அவரவர் நியாயங்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 4,131 
 
 

மொபைலில் எண்களை ஒத்தும்போதே மனம் படபடத்தது.இரண்டு முறை தப்பான எண்ணை அமுக்கினாள்..

மோகனாவுக்கு அவள்மேலையே கோபமும் எரிச்சலும் வந்தது.

தான் பெற்ற பெண்ணிடமா இத்தனை பயம் ?

சரியான நம்பரை ஒருவழியாக அழுத்தினாள்..

இரண்டு முறை…ரிங் போய்க்கொண்டே இருந்தது..

மூன்றாவது தடவை..!

“ஹலோ..? மேகலா..? அம்மா பேசறேண்டா..!”

“அம்மா.! நான் ஒரு மீட்டிங்ல பிஸியா இருக்கேன்.டிஸ்டர்ப் பண்ணாதீங்க..நானே கூப்டறேன்..”

டக்கென்று ஃபோனைக் கட் பண்ணி விட்டாளே!

மோகனாவால் தாங்க முடியவில்லை..அழக்கூடாது என்று நினைத்தாலும் கண்ணீருக்கு எங்கே தெரிகிறது..?

இது முதல் தடவை இல்லை…அவள் ஒவ்வோரு முறையும் இந்த வார்த்தைகளை கேட்கும்போது அது பொய்யென்று நிச்சயமாக தெரிந்தாலும் பித்து மனம் நம்ப மறுக்கிறதே…!

‘பாவம்.. மீட்டிங்கில் இருப்பாள்..கூப்பிடுவாள் ..’ என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு எத்தனை நாட்கள் இந்த காத்திருப்பு…?

வெட்கமில்லாமல், பொறுக்கமுடியாமல் மீண்டும் அவள்தான் கூப்பிடுவாள்..

இந்த உதாசீனம் அவளுக்கு தேவையா..? ஆம்! தேவைதான்..?

குழந்தை அத்தனை காயப்பட்டிருக்க வேண்டும்…!

ஆனால் மோகனா உடலும், உள்ளமும் தளர்ந்த நிலையில், இப்போது ஒரு அரவணைப்பு தேவைப்படும் நிலையில், இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்…!

மூன்றுவயதுக் குழந்தையாய் மேகலாவுக்கும் இந்த அரவணைப்பு வேண்டியிருந்திருக்கும் என்று எப்படி தோன்றாமல் போனது ?

தான் அத்தனை சுயநலவாதியாக இருந்திருந்திருக்கிறாள்…

தனது மகிழ்ச்சி, தனது முன்னேற்றம், தனது கௌரவம்..!

மோகனாவின் பார்வை சுவரில் மாட்டியிருந்த படத்தில் நிலைகுத்தி நின்றது..

மேகலா அம்மாவின் கைக்குள் ஒரு பூனைக்குட்டி மாதிரி…!

“மேகலா…! உன்ன பாக்கணும்போல இருக்கும்மா! அட்லீஸ்ட், உன் குரலயாவது கேக்கணும்..

ப்ளீஸ்டா..! ஒரு தடவையாவது ஃபோனக் கட் பண்ணம, அம்மான்னு கூப்பிடுடா….!”

***

‘ம்ம்மா…!ம்ம்மா…!’

மோகனா அப்படியே கையிலிருந்த புத்தகத்தை சோஃபாவில் தூக்கி போட்டுவிட்டு ஓடிவந்து மேகலாவைக் கட்டிக் கொண்டாள்..

“மேகலா குட்டி…! அம்மா சொன்னியா.? எங்க இன்னொரு தடவ சொல்லு..’ அம்மான்னு சொல்லுடா தங்கம்..’

குழந்தையை அள்ளி அணைத்து கட்டி முத்தமிட்டாள்.உள்ளம் கள்வெறி கொண்டது..

சூரஜ் வீட்டிற்குள் நுழைந்ததுமே அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள்..

“ஏய் சூரஜ்..! மேகலா குட்டி இன்னிக்கு என்ன சொன்னா தெரியுமா…?

‘மேகலா.. மறுபடியும் கூப்பிடு..அம்மா…!”

“ப்ப்பா..ப்ப்பா..! ‘என்றது மேகலா குட்டி…

அப்படியே எடுத்து குழந்தையை தட்டாமாலை சுற்றினான் சூரஜ்..

“அப்பா சொல்றியா..? எனக்கு தெரியும்..! நீ அப்பாதான் முதல்ல சொல்வன்னு…!

தங்கம்..உனக்கு அப்பா தானே பிடிக்கும்…!”

மோகனா சட்டென்று திகைத்து நின்றாள்..

“சூரஜ்…!முதல்ல அவ அம்மான்னுதான் கூப்பிட்டா..!”

“இப்பதானே கேட்ட..அப்பான்னு சொன்னத!”

இருவருக்குமுள்ள ஈகோ அப்போதுதான் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது…

எப்போதும் விவாதம்.. எதற்கும் விவாதம்…!

மோகனாவின் விடுப்பு முடிந்து அவள் வேலைக்குத் திரும்பும் நாள் நெருங்கி விட்டது..

“சூரஜ்.. அடுத்த வாரம் நான் வேலைல ஜாயின் பண்ணனும்.. மேகலாவுக்கு ஒரு பேபி சிட்டர ஏற்பாடு பண்ணனும்..

பேப்பர்ல விளம்பரம் குடுக்கலாமா..?“

“மோகனா..வேலைக்கா போகப்போற..? இரண்டு வருஷம் வீட்டில இருப்பன்னு நெனச்சேன்.!”

“வாட் ஆர் யூ டாக்கிங் ? வீட்ல இரண்டு வருஷமா..? என்ன ஜோக்கடிக்கிறயா..?

நான் எத்தன முக்கியமான பொறுப்பில இருக்கேன்னு தெரியாது ?

கல்யாணத்துக்கு முன்னாடி நாம் பேசினதெல்லாம் மறந்திட்டியா..?

ஏன் ? நீ கூட இரண்டு வருஷம் வீட்ல இருந்து மேகலாவ பாத்துக்கலாமே…!”

படபடவென்று பொரிந்து கொட்டினாள்…

அம்மாவின் இந்தக் குரலை இப்போதுதான் மேகலா முதல் முறையாக கேட்கிறாள்..

பயத்தில் ஓடிவந்து அப்பாவைக் கட்டிக் கொண்டது..

“சாரி..குட்டிமா..பயந்திட்டயா…! “

அப்போது கூட சூரஜிடம் சாரி கேட்க அவளது தன்மானம் தடுத்தது..

“என்னவோ பண்ணு..!”

சட்டென்று எழுந்து கொண்டவன் படீரென்று கதவை அறைந்து சாத்திக்கொண்டான்..

இப்போது குழந்தை பயந்து அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டது…

இது இப்போது வாடிக்கையாகிப் போனது..

மேகலா இருப்பதையே மறந்தவர்களாய் அப்பாவின் குரலும் அம்மாவின் குரலும் மாறி மாறி ஓங்கி ஒலிக்கும்போது மேகலா மிரண்டு போகிறாள்..!

***

மேகலாவின் கண்களில் இப்போதெல்லாம் சதா ஒரு மிரட்சி.பழைய கலகலப்பு எங்கேயோ காணாமல் போய்விட்டதுபோல்..எதையோ யோசித்துக்கொண்டு….!

‘மேகலா..மேகலா டியர்..’ என்ன பண்ணிட்டிருக்க ? நோட்புக்ல ஒண்ணுமே எழுதல ? ன்னாச்சும்மா..?

‘மிஸ்…சாரி மிஸ்…! நான்.. நான்..’

‘சரி..இப்ப நான் சொல்றதை எழுது…’

‘ஓக்கே மிஸ்…’

நிருபமா கொஞ்ச நாளாகவே மேகலாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

எப்போதும் துருதுருவென்று, மூச்சுக்கு முன்னூறு கேள்விகள் கேட்டுக் கொண்டு வகுப்பையே கலகலப்பாக வைத்திருக்கும் மேகலாவா இது..?

“மிஸ்.மேகலா லஞ்ச் சாப்பிடாம அப்பிடியே டிபன் பாக்ச மூடி வச்சிடறா…!’

“மிஸ்.மேகலா எங்க கூட பேசவே மாட்டேங்கிறா…!”

நிருபமா லஞ்ச் பிரேக்கில் மேகலா பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்..

“மேகலா… ஏன் சாப்பிடல..அம்மா என்ன குடுத்தனுப்பிச்சிருக்காங்க..? பாக்கலாமா? ஓப்பன் யுவர் பாக்ஸ்..!”

வெஜிடபிள் நூடுல்ஸ்..!கமகமத்தது…

“மேகலா..சாப்பிடுமா…! அம்மா ஆசையா செஞ்சு குடுத்திருக்காங்க இல்ல…?”

“அம்மா இல்ல…வீணா அக்கா..’

“சரி..வீணா அக்கா..! உனக்கு பிடிக்குமில்லையா? சாப்பிடு…”

“பிடிக்காது.. பசிக்கல மிஸ்..”

“உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க பாரு.. சீக்கிரம் சாப்பிட்டா கொஞ்ச நேரம் விளையாட டைம் கிடைக்குமே..!

கமான்.க்விக்…”

“நோ மிஸ்..எனக்கு விளையாட வேண்டாம்..எனக்கு பிராமிஸா பசிக்கல…”

டிஃபன் பாக்சை அழுத்தி மூடினாள்.வாயையும் தான்..!

கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் இல்லை…!

***

மோகனா கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.. கேட்கும் ஒரு கேள்விக்கும் பதிலில்லை..

“என்னடா…? லஞ்ச் அப்பிடியே இருக்கு…? பசிக்கலயா…? “

வீணா புத்தகப் பையிலிருந்து டைரியை எடுத்து காண்பித்தாள்.

“மேடம்..அவுங்க மிஸ் என்ன எழுதிவிட்டிருக்காங்க பாருங்க..’

“மேகலா முன்போல் வகுப்பில் கைகலப்பாக இல்லை..எதையோ பறிகொடுத்தவள் போலிருக்கிறாள்…மற்ற குழந்தைகளுடன் பேசுவதில்லை.. உங்களுடன் பேச வேண்டும். புதன்கிழமை மாலை மூன்று மணிக்கு என்னை பள்ளியில் அவசியம் சந்திக்கவும் ‘

“ வீணா..! என்னாச்சு மேகலாவுக்கு..? நீதானே அவளோடயே இருக்க..? ஏன் எங்கிட்ட ஒண்ணுமே சொல்லல?

“நானே சொல்லணும்னு தான் இருந்தேன்..நீங்க எப்பவும் ஃபோன்ல பிஸியா இருந்தீங்களா…!”

“எப்பவுமே பழி எம்மேல தானே..

மேகலா…! இங்க வாடா செல்லம்…என்னடா உனக்கு..?

மிஸ் கிட்ட எதாவது சொன்னியா..? மிஸ் திட்றாங்களா..?”

“இல்லமா. நான் ஒண்ணுமே சொல்லல…”

அம்மாவின் கண்டிப்பான குரலில் மேகலா மிரண்டு போய் நின்றாள்…!

புதன்கிழமை எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கே.! நிச்சியமா என்னால ஸ்கூலுக்கு வரமுடியாது!

***

புதன்கிழமை எனக்கு ஆஃபீஸ்ல இருந்தே ஆகணும்..நீதான் மிஸ்.நிருபமாவப் போயி பாக்கணும்.!“

“மோகனா ! நான் நாளைக்கே டில்லி போகணும்.வர ஒருவாரம் ஆகும்..! நோ சான்ஸ்…! “

“நீ என்னிக்கு பொறுப்பான அப்பாவா நடந்துக்கிட்டு இருக்க.? இதுவரைக்கும் ஒருநாளாவது ஸ்கூல எட்டிப்பாத்திருப்பியா..?

“நீ எத்தன தடவ அவ டீச்சரப் பாத்திருப்ப.? எனக்கு அட்வைஸ் பண்ற தகுதி உனக்கு இல்ல.!”

மேகலா அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தாள்.வீணாவைப் போய் கட்டிக் கொண்டாள்.

***

நிருபமாவுக்கு மேகலாவைப் பார்க்க பார்க்க பெறாத வயிறு பற்றி எரிந்தது..

மூன்று முறை ரிமைண்டர் அனுப்பியும் அவளுடைய பெற்றோர்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை..

“மேகலா…எங்கிட்ட சொல்லும்மா..? உனக்கு வீட்ல ஏதாச்சும் பிராப்ளமா…?
பயப்படாமா சொல்லும்மா…?”

“நோ மிஸ்..! நத்திங்..! வீட்ல நடக்கிறது எதுவும் ஸ்கூல்ல சொல்லக்கூடாதுன்னு அம்மா கண்டிப்பா சொல்லியிருக்காங்க..! சொன்னா திட்டுவாங்க..!”

ஒரு மார்க் குறைந்தாலே ஓடி வரும் பெற்றோர்களைத்தான் பார்த்திருக்கிறாள் நிருபமா..

இந்த குழந்தைக்கு அவசியம் உதவி தேவை..! அவளது பெற்றோருக்கும் தான்..!

***

“ஹலோ.! கேன் ஐ டாக் டு மிஸ் மோகனா ப்ளீஸ்? “

“யெஸ்..ஸ்பீக்கிங்…!”

“மேடம்.ஐயம் நிருபமா…! உங்க டாட்டர் மேகலாவோட கிளாஸ் டீச்சர்…! சாரி டு ட்ரபிள் யூ அட் திஸ் டைம்..

கேன் யூ ஸ்பேர் டென் மினிட்ஸ் ஆஃப் யுவர் ப்ரெஷியஸ் டைம்..!”

மோகனாவுக்கு அவள் ஏதோ தன்னை குத்திக் காட்டுவதாய் தோன்றியிருக்க வேண்டும்..

“ம்ம்ம்.. சொல்லுங்க மிஸ் நிருபமா..”

என்றாள் கண்டிப்பு கலந்த குரலுடன்…

பத்து நிமிடம் பத்து யுகமாய் தோன்றியது நிருபமாவுக்கு..!

மோகனா அவளை பேசவே விடவில்லை..

“மிஸ் நிருபமா.உங்க அக்கறைக்கு நன்றி.. அவளுக்கு கவுன்சலிங் தானே தரணும்..?

நாங்க ஏற்பாடு செஞ்சுக்கிறோம்.இனிமே அவ விஷயத்தில தலையிட வேண்டாம்.தாங்யூ.! “

ஃபோன் கட்டானது..!

ஆல்வேஸ் மோகனா ஹாஸ் டு ஹாவ் தி லாஸ்ட் வேர்ட்…!

***

மோகனா ஆல்வேய்ஸ் ஹஸ் டு ஹாவ் தி லாஸ்ட் வேர்ட்…!

இன்றும் அப்படித்தான்…!

“சூரஜ்.! எ ஹேப்பி நியூஸ்.! ஆனால் நிச்சயமா உனக்கில்லை..!

என்ன ஒரு வருஷம் பயிற்சிக்கு ஜெர்மனிக்கு அனுப்பப் போறாங்க..!”

“என்ன ? ஒரு வருஷமா..? இங்க மேகலா..?”

“நீ உடனே இதத்தான் கேப்பன்னு தெரியும்..? நான் எதுக்காக போறேன்னு தெரிஞ்சுக்க ஆர்வமோ, அக்கறையோ உனக்கு இருக்கா…?”

“அதெல்லாம்விட முக்கியம் எனக்கு மேகலாதான்…!”

“ஏன்…? நீ இல்லையா ? நீ பாத்துக்கக் கூடாதா?எத்தனையோ சிங்கிள் பேரன்ட் இந்த உலகத்தில இல்லியா…?எங்கியுமே நடக்காத மாதிரி என்ன அதிசயமா ?”

“நானும் அடிக்கடி டூர் போவேன்னு உனக்கு தெரியாது…?”

“அஃப்கோர்ஸ் ! அந்த அளவுக்கு நான் முட்டாளில்ல…!மேகலா உங்க அப்பா, அம்மாகிட்ட இருக்கட்டும்…”

“அவுங்களுக்கு வயசாச்சே! குழந்தைய பாத்துக்க…!”

“நானும் அத யோசிக்க மாட்டேனா..? வீணாவும் அவுங்களோட இருப்பா…!”

“அவ ஸ்கூல்…? ரொம்ப தூரம் ஆச்சே…!”

“நான் எல்லாம் ப்ளான் பண்ணிட்டேன்.
மேகலாவ வேற பள்ளிக்கூடத்தில சேர்க்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.!

இந்த ஸ்கூல் சரியில்ல..வேண்டாத விஷயத்தில எல்லாம் மூக்க நுழைக்கிறாங்க…!”

“மோகனா..! ஒரே நேரத்தில குழந்தைக்கு இத்தனை மாற்றம்? அவ ஏங்கிடுவா…?
நீ அவசியம் போய்த்தான் தீரணமா..?”

“சூரஜ்! இது நான் எடுத்த முடிவு இல்ல.. என் மேலதிகாரி எடுத்த முடிவு…!

எனக்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க..!
திரும்பி வரும்போது நான் எங்க புதுக்கிளைக்கு CEO…!

என்னோட நீண்ட கால கனவு..!
என் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை…!

நான் தீர்மானம் பண்ணிட்டேன்.. நோ கோயிங் பேக்…!”

***

மோகனா இல்லாத சூரஜ் வேறுமாதிரி இருந்தான்.அடிக்கடி மேகலாவை வெளியே கூட்டிக் கொண்டு போனான்.

தாத்தா பாட்டியின் அரவணைப்பில் மேகலா நிறையவே சிரித்தாள்.பேசினாள்.!

கொஞ்சம் கொஞ்சமாக சூரஜ் வருவது குறைந்தது.

ஒருவாரம் ஊரிலிருந்தும் வந்து எட்டியும் பார்க்கவில்லை..

***

“வீணா அக்கா.! அம்மாவ கூப்பிட்டு பேசலாமா?”

“ஓ! இரு! கால் பண்ணித் தரேன்..”

“ஹலோ அம்மா…! “

“ஹாய்..மேகலா குட்டி…மம்மி இஸ் மிஸ்ஸிங் யூ “

“மம்மி..! நீங்க எப்போ வருவீங்க..! நேத்து ஸ்கூல்ல என்ன நடந்தது தெரியுமா…?”

“மேகலா டியர்…! அம்மா ஒரு மீட்டிங்ல இருக்கேண்டா ! முடிஞ்சதும் கூப்பிடுறேன் “

“ப்ராமிஸ்?”

“ப்ராமிஸ்..!”

மோகனா கூப்பிடும்போது குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தாள்…!

இந்த ஒரு வருடத்தில் அம்மாவும் அப்பாவும் அவளை விட்டு வெகுதூரம் போய்விட்டிருந்தார்கள்.

***

இந்த ஒரு வருடத்தில் அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் விட்டு வெகுதூரம் போயிருந்தார்கள்…
உடலால் மட்டுமல்ல.. மனதாலும்…!

***

“மோகனா…! நான் சொல்லப்போற விஷயம் உனக்கு அதிர்ச்சியா இருக்கும்னு எனக்கு தோணல.நீ எதிர்பார்த்துகூட இருக்கலாம்.

நாம வாழ்ந்திட்டிருக்கிற ஒரு போலி வாழ்க்கையை என்னால மேலும் தொடர முடியாது..

நான் வேற ஒரு பெண்ணோட வாழத் தீர்மானம் பண்ணிட்டேன்.. ம்யூசுவல் டிவர்ஸுக்கு நீ சம்மதிச்சா சீக்கிரம் பிரச்சனையில்லாம நமக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழலாம்…!

மேகலா யாரோட இருந்தாலும் எனக்கு சம்மதம் !
அவளே தீர்மானிக்கட்டும்…!”

***

“மேகலா..! உனக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியுதாம்மா…?”

ஜட்ஜ் பூங்கோதை மேகலாவைப் பார்த்து கனிவான குரலில் கேட்டாள்…

“தெரியும் ஆன்ட்டி..! அப்பாவும் அம்மாவும் தனியா இருக்கப்போறாங்க…!”

“ம்ம்ம்.. குட் கேர்ள்..நீ அம்மாவோட தான் இருக்கணும்னு கோர்ட் விருப்பப் படுது..பெரியவளானதும் உன் விருப்பம்..!

“இல்ல ஆன்ட்டி…! அப்பாவும் அம்மாவும் அவுங்க விரும்பின மாதிரி தனித்தனியா இருக்கும்போது நானும் என் விருப்பத்த சொல்லலாமா…?”

எட்டு வயது சிறுமியின் துணிச்சல் பூங்கொடியை திகைப்பிலாழ்த்தியது…

“சொல்லும்மா….!”

“அவுங்க சேந்து இருந்தாமட்டும்தான் நானும் அவுங்க கிட்ட இருப்பேன்..!
நான் இப்போ தாத்தா, பாட்டி கூட, வீணா அக்கா கூடத்தான் இருப்பேன்…

அவுங்களுக்கு நான் வேண்டாம் ஆன்ட்டி… எனக்கும் அவுங்க வேண்டாம்….”

குழந்தை அங்கேயே கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டாள்.

***

இரவு பன்னிரண்டு மணிக்கு யார் காலிங் பெல்லை அழுத்துவது..? அதுவும் விடாமல் ?

மோகனாவுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது..

பீப்ஹோல் வழியாகப் பார்த்த போது ஒரு இளம் பெண்ணின் முகம்..மிக, மிக பரிச்சியமான முகம்..!

ஆனாலும் யாரென்று சட்டென்று பிடிபடவில்லை…

“யாரு…?’

“கதவத் திறங்க…! பயமே வேண்டாம்..!”

ஒரு வினாடி ஒன்றுமே புரியவில்லை…

‘ஏய்..நீ…நீ…மேகலா…?”

“யெஸ்…உன்னோட மேகலா..!”

“அம்மா…!”

இறுக்கி கட்டிக் கொண்டாள்..

“மம்மி..!”

பின்னாலிருந்து ஒரு குயில் கூவியது..

“யாமினி..! இதுதான் உன் பாட்டி..ஹலோ சொல்லு…!

அம்மா ! இரு ! டாக்ஸியை அனுப்பிட்டு வரேன்..”

இரவு பன்னிரண்டு மணிக்கு இதென்ன..? கனவா..? இது நிஜமா..? இது மேகலாவா ? தனக்குத்தான் ஏதாவது சித்தப்பிரமையா…?”

“அம்மா…! ரிலாக்ஸ்..! உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் சொல்லல..

சாரி..! பயந்து போயிருக்க ! முகமெல்லாம் வேர்த்து…! உக்காரு…தண்ணி எடுத்துட்டு வரேன்…!”

யாமினி..வா! வந்து பாட்டி பக்கத்தில உக்காரு…!”

****

யாமினி…! வாடா செல்லம் ! வா ! இந்த பாட்டி கிட்ட வந்து உக்காரு !”

“அம்மா. ! பதினஞ்சு வருஷமாச்சு உன்னப்பாத்து…! உம்மேல எனக்கு நிறையவே கோபம் இருந்தது..

ஆனால் உன்னை புரிஞ்சுக்க எனக்கும் நிறைய நேரமும், அனுபவமும் வேண்டியிருந்தது…!

அம்மா…! நீயும் அப்பாவும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் என்மூலமா பழி தீத்துகிட்டிருக்கீங்கன்னு போகப் போக புரிஞ்சுகிட்டேன்…

என்னை நீங்க வேணும்னே ஒதுக்கல..!

உங்க இரண்டு பேரின் சுயநலமும், ஈகோவுந்தான் என்னைப் பத்தி யோசிக்க விடாம தடுத்திருக்கு !

உன்னோட முன்னேற்றத்துக்கு தடையா எது வந்தாலும் உன்னால ஏத்துக்க முடியல..

ஆனா..! அம்மா ! என்னப்பத்தி நீங்க இரண்டு பேரும் ஒருநாளாவது உக்காந்து பேசியிருப்பீங்களா…?

எனக்கு திருமணத்துமேல நம்பிக்கை போனதுக்கு இது ஒரு முக்கிய காரணம்னு நான் நிச்சயமாக நம்பறேன்.!

ஆனா எனக்கு, எனக்கே எனக்குன்னு ஒரு குழந்தை…!

யாரோட தலையீடும் இல்லாம, எனக்கு பிடிச்ச மாதிரி, நான் இழந்ததெல்லாம் திருப்பி அடைய, எனக்கு சரின்னு பட்ட ஒரே வழி இந்த யாமினி குட்டி தான்…!

இவளுக்கு எல்லாமே தெரியும்…!

“மேகலா…! யூ மீன்..?”

“யெஸ்.ஷீ இஸ் அடாப்டட்…!

நாங்க அடிக்கடி வந்து உங்கள பாப்போம்…

இவளுக்கும் ஒரு பாட்டி வேணும்..பாட்டியா மட்டும்தான்…!

பாட்டி ஒரு நாளும் அம்மா இடத்தை நிரப்ப முடியாது…!

“ம்ம்மி…! தாத்தா…?”

“யெஸ் டியர்..! அடுத்தவாரம் தாத்தாவ போய்ப் பார்க்கப் போறோமே..!”

முதல்முறையாக எல்லோர் பக்கத்து நியாயத்தையும் தெளிவாகப் புரிய வைத்த தன்மகள் மேகலா, மோகனாவின் கண்ணுக்குத் தாயாகவே தெரிந்தாள்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *