வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை.
பார்க்க மோட்டாவாக இருந்தாலும், முதலாளி பொன்னுரங்கத்திற்குத்தான் எத்தனை குழந்தை மனசு! வீட்டிலும் அவனுக்கு அதிக வேலை இல்லை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும், முதலாளி காரில் போறதும் தான் வேலை.
மனைவி செவந்தி இறந்தபிறகு வேலய்யனுக்கு உலகமே இருண்டுபோனது. மனம் தளர்ந்து போனதில் ரிக்ஷா மிதிக்க முடியாமல், உடலும் தளர்ந்து போனது. ஒரு மாதம் வரை பைத்தியம் பிடித்த மாதிரிக் கிடந்தான்.
சரியாகச் சாப்பிடுவதில்லை, துhங்குவதில்லை. ரிக்ஷா ஓட்டவும் போவதில்லை. எதற்குப் போக வேண்டும்? யாருக்காகச் சம்பாதிக்க வேண்டும்? ரிக்ஷா ஓட்டும் நண்பர்கள் பலர் அவனை ஒருவாறாகத் தேற்றினர். கடைசியாகப் பக்கத்து ஊர் ஜமீன் பொன்னுரங்கத்திடம் வேலை கேட்டு வந்தான் வேண்டா வெறுப்பாக!
வேலைக்கு வந்து ஒரு மாதம் ஆயிற்று. முதலாளியுடைய நல்ல குணங்கள் அவனுக்குப் பிடித்துப் போயிற்று அவரும் அவனை அன்போடு நடத்தினார்.
“வேலய்யா” முதலாளி கூப்பிட்டதும் அவன் கற்பனை கலைந்தான்.
“கார் ரெடியா இருக்கய்யா” பணிவோடு சொன்னான்.
“வேலய்யா! காட்டு பங்களாவுக்கு நீயும் என்னோடு இன்னைக்கு வாராய்! ஏறிக்க” பொன்னுரங்கம் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய வேலய்யன் அதிசயத்தோடு பின்புற சீட்டில் அடக்க ஒடுக்கமாக அமரக் கார் புறப்பட்டது.
எல்லா இடத்துக்கும் பொன்னுரங்கம் அவனை அழைத்துக் கொண்டு போனாலும் காட்டு பங்களாவுக்கு இதுவரை அவனை அழைத்துப் போனதில்லை. இதுதான் முதல் தடவை.
காருன்னா செவந்திக்கு எத்தனை ஆசை? ஆனால் இவன் சம்பாத்தியத்தில் அதெல்லாம் நிறைவேறுகிற விஷயமா? வாடகை கொடுத்துக் கூட அவளை கார்லே அழைச்சிட்டு போகமுடியாது. அவ போனபின்பு அவனுக்கு இப்பக் காரு சவாரி என்னதான் அவன்கிட்ட அவ பிரியமா இருந்தாலும் பாவி மக என்ன காரணம்னு சொல்லாமலேயே துhக்குமாட்டிக்கிட்டுச் செத்து போனாளே, அதைத்தான் அவனால் தாங்கிக்க முடியலே! பழைய நினைவில் உருகிப் போனவனுக்குக் கார், பங்களா வாசலில் நின்றது கூட நினைவில்லை.
“வேலய்யா, எந்த லோகத்திலே இருக்கிறே… இறங்கு!” பொன்னுரங்கம் அதட்டினார். வெட்கப்பட்டவனாக இறங்கினான்.
அந்த அழகான பங்களாவைப் பார்வையிட்டு மலைத்தவாறே முதலாளி பின் சென்றான் வேலய்யன்.
உள்ளே சென்று சோபாவில் அமர்ந்த பொன்னுரங்கம் வேலய்யனிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துக் குறிப்பிட்ட சாவியை அடையாளம் காட்டி ஒரு ரூமைத் திறந்து அதிலுள்ள சுவர்க்கடிகாரத்தைக் கழட்டிக் கொண்டு வருமாறு பணித்தார்.
உள்ளே சென்ற வேலய்யன் மலைத்துப் போனான். சுவரைச் சுற்றிலும் அவன் பார்வை ஓடியது. விழிகள் வியப்பால் விரிந்தன. சுவரெங்கும் மான் கொம்பு, சிறுத்தைத் தலை, காட்டு எருமைத்தலை, ஒரு மூலையில்…. அதென்ன? அவன் கண்கள் இமைக்க மறந்தன. வேகமாக அருகே சென்றான். பெண்ணின் நீளமான ஐடை ஒன்று மாட்டப் பெற்றிருந்தது. நல்லவர் என்று நினைத்தோமே! இந்த குணமும் உண்டா இவரிடம்!
காரணம் இல்லாமல் அவனுக்குச் செவந்தி ஞாபகம் வந்தது. அவள் ஜடையும் இத்தனை நீளமானதுதானே. அவள் நடந்து செல்லும்பொழுது அது அப்படியும் இப்படியும் அசையும்போது அவன் தன்னையே பறிகொடுத்து விடுவானே! அந்த நீளமான ஐடைக்காகத்தானே அவன் அவளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான். அருகே சென்று அந்த ஜடையைக் கையால் எடுத்துப்பார்த்தான்.
“என்னடாபண்றே. கடிகாரத்தை எடுக்க இத்தனை நாழியா?” பொன்னுரங்கத்தின் குரல் மிக அருகில் ஒலித்தது.
“இல்லே எசமான், இந்த அதிசயத்தையெல்லாம் பார்த்து ரசித்தேன்.”
“ஓ, அதுவா! அது ஒரு அழகான மானோட ஜடை!”
“மானுக்கு ஏதுங்க எசமான் ஜடை” கிண்டலாகக் கேட்டான் வேலய்யன்.
“பெண் மானுடா, ரொம்ப நாளாக் கண்ணி வைச்சேன். கடைசியிலே, என் வலையிலே மாட்டினது அவளோட ஜடை மட்டும்தான். அவ தப்பி ஓடிட்டாடா.”
“அவ யாருங்க எசமான், எந்த ஊரு?”
“பக்கத்திலேதாண்டா. கருவேலம்பட்டி கிராமம். மாரியம்மன் கோவிலுக்குக் கிழக்கால ஒரு கோடி வீடு இல்லே, அதுதான் அவ வீடு. குட்டி மாநிறம்தான்னாலும் முகவெட்டுடா. யாரோ ரிக்ஷாக்காரன் பெண் சாதியாம். ஆளை வைச்சு ஏமாத்திக் கொண்டாந்தேன். கடைசியிலே தப்பிச்சு ஓடினப்போ கையில் மாட்டுன ஐடையை கத்தரிச்சிட்டேண்டா. முடி ரொம்ப அழகா இல்லே?” குடி வெறியில் ரகசியம் அம்பலமானது.
வேலய்யனுக்கு ஞாபகம் வந்தது. செவந்தியின் பிணத்தை எரிக்கையில் அவளது ஜடை இல்லாமலிருந்தது.
“எசமான் அவளா! அந்த செவந்தியை எனக்கு நல்லாவே தெரியும்.”
“அப்ப, என்னை அவகிட்ட அழைச்சுட்டுப் போறியா? ஆசை மோதக் கெஞ்சினார் பொன்னுரங்கம்.
“இதோ, இப்பவே” என்று சொல்லியபடி அந்த ஐடையை எடுத்தான் வேலய்யன்.
“ஜடை எதுக்குடா வேலய்யா?”
“இது மூலமாதான் முதலாளி, அவகிட்ட போகனும்.”
கண்களில் சிவப்பேற வேலய்யன் அந்த ஐடையை பொன்னுரங்கத்தின் கழுத்தைச் சுற்றிப்போட்டு இறுக்கத் தொடங்கினான்.
– மின்மினி (06-06-1987)