கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 8,694 
 

மா மரம்பேச்சியூரின் அடையாளமே அந்த மரம்தான். மாமரம். மிகப்பெரிய மரம். ராசாக்கள் காலத்தில் முத்தாயி கிழவியின் முன்னோர்கள் வைத்த மரம். அப்படியொரு மாமரத்தை வேறெங்கும் பார்க்கவே முடியாது.

நான்குபேர் கையைக் கோர்த்துக்கொண்டு அணைத்தால் மட்டுமே அடங்கக்கூடிய அளவிற்கு பருமனான அடிப்பகுதி. ஆலமரம் போல அடர்ந்து படர்ந்த கிளைகள். கொத்துக் கொத்தாக பச்சைப்பசேலென்ற இலைகள். ஒருபக்க கிளைகள் பூத்திருக்கும். இன்னொரு பக்க கிளைகளில் முற்றிய காய்கள் குலுங்கும். வேறொரு பக்கம் பிஞ்சுகள் சிதறும்.

கிளைக்குக் கிளை சுவையும் வேறுபாடு. ஒருவேளை நட்ட காலத்தில் ஒரே குழிக்குள் ஒன்றாய்ச் சேர்த்து இரண்டு மூன்று வகையான ‘மா’ங் கன்றுகளை ஊன்றியிருப்பார்களோ என்னவோ.

“போஸ்டாபீசுக்கு எப்படி போவணும்..?”

“மாமரத்து வூட்டு வழியா போய் இடப்பக்கம் ஒரு சந்து வரும். அதுல நடந்தீங்கன்னா பஞ்சாயத்து போர்டு ஆபீசு… போஸ்டாபீசு… எல்லாமே இருக்கும்!”

“எலிமென்டரி ஸ்கூலு எங்க இருக்கு..?”

“மாமரத்து வூட்டுக்கு பின்னாடி தெருவுல!’’ஊருக்குப் புதிதாக வருகிறவர்கள் யாராக இருந்தாலும் எந்த இடத்திற்கு வழி கேட்டாலும் மாமரத்து வீட்டை மையப்படுத்தியதாகவே பதில் கிடைக்கும். அந்த மாமரம் எத்தனை வருடத்து மரம்… எத்தனை வயசு மரம்… என யாராலும் கணிக்கவே முடியாது.

முத்தாயி கிழவிக்கு சொந்தமான அந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருக்கிற கயிற்றுக் கட்டிலில்தான் எப்போதும் அவள் படுத்திருப்பாள். எழுபத்தி ஐந்து வயதைக் கடந்தவள். உடம்பு முழுவதும் சுருக்கம் விழுந்து நரைத்த கேசத்தை அள்ளிமுடிந்து பாம்படம் அணிந்த காதுகளுடன் கம்பீரமாகத் தெரிவாள். குரலில் குறைவோ திணறலோ இரு்க்காது.

கேழ்வரகுக் கூழும், கம்புக் களியும், கோதுமை ரொட்டியும், பனங்கிழங்கும் பிட்டும் தின்று வளர்ந்த உடம்பு. இத்தனை வயதிலும் தன் வேலையைத் தானே செய்துகொள்வாள்.தினமும் குளித்து துணியை நன்றாகத் துவைத்து, உடுத்தியிருக்கும் சேலையின் கிழிசல் தெரியாதபடி கட்டிக்கொண்டு மாமரத்தையேதான் சுற்றிவருவாள். அவளைத் தாண்டி மாமரத்தை யாரும் நெருங்க முடியாது. ஒரு சுள்ளிக்குச்சியைக் கூட பொறுக்க முடியாது.

விழாக்காலத்தில் தோரணம் கட்டுவதற்காக மாவிலைகளை ஒடிப்பதற்காக யாரும் வந்தால் ஓட ஓட விரட்டியடிப்பாள். கிளைகளில் குடியிருக்கும் பறவையினங்கள் கூட முத்தாயிகிழவி ‘ச்சூ’ என அதட்டினால் அத்்தனை இரைச்சலையும் நிறுத்திவிடும். முத்தாயி கிழவிக்கு பளீர் கண் பார்வை. அவளுடைய கல் வீச்சுக்குப் பயந்து அணில்கள், ஓணான் இதெல்லாம் மாமரத்துப் பக்கம் வரவே வராது.. கிழவிக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோருமே உண்டு. மாமரத்தையொட்டி பெரிய ஓட்டு வீடு. முற்றம் வைத்த சுற்றுக்கட்டு வீடு.

முத்தாயி கிழவிக்கு கொஞ்சம் விளைநிலங்கள் இருந்தன. மகனும், மருமகளும் நல்ல உழைப்பாளிகள். வயல் காட்டிலேயேதான் கிடப்பார்கள். பேரக்குழந்தைகள் பள்ளிக்குப் போய்விடுவார்கள்.கிழவிக்கு மாமரம்தான் துணை. மூன்று வேளை சாப்பாட்டையும் மாமரத்திற்குக் கீழே அமர்ந்துதான் சாப்பிடுவாள். இரவில் கூட வீட்டுக்குள் போகமாட்டாள். கயிற்றுக் கட்டிலிலேயே படுத்துவிடுவாள்.

கொட்டும் மழைக்காலத்தில் கூட சொட்டுநீரைக் கூட கீழே விழாமல் அந்த மரம் தாங்கிக் கொள்ளும். கொட்டுகிற மாம்பிஞ்சுகளை ஒன்றுகூட வீணாக்காமல் பொறுக்கிச் சேகரித்து மாவடு ஊறுகாய் போட்டு கூடை கூடையாக குருக்கள் ஐயா வீட்டிற்கு கொடுத்தனுப்புவாள். மொத்த வியாபாரியிடம்தான் மாங்காய்களை விற்பாள். கிடைக்கும் பணத்தை அப்படியே காலேஜில் படிக்கிற பேரக் குழந்தைகளின் படிப்புச் செலவிற்காகக் கொடுத்து விடுவாள்.

வருடம் முழுக்க வருமானம் தருகிற மரம் அது. முத்தாயி கிழவிக்கு சாமி மாதிரி.ஒரு தடவை மரவியாபாரி ஒருவன் தெரியாத்தனமாக வந்து முத்தாயி கிழவியிடம் மாட்டிக் கொண்டான்.‘‘மாம்பலகை தேவைப் படுது ஆத்தா. முத்தின மரமா இருந்தா தேவலாம்னு தோணுச்சு. அங்க இங்க விசாரிச்சேன். பேச்சியூருல ஒரு மாமரம் இருக்கறதா சொன்னாங்க.

இதானா அது..? எப்படியும் பத்து பன்னண்டு ஜோடி பலகைகளாச்சும் தேறிடும்போல! நல்ல வாகான மரம்தான்! எவ்ளோ வெல சொல்றே ஆத்தா..?”

இடுப்பில் கட்டியிருந்த பச்சை பெல்ட்டுக்குள் இருந்து ரூபாய்த் தாளை வெளியே எடுத்தான்.

“ஏலேய்..! எந்த எடுபட்ட பயல்டா ஒன்னைய அனுப்பினான்…? நான் மரத்தை விக்கப் போறேன்னு எவன்டா சொன்னான்..?”

உக்கிரமாய்க் கத்தினாள்.

“ஆத்தா… என்னத்துக்கு கத்தறே? வேலைக்கு ஆகற மரம்னு இருந்தா நாலு பேரு வெலைக்கு கேக்கத்தான் செய்வாங்க..! பெரிசா ஒனக்குத்தான் வாய் இருக்குன்னு பேசாதே..! ”

மரவியாபாரி தெனாவெட்டாய் பதில் பேசினான். விலைக்கு வாங்காமல் நகரமாட்டான் போலத் தோன்றியது.

“இந்த மரம்தான் என் உசுரு. என் சாமி. என் அப்பன்… பாட்டன்… முப்பாட்டன் சுவாசிச்ச காத்து! வியாக்கியானப் பேச்செல்லாம் என்கிட்ட வேணாம். அவன் சொன்னான் இவன் சொன்னான்னு இன்னொருவாட்டி வெலை பேசிக்கிட்டு இந்தப்பக்கம் வந்தேன்னு வெய்யி… தொடைப்பக்கட்ட பிஞ்சிபோயிடும்..!’’மரவியாபாரி ஆடிப்போனான். கூட்டம் வேறு சேர்ந்துவிட்டது. அவமானமாக இருந்தது. ஓசைப்படாமல் ஓடிப் போனான்.

அந்த மாமரம்தான் இப்போது வீழ்ந்து கிடந்தது. வேரோடு பெயர்ந்து அகோரமாய் சாய்ந்து கிடந்தது. அத்தனை கிளைகளும் முறிந்து, அத்தனை இலைகளும் உதிர்ந்து, அத்தனை பிஞ்சுகளும் கொட்டி, அத்தனை காய்களும் சிதறி…

ஊரில் இருக்கிற ஆடு மாடுகள் கும்பல் கும்பலாய் மாமரத்தின் இலைகளை பசிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தன. பொடியன்கள் கூச்சலிட்டபடியே மாங்காய்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.குத்துக்கல்லாட்டம் கயிற்றுக்கட்டிலில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் முத்தாயிகிழவி. கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென வழிந்தோடியது.

விடிய விடிய வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்திற்கு ஒட்டுமொத்த கிராமமே இரையாகியிருந்தது! பேச்சியூர் கிராமத்தில் ஒரு மரத்தைக் கூட புயல் விட்டு வைக்கவில்லை. தென்னை மரங்கள் அத்தனையும் பாதியோடு பாதியோடு முறிந்து போயிருந்தன. சுவர்கள் இடிந்து குடிசைகளில் கூரைகள் பிய்த்தெறியப்பட்டு தரையோடு தரையாய் நொறுங்கிக் கிடந்தன. ஓடுகள் வேயப்பட்ட வீடுகள்தான் ரொம்பவே பரிதாபமாய்க் காட்சியளித்தன. ஒரு ஓடு கூட எந்த வீட்டிலும் மிஞ்சவில்லை.

கிராமத்தின் அழகும், செழுமையும், பசுமையும், வளமும் முழுமையாக சூறையாடப்பட்டிருந்தன. மின்சாரம், குடிதண்ணீர் அனைத்தும் தடைப்பட்டுப் போயிருந்தன. முத்தாயி கிழவியின் மகன் வீடு கல் சுவர்கள் என்பதால் சுவர்களுக்கு பாதிப்பில்லை. ஆனால், ஓடுகள் அத்தனையும் நொறுங்கிப் போயிருந்தன. மகனும் மருமகளும் இடிந்து போயிருந்தார்கள்.

வேரோடு பிடுங்கப்பட்டு மல்லாந்து கிடக்கிற மாமரத்துப் பக்கமே மகன் வரவில்லை. குடியிருக்கிற வீட்டை எப்படி சரிபண்ணுவது என்கிற பதைபதைப்போடு வீட்டையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான்.உயிர் இருக்கும்வரைதான் உடம்பிற்கு மதிப்பு… நிற்கும் வரைதான் எந்த மரத்திற்குமே மதிப்பு.விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்த மரவியாபாரி கூட்டத்தை விலக்கியபடி முண்டியடித்து முன்னால் வந்தான். சில மாதங்களுக்கு முன்பு முத்தாயி கிழவியால் துரத்தியடிக்கப்பட்ட அதே மரவியாபாரிதான்.

“ஆத்தா… கேட்டப்பவே குடுத்திருந்தீன்னா ஆயிரம் இரண்டாயிரம் சேர்த்து வாங்கியிருக்கலாம். இப்ப பாரு… வேரோட பிடுங்கி கிளையெல்லாம முறிஞ்சு ஒண்ணுக்கும் லாயக்கில்லாம் கெடக்குதே…’’ உச்சுக் கொட்டினான்.முத்தாயிகிழவி அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“ஏழாயிரம் தாரேன். வெச்சுக்க ஆத்தா. பேரப்புள்ளைங்க படிப்புக்காச்சும் ஆவும். ரெண்டுநாள் கழிச்சு மிஷினோட வந்து மரத்தை துண்டு போட்டுக் கொண்டுபோயிடுறேன்…’’ ரூபாய்த்தாள்களை முத்தாயி கிழவியின் கையில் திணித்தான்.

“ச்சீ… எட்டிப்போ…” பணத்தை மரவியாபாரியின் முகத்திலேயே வீசினாள். ‘‘மரத்தை விக்கிறேன்னு யாருடா சொன்னா..?”

“இப்பகூட விக்கமாட்டியா நீ..? மாங்காயை ஊறுகா போட்டுடலாம். மரத்தை என்ன பண்ணப் போறே? விழுந்த எடத்துலயே போட்டு வெச்சா உழுத்துதான் போவும்…”

“விழுந்த மரம்தான். ஆனா, சாகாத மரம்டா! எம் மரத்துக்கு இன்னும் உசுரு இருக்கு. அத எப்படி காபந்து பண்றதுன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கு மருவாதையா ஓடிப்போயிடு…” மரவியாபாரி ஏமாற்றத்துடன் நழுவினான்.

“எலேய்… தங்கராசு… இங்க வாடா..!” மகனை உரத்த குரலில் அழைத்த முத்தாயிகிழவி, காதில் அணிந்திருந்த பாம்படங்கள் இரண்டையும் கழற்றினாள். சுத்தமான தங்கத்தில் உருவாக்கப்பட்ட பாம்படங்கள். ‘‘இத கொண்டு போயி வித்து ரூபா வாங்கி வா. லட்சத்துக்கு மேலயே கெடைக்கும். நொறுங்கிக் கெடக்கற வூட்டை சரிபண்ணு. புது ஓடாவே வாங்கி மாட்டிடு. அப்படியே மண்ணைத் தோண்டுற பொக்லைன் வண்டியையும் கூட்டிவா…”

“பொக்லைன் வண்டியை எதுக்கும்மா வரச் சொல்ற..?”

“இந்த மரத்தை நிமித்தி திரும்பவும் மண்ணுக்குள்ள பொதைக்கத்தான்..!”

“ஏம்மா… ஒனக்கென்ன பைத்தியமா..?”

தங்கராசு முறைப்பாய் பார்த்தான்.

“நான் தெளிவாத்தான் இருக்கேன். ஆயிரம் பேரு சிரிச்சாலும் அதப்பத்தி கவலையில்லை…”

“நிமித்தி வெச்சாலும் இந்த மரம் பொழைக்காதும்மா…”

“பொழைச்சுக்கும்னு நம்பறேன்டா… சின்னச் சின்ன மாங்குச்சியை வெட்டி ஒட்டி ஊணி வெய்க்கறாங்க..! பொழைச்சுக்குதே..! உசுரு வந்துடுதே..! துளிர்த்துக்குதே! இவ்ளோ பெரிய மரம்… அதுவும் வேரோடதானே பேந்துகெடக்கு.? உசுரு இருக்கற மரம். குற்றுயிரா கவுந்து கெடக்கு..! நம்பிக்கையோட நிமித்தி வெப்போம்… நிச்சயம் துளிர்த்துக்கும்..! நாலஞ்சு தலைமுறையைப் பார்த்த மரம். எத்தனை பேருக்கு நிழல் குடுத்திருக்கும்… எத்தனை காக்கை குருவிங்களுக்கு எடம் கொடுத்திருக்கும்..” உணர்வுப் பெருக்கோடு தழுதழுப்பாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

தங்கராசுக்கு தாய் மீது பாசம் அதிகம். எங்கே அழுதுவிடுவாளோ என அச்சப்பட்டான்.

“செஞ்சிடுறேம்மா…”

பேச்சியூரே முத்தாயிகிழவி வீட்டுப்பக்கம் கூடி நின்றது.முதலில் யோசித்து தயங்கிய பொக்லைன் இயந்திர டிரைவர், பிறகு ‘‘முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றேன். மணிக்கு எண்ணூறு ரூவா குடுத்துடணும். மரம் பொழைக்கலைன்னா நான் பொறுப்பு கெடையாது…” என அரைமனதோடுதான் சம்மதித்திருந்தான்.

பொக்லைன் இயந்திரம் இயங்கத் தொடங்கியது. டிரைவருக்கு உதவி செய்ய நான்கு ஆட்களையும் கூட்டி வந்திருந்தான் தங்கராசு. மாமரத்தைச் சுற்றிலும் ஆழமாய் குழி தோண்டப்பட்டது. விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளில் முரட்டு தாம்புக் கயிறுகள் கட்டப்பட்டன. அடியோடு பெயர்ந்து கிடந்த மாமரத்தின் வேர்கள் எதுவும் சிதையாமல் வெட்டுப்படாமல், ஆழமாய் வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இறக்கி நிமிர்த்தி வைப்பதற்கான முயற்சி மாலைவரை நீடித்தது.

மாமரத்தை நிமிர்த்துகிறபோது இன்னும் சில கிளைகள் முறிந்தன.பதைபதைப்பாய் அமர்ந்திருந்தாள் முத்தாயிகிழவி.

மாமரத்தை நிமிர்த்தி வைக்கும் வரை பச்சைத்தண்ணீர் கூட குடிக்கவில்லை.‘‘கெழவிக்கு தேவையா இதெல்லாம்..? இத்தனை வயசுல பிடிவாதத்தைப் பாரேன். மவனை கண்ணுல துரும்பை விட்டு ஆட்டுதே… மரத்தை வித்திருந்தாலாவது நாலு வீட்டுக்கு கதவா ஆயிருக்கும். இப்ப ஒண்ணுக்கும் உதவாம நின்ன எடத்துலயே உழுத்துக் கொட்டப்போகுது…’’ ஆள் ஆளுக்குப் பேசினார்கள்எதையுமே முத்தாயி கிழவி காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

ஒருவழியாய் மாமரம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது. பக்கத்திலேயே முத்தாயி கிழவிக்கு சொந்தமாய் ஒரு மண்மேடு.

அங்கிருந்து மண்ணை வெட்டி வந்து மாமரத்தைச் சுற்றிலும் மண் அணைக்கப்பட்டது.”போதுமாம்மா..?” தங்கராசு தாயிடம் கேட்டான்.”போதும்டா ராசா…” முத்தாயிகிழவி நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.நாட்கள் நகர்ந்தன. பேச்சியூர் கிராமம் கொஞ்சம் கொஞ்சம் தன் இயல்புக்கு வந்தது. முத்தாயி கிழவியின் பாம்படங்களை விற்ற பணத்தில் தங்கராசுவின் சுற்றுக்கட்டு ஓட்டுவீடு புது ஓடுகள் வேயப்பட்டு பொலிவு பெற்றிருந்தது. மாமரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பரிதாபமாக… மொட்டை மரமாகக் காட்சியளித்தது.

நிழலுக்கும் வழியில்லை. சின்ன குருவி கூட அந்தப்பக்கம் வரவில்லை. முத்தாயி கிழவி கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தபடியே எந்த நேரமும் மாமரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரியாய் சாப்பிடுவதும் கிடையாது. ஒழுங்காய் உறங்குவதும் கிடையாது. மழை விடுவதும் தூறுவதுமாகவே இருந்தது.இருபது நாட்கள் கழிந்திருக்கும். மாமரத்தின் கிளைகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன துளிர் மொட்டுகள் அரும்ப ஆரம்பித்தன. அடுத்த சில நாட்களில் கிளைகள் முழுக்க துளிர்கள்! முத்தாயி கிழவி கண்களில் நீர்மல்க வானத்தைப் பார்த்து கைகளைக் குவித்தாள். பூமி மண்ணைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

– மார்ச் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *