ஆட்குறைப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2013
பார்வையிட்டோர்: 11,966 
 

ட்ரிங் ட்ரிங்…… ட்ரிங் ட்ரிங்……

எதோ யோசித்து கொண்டிருந்த பத்ரி என்கிற பத்ரிநாதன் தனக்கு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்த இண்டர்காமின் சத்தத்தால் தொலைபேசியின் ரீசிவர் எடுத்து சத்தத்துடன் தனது யோசனையையும் துண்டித்தார். தனது காதில் போனை பதித்து “ஹலோ” என்றார். அவரது குரலில் பயம் கலந்த நடுக்கம் தெரிந்தது. எதிர்முனையில் இருந்து என்ன சொல்ல போகிறார்கள் என்பதை அச்சத்துடனும் ஆவலோடும் எதிர்பார்ப்பது அவர் கண்களில் தெரிந்தது.

சுருள் நிறைந்த முடியுடன் அழகாய் செதுக்கிய கிருதாவும் மீசையும் அதன் கீழே எப்போதும் தவழும் சிறு புன்னகையுடன் வலம் வரும் பத்ரிவை ஒரு குழந்தையின் தந்தை என்று சொன்னால் எவரும் நம்ப மறுப்பர். இன்னும் இரண்டொரு மாதங்களில் 35 வயதை எட்டும் இவர் எப்போதும் சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்து நண்பர்களின் வட்டத்தில் பெரியவர் ஆனாலும் சிறியவர் போல் சகஜமாய் பழகும் குணம் படைத்தவர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாய் அலுவலகத்தில் நடக்கும் ஆட்குறைப்பு நிகழ்வுகளால் வழக்கத்திற்கு மாறாய் இருந்தார்.

தினமும் மூவர் நால்வராய் அழைத்து பணியில் இருந்து விலக்கி களை பிடுங்கும் வேலையை அமைதியாக செய்த நிர்வாகம் எப்போது தன்னை அழைக்கும் என்ற பயத்தால் இவர் தினம் தினம் அவதிபட்டார். நண்பர்களுடன் சகஜமாய் பழகினாலும் எவரையாவது ஹச்.ஆர் என்று அழைக்க படும் மனிதவளத்துறையில் இருந்து அழைத்தால் போதும் அந்த நாள் முழுதும் பயம் இவரை தொற்றிக்கொள்ளும்.

அதும் கடந்த இரண்டு நாட்களுக்கு மூன் தான் இவருடைய அணிக்கு அளித்த பணியை மொத்தமாய் முடித்திருந்தனர். அதலால் வேறு பணியில்லாமல் அமர்ந்திருப்பது ஆபத்து என்பதை இவர் மனம் ஆணித்தரமாய் இவருக்குள் உறைத்து சொல்லியது.

“மிஸ்டர். பத்ரிநாதன்….???” இளமை நிறைந்த குரலில் வினவினான் எதிர்முனை ஆசாமி.

எஸ்” பயம் கலந்த பீதியுடன்.

“ப்ளீஸ் மீட் மிஸ். ஹெமங்கி அட் செவன்த் பலூர்…. ரெகார்டிங் யுவர் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்” அடுத்த வேலைக்கான விஷயம் பற்றி பேசுவதற்காக அவர்களது பெண் நிர்வாகி ஒருவரை சந்திக்க சொல்லி எதிர்முனையில் இருந்து வந்த செய்தியால் தன் பயம் மறைந்து சந்தோஷம் கொண்டார். மனதிற்குள் இருந்த அச்சம் விலகி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

முதல் தளத்தில் இருக்கும் இவர் இந்த செய்தி கேட்டதும் எதிர்முனையில் இருப்பவனுக்கு பதிலேதும் சொல்லாமல் போனை துண்டித்து லிப்டின் பக்கம் தனது பழைய துள்ளலுடன் கிளம்பினார்.

ஆறாவது தளத்தில் உறங்கிகொண்டிருந்த லிப்டின் பொத்தானை அழுத்தி அதனை கீழிறங்க எழுப்பினார். உர்ர் என்ற சத்தத்துடன் கீழ் வந்தது உறங்கிய லிப்ட். முதல் தளத்திற்கு வந்ததும் தன் வாய் பிளந்து பத்ரியை உள் இழுத்து கொண்டது. ஏழாவது மாடிக்கு செல்வதற்கான பொத்தானை அழுத்தினார்.

பெண் நிர்வாகி என்பதால் தன்னை கொஞ்சம் அழகாய் காண்பித்து கொள்ள லிப்டின் கதவில் தெரிந்த தன் பிம்பத்தின் உதவியால் தன் தலை கொதிகொண்டார். மீசையை வளைத்துக்கொடுத்தார். இரண்டு நாட்களாய் மறைந்திருந்த அவர் புன்னகையை அவர் உதட்டில் சேர்த்துக்கொண்டார்.

“மே ஐ கம் இன் மேடம்” தனியாக கொடுக்கப்பட்டிருந்த அறையில் கண்ணாடி அணிந்தபடி கணினியை முறைத்து பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் நிர்வாகியின் கவனம் கலைத்து கதவை திறந்தபடி அனுமதி கேட்டார். மனதில் பிறந்த அச்சம் தொலைந்த சந்தோஷத்தில் அவளையும் சிறிது ரசித்துக்கொண்டார்.

ஆனால் அவரது ரசனையும் சந்தோஷமும் வெகுநேரம் நீடிக்கவில்லை. “பத்ரி தான நீங்க… ப்ளீஸ் மீட் மிஸ்டர் ஷிவ் நாராயணன் இன் தி ஒப்போசிட் கேபின்” என அவளிடம் இருந்து வந்த பதில் இவரை சுக்குநூறாய் ஆக்கியது. எதற்காக இத்தனை நாட்கள் பயந்தோமோ அது இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகிறது என்ற நினைப்பு அவருக்குள் தொலைந்திருந்த அச்சத்தை மறுபடியும் மூளைக்க செய்தது.

ஷிவ் நாராயணன் பத்ரி பணிபுரியும் அலுவலகத்தில் புதிதாய் பனியமர்த்தபட்ட ஜே. எம். டி என அழைக்கப்படும் துணை மேலாண்மை இயக்குனர். தனது வீர பராக்ரமங்களை தந்திர நெறிமுறைகளை கொண்டு நிர்வாகத்தின் நிலைமையை உயர்ததுவதாய் காட்டுவதற்கு வித்தியாசமான சில திட்டங்களை தீட்டினார். அதில் ஒன்று தான் இந்த ஆட்குறைப்பு திட்டமும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைவருடைய பதிவுகளையும் ஆராய்ந்து அதில் எப்போது குறை தெரிந்தாலும் அந்த நபரை வேலையில் இருந்து நீக்குவதே அந்த திட்டத்தின் சாராம்சம்.

அந்த திட்டத்தில் தனது பெயரும் வந்துவிட்டதை ஹெமங்கி ஷிவ்வை சந்திக்க சொல்லும்போதே புரிந்துகொண்டார் பத்ரி. கனத்த மனதுடன் எதிர் அறை நோக்கி செல்ல மனமில்லாமல் சென்றார். கதவு திறந்து உள்ளே சென்றவரிடம் மனிதவளத்தின் உதவியுடன் உள்ளே அழைத்தார் ஷிவ் நாராயணன்.

வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த நான்கு இருக்கைகளில் மூன்றை மனிதவளமும் ஷிவ் நாராயணனும் நிரப்ப கதவோரத்தில் காலியாய் விடபட்டிருந்த இருக்கையில் பத்ரியை அமரும்படி தனது சைகையால் கூறினார் ஷிவ் நாராயணன்.

“மிஸ்டர் பத்ரிநாதன் இங்க உங்கள எதுக்கு கூப்டோம்னா. உங்க ரெகார்ட்ஸ் லாஸ்ட் டூ இயர்ஸ் நல்லா இருக்கு…. பட் உங்க அப்ரைசல் ஸ்டேடஸ் பீபோர் தட் இஸ் நாட் அப் டு தி மார்க்…” என சொல்லிக்கொண்டிருந்த ஷிவ் நாராயணனின் பேச்சை கேட்க விரும்பாத பத்ரி இடைமறித்தார் ஷிவ் காட்டிய இருக்கையில் அமர்ந்தபடி

தனது வேலையை பிடுங்குவதற்காக அவர்கள் கட்டும் சப்பைகட்டை கேட்க விரும்பாத பத்ரி தானே தொடர்ந்தார். “சார் கம்பெனியின் நிலைமை இப்போது சரி இல்லைன்னு தெரியுது. சோ இங்க நான் ஆர்க்யு பண்ண விரும்பல. எனக்கு இன்னைல இருந்து ஜாப் இல்லைன்னு சொல்றிங்க இல்லையா…??” என சடாரென அவர்கள் விவரித்து சொல்லவந்த விஷயத்தை உடனே விடை தெரிந்த வினா ஒன்றின் மூலம் கூறினார்.

இவ்வளவு சீக்கிரமாக அதே நேரம் முகத்தில் அறைந்தார் போல் கணை தொடுத்த பத்ரியால் அறையில் சில நேரம் நிசப்தம் நிலவியது. ஹெச். ஆர் மனிதர்களும் ஷிவ்வும் மாறி மாறி தங்கள் முகங்களை பார்த்துகொண்டிருந்தனர். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாவிட்டாலும் மஞ்சு அப்படி பேசியது அவருக்கு திருப்தியை அளித்தது. அதேநேரம் இனிமேல் இந்த அலுவலகத்தில் இடம் இல்லை என நினைக்கும்போது வருத்தம் மஞ்சுவிடத்தில் அதிகரித்து கொண்டிருந்தது

“சாரி டு சே திஸ் பத்ரிநாதன்… நீங்க நார்மலா ரிசைன் பண்ற மாதிரியே போகலாம். வி வில் மேக் ஆல் தி செட்டில்மென்ட் க்ளியர்..” ஷிவ் நாராயணன் பத்ரியிடம் போலி சோகம் ஒன்றை தன் முகத்தில் படரவிட்டபடி பரிதாபம் காட்டியவர் “இவ்ளோ சிக்கரம் நீங்க புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ்…” என்பதோடு முடித்தார்.

“இப்போ நான் பண்ணனும் சார்..” பொறுமை இழந்த பத்ரி மீண்டும் கேள்வியால் அவர்களை குத்தினார்.

அவரது கையில் வெள்ளை காகிதம் ஒன்றை கொடுக்குமாறு தன் கண்சைகை மூலமே தனது உதவியாளர்களிடம் உத்தரவிட்ட ஷிவ் “ப்ளீஸ் ரைட் யுவர் ரிசைனேஷேன் லெட்டர்” என பத்ரியிடம் சொன்னார்.

மனதில் அதிகரிக்கும் அச்சம் ஒருபக்கம் தனது நிலை குறித்த வருத்தம் மறுபக்கம் இரண்டும் சேர்ந்து அவரை உள்ளுக்குள் சூக்குநூறாக்கியது. தனது சட்டை பையில் இருக்கும் பேனாவை எடுத்தவர் ஷிவ்வின் உதவியாளர் தந்த வெள்ளை காகிதத்தில் எழுத முயன்றபோது கைகள் நடுக்கம் கண்டன. வியர்வை பனித்துளிகளாய் நெற்றி நனைத்தது ஏசி காற்றிலும்.

“சார்… டெல் மீ வாட் டு ரைட்….” என்ன எழுதுவது என தெரியாமல் ஷிவ்விடமே உதவி நாடினார்.

ஷிவ் தன் மேஜையில் இருந்த இன்னொரு ராஜினாமா கடிதம் நீட்டி அதை மாதிரியாய் கொண்டு எழுதச்சொன்னார். அதில் உள்ள எழுத்துக்கள் பார்த்த பத்ரிக்கு எழுத்துக்கள் தெரியவில்லை மாறாக அதை எழுதியவனின் வலி தெரிந்தது. அக்கடிதத்தில் இருந்த நான்கு வரிகள் பார்த்து எழுத மஞ்சுவிற்கு 10 நிமிடங்களுக்கும் மேல் ஆனது.

எழுதி முடித்த கடிதத்தை படித்து பார்த்த ஷிவ் “பத்ரி யு ஆர் டலண்டெட்.. கவலை படாதிங்க உங்களுக்கு எங்கயும் வேலை கிடைக்கும்” போலியான தன்னம்பிக்கை சொற்கள் உதிர்த்த ஷிவ்வின் கன்னத்தில் பளார் என்று ஒரு விட வேண்டும் என்ற வெறி அதிகரித்தது.

“டோன்ட் டெர் டு ஸ்பிக் அபௌட் மை டலெண்ட். ஐ நோ வாட் ஐ அம்” தனது திறமை குறித்த எந்த ஒரு வாக்கியத்தையும் ஷிவ்வின் வாயால் கேட்க விரும்பாத பத்ரி அதை கேட்ட மாத்திரத்தில் கன்னத்தில் விட முடியாத பலாறை தன சொற்களினால் அடித்தார்.

ஆனால் ஷிவ் இதற்கெல்லாம் கவலை பட்டதை போல் தெரியவில்லை. மாறாக தனது வேலை இவ்வளவு சுலபமாய் முடிந்ததை அறிந்து உள்ளுக்குள் சந்தோஷம் கொண்டார். ஆறாது நாவினால் சுட்ட வடு என்ற வள்ளுவன் ஷிவ்வை போன்ற ஆட்களுக்கு பொருந்தாமல் எழுதிவிட்டான் போலும்.

சுரணை என்பது கொஞ்சம் கூட தனக்கு இல்லை என்பதை போலவே இருந்தது ஷிவ்வின் நடவடிக்கைகள். இன்னொரு பார்ம் ஒன்றை நீட்டி “இதுல ஹெச்.ஆர்ட்ட ஒரு சயின் வாங்கிட்டு அப்படியே ஐ.டிய ப்ரோசீட் பண்ணிட்டு போகலாம். ஆள் தி பெஸ்ட் பத்ரி” என சொல்லி தன கை கொடுத்தார். பார்மை மட்டும் பெற்றுக்கொண்ட பத்ரி ஷிவ்வின் கைகளை அந்தரத்தில் விட்டு ஏதும் சொல்லாமல் திரும்பினார்.

ஹெச். ஆர் அறை சென்ற பத்ரி அங்கு முடிக்க வேண்டியதை வேகமாய் முடித்தார். அந்த அலுவலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ரணமாய் இருந்தது அவருக்கு. ஆதலால் முடிந்தளவிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாய் தன்னை துரிதப்படுத்தினார்.

கடைசியாய் தன் ஐ.டி கார்டை ஒப்படைக்கும்போது முழுவதுமாய் உடைந்துபோனார். கண்களில் அவர் அறியாமலே நீர் கோர்த்தன. ஐ.டி ரொப் அவரது கைகளில் சுற்றிக்கொண்டு வர மறுத்தது. கழுத்தில் அணியவேண்டிய ஐ.டி கார்டை எப்போதும் கையில் கோவில் கயிறை போல ஸ்டைலாக சுற்றிக்கொண்டு அலைந்த காலம் முடிவதை அவரால் ஜீரணிக்கமுடியாமல் தவித்தார்.

அனைத்தையும் முடித்த பத்ரி அலுவலகம் வெளியேறும் நேரம் ஒருமுறை திரும்பி பார்த்து கொண்டார். ஐந்து வருடங்கள் தன்னையும் தன குடும்பத்தையும் காப்பாற்றிய அலுவலகம் இன்று அவரை வெளியேற்றி விட்டதை எண்ணி கண்ணில் கோர்த்திருந்த நீரை அலுவலக வாசலில் கொட்டினார்.

அவரின் நண்பர் கூட்டம் துக்கம் விசாரிக்க வந்த கூட்டம் போல் அலுவலகம் வெளியே அவர் வருகைக்காய் காத்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த ஆறுதல்களையும் தன்னம்பிக்கை சொற்களையும் உதிர்த்தார்களே தவிர அவர் மனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அணுக மறந்தர்.

அனைவரின் சொற்களும் அவருக்கு பாரமாக திகழ்ந்ததே ஒழிய மனதிற்கு சாந்தி தரவில்லை. அவரது நெருங்கிய நண்பனாய் திகழ்ந்த குணா என்ன பேசுவதென அறியாமல் பத்ரியை விட பெரிதும் வருத்தம் கொண்டிருந்தார். மஞ்சுவின் நிலை கண்ட குணா ஏதும் பேசாமல் மௌனமாய் தனது வேதனை வெளிபடுத்தினார்.

“இன்னைக்கு நீங்க… நாளைக்கு நாங்க ….” பத்ரியை போலவே பயந்து கொண்டிருந்த ஆல்வின் அவரை தேத்துவதாய் நினைத்து தனது மனதில் தோன்றியதை உதிர்த்தார். ஆல்வினின் வார்த்தைகள் அவருக்குள் இருந்த பயத்தை உணர்த்தியதே ஒழிய மஞ்சுவை தேற்றவில்லை.

“வாங்க போய் சரக்க போடுவோம்.. கவலைய மறப்போம்…” தனக்கு தெரிந்த வழியை சரவணன் சொன்னதை கேட்ட பத்ரி சிரிப்பதா இல்லை அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நினைப்பதா புரியவில்லை. புரியும் நிலையிலும் அவர் இல்லை.

இப்படி அனைவரும் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டிருந்தாலும் பத்ரி மனம் தன் மனைவி இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாளோ என்ற நினைப்பிலேயே இருந்தார். எவரிடமும் பணம் பெறாமல் தன கணவன் சம்பாத்தியமே தனக்கு போதும் என்று வீறாப்புடன் வாழும் தன் மனைவி இந்த வேலை போய்விட்டது என்று சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற அச்சம் அவரை வாட்டியது.

நண்பர்கள் அவரை வீடு வரை வந்து வழியனுப்பினர். அவர்களிடம் விடை பெறகூட மனம் இல்லாமல் தன் வீட்டுக்கதவை அணுகிய பத்ரிக்கு நெஞ்சின் கணம் அதிகரித்துக்கொண்டே போனது.

கதவின் முன்னே சென்றவர் தன்னை ஒரு முறை திடப்படுத்திக்கொண்டு காலிங் பெல்லை அழுத்தினார். திறந்த அவர் மனைவி பத்ரியின் முகத்தில் படர்ந்திருந்த சோகம் கண்டு திடுக்கிற்றாள்.

“என்னங்க என்ன ஆச்சு… ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க….” பத்ரியின் சோகத்திற்கு காரணம் அறிய தன் கேள்வி எழுப்பினாள்.

ஏதும் பேசாமல் சோபாவில் அமர்ந்த பத்ரி அதில் தன்னை முழுவதுமாய் சாய்த்து கொண்டு மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென தெரியாமல் அவள் முகம் பார்க்க திராணி இல்லாமல் வீட்டத்தை நோக்கினார். அவர் அருகில் அமர்ந்த மனைவி பத்ரியின் கைகளை பற்றிக்கொண்டு அவர் வார்த்தைக்காக பொறுமை காத்தாள்.

“ஜானு…. வேலை போயிருச்சுமா….” தன் மனைவி முகம் பார்க்காமல் மேலே பார்த்தபடியே பதில் சொன்னார்.

“ஏன் என்னாச்சு….. அது சரி இதுக்கா இவ்வளவு கவலை உங்களுக்கு…..” தனது மனைவியின் பதில் கொஞ்சம் கூட தாமதம் இன்றி வந்தது. சிறு யோசனை கொள்ளவில்லை. அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடையவில்லை. மாறாக ஏன் என்ற கேள்வியை மட்டும் கேட்டு அதற்கான பதில் கூட எதிர்பாராமல் இதற்காக இவ்வளவு கவலை ஏன் என்று அவள் வினவியதை கேட்ட பத்ரிக்கு குழப்பம் ஏற்பட்டது.

“ஏன் டி…. எனக்கு வேலை போனதால உனக்கு கவலை இல்லையா….” குழம்பிய பத்ரியிடம் இருந்து இந்த கேள்வி வந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

“இந்த வேலை இல்லையினா இன்னொன்னு…..” என சொல்லி அவர் தோல் சாய்ந்தாள். பத்ரி மனதில் இருந்த பாரம் பாதியாய் குறைந்தது. தன மனைவி இவ்வளவு எளிதாய் இதை எடுத்துக்கொள்வாள் என சிறிதும் எதிர்பார்க்காத மஞ்சு கொஞ்சம் நிம்மதி அடைந்தார்.

“பத்ரி யு ஆர் டலண்டெட்.. கவலை படாதிங்க உங்களுக்கு எங்கயும் வேலை கிடைக்கும்” ஷிவ் உதிர்த்த அதே வரிகள் அவள் பத்ரியின் தோல் சாய்ந்தபடியே உதிர்த்தாள். ஷிவ் சொன்னதில் நடிப்பு ஒளிந்து இருந்தது. அவர் மனைவியின் சொற்களில் நம்பிக்கை வலுத்திருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆட்குறைப்பு

  1. மஞ்சு என்பது யார்? பத்ரி என்பது யார்? ‘தோள் சாய்ந்து’ என்பது ‘தோல் சாய்ந்து’ என்றிருக்கிறதே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *