கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 10,774 
 
 

வணக்கம் வாசகர்களே, பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் எப்படி இறந்தேன் என்பதைப் பற்றிய கதையைச் சொல்கிறேன்.

அது ஒரு வெள்ளிக்கிழமை இரவு. நான் உள்ளூர் வீடியோ கடையில் ஏதாவது ஒரு நல்ல ஆங்கில திகில் திரைப்படம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த பொழுது ஒரு வித்தியாசமான டிவிடி ஒன்று கண்ணில் பட்டது. படத்தின் பெயர் 8வது கொலை. டிவிடி அட்டையின் மேல் இருந்த ஒரு சின்ன குறிப்பு என்னை கவர்ந்தது: இது ஒரு பரிசோதனைத் திரைப்படம். எச்சரிக்கையுடன் பார்க்கவும்.

ஆர்வத்துடன், இணையத்தில் அந்த படத்தின் பெயரைக் கொடுத்து தேடினேன். படத்தை இயக்கியது ஹாலிவுட் இயக்குனர் அல்ல, ஒரு நரம்பியல் விஞ்ஞானி. ஒளி, ஒலி மற்றும் நகரும் படங்கள் மூலம் மனித உணர்வுகளை எவ்வளவு தூரம் கடத்த முடியும் என்பதைக் கண்டறிய ஒரு பரிசோதனையாக படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் அமெச்சூர்கள். படம் தியேட்டருக்கு போகாமல் நேராக டிவிடிக்கு சென்றது. ஒரு வாரத்திற்குள், சில மர்மமான காரணங்களுக்காக, அனைத்து டிவிடிகளும் பறிமுதல் செய்யப்பட்டு படம் தடைசெய்யப்பட்டது. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை.

தடைசெய்யப்பட்ட படத்தைப் பார்க்க வீடியோ கடை என்னை அனுமதிக்காது என்று தான் நான் நினைத்தேன். ஆனாலும், என் அதிர்ஷ்டம், அன்று கடையில் கணினிகள் வேலை செய்யவில்லை. கடையில் இருந்த பணிப்பெண் அது ஒரு தடை செய்யப்பட்ட படம் என்பது தெரியாமல் அதை கொண்டு போக என்னை அனுமதித்தார்.

வீட்டை அடைந்த உடனே படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். தொடக்கக் காட்சியில் இருந்தே, நான் மிகவும் வித்தியாசமான ஒன்றைப் பார்க்கிறேன் என்பது தெளிவாகத் தெரிந்தது. கேமரா கோணங்கள், வண்ணம், ஒலி மற்றும் எடிட்டிங் அனைத்தும் மனித உணர்வுகளில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. படம் என்னை வலுவாக உள் இழுக்க , நான் கதையின் ஒரு பகுதியாக உணர்ந்து, சில ஆதார உணர்ச்சிகளை அனுபவித்தேன். திரையில் என்ன நடக்கிறது என்பதில் முற்றிலும் ஒன்றுபட்டு, என்னை நான் முழுமையாக இழந்தேன்.

படத்தின் கதை ஒன்றும் புதிது இல்லை. ஏழு நண்பர்கள் ஒரு ரிசார்ட்டில் சந்தித்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படும் வழக்கமான அகதா கிறிஸ்டி கதை. கொலைகளை செய்வது யார்? வேலைக்காரியா? சமையல்காரனா? ஓட்டுனரா? உண்மையான கொலையாளி யார் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் நான் படத்தை முடிக்கவே இல்லை! எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் இதுதான் – ஒரு நிமிடம் நான் திரைப்படத்தில் மூழ்கி இருந்தேன். அடுத்த நிமிடம் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். எல்லாம் முற்றிலும் இருட்டாகி, முழு மௌனம்.

ஏழு நண்பர்கள் கொல்லப்படுவதைப் பற்றிய படத்தின் தலைப்பு 8வது கொலை என்று ஏன் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் , திரும்பிச் சென்று இந்தக் கதையின் முதல் வரியைப் படியுங்கள்.

Print Friendly, PDF & Email
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *