கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 31,805 
 

(1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸாகரபுரத்தில் அன்று ஏக தடபுடல். மேளச் சத்தம் ஊரை இரண்டாக்கியது. இரண்டு வாரமாக இங்கே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை இந்தக் கிராமத்தார் மாத்திரம் அல்ல, அக்கம் பக்கத்தில் பத்துமைல் தூரத்திலுள்ள கிராம வாசிகளும் அறிந்தனர். இந்த மாதிரியான தடபுடலை இதற்கு முன் இந்தக் கிராமம் கண்டதே இல்லை. விதவிதமான வாத்தியங்களைக்கேட்டு எல்லோரும் சந்தோஷமடைந்தார்கள், ஆனால் இந்த வாத்தியச் சப்தத்தினால் கிராமத்திலுள்ள மாடு கன்றுகளுக்குத்தான் அதிகக் கஷ்டமாகிவிட்டது. அவைகளுக்கு ஏற்பட்ட மனோவேதனையை அளவிட முடியாது. இவ்வளவு ஆடம்பரங்களுக்கும் காரணம் ஒரு பதினான்கு வயதுப் பையனின் கல்யாணம்தான். ஸாகரபுரத்தின் ஜமீன்தார் ஸ்ரீமான் ஹரதேவமித்ரரின் ஒரே மகனின் விவாக விழாவை ஒட்டித்தான் இந்தக் கொண்டாட்டங்களெல்லாம் நடை பெற்றன. ஹரதேவமித்ரர் பெரிய மனிதர். கிட்டத்தட்ட இருபதினாயிரம், முப்பதினாயிரம் ரூபாய் வருஷவருமானம் அவருக்கு உண்டு. மகனின் பெயர் சத்யேந்திரமித்ரர். ஹேயர் துரை பள்ளிக்கூடத்தில் பிரவேச வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். சத்யேந்திரனின் தாய் தன் மகனுக் குச் சிறு வயதிலேயே கல்யாணம் பண்ணி மருமகளின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் அதனால் தான் அவனுக்கு இந்தச் சிறுவயதிலேயே விவாக நடந்தது. பர்த்வான் ஜில்லாவில் தில்ஜான்பூர் ஜமீன்தார் காமாக்யா சரணசௌதரியின் இளைய மகள் ஸரளாவைச் சத்யேந்திரனுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.

பெண் அழகி. சத்யேந்திரனுக்கு மிகுந்த சந்தோஷம். பத்து வயதுள்ள மருமகளின் அழகிய முகத்தைக் கண்டு சத்யேந்திரனின் தாய் மிகுந்த ஆனந்தம் அடைந்தாள். கல்யாணம் நடந்த மறுவருஷமே ஹரதேவபாபு மருமகளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். மருமகளை தாய் வீட்டில் விட்டுவைக்க அவர் மனைவி விரும்பவில்லை. ‘கல்யாணம் நடந்த பிறகு பெண்களைத் தாய் வீட்டில் விட்டுவைக்கக் கூடாது,’ என்று அடிக்கடி அவள் சொல்வது வழக்கம். அவள் அபிப்பிராயம் என்னவோ சரிதான்!

சத்யேந்திரனின் படிப்புக்காக ஹரதேவர் தம் மனைவி யுடன் கல்கத்தாவிலேயே வசிக்கலானார். ஸரளாவும் கல் கத்தா வந்து சேர்ந்தாள். சிறுவயதில் கல்யாணம் நடந்தது. ஆகையால் ஸரளா ஹரதேவருடன் சகஜமாகப்பேசுவாள். சத்யேந்திரன் இருக்கும்போது கூடத் தன் மாமியுடன் பேசுவாள். இதனால் மாமிக்குச் சந்தோஷம் ஏற்படுமே தவிர வருத்தம் ஏற்படுவதில்லை.

சில தினங்களுக்குப் பிறகு காமாக்யாபாபு ஸரளாவைத் தம் வீட்டுக்கு அழைத்துப் போனார். இரண்டொரு மாதங்களாயின. சத்யேந்திரன் பொறுமை இழந்தான். கோபித்துக்கொண்டு, “புத்தகத்தில் ராமபாணம் வந்து விட்டது. மைக்கூடு காய்ந்துவிட்டது. இவைகளையெல்லாம் கவனிப்பவர் ஒருவருமில்லை” என்று ஆரம்பித்தான்.

தாய், விஷயத்தை உணர்ந்தாள். ஹரதேவர் செவிக்கும் விஷயம் எட்டியது. அவர் சிரித்துக்கொண்டே மருமகளை அழைத்துவர ஆளை அனுப்பினார். அவனிடம், “வீட்டில் பெரிய உபத்திரவமாக இருக்கிறது. நாட்டுப் பெண் வராமல் சாந்தமாகாதுபோல் தோன்றுகிறது. ஆகையால் நாட்டுப் பெண்ணை உடனே அனுப்பி வைக்கவும்!” என்று கடிதமும் அனுப்பினார்.

ஸரளா மறுபடியும் வந்துசேர்ந்தாள். சத்யேந்திரனுக்குச் செய்யவேண்டிய சாதாரணப் பணிவிடைகளை அவள் தான் செய்வதுவழக்கம். புஸ்தகங்களை அடுக்கி ஒழுங்காக வைப்பாள். காலேஜுக்கு அணிந்து செல்லும் ஆடைகளைச் சரியாக எடுத்துவைப்பாள். சத்யேந்திரன் காலேஜுக்குப் போகும் அவசரத்தில் கைப்பித்தானை மாற்றிப் போட்டுக் கொண்டுவிடுவான். ஒருகாலில் ‘கான்வாஸ்’ பூட்ஸும், மறுகாலில் ‘வார்னிஷ்’ பூட்ஸும் அணிந்துகொண்டு விடுவான். சாப்பிட நேரமாகிவிடும், காலேஜ் மணி அடித்துவிடும். அழகிய கோட்டின் ‘மேல்’ துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு விடுவான். இந்தத் தவறுகளெல்லாம் நேராமல் ஸரளா பார்த்துக்கொள்வாள். ஸரளா இல்லா விட்டால் இந்தக் கூத்துக்களெல்லாம் நடைபெறும். ஸரளாவைத் தவிர வேறு யாராலும் இவைகளைச் செய்யவும் முடிவதில்லை. முடிந்தாலும் சத்யேந்திரன் ஒப்புக் கொள்ள மாட்டான். ஆகையால் ஸரளாவேதான் செய்தாகவேண்டும்.

2

சுசீலா ஸரளாவின் தமக்கை. அவள் மகனுக்கு அன்னப்பிராசனம் நடந்தது. ஆகையால் தம் பேரனின் அன்னப்பிராசன சந்தர்ப்பத்தையொட்டிக் காமாக்யாபாபு ஸரளாவை அழைக்கக் கல்கத்தா வந்தார்.

ஸரளாவின் தமக்கை, ஸரளாவும் அவள் கணவனும் அவசியம் வரவேண்டுமென்று வற்புறுத்திக் கடிதம் அனுப்பி இருந்தாள். தவிர இரண்டு மூன்று வருஷங்களாக ஸரளா தில்ஜான்பூருக்கு வரவில்லை. சத்யேந்திரனும் வர ஒப்புக்கொண்டான். காமாக்யாபாபு சந்தோஷத்துடன் பெண்ணையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு ஊருக்குச் சென்றார்.

வெகு நாட்களுக்குப் பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் கண்ட ஸரளாவின் தாய் மிகுந்த சந்தோஷமடைந்தாள். சுசீலா வந்து இருவருடனும் ஏதேதோ பேசி அவர்களைக் களிக்க வைத்தாள்.

சுபகாரியம் யாதொரு தடங்கலுமின்றி நிறைவேறியது. சத்யேந்திரன் வீடுசெல்ல விரும்பினான். அப்பொழுது மாமியார் தடுத்து, “வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள், இன்னும் சில நாட்கள் இருந்து விட்டுச் செல்லுங்கள்!” என்றாள்.

ஸரளாவும் விடவில்லை. ஆகையால் பின்னும் ஐந்தாறு நாட்கள் தங்கவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு நாட்களும் கழிந்தன. ஆயினும் ஸரளாவுக்குப் புறப்பட இஷ்டம் இல்லை. அவன் கிளம்பாமல் முடியாது. படிப்புக் கெட்டு விடும். பரீக்ஷை நெருங்கிவிட்டது. ஆகையால் சத்யேந்திரன் கிளம்பினான். புறப்படும்போது. “என்னை மறுபடியும் எப்பொழுது அழைத்துக்கொண்டு போவீர்கள்?” என்று கேட்டாள் ஸரளா.

“எப்பொழுது வருகிறாயோ, அப்பொழுது!”

“அப்படியானால் இன்னும் பத்துப்பதினைந்து தினங்கள் கழித்து அழைத்துச் செல்லுங்கள்!”

சத்யேந்திரன் சந்தோஷமடைந்தான். அவள் இவ்வளவு சீக்கிரம் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

பிறகு ஸரளா கண்ணீர் வழியும் கண்களுடன் கணவனுக்கு விடைகொடுத்து, “இங்கே பாருங்கள், என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். இரவு அதிக நேரம் படிக்காதீர்கள். உடம்புக்கு வந்துவிடும்!” என்றாள். பிறகு இரவு பத்து மணிக்குமேல் படிப்பதில்லை என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள். மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு சத்யேந்திரன் கல்கத்தா போய்ச் சேர்ந்தான்.

சத்யேந்திரன் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு உட்காருவான். உடனே மனப்போராட்டம் ஆரம்பமாகிவிடும். சத்யேந்திரன் கணக்குப் பண்ணிப் பார்த்தான். நாள் முழுவதும் இருபத்தாறு வரிகள் தான் படித்திருந்தான், துக்கத்துடன் ‘இப்படிப் படித்தால் எப்படிப் பரீக்ஷை தேற முடியும்’ என்று எண்ணினான். படிப்படியாகத் துக்கம் கோபமாக மாறியது. இவைகளெல்லாம் அந்தப் பொல்லாத ஸரளாவின் குற்றம்தான் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. அவன் வந்து ஐந்து தினங்களாயின. இதுவரையில் ஒன்றுமே படிக்கவில்லை. முன்பு படிக்கும்போது ‘அவள் தொந்தரவு செய்கிறாள். பத்து மணிக்குமேல் படிக்கக்கூடாது என்று விளக்கை அணைத்து விடுகிறாள். அவளை எங்கேயாவது அனுப்பிவிட்டு நிம்மதியாகப் படிப்போம்’ என்று எண்ணினான். ஆனால் இன்று அதற்கு நேர் மாறாக நினைக்கிறான். “நாளைக்கே அவளை அழைத்துக்கொண்டு வருகிறேன். இல்லாவிட்டால் பரீக்ஷையில் ‘பெயில்’ ஆகிவிட மாட்டேனா?”

எப்படியாவது இருக்கட்டும், ஆனால் அவளை இங்கே எப்படி அழைத்துக்கொண்டு வருவது? எப்படி இதை வெளியே சொல்லுவது? வெட்கமாக இருக்கிறதே. அவளிடம் எப்படி இவ்வளவு காதல் ஏற்பட்டது? இரண்டு தினங்கள் –

இதற்குள் வேலைக்காரன் ஒரு தந்தியைக் கொண்டு வந்து கொடுத்தான். சத்யேந்திரன் பிரமித்துப் போய்விட்டான். யோசிக்கக்கூட நேரமில்லை. எங்கிருந்து வந்தது தந்தி? கவரை உடைத்ததும் சத்யேந்திரனின் உள்ளம் நடுங்கியது. உள்ளே இருந்த விஷயத்தைப் படித்ததும் அவன் தலை சுற்றியது. ஸரளாவுக்கு உடம்பு சௌக்கியமில்லை!

அன்றே ஹரதேவ பாபு சத்யேந்திரனை அழைத்துக் கொண்டு தில்ஜான்பூர் போய்ச் சேர்ந்தார்.

வீட்டு வாசலிலேயே காமாக்யாபாபுவைச் சந்தித்தார். ஹரதேவர் உரக்க, “குழந்தைக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

பிறகு உள்ளே சென்று பார்த்தார். ஸரளாவுக்கு, வயிற்றுப்போக்குக் கண்டிருந்தது. ஒரேநாளில் அவளை அடையாளம் கண்டுகொள்ளக்கூட முடியவில்லை கண்கள் குழிந்துவிட்டன. தாமரை மலர் போன்ற அவள் முகம் கறுத்துவிட்டது. அநுபவஸ்தரான ஹரதேவபாபு நிலைமை மோசமென்பதை அறிந்து கொண்டார். கண்களைத் துடைத்துக்கொண்டே, “அம்மா, ஸரளா! குழந்தாய்!” என்று கூப்பிட்டார்.

ஸரளா கண் திறந்து பார்த்தாள். நினைவு தப்பவில்லை.

“உடம்பு எப்படி அம்மா இருக்கிறது?”

ஸரளா சிரித்துக்கொண்டே, “நன்றாகத்தானே இருக்கிறது!” என்றாள்.

எல்லோரும் சென்ற பிறகு சத்யேந்திரன் போய் அவளருகே அமர்ந்தான். ஆழ்ந்த துக்கத்தினால் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. பிறகு மிகுந்த சிரமத்துடன் அடைபட்ட குரலில், “ஸரளா!” என்று கூப்பிட்டான். குரலில் இனிமை இல்லை. அதனால் என்ன? அது பழகிய குரல், அதே அன்பின் அழைப்பு, ஸரளா! இதில் என்ன தவறு இருக்கப்போகிறது? ஸரளா கண் திறந்து பார்த்தாள். ஹரதேவபாபுவைக் கண்டதுமே சத்யேந்திரன் வந்திருப்பான் என்று அனுமானம் செய்து, கொண்டாள். எப்பொழுதுமே கணவனைக் கிண்டல் செய்வதில் அவளுக்கு வெகுபிரியம். அவள் சிரித்துக் கொண்டே, “என்ன கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

அவள் குரல் படுத்துவிட்டது. சத்யேந்திரன் கண் ணீரை அடக்கிக்கொண் டிருந்தான். ஸரளாவின் நிலைமையைக்கண்டு அதன்மடை திறந்துவிட்டது.

அப்பொழுது அழக்கூடாது என்பது சத்யேந்திரனுக் குத்தெரியும். ஆனால் கண்கள் இதை அறிகின்றனவா என்ன? கண்ணீர் முத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் உருள ஆரம்பித்தன. அவைகள் ஸரளாவின் உடலில் சென்று குவிந்தன. இதற்குமுன் அவைகளுக்கு இந்த மாதிரிச் சந்தர்ப்பம் எங்கே கிடைத்தது? ஒருபொழுதும் கிடைத்ததில்லை. சத்யேந்திரனுக்காகவோ, ஸரளாவுக்காகவோ அவைகள் இந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிடுமா?

கணவன் அழுவதை அதுவரையில் ஸரளா கண்டதில்லை. அவளும் அழுதுவிட்டாள். வெகுநேரம் கழித்துக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “சேச்சே, ஏன் அழுகிறீர்கள்? புருஷர்கள் அழலாமா?” என்றாள்.

“இதென்ன? இது சரிதானா ஸரளா? நன்றாகச் சொன்னாய். உள்ளத்தின் ஜ்வாலையால் அவை உலர்ந்து கல்லாகட்டும். ஆனால் ஒரு சொட்டுக்கூட வெளியே சிந்தவேண்டாம். பெண்களுக்குத்தான் கண்ணீர் உரியது. புருஷர்களுக்குக் கிடையாது. உள்ளத்தின் வேதனையால் குமுறுகிறேன், அழவில்லை. அழுதால் பெண்ணாகி விடுவேனா, ஸரளா? எனது இந்த நிலைமைக்குக் காரணம் நீ தானே ஸரளா!”

ஸரளா கணவனின் கையைத் தன் கையில் எடுத்து அதை வருடிக்கொண்டே அழுதுவிட்டாள். “அடுத்த ஜன்மம் உண்டு என்பதை நம்புகிறீர்களா?” என்று கேட்டாள்.

சத்யேந்திரன் அழுதுகொண்டே “இதுவரையில் நம்பினேனோ என்னமோ தெரியாது. ஆனால் இன்று முதல் நம்புகிறேன்” என்றான்.

ஸரளாவின் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.

மருந்து சாப்பிடும் நேரம் நெருங்கியதைக்கண்டு காமாக்யாபாபு, ஹரதேவபாபு, டாக்டர், ஆகிய மூவரும் அறைக்குள் பிரவேசித்தனர். டாக்டர் நாடியைப் பார்த்து விட்டு, “நம்பிக்கை கூற முடியாது. ஈச்வர கிருபை!” என்றார்.

ஈச்வர கிருபையினால் மறுநாள் காலை ஏழு மணிக்கே ஸரளா உயிர் நீத்தாள். மாலையிலேயே சத்யேந்திரனை அழைத்துக்கொண்டு ஹரதேவர் கல்கத்தா திரும்பினார்.

3

“நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. ராஜசயனத்தில் படுத்து இந்திரபோகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக்கொண்டிருந்தேன். திடீ ரென்று யாரோ அதை மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள். நடு இரவில் எழுந்து உட்கார்ந்து விடுகிறேன். தூக்கம் வருவதில்லை. என் வாழ்க்கைத்துணைவி இல்லாமல் காலியாகக் கிடக்கும் கட்டிலில் படுத்திருக்கிறேன். நான் அழுவதா, சிரிப்பதா? இன்ப வெள்ளத்தில் திளைத்து ஆனந்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று யாரோ முன்பின் தெரியாதவர்களின் வலையில் சிக்கிக்கொண்டேன். இனி நான் அதில் திளைக்கமுடியாது. எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. வாழ்க்கையின் கேந்திரத்தையே யாரோ தகர்த்துக்கொண்டு போய்விட்டதுபோல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்துவிட்டது?”

ஆழ்ந்த இரவில் சத்யேந்திரன் ஜன்னலருகே உட் கார்ந்துகொண்டு ஸாகரபுரத்தின் அந்தகாரத்தைப் பார்த்தபடி இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருந்தான். மரம் செடி கொடிகளும் அசையாமல் சத்யேந்திரனுடன் உறவு கொண்டாடின.

உஸ் உஸ் என்று காற்று வீசிச்சென்றது. ஏதாவது சொல்லிவிட்டுச் சென்றதா? ஏன் சொல்லவில்லை? “என்ன நடந்துவிட்டது?” என்ற அந்த ஒரே வார்த்தை யைத்தான் கூறின. சாதகபக்ஷி இப்பொழுது ‘காதல் காதல்’ என்று கத்துவதில்லை. அதற்கு எதிரிடையாக “இறந்தாள். இறந்தாள்!” என்று கதறியது. கூண்டுக் கிளி சரியாகப் பேசுவதில்லை. பேசினாலும் “மனைவி இறந்தாள்” என்றே கூறியது. உஸ் உஸ் என்று வீசிய காற்றும் ‘இல்லை, இல்லை, அவள் இல்லை’ என்றே கூறியது.

“சத்யேந்திரா, உடம்பு எப்படி இருக்கிறது? தலையை ரொம்ப வலிக்கிறதா? அதுதான் வெகுநாள் ஆகிவிட்டதே. சற்று தூங்கு அப்பா? எப்பொழுது பார்த்தாலும் இந்த ஜன்னலருகேயே உட்கார்ந்திருக்கிறாயே!” என்றார் தந்தை.

சத்யேந்திரன் இருளில் மின்னிய நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவைகளுள் மிகவும் மங்கி இருந்த ஒன்றை வெகு கவனமாகப் பார்க்கலானான்.

கண்ணை மூடத் தைரியமில்லை, எங்கே அது மறைந்து விடுமோ என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் தூங்கிவிடுவான். காலையில் கண் விழித்ததும் அதைப் பார்க்க முயற்சிப்பான். பிரகாசம் அவனுக்குப் பிடிப்பதில்லை. நிலவு அவனுக்கு சந்தோஷம் அளிப்பதில்லை. அந்த மங்கிய சிறு நட்சத்திரம் சந்திரன் ஒளியில் தெரியுமா?

சத்யேந்திரன், எம்.ஏ.யில் ‘பெயில்’ ஆகிவிட்டான். ‘பாஸ்’ செய்யவேண்டும் என்ற ஆசையும் இல்லை; உற்சாகமும் இல்லை. ‘பாஸ்’ செய்தால்தான் என்ன, அந்த நட்சத்திரம் அருகே வந்துவிடப்போகிறதா?

ஹரதேவபாபு குடும்பத்துடன் ஊருக்குத் திரும்பினார். “தான் வீட்டில் இருந்து படித்தே பரீக்ஷைக்குப் போகமுடியும். கல்கத்தாவின் சந்தடியில் இருந்தால் நன்றாகப் படிக்க முடியாது” என்றான் சத்யேந்திரன். சத்யேந்திரன் முற்றிலும் புது மனிதனாக மாறிவிட்டான். அவனைப் பார்த்தால் வெகு நாட்களாகச் சாப்பிடாதவனைப் போலும், நோய்வாய்ப் பட்டவனைப்போலும் தோன்றியது.

பகலில் சத்யேந்திரன் தன் அறையை மூடிக் கொண்டு படங்களைத் தட்டிச் சுத்தம் செய்வான், புஸ்தகங்களை அடுக்கிவைப்பான். சும்மாவாவது ஆர்மோனியத்தை எடுத்துப் பழுதுபார்ப்பான். ஸரளாவின் புஸ்தகங்களை எடுத்துத் சுத்தமாகத் தட்டி அடுக்கிவைப்பான். நல்ல காகிதமும் கவரும் எடுத்து ஸரளாவுக்குக் கடிதம் எழுதுவான். ஆனால் எந்த விலாசம் எழுதுவானோ தெரியாது! எழுதித் தன் பெட்டியில் வைத்துக்கொள்வான்.

சத்யேந்திர நாதா! நீ ஒருவன் மாத்திரமல்ல. அநேகர் இம்மாதிரியே வாலிப வயதில் அதிர்ஷ்டத்தை இழக்கிறார்கள். எல்லோரும் உன்னைப் போலவா பைத்தியக்காரர்கள் ஆகிறார்கள்? ஜாக்கிரதை. சத்யேந்திரா! எந்த விஷயத்திற்கும் ஓர் எல்லை உண்டு. புனிதமான காதலுக்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்பைத் தாண்டினால் கஷ்டத்தை அடைவாய். உலகில் ஒருவரை ஒருவர் பிடித்து வைக்க முடியாது.

சத்யேந்திரனின் தாய் மிகுந்த புத்திசாலி. அவள் ஒரு நாள் தன் கணவனிடம், “நம் சத்யேந்திரன் எப்படி ஆகி விட்டான் பார்த்தீர்களா?” என்றாள்.

“பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்ன செய்யலாம்?”

“இன்னொரு கல்யாணம் செய்து வையுங்கள். நல்ல பெண்ணாக வந்தால் மீண்டும் சிரித்துப்பேசிச் சந்தோஷமாக இருப்பான்!”

அன்று சத்யேந்திரன் சாப்பிட உட்கார்ந்தபோது அவன் தாய், “என் பேச்சைக் கேட்பாயா, சத்யேந்திரா!” என்றாள்.

“என்ன அம்மா?”

“நீ மறுபடியும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்!”

சத்யேந்திரன் சிரித்துவிட்டு, “இதுதானே? இந்த வயதில் இதெல்லாம் எதற்கு?” என்றான்.

தாய்க்கு முன்னமேயே கண்ணீர்த் தேங்கிக்கிடந்தது. இந்த வார்த்தையைக் கேட்டதும் அது பெருகலாயிற்று. அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, “அப்பா! இருபது, இருபத்தொரு வயது ஒரு வயதோடு சேர்க்கையா? ஆனால் ஸரளாவை நினைத்துக்கொண்டால், இவைகளை எல்லாம் வாய்விட்டுச் சொல்லக்கூட மனம் வராது. இருந்தாலும் இனி என்னால் தனியாக இருக்க முடியாது!” என்றாள்.

மறுநாள் காலையில் ஹரதேவ பாபு சத்யேந்திரனை அழைத்து இதே வார்த்தையைக் கூறினார். அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மகன் மௌனமாக இருந்ததைக் கண்டு, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று ஹர தேவர் நிச்சயம் செய்து கொண்டார்.

சத்யேந்திரன் தன் அறைக்குப் போய் ஸரளாவின் படத்தின் முன் நின்று, “கேட்டாயா ஸரளா! நான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்!” என்றான். படத்தினால் பேச முடியவில்லை. முடிந்திருந்தால் ‘நல்லது!” என்று சொல்லி இருக்கும். வேறு என்ன சொல்ல இருக்கிறது?

4

இந்தத் தடவை சத்யேந்திரனுக்குக் கல்கத்தாவில் விவாகம் நடந்தது. ‘சுபதிருஷ்டி’யின்போது சத்யேந்திரன் பெண்ணின் முகத்தைப் பார்த்தான். அழகான முகம், அழகாக இருந்தால் என்ன? தலைக்கு ஒரு ‘பாரம்’ வந்து சேர்ந்தது என்று எண்ணினான்.

கல்யாணத்திற்குப் பிறகு இரண்டு வருஷங்கள் நளினி தாய் வீட்டிலேயே இருந்தாள். மூன்றாவது வருஷம் புக்ககம் வந்து சேர்ந்தாள். மாமி புதுநாட்டுப் பெண்ணின் சந்திரபிம்பம் போன்ற முகத்தைப் பார்த்து ஸரளாவை மறக்க முயற்சித்தாள். மீண்டும் குடும்பத்தைச் சீர்செய்யலானாள். இரவு சத்யேந்திரனும் நளினியும் சேர்ந்து படுத்தாலும் ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை.

“ஏன் இவ்வளவு அசட்டை?” என்று எண்ணுவாள் நளினி.

“இவள் யார், எங்கே இருக்கவேண்டியவள், என் ஸரளாவின் இடத்தில் தூங்குகிறாளே?” என்று எண்ணுவான் சத்யேந்திரன்.

ஒரு நாள் இரவு சத்யேந்திரன் தூக்கம் கலைந்து எழுந்தான். பார்த்தால் படுக்கையில் ஒருவரையும் காணவில்லை. நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஜன்னலருகே யாரோ உட்கார்ந்திருந்தார்கள். ஜன்னல் திறந்திருந்தது. அதன் வழியாக நிலவொளி வீசியது. அதன் வெளிச்சத்தில் நளினியின் முகத்தில் ஒரு பகுதி சத்யேந்திரனுக்குத் தென்பட்டது. தூக்கக் கலக்கத்திலும் நிலா வெளிச்சத்திலும் அவள் முகம் அவன் கண்களுக்கு மிகுந்த அழகாகத் தோன்றியது. அவன் காது கொடுத்துக் கேட்டான்.

நளினி அழுதுகொண்டிருந்தாள். “நளினி!” என்று கூப்பிட்டான் சத்யேந்திரன். –

நளினி திடுக்கிட்டாள். கணவன் கூப்பிடுகிறான். வேறு யாராவதாக இருந்தால் என்ன செய்வார்களோ, தெரியாது. ஆனால் நளினி மெள்ள அருகே சென்று அமர்ந்தாள்,

“ஏன் அழுகிறாய்? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான் சத்யேந்திரன். அழுகை இரண்டு மடங்காகப் பெருகியது. அவளுடைய பதினாறு வயது வாழ்க்கையில் இன்று கூறிய இந்த வார்த்தைகள் தான் கணவனின் முதல் அன்பு வார்த்தைகள்.

வெகு நேரத்திற்குப் பிறகு அழுகையை அடக்கிக் கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டே மெதுவாக, “உங்களுக்கு ஏன் என்னைக் கண்டால் பிடிக்கவில்லை?” என்றாள் நளினி.

சத்யேந்திரனுக்கும் அழுகை வந்துவிட்டது. அதை அடக்கிக்கொண்டு, “உன்னைக் கண்டால் பிடிக்கவில்லையா? யார் சொன்னார்கள்? ஆமாம், நான் உன்னைப் பற்றி ஒன்றும் விசாரிப்பதில்லை, பேசுவதில்லை, இது வாஸ்தவம்!” என்றான்.

நளினி பதில் சொல்லாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சத்யேந்திரன் சற்றுச் சும்மா இருந்துவிட்டு மீண்டும் பேசலானான். “இதை ஒருவரிடமும் சொல்லக்கூடாதென்று எண்ணினேன். சொல்லாமல் இருப்பதில் லாபம் ஒன்றும் இல்லை. உன்னிடம் எதையும் ஒளிக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் திறந்து கூறினேனானால், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை நீ அறிந்து கொள்வாய். நான் இப்பொழுதும் ஸரளாவை-என் முதல் மனைவியை மறக்க முடியவில்லை. மறந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் இல்லை. இந்த அபாக்கியவானுக்கு நீ வாழ்க்கைப் பட்டிருக்கிறாய். நான் உன்னைச் சுகப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படவில்லை. நான் என் இஷ்டத்தின்மேல் உன்னை மணக்கவில்லை. என் விருப்பப்படி உன்னைக் காதலிக்கவும் முடியாது!” என்றான்.

ஆழ்ந்த இரவில் இருவரும் வெகு நேரம் வரையில் இம்மாதிரியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நளினி அழுதுகொண்டிருக்கிறாள் என்பதை சத்யேந்திரன் அறிந்துகொண்டான். அவனும் அழுதுவிட்டானோ என்னவோ? ஒவ்வொன்றாக ஸரளாவின் விஷயங்கள் ஞாபகத்திற்கு வரலாயின. மெள்ள அவள் முகம் அவன் இதயத்தில் உருவகமாயிற்று. அதே பழைய “அழைக்கவந்திருக்கிறாயா?” என்ற விஷயமே ஞாபகத்திற்கு வந்தது. அழைக்காமலே கண்ணீர் வந்துவிட்டது. பிறகு இரு கன்னங்களின் வழியாகவும் அது கீழே வழிந்தது.

சத்யேந்திரன் கண்களைத் துடைத்துக்கொண்டு மெள்ள நளினியின் இருகரங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, “அழாதே நளினி! என் வசம் ஒன்றும் இல்லை. இரவு பகலாக நான் மனத்திற்குள் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள். மனத்தில் பெரும் துக்கம் அடைந்து கிடக்கிறது. இந்தத் துக்கம் எப்பொழுதாவது என் மனத்தைவிட்டு அகலுமானால் தான் நான் உன்னைக் காதலிக்க முடியும். அப்பொழுது உன்னைக் கவனித்துக்கொள்வேன்!” என்றான்.

இந்த வருத்தம் தேங்கிய அன்பு வார்த்தைகளின் மதிப்பை யார் அறிவார்கள்? நளினி புத்திசாலி. அவள் கணவனின் துக்கத்தை அறிந்து கொண்டாள். கணவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பதை அவன் வாய்மூலமாகவே கேட்டாள். ஆயினும் அவள் கோபிக்கவில்லை. கர்வம் அடையவில்லை.

பேதைப் பெண்! பதினாறு வயதில் கோபித்துக்கொள்ளாவிட்டால், கர்வப்படாவிட்டால், பிறகு எப்பொழுது கிட்டும்? ஆனால் கோபிப்பதும், கர்வமடைவதும் முக்கியமா, கணவன் முக்கியமா என்று எண்ணினாள் நளினி.

அன்று முதல் தன் கணவனின் துக்கத்தை எப்படி நிவர்த்திப்பது என்ற ஒரே கவலை அவளைச் சூழ்ந்துகொண் டது. என்ன செய்தால் தன் கணவன் முதல் மனைவியை மறப்பான் என்பதை அவள் சிந்திக்கவே இல்லை. துக்கத்தை யாராவது பகிர்ந்துகொண்டால் கஷ்டத்தைக் கேட்டு மனம் இறங்கினால் துன்ப வார்த்தைகளை மனம்வைத்துக் கேட்டால் உலகத்தில் அவர்களை விட பந்து ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

இதன் பிறகு சத்யேந்திரன் அடிக்கடி தன் பழைய விஷயங்களை நளினிக்குச் சொல்வான். இந்த ஒரே விஷயத்தைப் பேசிப் பேசி அவர்கள் பல இரவைக் கழித்தார்கள். சத்யேந்திரன் தான் பேசினான் என்பதல்ல, நளினியும் ஆவலுடன் கணவனின் பழைய விருத்தாந்தங்களைக் கேட்க விரும்பினாள்.

5

இரண்டு வருஷங்கள் கழிந்தன. நளினிக்கு இப்பொழுது முன்போலக் கஷ்டமில்லை. கணவன் அவளை அனாதரவு செய்வதில்லை. கணவனின் அன்பை அவள் பலவந்தமாகப் பெற்றுவிட்டாள். பலவந்தமாகப் பெறத் தெரிந்தவர்களுக்கு அதைக் காப்பாற்றி வைத்துக்கொள் ளத்தானா தெரியாது? அவளுக்கு இப்பொழுது யாதொரு கஷ்டமும் இல்லை. சத்யேந்திரன் இப்பொழுது பயனவில் டிப்டி மாஜிஸ்டிரேட்டாக இருக்கிறான். மனைவியின் சேவையினாலும் அன்பினாலும் அவனிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது. கச்சேரி வேலை முடிந்ததும் அவன் நளினியுடன் அமர்ந்து ஏதாவது வம்பு பேசிக்கொண்டிருப் பான். கிண்டல் செய்வான். பாட்டுப் பாடச்சொல்லிக் கேட்டு இன்பமுறுவான். ஒரு வார்த்தையில் சொல்லப் போனால் சத்யேந்திரன் மனிதனாகிவிட்டான். முதலில் பிடிக்காத வஸ்துவே அவனுக்கு வெகு பிரியமான தாக ஆகிவிட்டது. மனிதரின் குணமே இப்படிதான். நீ சாந்தியுடன் இருக்கிறாய்-சாந்தியைத் தேடுகிறாய். நானும் சாந்தியுடன் நாட்களைக் கழிக்கிறேன். ஆயினும் எங் கிருந்தோ அமைதியின்மை வந்துவிடுகிறது.

தப்பி ஓடுவதைப் பிடிக்க முயல்வதே மனித சுபாவம். ஆனால் தப்பிய மீன் சிலாக்கியமாகிவிடுமா? சத்யேந்திர னும் மனிதன் தானே. மனித சுபாவம் எங்கே போய்விடும்? இவ்வளவு அன்பும் சேவையும் கிடைத்துச் சாந்தியுடன் இருக்கும் போதும், அவன் உள்ளத்தில் சிற்சில சமயம் மின் னலைப்போல் குழப்பம் ஏற்படும். ஒரு கணத்தில் மின் வெட்டைப்போல் ஏற்படும் குழப்பத்தைச் சமாளிக்க நளினி பெரும் முயற்சியும் சிரமமும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சிற்சில சமயம் தன்னால் இனிமேல் சமாளிக்க முடியாது. இவ்வளவு நாள் நாம் கவனத்துடன் செய்த முயற்சி வீணாகிவிடும் என்றுகூடத் தோன்றும். நளினியிடம் சிறு குறையைக் கண்டால்கூட, ஸரளாவாக இருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது என்று எண்ணு வான் சத்யேந்திரன். ஏற்படுமோ ஏற்படாதோ என்பதைக் கடவுள் தான் அறிவார். ஏற்படாமலும் இருக்கலாம். இதைவிடப் பன்மடங்கு ஏற்பட்டாலும் ஏற்பட லாம். ஆனால் அதைப்பற்றி என்ன? அந்த மீன் தான் தப்பிவிட்டதே! சத்யேந்திரனால் இன்னும் ஸரளாவை மறக்க முடியவில்லை. கச்சேரியிலிருந்து வரும்போது அவன் கண்முன் நளினி தென்படாவிட்டால் சட்டென்று ‘ அவள் எங்கே, இவள் எங்கே?’ என்று எண்ணுவான்.

நளினி புத்திசாலி, அவள் எப்பொழுதும் கணவ னுடனேயே இருப்பாள். காரணம், அவன் இன்னும் ஸரளாவை மறக்கவில்லை என்பது அவளுக்குத் தெரியும், ஒரேயடியாய் மறந்துவிடவேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை. ஆனால், ஆமாம், வீணாய் அவளை நினைத் துக்கொண்டு கஷ்டப்படுகிறாரே என்று அவள் எப்பொழு தும் அருகிலேயே இருக்க முயற்சித்தாள். அவளை மறக்க வேண்டாம்; ஆனால் தன்னை அவன் நிராதரவு செய்வ தில்லை. இதுவே நளினிக்குப் போதுமானது.

கோபிகாந்தராய் பபனாவில் ஒரு பிரசித்த வக்கீல், கல்கத்தாவில் அவர் வீடு நளினியின் வீட்டுக்கு அருகே இருந்தது. நளினி அவரைச் சித்தப்பா என்றும், அவர் மனைவியைச் சித்தி என்றும் அழைப்பது வழக்கம். ராயின் மனைவி அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வருவது உண்டு, கோபி பாபுவும் அடிக்கடி வருவார். கிராமத்து உறவென்று சத்யேந்திரனும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சத்யேந் திரன் அதிகத் தொலைவில் இருந்தும் இருவர் வீட்டுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது.

நளினியும் அடிக்கடி சித்தி வீட்டுக்குச் சென்று வரு வாள். காரணம், ஒன்று சித்தப்பா வீடு, இரண்டாவது அவர் மகள் ஹேமா இவளுக்குத் தோழி. சிறு வயது முதல் பழக்கம்.

சத்யேந்திரன் கச்சேரிக்குச் சென்றுவிட்டான். வேலை ஒன்றும் இல்லாததால் நளினி சித்திரம்போட உட்கார்ந்தாள். அதே சமயம் தடதடவென்ற சப்தத்துடன் ஒரு வண்டி வந்து டிப்டி மாஜிஸ்டிரேட்டின் வீட்டு வாசலில் நின்றது.

யார் வந்தார்கள்? மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை; மிகுந்த கோலாகலத்துடன் ஹேமாங்கினி வந்து நின்றாள். ஹேமாங்கினி நேரே வந்து நளினியின் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு, “எழுதியது போதும். எழுந்திரு. எங்கள் வீட்டுக்கு வா, என் மதனி வந்திருக்கிறாள்!” என்றாள்.

“மதனியா, ஏன் கூடவே அழைத்துக்கொண்டு வர வில்லை?”

“அதெப்படி முடியும்? புதிதாக வந்திருக்கிறாள். திடீரென்று உன் வீட்டிற்கு எப்படி வருவாள்?”

“பின்னே நான் மாத்திரம் வருவேனா?”

ஹேமா சிரித்துக்கொண்டே, “நீ வந்தே ஆக வேண்டும். உன்னை இழுத்துக் கொண்டு போகப் போகிறேன்!” என்றாள். தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வதானால் நளினி என்ன, யாராக இருந்தாலும் போய்த்தானே ஆகவேண்டும்? நளினி செல்ல வேண்டியதாயிற்று.

போவதற்குப் பல தடைகள் இருந்தன நளினிக்கு. ஏனென்றால் ஹேமாவின் வீட்டுக்குச் சென்றால் திரும்பி வரத் தாமதமாகும். இரண்டொருநாள் நளினி ஹேமாவின் வீட்டிலிருந்து திரும்பி வருவதற்குள் சத்யேந்திரன் ஆபீஸிலிருந்து வந்துவிட்டான். அந்த மாதிரியான நிலைமையில் சத்யேந்திரனுக்கு மிகுந்த சங்கடமாகப் போய்விட்டது. அவன் ஏதாவது நினைக்கிறானோ இல்லையோ, நளினிக்கு மிகுந்த வெட்கமாகப் போய் விட்டது, ஏனென்றால் கச்சேரியிலிருந்து திரும்பி வந்ததும் தன் கையினால் விசிறினால்தான் அவனுடைய அலுப்புத் தீரும். இது அவளுக்குத் தெரியும். தெய்வ சங்கற்பம்; பெருத்த முயற்சிக்குப் பின்பும்கூட அன்றும் ஏழு மணிக்குமுன் நளினியால் வீடு திரும்ப முடியவில்லை. வீட்டுக்கு வந்து பார்த்தாள். சத்யேந்திரன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அதுவரையில் ஒன்றும் சாப்பிடவில்லை. அவனுக்குச் சாதம் போடும் பொறுப்பை நளினி தானே ஏற்றுக் கொண்டிருந்தாள். அருகே வந்ததும் சத்யேந்திரன் சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பு நளினிக்குச் சகஜமாக இல்லை. அவள் மனத்திற்குள் பயந்தாள். ஆசனத்தை எடுத்துப்போட்டுப் பரிமாற ஆயத்தம் செய்தாள். ஆனால் சத்யேந்திரன் ஒன்றையும் தொடவே இல்லை. “கொஞ்சமும் பசி இல்லை!” என்று சொல்லிவிட்டான். பல தடவை வேண்டிக்கொண்ட பிறகும் அவன் ஒன்றும் சாப்பிடவில்லை. அவன் ஏன் இப்படிக் கோபித்துக்கொண்டிருக்கிறான் என்பதை களினி அறிந்துகொண்டாள்.

6

அன்று ஹேமாங்கினி தன் புக்ககம் செல்கின்றாள். அவளை அழைத்துப்போக அவள் கணவன் உபேந்திரபாபு வந்திருந்தார். நளினி பல தினங்களாக ஹேமாவைச் சந்திக்கவில்லை. ஆகையால் ஹேமா மிகுந்த துக்கத்துடன் அவளை வரும்படி கடிதம் எழுதி இருந்தாள்.

கணவன் உத்தரவில்லாமல் எங்கும் செல்வதில்லை என்று நளினி சபதம் செய்துகொண்டிருந்தாள். இந்தப் பிரதிக்ஞையைக் கடைப்பிடிப்பதானால் அவளுடைய ஆருயிர்த் தோழியைச் சந்திக்க முடியாது. நளினிக்குப் பெருத்த சங்கடமாகிவிட்டது. மூன்றுமணி வண்டிக்குப் போவதாக ஹேமா எழுதி இருந்தாள். நளினி எப்படிக் கணவனிடம் உத்தரவு பெற முடியும்? வெகுநேரம் சிந்தித்துவிட்டு, புறப்படுவதென்று நிச்சயம் செய்தாள். நளினி போகும்போது சரியாக மூன்று மணிக்கு ராய்பாபு வீட்டிற்கு வண்டி அனுப்பும்படி வேலைக்காரியிடம் சொல்லிவிட்டுச் சென்றாள். வண்டியும் அனுப்பப் பட்டது. ஆனால் ஹேமா மூன்றுமணி வண்டிக்குப் போகவில்லை. ஆகையால் அவள் நளினியையும் விட வில்லை. மிகுந்த பிடிவாதம் செய்தும் ஹேமாவின் பிடி யினின்றும் அவளால் தப்பித்துவர முடியவில்லை. ஹேமா அன்று ஊருக்குச் செல்லுகிறாள். பிறகு எப்பொழுது சந்திப்பு ஏற்படுமோ? ஒன்றும் நிச்சயமில்லை. சுலபமாக எப்படி விட்டுவிடுவாள்?

வீட்டுக்குச் செல்லத் தாமதம் ஏற்பட்டால் கணவன் கோபிப்பான், என்று சொல்ல நளினிக்கு வெட்கமாக இருந்தது. இந்த வார்த்தையை யார்தான் சகஜமாகச் சொல்ல விரும்புவார்கள்? இந்தமாதிரியான தாழ்மையை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? அதுவும் இந்த வயதில். கடைசியில் அதையும் சொன்னாள். ஆனால் ஹேமா நம்பவில்லை. அவள் சிரித்துக்கொண்டே “என்னை முட்டாள் என்று எண்ணிக்கொண்டாயா? கோபதாபமெல்லாம் எனக்குத் தெரியும். உபேந்திரபாபுவுக்கும் கோபித்துக்கொள்ளத் தெரியும்!” என்றாள்.

நளினியின் வார்த்தையை ஹேமா விளையாட்டாக எடுத்துக்கொண்டாள். ஆனால் நளினிக்குக் கஷ்டமாகி விட்டது. எல்லோருடைய கணவன்மார்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? எல்லோரும் உபேந்திரபாபுவைப் போலவா இருப்பார்கள்?

நளினி வீடு திரும்பும்போது இரவு மணி பத்தாகி விட்டது. வீட்டுக்குச் சென்றபிறகு, பாபு வெளியே படுத்துத் தூங்குவதாகக் கேள்விப்பட்டாள்.

மாதங்கினி நளினியின் தாய்வீட்டு வேலைக்காரி. நளினி யிடம் மிகுந்த பிரியம் கொண்டவள். ஆகையால், அவள் நளினியைக் கடிந்துகொண்டாள். சத்யேந்திரன் கோபித்துக்கொண்டு வெளியே படுத்திருக்கிறான் என்பது வீட்டில் அவள் ஒருத்திக்குத்தான் தெரியும்.

ஆழ்ந்த இரவில் படுக்கையில் படுத்தபடி கண்ணை மூடிக்கொண்டு தன் பழைய நினைவுகளை மீண்டும் மனத்தில் உருவகப்படுத்தலானான் சத்யேந்திரன். வெகு வெகு நாட்களுக்குமுன் மறைந்த அந்த மலர்ந்த கமலம் போன்ற முகம் அவனுக்கு நினைவு வந்தது. ஸரளாவின் அன்பின் முன் நளினியின் அன்பு கடலின் முன் சிறு குட்டை நீரைப்போல் அவன் மனத்திற்குத் தோன்றியது. அப்பொழுது மெள்ளக் கதவைத் திறந்துகொண்டு நளினி அந்த அறைக்குள் வந்தாள். சத்யேந்திரன் தலை நிமிர்ந்து பார்த்தான். நளினி அவன் காலடியில் வந்து அமர்ந்தாள். சத்யேந்திரன் கண்களை மூடிக்கொண்டான். இம் மாதிரியே வெகுநேரம் கழிந்தது. இதைக் கண்டு சத்யேந்திரன் கோபம் கொண்டான். அவன் புரண்டு படுத்தபடி புருஷன் என்ற முறையில் வெளிப்படையாக, “ஏது நீ இங்கே வந்தது?” என்றான்.

நளினி அழுதாள். ஒன்றும் பேசவில்லை. அழுவதைக் கண்டு டிப்டி துரை இன்னும் அதிகக் கோபம் அடைந்தார். “இரவு நெடுநேரமாகிவிட்டது போ, உள்ளே போய்ப் படுத்துக் கொள்” என்றான்.

நளினி அழுதுகொண்டிருந்தாள். கண்களைத் துடைத் துக்கொண்டு, “நீங்களும் வாருங்கள்!” என்றாள்.

சத்யேந்திரன் தலையை அசைத்து, “எனக்குத் தூக்கம் வருகிறது. என்னால் எழுந்திருக்க முடியாது!” என்றான்.

அழுதால் சத்யேந்திரனுக்குக் கோபம் வரும். நளினி கண்களைத் துடைத்துக்கொண்டு அவன் பாதங்களைத் தொட்டு, “இந்தத் தடவை மாத்திரம் என்னை மன்னித்து விடுங்கள். இங்கே உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். உள்ளே வாருங்கள்!” என்றாள்.

இனி உள்ளே செல்வதில்லை என்று பிரதிக்ஞை செய்து கொண்டிருந்தான் சத்யேந்திரன். அவன், “இரவு. இந்த நேரத்திற்குப் பிறகு கஷ்டத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நீ போய்த் தூங்கு. நானும் தூங்குகிறேன்!” என்றான்.

நளினிக்குச் சத்யேந்திரனின் குணம் தெரியும். அவள் தன் அறைக்குச்சென்று இரவு பூராவையும் அழுதபடியே கழித்தாள். ஹேமாங்கினி எங்கே சென்றாள் ! ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகக்கூடாதா? கோபதாபம் எல்லாம் அவளுக்குத் தெரியுமே! அவள் வந்து இந்தச் சண்டையைச் சமாதானம் செய்யமாட்டாளா? என்று எண்ணியது அவள் மனம்.

மறுநாளும் சத்யேந்திரன் உள்ளே வரவில்லை. நளினி யைச் சந்திக்கவும் இல்லை. நளினி மாதங்கினியின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினாள். சத்யேந்திரன் அதைப் படிக்காமலே கிழித்து எறிந்துவிட்டு, “இனிமேல் இந்த மாதிரிக் கடிதங்களை இங்கே எடுத்து வராதே!” என்று சொல்லி யனுப்பினான்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் நளினியின் அண்ணன் நரேந்திரபாபு பபனாவுக்கு வந்தான். திடீரென்று அண்ணனைக்கண்டு நளினிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அதைவிட ஆச்சரியமும் ஏற்பட்டது.

“அண்ணா, ஏது இப்படி?”

நரேந்திரபாபு சிரித்துக் கொண்டே, “வீட்டுக்குச் செல்ல நீ ஏன் இப்படி உபத்திரம் செய்கிறாய் நளினி?” என்றான்.

உபத்திரவமா! இந்த வார்த்தையின் அர்த்தத்தை நளினி உடனே அறிந்துகொண்டாள். அவளும் சிரித்துக் கொண்டே, “உங்களை யெல்லாம் பார்த்து வெகு நாட்களாகின்றன அல்லவா?” என்றாள்.

7

கணவன் பாதங்களில் சிரம்வைத்து வணங்கி விடை பெற்றுத் தன் அண்ணனுடன் நளினி ஊருக்குச் சென்றாள். அன்று இரவு பூராவும் சத்யேந்திரனால் தூங்கவே முடியவில்லை. அவன் இரவு முழுவதும் யோசிக்கலானான். வெகுநேரம் வரையில் “இன்னமும் சமயம் இருக்கிறது. இப்பொழுது கூட வண்டியைத் திருப்பி நளினியை அழைத்துக்கொண்டு வந்துவிடலாம். இதைச் செய்தே ஆகவேண்டும்” என்று எண்ணினான். ஆனால் அவனுடைய சுயமரியாதையின் காரணமாக நளினியைத் திருப்பி அழைத்துவர அவனால் முடியவில்லை.

நளினி போகும்போது மாதங்கினியும் கூடச் சென்றாள். அவளுக்குத்தான் தெரியும் இந்தப் பிரயாணத் தின் காரணம். வீட்டில் யாரிடமும் இதைச் சொல்ல வேண்டாமென்று நளினி அவளைக் கண்டித்திருந்தாள். இதை வெளியிட்டால் கணவனுக்கு அவச்சொல் ஏற் படும். நல்லதோ கெட்டதோ தன் கணவனை ஏன் பிறர் குறைகூற வேண்டும் என்று எண்ணினாள் நளினி.

பிறந்தவீடு சென்று நளினி தாய் தந்தையருக்கு நமஸ்காரம் செய்தாள். சிறிய தம்பியை மடியில் எடுத்துக் கொண்டு கொஞ்சினாள். ஆனால், அவளால் சிரிக்க முடியவில்லை.

“ஒருநாள் பிரயாணத்திலேயே என் பெண் நளினி சோர்ந்துவிட்டாள்” என்றாள் தாய். ஆனால் நளினியின் சோர்ந்த முகம் மீண்டும் மலரவே இல்லை.

சிறிய காரணத்தின் மூலமாய்க்கூட உலகில் பெரும் துன்பங்கள் ஏற்படுவதைக் காண்கிறோம். சூர்ப்பனகை யின் சிறு மனச்சஞ்சலம்தான் சொர்ணமயமான இலங்கை அழியக் காரணமாக இருந்தது. ராஜா ஹரிச்சந்திரன் சிறுகாரணத்திற்காகத்தான் மகத்தான துன்பத்தை அனு பவித்தான். உலகில் இம்மாதிரி உதாரணங்களுக்குக் குறைவே இல்லை. இங்கும் ஒரு சாதாரண அபிமானத்தின் காரணமாகத்தான் பெரும் ஆபத்து வந்திருக்கிறது. சத்யேந்திரநாதன்மேல் என்ன குறைகூற முடியும்?

நளினி ஒருபோதும் கர்வம் அடைந்ததில்லை. கண வனின் கஷ்டத்தை எண்ணி அவள் பேசாமல் சகித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவளால் நெடுகச் சகிக்க முடியவில்லை. இந்தச் சிறு காரணத்திற்காகக் கணவன் அவளைக் கைவிட்டுவிட முடியுமா? இதைவிட நாம் இறந்து விடுவதேமேல் அல்லவா! என்று எண்ணினாள்.

ஆழ்ந்த அபிமானத்தின் காரணமாய் நளினி மெலிய லானாள். அங்கே சத்யேந்திரனின் அகங்காரமும் சிதறியது. ஒரு நிமிஷம் மனைவியைப் பிரிந்திருக்க முடியாதவனின் பொய் அகம்பாவம் எத்தனை நாட்களுக்கு நிலைத் ‘திருக்க முடியும்? அவன் அகம்பாவம் கொடும் கஷ்டத்திற் குக் காரணமாயிற்று. சத்யேந்திரன் பிரதிதினமும் எதிர் பார்க்கலானான். இன்று நளினியிடமிருந்து கடிதம் வரும். ‘என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று எழுது வாள். ‘நான் போய் அழைத்து வருவேன். இனி அவளிடம் அநுசிதமாக நடந்து கொள்ளவே மாட்டேன்’ என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் விதியை யார் தடுக்க முடியும்? நடக்க வேண்டியதுதான் நடக்கும். நானும் நீங்களும் என்ன, கேவலம், துச்சமான ஜீவன்கள். இன்று, நாளை என்று ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன. அகங்காரத்தின் காரணமாக ஒருவரும் கடிதம் எழுதவில்லை. சத்யேந்திரன் ஆத்திரப்பட்டான். அடக்கத்தைக் கைக்கொள்ள வில்லை. ஆறு மாதங்கள் கழிந்தன. சத்யேந்திரனால் சகிக்க முடியவில்லை. மறைந்த அகங்காரம் மீண்டும் கிளைத்தது. அத்துடன் கோபமும் சேர்ந்தது. நன்மை, தீமை என்ற பகுத்தறிவுடன் தன் குறையைச் சத்யேந்திரன் சீர் தூக்கிப் பார்க்கவில்லை. இவ்வளவு அகம்பாவம் உள்ள வளிடம் சரியானபடி வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினான். இருவரும் தங்கள் பிழையை உணரவில்லை. பாதியளவு ஒன்றுபட்ட இதயங்கள் மீண்டும் பிரியலாயின.

சத்யேந்திரா! உன் மீது குற்றமில்லை என்றால் அவள் மீதும் குற்றம் கூறமுடியாது. இருவரும் தவறு செய்திருக் கிறீர்கள். தவறை உணர்ந்து பச்சாத்தாபமடையும் தன்மை யாரிடம் அதிகம் இருக்கிறதென்பதைக் கடவுள் தான் அறிவார். எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது. எந்த அபிலாஷையைப் பூர்த்திசெய்ய இதை யெல்லாம் செய்கிறீர்கள் என்பதே தெரியவில்லை.

பற்று அழிவதில்லை; அழிய விரும்புவதும் இல்லை. பற்று என்பது என்ன என்பதும் நன்றாக விளங்குவதில்லை. இளகிய உள்ளம் திருப்தியற்ற ஒரு விருப்பத்தினால் எப்பொழுதும் அலண்டுகொண்டே இருக்கிறது. என்ன நடக்கிறது? ஏன் இம்மாதிரி ஒன்றும் புரியாமல் லட்சிய மற்ற திசையில் செல்கிறோம் என்பதை நிர்ணயம் செய்யவே முடியவில்லை.

நடப்பது நடந்தே தீரும். விருப்பமிருந்தால்-மனத்துடன் இடைவிடாது போராடினால்-பிறகு குற்றங் களினின்றும் உனக்கு விடுதலை கொடுப்பேன். கொடுப்பதென்ன?

8

எவ்வளவு அழகான நாட்டுப்பெண் வந்திருக்கிறாள். ஆயினும் தன் மகனுக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயம் சத்யேந்திரனின் தாய்க்கு மிகுந்த துக்கத்தை அளித்தது. சொர்ண விக்கிரகம் போன்ற பெண் வீட்டுக்கு வந்தும் அவளால் குடும்பம் நடத்த முடியவில்லை என்பதை எண்ணி அவள் மனம் வருந்தியது. தாயின் முயற்சிகளால் மகனின் மனம் திரும்பவில்லை. இனி வேறு வழி என்ன? மகனுக்கே பிடிக்காவிட்டால், நாட்டுப் பெண்ணை எப்படி அழைக்க முடியும்? மகன் ஆதரவு செய்தால்தானே நாட்டுப் பெண்ணுக்கு ஆதரவு ஏற்படும்? நான் இதில் என்ன செய்ய இருக்கிறது? அவனே பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வதானால் நான் தடுக்கவா போகிறேன்? இம்மாதிரியெல்லாம் கூறி மறுபடியும் விவாக ஏற்பாடுகளைத் தாய் செய்யலானாள்.

ஹரதேவ பாபு இறந்து இரண்டு வருஷங்கள் ஆகின்றன. அதை நினைத்ததும் அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பிறகு நளினியின் ஞாபகம் வந்தது. கண்ணீரின் வேகம் இன்னும் அதிகரித்தது. என்னவோ, எப்படிப்பட்ட மருமகள் வரப்போகிறாளோ? சத்யேந்திரனின் தந்தை இருந்தால் இவளுக்கு இந்தக் கஷ்டங்களெல்லாம் ஏற்பட்டிரா.

சத்யேந்திரன் மணம் செய்துகொண்டு வந்தான். தாய் இருவரையும் ஆசீர்வதித்தாள். உலர்ந்த கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “கண்ணில் ஏதோ பட்டு விட்டது. அதனால்தான் கண்ணீர் வருகிறது!” என்றாள் .

கிரிபாலா வாய்த் துடுக்குள்ளவள். நளினிக்கு அவள் ஒன்றுவிட்ட சகோதரி ஆகவேண்டும். அவள், “இந்த வயதிற்குள்ளேயே மூன்று மணம் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை தடவை என்னென்ன இருக்கிறதோ, யார் கண்டார்கள்?” என்றாள்.

இவ்வார்த்தைகள் சத்யேந்திரன் செவிகளையும் எட்டி விட்டன. மறுநாள் சாந்தி முகூர்த்தம்.

எங்கிருந்தோ சீர்வகைகள் வந்தன. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் உயர்ந்த சேலையும் வேஷ்டியும் வந்தன. பெண்ணுக்கு வந்திருந்த பனாரஸ் பட்டுப் புடவையைப் போல் அதுவரையில் அந்தக் கிராமத்தில் ஒருவருக்கும் வந்ததே இல்லை என்று பேசிக்கொண்டார்கள். “இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்று எல்லோரும் கேட்டார்கள். சத்யேந்திரனின் தாய் மென்று விழுங்கிக் கொண்டே, “சத்யேந்திரனின் நண்பர் ஒருவர் அனுப்பினார்!” என்று சொல்லி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் பக்ஷணங்களை எல்லோருக்கும் வழங்கினாள்.

எல்லோரும் வாங்கிக்கொண்டு சென்றனர். போகும் போது, “ சிறப்பான சீர்!” என்றாள் ராஜபாலா.

“இல்லாமல் என்ன? பெரிய மனிதர்கள் வீட்டில் எல்லாம் இப்படித்தான்!” என்றாள் நிருத்யகாளி.

இந்த வார்த்தைகள் அடங்கியதும், “சரி, ஏன், மறுமணம் செய்து கொண்டார்?” என்றாள் யோகமாயா.

“எனக்கு என்ன அம்மா தெரியும்? நல்ல அழகான பெண், என்னவோ ஒன்றும் புரியவில்லை!” என்றாள் ஞானதா.

ராஸமணி என்பவள் நாவிதன் மகள். அவள் நன்றாகத்தான் இருந்தாள். பார்ப்பதற்கும் நன்றாக இருப்பாள். அவள் மீது பொறாமை கொண்ட சிலர் அவள் கண்களைக் குறைகூறுவது வழக்கம். அவள் சற்று வாய்ப்பதட்டமானவள். அவள் சிரித்துக்கொண்டே, “உங்களுக்கெல்லாம் புத்தி இருந்தால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா? சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர்களிடம் எப்பொழுதுமே எனக்குச் சந்தேகம்தான். அவள் நடத்தை சரி இல்லையடி, சரி இல்லை. இல்லாவிட்டால் அவளை அனுப்பிவிட்டு வேறு கல்யாணம் செய்வார்களா?” என்றாள்.

வாய்திறந்து ஒன்றும் சொல்லாவிட்டாலும் பலர் இதை ஆமோதித்தனர். இரண்டு மூன்று தினங்களுக் கெல்லாம் கிராமத்தில் இதைப்பற்றியே பேசினார்கள். “ராஸமணி ஜமீன்தார் வீட்டு ரகசியத்தை அறிந்து விட்டாள். நாவிதப் பெண்ணுக்குள்ள சாமர்த்தியம் பிராமணப்பெண்களுக்கு வருமா!” என்று சொன்னார்கள். விஷயத்தை எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.

சத்யேந்திரனின் தாயும் இதைக் கேள்விப்பட்டாள். அவள் தன் அறையின் கதவை மூடிக்கொண்டு படுத்து அழலானாள். என் நளினி களங்கமுள்ளவளா? ஏன் அவள் ஸரளாவைவிட நளினியிடம் அதிகப் பிரியம் வைத்தாள்? நளினியின் வாழ்நாள் பூராவும் வீணாகி விட்டது. அவள் யோசிக்கலானாள்: ‘சத்யேந்திரன் வைத்துக்கொண்டால் வைத்துக்கொள்ளட்டும். இல்லா விட்டால் நளினியை அழைத்துக்கொண்டு நான் காசிக்குச் சென்றுவிடுகிறேன், பாவம், இந்த ஜன்மம் பூராவும் பாழாகிவிட்டதே’ என்று எண்ணினாள்.

பிறகு கதவைத் திறந்து மாதங்கினியை உள்ளே அழைத்துக்கொண்டு மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள். மாதங்கினிதான் சீர்கொண்டு வந்திருந்தாள்.

இருவரும் வெகுநேரம் கண்ணீர் பெருக்கினார்கள். நளினியின் பொன்போன்ற மேனி எப்படிக் கறுத்து விட்டது? எந்தக் குற்றத்திற்காகச் சத்யேந்திரன் அவளை உதறிவிட்டான். வருத்தத்துடன் அவள் மாமிக்கு நமஸ்காரம் சொல்லச் சொன்னாள் . ஆகிய சகல விஷயங்களையும் மாதங்கினி கண்களைத் துடைத்துக்கொண்டே கூறினாள். கேட்கக் கேட்கச் சத்யேந்திரனின் தாய்க்கு மருமகள் மேல் இருந்த வாஞ்சை இன்னும் பன்மடங்காகப் பெருகியது. மகனிடம் ஒரு வெறுப்பும் ஏற்பட்டது. அவள் யோசிக்கலானாள். “சத்யேந்திரனிடம் எனக்கு உரிமை இல்லையா? நான் சொல்வதெல்லாவற்றையும் அவன் அசட்டை செய்துவிட முடியுமா? என் வார்த்தை ஒன்றையாவது கேட்கமாட்டானா? நான் நளினியை மீண்டும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன். என் லட்சுமிக்குக்கூட இந்தக் கதி நேரலாமா?” என்றெல்லாம் எண்ணினாள்.

அன்று சாயங்காலம் தாய் மகனை அழைத்து “நளினியை அழைத்துக் கொண்டுவா!” என்றாள்.

மகன் தலையசைத்துவிட்டு “முடியாது” என்றான்.

தாய் அழுது கொண்டே, “அடே! என் நளினியைப் பற்றிக் கிராமத்தில் என்னென்ன அவதூறு பேசுகிறார்கள்? நீ அவள் கணவனல்லவா? அவளுக்கு ஓர் இழுக்கு வந்தால் அது உனக்கு இல்லையா?” என்றாள்.

“என்ன அவதூறு.”

“இம்மாதிரி அவளை அனுப்பிவிட்டு வேறு கல்யாணம் செய்து கொண்டால் ஊர் வாயை மூடிவிடமுடியுமா?”

“ஊர் வாயை மூடி என்ன ஆகவேண்டும்?”

“அப்படியானால் அழைத்துக் கொண்டுவர மாட்டாயா?”

“முடியாது!”

தாய் மிகுந்த கோபம் கொண்டாள். எப்படிக் கோபித்துக்கொள்ள வேண்டும்; எப்படிப் பேசவேண்டும் என்பதை அவள் முன்னமேயே தீர்மானித்திருந்தாள். ஆகையால் அவளுக்கு யோசிக்க அவசியமே ஏற்படவில்லை. “அப்படியானால் நாளைக்கே என்னைக் காசிக்கு அனுப்பிவிடு. இனி ஒரு கணம் கூட நான் இங்கே இருக்க விரும்பவில்லை!” என்றாள்.

சத்யேந்திரன் இப்பொழுது முன் சத்யேந்திரன் அல்ல. ஒருசமயம் ஸரளாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றான். விளையாட்டுப் பொம்மையாக இருந்தான். அலட்சியத்துடன் இருந்தான். நளினி பெருமுயற்சியுடன் அவனை மனிதனாக்கினாள். அந்தச் சத்யேந்திரன் இன்று முற்றிலும் மாறுபட்டிருந்தான். அவன் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு வெட்கம், மானம், நன்மை, தீமை என்ற ஞானமே இல்லாமல், ஜடமாகி விட்டான். ஆகையால் அனாயாசமாக, “உனக்கு எங்கே இஷ்டமோ செல்லலாம். இனி என்னால் ஒருவரையும் அழைத்து வர முடியாது!” என்று சொல்லி விட்டான்.

சத்யேந்திரன் வாயிலிருந்து இம்மாதிரி வார்த்தைகள் வருமென்று தாய் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவள் அழுதுகொண்டே சென்றுவிட்டாள். போகும்போது “என் நாட்டுப்பெண் களங்கமற்றவள்! ஸதி! இதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்! ஊரிலுள்ளவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் நான் ஒன்றையும் நம்பமாட்டேன்!” என்று சொன்னாள்.

மறுநாள் அத்தை சத்யேந்திரனை அழைத்து, “உன் நண்பன் சீர் அனுப்பி இருந்தானே பார்த்தாயா?” என்று கேட்டாள்.

சத்யேந்திரன் தலையை ஆட்டிவிட்டு, “இல்லையே!” என்றான்.

“தெரியாதா? உட்கார், துணிமணிகளை எடுத்துக் கொண்டுவந்து காட்டுகிறேன்!”

சிறிது நேரத்திற்கெல்லாம் அத்தை ஒரு துணி மூட்டையை எடுத்துவந்தாள். சத்யேந்திரன் பார்த்தான். எல்லாம் விலையுயர்ந்த துணிகள். அவன் ஆச்சரியமடைந்து போனான். எந்த நண்பன் அனுப்பினான்? பனாரஸ் புடவையைக் கவனத்துடன் பார்த்தான். அதன் தலைப்பில் ஏதோ முடிந்திருந்தது. அவிழ்த்துப் பார்த்தான். சிறு கடிதம். கையெழுத்தைப் பார்த்ததும் சத்யேந்திரனுக்குச் சுரீரென்றது. அதில், “சகோதரிக்கு! இந்த அன்பின் வெகுமதியைத் திருப்பி அனுப்பவேண்டாம். இதை ஏற்றுக் கொள்ளுக” என்று எழுதி இருந்தது.

சாந்திமுகூர்த்த இரவின் மலர்ப்படுக்கை, அன்று சத்யேந்திரனுக்கு முட்படுக்கையாகி விட்டது.

வாலிபத்தின் கர்வத்தை யாரிடமாவது கண்டிருக்கிறீர்களா? சத்யேந்திரனைப்போல் அகங்காரம் கொண்டு அனர்த்தத்தைத் தேடிக்கொண்ட வாலிபன் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? சத்யேந்திரநாதா! நீ இதயத்துடன் விளையாடுகிறாய். அதனால் ஏற்படும் தண்டனைக்குப் பயப்படுகிறாயா?

நீங்கள் யுவர்கள். உலகம் முழுவதும் உங்களுக்கு இன்பப் பொக்கிஷம். ஆனால் இதைச் சொல்லுங்கள். உங்களுக்கு எப்பொழுதாவது உயிர் ஒரு சுமை என்று தோன்றியதுண்டா? வாழ்க்கையின் ஒவ்வொரு பந்தமும் தளர்ந்து நழுவி விடுவதைப்போன்ற உணர்ச்சி ஏற்பட்டதுண்டா? இதுவரையில் அம்மாதிரியான சந்தர்ப்பம் ஏற்பட்டிராவிட்டால் ஒருமுறை சத்யேந்திரனைச் சென்று பாருங்கள். வெறுக்க வேண்டும் என்று தோன்றினால், தாராளமாக வெறுங்கள்! வெறுங்கள்! ஆனால் அனு தாபப்பட வேண்டாம். வெறுங்கள். ஒன்றும் சொல்ல மாட்டான், தயை காட்ட வேண்டாம்! இறந்து விடுவான்.

பாபி இறந்தால் பலனை யார் அனுபவிப்பார்கள்? சத்யேந்திரனின் சாந்தமான வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும் சகிக்க முடியாத பாரமாகிவிட்டது. நாள் முழுவதும் துடித்தும்கூட அவனால் அந்தச் சுமையை இறக்க முடியவில்லை.

இடையிடையே கழிந்துபோன தன் வாழ்நாட்கள் அவன் மனத்தினின்றும் நீங்கிவிட்டதைப்போல் தோன் றியது. ஆனால் அவனுடைய அன்பான நளினி பபனாவில் களங்கமடைந்தாள். அதனால் அவள் கணவன் அவளைக் கைவிட்டான் என்பதை மாத்திரம் அவன் மறக்கவே இல்லை.

சத்யேந்திரன் மணம் செய்துகொண்டு இரண்டு மாதங்கள் கழிந்தன. அன்று அவனுக்கு ஒரு கடிதமும் ஒரு பார்சலும் வந்தது. கடிதம் நளினியின் சகோதரன் நரேந்திரன் எழுதி இருந்தான். அது வருமாறு:

“சத்யேந்திர பாபு! நான் மிகுந்த வெறுப்புடன் இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம். என் உயிரினும் இனிய சகோதரி நளினிதான். இறக்குமுன் அவள் ஏதேதோ சொன்னாள். இந்த மோதிரத்தை மீண்டும் உங்களிடம் அனுப்பச் சொன்னாள். உங்கள் பெயர் பொறித்த மோதிரத்தைத் திருப்பி அனுப்பு கிறேன். இதைத் தங்கள் புதிய மனைவிக்கு அணிவிக்க வேண்டுமென்பது என் சகோதரியின் விருப்பம். அவளுடைய ஆசை பூர்த்தியாகுமென்று நம்புகிறேன். இறக்கும்போது அவள் தங்களை மிகவும் வேண்டிக் கொண்டாள். அவளுடைய இந்தச் சகோதரியாவது கஷ்டப்படாமல் சௌக்கியமாக இருக்கட்டும், என்றாள்.
தங்கள்,
நரேந்திர நாதன்.

நளினிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தபோது சத்யேந்திரன் இதை அவளுக்கு அணிவித்தான். இந்த விஷயம் அவனுக்கு ஞாபகம் வந்ததோ என்னவோ?

சத்யேந்திரன் இப்பொழுது பபனாவில் இல்லை. எந்தக் காரணத்தினாலோ தெரியவில்லை. தாயும் காசியில் வசிக்க முடியவில்லை. புதிய நாட்டுப் பெண்ணின் பெயர், விது. அவள் ஒருவேளை பூர்வஜன்மத்தில் நளினியின் சகோதரியோ என்னவோ?

– நாலு கதைகள், சரத் சந்திரர், மொழி பெயர்த்தவர்: அ.கி.ஜயராமன், முதற் பதிப்பு: 1946, ஜோதி நிலையம், சென்னை,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *