(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விதி எப்படி எல்லாமோ வேலை செய்ததில் கடைசியாக. பி.ஏ. தேறின நான்கு வருஷங்களுக்குப் பிறகு ராஜம் ஒரு தாலூகா ஆபிசில் குமாஸ்தா வாக மாசம் முப்பத்தைந்து ரூபாய்க்கு உயிர் ரத்தத்தை விற்றுக் கொண்டிருந்தான்.
ஆனால், அவன் சர்விஸில் நுழைய ஒப்புக் கொண்டது சில காரணங் களைக் கொண்டு, சர்க்கார் உத்தியோகமும் ஒரு விதத்தில் பொதுஜன சேவை தானே! நேர்மையுடன் பாடுபட்டால் அங்கேயும் உண்மையான தொண்டு புரியலாம்; நிர்வாகத்தில் எவ்வளவு சீர்திருத்தங்களுக்கு அடி கோலலாம் – இந்தமாதிரிக் கனவுகளுடன் தான் அவன் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டான்.
தன் கொள்கைகளை உத்தியோக நடவடிக்கைகளில் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவர முயற்சியும் செய்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த குமாஸ்தாக்கள் அவனைக் கிண்டல் செய்தார்கள்: கேலி செய்தார்கள். ராஜம் பொறுமையுடன் தன் வேலையைக் கறாராகச் செய்தான். தாசில்தார் சிரஸ்தேதார்களுக்கு அவனிடம் மதிப்பு ஏற்பட்டது. ஒரு காகிதத்தையாவது அவன் தாமதம் செய்வது கிடையாது. அன்றன்றே வேண்டிய தஸ்தாவேஜ்களைத் தேடி எடுத்துப் படித்து விஷயத்தைச் சுருக்கமாகத் தன் அபிப்பிராயத்துடன் எழுதித் தாசில்தாரின் உத்தரவுக்கு அனுப்பிவிடுவான்.
அவன் அப்படிக் கறாராக வேலை பார்த்தது நாசில்தாருக்கும் சிரஸ்தேதாருக்கும் சில மாசங்களில் சங்கடமாகப் போய்விட்டது. அவன் எழுதியனுப்பிவிட்ட காகிதங்கள் அவர்கள் பெட்டியில் சுமந்து விட்டன. அவர்களால் உடனே உத்தரவுபோட முடியவில்லை.
இருவரும் தாராளமாகப் பணம் வாங்குபவர்கள்; பழைய பெருச் சாளிகள். மற்றக் குமாஸ்தாக்களும், அவர்களும் கூட்டு. கட்சிக்காரன் பணத்துடன் வந்தால்தான் காகிதம் பைசலாகும். ஆபீசில் பட்டப் பகலில் பேரம் பேசினார்கள். ராஜம் அதையெல்லாம் கண்டு திகைத் தான். தாசில்தாரே உடந்தையாய் இருந்தது அவனுக்கு வெறுப்பை அளித்தது. வேலியே பயிரைத் தின்பது என்பார்களே, அத்த மாதிரி மேல் அதிகாரியே அக்கிரமம் செய்தால் குமாஸ்தாக்கள் அட்டகாசத்தைக் கேட்கவும் வேண்டுமா?
ராஜம் தன்னால் முடிந்தவரையில் எல்லோரையும் அலட்சியம் செய்தே வேலை பார்த்தான். தாசில்தாருக்குக்கூட அவனிடத்தில் பயம். அவன் காகிதங்களில் அவர் ஒன்றும் பணம் வாங்க முயலுவதில்லை. ஏனென்றால் ராஜம் எப்போதும் மனுவில் கண்ட கோரிக்கையை ஆதரவுகளுடன் நன்றாக ஆராய்ந்து அதிகாரி இப்படித்தான் உத்தரவு போடவேண்டும் என்று எழுதிவிடுவான். அதற்குமேல் தாசில்தார் என்ன செய்ய முடியும்? அதன்படி உத்தரவு போட்டுத்தானே ஆக வேண்டும்? போடாவிட்டால் அப்பீலில் கேள்வி நிச்சயம் வரும்.
அவள் பட்டா மாறுதல் குமாஸ்தா. வாரிசுப் பதிவு செய்வதில் மனுக்கள் வரும்போது கட்சிக்கார்கள் அவனை வந்து எவ்வளவோ வலைபோட்டுப் பார்ப்பார்கள். நன்றாக விசாரித்து நியாயம் எந்தப் பக்கமோ அந்தப்படிதான் சிபாரிசை எழுதி வைப்பான்.
பொன்வயலில் ஒரு பெரிய மிராசுதார், ரங்கநாதன். அவன் இளம் வயசில் இறந்ததன் காரணமாக அவனுடைய வாரிசு விஷயமாகத் தகறார் ஏற்பட்டது. அவனுக்கு ஒரு மைனர் குழந்தைதான் இருந்தது. அதன் தாய் லக்ஷ்மி, குழந்தைக்குத் தான் கார்டியனாக வேண்டுமென்று தாசில்தாருக்கு மனுப் போட்டிருந்தாள். இறந்து போனவரின் மாமா ஒருவர் தாமே கார்டியனாக வேண்டுமென்று குறுக்கிட்டார். தாசில்தாரை அணுகித் தம் கட்சிக்குப் பலம் தேடினார்.
தாசில்தார் ராஜத்தைக் கைகாட்டி விட்டுவிட்டார்; ‘குமாஸ்தாவை எப்படி யாவது சரிப்படுத்தி உங்களைக் ‘கார்டிய’னாகச் செய்யலாம் என்று பொரிசு செய்து காரணங்கள் கொடுத்து எழுதச் சொல்லுங்கள். நாள் உத்தரவு போட்டு விடுகிறேன்’ என்று சொன்னார்.
ராஜம் அன்று காரியாலயத்தில் அதிகமாக வேலை செய்ததால் சிரமம் மேலிட்டு வாசல் திண்ணையில் சாய்வான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தான். பொன்வயல் கிராமக் கணக்குப் பிள்ளை இடுப்பில் வேஷ்டியைச் சுற்றிய வண்ணம் மெதுவாக அருகில் வந்து, ‘எஜமான்!” என்றாள்.
‘யாரது?’
‘தான் தான் சங்கரன்!’
‘என்ன சங்கரையர்? என்ன விசேஷம்?’
‘ஒன்றும் இல்லை. நம்ம கிராமத்து வாரிசு விஷயமாகத் தகறார் இருக்கிறது: அந்த அம்மாள் உங்களைக் கண்டு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று வந்திருக்கிறாள்.’
‘என்ன சங்கரையர்? இங்கே எதற்காக அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்? மனுவைப் பார்த்து எப்படிச் செய்ய வேண்டுமோ அந்தப்படி எழுதி வைக்கிறேன்’.
அப்போது ஒரு சிறு பையனைக் கையில் பிடித்து அழைத்துக்கொண்டு லக்ஷ்மி அவன் முன் வந்து நமஸ்காரம் செய்தான்.
அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. நாற்காலியை விட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுத்து, ‘அம்மா, அம்மா, அப்படியெல்லாம் செய்யாதீர்கள். நியாயமாக உங்கள் கட்சி சரியென்றால், அதேமாதிரி உத்தரவாகும். கவலைப்படவேண்டாம்; இதற்காக ஏன் இவ்வளவு தூரம். இந்த இரவில்?’ என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் சங்கோசத் துடன் நின்றான்.
‘நீங்கள் சகோதரர்போலே. என்னைக் காப்பாத்தணும். அவர் கார்டியனானால் என் குழந்தை வாயில் மண் விழுந்துவிடும்’ என்று லக்ஷ்மி கண்ணீர் உதிர்த்துச் சொன்னாள்.
‘கட்டாயம் பார்த்துக் கூடுமானதைச் செய்கிறேன், அம்மா. இரவு இனிமேல் எப்படி ஊருக்குத் திரும்பிப் போவீர்கள்? இங்கே இருந்து விட்டுக் காலையில் போகவாம்’ என்று சொல்லி, ‘அடியே, இவாளை அழைத்துக்கொண்டு போ!” என்று தன் மனைவியைக் கூப்பிட்டுச் சொன்னான்.
‘இல்லை: வண்டி வந்திருக்கிறது. போய் வருகிறேன்’ என்று சொல்லி ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவிட்டு லக்ஷ்மி வெளியே போனாள்.
சக்கரையர் அருகே வந்து, ‘வண்டியில் ஒரு மூட்டை அரிசி வந்திருக் கிறது. இப்படித் திண்ணையோரத்தில் இறக்கிப் போடச் சொல்லட்டுமா?? என்றார்.
ராஜத்திற்குக் கோபம் ரௌத்திரகாரமாக வந்தது.
‘எங்காணும், என் கடமையைச் செய்ய எனக்கு லஞ்சம் கொடுக்கிறீரா?’ என்று கத்தினான்.
‘யஜமான், மன்னிக்கணும்’ என்று கணக்குப் பிள்ளை மெதுவாக நகர்ந்தான்.
ராஜத்தின் உள்ளம் கலங்கிவிட்டது. ஓர் அரிசி மூட்டையின் விலை கொண்டதா, தன் மனிதத் தன்மை என்று ஆச்சரியப்பட்டான். ஆனால் அது அவனுக்குப் புதிய அநுபவம் அல்ல: பலரை ஆபீஸில் தாறுமாறாக வைது அனுப்பியிருக்கிறான்.
ஒரு சமயம் அவன் வசூல் குமாஸ்தாவாக ஒரு நாள் வேலை பார்த்த போது ஒரு குடியானவனுக்கு ஏதோ டிபாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது. கஜானா குமாஸ்தாவும் ஷராப்பு அவனிடம் பணம் வாங்கிவிடுவார்கள் என்று ராஜம், தானே, பில்லை மாற்றிப் பணம் வாங்கிய குடியானவன் கையில் கொடுத்தான். குடியானவன் தான் வாங்கி பத்து ரூபாயில் ஒரு ரூபாயை ராஜத்தின் மேஜைமேல் வைத்தான். வேறு யாராவது அப்படிச் செய்திருந்தால் அவன் அமர்க்களப்படுத்தி யிருப்பான். அறியாத கிழவன் என்று அவனை ஒன்றும் சொல்லாமல், ‘வேண்டாம் எடுத்துக்கொள்!” என்றாள். கிழவன் தப்பர்த்தம் செய்து கொண்டான்.
கடன் வாங்கிக் கட்டின பணமுங்க யஜமான். எங்காச்சியும் இந்த ஒரு ரூபாயெச் சரிக்கட்டி கொடுக்கணுங்க’ என்றான்.
‘அடே, பணமே வேண்டாம்; எடுத்துக்கொண்டுபோ!’ என்றான் ராஜம்.
கிழவனால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. ‘யசமான் நிசமாங்களா? கோவிச்சுக்காதிங்க!” ‘இல்லை, போ!”
‘மவராசராயிருங்க; உத்தியோகம் ஓங்கணும்!’ என்று சொல்லி விட்டுப் போனான் கிழவன்.
இந்த மாதிரிப் பழைய நினைவுகளில் ஆழந்து படுத்துக்கொண்டி ருந்தான் ராஜம். அப்பொழுது வாசலில் மணிச் சத்தத்துடன் ஓர் இரட்டை மாட்டு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கித் தெருவில் நின்றார்கள். ஒரு குடியானவன் திண்ணையேறி வந்து, ‘பண்ணை யஜமானும் ஜமீன்தார் ஐயாவும் வந்திருக்காங்க; கூப்பிடறாங்க!” என்றாள்.
ராஜத்திற்கு உடனே கோபம் வந்தது.
‘யாரடா அவர்கள்? யாரடா நீ?’ என்று உரக்கக் கத்தினான்.
இதைக் கேட்டதுமே தெருவில் நின்றவர்கள் கொஞ்சம் ஆச்சரிய மடைந்து போயிருக்க வேண்டும். ஏனென்றால், இந்தமாதிரி அவர் களை யாரும் நடத்தி அவர்களுக்கு வாடிக்கை இல்லை. தாசில்தார் வழியில் கண்டதும் வண்டியைவிட்டு இறங்கித்தான் அவர்களுடன் பேசுவார். டிபுடி கலெக்டர் ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் அவர்கள் கைக்கு உட்பட்டவை. ராஜத்தின் கேள்வியைக் கேட்டதும், ‘இவன் யாரோ, பயமறியாத கன்று; புதிசு!’ என்று சொல்லிக்கொண்டு படியேறி வந்தார்கள்.
வந்தவர்கள் தாங்களாகவே இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். ராஜம் அதைச் சகித்துக்கொண்டான்.
‘நீங்கள் தான் பட்டா மாறுதல் குமாஸ்தாவோ?’ என்று கேட்டார் ஜமீன்தார்.
‘ஆமாம், ஏன்?’ என்றான் ராஜம்.
‘பெரிய பண்ணை வாரிசு விஷயமாக மனு வந்திருக்கோ?’
‘வந்திருக்கலாம்; என்ன விசேஷம்?’
‘அந்தம்மாள் நடத்தை சரிவில்லை. சொத்தைப் பாழாக்கிவிட்டு ஓடிவிடுவாள். இவர் கார்டியனாக ஆனால்தான் வாரிசுக்குச் சொத்து நிலைக்கும். அந்தப் படி-‘
‘அதெல்லாம் தாசில்தார் அவர்கள் தீர விசாரித்துச் செய்வார்கள்’.
‘சரிதான், ஸார். அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறோம். உங்களிடத்திலும் ஒரு வார்த்தை சொல்லச் சொன்னார்’
‘தேவையே இல்லையே!’
‘கொஞ்சம் கேளுங்க. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விடுவோம்’.
‘என்ன ஏற்பாடு?’
‘அதான் – எங்களுக்குத் தெரியும்; தகுந்தபடி மரியாதை செய்து விடுவோம். அதைப் பார்த்து சரிப்படுத்திவிடுங்க.’
‘என்னையா சொல்லுகிறீர்?’ என்று ராஜம் பொங்கிக்கொண்டு கேட்டாள். கோபத்தில் அவன் உடல்நடுங்கிற்று.
‘வெறும் பேச்சுப் பேசுவோமா?’ என்று சொல்விவிட்டு ஜமீன்தார் மற்றொருவர் பக்கம் கையை நீட்டினார். அவர் நாலைந்து நூறுரூபாய் நோட்டுகள் அடங்கிய ஒரு மடிப்பை நீட்டினார். ராஜம் அதையெல்லாம் சாவதானமாகப் பார்த்தான். ஜமீன்தார் அதை ராஜத்தினிடம் நீட்டினார். ராஜம் அதைக் கையில் வாங்கிக்கொண்டான்.
ஜமீன்தார் மற்றவரைப் பார்த்துக் கண் சிமிட்டினார்; ‘காரியமாகி விட்டது பாருங்கள்’ என்று சொல்லும் பாவனையாக.
உடனே ராஜத்தின் காதோடு காதாக ஏதோ ரகசியம் பேசுவதற்காக எழுந்து அவனருகில் வந்தார் ஜமீன்தார். அதே நிமிஷம் நூறு ரூபாய் நோட்டுகள் படபடவென்று அவர் முகத்தில் வந்து விழுந்தன. ஜமீன்தார் உலுக்கி விழுந்து பின் வாங்கினார்.
‘போங்கள், வெளியே!’ என்று உரக்கக் கத்தினாள் ராஜம்.
‘என்ன ஓய், உமக்கு இவ்வளவு திமிரா? 500 ரூபாய் போதாதா, நீர் செய்யப்போகிற வேலைக்கு’ என்று ஜமீன்தார் சொன்னார்.
‘போகிறீரா, அல்லது சப் இன்ஸ்பெக்டரைக் கூப்பிடட்டுமா?’
‘அந்தக் கள்ளி, நமக்கு முன்னால் வந்து மயக்கிவிட்டான், ராஜா!’ என்று பண்ணைக்காரர் ஜமீன்தாரைப் பார்த்துச் சொன்னார்.
‘ஓய், தீர் இந்த ஆபீஸில் நாளைக்கு இருக்கிறதைப் பார்த்து விடுகிறேன்!’ என்றார் ஜமீன்தார்.
‘போ என்றால் போக மாட்டாய்?’
‘வாருங்கள் ஸார். இவனுடன் நாம் ஏன் பேச வேண்டும்?’
இருவரும் கீழே இறங்கி வண்டியேறினதும் ராஜம் சிரம் மேலிட்டு நாற்காலியில் சாய்ந்தான்.
அவன் மனைவி வந்தாள்.
‘என்ன இரைச்சல்? ஆமாம், விடிந்தால் விறகு கிடையாது: உலைக்கு அரிசி கிடையாது’
‘எல்லாம் விடியட்டும்! போ, உள்ளே!’
– பாரததேவி 12:11.1939