அம்மாவுக்குப் படையல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,281 
 
 

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா.

அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ முணுமுணுத்ததை அலட்சியம் செய்தாள்.

`இன்று அம்மாவின் பத்தாவது நினைவுநாள். அதை ஒட்டி நான் படைத்தது!’ என்ற விளக்கத்துடன் பத்து விதமான வண்ண வண்ண உணவுப்பண்டங்கள் வெவ்வேறு அளவைக்கொண்ட பாத்திரங்களில்.  முதல்நாளையப் பதிவு.

அவள் பார்வை அதன்கீழ் போயிற்று. உதடுகள் பெருமைச்சிரிப்பில் விரிந்தன. விதவிதமான விமரிசனங்கள். எழுதியவர்களுடைய குணாதிசயங்களும் அவளுக்குள் எழுந்தன.

பார்த்தாலே நாவில் ஊறுகிறதே! – யாரோ சாப்பாட்டுப் பிரியர்.

உங்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை! எத்தனை மணிநேரம் அடுப்பில் வெந்தீர்கள்? – சமைப்பதே தண்டனை என்று வெறுப்பவர்.

அம்மாவைவிட மேலான வேறு தெய்வமில்லை இவ்வுலகில் – சினிமாவில் காட்டுவதெல்லாம் உண்மை என்று நம்பிவிடும் ஏமாளி.

அடுத்ததைப் பார்த்ததும் சட்டென மனம் அதிர்ந்தது.

அம்மாமேல் எத்தனை அன்பு வைத்திருந்தால் இப்படிக் கொண்டாடுவீர்கள்!

சற்றுமுன் எழுந்த உற்சாகம் வடிந்தது.

குற்ற உணர்ச்சியால்தான் இவ்வளவும் செய்தோமா?

அதை உடனே மறுத்தாள்.

பதின்ம வயதில் சற்று முன்னேபின்னேதான் இருப்பார்கள். தன்னைத் தன் போக்கில் விடாது, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்த அம்மாவுடன் ஓயாது சண்டை பிடித்துக்கொண்டிருந்ததில் என்ன தப்பு?

அண்ணா ஊர்சுற்றிவிட்டு வந்தபோதெல்லாம் எதுவும் கேட்டாளா அந்த அம்மா? அவன் மட்டும் உயர்த்தியோ?

கேட்டபோது, `என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்றுவிடுவாள்.

`ஆண்களுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவளில்லை’ என்ற வீம்பு அப்போதுதான் எழுந்தது. இரவு நேரங்களில் `பார்ட்டி’ என்று கண்ட இடங்களுக்கு போக ஆரம்பித்தாள். பல தரப்பட்ட ஆண்களுடன் பழக்கம் ஏற்பட, வீட்டில் கிடைக்காத நிம்மதி வெளியிலாவது கிடைத்ததே என்ற நிறைவு ஏற்பட்டது.

அம்மாவுடன் அப்பாவும் சேர்ந்துகொண்டார். அவள் பெயர் கெட்டுவிடுமாம். `அப்புறம் யார் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வார்கள்?’ என்று இரைந்தார்.

`எனக்கே தேடிக்கத் தெரியும். இந்த வீட்டை விட்டுத் தொலையறேன்!’ என்று கத்திவிட்டு வெளியேறினாள்.

எங்கு போவது என்ற குழப்பம் இருக்கவல்லை.

அம்மாவுடன் சண்டை போட்டபோதெல்லாம் தன் தோழி ஆலிஸிடம் அதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.  படிக்கப் பிடிக்காது, ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டவள் ஆலிஸ். அவளுடைய பெற்றோர் கடல் கடந்து, வேறு நாட்டில். 

அப்போதெல்லாம், `நான் தனியாத்தானே இருக்கேன். அம்மாகூட  இருக்கப் பிடிக்காட்டி, இங்கே வந்து இரேன்!’ என்று அபயகரம் நீட்டியவளே அவள்தானே!

`செத்தாலும் அந்த வீட்டுக்குப் போகமாட்டேன்!’ என்றபடி நிர்க்கதியாக வந்து நின்று தோழியின் தோளில் கரம் போட்டு அணைத்துக்கொண்டாள் ஆலிஸ்.

அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது, மரியாதைக்காக வீட்டுக்குப் போனாள் காஞ்சனா. அம்மா அவளைக் கண்டுகொள்ளவில்லை.

முப்பது வயதில், `தனக்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கக்கூடியவன் இவன்தான்!’ என்று தோன்றிப்போக, ஒருவனை மணந்தாள்.

தறுதலை’ என்று தான் அஞ்சிய மகள் ஒருவாறாகச் சராசரி பெண்ணைப்போல் இல்லறத்தில் இணைந்துவிட்டாளே என்ற பூரிப்புடன், அம்மா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டாள். `எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்.  

இரு குழந்தைகளையும் பெற்றபிறகு, `இனி அம்மா நம்மைக் கண்டிக்க என்ன இருக்கிறது!’ என்று அம்மாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்தாள் காஞ்சனா, `தனியா இருக்கீங்களேம்மா!’ என்ற உபசார வார்த்தைகளுடன்.

`இத்தனை வருஷம் தனியாத்தானே இருந்தேன்!அபார்ட்மெண்டில அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. என்ன பயம்?’ என்று மறுத்துவிட்டாள் அம்மா.

கடந்ததை அசை போட்டுக்கொண்டிருந்தாள் காஞ்சனா. தான் வற்புறுத்தி அழைத்தும், அம்மா ஏன் தன்னுடன் வரச் சம்மதிக்கவில்லை?

`வயதான என்னைப் பார்த்துக்கொள்ளாது, எவளோ சிநேகிதிக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தாயே!’ என்ற எண்ணமோ?

பல வண்ணங்களில் தான் சமைத்து வைத்திருந்ததை அம்மா இனி சாப்பிட வரமாட்டாள் என்ற எண்ணம் உதிக்க, காஞ்சனா உரக்க அழுதாள்.

தான் பெற்ற பெண்களும் தன்னைப்போலவே பெற்றவளைப் புரிந்துகொள்ளாது வதைப்பார்களோ என்ற பயமும் அதில் கலந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *