அக்கரைப் பச்சை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 7,412 
 

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில்தான், தினசரி மாலை நடைப் பயிற்சியை முடித்த பிறகு லலிதாவும், சித்ராவும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக்கொள்வார்கள் .

இருவருக்குமே அறுபத்தி ஐந்து வயசிருக்கும்.

சித்ராவின் கணவர் சென்ற ஆண்டு தான் காலமானார். அவர்களுக்கு கோவையிலிலேயே

ஐந்தாறு பங்களாக்கள்உண்டு. அனைத்துக்கும் வாடகை வசூலிப்பது மட்டுமேசித்ராவின் வேலை! அவளும் ஒரு பங்களாவில் தனியாகவசித்து வந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் உண்டு. சித்ராவுக்கு ஒரு பையன். ஒரு பெண்.

பையன் லண்டனில் டாக்டராக இருக்கிறான். பெண்ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். இருவருக்குமே நல்லவசதி. ஏற்கனவே கோடிக்கணக்கான சொத்து!

லலிதாவுக்கு ஒரே பையன். கோவை கல்லூரி ஒன்றில்விரிவுரையாளர். கணவன் காலமான பிறகு தன் ஒரே மகனுடன் தான் வசித்து வருகிறாள். சுமாரான வசதி.

பையனுக்கு திருமணம் ஆகும்வரை அந்த வீட்டில் லலிதாவைத்தது தான் சட்டம். மருமகள் வந்த பிறகு ஆட்சி மாறிப்போய் விட்டது. லலிதாவுக்கு வேறு வழியில்லை.அனுசரித்துப் போக வேண்டியிருந்தது. அது ஒன்று தான் லலிதாவின் குறை!

தோழி சித்ராவிடம் அவைகளை லலிதா சொல்லிப் புலம்புவது தினசரி வாடிக்கை!

சித்ராவின் மகள் ஆஸ்திரேலியாவிலிருந்து போன வாரம்வந்து போயிருந்தாள்.அவள் நல்லரசிகை! நம் நாட்டில் கிடைக்காத பல் வேறு கலைப் பொருட்களைஎல்லாம் கொண்டு வந்து குவித்திருந்தாள். கோவையில்தங்கியிருந்த ஒரு வாரத்தில், அம்மாவைக் கட்டிப் பிடித்துபல போஸ்களில் முத்தம் கொடுத்து அவைகளை படம்பிடித்து ‘நூறு முத்தங்கள்!’ என்ற தலைப்பில் ஒரு ஆல்பமே தயாரித்து அம்மாவிடம் தந்திருந்தாள். அதை லலிதாவும் பார்த்து ரசித்தாள்.

லண்டனிலிருந்து போன மாதம் வந்த டாக்டர் மகன்,சித்ராவுக்கு இருக்கும் ‘சுகர், பிரஸர்’ க்கு மிக சிறந்தமருந்துகளைக் கொடுத்து விட்டு, அவைகளை வீட்டிலேயே சுகர், பிரஸர் சரி பார்க்கும் அதி நவீன கருவிகளையும் வாங்கி வந்துதந்திருந்தான். சித்ரா கேட்காமலேயே அவசரச் செலவுக்குத்தேவைப் படும் என்று அவளுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை வரவு கொடுத்து விட்டுப் போய் விட்டான்.

அதையெல்லாம் விபரமாக சித்ரா சொல்லும் பொழுது, லலிதாவுக்கு ஏக்கமாக இருக்கும்! சித்ரா கொடுத்து வைத்த மகராசி என்று லலிதா நினைத்துக் கொள்ளுவாள்.

அன்று நடைப் பயிற்சிக்கு லலிதா வரவில்லை.தொலைபேசியில் விசாரித்த பொழுது சற்று உடல் நலமில்லை என்று சொன்னாள்.

தோழியைப் பார்க்க சித்ரா லலிதா வீட்டிற்குப் போயிருந்தாள்.இருவரும் லலிதாவின் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அங்கு வந்த மகன் “அம்மா!…மாலை ஏழு மணிக்கு டாக்டர் நந்த கோபாலிடம் ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கியிருக்கிறேன்!…நீ தயாராக இரு!.”

என்று சொன்னான்.

“ஏண்டா!..உனக்கு வேற வேலை இல்லே?…எனக்கு சாதாரண சளிப் பிடிச்சிருக்கு!…இரண்டு நாளிலே அதுவே சரியாப் போயிடும்!…அதற்குப் போய் டாக்டரிடம் போக வேண்டுமா?” என்று சிரித்தாள்.

அதற்குள் மருமகளும் “ எதற்கும் ஒரு நடை போய் வந்திடுங்க அத்தை!” என்றாள்.

பேத்தி ஓடி வந்து மடியில் உரிமையோடு ஏறி உட்கார்ந்து கொண்டாள். “பாட்டி!…உனக்கு வயசாச்சே தவிர கொஞ்சம் கூட பொறுப்பு இல்லே!….ராத்திரி பூரா இருமிட்டுக் கிடந்தே!…பேசாமே அப்பா சொல்லறதைக் கேளு!…” என்று கன்னத்தில் இடித்தாள்! அதை லலிதா ரசித்தாள்.

சிறிது நேரத்தில் லலிதாவிடம் விடை பெற்றுக் கொண்டு காரில் போய் உட்கார்ந்து கொண்ட சித்ராவின் மனசில் ‘லலிதா கொடுத்து வைத்தவள்! …….தனக்கு வீட்டில் ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போனால் கூட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றவர்களுக்குத் தெரியப் படுத்த ரொம்ப நேரம் ஆகி விடும்!’ என்று நினைத்து வேதனைப் பட்டாள்.

இக்கரைக்கு அக்கரை பச்சையோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *