(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம்-7
லெதர் கார்ப்பரேஷன் கட்டிடம் அந்தச் சாலைக்கு நாயகன்.
12 மாடி வளர்ந்திருந்தது.
எப்போது பார்த்தாலும் அதன் மீது ஒரு துண்டு ஆகாய மேகம் பின்னணியாக இருக்கும்.
மிருதுவான மூச்சுகள் இடையே லிங்க் அதைப் பார்த்தான்.
டுங் டிங் டிங் என்று இதயம் கிடார் அடித்தது.
கண்கள் பனி அடித்து கனிவாக இறங்கின.
எங்கெங்கோ தாமரைகள் பூக்கின்றன.
மனம் வசன கவிதை பேசியது.
சாதாரணத் தாமரைகள் அல்ல! எழில் மிகும் சொர்க்கத் தாமரைகள்.
இப்போது ஒரு பழக்கமாகி விட்டது. அது அவனை மீறிய பழக்கம்.
5.30 ஆகிவிட்டால் அந்த மாடிக் கட்டிடத்து அருகே போய் நின்று விடுவான்.
நித்யா ஆயிரத்தில் ஒருத்தி!
விழி, மொழி எதிலும் அவள் வித்தியாசப்பட்டவள்.
யார் பார்த்தாலும் காயம் படாமல் இருக்க மாட்டார்கள். அவள் அழகுக்கு அவ்வளவு உக்கிரம்.
மெல்லிய உடம்பைத் தாங்கி, ஒவ்வொரு பூ அடியாக வைத்துப் போகும் போது, லிங்கின் மனசில் கிறுக்கலாக ஒரு வசனப் பாடல் வந்தது.
மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று மேகம் கவிழ்ந்து சீக்கிரம் இருட்டாகி விட்டது.
5-45க்கு அவள் படிகளில் இறங்கினாள். பிளாட் பாரத்தில் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அவனை நெருங்கும்போது அலைகள் பெரிது பெரிதாக அவனை வந்து மோதின.
ஓரமாக மறைந்திருந்தான்.
அவனை அவள் தாண்டிப் போகும்போது சுவாசம் தடுமாறியது.
சற்று தூரம் முன்னால் போக விட்டுவிட்டு அவளைப் பின்தொடர ஆரம்பித்தான்.
அவளது பின்புறச் சாயல்கூட அவனைக் கவர்ந்தது. அதில் ஒரு மயக்கமான சுழற்சி இருந்தது.
அவள் தலைக் கூந்தலின் மெல்லிய ஆட்டம், கைகளின் மென்மை அசைவுகள் எல்லாமே மனதில் அழுத்திப் பதிந்தன.
மனதை மெள்ள, மெள்ள அரித்துக்கொண்டிருந்தன.
அவளைப் பின்பற்றுவது அவனது உத்தியோக வேலையாகச் செய்கிறானா?
அல்லது மனத்தில் பதிந்துவிட்ட பழக்க தோஷத்தால் செய்கிறானா?
அவனால் அதை அறிய முடியவில்லை? அவள் நேராகச் சாலையில் சென்று, வலது சாலையில் திரும்பினாள்.
அங்கே சிறிது தூரம் சென்றதும் நேரு பார்க்கில் நுழைந்தாள்.
பார்க்கில் அவள் எங்கே போய்க் காத்திருப்பாள் என்பது தெரியும்.
அவளைக் கவனித்துக்கொள்ள, அவன் உள்ளே போக வேண்டியதில்லை. வேலிக்கு வெளிப்புறம் வழியாகப் போய் குறிப்பிட்ட இடத்தில் நின்றால் போதும்.
செடி இடுக்குகள் வழியே அவளை நன்றாகக் கவனிக்கலாம்.
இன்றும் வெளியே போய் நின்றான்.
லிங்க்கின் தனி வாழ்க்கையில் இதுபோன்ற ஒருபெண் மயக்கம் எப்போதும் ஏற்பட்டதில்லை.
எத்தனைப் பெண்களைப் பார்த்திருக்கிறான்.
அவன் எதிர்பார்த்தது போல, அவள் உள் பெஞ்சில் வந்து அமர்ந்து ஒரு நிமிடம் ஆயிருக்காது.
வசந்த் எங்கிருந்தோ முளைத்து விட்டான். அவளை நோக்கி வருவது கண்டு லிங்க்குக்கு பெரிய வெப்ப மூச்சு வந்தது.
இரண்டு தட்டுத்தட்டிக் கீழே தள்ளுவோமா என்று தோன்றியது.
கிணிங்,கிணிங்.
ஒரு சைக்கிள் அவனை நோக்கி வந்தது.
லிங்க் சற்று ஒதுங்க, “ரோட் நடுவிலே நிக்காதீங்க மிஸ்டர்” என்று குரல் கொடுத்து சைக்கிள்காரன் அவனைக் கிட்டத்தட்ட உரசிவிட்டுச் சென்றான்.
லிங்க் ரொம்ப ஓரம் வந்தான்.
வசந்த் இதற்குள் அந்தப் பெண்ணிடம் சீண்ட ஆரம்பித்திருந்தான்.
அது காதலா! ஆவேசமா!
இரண்டு, மூன்று நாட்களாக அதுதான் சந்தேகம்! முதலில் காதலாகத் தோன்றினாலும் பயமுறுத்தல் போலவும் தோன்றியது.
இன்று பார்த்தால்…
ஆ! அவன் பேசிய பேச்சு கோபப்பேச்சு என்று நன்றாகத் தெரிந்தது.
கையை வெகுவாக ஆட்டி ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
குரலின் சில தொனிகள் ஓங்கித்தெறித்து வெளிப்புறம் வரை எகிறின.
லிங்க்கின் மனம் பதறியது.
உண்மையில் அவை ஆத்திர வார்த்தைகள்தான்.
நித்யா தலைகுனிந்து விம்மிக்கொண்டிருந்தாள்.
லிங்க்கின் மனம் பதறியது.
“அடப்பாவி, அந்தப் பெண் எப்படிப்பட்டவள். அவளைப் போய்…” என்று மனத்துக்குள் எரிந்தான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் அங்கேயே இருந்திருப்பான்.
வசந்த்தின் ஆத்திரம் குறையவேயில்லை.
“ஸார்” ஒரே ஒரு நிமிஷம் உங்ககிட்டே பேசிட்டுப் போயிடறேன்” என்றான் அந்த இளைஞன்.
சிங் அவனைப் பார்த்ததில்லை.
கொஞ்சம் தயக்கம் காட்டியே அவனை ‘உட்கார்’ என்று சைகை செய்தார்.
அதுவே அவனை அடங்க வைக்கும் என்று நினைத்தார். அவர் நினைத்தது சரியாக இருந்தது.
ஏனெனில் அவன் மீண்டும் பேச ஆரம்பித்தபோது, தொனி மாறி விட்டது.
“ஸார்” உங்க ஆபீஸ்லேர்ந்து வர்ற யாரோ ஒரு அதிகாரி தினம் சாயங்காலம் என்னைக் கண்காணிக்கிறார் ஸார். இது நல்லா இல்லை.”
சிங் திடுக்கிட்டார்.
இதுபோல யாரும் அவரிடம் வந்து குற்றம் சொன்னது கிடையாது.
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, “முதல்லே நீ யாரு?” என்றார்.
“ஸாரி ஸார்” முதல்லே சொல்லியிருக்கணும்! என் பேர் வசந்த் ஸார். நானும் நித்யாவும் லவ்வர்ஸ்!”
“யார் அது நித்யா? சினிமா ஆக்ட்ரஸ்ஸா?” என்று வேண்டுமென்றே கேட்டார் சிங்!
“இல்லை ஸார்!” அந்த இடிஞ்ச கட்டிடத்திலிருந்த ஒரு ப்ளாட்லே இருந்த பெண்!”
“ஓ, நீங்க என்ன செய்யறீங்க.”
“பாங்க்லே கிளார்க்கா இருக்கேன்!”
“என்ன விஷயம்.”
“நானும் நித்யாவும் லவ்வர்ஸ்”
“சரி”
“நாங்க ரெண்டுபேரும் தினம் நேரு பார்க்கிலே சந்திப்போம்.”
‘”சரி!”
“அங்கே ஒரு போலீஸ் அதிகாரி தினம் வந்து எங்களைக் கவனிக்கிறார் ஸார்.”
“பைத்தியமா என்ன?”
“அது எங்களுக்கு எப்படி தெரியும் ஸார்”
“அல்லது நீங்க பைத்தியம் மாதிரி நடந்துக் கிட்டீங்களா”
முதலில் மிதப்பில் பேசிய அவனுக்கு ஒரு சவுக்கடி விழுந்தது போல் இருந்தது.
“இல்லையே ஸார்! அப்படி நடக்கலையே!”
“சிலவங்க அப்படி நடந்துக்கிறாங்க. பொது ஜனங்க வர்ற பார்க்கிலே கட்டிக்கிறாங்க. கிஸ் பண்றாங்க. அதெல்லாம் சரியில்லைதானே?”
“ஆமாம் ஸார்.”
“நியூஸென்ஸ் ஆக்ட் கீழே அதை நாங்க தடுப்போம். எங்க ஆபீசர் அங்கே வந்தது அதுக்காகத்தான்.”
“ஸார் எங்களைப் பல நாளாக அவர் கவனிக்கிறாரு! நாங்க அந்த மாதிரி லவ் ஆர்ட் எதுவும் செய்யலை. சொல்லப் போனா சண்டை போட்டுக்கிட்டிருந்தோம் ஸார்.”
“அதுவும் பொது ஜன பார்க்கிலே தவறுதான்.” இளைஞன் முகம் வெளிறியது.
“ஸாரி ஸார், நான் இங்கு புகார் கொடுக்க வந்திருக்கக்கூடாது. வர்றேன் ஸார்”.
எழுந்தான்.
“மிஸ்டர் உட்காருங்க.”
உட்கார்ந்தான்.
“நீங்க சண்டை போட்டுக்கிறதாகச் சொன்னீங்க, எதுக்குன்னு சொல்ல முடியுமா?”
வசந்த் திகைத்தான்.
“எங்க ரெண்டு பேருக்கும் அபிப்பிராய பேதம் ஸார்.”
“எங்க போலீஸ் ஆபீசர் சொல்றார், நீங்க அவளை ப்ளாக் மெயில் பண்றீங்கன்னு. சரிதானா?”
“நோ! நோ! சத்தியமா இல்லை. ‘திக் லவ்வர்ஸ்’ இடையே இதைப்போல சண்டை வரும்தான் ஸார்.”
“நீங்க அவளை உண்மையா காதலிக்கறீங்களா?”
“ஆமாம் ஸார்! அவளைத் திருமணம் செய்துக்கப் போறேன்.”
“ரைட் வசந்த்! நீங்க. போகலாம். இனிமே யாரும் உங்களைக் கண்காணிக்க மாட்டாங்க.”
வசந்த் வெளியேறினான்.
“நீ செஞ்சது சுத்த அநாகரிகம்.”
என்று சொல்லி சிங் பைலைத் தூக்கி மேஜை மீது விளாசலோடு தட்டினார்.
‘படார்’ என்று சத்தம்.
அது விளக்கை அடித்தது போல் இருந்தது.
சிங் இதைப்போல் லிங்க்கிடம் உறைத்துப் பேசியதில்லை. லிங்கின் விரல்கள் திடுதிடுத்தன.
“உன்னை நான் கண்காணிக்கச் சொல்லலியே! நீ எப்படிப் போலாம்?”
லிங்க் மெள்ள மேலே நிமிர்ந்தான்.
“தப்புதான் சார்.”
“இப்படி பொதுஜனம் வந்து நம்மைக் குற்றம் சாட்டுகிற மாதிரி வச்சுக்கிட்டயே.”
“ஸாரி சார்.”
“அப்படியாவது நாசுக்காகப் பார்க்கத் தெரியுதா.”
“நான் நாசுக்காகத்தான் பார்த்தேன் ஸார்.”
“பின்னே எப்படி அவனுக்குத் தெரிஞ்சது.”
“அவன் சினேகிதங்க ஸார். அவனைப் பார்க்கிலே கொண்டு விட்டுட்டுப் போகும் போது என்னைக் கவனிச்சிருக்காங்க.”
“அதுக்கு நீ இடம் கொடுக்கலாமா?”
“கூடாது ஸார். தவறு பண்ணிட்டேன். ஸாரி.”
சிங் மேலே பேசவில்லை. மேசை மீது கிடந்த ரிப்போர்ட்டில் ஒரு பக்கம் புரட்டிப் பார்த்தார்.
“அப்புறம் லிங்க் நீயாக ஏன் இந்தக் காரியம் செய்யறே?”
“ஸாரி ஸார். தவறுதான் ஸார்.”
சிங் மௌனமானார். லிங்க் சிறிது நின்றான். பிறகு அடுத்த மேஜையை நோக்கிச் சென்றான்.
நிமிடங்கள் ஓடின.
“லிங்க்” என்றார் சிங். குரலில் கொஞ்சம் நைச்சியம் தெரிந்தது.
லிங்க்குக்கு அந்தக் குரல் கேட்டு ஆறுதலாக இருந்தது.
“எஸ் ஸார். . என்று வந்தான்.”
‘அந்த மாதிரி ஏன் செஞ்சே?’ என்று சற்றே ஆவலாதியாகக் கேட்டார் சிங்.
அவர் முகம் நிமிரவில்லை.
லிங்குக்குக் கொஞ்சம் உயிர் வந்தது.
“ஸார் சில காரியங்க என் போக்குப்படி செய்வேன் ஸார். அது சில சமயம் பலன் கொடுத்திருக்கு. அதனாலேதான் இங்கேயும்… ”
சிங் பேசவில்லை. அவன் பேசியது அவருக்குச் சரியாகத் தோன்றியிருக்கும்.
“இப்போ ஸார், அந்த வசந்த் அந்தப் பெண்ணை ரொம்ப மிரட்டியிருக்கான் ஸார். அது அழுகையா அழுகுது. அந்தப் பெண்ணை அவன் பிளாக்மெயில் பண்றானோன்னு தோணுது ஸார்.”
சட்டென்று சிங் நிமிர்ந்தார்.
அதே ப்ளாக் மெயில் வார்த்தையைத்தான் அவரும் சற்று முன் உபயோகித்தார்.
“லிங்க் உனக்கு அப்படித் தோணுதா?”
“ஆமாம் ஸார்.”
சிங் தமது கையை மேஜை மீது அகல விரித்தார். “அப்போ அவங்களைக் கண்காணிக்கணும். ஆனா இப்படி நாட்டுப்புறத்தான் மாதிரி வேலி ஓரம் நின்னு பார்க்காதே! வேறே நாகரிக வழியா எடுத்துக்க!”
“சரிதான் ஸார்!”
கன்னிங்ஹாம் ஓட்டல் லவுஞ்சில் புகுந்து கவுண்டர் அருகில் இருக்கும் மானேஜர் அறைக்குள் நுழைந்தார் சிங்.
மானேஜர் குப்தா, “வாங்க, வாங்க” என்றார்.
அவரை உட்கார்த்திவிட்டு குப்தா இன்டர்காமில் பேசினார்.
உணவு டிபார்ட்மெண்ட் கோபாலன் நாயர் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கே குதித்தார்.
“நாயர்! ஸார்! போலீஸ் டிபார்ட்மெண்டிலேர்ந்து வந்திருக்கார்.”
“வணக்கம் ஸார்!”
“மார்க்கபந்து பற்றி அவருக்குத் தெரியணும்.”
“அப்படிங்களா? நல்ல மனுஷன். சமையல்லே கெட்டி! தான் உண்டு தான் பாடு உண்டுன்னு…”
சிங் நிதானித்தார்.
“இப்போ ஓட்டலை விட்டுப் போயிட்டாரா?
“ஆமாம்.”
“எங்கே போயிட்டார்”.
“வேலை தேடி வடக்கே போயிட்டாரு.”
“நிச்சயமாத் தெரியுமா?”
“அப்டித்தான் சொன்னாரு.”
“எப்போ போனாரு?”
“பதினைந்து நாளைக்கு முன்னாடி போய்ட்டாரு”
“கணக்கு எல்லாம் ஸெட்டில் ஆயிடுத்தா?”
“ஆயிடுத்து.”
“அவர் சொந்த வாழ்க்கையிலே எப்படிப்பட்டவரு?”
“குறை சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.”
“எதிலேயாவது தனி இன்ட்ரெஸ்ட் உண்டா?”
“பேப்பரை விழுந்து விழுந்து படிப்பார்.”
“அரசியல்லே ஆர்வம் இருக்குமா?”
“படிக்கிறதோடு சரி. ஒரு பேச்சு கிடையாது.”
“அப்படிப் படிக்கிறவங்க சும்மா இருக்க மாட்டாங்களே?”
“நீங்க சொல்றது சரிதான்! இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி காரசாரமா அரசியல் பேசுவாராம்”
“சரி.”
“ஒரு தரம் நண்பர்களுக்குள்ளே தகராறு ஆகி போலீஸ் வரை வந்து லாக்அப்பிலே போட்டுட்டாங்களாம்.”
சிங்கின் ஆர்வம் டிகிரி டிகிரியாக ஏறியது.
விசாரணையில் எத்தனை விஷயங்கள் உதிர்கின்றன?
“அப்புறம் போலீஸே எச்சரிக்கை பண்ணி அனுப்பிச் சாங்களாம்? அதிலேர்ந்து யாரிட்டேயும் அரசியல் பேசறதில்லை.’
“அது உண்மைதானா?”
“ஆமா ஸார்! ஒருத்தர் வழிக்கும் போக மாட்டார். தான் உண்டு தன் காரியம் உண்டுன்னு இருப்பாரு! பணம் நிறைய சேர்த்து ஒரு இடத்திலே அக்கடான்னு இருக்கணுமின்னு நினைப்பாரு! படிக்கிறதிலே இருக்கிற ருசி அவருக்கு வேலையிலே இருந்ததில்லை.”
“உங்க ஓட்டலிலே வேலையை ஒழுங்காகச் செய்வார் இல்லையா?”
“செய்வாரு! அதிலே குற்றமே சொல்ல முடியாது. கொஞ்சம் டயம் கிடைச்சாலும் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பிச்சுடுவாரு! ஏதாவது புத்தகம் படிக்கணும். பணக்காரனா இருந்தா படிச்சுக்கிட்டே இருப்பேன்னு சொல்வாரு.”
“பெண் விஷயம் ஏதாவது உண்டா?”
“எனக்குத் தெரிந்து எதுவும் இல்லை.”
சிங் ஆபீஸ் திரும்பியதும் லிங்க்கை அழைத்தார். மார்க்கபந்து பற்றி கம்ப்யூட்டர் ரிக்கார்ட் ஏதாவது சொல்கிறதா என்று பார்த்து வரச் சொன்னார்.
ஒரு மணி நேரத்தில் அவன் திரும்பி வந்தான்.
ஒரு ப்ரிண்ட் அவுட் அவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.
எல்.ஆர்.மார்க்கபந்து வயது 42, உயரம் 5 அடி 6 அங்குலம் படிப்பு எட்டாவது வகுப்பு!
‘செங்கதிர் இயக்கம்’ என்ற அணியில் சேர்ந்து இருந்தார்.
மதுரையில் இருந்தபோது இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட சில அராஜகச் செயல்களைச் செய்தார்.
பின்னர் திருச்சியில் இருந்தபோது ஊர்வலம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு மாதம் சிறை தண்டனை அடைந்த பிறகு மன்னிப்பு கேட்டு வெளியே வந்தார்.
பின்னர் கோவைக்குப் போனார். அங்கே அமைதியாக ஒரு ஓட்டலில் வேலை பார்த்தாகச் செய்தி.
லிங்க்கை நிமிர்ந்து பார்த்தார்.
“ஸார் ஒரு சந்தேகம்! இந்த ஆளுக்கு போலீஸ் ரிக்கார்ட் இருக்கும்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
“எப்போ ஆர்பாட்டம் கலாட்டாவிலே ஈடுபட்டாச்சோ அப்போ நிச்சயம் ரிக்கார்ட் இருக்கணுமின்னு தோணிப்போச்சு. இப்போ என்ன சொல்றே?”
“சந்தேகம் வந்துருச்சு ஸார்! கட்டிடம் இடிகிறதுக்கு மூணு நாள் முன்னாடி வேலையை விட்டுட்டுப் போயிருக்கான்.”
“போன இடத்தக் குறிப்பிட்டுச் சொல்லலை. என்னைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு இடம் போக முடியும்.” என்றார் சிங்.
“எங்கே?”
“பெங்களூர்.”
“ரைட் ஸார்! அங்கே ஓட்டல்கள்ல இருப்பான் பிடிச்சுடலாம்.”
“ஒரு விஷயம் லிங்க்!”
“எஸ். ஸார்.”
“இந்தத் கட்டிடம் இடிஞ்சு விழறதிலே அவனுக்கு என்ன லாபம்?” லிங்க் யோசித்தான்.
“ஏதாவது இருக்கணும்.”
“நாகசாமிக்காவது நெக்லஸ் லாபம் கிடைச்சுது. இவனுக்கு லாபம் என்னனு தெரியலை. அடுத்தது கட்டிடம் இடிஞ்சு விழறதுக்கு மூணுநாள் முன்னாடியே வேலையை விட்டிருக்கான். அதையும் கவனி!”
“ஸார் எதுக்கும் விசாரிச்சுட்டாப் போவுது. ஒரு விஷயம் தெரியுது. கட்டிடம் இடிஞ்ச போது இவன் அதுக்குள்ளே இல்லை. இருந்திருந்தா சடலம் கிடைச்சிருக்கும்.”
“ரைட் விசாரி!”
லிங்குக்குப் பெரிய கோபம்!
வசந்த் மீது?
சிங்கிடம் ரிப்போர்ட் செய்து அவனுக்கு (லிங்குக்கு) டோஸ் வாங்கிக் கொடுத்துவிட்டான்.
இந்த வசந்த் ஏன் நித்யாவை மிரட்டுகிறான்? ஏதாவது விஷயம் இருக்குமோ?
பல நாட்கள் ரகசியமாக நேரு பார்க் போய் வந்தான். ஆச்சரியம். வசந்த் நித்யா ஜோடி அங்கே வருவது நின்றுவிட்டது.
வேறு பார்க்கைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அதை எப்படிக்கண்டு பிடிப்பது?
சாயங்காலம் 5-30 லெதர் கார்ப்பரேஷன் வாசலை மறைவாக இருந்து கண்காணித்தான்.
ஒரு வாரம் மட்டும் செய்திருப்பான்.
ஆனால் நித்யா வெளியே வரவே இல்லை. என்ன ஆனாள் அவள்?
ஒரு திங்கட்கிழமை பகலில் லிங்க் அந்த ஆபீசில் நுழைந்தான்.
இரண்டாவது தளத்தில் பெரிய காரியாலயமாக இருந்தது.
ரிசப்ஷனிஸ்ட் பெண் இதமாகப் பேசினாள்.
தன்னை நித்யாவுக்கு உறவினனாகக் கூறிக் கொண்டான்.
நித்யாவைக் பார்க்க வேண்டும் என்றான்.
ரிசப்னிஸ்ட் போனை எடுத்துச் சிறிது நேரம் பேசினாள்.
பிறகு “ஸாரி ஸார்! அவங்க ஒரு வாரமா ஆபீஸ் வரல்லை” என்றாள்.
“உடம்பு சரியில்லையா?”
“தெரியாது ஸார். நோ ரிப்போர்ட்” என்றாள்.
“தாங்க்ஸ்!”
லிங்க் யோசனையோடு வெளியே வந்தான்.
டயரியை எடுத்தான்.
பக்கங்களைப் புரட்ட நித்யாவின் அத்தை விலாசம் கிடைத்தது.
நேராக அதை நோக்கிப் புறப்பட்டான்.
லிங்க்கின் இளமனம் அந்த மாடியில் ஏறும்போது படபடத்தது.
அவனது மனதின் ராணி அங்கே வாழ்கிறாள் என்று எண்ணினான்.
இந்தப் படிகளில்தானே அவள் தினம் ஏறி இறங்குவாள்? இவை புனிதம் பெற்றவை.
உண்மையில் ஒவ்வொரு படியிலும் அவன் நிதானித்து நிதானித்து ஏறினான்.
மனம் அவ்வப்போது வசன கவிதைகளைச் சொல்லி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது.
யாராவது அவனை அப்போது பார்த்தால் பைத்தியக்காரனோ என்று நினைத்திருப்பார்கள்.
அவனுக்கே தனது செய்கை அப்படித்தான் தோன்றியது.
ஏன் இந்தப் பெண்ணிடம் அவ்வளவு மயக்கம்?
மேலே வாசல் நிலை வந்தது. அருகே மணியடிக்கும் முனை!
அதைக்கூட அவன் உணர்ச்சிப் பெருக்காகப் பார்த்தான்.
இதில் எத்தனை முறை அவளது புனித விரல்கள் அழுந்தியிருக்கும். பெருமூச்சு!
கடைசியில் மணியை அழுத்தினான். உள்ளே சில துணுக்கு மணிகளை அது உதிர்த்தது.
காலடிகள்!
பிறகு கதவு திறக்கப்பட்டது.
ஏமாற்றம்!
யார் இது?
“நீங்க யாரு?” என்றாள் அந்த நடுத்தர வயதுப் பெண்மணி.
“நான் போலீஸ் இலாகா!” என்றான்.
“ஆ! வாங்க! வாங்க!”
உள்ளே கொண்டு போய் சோபாவில் உட்கார்த்தினாள். சன்னல்கள் மேன்மையான வெளிச்சம் சொரிந்தன.
இந்த அறையில் அவள் உலாவி இருப்பாள்!
“மேடம் இந்த வீட்டிலேதானே நித்யா இருக்காங்க?”
“ஆமாம்.”
“இப்போ நித்யாவைப் பார்த்து விசாரிக்கணுமே!”
“ஒரு வாரமா அவள் இந்த வீட்டிலே இல்லை.”
“இல்லையா? எங்கே பேனாள்?”
“என்கிட்டே எதுவுமே சொல்லலை. ஆபீஸிலே இருந்து போன் செஞ்சா இதைப் போல என் சிநேகிதியோட வெளியூர் போறேன். திரும்பி வந்த பிறகு வரேன்னு!”
“ஓ! அப்படிப் போறது வழக்கமா?”
“வழக்கமே கிடையாது. நான் கூடக் கேட்டேன் இப்படி மாற்றுப் புடவை கூட எடுத்துக்காமல் போறயேன்னு. அவசரம்னு பதில் சொன்னா!”
“அப்புறம் செய்தி ஏதாவது வந்திச்சா?”
“எதுவும் வரலை. எனக்குக் கவலையா இருக்கு.”
“இதுவரையும் செய்தி தெரியாது?”
“தெரியாது. ஆபீஸ்லேர்ந்து ரெண்டு மூணு வாட்டி கேட்டுட்டாங்க.”
“அவளுக்கு சிநேகிதி யாரு?”
“அது யாருன்னு தெரியலை. ஆனா சிநேகிதன் ஒருத்தன் உண்டு’
“யாரு அது?”
“வசந்த்னு ஒருத்தன்! மகாலட்சுமி பாங்கிலே வேலையா இருக்கான்.”
“அட்ரஸ் தெரியுமா?”
“தெரியாது.”
“அவனோட அவள் எங்கேயாவது…”
“ஸார் அவள் நல்ல பெண். அதைப்போல எதுவும் செய்ய மாட்டாள். எங்க குடும்பங்களிலேயே அவளுக்கு நல்ல பெயர். ஆனா இப்போ…”
“இப்போ என்ன சொல்றீங்க?”
“இந்த நடவடிக்கைதான் புரியலை”
“உங்ககிட்டே அதைப்பற்றி ஏதாவது சொல்லி இருக்காங்களா?”
“ஒரு வார்த்தை கிடையாது.”
“இங்கே இருந்தபோது அவள் மனநிலை எப்படி இருந்திச்சு.”
“அம்மாவை நினைச்சு தினம் கண்ணீர் விடுவா! சோகமாகவே இருப்பா. இங்கே வந்து தங்கினாளே தவிர அவளுக்கு இங்கே இருப்புக்கொள்ளவே இல்லை தவிச்சிட்டிருந்தாங்க.”
“ஏன்னு கேட்டீங்களா?”
“கேட்கவே வேண்டாம். அவள் நிலையிலே யாரும் அப்படித்தான் இருப்பாங்க.”
“அந்த வசந்த் யாரு? நல்ல பையனா?’
“பார்க்க நல்லா இருக்கான். வசதியான குடும்பம்னு தெரியுது.”
“இங்கே வந்திருக்கானா?”
“ஒரு வாட்டி அழைச்சிட்டு வந்தா!”
“சரி மேடம்! நித்யாவுக்கு வேறே உறவுக்காரங்க யாராவது உண்டா.”
“சொல்லும்படி யாரும் கிடையாது. சுற்றிச்சுற்றி நான்தான்.”
“சரி அவளைப்பற்றி தகவல் தெரிஞ்சா எங்களுக்குச் சொல்லுங்க.”
லிங்க் ஒரு கார்டை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“நீங்க ஏன் அவளைப்பற்றி விசாரிக்கிறீங்க?”
“அந்தக் கட்டிடம் இடிஞ்சது சம்பந்தமா விசாரணை நடத்தறோம். அதிலே இவங்க கிட்டேயும் பேச வேண்டி வருது…”
“அந்தக் கட்டிடம் இடியப்போறது அவளுக்கு முன்பே தெரியும்னு சொன்னா.”
எழுவதற்கு இருந்த லிங்க் உட்கார்ந்தான்.
“அவங்களுக்கு எப்படித் தெரியும்?”
“நானும் கேட்டேன். ஏதோ ஊகம் வந்ததா சொன்னா.”
“அவளுக்கு ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா?”
லேசாகச் சிரித்தாள் அத்தை.
“அப்படி இல்லை அவளுக்கு அது எப்படித் தெரிஞ்சுதோ? அதுவும் பாருங்க. தன்னைக் காப்பத்தினவள் தன் அம்மாவைக் காப்பாத்த முடியாமல் போச்சு.”
இன்ஸ்பெக்டர் சிங் அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தார்.
அவர் புருவம் சுருங்கியது.
இரண்டாம் முறை படித்தார்.
எதிரே இருந்த பெண்ணை நோக்கி “உன் பேர் என்னம்மா? என்றார்.
“நளினா!”
“உனக்குத்தான் இந்த லெட்டர் வந்திருக்கு இல்லையா?”
“ஆமாம்.”
“மதனா உன்னுடைய உயிர்த்தோழி.”
“ஆமா ஸார்.”
“சரி இங்கே இருக்கும்போது நாகசாமியோட பரிச்சயம் இருக்கிறதை சொல்லியிருக்காளா?”
“ஜாடையா சொல்லியிருக்கா?”
“சரி! இவ்வளவு வயதான ஒரு பாட்டுக்காரர் கிட்டே இந்தப்பெண் எப்படி மயங்கினா?”
“தலை எழுத்து ஸார். ஒரு பின்னணியும் உண்டு ஸார்.”
“என்ன?”
“அவங்க அக்காவோடுதான் அவள் இருந்தா! அக்கா அவளைச் சரியாகக் கவனிக்கிறதில்லை.”
“ஓ அன்பு இல்லாமல் போச்சா?”
“ஆமா ஸார்! தவிர அக்கா புருஷன் சரும நோய் உடைய ஆசாமி! அவன்வேறே இந்தப் பெண்ணுக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்துக்கிட்டே இருந்திருக்கான். என் சொல்படி நட, இல்லாட்டி இல்லாதும் பொல்லாதும் சொல்லி உன் அக்காவைக் கொண்டே வீட்டை விட்டு விரட்டச் சொல்வேன்னு பயமுறுத்தி இருக்கான்”.
“ஓ வீட்டுப் பின்னணி சரியில்லாமல் போச்சு!”
“ஆமாம்.”
“ரைட் மேடம். இந்த லெட்டரைக் கொண்டுவந்து கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உங்களை ஊட்டிக்கு ரொம்ப அவசரமாகக் கூப்பிட்டா துணையோடு வர முடியுமா?”
“என் தோழிக்கு உதவணுமின்னா வரேன்.”
“ரெடியா இருங்க. சொல்றேன்.”
“ரைட் ஸார். ஆனா தயவு செய்து அவங்க அக்காவுக்கு செய்தி போக வேண்டாம்.”
“நிச்சயம் போகாது.”
அவள் போனபிறகு சிங் வெகுநேரம் யோசித்து உட்கார்ந்திருந்தார் பிறகு “லிங்க்!” என்றார்.
லிங்க் உள்ளே ஓடினான்.
அத்தியாயம்-8
“இந்தப் போட்டோவைப் பாருங்க!” என்றான் லிங்க். ஓட்டல் சிப்பந்தி அதைப் பார்த்தார்.
பிறகு நினைவைத் தட்டினார். கையில் படத்தை இப்படியும் அப்படியும் வெளிச்சம் பிடித்தார்.
“ஆமா நினைவு இருக்கு ஸார்! ரூம் முப்பத்து மூணுக்கு வந்திருந்தங்க! ஒரு அப்பாவும், பெண்ணும்”.
“அப்பா இல்லை! பாட்டு டீச்சர்.”
சிப்பந்தி திகைத்தார்.
“தலையைக் குளோசாக வெட்டிக்கிட்டு…” என்று இழுத்தார்.
“இல்லை, பாகவதர் மாதிரி அடர்த்தியா இருக்கும்.”
“மீசை உண்டு இல்லே!”
“கிடையாது.”
“அப்போ அவர் இல்லை” என்றார் சிப்பந்தி.
லிங்க் யோசித்தான்.
அவன் அருகில் நளினாவும் அவள் அண்ணன் உமாகாந்த்தும் நின்றார்கள்.
அவர்களுக்கே அந்தப் பதில் திகைப்பாக இருந்தது.
சில கணங்கள்தான். லிங்க் யோசனையிலிருந்து உடனே மீண்டான்.
நளினாவின் கையிலிருந்த போட்டோவை வாங்கினான்.
“இந்தாங்க பெரியவரே! இந்தப் பெண்தான் அன்னிக்கு வந்தது. அது நிச்சயம்தானே?”
“ஆமா ஸார்! நான்தான் ராத்திரி அந்த ரூமுக்கு சப்ளை செய்தது”.
“இவளோட வந்த ஆண்பிள்ளைதான் நாங்க சொல்ற அடையாளத்திலே இல்லை சரிதானே!”
“ஆமா ஸார்.”
“பரவாயில்லை! மறுநாள் காலையிலே நீங்கதான் காப்பி சப்ளை செய்தீங்களா?”
“இல்லை. அந்த ஆளே வந்து வாங்கிட்டுப் போயிட்டாரு”.
“ஓகோ.”
லிங்க் யோசித்தான்.
“சரி” அப்புறம் நீங்க எப்போ அந்த அறைக்குப் போனீங்க?”
“டிபன் வேணுமான்னு கேட்கப் போனேங்க. அப்போ கதவு பூட்டியிருந்திச்சு. காலையிலே சிலவங்க ஊட்டியிலே ‘வாக்’ போவாங்க. அப்புறம் வரலாம்னு திரும்பிட்டேன்”.
“சரி”
“அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு சுமார் ஒன்பது ஒன்பதே காலுக்கு திரும்பிப் போனேன்.”
“அவர் இருந்தாரா?”
“இருந்தார். அந்தப் பெண் இல்லை. டிபன் வேணுமான்னு கேட்டேன். இட்லி, வடை, காப்பி ஆர்டர் கொடுத்தார். நான் கதவைத் தாண்டிப் போயிருக்க மாட்டேன். சர்வர்ன்னு கூப்பிட்டார். திரும்பினேன். அவளுக்கும் வேணும். இன்னொரு செட் எல்லாமே கொண்டு வந்துடுங்கன்னு சொன்னார்” என்றார் அவர்.
ஓ! பெரிய ஆளா இருக்கான் என்றான் லிங்க், “அப்புறம் என்னாச்சு?”
“டிபன் கொடுத்துட்டு வந்துட்டேன். என் முறை முடிஞ்சு போச்சு. இனிமே வீட்டுக்குப் போயி சாப்பிட்டு நான் வரணும். கிளம்பிப் போயிட்டேன். அப்புறம் சாப்பிட்டு விட்டு திரும்ப ஓட்டலுக்கு வந்திட்டிருந்தேன். அந்த ஆசாமி மட்டுமே கையிலே பெட்டியைத் தூக்கிக்கிட்டு போய்ட்டிருந்தார். நாங்க நேருக்கு நேர் பார்த்துட்டோம். கிளம்பியாச்சு போல இருக்குன்னேன்”
ஆமான்னு சொல்லி பைக்குள்ளே கையைவிட்டு ஒரு ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தார். இனாம் எனக்கு! அவங்களை எங்கேன்னு கேட்டேன். முன்னாலே போயிட்டாங்கன்னு சொன்னார்.
நான் உத்தரவு வாங்கிக்கிட்டு வந்தேன். மனசிலே நெருடித்து, பொண்ணு முன்னாடி போறதாகச் சொல்றானே, இது நேர் ரோடுதானே! அவள் முன்னாடி போயிருந்தா கூட நம்ம எதிரே வந்திருக்கணுமேன்னு நினைச்சேன்.
ஒருவாட்டி ரோட்டைத் திரும்பிப் பார்த்திடுவோம். அவள் முன்னாடி போனா இங்கேருந்தே தெரியும்னு நினைச்சு, நான் திரும்பிப் பார்த்தேன்.
அதே நேரம் அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். எனக்கு கஷ்டமா போச்சு.
லிங்க் குறுக்கிட்டான். “அந்தப் பெண் தெரிஞ்சாளா?”
“இல்லை ஸார். நேரே ஒரே ரோடுதான். அந்தக் கடைசி வரைக்கும் யாரும் தெரியலை”.
“குட்! நல்லா கவனிச்சிருக்கீங்க. வேற ஏதாவது விஷயம் உண்டா?”
“ஒரு சின்ன சமாச்சாரம் உண்டு.”
“சொல்லுங்க.”
“நான் எப்பவாவது பேப்பர் படிப்பேன். இரண்டு நாள் தாண்டி ‘கோவை முரசு’ படிச்சேன். அதிலே கோரம்பள்ளம் என்கிற இடத்துக்குப் பக்கத்திலே ஒரு பெண் பிரேதம் உருக்குலைஞ்சு கிடக்கிறதாகப் போட்டிருந்திச்சு! அது இந்தப் பெண்ணாக இருக்குமான்னு எனக்கு ஒரு ஊகம்.”
லிங்க் குறுக்கிட்டான். “அப்போ அந்தப் பெண்ணை அவன் கொன்னுட்டான்னு தோணுதா?”
“வெறும் ஊகம்தான்.”
ஊட்டி சீசன் முடிந்து கொண்டிருந்த நேரம் அது. ஊட்டி காலியாகிக் கொண்டிருந்தது.
லிங்க் மேலும் ஒருநாள் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அலைந்தான்.
பலரை சந்தித்து விசாரணை நடத்தினான்.
எதுவும் பெயரவில்லை.
இரண்டாம் நாள் ஊட்டி வரைபடம் வாங்கி வந்தான்.
கோரம்பள்ளம் எங்கே இருக்கிறது என்று குறித்து, அதன் மேல்மட்டங்களில் ஊட்டி மேல்பகுதி எங்கே இருக்கிறது என்பதைக் கவனித்தான்.
பிறகு கையில் பைனாகுலர்ஸை வைத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான்.
மறுநாள் மலையை விட்டுக் கீழே இறங்கி கோரம் பள்ளம் போலீஸ் நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
அந்த நிலையத்தார் பிரேதத்தின் போட்டோவை எடுத்து வைத்திருந்தார்கள்.
அதிகம் உருக்குலைந்திருந்ததால் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
நல்லவேளையாக சடலத்தோடு கிடந்த ஸாரியை எடுத்து வைத்திருந்தார்கள்.
அதைக் கொணர்ந்ததுதான் தாமதம்! நளினா அங்கேயே அழ ஆரம்பித்துவிட்டாள்.
“குட் லிங்க்! இதுவரை செஞ்சதே அபூர்வம்! இப்போதான் உண்மையிலே சிக்கல் அதிகமாயிருக்கு!” என்றார் சிங்.
“ஏதாவது புதுச் செய்தி கிடைச்சிருக்கா ஸார்!”
“முதல்லே அந்த வசந்த் வேலை, செய்யற பாங்கிலே போய்ப் பார்த்தேன். அவன் வேலையை ராஜினாமா பண்ணிட்டுப் போயிட்டான்.
“ஐயோ! என்று நிமிர்ந்தான் லிங்க்.”
“உண்மையிலே ஸார் எனக்கு அவன் மேலே ரொம்ப சந்தேகம் ஸார். அவனை அரெஸ்ட் பண்ணி இருந்தாக் கூடத் தேவலை! அந்தப் பெண்கிட்டே ‘நீ என்னைக் கல்யாணம் பண்ணிக் காட்டி விடமாட்டேன்’னு கத்தினான். ஸார்!”
சிங் சட்டென்று ஒரு விசேடப் பார்வை அவன் மீது பதித்தார்.
“இந்தா லிங்க்! இந்த மிரட்டல் வார்த்தையை நீ என்கிட்டே சொல்லலையே!”
“சொல்லியிருப்பேன் ஸார்! நீங்க அதை விரும்ப மாட்டீங்கன்னு நினைச்சேன்.”
“அப்படி ஒரு இம்ப்ரஷனை நான் உனக்குக் கொடுத்திருந்தேன்னா அது என் தப்புதான்!”
“சரியா ப்ளாக்மெயில் பண்ணினான் ஸார்.”
சிங் எழுந்தார். வழக்கம்போல் யோசனையின் வெப்பத்தோடு உலாவ ஆரம்பித்தார்.
இரண்டு யுகமான நிமிடங்கள் சென்றன.
“லிங்க் ஒரு விஷயத்தைக் கவனிச்சியா? ஊரை விட்டு மூணு செட் ஆளுங்க வெளியே போயிருக்காங்க!”
லிங்க் யோசித்தான்.
“இந்த மார்க்கபந்து நம்பர் ஒன்! நாகசாமியும் மதனாவும் நம்பர் டூ. வசந்தும் நித்யாவும் நம்பர் த்ரி!”
என்று அடுக்கினார் சிங்! பிறகு உலாத்திக்கொண்டே, “இந்த மூணு பேருக்கு மட்டும் கட்டிடம் இடிஞ்சு விழப்போற விஷயம் தெரிஞ்சிருக்கு, அதனாலேதான் போயிருக்காங்க!”
“எஸ் சார்! நம்ம விசாரணை சூடு பிடிச்சதும் அத்தனை பேரும் மறைஞ்சுட்டாங்க!”
சிங் பேசவில்லை.
“ஏன் சார் பாங்க்லே விசாரிச்சாங்களே! வசந்த் ஏன் வேலையை விட்டுட்டுப் போனான்?”
“அவன் நல்ல வசதியானவனாம், சமீபத்திலே அவன் அத்தை யாரோ இறந்ததிலே ஏராளமான சொத்து அவனுக்கு வந்திருக்காம். இனிமே ஏன் வேலைன்னு சொல்லி போயிட்டானாம்”.
லிங்க் கண்ணை மூடித் திறந்தான். “ஸார்! அவ்வளவு வசதி வந்தாச்சுன்னா அவன் ஏன் சாதாரண நடுத்தர வர்க்கத்து நித்யாவை மணக்க முயற்சி செய்யணும்.”
“அவள் நல்ல அழகிதானே?”
“ஆமா ஸார்! அவனுக்கு இதைவிட நல்ல அழகி கிடைச்சுடுமே உயர் மட்டத்திலேர்ந்து!”
சிங் உலாவினார்.
இதிலே வேடிக்கை! இந்த மூணு செட் நபர்களுக்கும் ஒருத்தருக்கொருத்தர் எந்த முகாந்திரமும் கிடையாது. ஒரே தொடர்பு அந்தக் கட்டிடத்தோடு வந்திருக்கிற தொடர்புதான்.
“ஸார் வசந்த் எங்கே இருக்கார்னு கேட்டீங்களா?”
“கேட்டாச்சு! வீட்டு அட்ரஸ் சொன்னாங்க! அங்கிருந்து அவன் காலி பண்ணிட்டுப் போயாச்சு!”
“ஆ! ஸார்! ஸார்! நாம் அப்போதே வசந்த்தை அரெஸ்ட் செய்திருக்கணும்.”
சிங் மென்மையாகச் சிரித்தார்.
“லிங்க் இப்படித்தான் எத்தனையோ சமயங்களிலே நடக்கும். கவலைப்படாதே! எங்கே ஓடிடப் போறாங்க? பிடிச்சுடலாம். இப்போ மார்க்கபந்து எதோ ஹைதராபாத் ஓட்டல்லே இருக்கிறதாகக் கேள்விப்பட்டோமில்லே, அதை உறுதிப்படுத்திக்கிட்டு அந்த ஊர் போலீசுக்கு போன் பண்ணு. அவனை அரெஸ்ட் பண்ணி கஸ்டடியிலே வைக்கச் சொல்லு!” என்றார்.
லிங்க் எழுந்தான். போன் அறைக்குச் சென்றான். பேச ஆரம்பித்தான். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தான்.
“சார்! மார்க்கபந்து ஒரு வாரமா ஹோட்டலுக்கு வரலையாம்! எங்கே போனான்னு தெரியாதாம்!” என்றான்.
இரவு ஏழு மணிக்கு அந்த ஆபீஸ் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஆபீசைச் சுற்றி சற்று பெரிதான காம்பவுண்ட்!
அதில் பாதி மங்கலாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், ஒரு மூலையில் மட்டும் பிரகாச விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
சிங் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணி இருக்கும்.
நகரின் சத்தங்கள் மெல்லிதாகிக் கொண்டிருந்தன.
பூசினால் போல் ஒரு குளிர் எங்கும் நிறைந்து இருந்தது.
சிங் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார்.
அவர் எதிரே அந்த மூலையில் ஏராளமான சப்புச் சவறுகள் குவிக்கப்பட்டிருந்தன.
இடிந்த கட்டிடத்தில் உறவினர்கள் எடுத்துக் கொண்டது போக மீதி உடைந்த, பிளந்த, உபயோகமற்ற சாமான்கள் அத்தனையும் அங்கே கிடந்தன.
அவற்றை ஏற்கனவே சிங் ஒரு முறை மேற்பூச்சாகப் பார்த்துவிட்டார்.
அப்படிச் செய்து சில வாரங்கள் ஓடி விட்டன.
இப்போது ஒரு தீவிரத்துடன் பார்க்க அங்கே உட்கார்ந்திருந்தார்.
இரண்டே இரண்டு போலீஸ் சிப்பந்திகளும், இரண்டு கூலி ஆட்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
முதலில் வீட்டுச் சாமான்களாகத் தெரிந்தவை அனைத்தையும் அப்புறப்படுத்தச் சொல்லியிருந்தார் அவர்.
அப்படி எல்லாவற்றையும் தனியாக வைக்கச் சொல்லியிருந்தார்.
தெரியாத பொருள் ஏதாவது இருந்தால் அதைத் தம்மிடம் கேட்கச் சொல்லியிருந்தார் சிங்.
அந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே, சிங் பெரிய லிஸ்ட்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைக் கண்ணால் ஆய்ந்து கொண்டிருந்தார்.
மனத்தில் பெரிய கவலை வீசியது.
கேஸ் நல்ல சிக்கலாக இருந்தது.
அதற்கு உதவக்கூடிய நபர்கள் எல்லோருமே அந்த விபத்தில் இறந்து விட்டார்கள்.
லிஸ்டில்தான் அவர் கவனம் அடிக்கடி திரும்பியது.
மனசு பெரும்பாலும் அதில் இழுபடும்போது அவர் அதைவிட்டு விடுவது வழக்கம்!
மனசு ஏன் லிஸ்ட் மீது அலை பாய்கிறது?
ஒவ்வொரு கடிதத்தையும் அதன் ஆண், பெண் பெயர்களையும் அவரவர் வயது! என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் ஆகிய எல்லா விவரங்களையுமே பார்த்துக் கொண்டிருந்தார்.
மனம் சுழிந்து எங்கெல்லாமோ வழிந்து கொண்டிருந்தது.
கடைசியில் ரண்டாவது தளத்தில் அந்த இரண்டாவது ப்ளாட்டில் லயித்தது.
அங்கே இரண்டு ஆண் நண்பர்கள் மட்டுமே வசித்து வந்தார்கள்.
நாற்பது வயது நாற்பத்தைந்து வயது!
‘தொழில் ஆர்டிஸ்டுகள்’ என்று போட்டிருந்தது.
அக்கம் பூக்கம் விசாரித்ததில் அவர்கள்தான் ரொம்ப வசதியாக வாழ்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
எரிந்து கிடந்த பர்னிச்சர், பீரோ இவைகளில் நிறைய எண்ணிக்கைகள் அவர்களது ப்ளாட்டின் பொருள்கள் என்று பலர் அடையாளம் காட்டினார்கள்.
ஃப்ரிட்ஜ் இருந்தது.
ஸோனி டி. வி. 29 அங்குல ஸ்க்ரீன் இருந்தது.
வாட்டர் ஹீட்டர்! வொயர்லெஸ் டெலிபோன் என்று பல நவீன நாகரிகங்கள் அந்த பிளாட்டில் இருந்தன.
தவிர, முழு பிளாட்டுமே ஏ. ஸி. செய்யப்பட்டிருந்தது என்றார்கள்.
சாமான் இடிபாடுகளில் நிறைய அவர்களுடையதாக இருந்தது!
அவர்களில் ஒருவர் பெயர் கணபதி. மற்றவர் பசுபதி!
இரு பதிகளுமே அன்யோன்யமாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
குடும்பம் ஏன் இல்லை?
அதற்குப் பதில் யாருமே கொடுக்கவில்லை.
சரி, அப்போ பெண் விஷயம் உண்டா? அல்லது குடி உண்டா?
அந்த இரண்டில் எது இருந்தாலும், இரண்டுமே இருந்தாலும் அதை அவர்கள் வெளியில்தான் வைத்துக் கொண்டிருப்பார்கள்!
இங்கே பிளாட்டில் எதுவும் செய்ய மாட்டர்கள்!
வேலை செய்வது, சாப்பிடுவது. உறங்குவதோடு சரி!
சாப்பாட்டுக்கு வெளியே போ ஓட்டலில் சாப்பிடுவார்கள்.
அல்லது யாராவது பையன் எடுப்புச் சாப்பாடு எடுத்து வருவான்.
மற்றவர்களிடம் பழகுவார்களா?
பழக்கம் எல்லாம் வெறும் ஹலோடு சரி! மற்றவர்களுடன் பேசுவதற்கு நேரம் கிடையாது.
அவர்கள் உண்டு. அவர்கள் வேலை உண்டு.
“ஸார்! இதைப் பாருங்க!’
ஏதோ கனமான கட்டை போல இருந்தது. சிங் வாங்கிப் பார்த்தார்.
3 அங்குலத்திற்கு 4 அங்குலம் நீண்ட சதுரக் கட்டை!
ஓரங்களில் சிறு ஆணி அடித்த குழிகள் ஒருவேளை ஏதாவது பிளக்குகளாக இருக்கலாம்.
“இங்கே இருக்கட்டும்!” என்று சொல்லி தம் பக்கத்தில் அதைப் போட்டுக் கொண்டார்.
பிறகு மீண்டும் லிஸ்டில் கண்ணோட்டம் இட்டார்.
அந்தச் சின்னப் பெண் நினைவுக்கு வந்தாள்.
பாவம்!
இப்போது யார் பொறுப்பில் இருக்கிறாளோ?
ஸ்கூட்டர் வரும் சத்தம் திடீரென்று கேட்டது. லிங்க்தான் வந்து கொண்டிருந்தான்.
விசாரணைக்கு அவனை அனுப்பி இருந்தார்.
காம்பவுண்டு ஓரம் வாகனத்தை நிறுத்தி, சிங்கை நோக்கி சற்று அவசரமாக வந்தான்.
அருகில் காலடி வந்ததும் அவர் நிமிர்ந்தார்.
“குட் ஈவினிங் ஸார்!”
“உட்காரு லிங்க்”
சிப்பந்தி ஸ்டூலைக் கொண்டு போட அமர்ந்தான்.
“வா இப்படித் தள்ளி உட்காரலாம்!” என்று சிங் சொல்ல, இருவரும் தள்ளிப் போனார்கள்.
“ஸார்! நீங்க சொன்னதை விசாரிச்சுட்டேன்!”
“சரி!”
“வசந்துக்கும் அந்த கட்டிடத்துக்கும் எப்படி தொடர்பு வந்ததுன்னு கேட்டீங்க! நல்லவேளையாக பாங்க் ஊழியர் ஒருவரே அதே தெருவிலே இருந்தார். சொன்னார்.”
சிங் நிமிர்ந்தார்.
“பாங்க்லே ஏதோ ஸாவனிர் போட்டாங்களாம். அதுக்கு வசந்த்தான் பொறுப்பா இருந்தானாம். வசந்த்துக்கு எப்போதுமே ஹை டேஸ்ட் உண்டாம்.”
“நல்ல லே-அவுட் பண்ணி, பத்திரிகைங்க தீபாவளி மலர் போடற மாதிரி, ஸாவனிர் கொண்டுவர விரும்பினானாம். அதுக்காக அந்த கணபதி, பசுவதி கிட்டே வந்தானாம். அதிலேர்ந்து தொடர்பு ஆரம்பிச்சதாம்”.
“ஓ! இப்போ புரியுது.”
“ஸாவனிர் பிரசுரிக்கிற வேலைக்காக மூணு மாசம் அடிக்கடி வந்தானாம். அப்போதான் அந்த நித்யாவோட பழக்கம் ஏற்பட்டுதாம்!”
“ஓ” ரைட்!
“மார்க்கபந்துவும், நாகசாமியும் நண்பர்கள். ஒருத்தர் பிளாட்டுக்கு ஒருத்தர் போவார்களாம்.”
“சரி”.
“பொதுவா அந்த வீட்டிலே இருக்கிற எல்லா ஆண்பிள்ளைகளுமே நித்யாகிட்டே ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசிட்டுப் போவார்களாம்.”
“எல்லோருக்கும் அவள் மீது பிரியம் உண்டாம். காரணம் அவள் அழகினாலே!”
“ரைட்!”
“அவளும் யார் பேசினாலும் சுபாவமாகப் பேசுவாளாம்! ஆனா தன் பழக்க வழக்கத்திலே ரொம்ப கரெக்டா இருப்பாளாம்! ஒரு குறை இருக்காதாம்.”
“நல்ல காரெக்டர், இல்லையா?”
“ஆமாம் ஸார் ரொம்ப நல்லவளாம். யாரும் அவள்கிட்டே வரம்பு மீறிட முடியாதாம்.”
சிங் விரல்களால் கண்ணை விழித்தார்.
“ஸார்! அந்த வசந்த் அவளை ப்ளாக்மெயில் பண்ணியிருக்கணும்.”
“எதை வைத்து பண்ணியிருக்க முடியும்? அவள் எதுக்காகப் பயப்படணும்?”
லிங்க் கண்ணை விலக்கினான்.
“அங்கேதான் ஸார் எனக்கும் இடிக்குது.”
“ஏன் லிங்க் அவளுக்கும், இந்த வெடிகுண்டு விபத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?”
லிங்க் கண்ணைத் தாழ்த்தினான். “இருக்க முடியாது ஸார்.”
“அவளையே விடு! வேறு யாருக்காவது தொடர்பு இருக்க முடிய? யாருக்கு அந்த அரக்க மனம் இருக்கும்? அத்தனை குடும்பத்தையும் கொல்கிற மாதிரி வெடி வச்சு…”
“இதெல்லாம் பயங்கரவாதிகள் பண்ணுகிற வேலை!”
“அப்போ அதுக்குத் தொடர்பு உடைய ஆசாமி மார்க்கபந்துதான்.”
சிப்பந்தி ஒருவர் வந்து இன்னொரு பொருளைக் கொடுத்தார்.
சின்னதாக இருந்தது.
உலோகம் போல இருந்தது. ஆனால் ஒரு காகிதத்தைப் போல கிழிந்து இருந்தது.
சின்னத் துண்டுதான் அது! அலுமினியமா, ஈயமா!
“இங்கே கிடக்கட்டும்” என்று பக்கத்தில் போட்டார் சிங்.
இப்போதுதான் அவருக்குச் சட்டென்று நினைவு வந்தது.
அந்த நீண்ட சதுரக் கட்டை இந்த உலோகத் தகடு இதெல்லாம் அச்சடிக்கிற ப்ளாக் சம்பந்தமாக இருக்க வேண்டும். இரண்டு பதிகளும் லே-அவுட் ஆர்டிஸ்டுகள் ஆயிற்றே. சில சின்ன ப்ரஸ்லே இன்றும் இந்த ப்ளாக் உபயோகப்படுது.
“மார்க்கபந்து” என்று உச்சரித்தார் சிங்! “அந்த ஆள் ஏன் இப்போ தலைமறைவாய் போகணும்.”
“அவன் மட்டுமில்லை ஸார். இந்த நாகசாமி, வசந்த் எல்லோருமே ஏன் தலைமறைவாகணும்.”
“அது நல்ல பாயிண்ட் லிங்க்.”
சிங் முகவாயை வருடினார்.
சிப்பந்திகள் இன்னும் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள்.
அவைகளையும் தம் அருகே வாங்கி வைத்துக் கொண்டார்.
அந்த பிரிக்கும் வேலை ஒரு மணி நேரம் எடுத்தது. கடைசியில் அவர்கள் ஒரு நசுங்கிய குப்பைக் கூடையைக் கொண்டு கொடுத்தார்கள்.
உள்ளே பல காகிதங்கள் கசக்கப்பட்டு கிடந்தன. ஒன்றை எடுத்தார் சிங்!
திறந்து பார்த்தபோது, அது கணபதி, பசுபதியின் ‘லெட்டர் ஹெட்டாக இருந்தது.
“இது இங்கே இருக்கட்டும்” என்று வைத்துக் கொண்டார் சிங்!
அதற்கு மேல் சிங் யோசனையிலேயே இருந்தார்.
சிப்பந்திகள் அவ்வப்போது பொருள்களை கொண்டு காட்டிய வண்ணம் இருந்தார்கள்.
இரவு பதினோரு மணிக்கு வேலைகளை நிறுத்தினார்கள்.
சிங் பொறுக்கி வைத்த சாமான்களை சிப்பந்திகள் ஆபீசில் கொண்டு வைத்துவிட்டு விடைபெற்று போனார்கள்.
சிங்கும், லிங்க்கும் மெள்ள போனார்கள்.
“லிங்க்! இப்போ ஒன்று செய்யலாம்! இந்த வசந்த், நித்யா மேலே கவனம் செலுத்துவோம். அவங்க எங்கே போனாங்கன்னு கண்டுபிடிச்சா நம்ம கேசுக்கு வழி பிறக்குதான்னு பார்ப்போம்.”
– தொடரும்…
– காதல் அல்ல காதலி!, முதற் பதிப்பு: 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை