கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 2,911 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தோ பாரம்மா, இப்பவே கண்டிப்பா சொல்லிட் டேன்; ஆம்புள்ளேப் புள்ளையாப் பெத்துக்கிட்டு வா. பொட்டைக் குட்டியானால் கையால் தொடக்கூட மாட்டேன்.”காப்பி வடிகட்டியை இழுத்து இழுத்துத் தேய்த்துக் கொண்டே ஆண்டாளு கட்டளையிட்டாள்.

‘அது ஏது? அந்தப் பக்கம் ஒரே பெண்மயம்னா! எப்படி ஆகிறதோ?’ பஞ்சாமி ஆபீஸுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

‘எனக்கென்னவோ ஆம்புளேப் பசங்க மேலேதான் ஆசை. அம்மாக்கு கொளந்தே வேலை ஒண்ணு வெக்க மாட்டேன். பையன் நம்ம இடுப்புலேயே தான் சவாரியா யாயிருப்பான்.’

“நீ ஏதோ கோட்டை கட்டிக்கொண்டேயிரு! உன் எசமானியம்மாளுக்கும் கூடப்பிறந்தவங்க எல்லோரும் பெண்கள். முன்னாலேயும் பெண். பின்னாலேயும் பெண்.”

சுசிக்குக் கோபம் வந்தது. “ஆமாம். நீங்கதானே எல்லோருக்கும் வரன் தேடி, கட்டிக்கொடுத்து கஷ்டப்பட்டேள்!”

“சரி சரி, உன்னைக் கட்டிக்கொண்டு உங்கப்பாவுக்கு ஒரு சுமை குறைத்தேனே போதாதா?” – பஞ்சாமி ‘குஷி’ யில் இருந்தான், இன்றைக்து சமையல் பலே ‘ஜோர்’.

வயணமான சாப்பாட்டுக்கும் வண்ணான் மடிக்குமே ஒரு தனி உற்சாகமுண்டு. சோற்றுத் திமிர். துணிக் கொழுப்பு.

“அடேப்பா! ஒண்ணா. இரண்டா ? எட்டு. மனுஷ னிடம் ஒரு முழம் கயிற்றுக்குக் காசிருந்தால் எப்பவோ தொங்கியிருப்பான். எங்கேயிருக்கும்? அஷ்டலக்ஷ்மிகளும் ஒரே இடத்தில் வந்து தங்கினால், இடம் கனம் தாங்குமா? கப்பல் தட்டு கவிழ்ந்து எல்லாம் தலைகீழாப் போச்சு? கையிருப்பெல்லாம் கடனாக மாறிப்போச்சு.”

அவ்வளவுதான். சுசி மூக்கைச் சிந்திப்போட ஆரம்பித்து விட்டாள். பஞ்சாமி சொக்காய்ப் பொத்தானைத் திருகிக் கொண்டே சிந்தித்துக்கொண்டு போய்விட்டான்.

‘நீ அளுவாதே அம்மா. ஐயா சொபாவம் புதுஸ்ஸா. அவருக்கு உன் அளுகையிலே சிரிப்பு காணறதே கண்ணாப் போச்சு. புள்ளத்தாச்சியாச்சேன்னு மனுசனுக்கு இரக்கம் இருக்குதா பாரேன்”

தேற்ற ஆளிருந்தால் அழக் கேட்கணுமா? சுசி பெருங் குரல் எடுத்தாள்.

“அட சும்மாயிரும்மா, இந்த பொண்ணா . புள்ளையா தகறாரெல்லாம் வவுத்துலே இருக்கிற வரைக்கும் தானே! இடுப்பு நோவு எடுக்கட்டும்! ஏதோ ஒண்ணு களிஞ்சா சரின்னு ஐயாவுக்கே ஆயிடும். இந்தக் கிண்டல் எல்லாம் கொள்ளுச் சுண்டலாப்பூடும்! அட போ நீ ஒண்ணு! கொளந் தையை ஏந்திட்டு வண்டிவிட்டு இறங்கினதுமே, ஆலத்தி கரைச்சு வெச்சுகிட்டு நான் தானே காத்திட்டு நிப்பேன்? எங்கிட்டேதானே பையனைக் கொடுத்து வாங்கப் போறே! அட, பையன்னுதான் வாயிலே வருது, உனக்குப் பையன் தான் போ!-“

“ஆண்டாளு. நீ இல்லாட்டா இந்த வீட்டில் என்பாடு அதோகதி தாண்டி! நீ என் உடன் பிறப்பு மாதிரி.”

“ரெட்டேன்னு சொல்லும்மா. இங்க வாம்மா. என் னோட நிலைக்கண்ணாடியண்டை நின்னு பாரு. ரெண்டு பேரும் ஒரே ஒசரம். ஒரே தாட்டி, தெரியல்லே? முந்தா நா கொடுத்தியே ஒரு ரவிக்கை. எனக்கே அளவு எடுத்து தச்ச மாதிரி அச்சா இருந்திச்சு!”

“ஊருக்குப் போய் திரும்பி வரப்போ இன்னும் ரெண்டு, மூணு நல்லதாக் கொண்டு வரேன்.”

“உன் பிரியம்.”

தனிக் குடித்தனம் வைத்த புதிதிலேயே ஆண்டாள் வந்து விட்டாள். அவள் வேலைக்கு வந்து அமர்ந்த விதமே தனி. கருவேப்பிலை விற்றுக்கொண்டே வாசற்படி ஏறியவள் வீட்டு எசமானி கூடத்தில் படுத்திருக்கக் கண்டாள். சுற்று சாமான்கள் வாரியிறைந்து கிடந்தன. சுசிக்கு மசக்கைக் கோளாறு. அப்போது தான வாந்தியெடுத்துக் களைத்துப் போயிருந்தாள். ஆண்டாளு கூடையை அப்படியே கீழே வைத்தாள். ஐந்து நிமிஷம் பம்பரமாய் ஆடினாள். சாமான் களை எடுத்து அடுக்கி ஒழுங்குபடுத்தினாள். முற்றத்தில் போட்டிருந்த புடவை, வேஷ்டியைக் கசக்கிப் பிழிந்து, விரித்து அங்கேயே குறுக்கே கட்டியிருந்த கம்பிக்கொடியில் இழுத்து பிடித்து உலர்த்தினாள். உடனே மூலையில் சார்த்தி யிருந்த துடைப்பத்தைப் பிடித்துப் பெருக்க ஆரம்பித்து விட்டாள்.

குப்பையைத் தள்ளிக்கொண்டே அவள் பக்கமாய் வரு கையில், “என்னம்மா! உடம்பு எப்படியிருக்குது? நான் தொட்டுப் பார்ப்பேன். ஆனால், நீங்கள்ளாம் பாப்பா ராச்சே ஒட்டிக்கிட்டா?”

சுசிக்குத் திகைப்பில் அடைத்துப்போன வாய் இன்னும் திரும்பவில்லை.

என்னத்தைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது? கேட்கவும் அஞ்சினாள். காட்ரெஜ் பீரோ- பஞ்சாமி ஆபீஸ் சகாக்கள் சேர்ந்து பணம் போட்டு வாங்கிக் கொடுத்த கலியாணப் பரிசு, ஆள் உயரத்துக்கு. ஒரு பக்கத்துக் கதவு முழுக்க நிலைக்கண்ணாடி பதித்தது – அந்தப் பீரோவிடம் போய் அதைத் திறந்து மூடித் திரும்பிவந்தாள்.

“என்னதும்மா, துட்டா? துட்டு யாருக்குமா வேணும். என்மாதிரி நீ ஒரு பொம்புள்ளே, படுத்திருந்ததப் பார்த் தேன் மனந்தாளல்லே. அவ்வளவு தானே! உன்னைப் பெத்த வங்க இங்கே யிருந்தா உன்னை இப்படிக் காணப் பொறுப் பாங்களா?”

சுசி, அந்த நிமிஷமே உடைந்து உருகிப்போனாள். எட்டுப் பெண்களைப் பெற்ற அவள் தாயாருக்கு உண்மை யிலேயே அவள் மேல் அவ்வளவு தனி ஆதரவு இருக்குமோ? ஆனால், வந்தவள் சொன்ன விதத்தில் அவளுக்கு அவள் தாயார்மேல் அன்பு திடீரென ஆடிப் பெருக்கெடுத்தது.

“எனக்கு ஏதாச்சியும் குடுக்கணும்னு இருந்திச்சா , ஒரு டம்ளர் காப்பி ஸ்டாங்கா, நீங்க குடிக்கற மாதிரி – ரெண் டாந்தண்ணி, மூணாந்தண்ணியில்லே – நிறைய பாலுவிட்டு. அள்ளி சக்கரைப்போட்டு சேறாட்டம் கொடு. எனக்குப் பாப்பார் வீட்டுப் பண்டம்னா அவ்வளவு ஆசை. விட்டுச் சொல்றேனே, உன்னைப் பார்த்தவுடனே எனக்கென்னவோ அப்படி புடிச்சுப் போச்சும்மா , மெய்னா வெச்சுக்க , பொய்னா வெச்சுக்க, என்ன வேலைக்கு வெச்சுக்கறி யாம்மா? நீ இஷ்டப் பட்டது கொடும்மா. துட்டு யாருக் கம்மா வேணும்? எப்ப வேணும்னாலும் சம்பாரிச்சுக்கலாம், இந்தா கருவேப்பிலை எடுத்துக்க, துவையல் அரைச்சு எனக்கு ஒரு உண்டை கொடு-“

கூடையைக் கவிழ்த்து ரேழி வாசற்படியைத் தாண்டு மிடத்தில் தாழ்வாரத்துச் சுவரில் ஏற்கெனவே அதற்கென்றே அடித்தாற்போலிருந்த ஆணியில் மாட்டினவள் தான்.

அன்று மாலை பஞ்சாமி ஆபீஸிலிருந்து வந்து விவரம் கேட்டதும் வழக்கப் பிரகாரம் ஆரம்பித்துவிட்டான்.

“ஓஹோ , கண்டெடுத்த குண்டு முத்தாக்கும்! காசின் மேல் ஆசையில்லையாக்கும்! காப்பி என்றால் உசிராக்கும்! எனக்கு இப்போ ஞாபகம் வருகிறது. எங்கள் ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். காஷாயம், மொட்டைத் தலை எல்லாம் சரி. அவருக்கு சாப்பாடு கூட வேண்டாம். வாசற்குறட்டின் மேல் ஒரு கால், படிமேல் ஒருகால், இடுப்பில் ஒருகை ஊன்றி அதிகாரமாய் நிற்பார். சிவத்துக்கு ஒரு டம்ளர் பால் அகப் படுமா?’ என்பார். அவரோட பாதக்குறட்டின் சப்தம் கேட் டாலே எல்லோரும் ஓடி ஒளிவார்கள். பாவம். எல்லோருக் கும் பயிர்த் தொழில். காலையில் தண்ணுஞ் சோறு, மத்தி யான்னம் மாவு சாதம், இரவு அடுப்புப் புகைந்தால் அதிகம்! பாவம், பாலுக்கு எங்கே போவார்கள்? சரி! சாமான்கள் ஜாக்ரதை, சொல்லிவிட்டேன். எங்களுக்கெல்லாம் இப்படி வேலை கிடைத்துவிட்டால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏன் தலை காட்டும்?”

“இந்த இடக்குப் பேச்சைத் தவிர உங்களிடம் என்ன கண்டது? உங்கள் கூட்டமே சந்தேகக் கூட்டம் தானே?”

தோசையில் கடிபடும் சுண்டைக்காய்போல் ‘தறுக்தறு’க்கெனும் பேச்சு. மண் கூஜாவிலிருந்து கொட்டும் ஜலம்போல் கிளுகிளுக்கும் குரல். நின்ற இடத்தில் நிற்காததோர் கீர்த்தனம்.

ஆண்டாளு கண்டிராத படம் கிடையாது. ‘ஸ்டார்’ களின் குடும்ப வரலாறு. அவர்கள் நடித்திருக்கும் படங்களின் ஜாபிதா, அவர்களைப்பற்றி அக்கப்போர் அத்தனையும் அவளுக்கு அற்றுப்படி.

எங்குமே மூவர் கூடில். இருவர் ஒன்று சேர்ந்து கொண்டு மூன்றாமவனைத் தாக்குவர். ஆண்டாளு சுசிக்கு சரியான பக்கபலமானாள். ஆண்டாளு வெளிப்படையாய்க் கு கட்டினாள். இருவரிடையிலும் குறுக்கே விழுந்து கலக மூட்டினாள் என்று அர்த்தமல்ல. அவள் அவர்களிடையில் புகுவது கூட இல்லை. ஆனால், சம வயதில் தன் பக்கம் ஒருத்தியிருப்பதே சுசிக்குப் பஞ்சாமியுடன் தர்க்கிக்கவோ, தன் ஆக்ரமிப்பை அவன் எவ்வளவு தூரம் பொறுப்பான் என்று ஆழம் பார்க்கவோ தைரியமாயிருந்தது.

ஆனால், அவர்கள் இருவரையுமே கண்டு ஆண்டாளு, தன்னுள் ரகஸ்யமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாளோ எனப் பஞ்சாமிக்குத் தோன்றியது. அவ்வெண்ணமே இம்சையாயும் ரோஸமாயும் இருந்தது. எந்த சமயத்தில், எதற்காக, அவர் களுடைய எந்த அசட்டுத்தனத்துக்காக கேலி நகைப்பில் உள்குலுங்குகிறாள் என்று குறிப்பாய் சுட்டிக் கண்டு கொள்ள முடியாதது இன்னொடு பெரிய சீண்டல் . ஏனெனில் ஆண்டாளு எப்பவும் இன்முகமாகவே யிருந்தாள்.

சுசிக்கு எடுத்ததுக்கெல்லாம் மூக்கு துடிக்கும். போதும் போதாதற்கு இப்போ கர்ப்பிணி, துர்க்குணி. அத்தனைக்கத் தனை ஆண்டாளு பற்பொடி விளம்பரம் போல் இளித்துக் கொண்டேயிருப்பாள். கன்னம் குழிந்தது. எப்படி அவளுக்குப் பற்கள் அவ்வளவு வெண்மையாய், வரிசையாயிருக்கின்றன? நிஜமாய்த்தான், எதைப் போட்டுப் பல் விளக்குகிறாள்?

சுசிக்கு வரவர தள்ளவில்லை. மேல் மூச்சு வாங்கிற்று. “அம்மா எப்போ வந்து அழைத்துப் போவாள்? அதுக்குள் ளேயே, ஆண்டாளு, நீ இல்லாட்டா என்னடி பண்ணுவேன்? அவர் இருக்கிற ஊழலுக்கு வீடு நாறிப் போயிடுமே!”

‘நீ ஏம்மா கவலைப்படறே? நான் தான் உன் வூட்டு மனுசி ஆயிட்டேனே!”

சுசிக்கு உச்சி குளிர்ந்து போகும். பஞ்சாமிக்குத் தெரிந் தும், தெரியாமலும் ஆண்டாளுக்குச் சௌகரியங்கள் நடக்கும். தனக்கு அவன் மாலை வாங்கி வரும் கதம்பத்தில் சரி பாதி ஆண்டாளுடன் பகிர்ந்து கொள்வாள். அவளை விட ‘ஸ்டைலா’க , ஆண்டாளு அதைக் கொண்டையில் வட்டமாகச் சுற்றிக்கொள்வாள்.

‘சுசி. இன்று காலையில் பருப்புசிலி நன்றாகப் பண்ணி யிருந்தாய். ஆபீஸுக்குப் போகும் அவசரத்தில் அனுபவித்துச் சாப்பிட முடியவில்லை. இப்போ கொண்டு வா. சாதத் தில் பிரட்டி, காப்பிக்கு முன்னால் ஒரு உருண்டை, ஒரு டென்னிஸ் பால், டிபன் மாதிரி அடிக்கிறேன்.’

‘சரிதான், ஆண்டாளுக்குத்தான் கொஞ்சம் வெச்சிருக் கேன். அதற்குப் பூனையாட்டம் வட்டமிடவேண்டாம். இதென்ன முச்சந்தி மூணு வேளையும், குழந்தை பருப்புஞ் சாதத்துக்கு அழற மாதிரி! காலையில் பண்ணினது இன்னும் அப்படியே உக்காந்திருக்குமா?’

தர்க்கமும் மொணமொணப்பும் ஓயும் தறுவாய்க்குச் சற்று சமாதானம் பண்ணுகிற மாதிரி, ‘சரி. வேணுமானால் ஏதாவது டிபன் பண்ணிடறேன். உங்களுக்குத்தான் குழம்புமா உப்புமா உசிராச்சே! இன்னி சாயங்காலம் ஜவுளிக் கடைக்குப் போவோமா?’ என்றாள் சுசி.

‘ஏன் உங்கப்பா வைத்திருக்கிறாரா?’

இந்தக் குத்தலை வாங்கிக்கொள்ளாதது மாதிரியே, அத்தரதையா ரவிக்கையே இல்லை.

‘இதென்ன அக்ரமம்! முந்தா நேற்றுக்கூடப் பார்த் தேனே , உன் பெட்டியை ஒழித்து அடுக்கிக்கொண்டிருந்தையே, ஒரு போர் இருந்ததே!’

‘எல்லாம் பழசு, ஆண்டாளுக்குக் கொடுத்துட்டேன்.’

‘பழசா? எல்லாம் கல்லாட்டம், அத்தனையுமா?’

‘அத்தனையுமாம்! சுண்டைக்காய் எத்தனை? உங்கள் கூட்டமே அல்பக் கூட்டம் தானே!’

ஆண்டாள் வந்ததிலிருந்தே, சுசிக்கு வாய் அதிகரித்து விட்டது.

இப்படியே, காரணம் ஸ்பஷ்டமாய் உணர முடியாமலே அவனுக்கும் ஆண்டாளுக்குமிடையில் ஊமைப் பகை வளர்ந்து கொண்டிருந்தது. அதுவே ஆண்டாளுக்குத் தெரிந்ததோ இல்லையோ? தெரிந்தாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. தெரிந்தால் தான் என்ன, அவளுக்குப் பயமா? எசமானியம்மா அவள் பக்கம் இருக்கும் வரை, அவளை யார் என்ன செய்ய முடியும்?

ஆனால், ஒன்று: ஆண்டாளுக்குத் திரிசமம் பிடித்த கை யல்ல. வெள்ளிப் பண்டங்கள், சில்லரை , நோட்டு, கைக் கடியாரம், பவுண்டன் பேனா, தங்கப் பொத்தான் – நினைவாகவோ, மறதியாகவோ வைத்த இடத்தில் வைத்தபடி இருந்தன. நம்பி அவளை வீட்டில் வைத்துவிட்டு எங்கு வேணுமானாலும் செல்லலாம். நாளடைவில் அம்மாதிரியே பல காரியங்கள், பொறுப்புகள் எல்லாம் ஆண்டாளிடமே விடப்பட்டன. சுசிக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் உடல் தள்ளாமைக்கும், காலை வெய்யில் முகத்தில் உறைக்கும் வரை பஞ்சாமி தூங்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஆண் டாள் ஒரு பெரும் வரமாய் அமைந்தாள். எனினும், அதுவே ஒரு முறையில் அவமானமாயுமிருந்தது. ஆனால், அத்துடன் சரி தன்மானம் குத்தப்பட்டதன்றி, தூண்டப்படவில்லை. உண்மையில் அவள் பேய்க் சுறுசுறுப்பில் ஒரு போதை தானிருந்தது. இப்படித்தான் என்று கூற முடியாது. மற்றவர் களுடைய பலத்தை அதுதான் உறிஞ்சிக்கொண்டு, அவர் களை இன்னும் பலமான மயக்கத்தில் ஆழ்த்தியது.

ஒரு விஷயத்தில் சுசியும் ஆண்டாளிடம் அசௌகரி யத்தை அனுபவித்தாள். பொழுது சரியாய்ப் புலருமுன், ஜன்னலுக்கு வெளியே வானத்தில் விடி சாம்பல் பூக்குமுன் வந்து கதவைத் தடதடவெனத் தட்டுவாள். சபித்துக் கொண்டே பஞ்சாமி எழுந்து வருவான்.

‘இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து வரக் கூடாதா – ஆண்டாளு?’ என்று சுசி எத்தனையோ விதங்களில் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாயிற்று.

‘நீ சொள்னபடித்தானே அம்மா நேரமாய் வந்தேன்!” என்று சிரிப்பாள். ஆனால், வருகிறபடி வந்து சுவாரஸ்யமான விடி நித்திரையைக் கலைத்துக் கொண்டிருந்தாள்,

‘காரியம் நறுவிசோ இல்லையோ, சதா ஏதாவது செய்து கொண்டிருக்கணும். ஒழித்துப் பெருக்குதல் என்பதே அவளுக்கு ஒரு வெறியாயிருக்கிறது.’ஒரு நாள் சோப்பு, சீப்பு வைக்கும் அலமாரியில் நான் விழித்துக் கொள்ளப் போகிறேன்’ என்று பஞ்சாமி இரைவான்.

ஒரு சமயம் பஞ்சாமி ஆபீஸிலிருந்து வேலை செய்ய வீட் டுக்குக் கொண்டு வந்திருந்த முக்கியமான பேப்பர், மறுநாள் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பும் வேளைக்கு காணோம். பஞ்சாமிக்கு உடல் பதறிவிட்டது. முதலில் அதை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கக்கூடாது. கேட்டிருந் தாலும் துரை அனுமதித்திருக்கமாட்டான். அத்துடன் வந் திருப்பவன் புதிசு. அவன் புது ஜோரில், இன்று திட்டத் தொடங்காமல் நல்ல நாளாய்ப் போகணுமே என்று ஒவ்வொரு நாளும் கதி கலங்கும் நாட்கள். வீட்டையே தகர டப்பாபோல் தலை கீழாய்க் கொட்டித் தேடி, வாசலில், கார்ப்பரேஷன், வீட்டுக்கு வீடு தாராளமாய் அளித்திருக்கும் சிமிட்டிக் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தபின், மூலைப் பிள்ளையாருக்கு ஒரு சதிர்த் தேங்காய் சுசி வேண்டிக் கொண்டபின், பேப்பர்க்காரனுக்கு நிறுத்துப் போடக் கட்டி வைத்திருக்கும் தினசரி பேப்பர்க் கட்டில் சொருகியிருந்தபடி அகப்பட்டது. பஞ்சாமிக்கு சீற்றம் கட்டுக்கடங்கவில்லை.

‘என் அறையை யாரும் பெருக்க வேண்டியதில்லை, அதில் எதையும் ஒழித்துப் பெருக்க வேண்டியதில்லை. என் குப்பையிலேயே நான் புதைந்து, மூச்சுத் திணறிச் செத்து நாறிப் போனால் போகிறேன். என்னை யாரும் எடுக்கவேண்டியதில்லை’ என்று உத்தரவுவிட்டான்.

அதற்கு அவனுக்குக் கிடைத்த பதில், கூஜாவிலிருந்து கிளுகிளுக்கும் தண்ணீர்ச் சிரிப்புத்தான். ஆண்டாளுக்குப் பயம் என்று ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை. அந்தச் சிரிப்பில் அவன் உணர்ந்த ஏளனம், உடல்மேல் கம்பளிப் பூச்சிபோல் முலுமுலு வெனப் பிடுங்கிற்று.

ஒரு சமயம் அவனும், சுசியும் கடைக்கோ , சினிமா வுக்கோ , தெரிந்த வீட்டுக்கோ போய்விட்டுத் திரும்பு வதற்குள் ஆண்டாளு, தானே சமையலறையில் புகுந்து, பற்றுப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, தேய்த்துத் துடைத்து, பலகைகளில் கவிழ்த்து அடுக்கி, ஒரு சாதமும் சின்னப் பாத்திரத்தில் குழம்பும் பண்ணித் தனியாய் வைத்து, அடுப்பையும் சாணியிட்டு மெழுகிக் கோலம் போட்டு விட்டாள்.

சுசிக்கே கொஞ்சம் ‘திக்’ காகிவிட்டது. சுசியின் முகத்தைப் பார்த்துப் பஞ்சாமிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘உன்னை யாருடி ஆண்டாளு இதெல்லாம் செய்யச் சொன்னது. என்ன தான் எல்லாம் போச்சுன்னாலும் ஒரு இலை மறைவு தலை மறைவு. இடது கண் வலது கண்கூட இல்லாமல் போகணுமா?’

‘உன் பாசையெல்லாம் யாருக்குப் புரியுது? என்னவோ புள்ளத்தாச்சியாச்சேன்னு செஞ்சுட்டேன். ஏன், நான் தொட்டதை , நீங்க தொட்டுத்துன்னா, குடல் கறுத்துடுமா?’

அவளை என்ன செய்ய முடியும்?

தலையைச் சற்று சாய்த்தபடி குறும்பு கூத்தாடும் கண் களுடன் அவள், அவர்களைப் பார்க்கும் இச்சமயம், அவன் தன் கிராமத்து வாய்க்காலில் குளிக்கையில் – ஓடும் தண்ணீரில் சில சமயங்களில் பாசி. கும்பியோடு வேர் கழன்று பெரிய காதுகள் போன்ற இதழ்களுடன் மிதந்துவரும் வெள்ளைப் புஷ்பத்தை ஞாபகமூட்டினாள். அதன் பேர் என்ன? எங் கிருந்து வருகிறது, எங்கே போகிறது – யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் பெருமையான சிரிப்பு மாத்திரம் மனதில் பதிந்துவிட்டது. அம்மாதிரியே இவளுக்கு எப்பவும் எல்லாமே சிரிப்பு. ஏளனமாக இருந்ததோ?

சமயம் போதற்று உலகத்தையே ஒரு பெரும் சிரிப்பாய்க் கண்டு தன்னைக் கோபிப்பவரை மூர்க்கனாயும், முட்டா ளாயுமாக்கும் ஒரு குழந்தைத் தன்மை. சூடிக்கொடுத்த நாச்சியார் இப்படித்தான் இருந்திருப்பாளோ?

ஊருக்குப் புறப்படுகையில் சுசி, ஆண்டாளிடம் தான் வீட்டை ஒப்படைத்து விட்டுப் போனாள்.

‘ஐயாவுக்குப் பொறுப்பு கிடையாது. நீதான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும், அவர் ஓட்டல்லே சாப்பிடுவார். இரண்டு வேளையும் வந்து சாணி தெளிச்சிப் பெருக்கி…’

அவள் கிளம்பும் போது, ஆண்டாளு பச்சைக் குழந்தை மாதிரி அழுதாள், மனம் தாளாது. சுசியின் கண்ணீரும் கலந்தது. “ஆண்டாளு என் மேல் இவ்வளவு பக்ஷம் வெச் சிருக்கையாடி?” அழுகை ஒட்டுவாரொட்டி. அவனுக்கும் தொண்டை அடைத்தது. ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புதுச் சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன என்று தோன்றாமல் இல்லை – வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நக்ஷத்திரக் கூட்டங்கள் போல்.

ஒரு நாள் தற்செயலாக, கூடத்துக் கொடியில் பட்டுப் புடவை உலர்த்தியிருக்கக் கண்டான். எல்லா அரக்குச் சமத்துக்களின் தனி மறதிக்கு விலக்கில்லாமல், சுசி அதை மாத்திரம் உள்ளே வைக்க மறந்து ஊருக்குப் போய்விட்டாள். ‘எலி பிடுங்காமல் அதை மடித்தாவது போடச் சொல்வணும்.’

தலை தீபாவளிக்கு எடுத்தது. பொன்வண்டுக் கலர்.

ஆனால், ஆண்டாளுவும், அவனும் அதிகமாய்ச் சந்திக்கக்கூட வாய்ப்பில்லை. சந்திக்கும் போது ஞாபகம் இருக்காது. வாசற் கதவு சாவி ஒன்று அவனிடம் இருந்தது. மற்றதை சுசி ஆண்டாளுவிடம் கொடுத்திருந்தாள். காலையில் அவன் கையைக் காலை முறிக்கும் வேளைக்கு, வேலை முடிந்து போயிருப்பாள். மாலை ஆபீஸ்விட்டு எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவு தான் திரும்புவான்.

புடவை உலர்த்தியபடியே கொடியில் தொங்கிற்று.

மாமனாரிடமிருந்து மஞ்சள் தடவி வந்த கடிதாசின் பின்புறத்தில் சுசியின் பலவீனமான கையெழுத்தில் இரண்டு வரிகள் இருந்தன.

ஆண்டாளுவை சர்க்கரையை வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். அறுந்து போன உங்கள் மூக்கை எடுத்து ஒட்ட வைத்துக்கொள்ளுங்கள்.

தீபாவளி வந்துவிட்டது.

மூன்று நாட்களாகவே பட்டாசு வெடியும், தெருவில் பசங்களின் ஆரவாரமும் காது பொளிந்தது. ராத்தூக்கமே கெட்டது. கண்கள் எரிந்தன.

குறைத் தூக்கமும், அறை விழிப்புமாய்ப் படுக்கையில் இருப்புக் கொள்ளாமல் புரளுகையில், சுசி நினைப்பு எழுந் தது. ‘ஏ சுசி, கலியாணமான புதிதில் நான் கண்ட சுசியா இப்போது நீ? சே, இப்போது மாத்திரம் உன் மேல் எனக்கு ஆசையில்லையா? அதற்கென்ன, கொஞ்சம் சீண்டுகிறேன், அவ்வளவுதானே! அது என்ன கோபமோ , ஆங்காரமோ புர்ர்ரர்-ரோ? அதென்ன சொக்கு சொக்கி சினிமாவில் காணற மாதிரி சோகமாய் விழுந்தால் தான் ஆசையா? சுசி, நீ கோபிக்கையில் உன் முகம் எவ்வளவு களை கட்டுகிறது தெரியுமா! சுசி, நான் நல்லவன் தாண்டி! உனக்குப் பிடிக்க வில்லையானால் இனிமேல் சீண்டவில்லை திருப்திதானே! நீ இல்லாவிட்டால் பொழுதும் போகவில்லை. நினைத்துக் கொண்டு ரயிலேறிவிடும் கிட்ட தூரத்தில் இருக்கையா? தலை தீபாவளிக்குப் பிறகு எப்போது உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன்?’

நினைப்பு அப்படியே கனவுள் நழுவியது. அவனுக்குத் தலை தீபாவளி. கீழே ஒரே அமர்க்களம்.

சுசி மாடிப்படி ஏறி வருகிறாள். ‘ணக்ணக்’ என மெட்டி ஒலிக்கிறது. மெதுவாய்ப் படுக்கையறைத் கதவு க்றீச்சிட்டுக் கொண்டு திறக்கிறது.

விடியிருட்டில் அவள் உருவக்கோடுகள் விளிம்பிடுகின்றன. புதுப் புடவை சலசலக்கிறது. பக்கத்தில் வந்து: நிற்கிறாள்.

“சுசி!” அவள் கையைப் பிடித்து இழுக்கிறான். அவன் மேல் சாய்கிறாள். மெத்து மெத்தென அங்கங்கள் அழுத்து கின்றன.

“சுசி! சுசி!”

தாழ்ந்து. நீண்டதோர் கொக்கரிப்பு அவனுள் மருந்து ஊசிபோல ஏறி, கனவு கலைந்தது. உடலில் மின்சாரம் பாய்ந்து, நினைவு வெடுக்கென உதறிக்கொண்டது. பதறி எழுந்து விளக்கைப் போட்டான்.

சிறித்தபடி ஆண்டாளு எதிரே நின்று கொண்டிருந்தாள். எண்ணெய் தேய்த்து ஸ்னானம் பண்ணி, கொடியிலிருந்து இழுத்து சுசியின் தலை தீபாவளிப் புடவையை உடுத்தியிருந்தாள். ஈரம் உலர அள்ளிச் சொருகிய கொண்டையில் சொகுசாய்ச் சூடிய பூச்சரம் தொங்கிச் சிரித்தது. பட்டுப் புடவையிலிருந்து பொன்வண்டின் மின்னிறங்கள் ‘டால்’ அடித்துச் சிரித்தன. ரவிக்கையில் ஜிகினாப் பொட்டுக்கள் மினுக்கிச் சிரித்தன. கைவிரல்களிலிருந்து சொடுக்குகள் சிரித்துக் கொண்டு உதிர்ந்தன. கைவளையல்கள் குலுங்கிச் சிரித்தன. சிரிப்பு மணம் அவளைச் சூழ்ந்து கமழ்ந்தது. உலகத்தின் புளுகுகளை அம்பலப்படுத்தும் சிரிப்பின் தேவ தையாக காக்ஷியளித்தாள்.

அப்படியே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தனரோ?

அவள் புன்னகை மாறவில்லை. சாவகாசமாய்த் திரும்பினாள். அவள் இடை மிடுக்காய் ஒடிந்தது. ரேழி வாசற்படி தாண்டுமிடத்தில் தாழ்வாரத்துச் சுவரில் இந்த வீட்டில் அவள் புகுந்தபோது மாட்டிய அவளுடைய கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடை தாண்டி இருளில் மறைந்தாள்.

வாசல் கதவு திறந்து மூடியது.

கூடை மாட்டியிருந்த வட்டமான அடையாளம் சுவரிலிருந்து சிரித்தது.

பொறி கலங்கி அங்கேயே நின்றான்.

கிராமத்தில். வாய்க்காலில் குளிக்கையில், பாசி கும்பியுடன் யானைக் காதுகள் போலும் இதழ்களுடன் வேர் கழன்று சிரித்தபடி, வெள்ளைப் புஷ்பம் மிதந்து வரும் – அதன் பேர் என்ன? எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது…

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *