ஆட்டுக்கல்லு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,738 
 
 

வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கல்லை இறக்கி வைத்தார் அப்பா. தனது ஆசையை நிறைவேற்றி விட்ட பூரிப்பில் அம்மா அப்பாவுக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணனும் நானும் ஆட்டுக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தோம். உரலில் வெற்றிலையும் பாக்கையும் ஒன்றாக இடித்து வாயில் திணித்துக்கொண்டே ஆட்டுக்கல் மீதான விசாரணையைத் தொடங்கினாள் பாட்டி.

“யேன்டா இந்த கல்லு என்ன வெல?”

“முப்பது வெள்ளி “

“என்ன கல்லாம்? கருங்கல்லா இல்ல மாவு கல்லா?”

“கருங்கல்லுதான்”

“பாத்தா மாவு கல்லு மாதிரில்லடா இருக்கு”

“ஆமா, பூவிழுந்த கண்ணுல நோட்டம் விட ஆரம்பிச்சுடுவியே” முறைத்துக்கொண்டார் அப்பா.

அன்றைய தேதியில் தோட்டத்தில் அப்பாவின் சம்பளம் நாள் ஒன்றுக்கு நான்கு வெள்ளி ஐம்பது காசு. அம்மாவுக்கு இரண்டு வெள்ளி ஐம்பது காசு.பிள்ளைகள் நாங்கள் இரண்டு பேர். பாட்டியும் திருமணமாகாத அத்தையும் குடும்பத்தில் உறுப்பியம் பெற்றிருந்தனர். அப்பா தோட்ட வேலை போக, வெளிக்காட்டு வேலைக்கும் போவதுண்டு. அந்த சம்பளத்தில் மிச்சம் பிடித்து அப்பா ஆட்டுக்கல்லை வாங்கினார்.

பெருநாள் காலங்களிலும் விஷேச காலங்களிலும் தோட்டத்து மக்கள் மாவரைக்க யார் வீட்டில் ஆட்டுக்கல் இருக்கிறதோ அங்கே வரிசை பிடித்து நிற்பார்கள். தோட்டப்புறங்களில் மக்கள் இப்படித்தான். ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லு, உரலு, முறுக்குக்குவளை என எல்லாமே ஒருவர்கொருவர் இரவல் பெற்று உபயோகித்தனர். அம்மா ஒரு முறை பொங்கலுக்கு மாவரைக்க லயத்தில் பின் வரிசை வீட்டுக்கு சென்றாள். மாவரைத்து முடிக்க தாமதமானதால் அந்த ஆட்டுக்கல்லின் சொந்தக்காரி அம்மாவைத் திட்டித் தீர்த்து விட்டாள். அம்மா பொறுமையிழக்க அன்றைய தினம் அங்கே பயங்கர வாய்ச்சண்டை நடந்தேறியது. வீட்டுக்கு வந்த அம்மாவை அப்பா கண்டபடி திட்டினார்.

“உன்ன யாரு அடுத்தவங்க வீட்டுக்குப் போகச் சொன்னது”

“நம்ம வீட்ல இருக்க வேண்டியது இருந்தா, நான் யெதுக்கு அடுத்தவகிட்ட நிக்கனும்?” என்றாள் அம்மா.

அன்று அம்மா விட்டெறிந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்பாவின் நெஞ்சுக்குள் சிறைப்பட்டன. நாளடைவில் அம்மாவுக்கு வேண்டியவை ஒவ்வொன்றாக வீடு வந்து சேர ஆரம்பித்தன. இப்போது இந்த ஆட்டுக்கல்.ஆட்டுக்கல்லை வீட்டில் வைக்க ஒரு சரியான இடத்தைத் தேடினார் அப்பா. அத்தை வீட்டின் முற்றத்திலேயே வைக்கலாம் என்றாள். அத்தையை ஓரம் கட்டினாள் அம்மா. முற்றத்தில் வைத்தால் இரவோடு இரவாக எவனாவது அடித்துக்கொண்டு போய்விடுவான். வீட்டின் பின்புறத்தில் வைக்கலாம். பயன்பாட்டுக்குச் சுலபமாக இருக்கும் என்றாள் அம்மா. அம்மாவின் கருத்தை ஒரே அடியில் அடித்து வீழ்த்தினாள் பாட்டி. ‘ஏற்கனவே வீட்டின் பின்புறத்தில் வைத்து காணாமல் போனது போதாதா? அதெல்லாம் வேண்டாம், சமையற்கட்டில் ஒரு மூலையில் வைக்கலாம். தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றாள் பாட்டி.

சபை பாட்டி சொல்லியதை ஏற்றுக்கொண்டது. ஆட்டுக்கல்லைச் சமையற்கட்டில் வைக்க தன் உடல் பலத்தை ஒன்று திரட்டி மெனக்கெட்டார் அப்பா. எனக்கும் அண்ணனுக்கும் ஆட்டுக்கல் ஒரு விநோத விளையாட்டுப் பொருளாக தெரிந்தது. அதை வைத்து என்ன செய்யலாமென அன்றைய நாள் முழுவதும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தோம். காலையில் அம்மா அடுப்படியில் வேலையாக இருப்பாள். நான் எழுந்ததுமே வெறுமனே ஆட்டுக்கல்லை ஆட்டுவேன். அதன் சத்தமே விஷேசமாக இருக்கும். அப்படி ஆட்டி அதன் சத்தத்தைக் கேட்பது எனக்கு பிடித்தமான ஒன்று. பாட்டி மட்டும் என்னை அதட்டிக் கொண்டே இருப்பாள்.

“வெறுங்கல்லை ஆட்டாதடா, வீட்டுக்கு நல்லது இல்ல”

“அது யேன் வெறுங்கல்லை ஆட்டினால் வீட்டுக்கு நல்லது இல்ல?” என விதாண்டாவாதம் செய்வேன். அம்மா சத்தம் போடுவாள்.
பின்னொரு நாளில் வெருங்கல்லை ஆட்டினால் குழவிக்கல் தேய்ந்துவிடுமென அத்தை சொல்லியிருந்தாள்.

வீட்டில் எந்நேரமும் ஏதாவது சேட்டை செய்துகொண்டே இருப்பதால் என்னை எப்போதும் அறுந்தவாலு என்றே விளிப்பார்கள். அம்மா அடுப்படியில் வேலையாக இருக்கும்போதெல்லாம் நானும் அடுப்படியையே சுற்றி சுற்றி வருவேன். அடுப்படியில் ஆட்டுக்கல்லின் மேல் கால்வைத்து எகிறி குதித்து விளையாடுவேன்.

“ஆட்டுக்கல்லு மேல கால வைக்காதடா மடப்பயல” என்று பாட்டி திட்டுவாள்.

“ஏன் வைக்கக்கூடாது?”

“வைக்கக்கூடாதுடா!”

“அதான்…யேனு கேட்கேன்”

“ஆட்டுக்கல்லு சிவலிங்கம் உருவம்டா”

“யாரு? தாத்தா சிவலிங்கம்மா!”

“அடேய்! அது சாமிடா, கண்ணத்துல போட்டுக்கோ” என்பாள் பாட்டி.

என்னைப்போல அடுப்படியில் அண்ணன் எப்போதும் ஆட்டுக்கல்லிலேயே அமர்ந்து கொள்வான். பாட்டி அண்ணனையும் அதட்டிக் கொண்டே இருப்பாள். எங்களிடமிருந்து ஆட்டுக்கல்லைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தாள் பாட்டி.

“ஆட்டுக்கல்லுல உட்காராதடா, குண்டி தேஞ்சிடும்”

பாட்டி சொல்லும் குண்டியென்ற வார்த்தை அண்ணனின் முகத்தைச் சுழித்திடும். எனக்கு மட்டும் மண்டைக்குள், ஆட்டுக்கல்லில் உட்கார்ந்தால் குண்டி எப்படி தேஞ்சி போகும் என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அத்தையிடமும் பதில் இல்லை. ஆளில்லாத நேரங்களில், ஆட்டுக்கல்லில் அமர்ந்துவிட்டு ஓடிப்போய் கண்ணாடி முன் அம்மணமாய் நின்று குண்டி தேய்ந்ததாயென்று சுயசோதனைச் செய்வேன். குண்டி தேய்ந்ததோ இல்லையோ, வீட்டுக்கண்ணாடி மட்டும் ரசமிழந்து போனது. நிஜத்தில் எனக்கு ஆட்டுக்கல்லின் மீது அமர்ந்து கொள்ள மிகவும் விருப்பம். ஆட்டுக்கல்லுக்குள் ஒருவித குளிர்ச்சி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது உடலுக்குள் பாயும்போது ஜுவாலையாக மாறி உச்சந்தலை வரை விரவி செல்லும்.

ஆட்டுக்கல்லின் குளிர்ச்சியைத் தவளையும் உணர்ந்தால் என்னவோ அதன் குழிக்குள் எப்போதும் தவளைகள் ஒன்றிரண்டு ஒடுங்கியிருக்கும். ஒருமுறை அம்மா உளுந்து அரைக்க அத்தையை ஆட்டுக்கல்லைத் நகர்த்தி வைக்கும்படி சொன்னாள். அத்தை குனிந்து ஆட்டுக்கல்லை நகர்த்தி வைத்துபோது குழிக்குள்ளிருந்து தவளை வெளியே குதித்தது. பயந்துபோய் அப்படியே மல்லாத்து விழுந்தாள். அம்மா அத்தையைத் தூக்கி விட்டாள். நான் கைக்கொட்டி சிரித்தேன். அம்மா என் முதுகில் ரெண்டு போடு போட்டபோது அத்தை என்னை அணைத்துக் கொண்டாள்.

ஆட்டுக்கல்லில் மாவை அரைப்பது என்பது ஒரு கலை. அம்மாவும் அத்தையும் மாவரைக்க அமரும்போது நானும் உடனிருப்பேன். நீரில் ஊறு வைத்த தானியத்தை இரண்டு கைப்பிடி அளவில் குழிக்குள் போட்டு அம்மா குழவிக்கல்லை ஆட்டுவதையும், அத்தை குழியிலிருந்து எம்பி வரும் தானியத்தைக் ஒற்றைக்கரத்தால் சாதுரியமாக மீண்டும் குழிக்குள் தள்ளுவதையும் அவதானித்துக் கொண்டிருப்பேன். அசந்தால் விரல்கள் குழவிக்கல்லில் நசுக்கப்படும். குழவிக்கல் எப்போதும் தானியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அது தானியத்தை குழிக்குள்ளிருந்து வெளியேற்றுவதும், தானியங்கள் மீண்டும் அக்குழியில் வீழ்ந்து தங்களை மரித்துக்கொள்வதும், ஒரு துயரக் காட்சியாக அரங்கேறி முடியும்.

ஆட்டுக்கல்லில் அரைத்த மாவுலிருந்து அம்மா வடை, தோசை, இட்லி போன்ற பண்டங்களைத் தயாரிப்பாள். தோசைக்கும் இட்லிக்கும் தொட்டுக்கொள்ள நன்கு வறுத்தெடுத்த பருப்பை காய்ந்த மிளகாயுடன் சேர்த்து ஆட்டுக்கல்லில் அரைத்து பொடி செய்வாள். நாங்கள் பொடியில் சிறிதளவு நல்லெண்ணய்யை ஊற்றி சாப்பிடுவோம். ஆட்டுக்கல்லின் விசேஷமோ அன்றி மனத்தில் விசேஷமோ, பண்டங்கள் என்றைக்குங் காட்டிலும் அன்று ரொம்பச் சுவையாய் இருக்கும்.

ஆட்டுக்கல் வந்த பிறகு வீட்டுக்கு பெண்டுகள் வருகை அதிகமாகவே இருந்தது. அம்மாவிடம் ஏதாவது பேச்சு கொடுத்து மாவு அரைக்க அனுமதி வாங்கிக் கொள்வார்கள். அம்மாவும் பெண்டுகளை அனுமதிப்பாள். பாட்டி அவர்கள் எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. பாட்டிக்கு அது பிடிக்காது. சில நேரங்களில் அவர்கள் மீதிருந்து கழுவாத உடம்பின் கவிச்சை அடிப்பதாக பாட்டி புலம்புவாள். அவர்கள் வீட்டுப் பின்வாசல் வழியாக வந்து மாவு அரைத்துவிட்டு அம்மாவிடம் புளகித்துச் சிரித்துப் பேசிவிட்டுச் செல்வார்கள். அம்மாவுக்கு எப்போதும் மற்றவர்களின் சமாச்சாரங்களில் நாட்டம் இல்லாமையால் பெண்டுகள் அவளைப் புறக்கணித்தே இருந்தார்கள். ஆட்டுக்கல் வந்தபின் அம்மாவுக்குப் பெண்டுகளின் உறவுகள் தேடி வந்தன.

அப்பாவின் தூரத்து உறவுக்காரர் மூலமாக அத்தைக்கு வரன் ஒன்று அமைந்திருந்தது. அத்தையைப் பெண் பார்க்க வந்தபோது, அம்மா வடை, பாசிப்பயிறுருண்டை என சில பலகாரங்களைத் தயாரித்திருந்தாள். வந்தவர்கள் வடையைச் சுவைத்துவிட்டு பூவைப்போன்று மென்மை என்றார்கள். அது தன்னைக் குறித்த பாராட்டெனவே ஆனந்தம் மிளிர்ந்தபோதும், அத்தையே ஆட்டுக்கல்லில் மாவை அரைத்து வடையைச் சுட்டதாகவும் சொல்லிவைத்தாள் அம்மா.

அத்தைக்கு அவரும் பிடித்திருக்கவே திருமணம் நிச்சயமாகி சட்டென்று நடந்து முடிந்தது. திருமண விருந்தின்போது லயத்தில் எல்லோருக்கும் வடைபாயாசத்துடன் பந்தி பரிமாறப்பட்டது. திருமண விருந்து வேலைகளை அவரவர் ஓடியாடி செய்தாலும் ஆட்டுக்கல் மட்டும் இருந்த இடத்திலேயே அத்தைக்காக தேய்ந்தது. மாமாவுடன் புறப்படும்போது கண் கலங்கியவள் அப்பா, அம்மா, பாட்டி என எல்லோரிடமும் முண்டு முண்டாக நின்று அழுதாள். அண்ணனுக்கும் எனக்கும் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள்.

வீட்டில் அம்மாவும் பாட்டியும் உறங்கியிருந்தார்கள். அப்பா வெளிக்காட்டு வேலைக்குச் சென்றிருந்தார். அண்ணன் என்னிடம் “டேய், நமக்குள்ள ஒரு போட்டி” என்றான்.

“என்ன போட்டி…அண்ணா?” என்றேன்.

“நம்ம ரெண்டு பேருல யாரு குழவிக்கல்ல தூக்கறாங்கனு பார்ப்போம். அப்படி தூக்கிட்டா அவங்கதான் போட்டில ஜெயிச்சவங்க” என்றான். நானும் போட்டிக்கு ஒப்புக்கொண்டேன்.

முதலில் நான் தூக்கினேன். கல் தரையிலிருந்து எழவில்லை. முயற்சித்தேன், கல் மேலே எழுவதற்குள் தரை மீட்டுக்கொண்டது. அடுத்தது அண்ணனின் முறை; தட்டுத்தடுமாறினான். குழவிக்கல்லைத் தரையிலிருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கிய பாவிப்பையல், தன் கால் மீது போட்டுக்கொண்டான். உயிரே போனதுபோல அலறினான். கழுத்தறுத்த கோழிப்போல தரையில் வீழ்ந்து வெட்டி வெட்டி இழுத்தான். தரை அண்ணனின் இரத்தத்தில் குளித்துக் கொண்டிருந்தது. தூங்கியவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். என் மீது தெறித்திருந்த இரத்தத்தாலும் பயத்தாலும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. செய்வதறியாது விழி பிதிங்கினேன். அழுகை பீறிட்டது. அம்மா அண்ணனின் காலைப்ப் பார்த்து மார்பில் அடித்துக்கொண்டு அலறினாள்.

“ஐய்யோ என் புள்ள…..! என்னடா ஆச்சு….? சொல்லுடா என்னடா பண்னித் தொலச்சீங்க…..?ஐய்யோ என் புள்ள காலு….! காலு….! கடவுளே நான் என்ன பண்ணுவேன்?” அண்ணனை மடியில் போட்டுக்கொண்டு கதறினாள் அம்மா. இரத்த வெளியேற்றத்தின் வீரியம் அவனை மயக்கதிற்கு இழுத்துச் சென்றிருந்தது.

“படிச்சி படிச்சி சொன்னேனே ஆட்டுக்கல்லுல விளையாடாதிங்கடானு…. கேட்டிங்களாடா” பாட்டியும் ஒப்பாரி வைத்தாள்.

குடும்பத்தின் அலறலில் லயமே வீட்டில் திரண்டுவிட்டது. அண்ணனின் கணுக்கால் முற்றிலுமாக சிதைந்திருந்தது. சுத்தமான துணியால் காலைச் சுற்றிவிட்டு அண்ணனைத் தூக்கிக் கொண்டு தோட்டத்து ஆம்பளைகள் ஓடினார்கள். அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறும் முன்பே காலில் சுற்றப்பட்ட துணி இரத்தத்தைக் குடித்து நிறைந்திருந்தது. அண்ணனைப் பட்டணத்து மருத்துவமனைக்குத் துரத்திச் சென்றனர். வெளிக்காட்டு வேலைக்குச் சென்றிருந்த அப்பா விசயம் தெரிந்து பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். பக்கத்து வீட்டு அண்ணனின் உதவியால் அம்மா முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாள்.

வீட்டில் நானும் பாட்டியும் மட்டுமே எஞ்சியிருந்தோம். பாட்டி புலம்பியவாறே அழுது கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னையும் கண்டபடி திட்டினாள். என்னால் எதையும் கேட்க முடியவில்லை. என் காதுகளில் அண்ணனின் அலறலே ஒலித்துக்கொண்டிருந்தது. அலறலை நிரம்பிக்கொண்டு வீடு நிசப்தமானது. எதிலும் கவனம் செலுத்த முடியாது முடங்கியிருந்தேன். அழுது அழுது காய்ச்சல் அனாலாய் கொதிக்க அப்படியே உறங்கிப் போனேன். மறுநாள் எழுந்தபோது அப்பாவும் அம்மாவும் வீடு வந்திருக்கவில்லை. குதம்பலாக இருந்த வீட்டை பாட்டி தன்னால் இயன்றவரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். சமையலறைக்குச் சென்றேன். அண்ணனின் இரத்த வாடையை என் நாசி உணர்ந்தது. அப்பாவும் அம்மாவும் வீடு வந்து சேர்ந்தனர். அத்தையும் மாமாவோடு வந்திருந்தாள். அம்மாவின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது. அப்பா பித்து பிடித்தவராய் இருந்தார். விறுவிறுவென சமையலறைக்குச் சென்றவர் வெறிகொண்டு குழவிக்கல்லை தூக்கி ஆட்டுக்கல்லின் மேலே பலங்கொண்டு போட்டுடைத்தார். குழவிக்கல் பல பகுதிகளாக தெறித்தது. ஆட்டுக்கல் பிளந்துப்போனது.

கொஞ்சநாள் போயிருக்கும்.

ஒரு காலைப்பொழுதில் அப்பாவும் அம்மாவும் அண்ணனை மருத்துவமனையிலிருந்து அழைத்துவர வாடகை வண்டியில் சென்றிருந்தனர். அண்ணனுக்காக லயமே காத்திருந்தது. அண்ணன் வீடு வந்து சேர்ந்திருந்தான். அப்பாவின் கைகள் அவனைத் தாங்கியிருந்தன. அண்ணனின் காலில் கால் பகுதி முழுமையாக அகற்றப்பட்டிருந்தது. அண்ணன் என்னைப் பார்த்து மௌனமாகச் சிரித்தான். பலர் அவனை காட்சிப்பொருளாக வேடிக்கை பார்த்தனர். சிலர் அவனுக்காக அனுதாபப்பட்டனர்.
அண்ணன் நுடமாகி வீட்டிலேயே முடங்கிப்போனான்.

எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டதுப்போல் பிளந்துப்போன ஆட்டுக்கல் வீட்டின் பின்புற நிலத்தில் தெறித்துப்போன குழவிக்கல்லோடு மண்ணுக்குள் புதையுண்டுப் போனது.

– 5 ஜனவரி 2014 – நம் நாடு நாளிதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *