யாரைத் தான் நம்புவதோ?!

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 5,221 
 

பாகம் 1| பாகம் 2

மூன்றாவது கியருக்கு மாற்றி மாருதி காரின் வேகத்தை அதிகப்படுத்தி மகேந்திரன் “பயணங்கள் முடிவதில்லை” சினிமா பாடல்களில் தனக்கு மிகப்பிடித்த “இளைய நிலா” பாடல் கேட்டு…. அவனும் சேர்ந்து பாடியவாறே காரை ஓட்டினான்.

கார் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சமீபத்தில் திண்டிவனத்தை கடந்திருந்தது. திண்டிவனத்திற்கு முன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட வடை ஏப்பம் வர…. கொஞ்சம் தண்ணீர் அருந்தினான்.

பொழுது முழுதாக சாயவில்லை என்றாலும் பொளர்ணமி இளைய நிலா வலதுபுறம் தூரத்தில் பிரகாசமாக காட்சியளித்தது… இந்த இளையநிலா அடுத்த வாரம் இந்நேரம் எனக்கு சொந்தமாகி விடுவாள் என்று நினைத்தவனுக்கு உடல் பனிபோல் உருகி மெய்சிலிர்க்க வைத்தது…

காவிரி – அவன் உயிருக்குயிராய் காதலித்து அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போடப் போகிறான், உற்றார் உறவினர் நல்லாசியுடன். தன் காதல், கல்யாணம் வரை பிரச்சனையின்றி அமைந்ததை நினைத்து ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டான்.

காவிரி, அவனைவிட கீழ் ஜாதியை சேர்ந்தவள், சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள், அழகில் அவனுக்கு இளையநிலா… எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் அவள் டெய்லர் வேலை பார்த்து வந்தாள், அவனோ கம்பெனியில் மூன்று பார்ட்னர்களில் ஒருவன்.

முதலில் அவள் அழகில் மட்டும் மயங்கி காதலித்தவன், பின்னர் அவளுடைய வறுமையான, நெருக்கடி மிகுந்த குடும்ப நிலவரத்தை அறிந்து ஒரு அனுதாபத்துடனும் அவளை மேலும் நெருங்கினான்.

வாழ்க்கையில் துன்புறும் ஜீவன்களை ஆழ்ந்த சந்தோஷத்தில் மூழ்க வைத்து அதில் பெரும் இன்பத்தை பேரின்ப மாக அவன் சிறு வயதிலிருந்தே கருதியதால், காவிரியை மணந்து கொண்டு அவளையும் அவளை சார்ந்த குடும்பத்தாரையும் சந்தோஷக் கடலில் மூழ்க வைக்க அவன் மிகவும் அவசரப்பட்டான். இல்லையென்றால், வேலைக்கு சேர்ந்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத காவிரியை அவ்வளவு சீக்கிரத்தில் காதலித்து கல்யாணம் வரை வந்து இருக்க மாட்டான்.

வேலைக்காரி காவிரி இன்னும் ஒரு வாரத்தில் ஒரு எஜமானி….. இவனோ திருச்சியில் துவங்க இருக்கும் புது எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு இன்னும் ஒரு மாதத்தில் முழு எஜமான் ஆகப் போகிறான். இந்த புது கம்பெனியில் இவன் கூட பிறந்த மனோகரன் ஒரு பங்கு என்றாலும் பொறுப்புகள் மகேந்திரனுக்கு தான் அதிகம்.

‘மனோகரன் ஜப்பானில் என்னதான் செய்து கொண்டிருக்கிறான்?… ஒன்றரை மாத காலமாக ஒரு கம்பெனிக்கு தேவையான ஒரு நவீன தானியங்கி இயந்திரத்தை கண்டு அதன் வேலைகளை கற்றுக்கொண்டு ஆர்டர் புக் செய்து விட்டு வர ஏன் இவ்வளவு நாள் ஆகிறது? என் கல்யாணத்திற்கு வரமாட்டான் போலிருக்கிறதே!’

“டேய்… இது ரிஜிஸ்டர் மேரேஜ் தான்… உன்னால வர முடியாதுன்னா தேதியை தள்ளிப் போட்டுக்கலாம்…” சென்றவாரம் மகேந்திரன் மனோகரனிடம் தொலைபேசியில் பேச “அப்படி எல்லாம் ஒன்றும் தள்ளிப்போட வேண்டாம்… நான் கண்டிப்பாக சரியான தேதிக்கு வந்துவிட முயற்சிக்கிறேன்” என்று மனோகரன் பதில் தந்தான்.

ஆனால் திருமண நாள் நெருங்கி விட்டதே ஒழிய அவன் வந்ததாகத் தெரியவில்லை. திருமணத்தை தள்ளிப்போடும் எண்ணமும் காவிரியின் உறவினர்களால் முறியடிக்கப்பட்டது. ஆக மகேந்திரன் கல்யாணம், கூட பிறந்த மனோகரன் இல்லாமலேயே நடக்கவிருக்கிறது…. அதை நினைத்துப் பார்க்க மகேந்திரனுக்கு கஷ்டமாகவே இருந்தது.

சாலையில் மங்கிய வெளிச்சம் காரின் விளக்குகளை இன்னும் 15 நிமிடத்தில் எரியவிட வேண்டுமென்பதை நினைவுபடுத்தியது…. மணி 6 ஆகிக் கொண்டிருந்தது.

மகேந்திரன் தனக்குப் பிடித்த போனி-எம், BoneyM, ஆங்கில சி டியை எடுத்து சொருகி அதன் பாட்டை ரசிக்கலானான்…..முதல் பாடல் முடிந்ததும் தனக்கு மிகப்பிடித்த நான்காவது பாடலுக்கு மாற்ற தன் பார்வையை சற்றே சி டி திரைமேல் பதித்து அந்த நான்காவது பாடல் வருகிறதா என்று…..சற்றே சாலையையும் சி டி திரையையும் பார்த்துக் கொண்டிருக்கையில்…. திடீரென…

‘பட்ட்ட்ட்க்க்க்… தட்ட்ட்ப்ப்… தட் சப்ப்ப்ட்ட்….சப்ப்கட்ட்’

காரின் முன் பகுதி மேல் திடீரென்று ஏதோ விழ…. திகிலுடன் அவசர பிரேக்கை அழுத்தினான்…இரத்தம் உறைந்தது…இதயத்துடிப்பு அதிகரித்தது….

“என்ன நடந்தது?…என்ன விழுந்தது?” புரியவில்லை.

சாலையோர புளிய மரத்தில் இருந்து தான் ஏதோ ஒன்று விழுந்தது…..இல்லை குதித்தது???

பதட்டத்துடன் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கதவை திறந்து சாலையில் இறங்கினான்…. மனம் ஆண்டவனை வேண்டிக் கொள்ள காரின் முன் சென்று குனிந்து பார்த்தான்.

அங்கு ஒன்றுமில்லை.

காரைச் சுற்றி வந்தவாறு குனிந்து குனிந்து பார்க்க…. காருக்கு பின்னால் கீழே ஒரு சிறுமியின் உடல்… இரத்தம் பீற்றிக்கொண்டு வெளியேறி சாலையில் பரவிக்கொண்டிருந்தது…. அந்த சிறுமிக்கு வயது 6 அல்லது 7 இருக்கும்….

தொடையிலிருந்து மார்புவரை காரின் இடது பக்க முன் மற்றும் பின்புற டயர்கள் ஏறி இறங்கி இருந்தது. அவள் கண்கள் மேல் நோக்கி கொடூரமாக அசைய…. இத்தகைய காட்சியை இதுவரை வாழ்நாளில் கண்டிராத மகேந்திரன் கதிகலங்கிப் போய் உடல் நடுங்க….. குபுக்கென்று வாந்தி வர…ஓடிப்போய் சாலை ஓரமாக வாந்தி எடுத்தான்.

அந்தச் சிறுமியின் அசைவுகள் சட்டென்று நின்றது. இவன் இதயத்துடிப்பும் ஒரு நொடி நின்றது.

‘இனி என்ன செய்வது?….கல்யாண மேடைக்கு போக வேண்டிய நான்… நீதிமன்ற மேடைக்கு போக வேண்டியதாகிவிட்டது…. என் மேல் தவறில்லை…. வாகனங்கள் விரைந்து செல்லும் இத்தகைய நெடுஞ்சாலையில்…. அதுவும் மரத்திலிருந்து திடுதிப்பென்று இது விழுந்தால்?….. குதித்தால்???… யார் தவறு???…. நிச்சயம் என் தவறில்லை!. இதற்காக என் வாழ்க்கையையும் என் இளைய நிலா காவிரியின் வாழ்க்கையையும் பாழாக்கக் கூடாது…இந்த சிறுமி, யார் இவள்?….ஏன் மரத்திலிருந்து இப்படி விழுந்தாள்?….இல்லை குதித்தாள்??’

மகேந்திரன் மரத்தை நோட்டமிட்டான்… அடர்ந்த புளியமரம் எதையும் புலப்படுத்தவில்லை.. ‘ஆனால் ஏன்…. ஏன் இப்படி?’

சுற்றும் முற்றும் பார்த்தான்… ஒன்றும் புலப்படவில்லை… யாரும் தென்படவில்லை. அதுவரை சந்தோஷம் என மனம் லேசாகியது….

சாலையில் இரு பக்கமும் கண்கள் எட்டியவரை நோட்டமிட்டான்…. எந்த வாகனமும் தென்படவில்லை. இன்னும் கொஞ்சம் தெம்பானான்.

வயல் பக்கம் நோட்டமிட ஆள்நடமாட்டம் ஒன்றும் தெரியவில்லை.

சட்டென ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டான். திடீர் முடிவின் காரணமாக அதிகரித்த இதயத்துடிப்பை நிதானம் செய்ய முயற்சித்தான்….கைத்துணியை எடுத்து முகத்தின் வியர்வையை துடைத்துக் கொண்டான்.

இதுவரை சம்பவம் நடந்து முழுதாக இரண்டு-மூன்று நிமிடம் ஆகியிருக்கும்…. இன்னும் தாமதிக்கக் கூடாது…. காரை இயக்கி பறக்க விட்டான்…. நிலைமை மோசமாகி போலீஸ் தேடி வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன்…

‘அந்தச் சிறுமி…. யார் இவள்?….எங்கோ பார்த்தது போல் தெரிகிறதே அந்த பிஞ்சு முகம்!’ அவன் மனம் குழம்பியது….

நான்கு கிலோமீட்டர் தொலைவில் அந்த நெடுஞ்சாலையில் ஓடும் பலவித வாகனங்களின் எண்ணிக்கையை சென்சஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு குழு அந்த மாருதி காரை பதிவு செய்தபின் தங்கள் பணி அன்று முடிந்ததாக அறிவித்துக் கொண்டு புறப்பட, தங்களை அழைத்துச் செல்லும் வண்டிக்காக காத்திருக்கலானார்கள்.

***

சம்பவம் நடந்த அன்று….

பிற்பகல் 2 மணியளவில், சென்னை அண்ணாநகரில் பத்தாவது மெயின் ரோட்டில் இருந்த அந்த பெரிய பங்களாவில் டெலிஃபோன் ஒலித்தது.

“நிச்சயம் அவனாகத் தான் இருக்க வேண்டும்” என்று பதறியவாறு அதை எடுத்தார், பேங்க் மேனேஜர் பதவியில் இருந்து இரண்டு வருடங்கள் முன்பு ரிடையர் ஆன ஆறுமுகம் என்பவர்.

“ஹலோ….” அவர் குரல் நடுங்கியது.

“சொன்னபடி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி…. மூனு லட்சம் பணம் கிடைச்சது… ரொம்ப ரொம்ப நன்றி! இது பல பேருக்கு தெரியக் கூடாத காரியம்கிறதாலே நான் ரொம்ப முன்யோசனையுடன் எல்லாத்தையும் செய்துகிட்டு வரேன்….. உங்களுக்கு போலீஸுக்கு தெரியாமல் உங்க பேத்தியை உங்களிடம் ஒப்படைக்க ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்க வேண்டியிருக்கு….” மறுமுனையில் குரல் பேசியது.

“என் பேத்தி எப்படி இருக்கா? நல்லபடியா வெச்சிருக்கிறதானே?… பேத்தியை பார்த்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது!” ஆறுமுகம் அழுதார்.

“ரொம்ப அடம் பிடிக்கிறாள்…. சமாளித்துக் கொண்டு இருக்கிறேன்.

திண்டிவனம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி கரெக்டா 22 நிமிஷம் முடியறப்போ வந்து நில்லுங்க…. அங்கே ஒரு புளியமரம் இருக்கு…. அங்கே வந்து உங்க பேத்தியை நீங்க கூட்டிக்கிட்டு போகலாம்….. யார் கண்ணுக்கும் சுலபமா வண்டியிலிருந்து பார்க்க முடியாதபடி அவளை தூங்க வச்சிருப்பேன்…. தூக்க மாத்திரை கொடுத்து இருக்கிறேன்….. இப்போ உடனே கிளம்புங்க…. மறுபடியும் எல்லாத்துக்கும் நன்றி!”

ஆறுமுகம் உடனே சுறுசுறுப்பானார்.

பெட்ரூமுக்கு சென்று மனைவி அமுதாவை பார்த்து “யேய் அமுதா, நம்ம பேத்தி கிடைச்சுட்டாடி…..இனி கவலைப்படாமல் எழுந்து உட்காரு… நம்ம பொறுப்புல விட்டுட்டு போன அவளை பெத்தவங்களுக்கு நாம் பயப்பட வேண்டிய சூழ்நிலை இனி இல்லை….. அவ கிடைச்சுட்டா…. நான் போய் அவளை அழைச்சிக்கிட்டு வரேன்”

பின், “வள்ளி…” என வேலைக்காரி வள்ளியை அழைத்தார்.

சமையலறையிலிருந்து வள்ளி ஓடிவந்தாள்.

“அம்மாவை பார்த்துக்கோ… நான் கொஞ்சம் வெளியே போய் வர வேண்டியிருக்கு….திரும்பி வர நேரம் ஆகும்…. அதுக்குள்ளே போய் விடாதே”

ஆறுமுகத்தின் அவசரமான பேச்சும் பேத்தி கிடைத்துவிட்ட செய்தியும் சந்தோஷக் கடலாக பொங்கி அமுதாவின் இதயத்தை முறியடிக்க ஆரம்பித்திருந்தது! அவளுக்கு இது மூன்றாவது மாரடைப்பாக உருமாறியது!

வள்ளி அதை புரிந்து கொண்டவளாக “எஜமான்…. எஜமான்….” என்றவாறு வாசலுக்கு ஓடினாள். ஆனால் அதற்குள் ஆறுமுகம் தன் மாருதி காரில் விரைந்து போய் இருந்தார்.

***

ஆறுமுகம் காரை எவ்வளவு விரைவாக ஓட்ட முயன்றும் ஆக்சிலேட்டரை அழுத்திய மறுவினாடியே பயத்தால் நிதானம் ஆக்கினார்…. அவருக்கு பிளட் பிரஷர் இருந்தது தான் காரணம்… ஸ்பீடோமீட்டர் ஏறினால் இவர் இதயத்துடிப்பும் ஏறும்! அதனால் பொதுவாகவே நிதானமாகத்தான் ஓட்டுவார். இப்பொழுதும் வேகமாக செல்ல முயற்சித்து தோல்வியுற்று பின் மெதுவாக காரை ஓட்டினார்.

சென்னை எல்லையை கடந்ததும் தான் பளீரென்று ஞாபகம் வந்தது…. லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் பேப்பர் எதுவும் காரில் இல்லை…. காலையில் வேலைக்கார பையன் காரை முழுவதுமாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் போது அவைகளை வெளியே எடுத்து ஹாலில் வைத்திருந்தார்…. இப்பொழுது அவசரமாக கிளம்பும் பொழுது, அவர் அவைகளை எடுத்து வைக்க மறந்து போயிருந்தார்.

மனம் “ஆண்டவா!… ஆண்டவா!” என்று அரற்றிக் கொண்டிருந்தது. பேத்தி நளினிக்கு 6 வயது. அவரின் மகன் சோமுவுக்கு பிறந்தவள். சோமு வேலை நிமித்தமாக அடிக்கடி டிரான்ஸ்பர் காரணத்தால் ஊர் மாறி கொண்டிருந்ததால் ஆறுமுகம் வலியப் போய் அவனிடம் வாதாடி பேத்தியை கொண்டு வந்து வளர்த்து கவனித்துக் கொண்டிருந்தார்.

ஐந்து நாட்களுக்கு முன் நளினி திடீரென்று காணவில்லை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவள், எப்படி மாயமாகிப் போனாள் என்று யாருக்கும் புரியவில்லை. யாராவது கடத்திக் கொண்டு போய் விட்டார்களா?…. ஆறுமுகம் வெடவெடத்து போனார். மகனுக்கு என்ன பதில் சொல்வது என்று பதறினார். அமுதா குழந்தை மேல் எல்லையற்ற பாசம் வைத்திருந்தாள். அவள் காணவில்லை என்று கேள்விப்பட்டதும் இரண்டாவது அட்டாக் அவளை கட்டிலில் கிடத்தியது. உடல் தேறினாலும் மனம் தேறவில்லை.

ஆறுமுகம் அன்று மாலை போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டார். மகனுக்கு சில தினங்கள் பொறுத்துப் பார்த்து தெரிவிக்கலாம் என்று மூன்று நாட்கள் கழித்துதான் போன் செய்து சொல்லி இருந்தார்.

தமிழ், ஆங்கில தினசரி, பின் டிவியிலும் நளினியின் புகைப்படம் ‘காணவில்லை’ என வெளியிடப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பின் டிவியில் மாத்திரம் காணவில்லை பட்டியலில் நளினி தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

நான்காவது நாளில் ஒரு ஃபோன் கால்….

“ஹலோ….நான் ஒரு வேலையில்லா பட்டதாரி பேசுறேன்…. பெயர் சொல்ல மாட்டேன்…. என் கிட்டே ஒரு பொண்ணு இருக்கா, அது உங்க பேத்தி நளினின்னு நான் நினைக்கிறேன்…. டிவியிலே கூட கவனிச்சேன்…. நிச்சயமா நான் கடத்தவில்லை…. தானா வந்தது….என்னாச்சுன்னு சரியா புரிஞ்சுக்க முடியலை…. கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டேன்…. ஏன்னா நான் ஒரு வேலையில்லா பட்டதாரின்னு முன்னமேயே சொன்னேன்….. அது தான்”

ஆறுமுகத்திற்கு ஏற்கனவே போலீசார் எச்சரித்து இருந்தனர்…. கடத்தல்காரர்களை பற்றி இப்படி ஃபோன்கள் ஏதாவது வந்தால் தங்களுக்கு தெரிவிக்கும்படி கூறியிருந்தனர். ஆறுமுகம் அப்போது தலையசைத்தார். இருந்தும் என்ன ஆனாலும் போலீஸுக்கு தகவல் கொடுப்பது ஆபத்து என்பதை பிறகு உணர்ந்து இருந்தார்.

“உனக்கு…. உங்களுக்கு….. எவ்வளவு பணம் வேண்டும்?” நிதானமாகக் கேட்டார்.

“ஒரு பங்களா வேணும்… ஒரு மாருதி கார் வேணும்…. ஒரு லட்சம் ரொக்கம் வேணும்…. முடியுமா?” மறுமுனையில் சிரிப்பொலி கேட்டது.

“என்னால முடிஞ்சதை சொல்கிறேன் பத்தாயிரம் தர்றேன் அவளை கொடுத்துவிடு ப்ளீஸ்…… நான் யார்கிட்டயும் சொல்லலை”

“பத்தாயிரம்?…..” மறுமுனையில் அவன் கலகலவெனச் சிரிப்பது கேட்டது. “பத்தாயிரம்?…..உங்களக்கு நாட்டு நடப்பு தெரியல ….குறைஞ்சது ஐந்து லட்சம் வேணும்….”

“அவ்வளவு முடியாது…:”

“சரி போகட்டும்….மூனு லட்சம் முதலில்…. இன்னும் தேவைப்பட்டால் கேட்பேன்…. என்கிட்ட ஒரு உத்தி இருக்கு….. போலீஸ்கிட்ட மாட்டிக்காம இருக்க….. அதனால சொன்னபடி செய்யணும்”

மேற்கொண்டு அந்த மூனு லட்சம் பணத்தை எப்போது எங்கே எப்படி சேர்ப்பது என்று பேசப்பட்டது.

சோமுவிடம் சொல்லாமல் தன் சேமிப்பிலிருந்து அன்றே அவனுக்கு பணம் போய் சேர்ந்தது.

மறுநாள், அதாவது பேத்தியை இன்று அழைத்துச் செல்லலாம் என்று கொஞ்ச நேரம் முன்பு அவன் ஃபோன் செய்து கூறி இருந்தான்…..

மனம் இன்னும் படபடக்க….. காரை திண்டிவனம் நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தார் ஆறுமுகம். நளினிக்கு அவன் ஏதும் பண்ணிவிடக்கூடாது என்று மனம் பதைத்தது. திண்டிவனம் வரைக்கும் போய் மறுபடியும் பின் வாங்க வேண்டும்…. 40 கிலோ மீட்டர் வேகத்தில் 22 நிமிஷம் வரை…..

‘இது தேவைதானா? போகும்போதே நிதானமாக ஓட்டிக்கொண்டு சாலையோரம் புளியமரங்கள் கிட்டே பேத்தியை தேடினால் கிடைக்க மாட்டாளா? ஏன் அவன் அப்படி கூறினான்?’

ஆறுமுகம் குழம்பி கடைசியில் அவன் சொன்னவாறே செய்து விடலாம் என்று முடிவெடுத்து காரை ஓட்டினார். இருப்பினும் புளிய மரம் தென்படும் போதெல்லாம் கண்களை அலைய விட்டார்….. அப்படியே திண்டிவனம் போய் ஆகிவிட்டது…. நளினி எங்கும் தென்படவில்லை.

ஆகவே திண்டிவனம் பஸ் ஸ்டாண்டில், சென்னையை நோக்கி சரியாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தினார்…. மனம் படபடக்க கண்களை அலைபாயவிட்டு நளினியை தேடியவாறு காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார்.

சுமார் ஆறு நிமிடம் ஆகியிருக்கும்….

80, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சரேலென ஒரு மாருதி கார் ஆறுமுகத்தின் காரை கடக்க…. அந்த வேகம் அவரை திணற வைத்தது. பயந்து போனார். அதோடு அந்த மாருதியில் ஏதோ தமிழ் பாட்டு சத்தமாக ஒலித்தது…” ப்ளடி சன் ஆஃப் அ பிட்ச்” என்று திட்டிக்கொண்டே தன் காரின் வேகத்தை நாற்பதில் நிலைத்திருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டார்.

12 நிமிடம்….. 15 நிமிடம்…. 17 நிமிடம்……. எதிர்ப்புறத்தில் இருந்து வந்த பைக்கில் இருந்தவன் இவரை குனிந்து பார்த்தவாரே அவரைக் கடந்து சென்றான்…. ஆனால்ஆறுமுகத்தின் கவனம் சாலையில் இருந்தது….

19 நிமிடம்….

பக்கத்தில் வந்த அரசாங்க பஸ்சை மரியாதையுடன் வழி கொடுத்தனுப்பினார்.

20 நிமிடம்….

பின்பு இன்னும் குறைவான வேகத்தில் இருபுறமும் நளினி தென்படுகிறாளா என்று பார்த்தவாரே காரை ஓட்ட….

முன்னே சென்ற அரசாங்க பஸ் மெதுவாக நின்றது. அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி முன் நோக்கி ஓடினார்கள்….

‘ஏன்? என்னவாயிற்று இவர்களுக்கு?….சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டுள்ளதா?….என் நளினி கீழே சாலையில் நின்று கொண்டிருக்கிறாளா?…. நடுரோட்டில்?… அய்யோ நளினி….. நளினி…. இதோ வரேன்மா….. ஆண்டவா!… ஆண்டவா!.. ஆண்டவா!’ ஆறுமுகம் பதறியபடி காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார்.

“அடப்பாவமே!…. சின்ன புள்ள போல இருக்கே…. இவளுக்கு இப்படி ஒரு கதியா?….த்ச்சோச்சோ….”

கூட்டத்தில் ஒரு குரல் ஒலிக்க ஆறுமுகம் “திக்” என்ற சொல்லின் நயத்தை முதன்முதலாக உணர்ந்தார்…

“எந்த தேவிடியா மவனோ!…. இப்படி இந்த பிஞ்சுக் குழந்தையை சாகடித்து விட்டு போயிருக்கானே…. ஈவு இரக்கமில்லாம!…..”

இன்னொரு “திக்” இதயத்தில் விழுந்தது….மயக்க நிலைக்கு தயாரானது.

சிரமப்பட்டு கூட்டத்தை ஒதுக்கி கீழே கிடந்த அந்த உடலை… உரு தெரியாத அந்த உடலை பார்த்ததும் “பட்” என்று இதயம் வெடித்துவட்டது.

“ஆண்டவா!” என்றவாரே தரையில் விழுந்த அவரை “இதென்ன வம்பா போச்சு!” என்ற கூட்டம் திரும்பிப் பார்த்தது.

“ஹலோ… சார்…. என்ன ஆச்சு உங்களுக்கு?…. கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க யாராவது” ஒரு இளைஞன் ஆறுமுகத்தின் தலையை இப்படியும் அப்படியும் தட்டினான்.

“இந்த மாதிரி பிணத்தை எல்லாம் முன்னபின்ன பார்த்திருக்க மாட்டார் போலிருக்கு…. அதான் பார்த்ததும் மயங்கி விழுந்துட்டார் என்று நினைக்கிறேன்”

ஜில் என்ற தண்ணீர் முகத்தில் அடித்தும் ஒரு அசைவும் தென்படவில்லை…. இளைஞன் உடனே மார்பில் தன் காதைப் புதைத்து துடிப்பை சோதித்தான்… அது ஒலிக்கிறது அறிந்து மார்பில் ஓங்கி ஓங்கி இரு கைகளால் அழுத்தம் கொடுத்தான்…. பின்னரும் இதயத் துடிப்பு திரும்பாதது பார்த்து “திண்டிவனம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம் இவரை….அப்படியே இந்த ஆக்சிடெண்ட் பற்றியும் போலீஸ்ல சொல்லனும்” என்றான் இளைஞன் சுறுசுறுப்புடன்.

பின்னாடி வந்த ஒரு அம்பாசிடர் காரில் ஆறுமுகத்தின் உடல் ஏற்றப்பட்டது. அவருடன் அந்த இளைஞன் இன்னும் ஒருவர் ஏறிச் சென்றனர். சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கத் தொடங்கின.

***

திண்டிவனம் காவல் நிலையத்தில் இருந்த ராஜேஷுக்கு யாரோ தொலைபேசி மூலம் நடந்த விபத்தை பற்றி தெரிவிக்க, அவர் தன் படையுடன் இரண்டு போலீஸ் கார்களில் விரைந்து, பத்து நிமிடங்களில் விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

போட்டோகிராஃபர், மற்றும் பல நிபுணர்கள் தங்கள் வேலையை செய்ய விறுவிறு என்று களத்தில் இறங்கினர்.

ஓரிரு போலீசார் கூட்டத்தை கலைத்துனர்.

பொழுது சற்றே இருட்டிக் கொண்டிருந்தது.

“ப்ளீஸ்…. எல்லோரும் இன்னும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க” ராஜேஷின் பணிவான வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் விலகிச் சென்றனர்.

இந்தப் பக்கம் ஒரு அரசு பஸ்ஸும், அந்தப் பக்கம் ஒரு லாரியும் பிணத்தை விட்டு சுமார் 20 அடி தள்ளி நின்று இருந்தது. அவைகளின் ஹெட் லைட் எரிய வைக்க சொல்லப்பட்டது.

அச்சிறுமியின் சின்ன மெல்லிய தொடையில் இருந்து தலைவரை முழுவதுமாக ஏதோ ஒரு வாகனத்தின் சக்கரங்களால் நசுக்கப்பட்டு இருந்ததை, அதுவும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கோரமாக கிடந்ததை பார்த்து ராஜேஷ் வேதனை அடைந்தார். தனது சிறிய மரியாதையை அச்சிறுமிக்கு செலுத்திய பின், ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடலானார்.

பொதுவாக இந்த மாதிரி hit-and-run கேஸ்களில் அநேகமாக ஒரு தடயமும் கிடைக்காது குற்றவாளியை கண்டுபிடிக்க….ஆனால் ராஜேஷ் சில வருடங்களாக தன் திறமையை காட்டி ஏதாவது ஒரு பெரிய மர்மமான கேஸை கையாண்டு பதவியில் முன்னுக்கு வர வேண்டும் என்று தக்க தருணத்திற்கு காத்திருந்தார்….

ராஜேஷ், சிறுமி அணிந்திருந்த கவுனை கவனித்தார்….மிகச் சாதாரணமாகத் தான் இருந்தது,…… நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் போல் தோன்றியது. வலதுகை விபத்தில் நசுங்கி இருக்கவில்லை. இந்த கையும் அவளது கால்களும் அவளின் சிவந்த உடல் நிறத்தை வெளிப்படுத்தியது. வலக்கையில் ‘ராணி’ என்று பச்சை குத்தி இருந்தது.

அவள் நடுரோட்டில் கிடந்து இருந்த விதம், ராஜேஷின் கவனத்தை ஈர்த்தது…. ‘வேகமாக வந்த ஒரு வாகனம் அவள் தலையில் இருந்து தொடை வரை ஏறி விட்டு போய் உள்ளது என்றால் உடலும் ரோடுக்கு அல்லது அந்த வாகனத்துக்கு சிறிதேனும் நேராகவோ அல்லவா கிடக்க வேண்டும்?… ஆனால் இந்த உடல் சற்று சாய்வான கோணத்தில், ரோடுக்கு சுமார் 30 டிகிரி கோணத்தில் கிடக்கிறதே?… அந்தக் கோணத்திற்கேற்ப பார்த்தால் அந்த வாகனம் எங்கோ பக்கத்தில் உள்ள வயல் பக்கம் இருந்து வந்து?….. ஆனால் அது சாத்தியமில்லை….. வயல் ரோட்டை விட சுமார் ஒரு மீட்டர் கீழே இருக்கிறது, இத்தகைய நிலையில் எந்த வாகனமும் வயல் பக்கம் இருந்து வந்து இருக்க முடியாது….. ஒருவேளை வாகனத்தை ஓட்டியவன், சிறுமியை நடுரோட்டில் கண்டதும் திணறிப்போய் ஸ்டியரிங்கை இப்படி அப்படி திருப்பி, பின்பு வயலில் விழுந்துவிட பயந்தோ, புளியமரத்தில் மோதி விடுவோமோ என்று பயந்து… பிரேக்கும் சரியாக போடாத ஒரு நிலையில் சிறுமியின் உடலில் ஏறிய பின், நின்று, பின் மேற்கொண்டு நடந்ததை உணர்ந்தபின் விரைந்து போய் இருக்க வேண்டும்….

இல்லை அதற்கான சாத்தியங்களும் இல்லை…. ‘

தீவிர சிந்தனையுடன் ராஜேஷ் இப்போது தன் கண்ணில் பட்ட ஒரு தடயத்தை வெவ்வேறு கோணத்தில் நின்று நோட்டமிட்டார்.

இரண்டு இரத்தக் கோடுகள்…. அச்சிறுமியின் உடலிலிருந்து பிரிந்து சென்றது… மிக வினோதமாக இருந்தது அந்தக் கோடுகள். நிச்சயம் வாகனத்தின் டயர் கோடுகள் தான்….

டயர் அளவுக்கு பட்டையாக இல்லை என்றாலும், டயர் ஏற்படுத்திய கோடுகள் அவை என்பது எளிதில் புரிந்தது. இதில் விசித்திரம் என்னவென்றால் ஒரு இரத்த கோடு தொடை அருகே இருந்து கிளம்பி சென்னை செல்லும் திசைக்கு 2 மீட்டர் நீளத்துக்கு நீண்டு பின் சிறிது சிறிதாக மறைந்து இருந்தது…

இன்னொரு இரத்தக் கோடு அவளின் மண்டையில் இருந்து கிளம்பி திண்டிவனம் நோக்கி சுமார் ஒரு மீட்டர் நீளத்தில் இருந்தது, பின் சிறிது சிறிதாக மறைந்து இருந்தது.

‘அப்படியானால், இந்தப் பிஞ்சு உடல் மேல் ஏறியது இரண்டு வாகனங்கள் என இருக்கலாம்….இல்லை ஒரே வாகனம், முதலில் ஏறிய அதே வாகனம் பின்னர் வாகனத்தின் திசையை திண்டிவனத்திற்கு திருப்பி மண்டையையும் நசுக்கிவிட்டு சென்றதா?’

ராஜேஷ் டயர் பதிந்த அந்த இரு இரத்தக் கோடுகளும் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராய்ந்தார். இல்லை…. இரண்டும் வெவ்வேறு விதமான டயர்கள் என்பது புரிந்தது.

அப்படியானால் முன்பு நினைத்தது போலவே இரண்டுவித வாகனங்கள் சிறுமியின் உடலை பதம் பார்த்திருக்கிறது. இரண்டில் ஒரு வாகனம் சென்னை நோக்கியும் மற்றொன்று திண்டிவனம் நோக்கியும் சென்று இருக்கிறது.

ராஜேஷுக்கு மின்னலாக, சற்று தொலைவில் சாலை வாகனங்கள் பற்றிய சென்சஸ் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் நினைவுக்கு வந்தது. அன்று காலையில் தான் வேறு கேஸ் விஷயமாக அந்தப்பக்கம் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று வரும் பொழுது அவர்களை பார்த்து இருந்தார். அவர்கள் ஏதாவது ஒரு முக்கிய தகவல் கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்தார்.

மணி ஏழு ஆகிக் கொண்டிருந்தது.

போட்டோகிராஃபர் தன் பணியை முடித்துவிட்டு இருந்தார். ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றிருந்தது.

சாலையின் ஒரு ஓரத்தை பயன்படுத்தி வாகனங்களை நகர செய்தார்கள் போலீசார்கள்.

அதற்குள் வந்து சேர்ந்த சில பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள் “யார் இந்த சிறுமி?… கூட யாரும் இருக்கவில்லையா? ஏன்? எப்படி? எதற்காக யாரும் கூட இருக்காமல் போய்விட்டார்கள்?…. காணவில்லை கேஸா?” என்று பற்பல கேள்விகளை ராஜேஷிடம் தொடுத்தனர்.

ராஜேஷ் எதற்கும் பதில் கூற முடியாமல் தன் கார் அருகே வந்தார்.

“சார் பாடியை எடுத்து விடலாமா?” என்று அவரிடம் ஒரு சகா கேட்டார்.

“ஓகே…. எடுத்துடுங்க”

பின் சகாக்களில் வேறு ஒருவரை கூப்பிட்டு “நான் கொஞ்ச தூரம் வரைக்கும் இன்னும் விஷயம் சேகரிக்க பார்த்துவிட்டு வருகிறேன். நீங்கள் எல்லோரும் இங்கேயே இருந்து எல்லாத்தையும் பார்த்துக்குங்க…. கால் மணி நேரத்துல திரும்பி வரேன்” என்றவாறு தன் காரில் ஏறி அதை கிளப்பினார். அதற்குள் ஆறுமுகத்தை ஏற்றிச் சென்ற அந்த அம்பாசிடர் கார் பின்னாடி வந்து நின்றது. அதில் இருந்த இளைஞன் இறங்கி வந்தான்.

“அந்த வயசானவர் செத்துவிட்டார் சார்… டாக்டர் உறுதியாக சொல்லிவிட்டார். பாடி ஆஸ்பத்திரியிலே தான் இருக்கு. உங்க போலீஸ் கூட இருக்கிறார். நாங்க வீட்டுக்கு நேரத்திற்கு போகணும்னு கிளம்பி வந்துட்டோம். என் கைப்பட ஒரு சின்ன ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுத்து விட்டேன்….. நாங்க போகலாம் இல்லையா?”

ராஜேஷ் நெற்றியைத் தேய்த்து யோசித்தவாறு “ஓகே… போகலாம். உங்க காண்டாக்ட் கொடுத்துட்டு போங்க ப்ளிஸ், தேவைப்பட்டால் மட்டும் கூப்பிடுகிறோம்…. அதுதானே அவரோட மாருதி கார்?” என்றார்.

‘ஆம்’ என்ற விடை கிடைத்ததும் தன் சகா ஒருத்தரை அழைத்து அந்த காரை ஓரம் பண்ண சொல்லி தன் காரை மீண்டும் கிளப்பினார்.

ஐந்து நிமிடத்தில் சென்சஸ் எடுத்தவர்களை, இன்னும் அங்கேயே இருப்பதை கண்டறிந்தார்.

“வணக்கம்….உங்க பணி நேரம் முடிந்திருக்குமே?”

“ஆமாம் ஆறரை மணிக்குத் தான் முடிந்தது. எங்களை அழைத்துச் செல்லும் வண்டிக்காக காத்திருக்கிறோம்” என்றார் ஒருவர்.

“சரி….ஒரு நாலு கிலோ மீட்டர் பின்னால hit-and-run கேஸ் ஒன்று நடந்திருக்கு…. ஒரு சின்ன பொண்ணு… எவனோ பாஸ்டர்ட் ஏத்திட்டு போயிருக்கான்….

சென்னை திசையா சென்ற வாகனம், சுமார் எத்தனை மணிக்கு கடைசியா போச்சின்னு சொல்ல முடியுமா?”

தன் பதிவேடை புரட்டிப் பார்த்த ஒருவர், “எஸ்… எங்க டியூட்டி குளோஸ் பண்ற நேரம்… ஒரு மாருதி கார், அபௌட் 6.10 மணிக்கு இப்படி போச்சு” என்றார்.

ராஜேஷ் தன் குறிப்பு நோட்டை எடுத்து குறித்தவாறு ‘கலர்?… நம்பர்?… ஆள் அடையாளம் ஏதாவது?” என்று வினவினார்.

“கலர்….நீலம்….. இளம் நீலம்….. ராமர் கலர்…..இந்தக் கலர் மாருதி கார்கள் கொஞ்சம் தான் இருக்குமிங்கிறதாலே ஞபாகம் இருக்கு…….நம்பர், ஆள் கவனிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை. இந்த ஹைவேல ட்ராஃபிக் எப்படி இருக்குன்னு படிக்கத் தான் வந்தோம்…. சாரி சார், நம்பரை கொஞ்சமும் கவனிக்கவில்லை”

“பரவாயில்லை….. ஓகே…. அதே நேரத்தில்…. இல்ல, இன்னும் கொஞ்சம் முன்னாடி…. திண்டிவனம் பக்கமா என்ன வாகனங்கள் போச்சுன்னு சொல்ல முடியுமா?”

சென்சஸ் எடுக்கும் மூவரில் ஒருவர் யோசித்தார். இன்னொருவர் அடுத்தவரை நோக்கினார். மூன்றாமவர் பதிவேட்டை பார்த்து சொன்னார் “ஒரு லாரி…. மஞ்சள் கலர்னு ஞாபகம்”

அது… அந்த லாரி தான்…. அங்கே சவத்தருகே நின்று கொண்டு தான் இருக்கிறது…. ஆகையால் விசாரணையில் சந்தேகத்தில் உள்ள வாகனம் அது அல்ல….

“அந்த லாரிக்கு முன்னாடி?” ராஜேஷ் கேட்டார் கையவைகளுடன்.

பதிவேட்டை பார்த்தவர் “வரிசையா 7 அரசு பஸ்கள் தான்…. நாங்களும் வரிசையா இப்படி 7 பஸ்கள் போவதை வேடிக்கை பார்த்து கிண்டல் அடித்துக்கிடோம்” என்றார் புன்னகையுடன்.

ராஜேஷ் தலையை சொரிந்து யோசித்தார் “அரசு பஸ் எதுவும் சிறுமி மேல் ஏறிச் சென்றிருக்க முடியாது…. அரசு பஸ்ஸுக்கும் லாரிக்கும் இடையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ன அது?”

“டூவீலர் எதுவும் நோட் பண்றது இல்லையா?”

“ஏன்?… பண்றோமே?….”

ராஜேஷ் மேலும் தலையை சொரிந்தார் “இந்த மஞ்சள் லாரிக்கு முன்னாடி…. என்னென்ன வாகனங்கள், கொஞ்சம் திரும்பவும் பார்த்து சொல்லுங்க, ப்ளீஸ்”

“7 பஸ் முதல்ல… அதுக்கு முன்னாடி 3 லாரி…. அதுக்கு முன்னாடி நாலு டூரிஸ்ட் வேன்”

“ரைட்… போதும்”

ஒருவேளை அந்த மூன்று லாரிகளில் ஒன்று அடித்திருந்தால் கூட பின்னாடி வந்த ஏழு பஸ்கள் சவத்தை கடக்காமல் நின்றிருக்கும்… ஆனால் பஸ்கள் எதுவும் நின்று இருக்கவில்லை….அவைகளுக்கு பின்னாடி வந்த மஞ்சள் லாரி சவத்தைப் பார்த்து நின்று டிராஃபிக்கை பிளாக் செய்து இருக்கிறது.

“கம் எகைன்…. அந்த லாரிக்கு முன்னாடி ஏதோ ஒன்று மிஸ்ஸிங்….ஏதாவது மிஸ் பண்ணி இருப்பீங்களா?”

“நோ…. நோ… நெவர்….”

“இந்த மாருதி காருக்கு முன்னாடி என்ன வாகணம்?”

“4 பஸ்… 2 லாரி”

“சரி ரொம்ப நன்றி….நான் வரேன். வேறு தகவல் தேவைப்பட்டால் உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்?”

விலாசத்தையும் டெலிஃபோன் நம்பரையும் குறித்துக் கொண்டு மறுபடியும் விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு திரும்பினார் ராஜேஷ்.

சவத்தை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் போய்விட்டிருந்தது.

சவம் கிடந்த அந்த இடத்தை சுற்றி பெரிய கற்களை வைக்கச் சொன்னார்….காலையில், சூரிய வெளிச்சத்தில் மீண்டும் தடயம் தேடலாம் என்கிற யோசனையில்.

ஒரு சகாவை இரவில் நின்று ஸ்பாட்டை பாதுகாக்கும்படி கட்டளையிட்டார்.

சவம் கிடந்த லொகேஷனை சிறுமி வடிவில் மார்க் செய்திருந்தார்கள் சகாக்கள். அதை நோட்டமிட்ட பொழுது கொஞ்சம் பக்கத்தில் இருந்த ஏதோ ஒன்றை கவனித்தார்…. முன்பே பார்த்தது தான்….

‘என்னது அது? யாரோ ஒருவர் எடுத்த வாந்தி…..’

டார்ச் லைட்டை வாங்கிக்கொண்டு அதை மேலும் ஆராய்ந்தார்… ‘யார் எடுத்திருப்பார்கள் இந்த வாந்தியை? அந்தப் பொண்ணா?… இல்லை அவளை சாகடிச்சவன் எடுத்ததா?….இது முக்கியம்!… நிறைய வாந்தி வெளியேறி இருக்கிறது…. நீராகாரம் ஏதோ சாப்பிட்டு இருக்க வேண்டும்….. இளநீர்?… கரும்புச்சாறு?…’

ஒரு சின்ன குழியில் தேங்கியிருந்த வாந்தியை பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார் ராஜேஷ்.

இன்னும் சில நிமிடங்கள் வட்டமடித்து தன்னுடைய நோட்டில் சில குறிப்புகளையும் வரைபடங்களையும் எழுதிவிட்டு கிளம்பத் தயாரானார்.

போட்டோகிராஃபரிடம் வேண்டிய எல்லா புகைப்படங்களையும் எடுத்து விட்டாயா என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“நான் இந்த மாருதி காரை எடுத்துகிட்டு வரேன்… நீங்க எல்லோரும் போலீஸ்கார்ல வாங்க…சுகுமார்…. நைட் இங்கே இருக்கனும், சாப்பாடு அரேஞ்ச் பண்ணிடலாம்…. அப்புறம் சுகுமார், நைட்ல ஏதாவது சந்தேகப்படும்படியான ஆள்நடமாட்டம் இருந்தா கவனிச்சிக்கோங்க…. யாராவது ரொம்ப வந்து துருவி துருவி கேள்வி கேட்டா, அட்ரஸ் இன்னும் வேண்டியதை நோட் பண்ணிக்குங்க…ஓகே…. நான் வரட்டுமா?… ஸ்டேஷன்ல சந்திக்கலாம்”

ராஜேஷ் மாருதி காரை திருப்பி திண்டிவனம் நோக்கி செலுத்தினார். அதன் சாவியை அந்த இளைஞன் கொண்டு வந்து சகாக்களிடம் கொடுத்திருந்தான்.

காரை ஓட்டியவர், இடது பக்கத்தில் இருந்த சிறு பெட்டிக்குள் என்னென்ன இருக்கிறது என்பதை சில வினாடிகளில் வெளிச்சத்தில் நோட்டமிட்டார்… சட்டென்று அவருக்கு ஒன்று உரைத்தது….

‘இந்த மாருதி காரின் நிறமும் இளம் நீலம்….. ராமர் கலர் தான்….. சந்தேகத்தில் இருக்கும் குற்றவாளியின் காரும்…. மாருதி காரின் நிறம் நீலம் தான்…. ராமர் கலர் தான்…..மாருதி காரில் சென்ற அவன் தான் குற்றவாளியா?… சந்தேகமில்லை…. அந்த காருக்கு முன் சென்றது பஸ்கள் 4, அதற்கு முன் சென்றது லாரிகள் 2… ஆகையால் மாருதி தான்…. ஆனால் இந்த மாருதிக்கும் அந்த மாருதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?…..ஏன் இந்த மாருதி காரில் வந்த கிழவர் நடுரோட்டில் பார்த்த ஒரு சவத்தைக் கண்டு மாரடைப்பால் சாகவேண்டும்?…..தெரிந்த பொண்ணா?… ஆனால் அந்தப் பொண்ணோட முகமே தெரியவில்லையே?….கவுனைப் பார்த்து தெரிந்து கொண்டாரா?… இந்தப் பெண் ஏன் தன்னந்தனியா நடுரோட்டில் நிற்க வேண்டும்?… அல்லது ரோட்டை கடக்க முயற்சிக்க வேண்டும்?.. கிழவரையும் பொண்ணையும் சம்பந்தப்படுத்த வேண்டுமானால், பெண்ணை கடத்தல்காரர்களோடு சம்பந்தப்படுத்தலாம்….

ஆமாம் நிச்சயம் கடத்தல் கேஸாகத் தான் இருக்கும்…. மேற்கொண்டு கிழவர் வீட்டில் விசாரித்தால் எல்லாம் தெரியவரும்…’

பெட்டிக்குள் ஒன்றும் இல்லாதது கண்டு வியப்படைந்தார்…..’மனுஷன் லைசன்ஸ் எல்லாம் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறாரா?’… காருக்குள் லேசான ஈரம் இருப்பதை உணர்ந்தார்… ‘ஆமாம் காரை கழுவி இருக்கிறார்…..’

இப்படியே பலவகையான சிந்தனையுடன் ஆஸ்பத்திரியை அடைந்தார். சகாவிடம் பேசினார். “பிரபு…. கிழவர் பைல என்னென்ன இருக்கு?”

“ஏற்கனவே பாத்துட்டேன் சார்… அவரைக் கொண்டுவந்த ஆளுங்க கிட்டயும் விசாரித்தேன்…. ரூபாய் 950… அப்புறம் மாருதி கார் சாவி தவிர வேற எதுவும் இல்லை…. நல்லா செக் பண்ணிட்டேன்”

“மை காட்!… இப்ப இவர் பாடியை உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டுமே?…. சரி இந்த பாடி மார்ச்சுவரியில் கிடக்கட்டும்…. நியூஸ் வெளியே வந்தா, உறவுக்காரங்க தானா தேடி வருவாங்க”

பாடியை மார்ச்சுவரிக்கு கொண்டுபோக வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு ஸ்டேஷனுக்கு கிளம்பினார் ராஜேஷ்.

போகும் வழியில் போட்டோகிராஃபரை பார்த்து ஆஸ்பத்திரியில் உள்ள பாடியை போட்டோ எடுக்கச் சொன்னார்.

இந்த hit-and-run கேஸை தானே புலனாய்வு செய்து முடித்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்தார். இது சம்பந்தமாக மேலதிகாரிகளிடம் நாளை பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

ஸ்டேஷனிலிருந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிறுமி இறந்தது குறித்து தனக்கு முக்கியமாக தெரிய வேண்டிய விஷயங்கள், உடலில் ஏறிய டயர்களின் விவரங்கள்……., வாந்தியை நன்றாக டெஸ்ட் செய்து பார்க்கும்படியும்…… ஃபோன் செய்து டாக்டர்களிடம் தெரிவித்தார்.

அதன் பின் நிதானமாக யோசித்து… இன்னும் என்னென்ன காரியங்களை செய்ய வேண்டும் என்பதை லிஸ்ட் எடுத்தார். பின்பு லிஸ்ட்டை ஒவ்வொன்றாக டிக் அடித்தவாறு ஃபோன் செய்து பலரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.

***

மகேந்திரன் சென்னையை அடைந்ததும் முதல் காரியமாக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பப்ளிக் டெலிஃபோன் பூத்தை தேடினான்.

அவன் மனம் நடந்ததை எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தது….. ‘யார் வீட்டுப் பிள்ளையோ?…. பாவம்!….அவளை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே…’. தீவிர யோசனைக்குப் பின் அவளை ‘காணவில்லை’ பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் டிவியில் பார்த்து இருந்ததுபோல் ஞாபகத்திற்கு வந்தது….

சீக்கிரத்தில் ஒரு டெலிஃபோன் பூத் கண்ணில் பட, தூரத்திலேயே காரை நிறுத்திவிட்டு, மெல்ல நடந்து சென்று அவசர போலீஸ் நம்பருக்கு டயல் செய்தான்.

மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்ததால் அந்த நகரில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.

“ஹலோ…. நான் யாருன்னு சொல்லிக்க விரும்பலை….தயவு செய்து நான் சொல்றதை பூராவும் கேளுங்க…. திண்டிவனத்துக்கு சுமார் 15 கிலோமீட்டர் முன்னாடி, ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சு…. இன்னைக்கு சாயந்திரம் ஆறு மணி அளவில்…. வேகமாக வந்து கொண்டிருந்த என் காருக்கு முன்னாடி, அங்கே இருந்த ஒரு புளிய மரத்துக்கு மேலருந்து ஒரு சின்ன பொண்ணு…. திடுதிப்புன்னு விழுந்துச்சு…. இல்ல குதிச்சதான்னு தெரியலை…. ஆனா ரொம்பவும் எதிர்பார்க்காத விதமா இது நடந்து…. அந்த பொண்ணு மேல என் கார் ஏறி…. அவ செத்துட்டா… செத்துட்டாளாங்கிறது நான் செக் பண்ணல…. ஆனா இது மாதிரி எல்லாம் என் லைஃப்ல பார்த்ததில்லை…. நான் கிளம்பி வந்துவிட்டேன்….எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்கறதால…. என் மேல தப்பு இல்லை…. மறுபடியும் சொல்றேன், என் மேல தப்பில்லை. அந்தப் பொண்ணோட முகத்தை டிவியில ‘காணவில்லை’ லிஸ்டில் பார்த்து இருக்கேன்னு நினைக்கிறேன்…. அவ்வளவுதான்” பேசிவிட்டு மகேந்திரன் வேகமாக திரும்பிச் சென்று காரை கிளப்பினான்.

வீட்டை அடைந்ததும் வேலைக்கார பையனை அழைத்து “காரில் ரொம்ப தூசி இருக்கு…. நல்லா சுத்தமா கழுவி விடணும்….நானும் வந்து ஹெல்ப் பண்றேன்” என்றான்.

அந்தப் பையன் தான் வீட்டில் எல்லாவற்றையும் நிர்வகிப்பவன்.

மகேந்திரனுக்கு பெற்றோர் கிடையாது, இறந்து போய் பல வருடங்கள் ஆகின்றன. மாமாதான் ஆளாக்கி இருந்தார். மகேந்திரனும் மனோகரனும் அரைகுறையாகத்தான் படித்திருந்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் பத்தாவதில் ஃபெயிலாகி, பின்பு பார்த்த பிசினஸ்தான் அந்த எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் கம்பெனி. இப்பொழுது மாமாவின் பிள்ளைகளுக்கும் தங்களுக்கும் பகை ஏற்படக்கூடாது என்று தனியே திருச்சியில் பிசினஸ் துவங்க முடிவாகி இருந்தது. அது சம்பந்தமாகத் தான் திருச்சிக்கு சென்று வந்து கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தது. அடுத்த வாரம் கல்யாணம் வேறு…..

யோசித்து யோசித்து அவன் தலை வெடித்து விடுவதுபோல் வலித்தது “ஸ்ட்ராங்கா ஒரு காபியை கொடு…. அப்புறம் காரை கழுவலாம்”

பையன் போய் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தான். அதை குடித்தவாறே, ஆண்டவன் தன் பக்கம் இருந்து நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

பின்பு வாழ்க்கையில் முதன் முறையாக டைரி எழுதத் துவங்கினான்…..

***

ஆறுமுகம் கார் கிளம்பிப் போய் ஒரு நிமிடம் தான் ஆகியிருக்கும்…. அப்பொழுது ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் அவர் மகன் சோமுவும் மருமகள் காயத்திரியும்.

வேலைக்காரி வள்ளி, பதட்டத்துடன் இருந்தவள், தெருவுக்கு ஓடிப்போய் “ஐயா வாங்கய்யா…. அம்மா நெஞ்சு வலியால் துடிக்கிறாங்க….. பெரிய ஐயா இப்போ தான் எங்கேயோ வெளியே கிளம்பினார்…. வாங்க… சீக்கிரம் வாங்க” என்றவாறு அவசரமாக அவர்களை உள்ளே அழைத்துப் போனாள்.

சோமுவிற்கு ஏற்கனவே, அம்மா முதல் முறை நெஞ்சு வலியால் அவதிப்பட்ட போது, நேரில் இருந்து கவனித்து இருந்தபடியால், இப்பொழுதும் சுலபமாக அவளை உயிர் மீட்க முடிந்தது…. கைதேர்ந்த டாக்டர் போல் வேகமாக செயல்பட்டு அம்மாவின் வலியை போக்கடித்தான். மாத்திரைகளை விழுங்க வைத்து அம்மாவை தூங்கச் செய்தான்.

“என்ன ஆச்சு வள்ளி இங்கே?… அப்பா எங்கே போனார்?”

“தெரியலைங்க…. நளினி அஞ்சு நாள் முன்னாடி திடீர்னு காணாம போச்சு…. தெருவில்தான் விளையாடிக்கிட்டு இருந்தா…. எதிர் வீட்டு பையனும் கூட இருந்தான். அவனைக் கேட்டால், “எனக்குத் தெரியாது நான் வீட்டுக்கு போயிட்டேன்…. அவ மாத்திரம் தனியா விளையாடிக்கிட்டிருந்தாள்ன்னு சொன்னான்…. யாராச்சும் தூக்கிட்டு போய்விட்டார்களா… இல்லையா…. என்னன்னு தெரியலை…. போலீஸ் கம்ப்ளைண்ட் பண்ணி டிவியில் கூட இன்னும் அவ ஃபோட்டோ வந்துக்கிட்டு இருக்கு” வள்ளி கண்களில் நீர் மல்க நடந்ததை கூறினாள்.

இவை அனைத்தும் அவன் அப்பா இரண்டு நாட்கள் முன்பு ஃபோனில் கூறியிருந்தார்.

“அப்பா வெளியே போறதுக்கு முன்னாடி என்ன பேசினார்? உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா?”

“சொன்னாருங்க… அவசரமா வெளியே போய் வர வேண்டி இருக்கு, வர நேரம் ஆகும்னு சொல்லிட்டு, அவசரமா காரை எடுத்துக்கிட்டு போனாருங்க… எங்கேன்னும் சொல்லலை, என்ன விஷயம்ன்னும் சொல்லலை…. நான் அம்மாவை பார்த்தா, அவங்க வலியில தவிக்க ஆரம்பிச்சிட்டாங்க…. ஓடிப்போய் அய்யாவை கூப்பிடலாம்னு பார்த்தா கார் கிளம்பிடுச்சு…. என்ன பண்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன்… நீங்க வந்துட்டீங்க நல்ல வேளையா!”

“அம்மா கிட்ட பேசிட்டு போனாரா?”

“பேசினார்ங்க… ஆனா நான் சமையலறையில இருந்ததால எனக்கு ஒன்னும் கேட்கல… சந்தோஷமா ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தாருன்னு தோனிச்சு… யாரோ ஃபோன் பண்ணாங்க… அதுல பேசின அப்புறம்தான் சொல்லிட்டுப் போனாருங்க”

‘நளினி கிடைத்திருப்பாளா?… யார் போன் பண்ணியது?’ சோமு குழப்பம் அடைந்தான். போலீசுக்கு ஃபோன் செய்ய வேண்டிய நம்பர்கள் இரண்டு ஹாலில் ஃபோன் அருகே எழுதி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நம்பருக்கு டயல் செய்து பேசினார்… “இன்னும் எதுவும் தகவல் கிடைக்கலையே சார்” என்று போலீஸ் ஒருவரிடமிருந்து பதில் வந்தது.

‘அப்படியானால் வேறு யார் போன் செய்திருப்பார்கள்?… நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நளினியை எங்காவது பார்த்துவிட்டு தகவல் சொல்லி இருப்பார்களா?… இல்லை கடத்தல்காரன்??..’ குழம்பிக்கொண்டிருந்தான் சோமு.

மேசையில் இருந்த ஹிந்து பேப்பர்களை புரட்டியவாறு காயத்ரி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி விட்டு பேப்பர்களை வாங்கிப் பார்த்தான் சோமு…..மூன்று தினங்களில் நளினியின் போட்டோ இருந்தது மற்ற இரண்டு பேப்பர்களில் இல்லை…’ஏன் அப்பா நிறுத்திவிட்டார்?…. சரி எதற்கும் அப்பா வந்தால் தெரியும்… இல்லை அம்மா கண் விழித்த பின் பேசிப் பார்க்கலாம்’

“சாப்பிட வாங்க…. வாங்கம்மா” என்றவாறு வள்ளி சமையலறை பக்கம் சென்றாள்.

சுமார் மாலை ஆறு மணி இருக்கும்…. ஒரு சிறு உதறலுடன் அமுதா கண்களை திறந்து “நளினி… நளினி” என்றாள். அருகில் அமர்ந்து கண் அயர்ந்து இருந்த காயத்ரி சட்டென எழுந்து கொண்டாள்.

“அத்தை… அத்தை… இப்போ எப்படி இருக்கு உங்க உடம்புக்கு?” “பரவாயில்லைம்மா…. நீ எப்போ வந்தே?…. நளினி… நளினி ….”

சோமுவும் உள்ளே நுழைந்தான். “நளினி எங்கேடா சோமு?” அம்மா கண் கலங்கினாள்.

“அவளைத் தானே கூட்டிவர அப்பா வெளியில போய் இருக்கார்?”

“ஆமாம்…. ஆமாம்டா… இன்னும் வரலையா?”

“வரலியே….அம்மா…. யார் ஃபோன் பண்ணாங்க?”

“நேத்து ஃபோன் பண்ணின அதே பணப் பிசாசாகத் தான் இருக்கும்… யார் என்று சொல்லிக்கல… என்னவோ படித்த பட்டதாரின்னும் வேலை இல்லாம காசுக்குத் திண்டாடுறான்னும் சொன்னானாம்… நம்ம பொண்ணை எதேச்சையாக பார்த்து நம்ம கிட்ட கொடுக்க வேண்டும் என்று ஃபோன் பண்ணினான் நேத்து….ஆனா பணம் கொடுத்தா தான் பிள்ளையை தருவேன் என்று பயம் காட்டினான். நேத்து உன் அப்பாவும் மூனு லட்சம் பணத்தை எடுத்துக்கிட்டு போய் அடையாறு பக்கம் எங்கேயோ வெச்சிட்டு வந்துட்டாரு…. இன்னிக்கு ஃபோன்ல சொல்லி இருப்பான் வந்து நளினியை கூட்டிட்டு போன்னு…. அதான் அவர் போயிருக்கார்…. ஏன் இன்னும் வரலை?”

“தெரியலையே… ஏம்மா போலீசுக்கு நடந்ததை சொல்லலையா? ஏன் அனாவசியமாக வம்புல மாட்டணும்?…. எதுக்கு இப்படி மூனு லட்சம் கொடுத்து அழுது இருக்கீங்க?” சோமு அலுத்துக் கொண்டான். தான் இங்கு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்று தந்தை மேல் கோபம் கொண்டான்.

அதன் பின் அனைவரும் அதிகம் பேசிக் கொள்ளாமல் வாசலை திறந்து வைத்து அதை பார்த்தவாறே காத்திருந்தார்கள்…. மணி ஒவ்வொன்றும் ஒரு யுகமாக நகர்வதை உணர்ந்து மிகவும் சோர்ந்தார்கள். வாசலில் வாகன சத்தம் கேட்டால், சோமு ஓடிச்சென்று பார்த்து ஏமாந்து கொண்டே வந்தான்.

‘எத்தனை மணி நேரம் தான் காத்திருப்பது?’ என்று உடலில் சோம்பல் ஏறிக்கொண்டே இருந்தது. ‘திரும்பி வர நேரமாகும் என்று சொல்லி இருக்கிறாரே?… நெடுந்தூரம் எங்காவது போய் இருப்பாரா?’

காத்திருந்து காத்திருந்து நடு ராத்திரி ஆகிவிட்டது… அனைவரும் கண்ணயர தொடங்கிவிட்டார்கள்…. அப்படியே பொழுதும் விடிந்து விட்டது… இனியும் அவர் வரவில்லை என்றால் என்ன செய்வது என்று தீவிரமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தான். காலை 9 மணி வரை பொறுத்திருந்து பார்த்து அதற்குள் வரவில்லையானால் போலீசிடம் போய் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டியது என்று முடிவாயிற்று.

காலை 6 மணி அளவில் ஹிந்து பேப்பர் வாசலில் வந்து விழுந்தது. வள்ளி அதை கொண்டு வந்து கொடுக்க, சோமுவுக்கு இதயம் பட படக்க ஆரம்பித்தது… ‘ஒருவேளை பேப்பரில் ஏதாவது தகவல் இருக்குமா?… அப்பா… நளினியை பற்றி?…’ அவன் நினைத்தது போலவே இருந்தது…..

‘ஃபோட்டோ…. மாருதி கார்…. சிறுமி விபத்து……பெரியவர் மரணம்…..’ சோமுவுக்கு தலைசுற்றியது.

அதன்பின் அந்த வீட்டில் எழுந்த அழுகை ஓலம், அக்கம்பக்கத்தாரை ஓடி வரச் செய்தது.

***

“நீங்க சென்னையைச் சேர்ந்தவங்களா?” ஸ்டேஷனுக்கு விரைந்தோடி வந்திருந்த சோமுவைப் பார்த்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கேட்டார்.

“ஆமாம் சார்”

“அப்போ… உங்க அப்பா ஓட்டி வந்த மாருதி கார் சென்னை-திண்டிவனம் டைரக்ஷன்ல இல்ல நின்னுக்கிட்டு இருக்கணும்?…..அதுக்குப் பதிலா திண்டிவனம் – சென்னை டைரக்ஷன்ல இல்ல நின்னுக்கிட்டு இருந்திச்சி?…. ரொம்ப குழப்பமா இருக்கு!”

அதன்பின் சோமு தன் தந்தைக்கு வந்திருந்த இரண்டு ஃபோன்கால், மூன்று லட்சம் பணம் கொடுத்தது, என தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தும் இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தான்.

“ரைட்…. அப்போ புரியுது….அந்த கில்லாடி உங்க அப்பாவை திண்டிவனம் வரைக்கும் வந்துட்டு, அப்புறம் திரும்பி ஏதோ ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வந்து குழந்தையை கண்டெடுத்து போங்கன்னு சொல்லி இருப்பான்…. பொண்ணோட பாடி கண்டதும் இருதய நோயாளியான உங்க அப்பா ஸ்பாட்டிலேயே உயிரை விட்டிருக்கலாம்.”

சோமுவின் கண்களில் நீர் திரண்டு வருவதை ராஜேஷ் கவனித்து மௌனமானார்.

“ஐ ஆம் வெரி சாரி…. வாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்… உங்கப் பொண்ணோட பாடியையும் போஸ்ட்மார்ட்டம் முடிந்திருந்தால் எடுத்துக்கிட்டு போகலாம்…. ஆமாம்…. உங்க பொண்ணு பெயர் என்ன?”

“நளினி சார்” என்றான் சோமு.

“ஆனால்… இன்னொரு பெயர் ஏதாவது இருக்கா?”

“இல்லை சார்?”

“ராணின்னு பச்சை குத்தி இருக்கே?” ராஜெஷ் தலை சொரிந்தார்.

“என்ன சொல்றீங்க?…. அப்போ அது என் நளினி இல்லை…. முகம் வேறு சிதைந்து போய் இருக்குன்னு சொல்றீங்க”

“இன்னும் குழப்பமா போச்சு….. மை காட்…. வேறு ஏதாவது அடையாளம் தெரியுமா?”

“இரண்டு மச்சம் தெரியும்…. நெத்தியில ஒன்னு கொஞ்சம் பெருசா….தொப்புள் கிட்ட இன்னொன்னு” சோமு தெளிவாக பதிலளித்தான்.

“வலது கையில?…. முழங்காலுக்கு கீழே ஏதாவது?”

“அங்கே எதுவும் இல்லை சார்… அதாவது எனக்கு பார்த்த ஞாபகம் இல்லை… அந்த இரண்டு மச்சம் தான் அவளுடைய ஸ்கூல் ரெக்கார்ட்ல போட்டு இருக்கோம்…. அதனால நல்லா ஞாபகம் இருக்கு”

பின் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்கள்.

வழியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிந்தனை எல்லாம் இன்னும் குழப்பத்தில் இழுத்துக் கொண்டே போனது! …. நேற்று இரவு தான் சென்னையிலிருந்து அவசர எண் தொடர்பு அலுவலகத்தில் ஒரு மர்ம ஃபோன் வந்திருந்தது… யாரோ ஒருவன் ஃபோன் செய்து, தான் தான் தன்னுடைய காரால் அந்தச் சிறுமியை ஏற்றியதாகவும், அச்சிறுமி கண்களில் படாமல் திடுதிப்பென்று புளிய மரத்தில் இருந்து விழுந்தது அல்லது குதித்தது என்றும், தன் மேல் தப்பு ஏதும் இல்லாததால் ஓடிப் போய் விட்டதாகவும் கூறி இருந்தான். அந்தச் சிறுமியின் முகத்தை டிவியில் ‘காணவில்லை’ லிஸ்டில் பார்த்ததாக வேறு கூறியிருந்தான்…..

‘….இங்கேதான் மேலும் குழப்பமாக இருக்கிறது…. அவன் கார் அந்தச் சிறுமியை ஏற்றிய பின்பு முகம் பாழாகாமல் சிதையாமல் இருந்துள்ளது…. ஆனால் நாம் பார்க்கையில் முகமும் சிதைந்து விட்டது…. இது அந்தக் கடத்தல்காரன் வேலையா?… அல்லது சென்னை- திண்டிவனம் நோக்கிச் சென்ற வேறு ஏதாவது ஒரு வாகனம் அவள் தலையின் மேல் தெரியாமல் ஏறிச் சென்று விட்டதா?…. அதை ஓட்டியவரும் பயந்து போய் நிற்காமல் போய் விட்டாரா?….ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?…. அந்தச் சிறுமி ஏன், எப்படி மரத்தின் மேலிருந்து விழ வேண்டும்?…. அல்லது குதிக்க வேண்டும்?….ராணி பெயர் காணவில்லை லிஸ்ட்டில் இல்லையே? நளினி பெயர் மட்டும்தான் லிஸ்டில் இருக்கிறது….

இது எல்லாம் கடத்தல்காரன் வேலையா? ஏன்?…. என்ன மோட்டிவ்?

இந்தக் கேஸில் இப்போதைக்கு இரண்டு வெவ்வேறு குற்றவாளிகள் இருக்கிறார்கள்….’ என்பது தெளிவாகத் தெரிந்தது ராஜேஷுக்கு…..இருவரையும் கண்டுபிடித்தால் தான் மேலும் நடந்த உண்மைகள் முழுமையாக தெரியவரும்…..

அவருக்கு அந்த மிஸ்ஸிங் வாகனம் எது என்று புரிந்தது…. அந்த இடத்தில் காத்திருந்த கடத்தல்காரன் வாகனம் தான் அது…. அதாவது ஒரு டூ வீலர் தான் என்று நினைத்தார்…..நம்பினார்.

சோமு தன் அம்மாவின் உடல்நிலையைக் கருதி மேலும் வருத்தப்பட்டான். செத்துப் போனவள் நளினி இல்லை என்று ஊர்ஜிதமாக நம்பினான்… பச்சை குத்தும் வழக்கம், அதுவும் இல்லாத பெயருக்கு பச்சை குத்துவது அவன் குடும்ப வழக்கில் இல்லை.

சோமு அந்தச் சிறுமியின் உடலில் மற்ற அடையாளம் எதுவும் தெரியாததால்…. அல்லது அழிந்துவிட்டிருந்ததால்… அது தவிர, ‘ராணி’ என்று பச்சை குத்தி இருந்தபடியால், “அவள் நளினி இல்ல” என்று தொண்டை கரகரக்க, அச்சிறுமியின் உடலை பார்க்க தெம்பில்லாமல் சற்று கண்கலங்கியவாறு கூறிவிட்டு அதைத் தொடாமல் இருந்து விட்டான்.

சோமு தன் தந்தையின் உடலை மாத்திரம் மாருதி காரில் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த போது இன்ஸ்பெக்டர் ஒரு ஆம்புலன்ஸ் அதற்கென தயார் செய்து அனுப்பி வைத்தார். அவனுடன் துணைக்கு ஸ்டேஷனிலிருந்து ஒருத்தரை அனுப்பி வைத்தார்.

ராஜேஷ் பகல் பொழுதில் விபத்து நடந்த ஸ்பாட்டுக்குச் சென்று மறுபடியும் அந்த இடத்தில் ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று தேடி அலசினார்…. வேறு எதுவும் புதிதாக புலப்படவில்லை…. இனி அந்தப் புளிய மரத்தின் மேல் ஏறி பார்த்து தடையம் தேட வேண்டும்…. ஆனால் ராஜேஷுக்கு அங்கும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

மறுபடியும் ஸ்டேஷனில் வந்து அமர்ந்த ராஜேஷ், கொஞ்ச நேரத்திற்கு முன் மேசை மேல் வைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்தார்… அதில் சிறுமியின் வயிற்றில் சில தூக்கமாத்திரைகள் கரைந்து இருந்தது என்பது குறிப்பிட்டு இருந்தது…..அந்த வாந்தி சிறுமியின் வயிற்றில் இருந்து வெளியேறியது அல்ல, அந்த வாந்தியில் கலந்து இருந்த உணவுப் பொருட்கள் கரும்புச்சாறு, உளுந்து வடை, இட்லி போன்றவையாகும்… சாப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் அரை மணி நேரத்திற்குப்பின் அது வாந்தியாக வெளியேறி இருக்கலாம்….

ஆக இது நிச்சயம் அந்த மாருதி காரில் இருந்தவன் எடுத்த வாந்தி தான் என்று ராஜேஷ் நம்பினார்.

சிறுமியின் மேல் ஏறின வாகனங்களின் டயர் குறிப்புகள், உடல் மிகவும் சேதமடைந்துள்ளதால் சரியாக எடுக்க முடியவில்லை…. ஒரு சில குறிப்புகள் அவர் ஏற்கனவே சிந்தித்து இருந்தபடி இருந்தது…

‘ஆக திண்டிவனத்திலிருந்து சென்ற ஒரு மாருதி கார், சிறுமியை ஏறி விட்டுப் போய்விட்டது… அந்த மாருதி மார்பிலிருந்து தொடை வரை மட்டும் பதம் பார்த்திருக்கிறது….இது சாத்தியமே…. பிறகு அந்த கடத்தல்காரன்….அல்லது வேறு யாரோ தன் வாகனத்தை திண்டிவனம் பக்கமாக சென்றபோது சிறுமியின் மண்டையை பதம் பார்த்து விட்டு சென்றிருக்கிறது…. சென்று இருக்கலாம்…..இதுவும் சாத்தியமே!…. ‘

ராஜேஷ் ஒரு புதுத் தென்புடன் கிளம்பினார்… தன் பைக்கை எடுத்துக்கொண்டு ஹைவே ரோட்டில் தெரிந்த கரும்புச்சாறு கடைகளில் எல்லாம் ஒவ்வொன்றாக விசாரித்தார்…. திண்டிவனத்திற்கு முன்பாக …திண்டிவனம்-திருச்சி திசையில் இருந்த கரும்புச்சாறு கடைகளில் எல்லாம் ஒவ்வொன்றாக விசாரித்தார்.

“நேற்று சாயங்காலம், ஐந்தே முக்கால் மணி வாக்குல…. இல்ல இன்னும் கொஞ்சம் முன்னாடி… இந்தப் பக்கமா ஒரு மாருதி கார்….கலர் ராமர் நிறம்… இளம் நீலம்…. அதுல வந்தவர் கரும்பு ஜூஸ் சாப்பிட்டிருக்கிறார்…. உங்க கடையில சாப்பிட்டாரா?”

இப்படி பல கடைகளில் கேட்டு தெரிந்து கொண்டார்.

ஒரு கடையில் “இங்கே இல்லீங்க…. ஆனா அதோ…. ஆறு கடை தள்ளி இருக்கே….அங்கே வந்து அந்த கார் நின்னது” என்றான் ஒருவன்.

“நல்லா ஞாபகம் இருக்கா?… ராமர் கலர் மாருதி கார் தானா?”

“ஆமாம் சார்… அதுல இருந்தவரும் நல்லா வாட்ட சாட்டமா… சினிமா ஆள் மாதிரி இருந்தார்…. அதோட அந்தக் கடைக்காரன் அந்த கார்கிட்டே நின்னுகிட்டு ஒரு ஃபோட்டோ வேற எடுத்துக்கிட்டதனால நல்லா ஞாபகம் இருக்கு சார்”

ராஜேஷ் இப்போது மேலும் சுறுசுறுப்பானார்… பைக்கை ஸ்டார்ட் செய்து இந்தக் கடை காரன் காட்டிய அந்த வேறொரு கடை அருகே சென்றார்.

“வாங்க சார்…. ஜூஸ் சாப்பிட்றீங்களா?”

“நல்லா… இஞ்சி எலுமிச்சை கலந்து போடு” ராஜேஷ் இடத்தை நோட்டமிட்டார். இந்தக் கரும்புச்சாறு கடைக்குப் பின்னே ஒரு ஹோட்டல் இருந்தது ‘ஓ… இங்கே தான் இட்லி வடை சாப்பிட்டானா?’ ராஜேஷ் கடைக்குள் நுழைந்து விசாரித்தார். “சரியாக ஞாபகம் இல்லை” என்று பதில் வந்தது.

பிறகு கரும்புச்சாறு பிழியும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். கரும்புச்சாறு ஒரு பெரிய கிளாஸில் கொடுக்கப்பட்டது.

“தம்பி…. உனக்கு இருபத்தி நாலு….. இருபத்தைந்து வயசு இருக்குமா?”

அவன் முழித்தவாறு “ஆமாம் சார்… இருபத்திநாலு” என்றான்.

அவர் தனக்கு வேண்டிய தகவல் பற்றி கூறி அவனிடம் விசாரித்தார்.

“ஆமாம் சார்… கரெக்ட் சார்….அந்த மாருதி கார்ல வந்தவர் முதலில் ஹோட்டல்ல சாப்பிடப் போனார்….கார் ஹோட்டலுக்கு எதிர்ல இருந்தப்போ, என் மச்சான் என்னை ஃபோட்டோ எடுக்கணும்னு அந்த மாருதி கார் முன்னாடி நிக்க வச்சு ஃபோட்டோவும் எடுத்துக்கிட்டேன்…..அப்புறம் அந்த சார் என் கடைக்கு வந்து கரும்பு ஜூஸ் வாங்கி குடிச்சிட்டு போனார்”

ராஜேஷ் எழுந்து கொண்டு அந்தப் பையனின் முதுகில் “வெரிகுட்” என்று தட்டி “சபாஷ்… சபாஷ்… அந்த ஃபோட்டோ இப்போ யார் கிட்டே இருக்கு?” என்று கேட்டார்…. நிச்சயம் அதில் கார் நம்பர் கிடைக்கும் என்று நம்பினார்.

“அந்த கேமரா ஃபோன் என் மச்சானுடது… புது பொண்டாட்டியோட ஏற்காடு மலைக்கு ஹனிமூனுக்காக போயிருக்கிறார்….வந்தப்புறம் அனுப்பி வைக்கட்டுமா சார்?”

“இல்லை இல்லை…. அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது…. ஒரு கேஸ் விஷயமா அந்த ஃபோட்டோ மிக முக்கியம்… ஃபோன் பண்ணி வாட்ஸ்அப்ல அந்த ஃபோட்டோவை அனுப்பச் சொல்லு….உடனே….உடனே…இப்போ”

பையன் ஃபோன் செய்து பார்த்தான் மச்சானுக்கு…. ஆனால் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் வந்தது.

“சார்….உம்…. ஞாபகம் வருது…. மச்சான் ஏற்காடுக்கு போகும்போது, ஹனிமூன்கிறதால யாரும் தங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு… ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கும்னு சொல்லிட்டு போனார்…. அதனால அவர் திரும்பி வரும் வரைக்கும் காண்டாக்ட் பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன் சார்” தலை சொரிந்தவாறு சொன்னான் கடைக்காரன்.

ராஜேஷ் இதைக்கேட்டு அலுத்துக் கொண்டார்….”சரி அவர் நம்பர் என்கிட்ட குடு” என்று அந்த மொபைல் நம்பரை கேட்டு நோட்புக்கில் எழுதிக் கொண்டார்.

“ஒருவேளை உன் மச்சான் அவராகவே உனக்கு காண்டாக்ட் செய்தால் உடனே நான் வந்து கேட்ட விஷயம் பற்றி சொல்லி அந்த ஃபோட்டோவை அனுப்பச் சொல்லு…. நானும் முயற்சிக்கிறேன்.”

“ஓகே சார்” என்றான் பையன்.

“உனக்கு அந்த கார் நம்பர் எதுவும் ஞாபகம் இல்லையா?”

“இல்ல சார்… நிச்சயமா இல்ல சார்… பார்க்கவே இல்லை. ஆனா அந்தப் ஃபோட்டோவில் கண்டிப்பா இருக்கும்னு நம்புறேன்…. ஏன்னா, நான் ஒரு ஓரமா ஸ்டைலா நின்னுகிட்டு தான் போஸ் கொடுத்தேன்…. கார் முழுசா படத்தில விழணம்னு மச்சான் கிட்ட சொல்லி போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். ….என் ஃபோன்ல வாட்ஸ்அப்லாம் இல்ல….ரெண்டு மாசம் கழிச்சுதான் வேற நல்ல ஃபோன் வாங்குவேன்”.

“சரி அப்ப நான் வரேன்…. ஆறு வயசு பொண்ணை நசுக்கிட்டு சாகடித்தவனோட முக்கியமான தடயம் அந்த ஃபோட்டோவில் தான் இருக்கு…. உனக்கு நான் அப்புறம் ஒரு அன்பளிப்பு தர ஏற்பாடு செய்கிறேன்” அவனிடம் நன்றி தெரிவித்து விட்டு ராஜேஷ் கிளம்பினார். திடீரென திரும்பி வந்து, ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து பையனிடம் கொடுத்து விட்டு திரும்பவும் நன்றி சொல்லி கிளம்பினார்.

***

அன்று மாலை…..

மகேந்திரன் நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டில் சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்தான்.

அப்போது வாசற்கதவு மணி ஒலிக்க வேலைக்காரப் பையன் ராமு வாசலுக்கு சென்றான்.

திரும்பி வரும்பொழுது “யாரோ ஒரு சார்…. உங்ககிட்ட வியாபார விஷயமாக பேசணுமாம்” என்றவாறு, பின் வந்த நபருக்கு இருக்கையை காட்டினான்.

அந்த நபர் அடர்த்தியான தாடி வைத்திருந்தான். நெற்றியில் குங்குமம் வசீகரமாக வைத்திருந்தான். நீட்டாக டிரஸ் செய்து பிரமாதமாக காட்சியளித்தான்.

“ஹலோ” என்றவாறு கைகளை துடைத்துக் கொண்டே மகேந்திரன் எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். வந்தவனின் முகம் கடுமையாக மாறியது…….

“நீங்கதானே நேத்து திண்டிவனம் கிட்ட ஒரு சின்னப் பொண்ணு…..” “ஹலோ….ஹலோ….நீங்க யாரு முதல்ல?” மகேந்திரன் தாடியை நோக்கி கையசைவுடன் கேட்டான்.

“நான் அந்தப் பொண்ணு ராணியோட அப்பா”

“அப்பாவா?….சம்பவம் நடந்தப்ப நீங்க எங்கே இருந்தீங்க?… இப்படித்தான் ஒரு பெரிய ஹைவேல, அஜாக்கிரதையா ஒரு பொண்ண தனியா விடுவீங்களா?” மகேந்திரன் ஆத்திரத்துடன் பேசினான்.

பிறகு ராமுவை அழைத்து “நீ மார்க்கெட்டுக்குப் போய் வா” என்று அவனை வெளியில் அனுப்பி வைத்தான்.

“மிஸ்டர் மகேந்திரன்….” தாடி ஏதோ பேசவர,

“உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்?….எப்படி என் அட்ரஸ் கண்டுபிடிச்சீங்க?” மகேந்திரன் தனக்கு முதலில் பதில் வேண்டும் என்பது போல் தாடியை பார்த்தான்.

“என் பொண்ணை நீங்க கார்ல ஏத்தி சாகடிச்சப்போ நான் அங்கதான் புளிய மரத்துக்கு மேலே இருந்தேன்… புளியம்பழம் பறிச்சிக்கிட்டு இருந்தப்போ அவ தவறி கீழே விழுந்துட்டா….. நீ பெரிய மயிராண்டி மாதிரி செம வேகத்தில காரை ஓட்டிக் கொண்டு வந்த…. அனாவசியமா என் பொண்ண சாகடிச்சிட்டியேடா பாவி….. உன்னை நான் சும்மா விடக் கூடாதுன்னுகிற முடிவில தான் கஷ்டப்பட்டு உன் அட்ரஸ் கண்டுபிடித்து வந்திருக்கிறேன்…. உன்ன…..” தாடி சீற்றத்துடன் பாய்ந்து மகேந்திரனின் கழுத்தை பிடித்தான்.

“ஹலோ…. ஹலோ… மிஸ்டர்…. ப்ளீஸ்… உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?…. கேளுங்க தரேன். உங்களுக்கே தெரியும் என் மேல ஒரு தப்பும் இல்ல… அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் வேற இருக்கு ப்ளீஸ்” மகேந்திரன் திணறிக் கொண்டே கை கூப்பிக் கொண்டு கெஞ்சினான்.

தாடி, தன் பிடியை தளர்த்திக் கொண்டு “ஓஹோ……கல்யாணம்?” என்றவாறு விசில் அடித்தான். “எனக்கும் பணம் தான் வேணும்..என் பொண்ணை வித்து பணம் சம்பாதிக்கத் தான் அந்த புளிய மரத்துக்கிட்ட காத்துகிட்டு இருந்தேன்” என்றவாறு சிரித்தது தாடி.

“என்ன சொல்றீங்க நீங்க?… நீ அந்தப் பொண்ணை கடத்திட்டு போனவன் தானே?…. நான் இன்னிக்கு சாயந்தரம் பேப்பர்ல படிச்சேன் ஒரு கடத்தல்காரன் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறான்னு…. நீயேதான் அவ முகத்தையும் ஏதோ பண்ணிட்டு உருத்தெரியாம ஆக்கியிருக்க இல்லையா?” மகேந்திரன் நடுங்கும் குரலுடன் உண்மைகளை உணர்ந்தவாறு பேசினான். செய்தித்தாளில் அவன் அந்த சிறுமியின் முகமும் சிதைந்து போயிருக்கிறது என்பதை படித்ததும் மிகவும் குழம்பிப் போனான். கூடவே இன்ஸ்பெக்டர் ஃபோட்டோ போட்டு அவரிடம் செய்தியாளரின் பேட்டி விரிவாக எழுதப்பட்டிருந்தது….. படித்ததும் அவன் இரத்தம் உறைந்தது…. அந்த மாருதி கார் பற்றிய முக்கிய தடயம் ஒன்று கிடைச்சிருக்கு, சீக்கிரத்திலேயே அவனையும் அந்த கடத்தல் பேர்வழியையும் பிடித்துவிடுவோம் என்று இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேட்டியில் கூறியிருந்தார்.

தானாக சரணடைந்து விட வேண்டும் என்பதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் அப்படி கூறியிருக்கக் கூடும் என்று மகேந்திரன் நினைத்தான். எதுவானாலும் அவர்களாகவே வந்து தன்னை கைது செய்து கொள்ளட்டும், அப்பொழுது வக்கீலை வைத்துக் கொண்டு தன் நியாயத்தை வாதாடிக் கொள்ளலாம்…. அந்தக் கடத்தல்காரன் மேல் முழு பழியையும் போடலாம் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான் மகேந்திரன்.

தாடிக்காரன் மகேந்திரனைப் பார்த்து மேலும் சிரித்தான்….”மகேந்திரன்… போலீஸ் கணக்கும் உன் கணக்கும் தப்பு…. நான் அந்தப் பெண்ணை கடத்தவில்லை…. முதல்ல சொன்ன மாதிரி அவ என் பொண்ணு தான். டிவியில….பேப்பர்ல கொஞ்ச நாளா என் பொண்ணு மாதிரியே ஒரு ஃபோட்டோ பார்த்தேன்…… காணவில்லைன்னு….. எனக்கோ வேலை இல்லை சம்பாதிக்க… கையில் பணமும் இல்லை…. வீட்ல வசவசன்னு ஆறு குழந்தைங்க வேற…. அதனால இந்தக் குழந்தைய…. ராணிய… அவளை வித்துவிடலாம்ன்னு தீர்மானித்திருந்தேன்…. காணாமல் போன நளினி பொண்ணோட வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் கிட்ட அவங்க குழந்தை இருக்கிறதா சொல்லி, கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிக் கொண்டேன்…. மறுநாள்….நேத்து தான்… அந்தப் பெரியவரை திண்டிவனம் கிட்ட வந்து பொண்ண கூட்டிக்கிட்டு போகலாமுன்னு சொல்லியிருந்தேன்… அவரும் வந்துக்கிட்டிருந்தார்….நானும் என் பொண்ணோட காத்துக்கிட்டிருந்தேன்… இரண்டு பேரும் மரத்துக்கு மேலே புளியம் பழம் பறிக்கப் போயிருந்தோம்… அதுக்குள்ள விதி விளையாடிருச்சு…” சோகமாக நடந்ததை கூறினான் தாடி.

“உங்க பணப் பேராசைனால அந்தப் பெரியவரும்…. பொண்ணோட பிணத்தை பார்த்ததும்…. மாரடைப்பில் செத்துப் போய் இருக்காரு… பாவம்” மகேந்திரன் செய்தித்தாளில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு சொன்னான்.

“அது அவரோட தலைவிதி…. நான் என்ன செய்ய?… இப்போ எனக்கு பணம் வேணும்…. நான் எவ்வளவு கேட்கிறனோ அவ்வளவும் வேணும்…. இல்லைன்னா இப்பவே போலீஸ்கிட்டே போவேன்” தாடி கொஞ்சம் கடுமையாகவே பேசினான்.

“போலீஸ் உங்களையும் தானே கைது செய்யும்… அந்தப் பொண்ணு முகத்தை நாசப்படுத்தி இருக்கீங்க”

“அதை நான் செய்யல…. நான் மரத்து மேலே இருந்து கீழே வரதுக்குள்ள…. நீங்க போனப்புறம்….இன்னொரு கார்…. இன்னொரு வண்டி திடீர்னு திண்டிவனம் போற திசைல வந்து அவ மேல ஏறி அவ முகத்தை சின்னாபின்னமாக்கிட்டு போயிருச்சு.. அந்தப் படுபாவியும் நிற்காமல் போய்விட்டான்…. என்னவோ, என் பொண்ணு ராணி செத்தது செத்துட்டா, இனி அவள் முகம் இருந்து, போலீஸார் விசாரித்து…. என் வீடு வரை வந்து விடக்கூடாதுன்னு, நானும் இது நல்லதுதானேன்னு நினைச்சிகிட்டேன்…. எனக்கு இப்போ…. ஆகமொத்தம் எனக்கு பணம் தேவை…..போலீஸ் உன்னை எப்படியும் கண்டுபிடிக்கும்னு பேப்பர்ல சொல்லி இருக்கு….அப்படியே அவங்க கண்டுபிடிக்க முடியலனைன்னா…. நான் கேக்குறத நீ கொடுக்கலைன்னா… நானாகவே விஷயம் எல்லாத்தையும் அமல்படுத்தி, நீ எனக்கு, என் ராணிய கொன்னதுக்கு நஷ்ட ஈடு தரணும்னு கோர்ட்டுக்கு போவேன்…. வருவது வரட்டும் நடப்பது நடக்கட்டும்ன்னு என்னால் ஆனதை பார்ப்பேன்” தாடிக்காரன் மிகுந்த சினத்துடன் கத்த ஆரம்பித்தான்.

மகேந்திரன் கொஞ்சம் சிந்திக்கலானான்…. தாடி சொன்னது எல்லாம் வாஸ்தவம் தான் என்று தோன்றியது.

“ஒரு வேளை போலீஸ் வந்து என்னை பிடிச்சா நீ….நீங்க என்னை எந்த விதத்தில் காப்பாற்றுவீங்க?” மகேந்திரன் நிதானமாகக் கேட்டான்..…”உங்க பெயர் என்ன முதல்ல சொல்லுங்க” என்று தாடியை துருவிக் கேட்டான்.

“என் பெயர் எல்லாம் இப்போ சொல்ல முடியாது…. ஒருவேளை போலீஸ் வந்து உங்களை பிடிச்சா…. உங்ககிட்ட நான் இப்போ என் உண்மைகளை சொன்னது மாதிரி போலீஸ்கிட்டேயும் சொல்லி உன் மேல பழி வராமல் பார்த்துக்குவேன்” தாடி புன்னகைத்தான்…. ஆனால் அதில் ஏதோ கொஞ்சம் ஏளனம் இருந்தது.

மகேந்திரன் குழப்பத்துடன் தலை சொரிந்தான்….ஆனால், இவனை இப்போதைக்கு நம்புவதா என்று புரியவில்லை.

“ஆமா…. எப்படி என் அட்ரஸ் கண்டுபிடிச்சீங்க மிஸ்டர்?”

“அங்க ஆக்சிடெண்ட் நடந்த ஸ்பாட்டிலேயே உன் கார் நம்பரை நோட் பண்ணிக்கிட்டேன்”

“ஏன் ஆக்சிடெண்ட் நடந்ததும் மரத்தில் இருந்து கீழே வரல?”

“ராணி கீழே தவறி விழுந்ததும்… நான் அதிர்ச்சியில அப்படியே ஆடிப் போயிட்டேன்….என்ன பண்றதுன்னு ஷாக் அடித்த மாதிரி…. பிரம்ம பிடிச்ச மாதிரி இருந்துச்சு…. அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு இறங்கறதுக்குள்ள நீ காரில் கிளம்பி போயிட்டே…

பாதி மரம் இறங்குறச்ச….அந்த இன்னொரு வண்டி…. திண்டிவனம் பக்கமா போன வண்டி அவ முகத்து மேலே ஏறி சின்னாபின்னமாக்கிட்டு…..கொஞ்சமும் நிக்காம அப்படியே போயிட்டான்….பாவி…..அப்புறம் தான் மனச தேற்றிக்கிட்டு இறங்கி கீழே வந்தேன்.”

மகேந்திரன் தாடியை சந்தேகமாகப் பார்த்து “ஆனா நான் கிளம்பறப்போ எனக்கு எதிர்ப்புறமாக திண்டிவனம் பக்கம் எந்த வண்டியும் உடனே வரலையே….நீங்க சொல்ற அந்த வண்டி நம்பர் என்ன?” என்றான் யோசனையுடன், என்ன நடந்தது என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு…..

‘எந்த வாகனமும்….யாரும் கண்ணுக்கு எட்டியவரை தெரியாததால் தானே உடனே கிளம்பிப் போனோம்?….இந்த தாடி சொல்வதை பார்த்தால் ஏதோ பெரிய தவறு நடக்கிறது போல் தோன்றுகிறது…. இவன் உண்மை பேசுகிறானா அல்லது பொய் பேசுகிறானா’ என்பது மிகவும் குழப்பமாக இருந்தது.

“நீ…..நீங்க….பதட்டத்தில் கவனிக்காமல் போயிருப்பீங்க. நான் உங்க நம்பரை வெச்சுக்கிட்டு இன்னிக்கு நாள் பூரா தேடி கண்டுபிடிச்சு…. கஷ்டப்பட்டு வந்து கிடக்கறேன்…. கொஞ்ச நேரம் முன்னாடிதான் முழு விவரம் கிடைச்சது”

“ஆனா நான் மரத்தையும் பார்த்தேனே…நீ…. நீங்க தெரியவில்லையே?….. நீங்க சொல்ற அந்த வண்டி நம்பர் என்ன?” மகேந்திரன் தாடியை மேலும் மடக்கினான்.

“சரி…. சரியாக கவனித்திருக்க மாட்டீங்க…. உன் காரும் நீயும் கூட எனக்கு மரத்திலிருந்து அரைகுறையாகத் தான் தெரிஞ்சது…. இறங்கி வரும்போது தான் உன் கார் நம்பரை என்னால் கவனிக்க முடிஞ்சது…… அந்த இன்னொரு வண்டி நம்பர்…. மரத்தோட நிழல்ல சரியாய் தெரியல…… சரி எனக்கு பணம் வேணும்…. நான் சீக்கிரம் கிளம்பி ஆகணும்”

“எவ்வளவு பணம் வேணும்?”

“இப்போதைக்கு என் பொண்ணோட விலை 5 லட்சம்”

மகேந்திரன் அதிர்ச்சியுடன் எழுந்தான்… “என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை” என்றான்.

“எப்படியாவது புரட்டு…பிஸினஸ் பண்றீங்க, கைல பணம் இல்லைன்னா நான் நம்பமாட்டேன்…. இப்போதைக்கு ஒரு லட்சமாவது கொடு”

“என்கிட்ட ஒரு லட்சம் கூட இல்லை… மிஞ்சி மிஞ்சிப் போனா 20 ஆயிரம் தான் இருக்கும்”

“சரி அதை முதல்ல கொடு…. நான் கொஞ்ச நேரம் இங்கேயே வெயிட் பண்றேன்…. நீ போயிட்டு குறைஞ்சது ஒரு லட்சமாவது எடுத்துக்கிட்டு வரணும், இல்லைன்னா நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்…. மீதி நாலு லட்சத்தை நாளைக்குள்ள கண்டிப்பா ரெடி பண்ணனும்…. இல்லன்னா…. உன்ன நம்பி நான் என் டைம் வேஸ்ட் பண்ணமாட்டேன்… சரியா?… போ…போ… போய் முதல்ல ஒரு லட்சம் கொண்டு வா” தாடி மகேந்திரனிடம் அதிகாரமாக பேசினான்.

“உங்களை நம்பி நான் எப்படி இவ்வளவு தொகையை கொடுக்கறது?….உங்க அட்ரஸ் சொல்லுங்க?”

“உனக்கு இப்போ என் பெயர் அட்ரஸ் எதுவும் சொல்ல மாட்டேன்…. என் மேல நம்பிக்கை இருந்தா, நான் சொல்றத கேளு….கேளுங்க….உங்களுக்கும் பிரச்சனை வராது, எனக்கும் பிரச்சனை வராது…. உங்களுக்கு கல்யாணம்னு வேற சொல்றீங்க…. யோசித்து முடிவெடுங்க….இப்போ கையில இருக்குற 20 ஆயிரத்த குடுங்க… வெளிய போயிட்டு வாங்க… நான் இங்கேயே இருக்கிறேன்”

மகேந்திரன் கையில் இருந்த 20 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, தாடியை வாசலில் உள்ள நாற்காலியில் அமரச் சொல்லி, வீட்டை பூட்டிவிட்டு, வெளியே கிளம்பி, அருகில் இருந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்து தாடியிடம் கொடுத்தான். பணம் எடுக்க 3 பேங்க் ஏடிஎம்க்கு போக வேண்டியதாகிவிட்டது…. கிட்டத்தட்ட அரை மணி நேரம் இதற்காக செலவழித்தான் மகேந்திரன்.

ஒரு லட்சம் மொத்த பணம் தாடி கைக்கு வந்ததும் அவன் முகம் மலர்ந்தது…. “சரி இப்போ நான் கிளம்பறேன்…. நாளைக்கு எங்க எப்போ மீதி நாலு லட்சம் தரணம்னு நான் உனக்கு சொல்வேன்….அது பிரகாரம் பண்ணனும்…. அதற்குள் போலீஸ்கிட்ட போகலாம்னு நினைச்சீன்னா…. கதை கந்தலாகி விடும்… அதுக்கு நான் பொறுப்பு இல்லை புரிஞ்சுதா?” என்று சொன்ன தாடியிடம்,

“ரெண்டு நாள் டைம் வேணும்….” மகேந்திரன் கேட்க அதற்கு ஒப்புக்கொண்டான் தாடி…. பின் சென்று விட்டான்.

அவன் போனதும் சில வினாடிகள் காத்திருந்த பிறகு மகேந்திரன் அவனைப் பின் தொடர்ந்து ஓடினான்…. அவன் எப்படி, எந்த வாகனத்தில் வந்தான், எங்கே போகிறான் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்று நினைத்தான் மகேந்திரன்….ஆனால் அந்த தாடியோ, ஜாலியாக நடந்து கொண்டே அவனை திரும்பிப் பார்த்து ‘டாட்டா’ காட்டியது!

மகேந்திரனால் அதற்கு மேல் தாடியை பின் தொடர்ந்து போக முடியவில்லை…. அவன் கவனிக்கிறான் என்பதால் இனிமேல் பின்னால் சென்று பயனில்லை என்று புரிந்து கொண்டவனாக தன் வீட்டிற்கு திரும்பினான்.

வீட்டிற்குள் நுழைந்த மகேந்திரன் சோஃபாவில் சாய்ந்து யோசிக்கலானான்…

டைரியை எடுத்து, இந்த தாடியுடன் பேசியது அனைத்தையும் எழுதி வைத்தான். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததையும் எழுதி வைத்தான்.

‘இந்த ஒரு லட்சத்தோடு பிரச்சினை தீர்ந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!’ என்று எண்ணிக் கொண்டான்.

அந்த தாடிக்காரன் பற்றி மேலும் சிந்திக்கலானான்….

‘தன் சிறு மகளின் மீது அனுதாபம் இன்றி முகத்தை அகோரப்படுத்திய காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை…. அல்லது உண்மையிலே வேறு வண்டி ஏதாவது அந்த முகத்தை சின்னாபின்னமாக்கியதா?…. புரியவில்லை…. இவன் நோக்கம் தான் என்ன?… எதற்கு பணப் பிசாசாக இப்படி அலைகிறான்? ஆக்சிடெண்ட் ஆன பின் உடனே என்னை ஏன் தொடரவில்லை?… ஏன் ஒரு நாள் கழித்து வருகிறான்?… செய்தியில் இருப்பது போல் ஏன் திண்டிவனம் பக்கம் சென்றான்?…இவன் தான் உண்மையில் அந்தப் பெண்ணின் முகத்தை சிதைத்ததா அல்லது திண்டிவனம் நோக்கிச் சென்ற வேறு வண்டியா?…. புரியவில்லை….யாரைத்தான் நம்புவது?….’ குழப்பமாக இருந்தது.

‘அந்த ஆறுமுகம் என்பவர்…. சென்னையைச் சேர்ந்தவர்… தன் காரை எங்கிருந்தோ கிளப்பி…. மறுபடியும் சென்னை நோக்கியவாறு செலுத்தி…. ஆக்சிடெண்ட் நடந்த ஸ்பாட்டருகே வந்ததும் தன் பேத்தியோ என்கிற திகைப்பில் மாரடைப்பால் இறந்துள்ளார் என்பதிலிருந்தும், அவர் மகன் சோமு சொல்லியுள்ள தகவல் படியும், இதில் நிச்சயம் கடத்தல்காரன் சம்பந்தப்பட்டுள்ளதாக செய்தியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கூறியிருக்கிறாரே?…. இந்த தாடி உண்மையில் கடத்தல்காரனா?…. இல்லை அவன் என்னிடம் சொல்லிக் கொண்டதெல்லாம் உண்மையா?…. இல்லை அதில் பாதி உண்மை, பாதி பொய் உள்ளதா?…. நடந்த சம்பவத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமாக மாற்றி பேசுகிறானா?… யாரையும் நம்ப முடியவில்லையே?’

மார்க்கெட்டிற்கு சென்று இருந்த ராமு திரும்பி வந்தான். மகேந்திரனை கேட்காமலேயே டிவியை இயக்கினான். தட்டுகளையும் கத்தியையும் கொண்டு வந்து…. ஃபிரிட்ஜில் இருந்த காய்களை எடுத்து பேப்பர் மேல் கீழே வைத்து…. நொறுக்கியவாறே…… டிவியை பார்க்கலானான்…..

மகேந்திரன் மறுபடியும் அந்தத் தமிழ் தினசரியை எடுத்து “திண்டிவனத்தில் ஒரு கொடூரம்” செய்தியை மூன்றாவது முறையாக படித்தான். அந்த தினசரியில் நளினி என்கிற ‘சிறுமி காணவில்லை’ என்று ஃபோட்டோவுடன் சில தகவல்களும் அண்ணா நகரில் இருக்கும் பெற்றோர் விலாசம் இருந்தது…. அதாவது அவளின் தாத்தாவின் விலாசம் அது. மகேந்திரன் மறுபடியும் இந்த ஃபோட்டோவை உற்றுப் பார்த்தான்…. நெற்றியில் இடது பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் போல் இருக்கிறது….

‘ஃபோட்டோ எடுக்கும் பொழுது ஏதாவது ஈ அமர்ந்து இருக்குமா?… இல்லை பேப்பர் பிரிண்டிங் ஏதாவது விழுந்து இருக்குமா?….’ தெரியவில்லை.

மகேந்திரன் முடிந்த அளவுக்கு அந்தச் சிறுமியின் உருவத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்தி யோசித்துப் பார்த்தான்…. அந்த முகத்தில் அவனுக்கு உடனே பிரதிபலித்தது எல்லாம் சாகும் தறுவாயில் அவள் விழிகள் மேல்நோக்கி அசைத்து… கோரமாக…. கையை அசைத்தது…..இவனைப் பார்த்தது…. மகேந்திரனை ஓரிரு முறை நோட்டமிட்டது…. எல்லாம் மனக்கண் முன் மீண்டும் தோன்ற மகேந்திரனின் உடல் குலுங்கி நின்றது.

“என்ன சார்?” என்று ராமு திகிலுடன் திரும்பிப்பார்த்தான்.

மகேந்திரன் “ஒன்றுமில்லை” என்று சமாளித்தான். மறுபடியும் தினசரியில் இருந்த அந்த ஃபோட்டோவை உற்றுப் பார்த்தான்… அந்தப் ஃபோட்டோவிலும் சிறுமியின் கண்கள் மேல் நோக்கி அசைய… வாய் கோணலாக விரிய…..’படார்’ என்று தினசரியை கீழே போட்டான். வேர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டான்….

பிறகு அந்த தாடிக்கு கொடுக்க வேண்டிய மீதி நான்கு லட்சம் பணத்தை எப்படி பிரட்டுவது என்று யோசிக்கலானான்….

டிவியில்….. அறிவிப்புகள் என்று ஆரம்பமானது…. ‘காணவில்லை’ பகுதி…. மூன்றாவதாக வந்த சிறுமி நளினியின் புகைப்படத்தை பார்த்த மகேந்திரன்…. பேப்பரில் தெரிந்த ஃபோட்டோவை எடுத்து, டிவியில் தெரியும் நளினியின் ஃபோட்டோவையும் இதையும் மாற்றிமாற்றி உற்றுப்பார்த்தான்…. அசையாமல் சிரித்த முகத்துடன் டிவியில் தெரிந்த நளினி…. திடீரென்று வாய் கோணி… கண்கள் மேல் நோக்கி சொருகி அசைய…. மகேந்திரன் உடம்பெல்லாம் நடுக்கம் கண்டது… “நிறுத்துடா டிவியை” என்று அலறினான்…… ராமு டிவியை நிறுத்தினான்.

இந்த ராமு, கொஞ்சம் படித்து விஷயம் தெரிந்த பையனாக இருந்திருந்தால்…. ‘நம்ம எஜமான் டிவியிலே இந்தப் பொண்ணை பார்த்து மிரள்கிறார்… பேப்பரில் எதையோ பார்த்து ….அந்தப் பொண்ணு ஃபோட்டோவாகத் தான் இருக்கும்… அதையும் பார்த்து மிரள்கிறார்…. எஜமானும் அன்று திருச்சியிலிருந்து வேற வந்திருந்தார்… வந்ததும் காரை கழுவச் சொன்னார்….. அந்த தாடி ஆசாமி வந்ததும் என்னை வெளியே அனுப்பிவிட்டார்… எஜமான் தான் அந்த திண்டிவனம் ஆக்சிடெண்ட்ல் சம்பந்தப்பட்டு இருக்கிறாரோ?…’ என்று யூகித்து இருக்க முடியும். ஆனால் ராமுவோ படிப்பு வாசனை இன்றி வளர்ந்திருந்தான்… நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில் எல்லாம் அக்கறை கிடையாது… விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்காக வாரம் முழுவதும் காத்திருப்பான்… ஞாயிறு வந்ததும் மதியம்வரை வேண்டியதெல்லாம் சமைத்து முடித்து….பத்து மணிக்குள் ரெடியாகி இரண்டு மூன்று சினிமாக்களை பார்க்க கிளம்பி விடுவான். இப்பொழுதும், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று என்னென்ன சினிமாவை எந்தெந்த தியேட்டர்களில் போய் பார்ப்பது என்பது பற்றி தீவிரமாக யோசனை செய்து கொண்டு இருந்தான்.

மகேந்திரன் கண்களை வலது கையால் மூடிக் கொண்டு கால்களை பரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் கண்களுக்கு முன் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுமியின் முகம் தெரிந்தது… கொஞ்சம் மங்கலாக நெற்றியில் இருந்த அந்த மச்சமும் முகத்தில் தெரிய ஆரம்பித்தது… அவள், அந்த தாடி சொன்னதுபோல் ராணி அல்ல நளினி தான் என்று மகேந்திரனின் மனம் இப்போது முழுமையாக நம்பியது… ‘அந்த தாடி அப்படி என்றால் ஏன் பொய் சொல்லி இருக்க வேண்டும்? உண்மையில் நெற்றியில் தெரிவது மச்சம் தானா?’

மகேந்திரன் அண்ணா நகரில் இருக்கும் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தவனாய் ஃபோனை எடுத்தான்…. தினசரியில் இருந்த நம்பரை பார்த்து அழுத்த….. உடனே வைத்துவிட்டு, தன் வீட்டு நம்பர் அவர்களுக்கு தெரிந்து விடுமோ என்கிற பயத்தினால், வெளியே சென்று அருகிலிருந்த பப்ளிக் பூத்திலிருந்து தொடர்பு கொண்டான்.

“ஹலோ…” அவன் சொல்லி முடிப்பதற்குள் மறுமுனையில் இருக்கும் யாரோ பேசத் துவங்கியதை உணர்ந்தான்…. ‘லைன் கிராஸ் ஆகி இருக்கிறதா?’ என்று சந்தேகம் வந்தது மகேந்திரனுக்கு…. பேச்சை கவனிக்கலானான்….

“நீ ஒரு பெரிய கடத்தல் கும்பல்கிட்ட டீல் பண்ணிக்கிட்டு இருக்க…. அத ஞாபகம் வச்சுக்கோ…. உன் அப்பன் செத்தது போதாதா?… இன்னும் உன் வீட்டுல வேற சாவு விழணுமா?…”

இந்தக் குரல் எங்கேயோ கேட்டது போலிருந்தது மகேந்திரனுக்கு…. மறுமுனையில் பேச்சு தொடர்ந்தது

“நீ யார்?…. என் நளினி உன் கிட்ட தான் இருக்காளா?… அந்த ஆக்சிடெண்ட்ல செத்து போனது என் பொண்ணு நளினி இல்லையா?”… இது அனேகமாக அண்ணா நகரில் இருக்கும் நளினியின் அப்பா சோமுவாகத்தான் இருக்கும்…

“ஆமாம்… உன் பொண்ணு சாகலை… இன்னும் என்கிட்ட உயிரோடத்தான் இருக்கிறாள்… நம்புங்க…. அங்கே திண்டிவனத்தில் செத்தவ வேறொருத்தி… அவ அப்பன் நான் கேட்ட பணம் கொடுக்காமல் போலீஸ் கிட்டே போய் ரிப்போர்ட் பண்ணிட்டான்…. என்னைப் பிடித்துக் கொடுக்க நினைச்சான்…. முட்டாள்…. அவன் பொண்ணைத்தான் திண்டிவனம் கிட்ட சாகடிச்சேன்…. அந்த அப்பனுக்கும் ஒரு பாடம்… உனக்கும் ஒரு சாம்பிள் காண்பித்தேன்!”

“என் அப்பாதான் உனக்கு மூனு லட்சம் கொடுத்திருக்கிறாரே?”…

“ஒரு கடத்தலுக்கு…. ஒரு ஐந்து லட்சமாவது வேண்டும்… அதுதான் என்னோட குறைந்தபட்ச ரேட்…. ஸோ… மீதிப் பணத்தை எப்போ ரெடி பண்ணுவீங்க?”

“கொஞ்சம் டைம் கொடு…. நளினியை பத்திரமா வச்சிருக்கியா? நான் அவளை பார்க்க வேண்டுமே?…. அப்ப தான் உன்னை நம்ப முடியும்”

“அதை எல்லாம் நான் நல்லா தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்… என் ஆளுங்க குறை வைக்க மாட்டாங்க… நாங்க ஒரு கேங்… யார் யார் எப்படி, கடத்தல் செய்த குழந்தைய பார்த்துக்கணும்னு நாங்க திட்டம்போட்டு அதன்படிதான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்…. நீயே மூக்கு மேல விரல் வைப்பே, உன் பொண்ணு தானான்னு…. அந்த அளவுக்கு அவளை நல்லா கவனிச்சு பார்த்துக்கிட்டு இருக்கோம்… சாப்பாட்டுக்கும் குறையில்லை, வேண்டிய விளையாட்டும் விளையாடிக்கிட்டு தான் இருக்கா அவ…5 லட்சம் ஃபீஸ் வாங்குகிறோம் இல்ல!…. அதனால குழந்தையை பத்திரமாக பார்த்துக்கறோம்…. சரி பணத்தை எப்போ ரெடி பண்ணுவீங்க? போலீஸ் ஸ்டேஷன் போனீங்கன்னா…. எங்க ஆளுங்க உங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே தான் இருப்பாங்க, ஜாக்கிரதை”

“இரண்டு மூனு நாள் டைம் கொடு…. அவ்வளவு பெரிய பணம் உடனே புரட்ட முடியாது…”

“சரி… நீ பணத்தை ஒரு பெட்டியில் போட்டு எந்த இடத்தில் என்றைக்கு எத்தனை மணிக்கு எப்படி கொண்டு வந்து வைக்கணும்னு நான் அப்புறம் தெரிவிக்கிறேன்…. இப்போ போய் சந்தோஷமா படு!” அதற்குப் பின் பேச்சு துண்டிக்கப்பட்டது.

மகேந்திரனும் போனை கீழே வைத்தான்…..அவனால் ஜீரணிக்க முடியவில்லை… பிரமிப்புடன் இமை கொட்டாமல் அப்படியே நின்றான். “ப்ளடி பாஸ்டர்ட்” என்று வாய்விட்டு முனகினான்….’ஸோ….அந்த தாடி உண்மையிலேயே ஒரு கடத்தல் பேர்வழி…. இப்பொழுது பேசியது அவன் தான்’ என்று புரிந்தது….

‘ப்ளடி பாஸ்டர்ட்…. என்னிடமும் புளுகி பணத்தை பறித்து விட்டு அங்கே அவர்களிடமும் மீண்டும் மீண்டும் புளுகி பணம் பறிக்கிறான்…. ஆஹா என்ன ஒரு மகா திருடன்!….’

‘….ஆனால் அந்தப் பொண்ணு நளினி தான்…. என் கார் ஏற்றியது அந்தப்பெண் நளினியின் மேல் தான்…எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது… அந்த மச்சம் நிச்சயமாக நளினி முகத்தில் இருக்கும் மச்சம் தான்….. ஆனால் அவன் நளினி இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று சொல்கிறானே?… மறுபடியும் புளுகுகிறானா?…செத்தது நளினி இல்லை, தாடி சொல்வது போல் இன்னொருத்தி ராணியா?….யாரையும் நம்ப முடியவில்லையே?’

மகேந்திரன் மறுபடியும் அதே நம்பருக்கு டயல் செய்தான், உண்மையை கண்டுபிடிக்க…. முயன்றதை செய்வோம் என்ற முடிவுடன்…

“ஹலோ” மறுமுனையில் சோமு தான் என்பது குரலிலேயே புரிந்தது. “பயப்படாதீங்க… நான் கொஞ்ச நேரம் முன்னாடி உங்ககிட்ட பேசின அந்த கடத்தல் ஆசாமி இல்லை…. ”

“அப்போ யாரு?…யாரு நீ? என்ன வேணும்?”

“திண்டிவனம் ஆக்ஸிடெண்ட்ல இன்வால்வ் ஆன மாருதி கார் என்னோடது தான்…. என்னை திட்டாம நான் சொல்றதை முழுசா கவனமா கேளுங்க…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே நான் உங்க நம்பருக்கு டயல் பண்ணேன், அப்போ நீங்க அந்த கேடியோடு…. அவன் கடத்தல்காரன்னு இப்ப தெரியுது…. அவனோடு பேசியது எனக்கு ஃபோன் க்ராஸாகி நல்லா கேட்டது… எல்லாத்தையும் கேட்டேன். அவனை சுத்தமா நம்பாதீங்க”

“உன்னை நம்பலாமா?…. நீயும் அவன் ஆள் தானே?….அந்தக் கேங் தானே?…. என்னை டெஸ்ட் பண்ணத் தானே இப்படி ஃபோன் பண்ணி பேசி ஏததோ சொல்ற?” சோமு நடுங்குவது புரிந்தது

“ப்ளீஸ் லிசன் மீ ஐ ஸே…… என்னால இப்போதைக்கு போலீஸ்கிட்ட நேரா போய் நடந்ததை எல்லாம் சொல்ல முடியாது… அதனால் தான் உங்ககிட்ட முதல்ல சொல்கிறேன்…. ஆமா, உங்க நளினி நெத்தியிலே பெரிய மச்சம் ஏதாவது?”

“ஆமாம்… ஆமாம்… இருக்கு. எப்படி தெரியும் உனக்கு?”

“நான்தான் சொன்னேனே….உங்க பொண்ணு என் கார் முன்னால விழுந்து தான் செத்தா… அந்த பாஸ்டர்ட் மரத்து மேல இருந்து தள்ளிவிட்டு இருக்கான். நான் கார்ல இருந்து இறங்கிப் பார்த்தப்போ உங்க பொண்ணு முகம் நல்லாத்தான் இருந்தது… அப்புறம் தான் அந்த படுபாவி முகத்து மேல ஏத்தி இருக்கான்… இல்ல வேற வண்டி ஏதாவது ஏத்திச்சா எனக்கு இப்பொழுது சரியா தெரியாது…. ஆனா கண்டிப்பா சொல்கிறேன், நான் பார்த்தப்போ அந்தப் பொண்ணு நெத்தியில, அந்த பெரிய மச்சம் இருந்தது….அதுல குழப்பமே கிடையாது….அப்படின்னா அவ உங்க பொண்ணு நளினி தான்…. இப்போ அவன் வேற ஏதோ பேசி உங்களை ஏமாற்றி இன்னும் பணம் பறிக்க பார்க்கிறான்…. யூ ஹேவ் டு பிளீவ் மி…. ராணின்னு பச்சை குத்தி இருப்பது எல்லாம் ஏதோ சூழ்ச்சி…….., இல்லை அதில் வேற ஏதோ காரணம் இருக்கலாம்…. ஒரு வேளை யாராவது வழியில மடக்கி கேட்டால், அதை காட்டி தன் பொண்ணு தான்னு நம்பவைக்க வேண்டி செய்திருக்கலாம்…. அவன்தான் பயங்கர கில்லாடி ஆச்சே!…. கொஞ்ச நேரம் முன்ன தான் அந்த ஆசாமி… அந்த பாஸ்டர்ட்….சன் ஆஃப் அ பிட்ச்…. என் வீட்டுக்கு வந்து என்கிட்ட ஒரு கதையைச் சொன்னான்…. நான் அப்போ நம்பினேன்…. ஆனா முழுசா நம்பல…. இப்போ ஃபோன் பண்ணப்போ க்ராஸ் டாக் கேட்டு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டேன்….இப்போ அவனை மேலும் சந்தேகப்படுகிறேன்… என்கிட்ட இருந்து இப்போதைக்கு ஒரு லட்சம் வாங்கிட்டுப் போயிட்டான்….மேல இன்னும் நாலு லட்சம் வேணுமுன்னு கேட்டு இருக்கான்…. இந்த கிராஸ் டாக் கேட்டப்புறம் தான் எல்லாம் புரிந்தது… அவன் திரும்பி என் கிட்ட தான் வருவான்….., இரண்டு நாள்…… இல்ல நாளைக்குள்ள நான் அப்போ போலீஸ்கிட்ட அவனை பிடித்து தர முடிவு பண்ணிட்டேன்… நீங்க திண்டிவனம் போலீஸ்கிட்ட நடந்ததையெல்லாம், நான் சொன்னதையெல்லாம் சொல்லுங்க… உங்க பொண்ணு நளினி பாடிய எடுத்துகிட்டு வந்து பால் ஊத்தி…. வேண்டிய காரியங்களை கவனிங்க…”

அடுத்த முனையில் ஓவென அழும் சத்தம் கேட்டு தொடர்பு அறுந்தது.

மகேந்திரன் மனதிலும் சோகம், கோபம் எல்லாம் ஆட்கொண்டு கண்கள் சிவக்க வைத்தது. வீட்டிற்கு திரும்பி, சோஃபாவில் சாய்ந்து மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்தான்…..திடீரென அவன் முகம் மலர்ந்தது…. நடந்த கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளியை பிடிக்கப் போகும் ஹீரோவாக நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன்!…. ‘இனி அவனை எப்படி மடக்குவது? அவன் மீண்டும் என்னை தொடர்பு கொண்டு என்னை சந்திக்கும் போது எப்படி அவனை போலீசிடம் காட்டிக் கொடுத்து மாட்டி வைப்பது? எப்படி அவனை சந்தேகமின்றி மடக்கலாம்?’ என்று பலவழிகளில் யோசிக்கலானான்.

மகேந்திரன் டெலிஃபோன் கிராஸ் டாக் பற்றி…. அவனை போலீசிடம் பிடித்துக் கொடுக்கும் திட்டம் பற்றி…. டைரியில் எழுதினான்.

***

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சோம்பல் முறித்தவாறு கட்டிலில் இருந்து இறங்கிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.

சோமு வந்திருப்பதாகவும் அவன் தன் நளினியின் உடலை எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் தெரிந்தது….சற்று குழம்பினார்…..’நளினியா?’

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இருந்தவனை இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு கொண்டு வந்தார் ஒரு போலீஸ்காரர்….சோமுவின் முகம் அழுதழுது பயங்கரமாக வீங்கி இருந்தது. அவன் யாரோ உறவினர் ஒருவருடன் வந்திருந்தான்.

மணி இரவு 12 நெருங்கியிருந்தது “ஹலோ… சோமு வாட் இஸ் கோயிங் ஆன் அட் திஸ் ஹவர்?” என்றவாறு, ராஜேஷ் அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தார்.

சோமுவின் கண்கள் நனைந்தன… சில நொடிகள் விக்கி விக்கி அழுத பின் பேசலானான்… “சாயந்திரம் ஒரு ஃபோன் எனக்கு வந்துச்சு….முன்னாடி என் அப்பாகிட்ட பேசி மூனு லட்சம் பணத்தை வாங்கிட்டுப் போன அதே ஆசாமி தான்…கடத்தல் கேங்ன்னு சொல்லி…. திண்டிவனத்தில் செத்தது அவன் பொண்ணு ராணி தான், நளினி இல்லைன்னும்….நளினி இன்னும் உயிரோடு தான் அவன்கிட்ட இருக்கிறதாவும், இன்னும் பணம் வேணும்னு மிரட்டிப் பேசினான்…”

சோமு மேலும் சொல்லச் சொல்ல ராஜேஷ் கண்கள் அகலமாய் விரிந்து கொண்டே வந்தது.

சோமு பின் இரண்டாவதாக வந்த ஃபோனைப் பற்றி கூறி ராஜேஷை மேலும் வியப்படையச் செய்தான்.

“இட் இஸ் ரியலி வெரி இண்ட்ரஸ்டிங்…. அந்தப் பொண்ணு நளினிதான்னு இப்போ நம்பறீங்களா….?” ராஜேஷ் நெற்றியை தேய்த்தவாறு கேட்டார்.

“ஆமாம் சார்….அந்த இரண்டாவது ஆசாமி பேசினப்புறம் தான்…மார்ச்சுவரில அந்தப் பொண்ணு கவுன் ஞாபகம் வந்திச்சு….அந்த கவுன் போன பொங்கலுக்கு நாங்க வாங்கித் தந்த ட்ரஸ் தான்…நளினியை எடுத்துக்கிட்டு போகலாம் இல்ல?” சோமுவின் தொண்டை கரகரத்தது.

அவனுக்கு தண்ணீர் கொடுத்த ராஜேஷ், “யெஸ், வை நாட்?….அவ உங்கப் பொண்ணுன்னு நீங்க நம்பினப்புறம், ஓகே தான்…..சரி…. மேற்கொண்டு அந்த கடத்தல் ஆசாமி போன் பண்ணி பேசுவான் இல்லியா…. அப்போ அவனை மடக்கிப் பிடிக்க வேண்டிய ஏற்பாடுகளை நான் உடனேயே செய்தாகணும்… உங்களுக்கு வரும் ஃபோனை ட்ரேஸ் பண்ணலாம்… இனிமே வரப்போகும் ஃபோன் மிக முக்கியம் நமக்கு….. நாளைக்கு காலையிலேயே நான் உங்க வீட்டுக்கு வரேன்….. மேற்படி ஏற்பாடுகளை நான் செய்கிறேன்…. ஒரு வேளை அதுக்குள்ளே அவன் ஃபோன் பண்ணினா, அவன் சொல்வதற்கெல்லாம் சரி சரின்னு பதில் சொல்லிடுங்க…. டிவியில் பத்திரிக்கையில் உங்க பொண்ணு ஃபோட்டோ வந்துக்கிட்டே இருக்கட்டும், அத அவனை மடக்கி பிடிச்சப்புறம் நிறுத்திக்கலாம்… உங்க பொண்ணை அடக்கம் பண்றதும் சிம்பிளா பண்ணுங்க… நாங்க உங்க வீட்டுக்கு வரப்போ ஒரு வேளை அவங்க யாராவது உங்களை வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தா சந்தேகம் வராதபடி நாம எல்லோரும் ஜாக்கிரதையா நடந்துக்கணும்… அப்புறம்…. சரி வாங்க… உங்க பொண்ணை எடுத்துக்கிட்டு போக வேண்டிய ஏற்பாடுகளை செய்யறேன்” ராஜேஷ் சோமுவின் அட்ரஸ் ஃபோன் நம்பர் இவைகளை குறித்துக் கொண்டார்.

நளினியின் சவத்தை சோமுவிடம், அவன் காரில், கொடுத்தனுப்பிய பின் வீட்டிற்கு வந்து கட்டிலில் சாய்ந்தார்.

வெகு நேரம் வரையிலும் எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை…. விடியற்காலையில் கேஸ் மிக எளிதாக… கூடிய சீக்கிரத்தில் முடியப் போகிறது என்பதையும், அதன்பின் தனக்கு வரப்போகும் நற்பெயர், ப்ரமோஷன் இவைகளை கற்பனை செய்து கொண்டே… தூங்கிப் போனார்!.

***

சோகத்துடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சோமு பற்பல துயர நினைவுகளில் மூழ்கி இருந்தான். முன்பு அப்பாவின் சவத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்ற போது அம்மாவின் உடல்நிலை கருதி, பயந்து, மனைவி காயத்ரிக்கு ஃபோன் செய்து அம்மாவை ஆஸ்பத்திரியில் முதலில் அட்மிட் செய்து விடும்படியும் அதற்குப் பின்தான் அப்பாவின் சவத்தை வீட்டுக்குள் பயமின்றி கொண்டுவர முடியும் என்று மனைவியிடம் விளக்கிக் கூறி இருந்தான்…. அப்பாவின் சவத்தை பார்த்து அம்மாவிற்கு மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விடக்கூடாது என்று கவலைப்பட்டு அப்படி முடிவு செய்தான்…. மனைவி காயத்ரியும் அதன்படி அமுதா மாமியாரை உடனேயே ஆட்டோவில் அழைத்துக் கொண்டு தங்களுக்கு தெரிந்த ஆஸ்பத்திரிக்கு போனாள்…. வள்ளியை ஆஸ்பத்திரியில் இருக்கச் சொல்லி வீடு திரும்பி விட்டாள் காயத்ரி.

அம்மா அமுதாவுக்கு இப்பொழுது நளினியும் செத்துவிட்டாள் என்று தெரிந்தால்….. அவ்வளவுதான்…. கண்டிப்பாய் அந்த நிமிடமே மாரடைப்பால் உயிரை விட்டு விடுவாள்…..நல்ல வேலையாக முன் யோசனையுடன் அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து ஆகிவிட்டது என்று சோமு எண்ணியவாறு…சின்னப் பெண்…தன் மகள் நளினியை இந்தக் கோலத்தில் தூக்கிக்கொண்டு போகும் நிலையை எண்ணி…..

“நளினி….. ஐயோ நளினி” திடீரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் சோமு…. கூட வந்திருந்த அவன் சித்தப்பாவின் மகன் ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

சோமு இதற்கு முன் தன் குழந்தைக்காக எப்பொழுது அழுதோம் என்பது ஞாபகத்திற்கு வர மேலும் அழுதான்…..

அது சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு…. அதாவது நளினி பிறந்த அதே வேளை…. அவளுடன் கர்ப்பப் பையிலேயே செத்துப்போன இன்னோரு பெண் குழந்தையும் பிறந்தது!… அப்பொழுது அழுது இருக்கிறான்…. மனைவி காயத்ரியின் கண்ணுக்கும் காட்டாமல்…. பிறந்தவுடன் அது செத்துப் போயிருக்கிறது என்பதை நர்ஸ் தன்னிடம் சொன்னதும், அக்குழந்தையை அப்புறப்படுத்த வேண்டிய பரிதாப நிலைக்காக அழுது இருக்கிறான்….. காயத்ரியிடம் “உனக்கு ஒரு குழந்தைதான் பிறந்தது…. ஒரு குழந்தை தான் பிறந்தது…. இன்னொரு குழந்தை பிறந்த மாதிரி…. உனக்கு ஏதோ ஒரு பிரம்மை உருவாகி இருக்கு அவ்வளவுதான்!” என்று கூறி அவளை நம்ப வைத்தபொழுது எல்லாம் அழுது இருக்கிறான்….

காயத்ரியின் உடல் தேறிய பின் வெகு தினங்களுக்குப் பின் மெதுவாக அந்த செத்துப்போன குழந்தையைப் பற்றிய உண்மைகளை அவளிடம் சொல்லி அழலாம் என்று நினைத்தான்…

தன் வாழ்க்கையில் இப்பொழுது சோகம் சூழ்ந்து கொண்டே வருவதை எண்ணி ஆண்டவனிடம் குறைபட்டுக் கொண்டான்….. வீட்டில் கிடக்கும் அப்பாவின் உடலோடு நளினியையும் அடக்கம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி திட்டமிடலானான் சோமு.

****************

மறுநாள் காலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சுறுசுறுப்புடன் எழுந்து கொண்டார். ஸ்டேஷனுக்கு சென்று சில பணிகளை முடித்துக்கொண்டு உடனேயே சென்னைக்கு விரைந்தார். அங்கு தன் தலைமை அலுவலகத்தில் சீனியர்களை சந்தித்து நடந்த உண்மைகள் அனைத்தையும் விளக்கிக் கூறினார்.

“அந்தப் பொண்ணு…. ஆக்சுவலா யாருன்னு நம்புறீங்க?” ஒரு சீனியர் கேட்டார்

“நளினி தான் சார்…. முதலில் அந்த கடத்தல் ஆசாமி நளினி தாத்தாவை ஏமாத்தி மூனு லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறான்னு தெரியுது….இந்த தாத்தா கார் மாருதி அண்ட் ராமர் கலர்…. காரில் அடிபட்ட அந்தப் பொண்ணு முகம் நல்லாத்தான் இருக்கு அப்படின்னு அவ மேல ஏத்தின இன்னொரு சொந்தக்காரன் நேத்து ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறான்….இவன் காரும் மாருதி ராமர் கலர்னு நினைக்கிறேன்….என்னுடைய இன்வெஸ்டிகேஷன்லயும் அதை நான் உண்மைன்னு நம்பறேன்… அந்த முகத்தில் நெற்றியில் ஒரு மச்சம் இருந்துச்சுன்னு அவள் மேல் ஏத்தின மாருதி கார் ஆசாமி சொல்றான்…நளினியோட அப்பாவும் என்கிட்ட அது பத்தி….அந்த மச்சத்தைப்பத்தி சொல்லியிருக்கிறார்….

ராணின்னு பச்சை குத்தி இருக்கறது ஏதோ ஒரு குழப்பம்….இல்லை, ஒருவேளை….தான் போற இடத்துல நளினியை யாராவது பார்த்து யாரிவள்ன்னு கேட்டா, அது தன் பொண்ணுன்னு சொல்லி சமாளிக்க வேண்டி கடத்தல் ஆசாமி செய்து இருக்கலாம்…. இன்னும் இரண்டு நாளில் கேஸ் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன் சார்…. குற்றவாளியை பிடித்துவிடலாம்…. அப்போ இந்த கேஸ் விஷயமான உண்மைகள் எல்லாம் தெரிய வரும். இப்போதைக்கு அந்தப் பொண்ணோட அப்பா வீட்ல வரும் ஃபோன்கால்களை ட்ரேஸ் பண்ண வேண்டிய சில அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணனும்”

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தன் வேண்டுகோளுக்கு ஒப்புதல் பெற்றுக்கொண்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டியவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு மஃப்டியில் அண்ணா நகருக்கு விரைந்தார். சந்தேகம் வராதபடி சோமு வீட்டிற்குள் நுழைந்து……சாவிற்கு வந்தவர்களைப் போல் நுழைந்து அமைதியாக தங்கள் பணியை செய்யலானார்கள்.

சோமு இப்போது கொஞ்சம் தேறி இருந்தான்…. காயத்ரிக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி சொல்லி!

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திண்டிவனத்திற்கு ஃபோன் செய்து அந்த கரும்புச்சாறு விற்கும் கடைப் பையனைப் பற்றி கூறி அவன் ஏதாவது தகவல் தெரிவித்தால் தனக்கு சொல்லும்படி கூறி…..பின் அந்த கடைக்காரனின் நம்பருக்கு இவரும் தாமதிக்காமல் ஃபோன் செய்து கேட்டதற்கு, ஏற்காட்டில் இருக்கும் மச்சானிடம் இருந்து இன்னும் எந்த தொடர்பும் வரவில்லை என்று கடைக்காரனிடமிருந்து பதில் வந்தது.

ராஜேஷ் பிறகு சென்னையில் இருக்கும் தன் மாமனாருக்கு ஃபோன் செய்து, தான் ஒரு அவசர வேலைக்காக சென்னையில் சிறிது தங்க வேண்டி இருப்பதாகவும் இரவு நேரத்தில் வீட்டிற்கு வருவதாகவும் கூறினார்.

அவசர உதவிக்கு எந்த போலீஸ் ஸ்டேஷனையும் அணுகி வேண்டிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று இன்ஸ்பெக்டர் ராஜேஷுக்கு மேலிடத்தில் அனுமதியும் அதிகாரமும வழங்கப்பட்டிருந்தது.

***

இன்ஸ்பெக்டர் ராஜேஷை போலவே அன்று மகேந்திரனும் அவன் வீட்டில் துருதுருவென்று இருந்தான்…அவன் மனம் சதா தாடியை எப்படி மடக்கிப் பிடிப்பது பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்தது… ‘தாடி வரட்டும்…. அவனை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுகிறேன்… அதற்கு முன் முதலில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்…. அவன் எப்பொழுது வருகிறான், எங்கு சந்திக்க போகிறோம் என்கிற விஷயங்களை போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்…. ஆனால் போலீஸ் என்னை நம்புவார்களா?.. நான் யார், எப்படி இந்த கேஸில் சம்பந்தப்பட்டடு இருக்கிறேன் என்பதை கூறினால்….என்னை கைது செய்து விட மாட்டார்களா?…. அப்படியே நம்பி என் வீட்டுக்கு வந்து தாடியை பிடிப்பதற்காக பதுங்கி இருக்கையில், அந்த தாடி ஏதாவது காரணத்தால் வராமலேயே போனால் என்ன செய்வது?… என் மேல் மேலும் அவநம்பிக்கை ஏற்பட்டு என்னை உடனேயே லாக்கப்பில் போடுவார்களே!…. சரி அப்படி என்றால் அதைச் செய்ய வேண்டாம்…. இப்படி செய்யலாம்…. என் மாமா பையனை அழைத்து வந்து முழு விபரத்தையும் சொல்லி, அவனை எதிர் வீட்டில் தங்கியிருக்கச் சொல்லி, தாடியைக் கண்டதும் உடனே போய் போலீசை அழைத்து வர வேண்டும்….போலீஸ் வரும் வரை நான் தாடியுடன் சந்தேகம் வராதது போல் பேசி நடித்து கொண்டு இருக்க வேண்டும்… பிறகு போலீஸ் வந்ததும், அவர்கள் தங்கள் பணியை செய்து தாடியை மடக்கிப் பிடித்து விடலாம்!…’

மகேந்திரன் மிகவும் உற்சாகத்துடன் அந்தக் காட்சிகளை கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தான். தாடியிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டான்… தாடி கேட் அருகே வந்தது தெரிந்ததுமே இருவரும் பேசிக் கொள்வதை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டுக் கொண்டான்….. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டான்….அது வாக்குமூலம் வாங்க மிக எளிதாக அமையும்.

மகேந்திரன் தன் கம்பெனிக்கு செல்லவில்லை, ஃபோன் செய்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்து இருந்தான். அந்த தாடியை பிடிக்கும் வரை அவனால் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாது என்று தோன்றியது.

நிறைய டிசைன்கள் வரையும் அவன் கை இப்பொழுது சும்மா இருக்கையில் கை துருதுருத்தது…. எதையாவது வரைய வேண்டும் போல் தோன்ற, வெள்ளை தாள்களையும் கலர் பென்சில்களையும் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தான்.

அப்பொழுது அழைப்பு மணி ஒலித்தது… ராமு சமயலறையில் இருந்ததால் மகேந்திரன் வாசலுக்கு சென்றான்…. வந்திருந்தது அவன் மாமாவும் மாமியும்… மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றான்.

“என்னடா ஆள் அந்தப் பக்கம் வர்ரதே இல்லை?….கல்யாண மூடுல எங்களை மறந்து போயிட்டியா?” என்று கிண்டல் செய்தவாறு மாமா வந்தமர்ந்தார். மாமியும் சிரித்தவாறு அமர்ந்தார்.

“இல்ல மாமா… அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மாமா…. திருச்சிக்கு போயிருந்தேன், நம்ம புது பிசினஸ் விஷயமா தான்” சோமு இளித்தான்.

“அதான் தெரியுமே….வந்ததும் ஏன் வரவில்லை என்று தான் கேட்டேன்…. திருச்சியில் என்னென்ன பண்ணினேன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இல்லையா?”

“என்ன மாமா பெரிய பெரிய பேச்சா பேசறீங்க….. நீங்க சொல்லி சொல்லித் தானே நான் இந்த பிசினஸை கத்துக்கிட்டு செய்துக்கிட்டு வரேன்?!”

“சரி போன காரியம் என்ன ஆச்சு?… இடம் பார்த்தாயா?”

“பார்த்தேன் மாமா… பிடிச்சுப் போச்சு. அவங்க கேட்ட அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டு அக்ரிமெண்டில் கையெழுத்தும் போட்டாச்சு…. வர்ற 1ம் தேதியில் இருந்து எப்ப வேணும்னா நம்ம மெஷின்களை கொண்டு போய் போட்டு பிஸினஸ் ஸ்டார்ட் செய்யலாம்…. நீங்க தான் ஒரு நல்ல தேதியை பார்த்து சொல்லணும்”

“அட…. இன்னும் உன்கூட பிறந்தவன்… ஜப்பானுக்கு போனவன்….அந்த மனோகரன் திரும்பி வரலையே?… அவன் வந்து என்ன ஏதுன்னு சொன்னாதானே எல்லோரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாம்?”

“மனோகரன் கண்டிப்பா வந்துவிடுவதாக சொன்னான்… என் கல்யாணத்திற்கு இன்னும் நாலு நாள் இருக்கு…. அதற்குள்ளே வந்துவிடுவான்”

“கல்யாணம்னதும் ஞாபகத்துக்கு வருது….யேய் சொல்லேன்?” மாமா மாமியை பார்த்தார்.

“அது வந்துடா மகேந்திரா….நீ ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாணம் பண்ணிக்க போற… அங்க தாலி கட்டி முடிந்ததும், இல்லை மால மாத்திக்கினதப்புறம்… கோயிலுக்குப் போய்ட்டு…. வேண்டிக்கிட்டு…. சிம்பிளா கல்யாணம் பண்ணப்புறம்…. எங்க வீட்டுக்கு வந்து விடணும்…. உனக்குத்தான் தெரியுமே உன் காவிரி வீட்ல…. குடும்ப நிலவரம், வீட்டு வசதியெல்லாம் எப்படி இருக்கும்னு… அங்கே உடனே போக முடியாது… உங்களோட சாந்தி முகூர்த்தம் எங்க வீட்ல தான் செய்யணும்னு நாங்க நினைக்கிறோம்… சரிதானே?… நீயும் காவிரியும் எங்க வீட்லதான் ஒரு வாரம் பத்து நாள் இருக்கணும்….உன்னை வளர்த்து ஆளாக்கிய எங்களுக்கு எங்க வீடு தான் உனக்கு பொறந்த வீடா நினைச்சு இதை ஒப்புக்கணும் புரிஞ்சதா?” மாமி அன்பான அதட்டலுடன் விவரத்தை கூறினார்.

“நீங்க எல்லாம் சொன்னால் சரிதான் மாமி… நான் ஏன் மறுக்கப் போகிறேன்?” மகேந்திரன் கிண்டலாக தலைகுனிந்து “அடியேன்… அடி பணிவேன்” என்றான்.

“அப்புறம் கல்யாணத்தன்னைக்கு சாயங்காலம் உட்லண்ட்ஸ்ல ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணி இருக்கிறோம்” மாமா சொன்னார்

மேற்கொண்டு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி சொல்லிவிட்டு காபியை குடித்துவிட்டு கிளம்பினார்கள் மாமாவும் மாமியும். மகேந்திரன் கேட்டுக்கொண்டபடி தன் மகனை அனுப்பி வைப்பதாகக் கூறினார் மாமா.

அவர்கள் சென்றபின் மகேந்திரன் வெள்ளைத் தாளை எடுத்துக் கொண்டு படம் வரையலானான்… சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்…. அந்த தாடியை அப்படியே படம் பிடித்தது போல் வரைந்து முடித்திருந்தான். அதை டைரியில் மூடி வைத்து இன்னொரு தாளை எடுத்துக் கொண்டு மறுபடியும் அந்த தாடியை கற்பனையில் நிறுத்தி வரைந்தான்…. வரைந்து முடித்ததும் டைரியில் மூடிவைத்த படத்தையும் எடுத்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தான்… எங்கும் எதிலும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்… இரண்டையும் டைரியில் வைத்து மூடினான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

1 thought on “யாரைத் தான் நம்புவதோ?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *