அறுந்துபோகும் பட்டங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 12,826 
 
 

“அப்பா, நூலை இன்னும் வேகமா விடுங்கப்பா, பட்டம் இன்னும் மேலே போகட்டும்”, குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க பையன் ஆர்வத்துடன் பட்டத்தைப் பார்த்தபடி இருக்க அவனது தந்தை பட்டத்தின் நூலை சிறிது சிறிதாக விட்டுக்கொண்டிருந்தார்.

“இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா நூலை விடணும். அப்பதான் பக்கத்துல எதாவது பட்டம் நம் பட்டத்தின் அருகில் வந்தால் அதில் மாட்டி விடாமல் நம்மால் பட்டத்தின் நூலை இழுத்துக் கொள்ளமுடியும்” என்றுக் கூறிவிட்டு பையனிடம் நூலைக் கொடுத்தார் தந்தை.

நூலைக் கையில் வாங்கியதும் அவனிடம் குஷி பிறக்க சரசரவென நூலைவிட ஆரம்பித்தான். “பாருங்கப்பா எவ்ளோ மேலே போகுது” என்று துள்ளலுடன் கேட்டான்.

“இப்படி வேகமா நூலைவிடக்கூடாது. பட்டத்தை நம்மால கட்டுப்படுத்த முடியற மாதிரிதான் நூலைவிடணும். இல்லைன்னா மற்றப் பட்டத்திடம் மாட்டியோ அல்லது மரங்களில் மாட்டியோ அறுந்து உன் பட்டம் உன்னிடம் வராமலேக்கூட போகலாம்”, என்றார் தந்தை.

இந்த உரையாடலில் நான் துணுக்குற்றேன். இந்த ஒரு சின்ன விஷயம் எப்படி எனக்குப் புரியாமற் போனது. கண்களை மூடியவாறு பூங்காவின் இருக்கையில் சாய்ந்தேன். கடந்துபோன நாட்களை என் மனம் திரும்பிப் பார்த்தது…

“என்ன வருண் எப்போ பார்த்தாலும் போனையே பார்த்துக் கொண்டிருக்கிறே, எப்பதான் படிப்பே?” என்ற மனைவியின் குரல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“நான் படிப்பேன்மா”, போனிலிருந்து கண்களை எடுக்காமலேயே பதிலளித்தான் வருண்.

“அரையாண்டுத் தேர்வும் நெருங்கி விட்டது, இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே” என்று தொண தொணத்தாள் என் சகதர்மினி.

யு டியுபில் நுழைந்து நகைச்சுவைக் காட்சிகளில் லயித்திருந்த எனக்கு சுகுணாவின் பேச்சு காதில் ஈயத்தைக் காச்சி ஊத்தினாற்போன்று எரிச்சலை ஏற்படுத்தியது.

“சுகுணா சும்மாயிருக்கமாட்டே, எப்பப்பாரு அவனைக் குடைஞ்சிக்கிட்டே இருக்க. அவன் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா, உயர்நிலைப் பள்ளியில படிக்கிறான் தெரிஞ்சிக்கோ”, என்று நான் இரைந்தேன்.

“ஆமாம்பா எப்பவுமே அம்மாவுக்கு என்னைக் குறை சொல்வதே வேலையாகப் போய்டிச்சி” என்று வருணும் தன் பங்கிற்கு சேர்ந்து கொண்டான்.

“அவனை சுதந்திரமா விடு, அவன் வேலையை அவன் பார்த்துக் கொள்வான், உன் வேலையை நீ பார்” என எரிந்து விழுந்தேன்.

“என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி பாயுறீங்க? அவன் படிப்பு பாழாகிடக் கூடாதேன்னுதான் கண்டிக்கிறேன்” முகம் கடுகடுக்க அங்கிருந்து அகன்றாள் சுகுணா.

“வேலைமுடிந்து ஏன் வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு”

இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே இது தினசரி நிகழ்வுகளாகி விட்டன. அவள் சத்தம் போடுவதும், நான் அடக்குவதும் வாடிக்கையாகி விட்டது.

‘இந்த சுகுணாவிற்கு எதுவுமே தெரியறதில்லை. உலகம் எவ்ளோ வேகமா போய்க்கிட்டிருக்கு. அதுக்கு ஈடுகொடுத்து நாமும் போகணும்கிறது இந்த மரமண்டைக்குத் தோணவே தோணாதா? இவளைப் போலவே குண்டு சட்டியிலே குதிரை ஓட்டணும்னு நினைக்கிறாள். வருண் நல்லாப் படிக்கிற பையன். அதனாலதான நல்ல உயர்நிலைப் பள்ளியிலும் இடம் கிடைத்தது. அப்படியிருக்க அவனை எதற்கு சும்மா நச்சரித்துக் கொண்டேயிருக்கணும்’ என்பது என் எண்ணம்.

“நல்லது கெட்டது புரியாத பிள்ளைகளிடம் கொஞ்சம் கண்டிப்பா இருக்கிறதுதான் நல்லது,” என்று தனிமையில் என்னிடத்தில் சொல்வாள்.

“நீ என்ன பெருசா நல்லது கெட்டதை கண்டுட்ட. எம்பிள்ளை எப்படிப் படிக்கிறான் பாரு. ஓ லெவலைக்கூட ஒழுங்கா முடிக்காத நீ அவனுக்குப் புத்தி சொல்றியா”, என்று கேட்டு அவள் வாயை அடைத்துவிடுவேன்.

“நல்லதை சொல்றதுக்குப் படிச்சிருக்கணும்னு அவசியமில்லை. அனுபவத்திலேயே தெரிஞ்சிக்கலாம். இந்த போனால பிள்ளைங்க படற பாட்டைக் கண்கொண்டு பார்க்க முடியலை. அதனால அவன் விஷயத்துல பொறுப்பா இருக்கப் பாருங்க, இல்லைன்னா நீங்க சும்மாயிருங்க நான் பார்த்துக்கிறேன்”, என்று அமைதியாக சொன்னாள்.

“என்ன நீ பார்த்துக்கிறியா? உனக்கு என்ன தெரியும்? நாலு வார்த்தை தொடர்ந்து இங்லீஷ்லப் பேசத் தெரியுமா? இல்லை ஒரு மெசேஜைத்தான் உடனே அனுப்ப முடியுமா? அ எங்கேயிருக்கு ஆ எங்கேயிருக்குன்னு நீ தேடித் தேடி தட்றதுக்குள்ள எனக்குத் தலைவலியே வருது. அவனைப் பாரு சும்மா பூந்து விளையாடுறான். அவனுக்கு உன்னால் என்ன செய்யமுடியும்? என்று எகத்தாளமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து சிரித்தேன்.

“நான் மக்காவே இருந்துட்டுப் போறேன், அவன் வீணாகிடக் கூடாது அதுதான் எனக்கு வேண்டும்”

“வெட்டியா பேசிக்கிட்டு நிக்காத, மனுஷன நிம்மதியா இருக்கவிடு”

நாட்கள் இறக்கையைக் கட்டிக்கொண்டுப் பறக்க அரையாண்டுத் தேர்வு முடிவுகளும் வந்தன. அனைத்துப் பாடங்களிலுமே சராசரிக்கும் குறைவாகவே மதிப்பெண்களைப் பெற்றிருந்தான் வருண். அதைக் கண்ட சுகுணாவோ பத்ரகாளியாக அவதாரமெடுத்தாள்.

“நான் படிச்சி படிச்சி சொன்னேன் கேட்டாயா? நீ ஒழுங்கா படிச்சிருந்தா நல்ல மார்க்கை வாங்கியிருக்கலாமே”, கொந்தளித்தாள்

“சரி விடு, இப்ப எதுக்கு இந்தக் கத்துக் கத்துறே. இந்தப் பரீட்சையில எடுக்காட்டா அடுத்ததுல எடுத்துட்டுப் போறான்” என்று அலட்சியமாகப் பதிலளித்தேன்.

“நீங்க புரிஞ்சிதான் பேசுறீங்களா? அடுத்ததுல மட்டும் படிக்காமலே இருந்துட்டா மார்க் போட்டுடுவாங்களா என்ன?”

அவளது நியாயமானக் கேள்விவேறு என் தன்மானத்தை சீண்டிவிட்டது.

“அவன் என் மகன். அவனுக்கு எல்லாந் தெரியும். நீ காட்டுக்கத்து கத்தாதே” என்றுவிட்டு “நீ ஒழுங்கா படி வருண்”, என்றுக் கூறிவிட்டு வாட்சப்பில் வந்த காணொளியில் மூழ்கினேன்.

வருண் தன் அறைக்குச் செல்ல, சுகுணா தன் இயலாமையை பாத்திரத்திடம் வெளிப்படுத்தினாள். நான் வழக்கம்போல அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

தொடர்ந்து வந்த நாட்களில் ஏதும் பெரிய மாற்றம் நிகழவில்லை. வருண் கைத்தொலைபேசியிடம் ஒன்றிப்போய் இருப்பதும், சுகுணா கடுகடுப்பதும், நான் வருணுக்கு வக்காலத்து வாங்குவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. வீட்டிற்கு வருவதற்கே எனக்கு வெறுப்பாகயிருந்தது. மனுஷன் நிம்மதியா கொஞ்ச நேரம் போனைக் கூட பார்க்க முடியறதில்லை. இந்த முட்டாள் சுகுணாவிற்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறவே மாட்டுது. அவள் நல்லா படிச்சிருந்தா உலக நடப்புகளை புரிஞ்சிக்கிட்டிருந்திருப்பாளோ எனும் எண்ணமே என்னுள் மேலோங்கி எழும்.

“எனக்கு ரொம்ப கவலையா இருக்குங்க. நீங்களும் அவனை கண்டிக்கிறதில்லை, நான் கேட்டாலும் அவனுக்குப் பரிஞ்சி பேசுறீங்க, உங்க சப்போர்ட் இருக்கிற தைரியத்துல அவன் என்னையும் மதிக்கிறதில்லை”

“தூங்கக் கூட விடமாட்டாயா? எப்பவுமே உனக்கு இதே புராணந்தானா?’ என்று கடுப்படித்துவிட்டு போர்வையை இழுத்து தலைவரை மூடிக்கொண்டேன். அவள் தொல்லையில் இருந்து விடுபட அது ஒண்ணுதான் வழி.

“இந்த வயசுல பிள்ளைங்க நம்ம சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்தாதான் அவங்க எதிர்காலம் நல்லாயிருக்கும். இப்ப இடங்கொடுத்துட்டு அப்புறம் கலங்குறதால புண்ணியமில்லை. கண்கெட்ட பிறகு சூரிய வழிபாட்டால பலனேதும் விளையப் போவதில்லை” என்று புலம்பித் தள்ளிவிட்டுத்தான் விட்டாள்.

நாட்களும் உருண்டோடின. இன்று மதியம் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு போன் வந்தது. வழக்கமா அலுவலக நேரத்துல வீட்டில இருந்து போன் வராது என்பதால் யோசனையுடன் போனை எடுத்தேன். கரகரத்த குரல், சுகுணாவா அது.

“நான் பயந்த மாதிரியே நடந்துடிச்சி…” மேலே பேசமுடியாமல் அழுதாள்.

“என்ன விஷயம்னு சொல்லித்தொலையேன்” குரலை உயர்த்திக் கேட்டுவிட்டு, அலுவலகம் என்பது நினைவுக்கு வர அமைதியானேன்.

“ரிப்போர்ட் புக் கொடுத்திருக்காங்க. நாலு பாடத்துல பெயிலாகியிருக்கான். ஆசிரியரை வந்து பார்க்கச் சொல்லியிருக்காங்க” என்று கரகரத்தக் குரலில் சொல்லிவிட்டு என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் பட்டென்று போனை வைத்துவிட்டாள்.

இதை நான் எதிர்பார்க்கவேயில்லை என் மகன் படிப்பில் இவ்வளவு மோசமாகவா இருந்திருப்பான். வீட்டிற்குப் போகப் பிடிக்கவில்லை. சுகுணாவின் புலம்பலைக் கேட்கும் துணிவு எனக்கில்லை.

வீட்டுக்கருகிலுள்ள பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது நடந்த உரையாடலில் தான் என்னுள் தெளிவு பிறந்தது. பட்டத்தின் நூலைக் கட்டுக்குள் வைத்திருக்கணும்னுதானே என் மனைவி இத்தனை நாளாக சொல்லிவந்தாள். இதை புரிந்துகொள்ளாமல் அறியாமையில் இவ்வளவு நாட்கள் இருந்தது நானல்லவா!

– இக்கதை 19/03/2017 அன்று சிங்கப்பூரில் வெளிவந்த தமிழ்முரசு நாளிதழில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *