பிறழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 14,035 
 
 

அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.

அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?

அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?

அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.

சில நாட்களாக அவனுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இன்னும் அவனுக்குப் புதிய இடம் பிடிபடாமலிருந்தது. சாப்பாடு கிடைக்கக்கூடிய ஓரிடம் தேடி அவன் சில வேளைகளில் அலைந்து திரிந்தான். அது அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் ஒருவனால் பட்டினி கிடக்கமுடியும்.. அவன் சோர்ந்துபோனான். அது தெரியவந்ததும் சிலர் துடித்துப்போனார்கள். அவனை அழைத்துச்சென்று அவளை அறிமுகம் செய்துவைத்தார்கள். பெண்களென்றால் ஏற்கனவே அவன் கூச்ச சுபாவம் உள்ளவன். அதனால் வற்புறுத்தலாகத்தான் அவனைக் கொண்டுவரமுடிந்தது.

கூச்சத்தைப் பார்த்து சாப்பாட்டை விடமுடியுமா? பழகப் பழகக் கூச்சம் விடுபட்டுப்போனது. அவனுக்கு அவளுடன் இன்னுமின்னும் நெருக்கம் ஏற்பட்டது. அக்கா அக்கா.. என மிக அன்னியோன்யமாக உறவு கொண்டாடினான். சாப்பாட்டுநேரம் மட்டுமின்றி வேறு வேளைகளிலும் அங்கு வந்துபோகத் தொடங்கினான்.

அந்தச் சின்ன வீடு அவளுக்கு வசதியற்றதாயிருப்பதான மனக்குறை அவனுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது அவளுக்குச் சொந்தமான வீடா அல்லது வாடகைக்குக் குடியிருக்கிறாளா எனவும் தெரியாமலிருந்தது. சாப்பிட வருகின்ற சிலர் கடன் சொல்லிப் போவதையும் கவனித்திருக்கிறான். அப்படிக் கடன் கொடுத்துக்கொண்டே சீவிப்பவளுக்கு எப்படி ஒரு வீட்டுக்குச் சொந்தமாவது சாத்தியமாகும்?

அந்தக் குறுகிய இடத்திலிருந்துகொண்டு எப்படி அவ்வளவு பேருக்கும் சமைத்துப்போடும் வல்லமையைக் கொண்டிருக்கிறாள் எனத் தன் மனதுக்குள்ளேயே வியந்தான். சமையலுக்கான பாத்திர பண்டங்களையோ தட்டுமுட்டுச் சாமான்களையோ எங்கும் காணக்கிடைக்கவில்லை. சமையல் தயாராகும்போது பாத்திரபண்டங்கள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. அவை பிறகு எங்கே சென்று மறைகின்றன? உள்ளே களஞ்சிய அறைபோல ஏதோ ஒன்று இருக்கக்கூடுமோ? உள்ளே போகமுடியுமானாற் கண்டுகொள்ளலாம். சமையல் சாப்பாட்டை எந்த அடுப்பிலிட்டுக் கொதிக்கவைக்கிறாள் என்பதும் புதிராயிருந்தது.

அவள் தனி ஆளா அல்லது கூட யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் அவனுக்குள் தோன்றின. அவளது புருஷன் எங்கே இருப்பான்..? இதையெல்லாம் அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு இல்லை. அது அவளுக்குக் கோபமூட்டும் கேள்வியாயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டு அவளது உறவைக் கெடுத்துக்கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. எனினும் அவள் யார்.. அவளைச் சேர்ந்தவர்கள் யார் என்றெல்லாம் மனது கிளர்ந்தவண்ணமே இருந்தது.

‘உனக்கு யாரும் உறவுக்காரர்கள் இல்லையா.. தனியாகவா இங்கே இருக்கிறாய்..?’
அந்தக் கேள்வி இயல்பாகவே ஓர் உந்துதலில் வெளிப்பட்டுவிட்டது. கேட்டபிறகுதான் உறைத்தது.. தனது தனிப்பட்ட விடயங்களில் தலையிடுகிறானென அவள் கோபமடையக்கூடும்.

‘இருந்தார்கள்.. செத்துப்போய்விட்டார்கள்.. நான் தனியாகத்தான் இருக்கிறேன்..’

‘செத்துப்போய்விட்டார்களா..?’

‘யுத்தத்தில் மக்கள் கொல்லப்படுவது சாதாரண விஷயம்தானே..!’

அதை அவள் மிகச் சாதாரணமாகக் கூறினாள். அவள்மீது அவனுக்கு இரக்கம் சுரந்தது. தனது சொந்த பந்தங்களை இழந்துதான்; அவள் யுத்தப்பிரதேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாள். அவளது புருஷனும் அங்கே இறந்திருக்கக்கூடும். தனிமைப்பட்டுப்போயிருக்கும் அவளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துகொடுப்பதுதான் நியாயம். முதல் அலுவலாக வசதிகள் குறைந்த அவளது சிறிய குடிமனையை செப்பனிட்டுக் கொடுக்கலாம்.

‘உள்ளே வீட்டைப் பார்க்கலாமா..?’

‘பாரேன்..!’ கதவைத் திறந்து விட்டாள்.

ஒரு சிறிய அறை.. அது அவளது படுக்கையறை. ஒரே ஒரு சிறிய கட்டில். ஒரே ஒருத்திக்கு ஒரே ஒரு கட்டில் மட்டுமே உள்ளதில் ஏதும் புதுமை இல்லைத்தான். ஆனால் அது இவ்வளவு சிறிதாயிருக்கவேண்டுமா? அவளது உடலளவுகளை மனக்கண்ணிற் கொண்டுவந்து கட்டிலின் அளவுடன் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒத்துவரவில்லை. கால்களைக் குறண்டிக்கொண்டு படுப்பாளோ?

கட்டிலை வடிவமைத்தவர்கள் மிகத் திட்டமிட்டுத்தான் அந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தப் படுக்கையை வேறு யாரும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதில் அக்கறையாயிருந்திருக்கிறார்கள்!

அல்லது அவளாகவே அப்படியொரு கட்டிலைத் தேடி வாங்கியிருக்கக்கூடுமோ? மனிதர்களிடம் அவதானமாயிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வு, பெண் என்ற ரீதியில் இயல்பாகவே அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒருத்தி படுப்பதற்கு எதற்காக டபிள் பெட் என, அவளது நடத்தை பற்றிய வீண் கதைகளையெல்லாம் சோடிப்பவர்களிடமிருந்து தப்பிக்கவேண்டுமே!

‘இந்தக் கட்டில் உனக்குப் போதுமா.. எப்படி இதிலே படுத்துக்கொள்கிறாய்..?’

‘படு.. படு.. படுத்துப்பார்..!’

அவள் சிறுபிள்ளையைப்போல கைகளைத் தட்டியவாறு துள்ளல் போட்டாள். அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரலைப்போல இல்லாமல் குயிலின் கூவலைப்போலிருந்தது.

கட்டிலில் நல்ல பஞ்சணை இல்லை. அழுக்கூறிய தலையணையொன்று கிடந்தது.
அவன் அந்தப் படுக்கையில் மெல்லச் சாய்ந்தான்.

தலையணையின் அழுக்கு நாற்றமடிக்குமோ எனும் மனச்சுளிப்புடன்தான் படுத்தான். ஆனால் ஒருவித நறுமணம் நாசியிற் பரவியது. அந்த வாசைன எங்கிருந்து வருகிறது என அவனுக்கு வியப்பாயிருந்தது. பெண்களின் கூந்தலுக்கு ஏதோ நறுமணம் உள்ளது என்று கூறுகிறார்களே, அது இதுதானோ?

படுக்கைக்கு நேரெதிரே சுவரில் ஒரு செங்கல் அளவில் துளையொன்று தென்பட்டது. வீட்டைக் கட்டும்போது உயரக் கூரைவேலைகள் செய்வதற்காக குறுக்குச் சிலாகை போடுவதற்கு விலக்கப்பட்ட கல்லாக இருக்கலாம். பின்னர் அதை நிரவாமலே விட்டுவிட்டார்கள். அது சரியில்லாத வேலையென்றே அவனுக்குப் பட்டது. உள்ளே நோட்டமிடும் உள்நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது!

‘சுவரிலே ஓட்டையொன்று உள்ளதே.. யாராவது உள்ளே பார்க்க வாய்ப்பாயிருக்குமே..?’

‘அதற்காகத்தான்.. அப்படிக் கண்காணிப்பதற்காகத்தான்.. அந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள்..’

‘கண்காணிப்பதற்கா.. எதற்கு..?’

‘யுத்தப்பிரதேசத்திலிருந்து வந்தவள்மீது அவர்களுக்குச் சந்தேகம் விட்டுப்போகுமா..?’

அப்போது சொல்லிவைத்ததுபோல அவன் கட்டிலிற் படுத்திருப்தை அந்தத் துளையினூடு ஒரு கண் பார்த்தது.

‘ஐயையோ அவர்கள் பார்க்கிறார்கள்..’ என அவன் சத்தமிட்டான்.

அவர்கள் தன்னைப்பற்றி வேவு பார்த்து தகவல்களைச் சேகரிக்கும்; சங்கதி அவனுக்கு ஏற்கனவே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இப்போது அது இன்னும் ஊர்ஜிதமாகியது.

எழவிடாத சுகானுபவத்தைத் தந்துகொண்டிருந்த படுக்கை ஒரு துர்நிலைமையை ஏற்படுத்திவிட்டதே என்ற கலக்கத்துடன் எழுந்தான். அப்போதுதான் திறந்துகொண்ட ஜன்னற் கதவுபோல மறுபக்கச் சுவரில் ஒரு வெளி தென்பட்டது. அது கதவில்லாத ஜன்னல்போலவும் அல்லது இன்னும் ஜன்னல் பொருத்தப்படாத சுவர்போலவுமிருந்தது.

‘இது உனக்குப் பயமாக இல்லையா..?’

‘என்ன பயம்?’

‘யாராவது உள்ளே வரக்கூடுமே..’

‘யார் வருவாங்க..? வரட்டுமே பார்க்கலாம்..!’

அவளது பேச்சு அவனுக்கு ஆச்சரியமூட்டுவதாயிருந்தது. இவ்வாறானதொரு பாதுகாப்பற்ற இடத்தில் தனிமையாக இருக்கும் தைரியம் தனக்கென்றால் வரவே வராது என நினைத்தான். மவளே.. உனக்கு அவ்வளவு துணிச்சலா?

அவளைப் பயமுறுத்திப் பார்க்கவேண்டும்போல அவனுக்கு வேடிக்கையுணர்வு தோன்றியது..

‘தனிமையாக இருக்கும் பெண்ணைத் தேடி இரவில் பேய் பிசாசுகள் வரக்கூடுமே?’

‘நானே ஒரு பிசாசுதானே..!’

‘பிசாசா..?’ சட்டென அவன் உடல் புல்லரித்து சிறு நடுக்கத்துக்குள்ளானான். கலைந்த கூந்தலுடனான அவளது வசீகரிக்கும் கோலம் கண்களைக் கூசியது.

பிசாசுகள் இவ்வளவு அழகாயிருக்குமா..?

பொதுவாக மோகினிப்பிசாசுகள் அழகாயிருக்கும் என்ற அபிப்பிராயம் அவனுக்கும் உண்டு. இது ஒரு மோகினிப்பிசாசாக இருக்குமோ?

பிசாசுகளை அஃகிர்திணையிலா உயர்திணையிலா விழிப்பது என்றும் தெரியவில்லை. தவறுதலாக ஏதாவது பேசி, அது வேறு வில்லங்கத்தில் கொண்டுபோய் விடப்போகிறது.

‘அக்கா நீங்கள் விளையாட்டுக்குத்தானே அப்பிடிச் சொன்னீங்கள்..? பேய் அது இது என்று சொல்லி சும்மா என்னைப் பயமுறுத்தத்தானே பார்க்கிறீங்கள்..?’

‘ஏன் தம்பி.. அது உண்மையாயிருக்கக்கூடாதா..? யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் வேறு போக்கிடம் ஏது..?’

இது நல்லதுக்கல்ல, இந்த இடத்தை விட்டு நழுவிவிடுவதுதான் உத்தமம் என்று அவனுக்குத் தோன்றியது.

பிறகு, சாப்பாட்டுக்குக்கூட அந்தப் பக்கம் வருவதை அவன் தவிர்த்துக்கொண்டான். அதற்கு வேறு காரணமும் இருந்தது.. தொடர்ந்து வேவு பார்க்கும் அவர்கள் தன்னை ஏதாவது பொறிக்குள் விழுத்திவிட முனைகிறார்களோ என்பது பற்றிய பயம். அல்லது அப்படியொரு பயத்தை உண்டாக்கிக் குழப்ப அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு நடக்கும் தில்லுமுல்லுகளையம் ஊழல்களையும் அவன் கண்டுகொள்ளக்கூடாதாம். அதுபற்றி வெளியே பேசக்கூடாதாம். அந்தப் பயம் இருக்கணும்!

அப்படிக் கண்களை மூடிக்கொண்டு வாழ்வது அவனுக்குச் சாத்தியப்படாமற்தான் இருந்தது. அநியாயங்களைக் கண்டுகொள்ளாது தானுண்டு தன் பாடுண்டு என்று எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகிறவர்களைப்போல, இனித் தானும் இருக்கவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டான். போதும்.. ஆளை விடுங்கடா சாமி!

ஆனால் அவள் அவனை விடவில்லை. அவனைத் தேடித் தேடி வரத்தொடங்கினாள். மாலை நேரங்களில் சந்தித்துக் கொள்வது வழக்கமாகியது. அவர்களிடம் அவன் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென அவள் அறிவுறுத்தவும் செய்தாள்.

அவனும் தனது உயிர் பற்றிய அவதானத்துடன்தான் நாட்களைக் கடந்துகொண்டிருந்தான். எனினும் ஒருநாள் மேற்தட்டில் வேலையாக நின்றபோது அந்த சம்பவம் நடந்தது.. தெரியாத ஒருவன் அப்போது ஏணியொன்றைக் கொண்டுவந்து சுவரில் சாத்தி வைத்துவிட்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நோட்டம் பார்த்தான். இவனுக்கு இங்கே என்ன வேலை என எண்ணிக்கொண்டிருக்கையில், ஏணியில் ஏறி மேலே வந்தான். தனது காலைப் பிடித்து இழுத்துவிடத்தான் வருகிறானோ என உள்ளுணர்வு தட்டியது. தப்பிக்க வழியில்லாத அரும்பொட்டான இடம் அது. ஏறுபவன் கிட்டத்தட்ட மேற்தட்டை எட்டும் தறுவாயில் ஏணி சமநிலை இழந்து சரிவது தெரிந்தது. விழுந்து தொலையப்போகிறானே என அவன் சட்டெனப் பாய்ந்து ஏணியைப் பிடித்துக்கொள்ள முற்பட்டான். ஆனால் பிடிபடமுதலே ஏணி தடாலென தரையில் விழுந்தது. ஏறி வந்தவன் முகம் குப்புறச் சப்பளிந்துபோய்க் கிடந்தான்.

அவசரத்துக்கு இறங்கமுடியாத இடத்தில் நின்ற அவன் பதகளித்துப்போனான். இறங்கி ஓடிப்போக நேரம் பிடித்தது. விழுந்து கிடந்தவனைப் புரட்டிப் பார்த்தால்.. மூக்கும் முகமும் உடைந்து இரத்தம் பெருகியது. கடுமையான கொங்கிரீட் தரையில் அந்தமாதிரி விழுந்தவன் செத்துத்தான்போயிருப்பான் என்று நினைத்தால், மீள உயிர் பெற்றவன்போலப் பேசத் தொடங்கினான்.

‘என்ன.. என்னைத் தள்ளிவிட்டுக் கொல்லப் பார்க்கிறாயா..?’

என்னடா இது, உதவி செய்யப்போனாலும் வீண்பழி.. ஒதுங்கிப் போனாலும் விடறாங்க இல்லியே என ஒருவித அச்சம் அவனைக் கலக்கியது. அவள் வந்து அவனுக்கு ஆறுதல் கூறினாள். ஏற்கனவே அவளை அந்தச் செய்தி எட்டியிருந்தது.. ‘உன்ன முடிக்கிறதுக்குத்தான் பார்க்கிறாங்க கவனமாயிரு..!’

சுகமான தூக்கத்துக்குரிய இரவுகள் அவனிடமிருந்து பறிபோயின. ஒவ்வொரு இரவுகளும் பயமுறுத்தும் சமிக்ஞைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. தூக்கம் ஆழ்த்தும் வேளைகளில் கதவைத் தட்டும் சத்தம் உறக்கத்தைக் கெடுக்கிறது. எழுந்து கதவைத் திறந்தால் துவக்குடன் நிற்பார்களோ என்ற பயம். தொலைபேசி ஓயாது ஒலித்து அழைக்கிறது. திடுதிப்பென எழுந்து கையிலெடுத்தால் ஓய்ந்துபோகிறது. யாரோ வெளியே குரல் கொடுத்து அழைக்கவும் செய்கிறார்கள். அது அவளது குரலல்லவா? தூரத்தில் ஒலிக்கும் குயிலின் கூவல்! தனக்கு ஆபத்து நேரப்போகும் தருணங்களில் பாதுகாப்பதற்காக அவள் வந்துவிடுகிறாளோ?

கனவும் விழிப்பும் கனவுமாகக் கலையும் இரவுகள்.. வேலை செய்யுமிடம் நாளுக்குநாள் வேறுவேறு தோற்றங்களைக் கொள்கிறது. மாடித் தட்டுக்களில் ஏறும்போது தடுக்கிவிடுவதுபோல தடுமாற்றம் ஏற்படுகிறது. நடக்கமுடியாது விழுத்தும் பொறிகளைக் கொண்டிருக்கும் படிகள். கால்களை எங்கே எப்படிப் பதிப்பது என்றும் குழப்பமாயிருக்கிறது. ஓவ்வொரு தட்டுகளாக ஏறிஏறி மேலே போனான். அது எத்தனையாவது மாடி என்றும் நினைவில்லை.. ஒருவனைக் கட்டிப்போட்டுக் கதறக் கதற சவுக்கினால் விளாசிக்கொண்டிருந்தார்கள். ‘என்ன இது’ என்று கேட்டால், ‘தண்டனை’ என்றார்கள். யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்தக் கதிதானாம்! அல்லது இந்த உயரத்திலிருந்தே போட்டுத் தள்ளியும் விடுவார்களாம்!

திறந்துகொண்ட ஜன்னற் கதவுபோல சுவரில் ஒரு வெளி இங்கேயும் தென்பட்டது! அது கதவில்லாத ஜன்னல்போலவும் அல்லது இன்னும் ஜன்னல் பொருத்தப்படாத சுவர்போலவுமிருந்தது. அதனூடு அவன் வெளியே எட்டிப் பார்த்தான்.. எவ்வளவு உயரத்திலிருந்து விழுவேண்டி வரும்?

அந்தப் பக்கம் பலநூறாண்டுகள் முற்பட்ட காலத்துக் கோட்டையொன்று எரிந்துகொண்டிருந்தது. சாம்பல் நிறத்திலான குதிரைகள் அந்த நெருப்பில் கால்களை உதறியபடி உயிர் விட்டுக்கொண்டிருந்தன. முடிகளும் கேடயங்களும் கொண்ட மனிதர்களும் தீயில் வெந்து மடிந்துகொண்டிருந்தார்கள். அவனுக்கு எல்லாம் பட்டெனத் தெளிவானது. இதே இடம்தான்! தண்டனை கொடுத்த மன்னவர்களும் இப்போது இல்லை! தண்டனை பெற்ற அப்பாவிகளும் இப்போது இல்லை. அந்தக் கோட்டை இருந்த தடயமே இப்போது இல்லை. இப்போது அதே இடத்தில் இந்தக் கட்டடம் எழுந்துகொண்டிருக்கிறது. இன்னொரு காலத்தில் இதன் தடயங்களும் அற்றுப்போகலாம்.

..சவுக்கடிபடுபவனின் உயிரடங்கும் அவலக்குரல் அந்த விடியப்புற நேரத்திலும் கேட்டுக்கொண்டிருந்தது. இனிமேலும் தாமதிக்காது இங்கிருந்து நீங்கிவிட நினைத்தான்.

காலகாலமாகப் பெய்த மழையில் புதைகுழிகளை மூடிய மண்திட்டிகள் கரைந்துபோயிருந்தன. நடக்கும்போது மனித எலும்புகளும் மண்டையோட்டுத் துண்டுகளும் கால்களில் இடறின. எதிர்ப்பட்டவர்கள் அறிமுகமற்றவர்களாயிருந்தார்கள். ஊரே மாறிப்போயிருந்தது. ஆனால் அவனது வீடு மட்டும் மாறாமலிருந்தது! எப்போதோ இறந்துபோன அம்மா அங்கே நின்றிருந்தாள். அப்போதுதான் பதுங்கு குழியிலிருந்து வெளியேறி வந்தவள்போல புழுதி படிந்த கோலத்துடன் நின்றாள். அவன் தன் சிறு பராயத்தவனாக மாறிப்போயிருந்தான்.

அவன் ஓடி விளையாடிய அந்த இடமும் மரம் செடிகளும் குதூகலமூட்டின. யுத்தமும் குண்டுகளும் அந்த இடத்தை ஏதும் துவம்சம் செய்யாத அதிசயம் நிகழ்ந்திருந்தது. மாரி மழையில் வீட்டுக் கிணறு நிறைந்துபோயிருந்தது. கடலொன்று அங்கு வந்து நிரம்பியதுபோல கிணற்றுநீர் நீல நிறம் கொண்டிருந்தது. அவனுக்கு கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்கவேண்டும்போலிருந்தது. அதற்குத் துலாவும் கயிறும் தேவைப்படாது. தண்ணீர் முட்டிய கிணற்றில், நின்ற நிலையில் ஒரு வாளியால் அள்ளிக் குளிக்கலாம்.. அது ஒரு விளையாட்டு.

‘கவனம் அப்பு..!’ என அம்மாவின் குரல் கேட்டது. அம்மா எப்போதும் அப்படித்தான். கண்ணுக்குக் கண்ணாகத்தான் அவனைக் காத்து வளர்த்தாள்.

‘அம்மா.. நானும் இறந்துவிட்டேனா..?’ அந்தக் கேள்வியை அவன் அம்மாவிடம் கேட்டானா அல்லது அப்படிக் கேட்க நினைத்தானா என்றும் தெரியவில்லை.

அதற்கு அம்மாவிடமிருந்து பதிலுமில்லை.

நாளாக ஆக, அவன் காணாமல் போய்விட்டான் என்ற கதை பரவத்தொடங்கியிருந்தது.

– எதுவரை இணைய இதழில் வெளியானது மார்ச் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *