே இவளுக்கு.. தெனம் ஏதாவது ஒரு கதை சொல்லிண்டே இருப்பான்னார்”

ஏதோ பொட்டலத்தைக் கொடுத்தார்.

“பச்சைக் கற்பூரம்.. கல்யாணத்துல கிடைக்குமாம்.. என்ன வாசனை பாரு”
என்றார் குழந்தை போல உள்ளங்கை முகர்ந்து.

எனக்குள் வார்த்தைகள் மறந்தன.

“இந்தா செலவுக்கு வச்சுக்கோ”

இரண்டு நூறு ரூபாய்த் தாள்கள். பச்சைக் கற்பூர வாசனையுடன். மூன்றாவது தாளை ஞாபகமாய்த் தன் பர்சில் வைத்துக் கொண்டார்.

எனக்கு ஏனோ அழத் தோன்றியது.

– மார்ச் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *