அக்கம் பக்கம்…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 12,044 
 

“என்னங்க… என்னங்க…” என, மார்க்கெட்டில் இருந்து ஓடோடி வந்த ரத்னா, வாசலில் செருப்பை அரைகுறையாய் உதறிவிட்டு உள்ளே வந்தாள். படித்துக் கொண்டிருந்த பேப்பரை, நிதானமாய் மடித்து, டீப்பாயின் மீது வைத்து, அவள் சொல்லப் போகும் விஷயத்தில், எந்த சுவாரசியமும் இல்லை என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான் சுப்புணி.

“சுகன்யாவ மார்க்கெட்ல பாத்தேங்க,” என்றாள் மொட்டையாக!

“எந்த சுகன்யாவ பாத்த?”

“அதாங்க, உங்க அக்காவோட பெரிய மாமனார் மக… வேளச்சேரியில டிராவல்ஸ் வச்சிருந்தாங்களே…”

கண்ணை கட்டியது சுப்புணிக்கு.

“ஆமா… அவளுக்கென்ன?”

“அவங்க பிசினஸ் ரொம்ப நஷ்டத்துல போறதா போனமுறை வந்தப்போ, உங்க அக்கா சொன்னாங்க நியாபகம் இருக்கா… இப்போ, வியாபாரம் சுத்தமா படுத்திருச்சு போல… காதுல, கழுத்துல ஒண்ணையும் காணோம்! எவ்வளவு பவிசு பேசுவா… இப்பப் பாத்தா, ஏதோ பேசத் தெரியாதவ மாதிரி, அமைதியா இருக்கா,” என்றாள்.

பொதுவாக, பெண்களுக்கு அடுத்தவர் விஷயத்துல ஆர்வம் அதிகம் தான். ஆனால், ரத்னாவுக்கு இருக்கும் ஆர்வம், ரொம்ப அதிகமானது. அந்த மிகையான ஆர்வத்தாலேயே, அவள் ஆர்வம், எல்லாருக்கும் திகட்டியது.

ரத்னாவை எங்கு அழைத்து சென்றாலும், ‘கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனால் அங்கு ரெண்டு கொடுமை சிங்சிங்னு ஆடுதாம்’ என்ற கதையாகிப் போகும்.

திருவண்ணாமலைக்கு தீபம் பார்க்க அழைத்துப் போனால், எல்லாரும் தீபம் பார்த்துக் கொண்டிருந்தால், இவளுக்கு மட்டும் அங்கு பார்க்க வேறு எதுவாவது இருந்து தொலைக்கும்.

‘ஏங்க… அந்த நீலக்கலர் சுடிதாரை பாத்தீங்களா… அவ கூட நிக்கிற ஆளு அவ புருஷனா என்ன… ரொம்ப வயசானவனா தெரியுறானே…’ என்பாள்.

அவளை முறைத்து, ‘வீட்லயே சாமிய கும்பிடலாம்; ஆனா, கோவிலுக்கு போகணுங்கிற ஐதீகம் எதுக்கு வந்தது தெரியுமா… நாலு பேர் கூடற இடத்துல, ஐம்புலனையும் கட்டி வைக்கிற பண்பு வரணும்ன்னு தான். நீ என்னடான்னா, இங்க வந்தும் வம்புக்கு அலையுற…’ என்பான்.

அவளுக்கு சமுத்திரமே முழங்கால் மட்டும்; இந்த அறிவுரை எல்லாம் எதுக்கு உதவும்!

அது ஒரு மழை நாள்; வரும் வழியில் ஸ்கூட்டர் ரிப்பேர்; பாழாய்ப் போன சென்னையில், நிலத்தடியில் தண்ணி இருக்கிறதோ இல்லையோ, லேசாய் மழை பெய்தாலே, பூமி முழுக்க பாதாள சாக்கடை நிரம்பித் தொலைக்கிறது.

ஸ்கூட்டரை சர்வீசுக்கு விட்டு, பேன்ட்டை முட்டி வரைக்கும் சுருட்டி, ஆம்ஸ்ட்ராங் நிலாவில் நடந்தது போல, காலை அகட்டி அகட்டி, வீடு வந்து சேர்ந்தால், வாசலிலேயே காத்திருந்தாள் ரத்னா.
‘இவளல்லவோ தர்மபத்தினி…’ என, மனசு கொஞ்சம் அதிகமாகவே ஆர்ப்பாட்டம் போட்டு விட்டது.

‘என்னங்க… உங்களுக்கு முன், இங்க ஆட்டோல வந்து இறங்கினது யார்ன்னு தெரியுதா?’ என்றாள்.

தன் எதிர்பார்ப்பு, ‘சப்’பென்று போனதில் ஆத்திரம் ஒருபக்கம்; தண்ணீருக்குள் தவளை மாதிரி தவ்வி தவ்வி வந்த கணவனின் கஷ்டத்தை பார்க்காமல், அவளுக்கு அதை விட சுவாரசியமாய் எதுவோ இருந்து தொலைக்கிறது என்ற கோபம் ஒருபுறமுமாய், அவளை முறைத்து பார்த்தான்.

‘அட அவதாங்க அந்த ரோஜா பானு… எதிர் வீட்டு பையனை காதலிக்கிறான்னு ரெண்டு வீட்டுக்கும் கலவரமாகி, கொஞ்ச நாளைக்கு முன், இந்த காம்பவுண்ட்ட விட்டு போனாங்களே… அவங்களே தான்! நாமெல்லாம் என்ன நினைச்சோம்… அந்த காதல் இதோட முடிஞ்சி போச்சுன்னு தானே… ஆனா, இப்போ பாத்தா அந்த ரோஜா பானு, இந்த கொட்டுற மழையில அந்த முரளிப்பய வீட்டுக்கு வந்திருக்காங்க. இதுல பியூட்டி என்ன தெரியுமா… இப்போ வீட்ல யாரும் இல்ல; என்ன கொடுமைங்க இது…’ என்று கண்ணடித்து சிரித்தாள்.

உளுந்து வடையும், தேங்காய் சட்னியும் சுடச் சுடத் தந்தால் கூட, இந்த மழை நேரத்தில் இத்தனை சுவாரசியம் காட்டியிருக்க மாட்டாள்.

‘ச்சீ… நான் பள்ளத்தையும், மேட்டையும் கடந்து, சேறும் சகதியுமா வந்து நின்னா, கால் கழுவ தண்ணி மொண்டுட்டு வர துப்பில்ல… அடுத்த வீட்டு கதைய அரை மணி நேரமா பேசுற… எவ, எவனக் கட்டினா என்ன… முதல்ல நான் உன்னை கட்டியிருக்கக் கூடாது. நான் வேணாம் வேணாம்ன்னு சொல்லியும், தினம் உன் கூட மல்லுக்கட்ட உன்னை என் தலையில் கட்டிட்டு போய் சேர்ந்துட்டாரு எங்கப்பா. அதான் அந்த மனுஷனுக்கு நான் திவசம் கூட குடுக்கறதில்ல…’ என்று, அவனுடைய மொத்த கோபமும், நாக்கில் வந்து நர்த்தனம் ஆடியது.

‘ஓஹோ… அப்படியா சேதி… போனாப் போகுது மழையில நனைஞ்சு வந்திருக்கீங்களேன்னு காபி போட்டு தரலாம்ன்னு பாத்தா, இவ்வளவு பேசற உங்களுக்கு எதுவும் கிடையாது…’ என்றபடி உள்ளே போனாள்.

இன்று மதியம், சுப்புணியின் ஆபீசுக்கு போன் செய்தாள் அவனோட தங்கை அனுசுயா.

“சொல்லு அனு… என்ன ஆபீசுக்கு போன் செஞ்சுருக்க?” என்று கேட்டான்.

“அண்ணே… அண்ணி வீட்டுக்கு வந்திருந்தாங்க; வந்தா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க வேணாமா… என் மாமியார் கிட்ட, நான் காலேஜ் படிக்கும்போது, ஒரு பையனை காதலிச்சேன்னு சொல்லிட்டாங்க; வீடே களேபரம் ஆயிட்டுச்சு,” என சொல்லும் போதே, அனுசுயா அழுவது தெளிவாய் கேட்டது.

அதென்னவோ உண்மை தான் என்றாலும், அனுசுயாவுக்கு கல்யாணம் ஆகி, 10 ஆண்டுகளாய் நிம்மதியாய் குடும்பம் நடத்திக் கொண்டியிருக்கையில், குட்டையைக் குழப்பி விட்டு வந்திருக்கிறாள்.
“அடடா அனு… நீ எதுக்கும்மா கவலைபடறே… நான் மாப்பிள்ளைகிட்ட பேசறேன். கல்யாணத்துக்கு முன் காதலிக்கிறதெல்லாம், இப்போ, தாடி வளர்றதுக்கு முன் ஷேவிங் செய்ற மாதிரி, நான் அவர்கிட்ட பேசறேன்,” என்றான்.

“அப்படியில்லண்ணே… இத்தனை நாள் அவர் என் மேல வச்சிருந்த மதிப்பு தேவையில்லாம இப்போ கெட்டுப் போயிடுச்சு,” என்று கூறி போனை வைத்த போது, மனசு கனக்கத்தான் செய்தது.
அங்கே இங்கே அவலுக்கு அலைந்த கோழி, என் வீட்டு பயிரிலேயே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

‘இன்னக்கி வீட்டுக்கு போனதும் உண்டு இல்லன்னு ஒரு கை பாத்துடணும்…’ என்று நினைத்தான்.

மாலையில், அதே கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

“என்னங்க… இன்னும் உமா வீட்டுக்கு வரலைங்க,” என, பதற்றத்துடன் வாசலில் கவலையாய் நின்றாள் ரத்னா.

“மணி, 7:00 ஆகுது… இன்னும் வரலயா… என்ன சொல்லிட்டுப் போனா?” என்று, கோபத்தை மறந்து, பதற்றத்துடன் கேட்டான்.

“இன்னைக்கு கடைசி எக்ஸாம்; பிரண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வந்திடுறேன்னு சொன்னா.”

“அவ்வளவு தானே… வந்துடுவா. நீ, முதல்ல காபியை போடு.”

உடை மாற்றி, காபி குடித்து, சீரியல் பார்த்து என்று நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. வாசலுக்கும், உள்ளுக்குமாய் நடந்து ஓய்ந்தாள் ரத்னா. உமாவின் நம்பருக்கு போன் செய்தாள். ‘ஸ்விட்ச் ஆப்’ என்று வந்தது.

“உமா பிரண்ட்ஸ் நம்பர் இருந்தா எடுத்துட்டு வா…”

“எனக்கு யார் நம்பரும் தெரியாதே… இன்னும் சொன்னா, உங்க மக நம்பர் கூட சரியாத் தெரியாது. இவ மாசத்துக்கு நாலு சிம் கார்டு மாத்தறா… படிக்கிறது பிளஸ் 2; ஆனா, ஐ.பி.எஸ்., படிக்கிற மாதிரி பேச்சு. எதுனா கேட்டா, விடுதலை, சுதந்திரம்ன்னு லெக்சர் குடுக்குறா… வரட்டும் அவ காலை ஓடிச்சு அடுப்பில வைக்கிறேன்.” என்றாள் ஆத்திரத்துடன்!

மகளின் மீது குற்றப்பத்திரிகை வாசித்த மனைவியை கோபமாய் பார்த்து, “மூணாவது வீட்டு பொண்ணு, நாலாவது வீட்டு பையனை காதலிக்கிற கதைய, அக்கு வேறா ஆணி வேறா தெரிஞ்சு வச்சுக்க. ஆனா, பெத்த மக போன் நம்பர் என்ன, அவ பிரண்ட்ஸ் யார் யாரு, அவங்க பேக் கிரவுண்ட் என்ன, அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்காதே. ஆனா, அவ மேலயே பழி சொல்லு!

“இப்போ சொல்றேன் கேட்டுக்க… குழந்தைகளுக்கு குடுக்கிற சுதந்திரம்கிறது கயிறு மாதிரி; எப்பயும் ஒரு முனை அவங்க கையிலயும், மறுமுனை பெத்தவங்க கையிலயும் இருக்கணும். கயிறு எவ்வளவு நீளமா இருந்தாலும், மறுமுனையில இருக்கற பெத்தவங்க, நம்மள பாத்துட்டுத் தான் இருக்காங்கங்கிற பயம் குழந்தைகளுக்கும், எவ்வளவு தொலைவில போனாலும், லேசா இழுத்து பிடிச்சா, நம்ப குழந்தைக திரும்பி வந்துடுவாங்கங்கிற உறுதி பெத்தவங்களுக்கும் இருக்கணும்.”

“ஆமா… எல்லாக் கடமையும் பொம்பளைங்களுக்குத் தான்; ஆம்பளைங்களுக்கு எதுவும் இல்ல பாரு,” என்றாள் எரிச்சலாக!

“எனக்கு என் பொறுப்புக நல்லாத் தெரியும். உமாவுடைய எல்லா பிரண்ட்சும், அவங்க வீடு இருக்கிற இடம் எல்லாமே எனக்கு தெரியும். ஆனா, தேவையில்லாத பதற்றத்தை காமிச்சு, நம்ம பொண்ணு பேர, நாமளே ரிப்பேர் செய்யணுமான்னு தான் அமைதியாக இருக்கேன்.

“குழந்தை வளர்ப்புல, அதுவும் பெண் குழந்தை வளர்ப்பில, தகப்பனை விட, தாய்க்குத் தான் பொறுப்பு அதிகம்ன்னு நீ தெரிஞ்சு வச்சுக்கல பாரு….” என்றான்.

அவன் கேட்ட கேள்விக்கு, ரத்னா பதில் சொல்வதற்கு முன், புன்முறுவல் பூக்க ஆட்டோவில் வந்து இறங்கினாள் உமா.

“சாரிப்பா… இன்னைக்கு ஸ்கூல்ல கடைசி நாள்; பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய்ட்டு, ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு வர லேட்டாயிடுச்சு. சார்ஜ் இல்லாம மொபைலும் ஆப் ஆயிடுச்சு. அதான் ஆட்டோ பிடிச்சு வந்தேன்,” என, அம்மாவின் கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே போனாள்.

உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்ற மனைவியை பரிவோடு பார்த்து, “ரத்னா… அடுத்த வீட்டு விஷயங்கள்ல பெண்களுக்கு ஆர்வம் இருக்கிறது இயல்பான விஷயம் தான். ஆனா, அந்த ஆர்வத்துக்கும் ஒரு எல்லை வேணும்.

“நீ அடுத்த வீட்டு விஷயங்கள்ல ஆர்வம் காட்ட ஆரம்பிச்சா, உன் வீட்டு விஷயத்த உலகமே வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடும். அதை மறந்திடாதே!

“நான் சொல்றது இப்போ உனக்கு வருத்தமா தான் இருக்கும்; ஆனா, வயசுக்கு வந்த பெண்ணோட தாய் நீ! அவ உன்னை பின்பற்றி நடக்கணும்ன்னா, முதல்ல நீ சரியா நடந்துக்க,” என்றான் தீர்க்கமாய்!

புரிதலின் அறிகுறியாய் அமைதியாய் தலையசைத்தாள் ரத்னா.

– ஆக 2015

Print Friendly, PDF & Email

1 thought on “அக்கம் பக்கம்…

 1. அக்கம் பக்கம் சிறுகதை படித்தேன்.
  எதார்த்தமான பேச்சு வழக்கில்
  கதை அமைந்திருந்தது சிறப்பு.
  பெண்கள். மற்றவர்கள் விசயத்தில்
  செலுத்துகின்ற கவனம் அக்கறையை தங்கள் வீட்டுப் பெண்
  கள் விசயத்திலும் செலுத்த வேண்டும் என்ற விசயத்தை நன்கு
  புரியும்படி கதாசிரியர் பர்வீன் பானு
  எழுதியது சிறப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *