வேல்விழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 23,732 
 
 

சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன?

வேல்..! வேல்..! கார்திகேயன் தன் மகளை அழைத்தார். ஏன் அப்பா கூப்பிட்டீர்கள்?

“உன்னைக் ஹாஸ்டலில் விட்டுவிட்டு நான் நேரத்தோடு திரும்ப வரனும். ரெடியாகி விட்டாயா? காரை ஷெட்டிலிருந்து எடுக்கட்டுமா?

வேல்விழியின் அம்மா, அகிலாண்டேஸ்வரி, “எங்கே இந்த கோபியும், கோதையும் தொலைஞ்சு போனாங்க.” என புலம்பிக்கொண்டே தன் மகளுடைய ஸூட்கேஸ்களை தூக்கிக்கொண்டுவந்து ரெடியாக வாசல் அருகே வைத்தாள். ஒவ்வொரு வார விடுமுறைக்கும்கூட வேல்விழியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார் கார்த்திகேயன். வேலின் புறப்பாட்டு வைபவங்கள் முடிந்து கார், வேலை சுமந்து கொண்டு செல்லத் துவங்கியது. ஊர் எல்லையைத் தாண்டியபின் நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ரோட்டோரமாக ஒரு மூதாட்டி மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்தார்கள். அப்பா..! பூ வாங்கிக்கட்டுமா? எனக்கேட்ட வேலுக்காக காரை ஓரமாக நிறுத்திய கார்த்திகேயன், அப்பொழுதுதான் கவனித்தார், பூக்காரியின் பக்கத்தில் இருசக்கர வாகனத்தின்மேல் சாய்ந்து கொண்டு நின்றிருந்த சசியை.

அவருக்கு வேலின் மீது ஆத்திரமாக வந்தது. இந்த படிப்பு முடியட்டும். வேலுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடித்து விடுவதுதான் நல்லது. என் கண்ணிலேயே மண்ணைத் தூவிவிட்டு அவனுடன் பேச இவள் முயற்சி செய்கிறாளே!. மனம் உடைந்து போனார் கார்த்தி. இவள் என் மகளே அல்ல.

காரைவிட்டு இறங்கிய வேல், கார் கதவை சாத்தப் போனவள், அவனை அப்போதுதான் கவனித்தாள் “அப்பா! பூ, நன்றாக இல்லை வாடிவிட்டிருக்கிறது. வேண்டாம் போகலாம்.” திரும்பவும் காரில் ஏறிக்கொண்டாள். கார்த்திகேயனுக்கு அதுவரை இருந்த படபடப்பு அடங்கியது. “என் பெண் அல்லவா.” மிகுந்த உற்சாகத்துடன் காரை செலுத்தத் துவங்கினார். அவளைப் போய் சந்தேகப்பட்டதற்கு மனம் வருந்தினார். “சொக்க தங்கத்தை மாற்று குறைவு என எண்ணிவிட்டேனே” மனம் நொந்துபோனார்.

சசியின் அப்பா, மஹேந்திரன், தன் மகனுக்கு, வேல்விழியை மணம் செய்து கொடுப்பார்களா என அறிந்துகொள்ள விரும்பினார். அதன்பொருட்டு வெள்ளோட்டம் பார்க்க அவர் மாசிலாமணித் தாத்தாவை போனவாரம்தான் கார்த்தியின் வீட்டிற்கு அனுப்பிவைத்திருந்தார். மாசிலாமணி இருவீட்டாருக்கும், பொதுவான சொந்தக்காரர்

“சொந்த அத்தை மகனுக்கு உன் பெண்ணை மணம் முடித்து வைத்தால், பழைய சண்டை சச்சரவுகளும் மறைந்து போகும். அந்தஸ்திலும் படிப்பிலும் சசிக்கு குறை ஒன்றும் இல்லை கார்த்தி. என்ன சொல்கிறாய்?’

‘எங்கள் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை அங்கே கொடுத்து நாங்கள் பட்ட அவமானங்கள் போதும் தாத்தா. இன்னும் ஒரு பெண்ணைக் கொடுக்க நாங்கள் தயாரில்லை. என் தங்கையை இவங்க வச்சிருக்கிற அழகுக்கு என் செல்லம் வேல்விழியையும் பெண் கேட்க இவங்களுக்கு எப்படி தைரியம் வருது?’’

“சசி பிடிவாதம் பிடிக்கிறான். ஏதோ ஆசைப்பட்டுவிட்டான். அவனைப் பொறுத்தவரை நல்ல பையன். யோசனை பண்ணு கார்த்தி.”

“அவன் வேல்விழியை சுற்றி சுற்றி வந்துட்டே இருக்கிறான். இது நல்லதிற்கில்லை. நீங்களே அங்க இதுபற்றி சொல்லிவிடுங்கள்.”

மாசிலாமணி, தோல்வியுடன் திரும்பினார். மஹேந்திரனுக்கு கோபமான கோபம். தன் மனைவி பானுவைத் திட்டித் தீர்த்தார். “எல்லாம் இந்த சசியால் வர்ற வினை. உன் அண்ணன் பெரிய கொம்பனா? எங்கேயிருந்து அவன் பெண்ணுக்கு வரன் வருதுன்னு நானும் பார்க்கத்தான் போகிறேன்.” மஹேந்திரன் கருவினார்.

இங்கு, கார்த்தியின் வீட்டில் கோபியும் கோதையும் வேலுக்கு கொடுத்தனுப்ப என்று கொல்லைக் கடைசியில் இருந்த மரத்திலிருந்து இலந்தைப்பழங்களை சேகரித்துக்கொண்டு வந்தனர். அதற்குள் வேல் புறப்பட்டுப்போய் விட்டிருந்ததைக் கண்டு இருவருமே ஏமாற்றம் அடைந்தனர்.

“வேலுகிட்ட. எலந்தப்பழம் பறிச்சிகிட்டு வரேன்னு சொல்லிட்டுதானே போனேன்”

“நீ ஒன்னு. எல்லா பழத்தையும் அதோட சினேகிதப் பொண்ணுங்களுக்குத்தான் கொடுக்கப்போகுது. அதுக்குப்போய் இப்படி புலம்புரியே.” கோதை தன் கணவனை சமாதானம் செய்தாள்.

அகிலாண்டெஸ்வரி ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள். சரி சரி போய் வேலையைப் பாருங்கள் என அவர்களுக்கு கட்டளை இட்டாள். இருபது வருடங்களுக்கு முன், கோபி தன் வீட்டிற்கு வந்த அந்த தினம் குறித்து அவள் எண்ணிப்பார்த்தாள். ஐந்து வயதே ஆகி இருந்த இந்த கோபியின் கையைப் பிடித்துக்கொண்டு அவனுடைய தந்தை வாசலில் நின்றிருந்த காட்சி மனக்கண்முன்னே நிழலாடியது.

கோபியும் அவன் தந்தை தணிகாசலமும் வாசலில் நின்றிருந்தனர். ஐயா!, இந்த பையனை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இட்ட வேலைகளை செய்து கொண்டு இங்கேயே இருக்கட்டும். சம்பளமெல்லாம் தேவை இல்லை. என் வீட்டில் வைத்திருந்தால் இவன் செத்து விடுவான் ஐயா. துண்டை வாயில் வைத்துக்கொண்டு அவர் அழுத அழுகை இன்று நினைத்தாலும் மனம் நெகிழ்ந்து போகிறதே.

ஏன் தணிகாசலம் அப்படி சொல்கிறாய்? கார்த்தி பரிவுடன் கேட்க,

“இதோ பாருங்கள் ஐயா. இவனுடைய கைகளை. சூடு போட்டிருக்கிறாள் என் வீட்டுக்காரி. தாய் இல்லாத என் மகனை பார்த்துக்கொள்வாள் என்று நினைத்து ஒரு பிடாரியை இரண்டாந்தாரமாக கட்டிக்கொண்டது தப்பா போச்சு.”

இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது கார்த்தியின் மகன், குமரன் பள்ளியிலிருந்து வந்துவிட்டான். அவனை அழைத்து வந்த மங்களத்தின் கணவர் முருகேசன்,. “வரட்டுமா ஐயா” என்று சொல்லி விடை பெற்றார். மங்களம் அந்த வீட்டில் சமையல் வேலை செய்பவர்.

“காபி குடித்துவிட்டு போயேன் முருகேசன்? மங்களம்! மங்களம்! உங்க வீட்டுக்காரருக்கு காஃபி எடுத்து வாங்க. என்றார் கார்த்தி.

அகிலாண்டேஸ்வரிக்கு; “வேல்விழி” பிறந்து ஒரு மாதமே ஆகி இருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய குமரன், தன் புத்தகப் பையை சோஃபாவில் போட்டுவிட்டு ஓடிவந்து, புதிதாகப் பிறந்திருந்த தன் தங்கையின் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தையின் கைகளை எடுத்து தன் கன்னத்தோடு ஒட்டி வைத்துக் கொண்டான். அப்பொழுது வேல் சிணுங்கவே, அவ்விடம்விட்டு அகன்று வாசலுக்கு வந்தான். அங்கு தங்கள் வீட்டிற்கு வந்திருந்த புதிய பையனைப் பார்த்தான். அவனுடைய சட்டை அழுக்காகவும் கிழிந்தும் இருந்தது. கையில் சூடு வைத்ததினால் புண்கள். கன்னங்களில் கண்ணீர்க்கரை. குமரன், உள்ளே ஓடி வந்தான். அவசரமாக தன் அலமாரியிலிருந்து புதிய சட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் “இந்தா இதை போட்டுக்க” என சொல்லி, கோபியின் கைகளில் திணித்தான். இதைப் பர்த்துக் கொண்டிருந்த கார்திக்கும் அகிலாவுக்கும் மிகவும் மகிழ்ச்சியானது. அகிலாவின் மாமியார் சுபத்ரா. குமரனை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டாள். விடுங்கள் பாட்டி என்று சொல்லிவிட்டு கோபியின் அருகே சென்று சட்டையைப் போட்டுக்கொள்ளும்படி அவனை வற்புறுத்தி போட்டுக் கொள்ளச் செய்தான்.

அதன் பின் ஒவ்வொன்றாக நிகழ்சிகள் நடந்தேறின. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

அன்று குமரனுக்கு மேஜையின் மேல் சாப்பிட தட்டு வைக்கப்பட்டது. பக்கத்தில் தரையில் கோபிக்கென்று தட்டு வைத்திருந்தார்கள். தனக்குப் பக்கத்திலேயேதான் கோபி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என குமரன் அடம்பிடித்தான். அதற்கு கோபி, “எனக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட்டால்தான் நல்லா இருக்கு” என சொன்னான். இங்கு கொண்டுவந்து விடும் முன் கோபிக்கு, அவனுடைய அப்பா கூறியிருந்த புத்திமதிகளும் அவனுடைய சித்தியின் கொடும் சொற்களும் அவனுக்கு மன முதிர்ச்சியை அளித்திருந்தது. அதன்பிறகு குமரன் தானும் கீழே இறங்கி வந்து கோபியுடன்கூட உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். கோபி, எப்பொழுதும் அவ்வீட்டாருக்கு மரியாதை கொடுக்கத் தவறியதே இல்லை. அதை எடுத்து வா; இதை அங்கே கொண்டுபோய் வை என்பன போன்ற சிறு சிறு வேலைகளையே அவ்வீட்டாரும் அவனுக்கு பணித்தனர். ஆனாலும் அந்த சின்னஞ்சிறு வயதிலும் தானாக மற்ற வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மகிழ்வுடன் செய்ய ஆரம்பித்தான். குமரனுடன் சேர்ந்து அவனும் பள்ளிக்குப் போக ஏற்பாடு செய்தார் கார்த்தி. ஆனால், அதனை கோபியே மறுத்துவிட்டான்.

எப்போதாவது தன் மகனைப் பார்க்க வரும் தணிகாசலம், “பள்ளிப் படிப்பெல்லாம் வேண்டாம். இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விசுவாசமக இரு. அது போதும். என்று சொல்லியிருந்ததால் அவன் பள்ளிக்குப் போக மறுத்துவிட்டான். தணிகாசலத்திற்கு, “இந்த நல்லமனிதர்களின் பாதுகாப்பில் கோபி நிலைத்து இருந்துகொண்டாலே போதும்” என்ற எண்ணம்.

ஆனால், பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தவுடன் குமரன், கோபிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிடுவான். குமரன்தான் ஆசிரியராம். கோபி மாணவனாம். உண்மையில் நல்லாசிரியர் விருது கொடுக்க குமரனைப் பரிந்துறை செய்யலாம். அதேமாதிரி மாணவனுக்கு பரிசுதர கோபியை பரிந்துறை செய்யலாம். இவ்வாறு இருவரும் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல தோழர்களாக இருந்தனர்.

தோழர்கள் இருவரும் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமுடன் இருந்தனர். “குமரன் மாலை நேர பள்ளிக்கூடம்” என்று பேப்பரில் எழுதி, குமரனுடைய அறையின் கதவின் மேல் ஒட்டிவைக்கப் பட்டது. சனி ஞாயிறு மட்டும்தான் விளையாட்டு வகுப்பு. வேலுக்கு ஒன்றரை வயதான போது அவள் “குமரன் மாலை நேர பள்ளிக்கூடத்தில்” நர்சரியில் சேர்க்கப்பட்டாள். அதாவது மாலை நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொண்டே கோபி பாடங்களைப் படித்தான். வேல் “ஆய்” போனால் கூட அவளுக்கு கழுவி சுத்தப் படுத்திவிடுவான். அகிலாண்டம்; “என்னிடம் சொன்னால் என்ன கோபி” என்று கடிந்து கொண்டால் “என்ன அம்மா? எங்கள் வீட்டில் என் தங்கைக்கு இதெல்லாம் செய்து பழக்கம்தான் அம்மா.”என்பான்.

பள்ளிக்கு புதிய அட்மிஷன் ஒன்றும் வந்தது. அது மங்களத்தின் மகள் கோதை. அவள் வேலைவிட நான்கு வயது மூத்தவள். அதுகாறும் மங்களத்தின் மாமியார் மங்களத்தோடு அவள் வீட்டிலேயே இருந்ததால், மங்களம் இந்த வீட்டிற்கு வந்து நிம்மதியாக சமையல் வேலை பார்க்க முடிந்தது. அவளுடைய மாமியார், வெளியூர் போகவேண்டி வந்ததால், அகிலாண்டத்தின் யோசனைபடியே கோதை, குமரன் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டாள்.

இப்படியாக அந்த நான்கு குழந்தைகளும் மாலை நேரங்களில் ஒன்றாக கூடியிருந்து படித்து, பேசி விளையாடி மகிழ்ந்திருந்தனர். மற்ற நேரங்களில், கோதை, மங்களத்திற்கு உதவியாக அடுப்படியில் ஏதேனும் சிறிய வேலைகளை செய்து கொண்டு இருப்பாள். குமரனின் பாட்டி சுபத்ராவுக்கு, உடல் நலம் பலகீனமாகிவிட்டிருந்தது. அதனால் அவர்கள் முக்கால்வாசி நேரம் தன் அறையிலேயே முடங்கிக் கிடப்பார்கள்.

குமரன், ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த போது, தன் மாலை நேர பள்ளியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அவனுக்கு ரெகார்ட் வரைவதற்கும், கடினமாக பாடங்களைப் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு, கோபிக்கு பதவி உயர்வு கோடுத்து அவனை ஆசிரியனாக்கினான். தன்னுடைய மேஜையின் மீது “திரு.குமரன் கார்த்திகேயன். தலைமை ஆசிரியர்” என்று அட்டையில் எழுதி அந்த அட்டையை இரண்டு செங்கற்களைக் கொண்டு நிறுத்தி வைத்தான். ‘கோபி, பாடங்களை படித்துக்கொண்டும்; வேலுக்கும் கோதைக்கும் பாடங்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டும் இருக்க வேண்டும். சந்தேகங்களை அவ்வப்போது தன்னிடம் வந்து கேட்டுக் கொள்ள வேண்டும்.”என்று தலைமை ஆசிரியர் கட்டளை இட்டிருந்தார். இந்த ஏற்பாடு கோபிக்கும் மிகவும் பிடித்துவிட்டது. நாட்கள் நகர்ந்தன. குமரன், அவன் படித்து வந்த உள்ளூர் பள்ளியில் நல்ல மதிப்பெண்களுடன் பன்னிரண்டாவது தேர்ச்சி பெற்றான்.

கோபியும் தபால் மூலம் பன்னிரெண்டாவது எழுதி தேர்ச்சி பெற்றான். அத்துடன் அவன், கார்த்திக்கு உதவியாக நில புலன்களைப் பார்த்துக் கொண்டும் இருந்தான். கார்த்திக்கு கோபி இல்லாமல் ஒரு வேலையும் ஒடாது.

கோதை பெரிய பெண்ணாகிவிட்டதாலும், மங்களத்தின் மாமியார் திரும்ப வந்துவிட்டதாலும் கோதையின் மாலை நேரப் படிப்பு பாதியில் நின்றது. அவள் எழுத படிக்கத் தெரிந்து கொண்டவரை முருகேசனுக்கு மிகவும் மகிழ்ச்சியே.

பழைய நாட்காட்டிகளின் இடத்தை புதியன இடம் பிடித்தன. இவ்விதம் பல முறைகள் நாட்காட்டிகள் மாறிவிட்ட காலத்தில் நாம், நம் வேலோடு கூட, மற்றவர்களையும் சந்திப்போம்.

நாம் ஊகித்திருந்தபடியே கோபிக்கும் கோதைக்கும் கல்யாணமாகி இருந்தது. எல்லாம் காதல் திருமணம்தான். மங்களதம்மாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். கார்த்தியின் வீட்டின் பக்கவாட்டில் சார்பு இறக்கி அங்குதான் கோபியும், கோதையும் குடியிருக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். பெயருக்குதான் வீடு. அவர்கள் தூங்குவதற்கு மட்டுமே அங்கு போவார்கள். அகிலாவின் வீடுதான் அவர்களது வீடு. குமரன் பட்டமேல் படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பப் பட்டிருந்தான். கோபி தபாலிலேயே படித்து பொருளாதாரத்தில் பட்டம் வாங்கியிருந்தான். கோபியும் குமரனும் அந்த வீட்டின் பிள்ளைகள் என்றே ஊர், அவர்கள் இருவரையும் சமமாகப் பார்த்தது.

சுபத்ராவுக்கு உடல் நலம் மேலும் பலகீனமாகி விட்டிருந்தது.து “எல்லாம் உன் பெண் பற்றிய கவலையினால்தான் உன் உடம்பு இப்படி பலவீனமா இருக்கு. கவலைப்படாதே அம்மா . ஒரு நாள் எல்லாம் சரியாகிப் போய்விடும். பாரேன்.” என்று கார்த்தி தன் அம்மாவைத் தேற்றுவார்.

“கைநீட்டி பெண்பிள்ளையை அடிப்பது என்ன நாகரீகம் கார்த்தி. அவளை நாம் எப்படி வளர்த்தோம். பாவம். வாயில்லாப் பூச்சியாக அந்த வீட்டில் வளைய வந்துகொணடிருக்கிறாளே நான் பெத்த மகள். அவளுக்கு வயது நாற்பதைத் தாண்டியும் கூட அவள் இவனிடம் லோல் படுவதை நினைத்தால் மனசுக்கு கஷ்டமாக இருக்கு கார்த்தி.”

சுபத்ரா கலங்குவதைப் பார்த்து கார்த்தியும் மனது ஒடிந்து போனார், “என் தங்கையை அவன் பண்ணும் கொடுமைக்கு ஒரு நாள் அவன் என் கையால் சாகத்தான் போகிறான். ஒத்தைக்காலில் நின்று பானுவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இத்தனை வருடங்கள் கழித்து இப்ப சித்தரவதை செய்வது மட்டுமில்லாது, என் பெண்ணை தன் மகனுக்கு கேட்க அவனுக்கு எவ்வளவு தைரியம்! நான் ‘வேலை’ அவன் பிள்ளைக்கு கொடுக்கமுடியாது என்று சொல்லி விட்டேன். அதுக்காக தங்கச்சி பானுவை பலமா அவன் அடித்துவிட்டானாம். இதை அவங்க வீட்டில வேலை செய்யற சிங்காரம் சொன்னான். அம்மா! .மச்சான்னு பாக்காம அவன் கையை ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் ஒடித்துப் போடுகிறேன் பாருங்கள் ”

‘”வேலை’” சசிக்கு கேட்கிறார்களா? கொடுத்தால் என்ன கார்த்தி? இவள் அங்கு போய் தன் அத்தைக்காக குரல் கொடுப்பாள். வேல் வாயாடியாக இருப்பதாலும், தைரியமான பெண்ணாக இருப்பதாலும், அவளைப் பற்றி கவலைப்படவே வேண்டாம் பார்.”

“சமயத்தில் உங்களுக்கு புத்தி சரியா வேலை செய்யாது போய்விடுகிறது. உங்கள் ஐடியாவை மஹேந்திரன் செத்தால் வேண்டுமானால் நிறைவேற்றலாம்.”

ஊரில் கோயில் தேர்த்திருவிழா வரப்போவதால், ஊரே களை கட்டியது. புதிய ரோட்டோர கடைகள் கோவிலைச் சுற்றி ஆக்கிரமித்துக்கொண்டன. குடை ராட்டினம், வளையல் கடை, பலூன், மிட்டாய்க்கடைகள், மருதாணி போட்டுவிடும் வடஇந்திய ஆட்கள், இப்படி வகை வகையாக ஊர் அலங்காரமானது. கல்லூரி விடுமுறைக்கு குமரனும் வீட்டிற்கு வந்திருந்தான்.

திருவிழாவுக்கு முதல் நாள், வேல்; கடைத்தெருவுக்கு கோதையுடனும், கோபியுடனும் சென்றிருந்தாள். வடநாட்டுக்காரர் ஒருவர் வேலுக்கு மருதாணி போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசி; “நானும் கூட நல்லா மருதாணி போட்டுவிடுவேன். உன் கைத்தலம் பற்ற நான் என்ன செய்ய வேண்டும் சொல்.” எனக், காதலுடன் கேட்டான்.

உடனே, கோபி, அதற்கு பதில் சொல்ல வாய் திறந்தான். “பொறுங்கள். கோபின்னா, நானே பதிலை சொல்கிறேன். என அவள் வாயடிக்க ஆரம்பிக்கும் முன்; அங்கு வந்த சசியின் அப்பா, மஹேந்திரன், “என்ன மருமகளே! கோபி உனக்கு அண்ணனா? நீ அவனுக்கு தங்கையா? அப்ப அவன் சித்தியிடம் வளரும் மஹாராணி யாராம்? அந்த மஹாராணிக்கு இந்த மஹேந்திரன் பொருத்தமாய் இருப்பேன்தானே?”

இதனைக் கேட்டுக் கொண்டே பின்னால் வந்த குமரன், “என் அடிக்கு பதில் சொல்லிவிட்டு பேசுடா நாயே. அத்தையை அடித்தாய் அல்லவா? இந்தா வாங்கிக்கொள்.” என்று கை ஒங்க, சசி, அதனைத் தடுத்து, “மன்னிச்சிகோ குமரன்.” என்று சொல்லி குடி போதையில் இருந்த தன் அப்பாவை இழுத்துக்கொண்டு போனான்.

“அம்மாவை அடிக்கும் அப்பாவைத் தட்டிக் கேட்க துப்பில்லை. பொண்ணுங்களுக்கு மருதாணி போட வந்துட்டான்” குமரன் சத்தம் போட, கோபியும், அவன் பங்குக்கு “குடிகார முட்டாளே! என் தங்கை பற்றி பேசினால் தொலைத்து விடுவேன். தொலைத்து” என்று ஆவேசமாக கத்தினான்.

மக்கள் கூட்டமாக சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டனர்

குமரனும், ”ராஸ்கல்! தப்பித்தாய். மாமாவாச்சேன்னு மரியாதை கொடுத்தால் கெட்டுக் குட்டிச்சுவராக போய்க்கொண்டிருக்கிறாய்” என கூப்பாடு போட்டான்.

இந்நிகழ்ச்சி நடந்த இரண்டாவது நாளில் மஹேந்திரன், அவருடைய வயல் வரப்பில் இருந்த மோட்டார் அறையில் இறந்து கிடந்தார்.

அதனால் ஊரில் போலீஸ்க்காரர்களின் நடமாட்டம் அதிகரித்தது. விசாரணை என்ற பெயரில் கெடுபிடிகள். ஊர் பெரிய தனக்காரர்களில் ஒருவர் இறந்துவிட்டதால் கோயில் தேரோட்டம் நின்று போனது. இறந்து போன மஹேந்திரன்; ஊரில் கெட்ட பெயர் எடுத்திருந்தாலும், அவருடைய அப்பா, ஊருக்காக நிறைய தர்ம காரியங்கள் பண்ணியிருந்ததால், ஊர்மக்கள் மஹேந்திரனுக்காக துக்கம் அனுஷ்டித்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன் கடைத்தெருவில் நடந்த சச்சரவு பற்றிய விவரம் வெளியில் கசிந்தது. போலீஸ், கோபியையும், குமரனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் விசாரணையின் போது “அந்த குடும்பத்தில் எல்லோருக்குமே என் கணவரைக் கண்டால் ஆகாது.” என்று பானு உளறி வைத்திருந்தாள். அதனால் கோபியும் குமரனும் பலத்த காவலில் வைக்கப்பட்டனர். கார்த்தியின் வீட்டில் அனைவரும் கோதை உட்பட ஆடிப்போனார்கள். கார்த்தி, கோபியின் அப்பா தணிகாசலத்தையும் உடன்அழைத்துக்கொண்டு, பல இடங்களூக்கும் சென்றும், அனேக நபர்களைப் பார்த்தும், நடந்தனவற்றை எடுத்துக்கூறியும் குமரனையும் கோபியையும் விடுவித்து அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினார்.

அந்த குடும்பத்திற்கு இது கெட்ட நேரம் போலும். சுபத்திரா, பல வருடங்களாக காலடி எடுத்து வைத்திராத தன் மகளின் வீட்டை நோக்கி வேகமாக போவதைப் பார்த்து, கோபியும், குமரனும் செய்வதறியாது திகைத்து நின்றனர். வேல், தன் பாட்டியைத் தடுத்தாள். “அத்தைக்கும் சேர்த்து தலை முழிகி விடுவோம் பாட்டி. அந்த குடும்பம் இப்ப நமக்கு ஜன்ம பகையாகிவிட்டது. அத்தையோடு நீங்கள் பேச்சு வைத்துக் கொள்ளகூடாது. என்ன? அவங்ககிட்ட போய் கெஞ்சப் போகிறீர்களா?”

அடச்சீ ! அவளை நான்கு வார்த்தை கேட்கப்போகிறேன். அவ நாக்கை அவளே பிடிங்கிகிட்டு சாகட்டும் கழுதை. அப்படி கேட்டால்தான் என் மனதுக்கு சமாதானமா இருக்கும்.”

அகிலாவும் “வேண்டாம் அத்தை. உங்க பிள்ளையே அவர் தங்கையை கேட்கட்டும். என்று சொல்லி தடுத்துப் பார்தாள். “ மாப்பிள்ளையின் இறப்புக்கு துக்கம் விசாரிக்ககூட நமக்கு கொடுத்து வைக்கலை. இப்ப போய் அவங்ககிட்ட சண்டை போடனுமா?”

அவ என் பெண்ணே இல்லை என்று சொல்லி அவ மூஞ்சியில காரித்துப்பிவிட்டு வரேன் அகிலா. அந்த ராட்ஷசிக்கு அப்பதான் புத்தி வரும்.

அவ்வளவு கோபமாக போன சுபத்ராவை மயங்கிய நிலையில் சிங்காரம் தோளில் சுமந்துகொண்டு வந்து வீட்டில் சேர்த்தான். சுபத்ரா; வாசற்படியில் தடுக்கி விழுந்ததால் மயக்கம் அடைந்து விட்டதாக சொன்னான். “பானு அம்மா ஒரு வருடத்திற்கு வெளியில் வரக்கூடாது என்பதால் என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.” சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டான். அப்பொழுது கண் விழித்துக்கொண்ட சுபத்ரா, அவன் போவதையே நிலைத்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது அத்தை?

அங்கே என்ன நடந்தது?

வீட்டில் உள்ளவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுபத்ரா மௌனம் சாதித்தார்கள். அடுத்த நாள், பானு புகாரை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும், மஹேந்திரனின் பர்ஸ், செயின், மற்றும் தங்க கெடிகாரம், இவை எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதால், பெரும் செல்வந்தரான தன் அண்ணன் வீட்டினர் கொலையாளியாக இருக்க முடியாது என்றும் மோட்டார் பம்ப்செட் அறை; நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்ததால், வழிப்போக்கு யாரோதான் கொலை செய்திருக்கக் கூடும். என்றும் பானு சொல்ல; போலிஸ் அதிகாரிகளின் கவனம் நெடுஞ்சாலைத் திருடர்களை நோக்கி திரும்பியது.

போஸ்ட் மர்டம் ரிப்போர்ட் வந்தது. பின் மண்டையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்திருப்பதாக ரிபோர்ட் சொன்னது. இது சம்பந்தமாக அங்கு சுற்றிக்கொண்டிருந்த யாரோ ஒரு வழிப்போக்கன், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். இந்த செய்தி நாளேடுகளில் வெளியானது. ஊரில் பதட்டம் கொஞ்சம் குறைந்தது. ஆனால் கார்த்தியின் வீட்டில் எல்லோருமே இன்னதென்று தெரியாத மன நிலையில் உழன்று கொண்டிருந்தனர். வெவ்வேறு சிந்தனைகள் ஒவ்வொருவர் மனதிலும் கேள்விகளாகவும் குழப்பமாகவும் எழுந்து வாட்டிக்கொண்டிருந்தது.

கார்த்திக்கு; போலீஸின் முடிவு தவறானதாக தோன்றியது. போலீஸ் திசைதிருப்பப்பட்டுவிட்டதாக நினைத்தார். என் தங்கையின் கணவனைக் கொல்ல எவனுக்கு தைரியம் உண்டானது என அவர் தீவிரமாக ஆலோசனை செய்தார். தன் பிள்ளைகள் மேல் சந்தேகம் இருப்பதாக பானு சொன்னது யாருடைய நிர்பந்தத்தால்? என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து அவர் மனதை ஆக்கிரமித்துக்கொண்டது. மேலும் யாராவது இறந்து போனால் ஒரு வருடத்திற்குள் அவ்வீட்டில் திருமணம் ஒன்று நடை பெற்றாக வேண்டும் என்ற நடைமுறை அவர்கள் வழக்கத்தில் இருந்தது. வேல் சசி திருமணம் பற்றியும் அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அத்தையின் வீட்டிற்கு போய் வந்த பாட்டி; அப்பாவிடம் கூட அதனைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் மௌனம் காப்பது ஏன்? பாட்டி எப்போதும் எதையோ சிந்தித்துக்கொண்டே இருப்பது ஏன்? கடைத்தெருவில் அன்று நடந்த சம்பவத்தினால், வேல் வெளியில் போவதையே தவிர்த்து வந்தாள். மாமாவின் சாவில் ஏதோ மர்மம் இருக்கு. நிஜக் கொலை காரனை கைது பண்ணிவிட்டார்கள் என்றால்தான் தங்கள் குடும்ப மானம் காப்பாற்றப்படும். யாரோ ஒரு அப்பாவியை மாட்டி விட்டுவிட்டு, பணம் கொடுத்து கார்த்தி தப்பித்துக் கொண்டார். என்று ஊர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று கோபின்னா அன்றைக்கே சொன்னார். வேலுக்கு இவ்வாறான சிந்தனை ஓட்டம் வலுவாக எழுந்தது.

“பானுவை, அந்த அப்பாவியான அவளை, யாரோ பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. யார் அவர்கள்? வேல் சசி திருமணம் பானுவுக்கு ஒரு பலத்தை கொடுக்கும்.” இது சுபத்ராவின் எண்ணம்.

அகிலா பற்றி கேட்கவே வேண்டாம். “இப்படியாக பிள்ளைகளை விசாரணைக்காக போலீஸ் பிடித்துக்கொண்டு போனதால் எந்த மூஞ்சியுடன் வேலுக்கு எங்கே வெளியில் மாப்பிள்ளை பார்ப்பது? சசியோ வேல் மேல் அன்பாக இருக்கிறான். அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் என்றால் பிரச்சினை ஒன்றும் இருக்காது.”

குமரன் நினைத்தான் “சசி அன்று தன்னிடம் மன்னிப்பு கேட்ட போது அவன் முகம் பரிதாபமாக இருந்தது. பாவம் அவன். தன் தந்தையையும் இப்ப இழந்துவிட்டான். சிறு வயதில் இரு குடும்பங்களும் ராசியாக இருந்த போது குமரனுக்கு சசி நல்ல நண்பனாக இருந்தான். அவன் அப்பா குடிப்பழக்கதுக்கு ஆளாகி, ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல் அத்தையை அடிக்க ஆரம்பித்ததால் இரு குடும்பங்களுக்கும் போக்குவரத்து நின்று போனது. சசியைப் பொறுத்தவரைக்கும் அவன் நல்லவன்தான். வேலுக்கு மிகவும் பொருத்தமானவன்”

கோபிக்கும், கோதைக்கும் அதுவே சரி என்று தோன்றியது. “சசி, பெரும் பணக்காரன். நல்ல வாட்ட சாட்டமாக அழகாக இருக்கிறான். வேல் தங்களை விட்டு வேறு ஊருக்கு போவதைக் காட்டிலும் உள்ளூரில் சசியைத் திருமணம் செய்து கொண்டு அவள் இங்கேயே நம் ஊரிலேயே இருக்கலாம்.

குமரன்தான் கல்யாண பேச்சை ஆரம்பித்தான், வேலுக்கு கல்யாணம் பண்ணிவிடலாம் அப்பா.

“இந்த சூழ்நிலையில் அவளுக்கு எங்கே?”

“சசிதான் ஒற்றைக்காலில் நிற்கிறானே! அவனுக்கே முடித்துவிடலாம் அப்பா” ஆமாம். ஆமாம். என்ற குரல்கள் அனைவரின் வாயிலிருந்தும் வர; வேல் மட்டும் மௌனமாக இருக்கவே “வேல்! என்னம்மா?” எனக் கேட்டார் கார்த்தி.

பாட்டியோ ”நம்ம பிள்ளைகள் மேல் அத்தை புகார் கொடுத்ததால் கோபமா அம்மா? அவளுக்கு புத்தி கொஞ்சம் மட்டு. யாராவது எதையாவது சொல்லி அவள் மனதைக் கலைத்து விட்டிருப்பார்கள். அந்த புத்தி கெட்டவ அதை நம்பியிருப்பாள், அவன் உயிரோடு இருந்தப்பவே, அவன் போக்குக்கு விட்டு விட்டாள். இப்ப சுய புத்தியிலா பேசி இருக்கப் போகிறாள்? என்று எல்லோருக்குமாக சொல்லிவிட்டு; நீ ஆவன பார் கார்த்தி.என்று முடித்தார்கள்.

முதல் காரியமாக அடுத்தநாள், சுபத்ரா, கார்த்தி, அகிலா, கோபி நால்வரும் பானுவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கப் புறபட்டுச் சென்றனர். பானுவின் வீட்டில், அவள் கணவரின் உறவினர்கள் நிறைய பேர் வந்திருந்தனர். மஹேந்திரன் இறந்த அன்றைக்கே அவர்கள் எல்லோருமே வந்தவர்கள். என்று தெரிந்துகொண்ட போது சுபத்ராவுக்கு வியப்பாக இருந்தது. “நான் இங்கு வந்த அன்று ஒருவர் கூட என் கண்களுக்குத் தென்படவில்லையே” சுபத்ராவின் பார்வை சிங்காரத்தைத் தேடியது. வீட்டோடு இருப்பவன்; அனைத்து விஷயங்களையும் அறிந்தவன்; அவனை விசாரிக்க எண்ணிய சுபத்திரா தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ? பார்ப்போம். ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும்.”

கட்டிப்பிடித்து அழுதல், மூக்கை சிந்திப் போடுதல் எல்லாம் பெண்கள் மத்தியில் நடந்து முடிந்தது. யார் யார் உண்மையில் உள்ளம் உடைந்து அழுதார்கள் என்ற கணக்கெல்லாம் நமக்கு வேண்டாம்.

துக்க வீட்டில், அகிலா, தன் மாமியாரை விட்டுவிட்டு அந்தண்டை இந்தண்டை நகர பயந்தாள் “சொந்த பெண் தாலி அறுத்த துக்கத்தை விசாரிக்க இவ்வளவு நாட்கள் கழித்து வருவதை என்னன்னு சொல்ல?”

“நீ ஒன்னு. அறுத்ததே இவர்கள்தானே.” பானுவின் நாத்தனார்கள் இருவரும் இவர்கள் காதுபட பேசிக்கொண்டார்கள்.

“கொஞ்சம் அந்த சீவலை எடுத்து வாயில போட்டுக்கோ. வாய் நம நமன்னு இருக்குன்னு சொன்னாயே. கொஞ்சம் அவல் போட்டால் வெறும் வாய்க்கு மெல்ல நல்லாதான் இருக்கும். துக்க வீட்டில் அதை எல்லாம் தேடிக்கொண்டிருக்க முடியுமா? அங்கு வந்திருந்த மஹேந்திரனின் சித்தி ‘தனம்’ யாரிடமோ சொல்வதைப் போல சொல்லிக்கொண்டு அந்த வழியாகப் போனார்கள்.

பானுவின் சொந்தத்தில் சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுபத்ரா சமயம் பார்த்து அந்த தனம்அம்மாளை நெருங்கி; துக்கத் திதி வரும் முன் ஒரு நல்ல காரியம் பண்ண வேண்டும். பானுவும் தனியா இருந்து எதுவும் செய்துகொள்ள கஷ்டப் படுவாள். உங்க பக்கத்திலிருந்து, சரின்னு பட்டா, ஒரு நல்ல நாளில் என் பேத்தி ‘வேலை’, பெண் கேட்க வாங்க.

இப்படியாக ஆரம்பித்து; ‘வேல்’ ‘சசீதரன்’ திருமணம் நல்லபடியாக முடிந்தது. வேல் தன் கணவன் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

நாட்கள் நகர்ந்தன. சசி வேலை தன் அன்பினால் குளிப்பாட்டினான். வேலுக்கும் அவனை மிகவும் பிடித்துவிட்டது. தம்பதிகள் இருவரும் தனிமையில் இருந்த ஒரு நேரத்தில், சசி, அவளை அணைத்தவாறு கேட்டான், “நான் உன்னை விரும்புவதை வெளிப்படையாக என் அப்பாவிடமும் அம்மாவிடமும் கூறி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கினேன். நீ என்னை விரும்பினாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உன் வீட்டாரிடம் ஏன் அது குறித்து நீ பேசாமல் இருந்தாய்?”

“எங்க எல்லோருக்கும் உன்னைப் பிடித்திருந்தாலும், அத்தை படும் கஷ்டங்களினால் என் வீட்டார் என்னை உங்கள் வீட்டில் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் நான் எதுவும் சொல்ல முடியாதவளாக இருந்தேன். ஆனால் சசி! உன் நச்சரிப்பு தாங்காமல் மாமா என்னைப் பெண் கேட்டார். அவர் இப்ப இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்?”

அவர் இருந்திருந்தால் இந்த கல்யாணம் நடந்திருக்குமா?

வேல் அதிர்ச்சி அடைந்தாள். “நீ என்ன சொல்கிறாய் சசி? மாமாவைக் கொன்றவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?”

“என்னை அவ்வளவு மட்டமாக நினைக்கிறாயா வேல். நானே குழப்பத்தினால்தான் உன்னிடம் அப்படி பேசினேன். கார்த்தி மாமா அவன் செத்தால் வேண்டுமானால் என் பெண்ணை சசிக்கு கொடுப்பேன் என்றாராம்.”

“நீ இப்படி பேசுவத்ற்கு என்ன அர்த்தம்?” வேல் தன்னை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள். சசியும் கோபத்துடன் அவ்விடத்திலிருந்து அகன்றான். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்திக்கொண்டனர். நீண்ட நாட்கள் இந்த பனிப்போர் தொடர்ந்துகொண்டிருந்தது..

அன்று அறுவடை ஆரம்ப நாள். சசி, சாமி கும்பிட்டுவிட்டு வயலுக்குப் போகவேண்டும். சசியை அழைத்துப் போக காரியக்காரர், வீட்டிற்கு வந்திருந்தார். மஹேந்திரனின் படத்தின் முன் கண்கள் கலங்கி சசி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த வேலுக்கும் மனதை என்னவோ செய்தது. அத்தை சொன்னபடி விபூதியையும் குங்குமத்தையும் சசிக்கு திலகமிடுவதற்காக அவற்றை எடுத்துக்கொண்டு சசியின் எதிரே சென்ற அவளை அவன் அலட்ஷியப்படுத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டான். வேல் இடிந்து போனாள். சசியின் பின்னால் சென்ற சிங்காரம், வேலைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். அப்போது அவன் நமுட்டு சிரிப்பு சிரித்தது போல அவளுக்குத் தோன்றியது. சந்தேகப்பட்டதும் போதும். அதனால் அவதிப் படுவதும் போதும் என்று வேல் எண்ணிக்கொண்டாள்.

அறுவடை முடித்து திரும்பி வரும் சசிக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்று அத்தை சொல்லி இருந்ததால், ஆரத்திக்கு தேவையான எல்லாவற்றையும் தயாராக வாசல் திண்ணையில் எடுத்து வைத்துக்கொண்டாள். தன் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சினால் தன் கணவனை மனம் நோகடித்துவிட்டதை எண்ணிய வேலுக்கு கண்கள் கலங்கியது. அவன் தன்னை அலட்சியப்படுத்தியது அவளை வாட்டியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். அதற்குள், சசி அங்கு வந்துவிடவே, அவசரம் அவசரமாகத் ஆரத்தி எடுக்கத்துவங்கினாள். அப்போது அவன் அவள் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்து,”என் மனைவி ஒருபொழுதும் கண்கலங்கக் கூடாது.” என்றான். அதனைக் கேட்ட அவளுடைய முகத்தின் மலர்ச்சிகண்டு அவனும் புன்னகைத்தான். பனிப்போர் அன்பில் உருகிக் தொலைந்து போனது.

பானு ஏதோ மந்திரித்துவிட்டமாதிரிதான் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய உலகம் தனியானது போன்றும் யாரவது பேசும் போது மட்டும் அவளுடைய உலகத்தின் வாசலுக்கு திடீரென்று அன்னியர் வந்துவிட்டது போலவும் அவள் திகைத்துப் போவதை எல்லாம் பார்த்து வேலுக்கு பானுவின் மேல் பரிதாபம் ஏற்பட்டது. கணவன் இறந்த துக்கம் காலப் போக்கில்தான் தானகவே மாறவேண்டும்.

அங்கு குமரனும், கோபியும், சோளம் அறுவடை நடப்பதை கண்காணித்துக் கொண்டிருந்தனர். மரத்தடியில் மேட்டுப்பாங்கான இடத்தில் அமர்ந்து ஆட்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது குமரன்; கோபியிடம், “நான் உன்னிடம் சொன்னதைப்பற்றி யோசித்தாயா?” எனக் கேட்டான்.”

“அது பற்றி திரும்பவும் என்னிடம் கேட்டால் உன்னோடு பேசுவதையே நிறுத்திவிடுவேன் குமரன்.”

“சரி உன்னிடம் கேட்கப் போவதில்லை. சம்பந்தப்பட்டவளிடமே கேட்டுக்கொள்கிறேன். உன் தங்கை யசோதா எவ்வளவு அழகு. நான் யசோதாவை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன் கோபி. அவள் என்னை விரும்புகிறாளா? என்பதை மட்டும் கேட்டு சொல். என் வீட்டாரிடம் சம்மதம் வாங்க எனக்குத் தெரியும்.”

“கோபி அவ்விடம் விட்டு எழுந்து கொண்டான். நம் நட்பு இத்தோடு முறிந்தது. நான் இனி உன் வீட்டில் வேலை செய்யப் போவதும் இல்லை” வேகமாக நடக்கத்துவங்கினான். தன் சார்பு வீட்டுக்குள் வந்தவன்; கோதை! அடுத்த வாரம் நாம் சென்னைக்கு குடி போகிறோம். அதற்கு ஆயத்தமாக இரு என்று சொன்னான். ஒன்றும் புரியாமல் நின்ற கோதையை ஒரு புறமாக சிறிதே தள்ளிவிட்டு நேராக பெரிய வீட்டிற்குள் சென்றான். ஊஞ்சலில் அமர்ந்திருந்த அகிலாவின் கால்களைக் கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். அங்கு வந்த கார்த்திக்கு நமஸ்க்காரம் செய்தான்.

“என்ன ஆச்சு இவனுக்கு? மூளை பிரண்டு போச்சா?”

கோபி, “அடுத்தவாரம் வந்து கோதையை அழைத்துப் போகிறேன். அதுவரை அவள் இங்கு இருக்கட்டும்.” என்றான். திரும்ப சார்பு வீட்டிற்குள் சென்று ஒரு பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறிவிட்டான். பின்னாலேயே அழைத்த அகிலாவையும் சரி கார்த்தியையும் சரி அவன் பொருட்படுத்தவே இல்லை.

“அவன் நான் வளர்த்த பிள்ளைங்க. என் பிள்ளை என்னை விட்டுட்டு போகலாமா?” அகிலாவின் அழுகை கார்த்திக்கு வருத்தம் தந்தது.

“குமரன் வந்தால் விஷயம் தெரியவரும். இல்லாவிட்டாலும், கோதையை அழைத்துப் போக அவன் திரும்ப வருவான் என்று கோபியே சொல்லிவிட்டு போனானே. அப்ப பாத்துக்கலாம் விடு. அகிலாவைத் தேற்றினார் கார்த்தி.

ஒரு வாரம் கடந்து போனது. ஊருக்கு வந்த கோபி, திரும்பவும் சென்னை போக கார்த்தியிடமும், அகிலாவிடமும் விடை பெறும்போது அவர்களை அடிக்கடி வந்து பார்த்துப் போவதாக சொல்லி சமாதானப்படுத்தினான். நல்ல வேலை கிடைத்திருப்பதால். எந்த தடையும் சொல்ல வேண்டாம் என அவர்களைக் கேட்டுக்கொண்டான். அடுத்தமுறை வரும் போது வேலிடம் விவரம் சொல்லிக் கொள்வதாகவும் சொன்னான். குமரனிடம் பேசவே இல்லை.

கோபி, தன் அப்பாவிடமும் சித்தியிடமும் சொல்லிக் கொண்டான். சீக்கிரமாக யசோதைக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ற பையனாகப் பார்த்து கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணும்படியும், செலவுகளை அவனே பார்த்துக் கொள்வதாகவும் சொன்னான். அடுத்து, யசோதையிடம் சொல்லிக்கொள்ள அவளை அணுகினான். அவன் மனது ஓலமிட்டது. “என் தங்கையாகப் பிறந்துவிட்டதால், நானே உனக்கு வந்த அதிஷ்டத்தைத் தடை பண்ணுகிறேன். தங்கச்சி! உன் அழகுக்கு ஏற்றவன் குமரன். அவனே வலிய வந்து என்னிடம் உன்னைப் பெண் கேட்கிறான். என் நிலைமையைப் பாரேன். அதற்கு ஒத்துக்கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடுகிறேன்.” அவன் இவ்வாறு எண்ணியபடி யசோதையை ஏறிட்டுப் பார்த்தான். அவள், கோபியைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். கோபிக்கு எதுவும் புரியவில்லை. குமரன் இவளிடம் எதுவும் சொல்லிவிட்டானா?

கோபி; கோதையை மட்டும் இல்லாமல் அவள் பெற்றோர்களையும் தன் கூடவே அழைத்துக் கொண்டு சென்னைக்குப் போய்விட்டான்.

இங்கு வேலுக்கு சிங்காரத்தின் நடவடிக்கைகள் எதுவும் சரியானதாகப் படவில்லை. அவன் பார்வையில் இன்னதென்று புலப்படாத தீய எண்ணம் ஒளிந்திருந்ததாகப் பட்டது. இதை அவள் சசியிடம் சொன்னபோது, “எனக்கு ஒன்றும் அப்படி தெரியவில்லை வேல். வீணா குழப்பிக் கொள்ளாதே”. என்றான்.

வேல், ஒரு நாள் மொட்டைமாடியில் கைப்பிடி சுவரைப் பிடித்தவாறு நின்றுகொண்டு; வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்த பசுமையான மரங்களையும், செடிகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே அத்தை பானு; மல்லிகைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பானு, தானேதான் பூக்களைப் பறிக்கவும் கட்டவும் ஆசைப்படுவாள்.

வேல் ஏதோ உள்ளூணர்வினால் திரும்பிப் பார்க்க நேரிட்டது. அவளுக்குப் பின்னால் சிங்காரம் மிகவும் நெருங்கிய நிலையில் தன் மேல் துண்டை சுழற்றியபடி நின்றிருந்தான். உடனே அத்தை! என்று வேல் சத்தமாக கூப்பிட்டாள். கீழே இருந்து “என்னம்மா?” என்ற அத்தையின் குரலைக் கேட்டவுடன் சிங்காரம் வேகமாக அவ்விடம் விட்டு அகன்று போனான்.

இதனை யாரிடம் சொல்வது? சசி நம்பவே மாட்டான். அத்தை பானு இப்ப கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வேல், பாட்டிக்கு போன் செய்தாள்.

“என்ன பாட்டி? உன் பெண்ணையும் வீட்டைவிட்டு ஓட்டிவிட்டாய். பேத்தியையும் துரத்திவிட்டாய். அங்கு உன் மகனோடும், பேரனோடும், ஹாயா காலங்கழிக்கலாம் என்று பார்க்கிறாயா? உடனே புறப்பட்டு இங்க வந்து சேர். ”இதைக் கேட்டுக் கொண்டிருந்த பானு “களுக்” என சிரித்தாள். ரொம்ப நாட்களுக்கு அப்புறம், பானு சிரித்ததைக் கேட்ட வேல் மகிழ்ந்தாள். சுபத்ரா; வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், வேலும்; ஏன் பானுவும் தைரியம் வந்துவிட்டது போல உணர்ந்தார்கள்.

கோபி, தான் தபாலில் படித்திருந்த சான்றிதழ்களைக் கொண்டு சென்னையில் வேலையில் சேர்ந்திருந்த விவரத்தை கைபேசி மூலம் கார்த்தி குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தான். தன் உயிர் நண்பன் தன்னால் வீட்டை விட்டுப் போய்விட்டதை நினைத்து வருந்தினாலும், அவன் சேர்ந்திருந்த வேலையில் மேன்மேலும் உயர் நிலைக்கு வர நிறைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் குமரன் திருப்தியாகவே இருந்தான். அவனுக்கு யசோதாவை தனிமையில் சந்தித்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் கோவிலில் அம்மன் சன்னிதியை வலம் வந்துகொண்டிருந்தாள். மக்கள் நடமாட்டமும் இல்லாதிருந்தது. சந்தர்ப்ப வசமாக குருக்களும் அங்கு காணப்படவில்லை. யசோதா! என்ற குரலைக் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கு, குமரன் நின்றிருந்தான்.

“யசோதா! நான் உன்னை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீ சரி என்றால் என் குடும்பத்தாரிடம் நிச்சயம் சம்மதம் வாங்கிவிடுவேன்.” அவன், அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் முகம் மலர்ந்தது. புன்னகை விரிந்தது. சிரிக்க ஆரம்பித்தாள். சிரிப்பில் மகிழ்ச்சியின் எல்லையை உணர்த்த முடியுமா என்ன? உணர்த்திவிட்டாளே! அந்த தெய்வீகச் சிரிப்பு அழுகையாக ஏன் மாறியது? அந்த அழுகை, கேட்போர் மனதை உருக வைக்குமா? சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன? அந்த அழுகை, குமரனையும் தொற்றிக் கொள்ளும்படியான சோகத்தின் வெளிப்பாடு. குமரன் பதறினான். “சொல்லிவிடு யசோதா. எதுவாயினும் எனக்கு தெரிவித்துவிடு.”

குமரன்! நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா? இப்படி நீ வந்து என்னை நேசிப்பதை என்னிடம் கூறுவதாக நான் எத்தனை முறைகள் கனாக் கண்டிருப்பேன் தெரியுமா? ஆனால் எல்லாம் போய்விட்டது. போயேபோய்விட்டது. அவள் கேவினாள்.

மேற்கொண்டு அவள் என்ன சொல்லப் போகிறாள் என அறிய குமரன் காத்திருந்தான். ஆனால் அவள் வாய்திறக்கவில்லை. சொல்லிவிடு யசோதா. எது நமக்கு தடை என்பதை அறிந்து கொள்ளாமல் இவ்விடத்தை விட்டு நான் போக மாட்டேன்.

அவள் மேற்க்கொண்டு கூறிக்கொண்டிருந்த விஷயங்கள் யாவுமே குமரன் இதயத்தைக் கூறு போட்டுக் கொண்டிருந்தன. “என் அருமைக் கனவுக் காதலருக்கு என் பிரிவை மட்டுமே பரிசாகக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் என்றால் அது என் மரணம் மட்டுமே.”

அடுத்த நாள் குமரன் எங்கேயோ காணாமல் போய்விட்டான். எங்கு போனான்? ஏன் போனான்? என்பதறியாமல் கார்த்தி குடும்பம் தத்தளித்தது. அகிலாவும், கார்த்தியும் குமரன் விஷயம் வெளியில் தெரிய வேண்டாம் என முடிவெடுத்தனர். அவன் வெளியூருக்கு வேலை விஷயமாகப் போய்விட்டதாக பொய் உரைத்துக் கொண்டிருந்தனர். சுபத்ரா, வேல் வீட்டிற்குச் சென்றிருந்ததால் அவளுக்கும் சொல்லாமல் இருந்து விட்டனர்,

வேல், “அண்ணன் போனை ஏன் ஆஃப் பண்ணியே வைத்திருக்கு” என அகிலாவிடம் கேட்டாள்.

”அவன் எங்கேயோ டூர் போவதாகச் சொன்னான். போன இடத்தில் டவர் கிடைக்கவில்லை போல இருக்கு.” என அகிலா அப்போதைக்கு சொல்லி வைத்தாள்.

வேல், தன் பாட்டியிடம் “இந்த சிங்காரத்தின் நடவடிக்கைகள் சரி இல்லை பாட்டி. சசியிடம் சொன்னால் அவர் நம்பவில்லை. சமயத்தில் நான் பயப்படும்படியாககூட நடந்துகொள்கிறான்.” என கூறினாள்.

சிறிது யோசனைக்குப் பிறகு சுபத்ரா, பானு வீட்டிற்கு தான் கோபத்தோடு வந்திருந்த அன்று என்ன நடந்தது என்பதைக் கூற ஆரம்பித்தார்கள். “நான் வாசலில் தடுக்கி விழுந்தது என்னவோ உண்மைதான். என்னை எது தடுக்கி விட்டிருக்கக்கூடும் என்று இன்று வரை எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நான் உடனே சுய உணர்வை இழந்துவிடவில்லை.

அருகே நின்றிருந்த இந்த சிங்காரம் என் முகத்தின் மீது தன் துண்டை நழுவவிட்டுவிட்டு பிறகு என்னைத் தூக்குவது போல குனிந்தான். அப்புறமாகதான் நான் மயக்கமானேன். அவன் ஏதேனும் மயக்க மருந்து தயாராக வைத்திருந்தானா? நான் வருவதை ஜன்னல் வழியே பார்த்து நான் தடுக்கி விழ என்ன ஏற்பாடு செய்திருந்தான். ஒன்றும் புரியவில்லை. இல்லாவிட்டால் நான் உண்மையில் மயக்கமடைந்துவிட்டேனா? எனக்கே ஒன்றும் தெளிவாகத் தெரியாத போது என்ன நடந்தது என்ற உங்கள் கேள்விகளுக்கு நான் என்னத்தைச் சொல்ல முடியும்?

நிறைய விருந்தினர்கள் அன்று அங்கு இருந்தார்கள் என்பதை நான் அப்புறமாக தெரிந்து கொண்டதும் அந்த விருந்தினர்களை நான் சந்திக்கக் கூடாது என்பதால்தான் வாசலில் வைத்தே அவ்வாறு அவன் செயல் பட்டிருகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

நீ சொல்வதைப் பார்த்தால் துண்டை சுழற்றிக்கொண்டு சத்தமில்லாமல் உன் பின்னாடி அவன் வந்தான் என்றால் உன்னை மயக்கமடையச் செய்வதுடன் வேறு முயற்சியும் செய்யக்கூடும். எனக்கு கவலையாக இருக்கு வேல்”.

“ஆமாம் பாட்டி. அது மட்டும் இல்லை. ஒரு நாள் அத்தையின் பின்னாலும் அவன் இவ்வாறு துண்டை சுழற்றிக்கொண்டு சென்றான். அப்போது தற்செயலாக நான் எதிர்ப்பட்டதால் முண்டாசு கட்டிக்கொள்வதைப்போல பாவனை செய்தான்.”

அதுவரை இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாது மௌனமாக இருந்த பானு எழுந்து “தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்கு தள்ளாடியபடி நடந்தாள்.

“பார் உன் அத்தையை. பயந்தாங்குளி. பயத்தினால அவளுக்கு ஒழுங்கா நடக்ககூட முடியவில்லை. தண்ணீர் குடித்துக்கொண்டால் தேவலாம் போல இருக்கு அவளுக்கு”

வேலுக்கு அவ்விதம் தோன்றவில்லை. தன் மாமியார் எதையோ மறைக்கிறார்கள் என்று முதல் தடவையாக நினைக்க ஆரம்பித்தாள். இவ்வாறான தன் எண்ணத்தைப் பாட்டியிடம் சமயம் பார்த்து சொல்ல, முதலில் சுபத்ரா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாளாவட்டத்தில் சுபத்ராவுகே சந்தேகம் ஏற்படவே, பானுவை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

ஒரு நாள் வேல், சுபத்ராவுடன் கோவிலுக்குக் கிளம்பிப் போனாள். அம்மனுக்காக கட்டிவைத்திருந்த பூமாலையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதால், இருவருமாக பாதி வழியிலேயே வீட்டிற்குத் திரும்ப வந்தார்கள். வாசல் கதவு விரிய திறந்து கிடந்தது. சத்தம் இல்லாமல் இருவரும் உள்ளே போனார்கள். பானு, அவள் அறையில் இருந்தாள். ஜன்னல் வழியாக சுபத்ரா உள்ளே பார்த்ததும், திறந்து வைத்திருந்த தன் அலமாரிக் கதவை விரைந்து பூட்டிக்கொண்டு வெளியில் வந்த பானு என்ன பார்த்தீர்கள்? என்ற கேள்வி கேட்கவே சுபத்ராவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. கேள்வியே சரியில்லையே! பானு இடுபில் செறுகியிருந்த அலமாரி சாவி. சுபத்ராவின் பார்வையில் பட்டது. வெடுக்கென்று அதனைப் பறித்து வேலிடம் கொடுத்த சுபத்ரா; “வேல்! அந்த அலமாரியில் என்ன இருக்குன்னு போய்ப் பார்” என்று கட்டளை இட்டாள். திமிறிய பானுவை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

ஐயோ பாட்டி! இங்கே வந்து பாருங்கள். என வேல் கூப்பிடவே, பானுவை கையோடு இழுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள். அலமாரியில் அவிழ்க்கப்பட்டுக் கிடந்த துணிச் சுருளில், மஹேந்திரனின் செயின், தங்க கெடிகாரம், மோதிரம், அவர் அணிந்திருந்த செருப்பு, அவரது அங்கவஸ்திரம், ஆகியவைக் காணப்பட்டன.

சுபத்ரா, பானுவின் கன்னத்தில் பளார் என அறை விட்டு “என்னடி செய்திருகிறாய்?” என கூச்சலுடன் கேட்டார்கள்.

“அம்மா!. நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். நான் அந்த கொலையைச் செய்யவில்லை. கொலைகாரனைக் காப்பாற்றவே இவைகளை எடுத்து மறைத்து வைத்திருக்கிறேன்.”

சுபத்ராவுக்கு மயக்கமாக வரவே அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தாங்கி மடியில் கிடத்திய வேல் “பாட்டி! பாட்டி! ஐயோ யாராவது தண்ணீர் எடுத்துகிட்டு வாங்க.”என்று அலறிக்கொண்டேத் திரும்பிப் பார்த்தாள். அங்கு சிங்காரம் சிலை போல நின்று கொண்டிருந்தான். “சீக்கிரம் சிங்காரம். சீக்கிரம். ப்ளீஸ். சிங்காரம்” என வேல் கெஞ்சி கேட்கவே, அவன் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தான்.

அதன் பிறகு ஒரு நாளும் சுபத்ராவும், வேலும் அது குறித்தான எந்த கேள்வியையும் பானுவிடம் கேட்கவில்லை. இருவருமே உள்ளுக்குள் பயந்தார்கள். அந்த கொலையாளி யாராக இருக்கும்? அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ? யாரைக் காப்பாற்ற அவள் இத்தகைய முயற்சி எடுத்துக் கொள்கிறாள்? பதிலைத் தெரிந்துகொள்ள அவர்கள் இருவருமே விரும்பவில்லை. பானுவும் எந்த தகவலையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயார் இல்லை.

வேலைத் தனியாக அந்த வீட்டில் இருக்கச் செய்வது வேண்டாம் என்பதால், சுபத்ராவும் அங்கேயே தங்கினாள். வேல் மாசமாக வேறு இருந்தாள். இந்த நிலையில் ஒரு நாள் காலை நேரம், தணிகாசலம், கோபியின் அப்பா, அங்கு சுபத்ராவைப் பார்க்க வந்தார். அப்பொழுது வேல் பூஜை அறையில் பூஜை பண்ணிக்கொண்டு இருந்தாள். பக்கத்து அறையில், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட வேல், அவரை வரவேற்கும் பொருட்டு ஆவலுடன் இரு அறைகளுக்கும் நடுவில் இருந்த ஜன்னல் கதவைத் திறந்தாள். ஆனால், அப்பொழுது தணிகாசலம், சுபத்ராவின் காதருகே சென்று பேசினார். ஆனாலும் அவர்கள் பேசியது அவளுக்கு தெளிவாக கேட்டது. அதனை செவிமடுத்த அவள் பெரிதும் கலங்கினாள். கண்ணீருடன் திரும்பிப் பார்த்த அவள், தனக்குப் பின்னால் அருகே பானுவும், நிலைவாசலைப் பிடித்துக்கொண்டு சிங்காரமும் நின்றிருந்ததைப் பார்த்தாள். சிங்காரத்தின் உடல் குலுங்கிக் கொண்டிருந்தது. அழுகிறானா என்ன? பானுவும் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

வேலுக்கு எரிச்சலாக வந்தது. இவர்கள் இருவரும் எதற்காக இந்த நாடகம் போடுகிறார்கள்? தணிகாசலம், யசோதாவுக்கு, புத்தி பேதலித்து போனதால் டவுன் மருத்துவரிடம் காண்பிக்க சென்றபோது மேலும் அதிர்ச்சி தரக்கூடியவிஷயத்தை ‘அவள் கற்பமுற்றிருப்பதாக’ அந்த மருத்துவர் கூறியதாக சொன்னார். யார் காரணம் என்பதை புத்தி பேதலித்திருந்த யசோதாவிடமிருந்து தெரிந்து கொள்ளமுடியவில்லை.” “ஐயோ! இந்த விஷயம் கோபின்னாவை எவ்வளவு பாதிக்கும்? கோபின்னாவுக்கு ஒன்று என்றால் குமரன்னா, அப்பா, அம்மா எல்லோருமே கலங்கிப் போவார்களே! எனக்கே தாங்க முடியலையே!” அவள் மனது ஓலமிட்டது.

பாட்டியும், பேத்தியும்; பானுவோடோ, சிங்காரத்தோடோ பேசுவதை; கூடுமானவரை தவிர்த்து வந்தனர். சசி புதியதாக மொத்த விற்பனைக்கடை ஒன்றை பக்கத்து நகரில் ஆரம்பித்திருந்தான். அது குறித்து அவனுக்கு அதிக வேலைகள் இருந்தன. வீட்டைக் கவனிக்க, அம்மா, மனைவி, மற்றும் பாட்டி, உதவிக்கு சிங்காரம் இருந்ததால், அவனுக்கு தன் தொழிலில் அதிக நேரத்தை செலவிட முடிகிறதே என நினைத்து தன் மொத்த விற்பனைக்கடையை மேம்படுத்த முயற்சிகள் செய்து கொண்டிருந்தான்.

வேலை; தினமும் நடை பயிற்சி செய்யும்படி மருத்துவர் சொல்லி இருந்தார். ஒரு நாள் நடைப் பயிற்சியின் போது அவள் குளக்கரை பக்கமாக நடந்தாள். குளக்கரை ஓரம் வேப்பமரம் ஒன்று தரையோடு தரையாக கிளைகளைப் பரப்பிக்கொண்டு அடர்ந்து வளர்ந்திருந்தது. சின்னப் பெண்ணாக இருக்கையில் அதில் ஏறிக்கொண்டு ஊஞ்சல் ஆடியது நினைவுக்கு வரவே அதில் ஏறினாள். குளத்தின் மேலே நீட்டிக் கொண்டிருந்த கிளையில் ஆர்வமுடன் ஏறி அமர்ந்து கொண்டு ஊஞ்சலாட நினைக்கையில், அவள் கணவன் சசி தொலைவில் பைக்கில் வந்து கொண்டு இருப்பது அங்கிருந்தே தெரியவே ஆடாமல் அமர்ந்து கொண்டாள். பிள்ளைத்தாச்சி மனைவி மரத்தின் மேல் ஏறி ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் எந்த கணவன் பொறுத்துப் போவான்? எதிர்ப்பக்கம் அவள் பார்வை திரும்பியது. யசோதா வந்து கொண்டிருந்தாள். அவளும் மசக்கையாகத் தானே இருக்கிறாள். ஆனால் பாவம் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் இருக்கிறாள். என்றெல்லாம் நினைத்துக்கொண்டாள்.

அந்த மரத்தைன் கீழே வந்தவுடன் சசி தன் வாகனத்தை நிறுத்த, யசோதாவும், அங்கே நின்றாள்.

இப்பொழுது வேல் மரதின் இலைகள் ஊடே தன்னை நன்கு மறைத்துக் கொண்டு கவனிக்க ஆரம்பித்தாள்.

“யசோதா! நான் சொல்வதை ஏன் கேட்க மாட்டேன் என்கிறாய்? இப்படி பைத்தியமாகவே எத்தனை நாட்களுக்கு நடித்துக் கொண்டிருக்கப் போகிறாய். நம் வீட்டின் பக்கவாட்டிலேயே சார்புவீடு கட்டித் தருகிறேன். சௌகரியமாக இருக்கலாம். என்ன வசதி வேண்டுமானாலும் செய்கிறேன்.”

“இப்படி சொல்லிக்கொண்டிருப்பதை தயவு செய்து விட்டுவிடுங்கள். நான் போய்வருகிறேன்.”

இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த வேலுக்கு தலையை சுற்றியது. அப்படியே கீழே விழுந்தால் குளத்தில் தொபுக்கடீர்தான். அதனால் சமாளித்தாள். அவ்விருவரும் அங்கிருந்து அகன்றதும் மெல்ல கீழிறங்கி தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

மறு நாள், அவளுக்கு வளைகாப்பு. பானு தன் கணவன் இறந்த துக்கம் அனுஷ்டிப்பதால் ஒரு வருடத்திற்கு வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாமல் இருக்க வேண்டும் என்பது மரபு. அதனால் சசி தன் வீட்டிலேயே வளைகாப்பு நிகழ்த்த வேண்டும் எனக் கூறிவிட்டான். முக்கிய விருந்தினர்களை அழைத்திருந்தனர். வேலின் உள்ளம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழர் பண்பாடு என்ற அவளுள் ஊறிப்போன நாகரீகம் அந்த தீயை மறைத்துக் கொண்டது. வீட்டை அடைவதற்கு முன் தன் உணர்வுகளை உள்ளத் தீயிலேயே பொசுக்கிக்கொண்டாள். வளைகாப்பும் முடிந்தது. விருந்து முடிந்து விருந்தினர் விடை பெற்றுக்கொண்டனர். இரு வீட்டார்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர் நாளேட்டில் வளைகாப்பு பற்றிய விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, குமரனும் வருகை தந்திருந்தான். கோபியும், கோதையும் வந்திருந்தனர்.

கோபியும் குமரனும் வேலுடன் அவள் அறையில் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர். சசியும் அங்கு வந்து அவர்களுடன் கலந்து கொண்டான். “அண்ணா! இந்த வீட்டில் எனக்கு மூச்சு முட்டுவது போலவே இருக்கு. எப்போதான் நம்ம வீட்டிற்கு வந்து இருப்பேன் என எனக்கு ஆசையாக இருக்கு” என்று சொல்லவே குமரனும் கோபியும் பதறிப் போனார்கள். ஏனம்மா அப்படி சொல்கிறாய்? சசி அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். வேல் அழ ஆரம்பித்தாள். அழுகுரல் கேட்டு எல்லோருமே அந்த அறையில் கூடிவிட்டனர்.

“அத்தை; மாமா போட்டிருந்த செயின் இன்னும் அவரோட எல்லாத்தையும் மறைச்சு வச்சிருக்காங்க. அதுக்கெல்லாம் காரணம் கொலைகாரனைக் காப்பாற்ற என்று சொல்றாங்க. பயம்மா இருக்கு”

“இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு எல்லாத்தையும் சொல்றேன். குமரனைக் காப்பாற்றதான் அப்படி செய்தேன். அன்று குமரன், மோட்டர் ரூமிலிருந்து வெளியேறி பதை பதைப்புடன் ஒடிக் கொண்டிருந்தான். நான் பக்கத்து ஒற்றையடிப் பாதையில் வந்துகொண்டிருந்ததை அவன் பார்க்காமல் கண்மண் தெரியாமல் ஒடினான். சந்தேகப்பட்டு மோட்டார் ரூமில் சென்று பார்த்தேன். என் கணவர் இறந்து கிடந்தார். நெஞ்சில் அடித்துக்கொண்டு அழகூட எனக்கு தோன்றவில்லை. குமரனைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன். ஏதோ தீர்மானித்ததில் அவருடைய உடைமைகள் எல்லாவற்றையும் எடுத்து மடியில் கட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்துவிட்டேன்.”

“ஐயோ அத்தை. நான் மோட்டார் ரூமுக்குள் சென்றது உண்மைதான், மறைவாக சிகரெட் பிடிக்கதான் போனேன். அங்கு மாமா ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த நான் பயத்தில்தான் அப்படி ஓடினேன்.”

சில நிமிடங்கள் அந்த அறை நிசப்தமாக இருந்தது.

“அத்தை! உங்களை நான் சந்தேகப்பட்டதற்கு மன்னிசிடுங்க.”என வேல் சொல்ல, பானு; சுபத்ராவைக் கட்டிக்கொண்டு கதறினாள். “அம்மா! நீ கூட என்னை கொலைகாரின்னு என்னிடம் வெறுப்பைக் காண்பித்தாயே.” மகளை அணைத்துக் கொண்டு சுபத்ரா குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

வேல் மறுபடியும் பேசலானாள். “அப்படி என்றால் கொலை யார் செய்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒளிவு மறைவு இன்றி இருக்க வேண்டும். என் சந்தேகம் எல்லாமே வீணானது என்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். சசி! நீங்கள் யசோதாவிடம் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்க நேர்ந்தது. அவள் அப்போது தெளிவாக உங்களிடம் பேசினாள். அவளிடம் எத்தனை நாட்களுக்கு இப்படி பைத்தியமாக நடித்துக் கொண்டிருக்கப் போகிறாய் என்று நீங்கள் கேட்டீர்கள். என் வீட்டிலேயே உனக்கு பக்கவாட்டு சார்பு இறக்கித்தருகிறேன். வசதிகள் செய்து தருகிறேன் என்று சொன்னீர்கள்.”

அனைவரும், பானு உட்பட; சசியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பதிலைச் சொன்னது சசி இல்லை. குமரன்.

“யசோதையின் வயிற்றில் வளர்வது சசிக்கு தம்பியாகவோ தங்கையாகவோ இருக்கலாம்.” என்பதால்தான். அவ்வித ஏற்பாடுகளைச் செய்ய சசி விரும்பியிருக்கலாம்”

சசி சொல்ல ஆரம்பித்தான். “மேலும், சிங்காரம் யசோதாவின் மேல் ஒருதலைக்காதல் கொண்டிருந்தான். அவன்; யசோதா பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருந்தும், அவளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்த தயாராக இருந்தான். ஆதலால் நானும் அவனை ஏற்றுக் கொள்ளும்படி அவளை மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்”.

“ஆனால் சிங்காரம் ஏன் தன் மேல் துண்டை சுழற்றிக்கொண்டு எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருந்தான்?”

அப்போது அறைக் கதவினருகே சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த சிங்காரம், எழுந்து தரையில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து அனைவரையும் வணங்கினான்.

அவன் சொல்லத் துவங்கினான். “ஐயா அவுங்க செய்து கொண்டிருந்த கொடுஞ்செயலைப் பார்க்க நேரிட்ட போது என் அதீத கோபத்தினால், அதிர்ச்சியினால், ஐயாவை அங்கிருந்த இரும்பு கம்பியினால் அடித்து கொலை செய்தது நான்தான். குடிவெறியில் அன்று இருந்த ஐயா; தன் மேல் துண்டை யசோதாவின் வாயில் அடைத்துவிட்டு, அவள் கைகளை இறுக்கிப் பிடித்தபடி அவள் மேல் விழுந்து கிடந்தார். நான் போட்ட அடியில் ஐயா இறந்துவிட்டார் என்று அறிந்து கொண்ட நான் யசோதாவை இழுத்துக்கொண்டு மோட்டார் ரூமைவிட்டு வெளியில் வந்து பக்கத்திலிருந்த சோளக் கொல்லைக்குள் சென்று ஒளிந்து கொண்டேன். அவ்வழியாக இருந்த பாதையில் பானு அம்மா வந்துகொண்டிருந்தார்கள். குமரனை நான் பார்க்கவில்லை அவர் மற்றொரு பாதையில்தான் ஓடியிருக்க வேண்டும்.

கொஞ்ச நேரத்தில் ‘பானுஅம்மா’ ஓட்டமும் நடையுமாக திரும்பி சென்றதைப் பார்த்தேன். அதுவரை அதிர்ச்சியில் இருந்த யசோதாவைத் தேற்றி அவள் வீடுவரைக்கும் உடன் சென்று விட்டுவிட்டு வந்தேன்.”

அந்த அறையில் யாருமே எதுவும் பேசாமல் கொலு பொம்மைகளைப் போலவே அமர்ந்திருந்தார்கள்.

சிங்காரம் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடர்ந்தான். “ஒரு கொலையை செய்துவிட்டேனே என்ற உறுத்தல் இருந்தாலும் நான் நேசித்த பெண்ணை இப்படி உருக்குலைத்த ஐயாவின் வீட்டில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடத்திவிட வேண்டும் என்ற உந்துதல் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அன்று இங்க வந்த விருந்தினர்கள் எல்லோரும் அந்த அறையில் ஐயாவின் படத்தருகே படையல் போட்டு வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்பதான் சுபத்ராஅம்மா தொலைவில் நடந்து வந்து கொண்டிருப்பதப் பார்த்தேன்.

மெல்லிய நூல்களை படியின் குறுக்கே கட்டினேன். அதில் அவர்கள் தடுக்கி விழுந்தார்கள். என் மேல்துண்டில் மயக்க அருந்தை முன்னதாக தடவி வைத்திருந்தேன். அதை அவர்கள் மேலே நழுவ விட்டு பிறகுஅவர்களைத் தூக்கிவிடுவது போல குனிந்து மருந்தை அவர்கள் சுவாசிக்கும்படி செய்தேன்.உடனேயே மயக்கமடைந்தார்கள். அவர்களை அப்போதே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட எண்ணினேன். இவர்களைக் கொல்வதைவிட ஐயாவுக்கு இன்னும் நெருக்கமான சொந்தம் யாரையாவது கொன்றால் நல்லது என தோன்றியதால் அவர்களைத் தோலில் தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டேன். சுபத்ரா அம்மா இங்கு வந்ததோ,போனதோ பானு அம்மாவுக்குத் தெரியாது.

அப்படிதான் பானுஅம்மாவைக் கொல்ல நினைத்தபோது அவர்கள் கையால் நான் சாப்பிட்டு வளர்ந்ததை நினைத்தேன். வேலைக் கொன்றுவிட எண்ணியபோதெல்லாம் கோபின்னா கோபின்னா என்று அவர்கள் பாசமுடன் கோபியை குறிப்பிடுவது ஞாபகத்திற்கு வந்தது. யசோதாவுக்கு ஒன்று என்றால் கலங்கக்கூடிய குடும்பம் கார்த்தி ஐயாவின் குடும்பம். நான் புரிந்து கொண்டது என்ன என்றால் என்னால் யாரையும் கொலை செய்ய முடியாது நான் பிறவி கொலைகாரன் இல்லை என்பதுதான். நான் போலீசில் சரணடையப் போகிறேன்.”அவன் எழுந்து வெளியேறிப் போனான்.

வேலுக்கும் யசோதாவுக்கும் ஒரே நேரத்தில் குழந்தைகள் பிறந்தன. யசோதா பிரசவத்தின் போது கடவுளுடன் கலந்துவிட்டதால், வேல் இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாகப் பாவித்து வளர்த்து வரலானாள். இரு குழந்தைகளும் ஒரே அச்சில் வார்த்தது போல உருவில் ஒற்றுமையுடன் இருந்தனர். ஒருநாள், யாரோ தங்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பதை வேல் பார்த்தாள். அந்த புதிய ஆள் தன் மேல் துண்டை இருகைகளிலும் பிடித்துக் கொண்டு சுழற்றிக் கொண்டே வருவதைப் பார்த்தாள். அருகில் வந்தவுடன் அந்த ஆள் சொன்னான். சிங்காரம் உண்மையை சொல்லியதால் தான் விடுதலை அடைந்துவிட்டதாக சொன்னான். சாலைகளில் சுற்றித் திரியாதே. இந்த வீட்டிற்குப் போ. வேலைகொடுப்பார்கள் என்று சிங்காரம் சொன்னதாகத் தெரிவித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *