அவசரமாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 4,540 
 

ஏண்டா “வருடகடைசி” கணக்கு வழக்கை முடிச்சே ஆகணும்னு நம்ம கம்பெனியில சொல்லியிருக்காங்க, இப்ப போய் கோயமுத்தூர் போயே ஆகணும்னு ஒத்தைக்காலில நிக்கறே?

கேள்வி கேட்ட நண்பனை புன்னகையுடன் பார்த்த ஷ்யாம் “நோ” அதை சொல்ல முடியாது, இன்னைக்கு கம்பெனி வேலையை முடிச்சுட்டு நைட்டு கிளம்பி நாளானக்கி காலைல வந்துடுவேன். வீட்டுல அவசரமா வர சொல்லியிருக்காங்க, போயிட்டு வந்து சொல்றேன்.என்னடா வழியறைதை பார்த்தா பொண்ணு பாக்கற விஷயமா?

அப்படித்தான் வச்சுக்கயேன், அடிரா சக்கை, அப்ப போய்ட்டு வந்து ட்ரீட் உண்டு.

அதை அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல எனக்கு “சேரனுக்கு” டிக்கட் கிடைக்குமா?

மதியானம் இரண்டு மணிக்கு கேட்டா எப்படி டிக்கட் கிடைக்கும், ஒண்ணு பண்ணேன், ட்ராவல்ஸ்ல புக் பண்ணி போயேன். நீதான் சிக்கனவாதி ஆச்சே? அதுக்கெல்லாம் பணத்தை செலவழிப்பியா?

டேய் என்னை கஞ்சப்பையன்னு சொல்றே. அதுக்கெல்லாம் கவலைப்படமாட்டான் இந்த ஷியாம், ரிசர்வ் டிக்கட் கிடைக்கலியின்னா என்ன? சாதாரண டிக்கட்டுல எப்படியும் போயிடுவேன்.

இன்னைக்கு சரியான கூட்டமா இருக்கும், முயற்சி பண்ணி பாரு. சரி இராத்திரி உன்னை இரெயில்வே ஸ்டேசன்ல இறக்கி விட்டுடறேன் அது போதும்.

அடித்து பிடித்து ஷியாமை அவன் இறக்கி விடும்போதே இரவு மணி பத்தை தாண்டிவிட்டது. வண்டியை விட்டு இறங்கியவன் உன்னைய நம்புனதுக்கு என்று முணங்கினான், என்னையே…

உன் செருப்புல போட்டுக்குவேங்கிறியா?

சாரி நண்பா என்னைய திட்டிகிட்டு இருக்கற நேரத்துல ஓடு போய் டிக்கட் வாங்கி கோயமுத்தூர் போறதை பாரு. டிக்கட் வாங்கும் இடத்திலும் நீண்ட கியூ..நின்று கொண்டிருந்தது. சே..இங்கேயும் கூட்டமா? சலித்துக் கொண்டே வரிசையில் இணைந்தான். அவனுக்கு முன்னால் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். இளம்பெண்ணா, என்று அனுமானிக்க முடியவில்லை. வரிசை மெல்ல நகர்ந்தது.

கவுண்டரில் கைவிட்டு டிக்கட் கேட்ட பெண் சில்லறைக்காக கைப்பையை துழாவ ஆரம்பித்தாள். அதற்குள் வரிசை பின்னால் இருந்து ச்..ச்.. என்ற சலிப்பு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஷியாம் பதட்டப்பட்டாலும், மேடம் இந்தாங்க என்று சில்லறை கொடுக்க அவள் “தேங்ஸ்” என்று கவுண்டரில் கொடுத்தவள் டிக்கட் வாங்கிக் கொண்டு அவன் டிக்கட் வாங்குவதற்கு வழிவிட்டாள்.

இவனும் டிக்கட் வாங்கிவிட்டு வெளியே வந்த பொழுது அந்த பெண் இந்தாங்க சார் நீங்க கொடுத்த பணம் என்று கொடுக்கவும், மேடம் இதைய போய் திருப்பி கொடுக்கணுமா? சொன்னாலும் வாங்கிக் கொண்டான். இப்பொழுது அந்த பெண்ணை நன்கு கவனித்தான் முகம் அழகாக இருந்தது, மாநிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம். உயரமாய் இருந்தாள், சுடிதாரில் இருந்ததால் உடல் பருமனை அனுமானிக்க முடியவில்லை. அதற்குள் அந்தபெண் அவனை விட்டு விலகி போயிருந்தாள்.

இரயிலில் சரியான கூட்டம், ஏறுவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டி இருந்தது., அடித்து பிடித்து ஏறியவன் குனிந்து ஜன்னலில் பார்க்க அந்த பெண் கவலையுடன் இந்த கூட்டத்தை தாண்டி ஏறமுடியுமா? என்ற கவலையில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை அழைக்கலாமா? என்று யோசித்தவன் இதற்கெல்லாம் பார்த்தால் ஒருவருக்கொருவர் உதவுவது எப்படி? என்று நினைத்தவன், மேடம்..மேடம்…ஜன்னல் வழியாக குரல் கொடுக்க அந்த பெண் சற்று திகைத்து சுற்றுமுற்றும் பார்த்தாள், இங்க, இங்க பாருங்க, என்றூ கூவியவன், வாங்க இப்படி வாங்க என்று அந்த கூட்டத்தினரை சற்றுதள்ளி அந்த பெண்ணை அழைத்தான்.

இப்பொழுது அந்த பெண்ணுக்கு ஒரு துணை கிடைத்துவிட்ட சந்தோசத்தில் மெல்ல முன்னேறினாள். இவன் அவளை எப்படியோ ஏறுவதற்கு வழி செய்தவன், அந்த கூட்டத்தை சமாளித்து அவளை பின்னே நடத்தி கூட்டிவந்தான். எப்படியோ பெண்கள் கொஞ்சம் அதிகம் இருந்த பெட்டியில் உட்கார்ந்திருந்த தடிமனான பெண் அருகில் சென்று கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன் என்றுகேட்டான். முறைத்த அந்த பெண்ணிடம் கெஞ்சும் பாவ்னையில் பார்க்க அவள் சற்று நகர்ந்து இடம் கொடுத்தாள்.

நீங்க உட்காருங்க,

அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு கொஞ்சம் நகர்ந்து எப்படியோ ஒரு சந்துக்குள் தன்னை நுழைத்துக் கொண்டான். இரயில் பதினோரு மணிக்கு மேல் தன் உடலை அசைத்து அசைத்து கிளம்பிவிட்டது.

இரயில் வேகம் எடுக்க எடுக்க அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மெதுவாக இடவசதி ஏற்படுத்திக் கொண்டு அப்படி அப்படியே கீழேயே உட்கார்ந்து கொண்டனர். இவனும் கிடைத்த இடத்தில் அடித்து பிடித்து உட்கார்ந்தவன், சற்று நேரத்தில் தலை ஒருபக்கம் சரிய வாயில் உமிழ்நீர் வடிவது கூட தெரியாமல் தூங்கி போய்விட்டான்.

இடம் பிடித்து உட்கார்ந்திருந்த அந்த பெண்ணோ பக்கத்தில் இருந்த பெண்ணின் தலை இடி தாங்காமல் அவளும் கீழேயே உட்கார்ந்தாள். அந்த இடைஞ்சலில் தூக்கமும் வராமல், சுற்றியுள்ள கூட்டதினரின் நெரிசலில் அவதியுடன் இருந்தவள், தனக்கு இடம் பிடித்து கொடுத்தவன் என்ன செய்கிறான் என்று தலையை அப்படியே எட்டி பார்த்தாள்…..

அங்கே யார் யார் மீது உறங்குகிறார்கள் என்று தெரியாத அளவுக்கு அங்குள்ள அனைவரும் வாயைபிளந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஷியாமும் அந்த கூட்டத்தில் ஐக்கியமாயிருப்பதை பார்த்தவள் வியந்து போனாள். பரவாயில்லையே இந்த ஆள் இந்த கஷ்டத்துலயும் இப்படி தூங்கிட்டு வரானே…

வீட்டிற்கு காலை ஏழுமணிக்கு வந்து படுத்தவனுக்கு பத்துமணிக்குத்தான் விழிப்பு வந்தது. அவ்வளவு நேரம் தூங்கி எழுந்தும், டிரெயினில் உட்கார்ந்து கொண்டே தூங்கி வந்தது அசதியாய் இருந்தது. எழுந்தவன் அம்மாவை சுடச்சுட தண்ணீர் காய்ச்சி வைக்க சொல்லி குளியலறைக்குள் நுழைந்தான்.

டிபன் சாப்பிடும் போதே சொல்லிவிட்டான், அம்மா எனக்கு லீவு கிடையாது, இன்னைக்கு இராத்திரி“சேரனுக்கு” கிளம்பிடுவேன்.

சரிடா, சாயங்காலம் நாலுமணிக்கு கிளம்பிடலாம், அவங்கவீடு சாயிபாபா காலனியில தான். அப்பா மதியமே லீவு போட்டு வந்துடுவாரு, மூணு பேரும் கால்டாக்சி வச்சு போயிடலாம்.

தடல்புடலாய் வரவேற்கப்பட்டு போய் உட்கார்ந்தவர்கள், பெண்ணை கூப்பிடுங்க என்று சொன்னவுடன் வந்து நின்ற பெண்ணை பார்த்தவன் வாயை பிளந்து நின்றுவிட்டான். அந்த பெண்ணும் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

இருவரும் “மலை” மாதிரி நிற்கவும் பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் இருவரிடமும் பீறிட்டது வெடிச் சிரிப்பு. அப்படி சிரித்தார்கள். இருவரின் பெற்றோர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஷியாம் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஏம்மா பொண்ணு பாக்கணும் வா அப்படீன்னு போன்ல சொன்னவங்க ,பொண்ணு சென்னையிலதான் இருக்கறான்னு சொல்லி அட்ரஸ் கொடுத்திருந்தா எனக்கு இவ்வளவு சிரமம் இருந்திருக்குமா? கேட்டான்.

போடா அறிவு கெட்டவனே குடும்பத்தோட போய் பாக்கறதுதாண்டா முறை என்று அவனிடம் செல்லமாய் கடிந்துகொண்டாள் அம்மா.

அந்த பெண் ஏம்ப்பா, எனக்கு லீவு இல்லாம கஷ்டபட்டுகிட்டு இருக்கறப்போ இவ்வளவு அவசரமா மாப்பிள்ளை பாக்கவர்றாங்கன்னு என்னை வரசொன்னதுக்கு மாப்பிள்ளை சென்னையிலதான் இருக்கறாரு, சொல்லி, அங்கேயே, கோயில் குளத்துல பாக்க சொல்லியிருந்தா நான் இப்படி அரக்க பரக்க வந்திருக்க வேண்டியதிருந்திருக்குமா?

ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அது நல்லா இருக்குமா, அவங்க இங்க வந்து பாக்கறதுதான முறை, செல்லமாய் கடிந்து கொண்டாள் அம்மா.

அன்று இரவு “சேரனில்” இருவரும் அருகருகே அமர்ந்துதான் சென்னையை நோக்கி சென்றனர், உரிமையுடன்.

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *