சுயநலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 7,841 
 
 

புது டெல்லி ! இந்தியாவின் தூசிகளால் நிறைந்திருந்த நகரிலிருந்து ஃபரிதாபாத் போகும் பரபரப்பான சாலையில் லாஜ்பட், சரிதா நகர் தாண்டி பரப்பான இண்டஸ்ட்ரியல் ஏரியா. அந்த ஏரியாவை ஒட்டி பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் அது. ஏதோ சுல்தான் ஆண்ட காலத்தில் சிறிய நகரமாய் இருந்திருக்க வேண்டும். பிலாஜ்பூர். இப்பொழுது பிரமாண்டமாய். அதனால் அங்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும், உடையில் தாராளமாய் இருந்து கொண்டு அங்குள்ள “பிளாசாக்களையும்”, “மால்களையும்” நிரப்பிக்கொண்டிருந்தார்கள். போதாதற்கு எல்லா நட்சத்திர ஹோட்டல்களும் இவர்களை நம்பி “டிஸ்கோ” “பார்ட்டி” என்று இயங்கிக்கொண்டிருந்தன.

பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும், தனித்தனி கேபின்கள் அமைக்கப்பட்டிருந்த அந்த “இண்டர்னெட் சென்டரில்” இளம் பெண்களும், ஆண்களும் கணினிகளில் முன் உட்கார்ந்து கொண்டு.சிலது தனித்தனியாய், சிலது ஜோடிகளாய், இந்த உலகத்தில் அனைத்து வித நிகழ்ச்சிகளையும் (ஒரு சிலது ஒளி மறைவின்றி) பார்த்துக் கொண்டிருக்க…

பதினாறு பதினேழு வயது மதிக்கத்தகுந்த இளைஞன் ஒருவன் குறிப்பிட்ட ஒரு கணினியை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்பொழுதான் காலியாகியிருந்த அந்த இடத்தை இளைஞன் ஆக்ரமித்து உட்கார்ந்தான். அவனுக்கு பிடித்தமான ஒரு புரோக்ராமுக்குள் நுழைந்தான்.

அந்த ப்ரோகிராமுக்கு முன் திரையில் தோன்றிய ஒரு குழந்தை படம்  “என்னை கொஞ்சம் பாரேன்” என்ற வாக்கியத்தை சொல்லி கண் சிமிட்டிக்கொண்டிருந்தது. ஆர்வமுடம் அந்த படத்தை “கிளிக்கினான்”

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்ட்த்தில் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து இந்த மத்திய காவல்துறை பணிக்கு சென்று இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறப்போகும் எனக்கு இந்த மாதிரி “பார்ட்டிகளில்” கலந்து கொள்வது என்பது வேப்பங்காயாய் கசக்கிறது. காரணம் அங்கு தரப்படும் உணவு வகைகளும், இன்னமும் அவர்களின் தாராள போக்கும் கூச்சத்தையே கொடுக்கின்றன. இப்பொழுது கூட இந்த “பார்ட்டிக்கு” வந்திருக்க மாட்டேன். என் நண்பன் மல்கோத்ரா இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெறப்போகிறான். அவன் அளிக்கும் விருந்து இது. கூடிய சீக்கிரம் லாஜ்பட்டிலோ, சரிதா நகரிலோ, இல்லது இந்த நகரிலோ “பிளாட்” பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினான்.

அவனுக்கு என்ன குறை ஒரு பெண்ணை இராணுவ மேஜர் ஒருவருக்கு மணம் முடித்து கொடுத்து விட்டான். பையனும் ஆர்மியில் அதிகாரியாய் ஹைதராபாத் பக்கம் இருக்கிறான். அவனுக்கும் திருமணம் ஆகி விட்டது.

வழக்கம்போல மல்கோத்ராவுடன் கை குலுக்கிவிட்டு அப்படியே ஒரு எலுமிச்சை ரசத்தை சப்ளையரிடம் கொண்டு வரச்சொல்லிவிட்டு ஒரு டேபிளை பிடித்து மூலையில் உட்கார்ந்து கொண்டேன். சம்சாரத்தை கூட்டி வரவில்லையா? மல்கோத்ராவின் கேள்விக்கு இந்த ஊரில் பழகுவதில் அவள் “என்னை விட மோசம்”, புரிந்து கொண்ட மல்கோத்ரா “அரே மதராசி” என்று தோளை தட்டி சிரித்து உள்ளே அனுப்பினான்.

என் அருகில் ஒரு இளைஞன் அமைதியாய் வந்து உட்கார நான் அதிசயமாய் பார்த்தேன். இந்த வயதில் எப்படி அமைதியாய்? ஆண் பெண் பேதமின்றி அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இத்தகைய சொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல்?

மெல்ல ஹிந்தியில் உன் பெயர் என்ன? கேட்டேன். அவன் “தீமந்தரா” நைஸ் உன் பெற்றோர். அவன் எங்கோ கை காட்டினான். அங்கு ஆண்களும் பெண்களும் ஆடிக்கொண்டும்,ஒரு சிலர் மாறி மாறி உளறிக்கொண்டும், அல்லது இதுதான் சாக்கு என்று ஒருவர் மேல் ஒரு விழுந்து கொண்டுமிருந்தார்கள்.

எனக்கு மிக வருத்தமாக இருந்தது. இந்த மாதிரி மனித நாகரிகத்தை கூறு போட்டு விற்கும் இடங்களுக்கெல்லாம் வாரிசுகளை கூட்டி வந்து இம்சை படுத்தும் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும். மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும், அப்படி தண்டனை கொடுப்பதாய் இருந்தால் தொன்ணூறு சதவிகித பெற்றோர்களுக்கு தரவேண்டியிருக்கும். மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். என் கண்களுக்கு அந்த ஜோடிகளின் கூட்டத்தில் அவன் பெற்றோர்களை அடையாளம் காண முடியவில்லை. கண்களை மூடி உட்கார்ந்து கொண்டேன்.. அவன் அங்கிருந்து மெல்ல நகர்ந்து செல்வதை உணர முடிந்தது.

திடீரென ஒரு இரைச்சல் யாரோ தொம் என்று விழுவது கேட்டது. சட்டென கண் விழித்தவன் அந்த கூட்ட்த்தை பார்க்க அங்கு ஒரே அலறலாய் இருந்தது. பரபரப்புடன் என்னை நோக்கி வந்த மல்கோத்ரா என்னை எழுப்பி போய் பார் என்றான்.

சோம்பலாய் இருந்தாலும் அதிகாரியின் கட்டளை காரணமாய் (நண்பனும் கூட) சட்டென அந்த இடத்தருகே ஓடினேன். கீழே இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்தார். போலீஸ் அறிவு விழித்துக்கொள்ள அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை பர பரவென செய்தேன்.உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் தோளை உரசி சென்றிருக்கிறது குண்டு. அந்த பயத்திலேயே மயக்கமாயிருக்க வேண்டும். சுற்றிலும் வேடிக்கை பார்த்து நின்ற அந்த கூட்டத்தை பார்த்தேன். யார்? இந்த வேலைஅயை செய்தது. இந்த கூட்டத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு அருகில் எப்படி குறி தவறி சுட முடியும்.

ஒன்று வேண்டுமென்றே குறி தவறி சுட்டிருக்க வேண்டும்,

இரண்டு சுடுவதில் அவ்வளவு தேச்சி பெறாதவனாய் இருக்க வேண்டும்.

இப்பொழுது இவர்கள் அனைவரையும் சோதனை செய்வது வந்திருப்பவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கும். அதற்குள் வந்து விட்ட அந்த நகரத்து போலீஸ் அதிகாரியை கண்ணை காட்டி வர சொல்லி எல்லோரையும் அனுப்பி வையுங்கள், ஆனால் சோதனை என்று தெரியாமல் சோதனை செய்யுங்கள். வித்தியாசமாய் தென்படுபவர்களை ஓரங்கட்டி வையுங்கள்.

டாக்டர், டாக்டர், பத்து நிமிடத்தில் எங்கிருந்தோ டாக்டர் வர அவரை அவசரமாய் எடுத்து விரைந்தனர். அதற்கு பின் பார்ட்டி களை கட்டவில்லை.

மறு நாள் மல்கோத்ரா என்னை அழைத்தான். நேற்று என்ன நடந்தது? அதும் என் பார்ட்டியிலேயே இப்படி நடந்திருக்கிரது.

என்னிடம் கேட்டால்? இப்படி நான் கேட்க கூடாது. அவன் அதிகாரி அங்கு நண்பனுக்கு இடமில்லை. உத்தியோக நிமித்தமாய் அவனை பார்த்தேன்.

போய் ஆசுபத்திரியில் அவனை பார் உத்தரவிட்டான்.

இந்த ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தவுடன் கும்மென்ற ஒரு மணம் ஆஸ்பத்திரிக்கே இல்லாதது. அதை விட இதை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு கட்டியிருந்ததால் அதன் பண செழுமை நன்றாக தெரிந்தது. ரிசபஷனிஸ்டிடம் கேட்க போனவன், அங்கிருந்த போலீசை கண்டவுடன் அவன் சல்யூட்டை அலட்சியம் செய்து நேத்து அடிபட்ட ஆள் எந்த ரூம்? ஹிந்தியில் கேட்டேன். ரூம் நெம்பர் 425 போர்த் ப்ளோர் சார் மீண்டும் அவன் சல்யூட்டை கண்டு கொள்ளாமல் லிப்டை நோக்கி விரைந்தேன்.      

அறையில் ஏராளமான உடம்போடு அவன் மனைவியாக இருக்க வேண்டும் உட்கார்ந்திருந்தாள். என் போலீஸ் உடையை கண்டதும் க்யா பாத் கை என்று இந்தியில் கண்னை கசக்க எனக்குள் ஒரு எரிச்சல் சவ்வூடு பரவலாய், ஆம் கணவனை கண்டபடி மேய விட்டு விடுங்கள். அவன் இந்த மாதிரி எங்காவது அடி வாங்கியபின் எங்களை குறை சொல்லி பத்திரிக்கைக்கு தீனி போடுங்கள். நினைத்துக் கொண்டவன், ஒண்ணும் பயப்படாதீங்க கண்டு பிடிச்சுடலாம், சொல்லி விட்டு நான் அவர் கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்? அவள் எதுக்கு முறைக்க, உங்க கணவனை சுட்டவனை கண்டுபிடிக்க வேண்டாமா? அவளிடமே திருப்பி கேட்டேன். அவள் முணங்கிக்கொண்டெ அங்கிருந்து நகர்ந்தாள். சீக்கிரம் முடிங்க, என் “பேட்டி” எல்லாம் வர போறாங்க.

படுத்திருந்தவருக்கு வயது ஐம்பது மேலிருக்கும், தோள்பட்டையில் கட்டு போட்டு அதனை அசைக்காமல் ஒரு கயிற்றில் கட்டி போட்டிருந்தார்கள். ஆள் நல்ல சிவப்பாய் இருந்திருப்பான் போலிருக்கிறது. இப்பொழுது பயத்தில் இருந்தது முகத்தில் தெரிந்தது.

உங்க பேர்?

உங்களுக்கு யார் விரோதிகள்?

இது எப்படி நடந்தது?

எனக்கு எதுவும் தெரியாது, என் பேர் மதன்லால், நான் டெல்லியில்  டயர் கம்பெனி வச்சிருக்கேன்..விரோதிகள் ! அப்படி எதிரிங்க யாருமே இல்லை.

மல்கோத்ரா உங்களுக்கு என்ன ஆகணும்? அவர் மனைவி எங்க சொந்தமாகறாங்க. அவங்க எங்களை கூப்பிட்டதுனால? நான் அங்க போனேன்.

உங்க சம்சாரம் கூட வந்தாங்களா? இதற்கு ஒரு நிமிடம் தயங்கியவர், இல்லை..முனங்கினார். அப்ப யார் உங்க கூட இருந்தது.?

அந்த வலியிலும் நெளிந்தார். சார் ப்ளீஸ் இதை அப்படியே விட்டுடுங்க, அப்ப கூட யார் வந்ததுன்னு சொல்ல மாட்டீங்க.?

ப்ளீஸ்..மேற்கொண்டு வற்புறுத்து முன், திடீரென அந்த குண்டு மனைவியுடன் இன்னும் இரண்டு குண்டு பெண்கள் “அப்பா” என்று ஹிந்தியில் கத்திக்கொண்டு அவர் மீது சாய அந்த ஆள் இந்த வேதனைக்கே ஐயோ என்று கத்தினான். நர்ஸ் ஓடி வந்தாள்..

 அடுத்த நிகழ்ச்சிகளை கண் கொண்டு இரசிக்காமல், அலுவலகம் வந்தவன்  மல்கோத்ராவின் நடத்திய பார்ட்டியின் சி.சி.டி.வி. பதிவை கொண்டு வர சொல்லி போட்டு பார்த்தேன். முட்டாள் சுடப்பட்டவன் ஒரு பெண்ணுடன் உள்ளே நுழைவது தெரிந்தது. இவனுக்கு அந்த பெண்ணுக்கும் உருவத்தில் சம்பந்தமே இல்லாமல் அதன் தோளை அணைத்துக்கொண்டு இவன் உள்ளே நுழைந்தது  தெரிந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதும், அந்த பெண் இவன் கையில் ஒரு குவளையை நீட்டுவதும் தெரிந்தது.

அடுத்து அந்த கூட்டத்தினர் ஆடி பாடி செய்து கொண்டிருந்த வேலைகளை கண்கொண்டு இரசிக்க முடியவில்லை. சட்டென கூட்டத்துக்குள் நாய் முகமூடி போட்ட உருவம் நுழைவதும் கையை அந்த ஆளை நோக்கி நீட்டுவதும் தெரிந்தது. புகை அவன் கையிலிருந்து கிளம்புவதும், ஆடிக்கொண்டிருந்த ஆள் சரிவதும் தெரிந்தது.

நிறுத்த சொல்லி சைகை காட்டி மீண்டும் அதை ரீவைண்ட் செய்ய சொன்னேன். பல முறை அந்த உருவத்தை பார்த்தும் ஒன்றும் புரிபடவில்லை.. சுட்டவன் வயது குறைந்தவனாக இருக்கலாம். நில்..நில், சட்டென உறைத்தது, என்னை கவர் செய்த பகுதியை போட்டு காட்டு.

இப்பொழுது கேமரா நான் உள்ளே நுழைவதையும், எலுமிச்சை ரசம் வாங்கி ஒரு மூலையில் சென்று அமர்வதையும் காட்டியது, அப்பொழுது அந்த இளைஞன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தது தெரிந்தது. மை காட் ! அதே சட்டை, நாய் முகமூடி போட்டவன் இவனா?       

அதற்கு பிறகு எனக்கு வேலை சுலபமாக முடிந்தது. உள்ளூர் போலீஸ் துணை கொண்டு அந்த பையனை கஸ்டடியில் எடுத்தேன். மல்கோத்ரா இதை தனிப்பட்ட முறையில் விசாரிக்க சொன்னார். கேஸ் பைல் பண்ணாமல், அதனால் பையனை தனியாக ஒரு இடத்தில் சந்தித்தேன்

பையன் முகத்தில் களை இல்லை, கண்கள் சோர்வாக இருந்தன. அவனை என் எதிரில் உட்கார வைத்தேன்.

உன் பெயர்?    சதீஷ் வர்மா. அன்று என்னிடம் வேறு ஏதோ பெயர் சொன்னாயே?

அது வேண்டுமென்றே சொன்னது.

என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பி.எஸ்.சி பர்ஸ்ட் இயர்?

எந்த காலேஜ்?       

ப்யாரி ஆர்ட்ஸ் காலேஜ்.

குட்.. உனக்கும் மதன்லாலுக்கும் என்ன தொடர்பு?

பையன் முகம் மாறியது? ஐ.டோண்ட் லைக் திஸ் கொஸ்டியன்

ஓகே.. அவரை ஏன் கொல்ல நினைத்தாய்?

லுக்..நான் அவனை கொல்ல நினைக்கவில்லை, ஒரு பாடம் கற்பிக்க நினைத்தேன். இந்த சதீஷ் யாரென்று அவனுக்கு காண்பிக்க நினைத்தேன்.

அப்படி நீ பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அவனுக்கும் உனக்குன் என்ன உறவு?

மீண்டும் அவன் முகம் மாறியது, பல்லை இறுக்கிக்கொண்டு, அவன் என் அம்மாவை ஏமாற்றியவன்..கெட்ட வார்த்தை ஒன்றை உபயோகித்தான். சட்டென தன்னை உணர்ந்து ஐ.ஆம்..சாரி என்னால் அவனை நினைக்கும்பொழுது கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

புரிகிறது..  நீ எங்கு தங்கியிருக்கிறாய்? மார்க்கெட் அருகில், கதெல்ஜா தெரு..

உன் அம்மா? அவர்களும் என்னுடன்தான்.

எப்படி சமாளிக்கிறீர்கள்? ஐ மீன் உன் கல்லூரி செலவு, சாப்பாட்டு செலவு

என் அம்மா வேலைக்கு போய் கொண்டிருக்கிறாள்.

அந்த ஆள் உங்களுக்கு ஏதாவது உதவுகிறானா? வேண்டுமென்றே மரியாதையை குறைத்தேன். பையன் அப்பொழுதுதான் மசிவான்.

அவனா? வெறுப்புடன் சொன்னவன், இப்பொழுது மீண்டும் ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

சரி எப்படி அந்த பார்ட்டிக்குள் நுழைந்தாய்? யார் சொன்னது அந்த ஆள் அன்று வரப்போகிறான் என்று?

எனக்கு இந்த இண்டர்நெட் செண்டர் சென்று குறிப்பிட்ட சிஸ்ட்த்தில் உட்கார்ந்தால், ஒரு குழந்தை படம் வரும் அதில் என்னை கொஞ்சம் பாரேன்” என்று குறிப்பிட்ட பைலுக்குள் நுழைய சொன்னது.  தகவல் வரும், எப்படி உள்ளே வரவேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருந்தது.

சரி பார்ட்டியில் உன்னை யாரும் கேட்கவில்லையா? நீ யாரென்று?. இல்லை என்னை வரவேற்று உள்ளே அனுப்பினார்கள்.

அப்படியானல்…அவன் கொல்லப்படவேண்டுமென்று யாரோ விரும்புகிறார்கள் அப்படித்தானே?

அது எனக்கு தெரியாது. நீ உன் அப்பாவை சாரி அந்த ஆளை கொல்ல விரும்புகிறாய் என்று யாருக்கு தெரியும்?

அவனின் அலுவலகத்துக்கே தெரியும்.ஏன் இந்த ஊருக்கே தெரியும். உனக்கு போன் செய்து விவரம் சொன்னது?

தெரியாது ஒரு பெண் குரல், முடிந்தால் அங்கு அந்த ஆள் இருப்பான், அவனை சுட்டு விடு என்று சொன்னது.

உனக்கு சுட தெரியுமா? நான் என்.சி.சி யில் இருந்தவன், அது மட்டுமல்ல துப்பாக்கியை கையாள பழகியவன்.

நீ துப்பாக்கியை கையாள தெரிந்தவன் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது. சரி துப்பாக்கி, எப்படி கிடைத்தது.

அந்த பார்ட்டியில் என்னை வரவேற்ற ஆள் என் கையில் திணித்தான். நான் அதை சரி செய்வதற்குத்தான் அந்த மூலைக்கு வந்தேன். ஆனால் அங்கு நீங்கள் உட்கார்ந்திருந்த்தால் சிறிது யோசித்தேன்.

சரி இவனை என்ன செய்வது? காரணமில்லாமல் உள்ளே வைப்பது முடியாது, காரணம் இது கேசாகவே இன்னும் பதியவில்லை.

சரி..உன்னை நம்புகிறேன், இந்த விசாரனை முடியும் வரை எங்கும் செல்ல கூடாது.

தெரியும், அதனால்தான் அவனை நான் கொல்லவில்லை, போலீஸ் அவன் இறந்தால் முதலில் என்னைத்தான் சந்தேகப்படும் என்பதும் தெரியும்.அவனுக்கு காயத்தை மட்டும் உண்டு பண்ணவேண்டுமென்று விரும்பினேன். என்னிடம் போன் செய்த பெண் அவனை கொல்ல வேண்டுமென்று சொல்லியும் நான் செய்யவில்லை.

அடுத்து மதன்லாலின் அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.மப்டியில்தான்.

அன்று அவருடன் பார்த்த பெண்தான் அவரது காரியதரிசினி என்று அறிமுகப்படுத்தப்பட்டாள்.

உன் பெயர்? விக்டோரியா, எத்தனை வருசமாக இங்கு வேலை செய்கிறாய்? ஐந்து வருடமாக..

உன் முதலாளியை பற்றி.. சாரி நோ..கமெண்ட்ஸ்..வார்த்தைகளை கத்தரித்தாள்.

அன்று நீதான் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிராய். ஆம் வேறு வழியில்லை, சம்பளத்துக்கு வேலை செய்பவள்தானே (அவள் குரலில் வெறுப்பு)

இப்படி சொல்பவள் அத்தனை பேர் முன்னிலையில் அத்து மீறி நடந்திருக்கிறீர்கள்? என்ன செய்வது, இந்த கிழவன் இதைத்தான் ரொமான்ஸ் என்று நினைத்து கொண்டிருக்கிறான்.

சரி.. அந்த பையனை எதற்கு போன் செய்து பார்ட்டிக்கு வரவழைத்தாய்?

எந்த பையன்? அவள் குரலில் வியப்பு ! உண்மையை சொல், ஒரு பையனை ஏற்பாடு செய்து அவனை கொல்ல முயற்சித்திருக்கிறாய்.

அவள் சிரித்தாள். எங்களுக்கு என்ன பைத்தியமா? அவனின் செய்கைகள் கொலை செய்யுமளவுக்கு தூண்டினாலும், அவன் விட்டெறியும் சம்பளம் எங்களுக்கு தேவை அப்படியிருக்கையில் அவனை கொன்று விட்டு?…

இந்த பதில் என்னை சங்கடப்படுத்தியது. அப்படியானால் அந்த பையனுக்கு உதவியது யார்?

இவனுக்கு பதினெட்டு வயதில் ஒரு பையன் இருப்பது உனக்கு தெரியுமா?

அது எல்லோருக்கும் தெரியும். அவன் மட்டுமா என்பதுதான் இங்குள்ளோரின் கேள்வி, அவள் குரலில் கிண்டல்…

மல்கோத்ராவின் முன்னால் உட்கார்ந்திருந்தேன். எல்லா விவரங்களையும் சொன்னேன். ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த மல்கோத்ரா..சரி இந்த பிரச்னையை இப்படியே விட்டு விடுவோம்.

அப்படியானால் இதை கேசாக்க வேண்டாமென்கிறாயா?

புரிந்து கொள், இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே எனக்கு இருக்கிறது. நான் நடத்திய பார்ட்டி, அதில் அசம்பாவிதம் நடந்திருக்கிறது. இதை புகாராக்கி…

எனக்கு அவனது அச்சம் புரிந்தது. சரி யார் அவனை கொல்ல முயற்சித்தது என்று விசாரித்து விடுகிறேன்.

மல்கோத்ரா சிரித்தான், மடையா இன்னுமா புரியவில்லை, சரி அவனது வீட்டிற்கு உன்னை அழைத்து போகிறேன்.

மல்கோத்ரா என்னை அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான். “ஆயே”.”.ஆயே”…உபசரிப்பு பலமாக இருந்தது. மல்கோத்ராவின் குடும்ப விவரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வார்த்தை கூட கணவனை யார் கொலை செய்ய முயற்சித்தது என்று கேட்கவில்லை.

அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது தற்செயலாக என் பார்வை வலது புறம் இருந்த அறைக்குள் செல்ல அங்கு இருந்த டேபிளின் மேல் துப்பாக்கி ஒன்று..படுத்து கிடந்தது.

எனக்கு கவலையாய் இருந்தது. இவர்களின் குடும்ப கண்ணாமூச்சி விளையாட்டில் பாவம் அந்த பையனை பலிகடாவாக்கியிருப்பார்கள், நல்ல வேளை அவன் தப்பித்துக்கொண்டான், அடுத்து அந்த காரியதரிசினியை நினைக்கையில் துக்கமாக இருந்தது. இந்த நாகரிக வாழ்க்கை வாழ எதையெல்லாம் பறிகொடுக்க வேண்டியிருக்கிறது..மல்கோத்ரா மட்டுமென்ன தான் நல்லபடியாய் ஓய்வு பெற நினைத்துத்தானே அமைதியாய் இருக்கிறான். ஏன் நான் மட்டுமென்ன?  அவனுக்கு  நல்ல பிள்ளையாய்  நடக்க மேற்கொண்டு இந்த கேசை மூடி வைக்கப்போகிறேனே. எல்லாமே சுயநலம்தான்.

அமைதியாய் மூன்று மாதம் கழித்து மல்கோத்ரா ஓய்வுபெற்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *