(1998ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம்-9
கோயம்புத்தூரில் இருந்து கிளம்பிய அதிவிரைவு பஸ் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்து கொண்டிருந்த திங்கள்கிழமையில் நேற்று பிற்பகலே தகவல் பெறப்பட்டுவிட்ட சிவசிதம்பரத்தின் வீடு கரிகாலனை கிருஷ்ணகுமாராக வரவேற்கத் தயாராக விழித் திருந்தது. ஆனாலும் ஆனந்த் கேட்டுக் கொண்டபடி சிவசிதம்பரம் வேறு யாரிடமும் தகவலைப் பரப்பாமல் இருந்தார். விரைந்து கொண்டிருந்த பேருந்தின் வேகத்திற்கு ஏற்படி கரிகாலனின் மனமும் அறிவும் அதிவேகமாய் இயங்கிக் கொண்டிருந்தன. என்னதான் விஸ்தாரமாய் திட்ட மிட்டிருந்தாலும் எதிர்பாராத திருப்பத்தின் வேறொரு யதார்த்தத்துடன் துவங்கிக் கொண்டிருக்கும் நாடகத்தின் ஆரம்பம் கரிகாலனை சற்றே பதட்டப்பட வைத்திருந்தன. இந்தத் திருப்பம் வெற்றிக்கான அறிகுறிதானா இல்லை; தோல்விக்கான அபாய அறிகுறியா என அவனால் அனுமா னிக்க முடியவில்லை. தான் இப்படித் துப்பறியும் நிறுவன இளைஞனால் கிருஷ்ணகுமாராகப் பார்க்கப்பட்டு அவனுட னேயே ராஜா அண்ணாமலைபுரம் சென்று கொண்டிருக்கிற பிரமிப்பான செய்தியை செல்வத்திடம் தெரிவிக்க முடியா மல் போயிருக்கிற நிலை வேறு கரிகாலனை வருத்தப் படுத்தியது. எவ்வளவு பெரிய செய்தி இது… தெரிந்தால் எத்தனை சந்தோஷப்படுவான் செல்வம்… மிக இலகுவாக சரஸ்வதி மூலம் செய்தி அனுப்பிவிடலாம். ஆனால் பல காரணங்களால் கரிகாலன் சரஸ்வதியை செல்வத் திற்கு அறிமுகமே இல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான். கரிகாலனின் அறிவில் வேறொரு எண்ணம் சரேலென குறுக்கிட்டது. திட்டமிட்டபடி புதன்கிழமை செல்வம் சிவ சிதம்பரத்தைத் தொடர்பு கொள்ளுவான். அப்போது துப்பறி யும் நிறுவனம் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சேர்த்த தகவல் அவனுக்குச் சொல்லப்படும். அதைக் கேட்டு செல்வம் குழம்புவான்.
என்னடா இது ? புதிய கரடியாக இருக்கிறதேயென்று திகைப்பான். அவனை அந்தத் திகைப்பிலேயே நிலை நிறுத்திவிடலாமா? திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை கரிகாலன்தான் கிருஷ்ணகுமாராக ராஜா அண்ணா மலைபுரம் நுழைந்ததாய் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதற்குப் பதிலாய் நிஜ கிருஷ்ண குமாரே துப்பறியும் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திங்கள் கிழமையே வீடு வந்து சேர்ந்துவிட்டதாகவே செல்வமும் எண்ணிக்கொள்ளும்படி தான் மௌனம் சாதித்து விடலாமா யென்று கரிகாலன் யோசித்துப் பார்த்தான். அப்படி யோசித்துப் பார்ப்பதில் சந்தோஷமும் வந்தது. சிறிது பயமும் வந்தது. துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்தது என்பதால் செல்வம் நம்புவான். ஆனால் கரிகாலன் எங்கே என்ற கேள்வியும் உடனே அவனுடைய மனதில் ஏற்படும். கரிகாலன் தன்னிடம் வந்து சேராதவரை ராஜா அண்ணாமலைபுரம் வந்து சேர்ந்திருப்பது உண்மையில் உண்மையான கிருஷ்ணகுமார்தானா என்ற சந்தேகம் வந்து விட்டால் செல்வம் கண்காணிக்க ஆரம்பித்துவிடுவான். அது ஆபத்தென்று புரிந்தது கரிகாலனுக்கு. என்றாலும் அவன் எந்தவிதமான தீர்மானத்திற்கும் வரவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க நினைத்தான்.
பேருந்து சைதாப்பேட்டையில் நின்றது. பேசிக் கொண்டபடி சரஸ்வதி மட்டும் இறங்கிக் கொண்டாள். பொருள் பொதிந்த பார்வையால் கரிகாலனிடம் விடை பெற்றுக் கொண்டாள். கரிகாலன் கடலில் குதிக்கத் தயாரானவன் போன்ற உணர்வு முனைப்பில் அமர்ந்தி ருந்தான். தேனாம்பேட்டையில் மீண்டும் பேருந்து நின்றது. கரிகாலனும் ஆனந்த்தும் இறங்கினார்கள். ஆட்டோவில் ஏறினார்கள். போக்குவரத்து நெரிசல் இன்னமும் துவங்காத நீண்ட சாலைகளில் ஆட்டோ விரைந்தது. கரிகாலன் வெறுமனே அமர்ந்திருக்க ஆனந்த் ஆட்டோ டிரைவருக்கு வழிகாட்டிக்கொண்டே வந்தான். கடைசியாக ஆட்டோ சிவசிதம்பரத்தின் வீட்டின் முன்னால் போய் நின்றது.
வாழ்க்கையின் மிகப்பெரிய சம்பவத்தின் மிக முதல் கணத்தில் கரிகாலன் கம்பீரமாய் நின்றான். எதையும் நோக்கவில்லை. தோட்டத்தில் நடந்தான். சிவசிதம்பரமும் அவரின் மனைவியும் போர்ட்டிகோவில் இருந்து இறங்கி வந்தார்கள். கட்டிப்போடப் பட்டிருந்த அல்சேஷியன் சங்கிலி குலுங்கி எழும்பிக் குதித்தது. கரிகாலனைப் பார்த்து வாலைக் குழைத்தது… கரிகாலன் சிவசிதம்பரத்தின் பக்கம் திரும்பவே இல்லை. அவரின் மனைவியைப் பார்த்து மட்டும் சிரித்துவிட்டுச் சொன்னான்: “ஸாரிம்மா; நான் போய் என் ரூம்ல ரெஸ்ட் எடுக்கறேன்…”
சொல்லிவிட்டு விடுவிடுவென மாடிப்படிகளில் ஏறி அறைக்குப் போய் விட்டான்…
சிவசிதம்பரம், ஆனந்த்துடன் தோட்டத்தில் நின்று தணிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்….
“அந்தப் பெண்ணை என்ன செஞ்சான்?”
“நான் தலையிடவே இல்லை சார் அந்த விஷயத்ல. அவள் இங்கே சைதாப்பேட்டையிலேதான் இறங்கிப் போனா…ஆனா அந்தப் பெண்ணைப் பாத்தா ரொம்ப சாதாரணமாகத்தான் இருந்தா… அதான் எனக்கு ஆச்சர்யம்…”
“எப்படியோ மறுபடியும் மனசு மாறாமே வீட்டோட அவன் இருந்திட்டா சரி..”
“எந்த புத்திமதியும் சொல்லாதீங்க அவசரப்பட்டு…”
“வாயைத் திறக்க மாட்டேன்…”
”ஓகே சார். நான் உத்தரவு வாங்கிக்கறேன்…”
“உங்க கம்பெனிக்கு ரிப்போர்ட் பண்ணிட்டீங்களா.”
”இன்னும் இல்லை.”
“நான் ஈவினிங் வந்து பணம் பே பண்ணிடறேன்.”
“வாங்க….”
“உங்களுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்…” சிவசிதம்பரத்தின் மனைவி கைகூப்பினாள்.
-இந்தக் காட்சியை அறையின் பால்கனி கதவை மிகச் சிறிதாகத் திறந்து வைத்தபடி கரிகாலன் கவனித்துக் கொண்டிருந்தான். சம்பந்தமே இல்லாத ஒரு பிரதேத்து ஹோட்டல் அறைக்கு வந்திருப்பது போலிருந்தது அவனுக்கு… இயல்பாய் என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டாம் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ள முடிய வில்லை. அறையை கவனித்தான். பொருளாதார செழுமையை அந்த அறைக்குள்ளேயே ஊகித்துக் கொள்ள முடிந்தது.ஒனிடா டி.வி. ஒன்று அந்த அறைக்குள்ளேயே கிருஷ்ணகுமாருக்கு பிரத்யேகமாக இருந்தது. விலை உயர்ந்த ஸ்டீரியோரிக்கார்ட் ப்ளேயர் பெரிய பெரிய ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டிருந்தது. ஒரு பக்கச் சுவர் பூராவும் வால்போஸ்டர் ஒட்டப்பட்டு அறையை விசாலப்படுத்திக் காட்டியது. மூலையில் மூன்று ஜோடி ஷுக்கள் கிடந்தன. கரிகாலன் பீரோவைத் திறந்து பார்த்தான். உடைகள் நிரம்பி வழிந்தன. நிறைய வீடியோ ஆடியோ கேஸெட்டுகள்; இசைத்தட்டுக்கள் இறைந்திருந்தன. பீரோவின் மேல் தட்டில் கோனிகா கேமரா இருந்தது. கரிகாலன் அதை எடுத்துக் கொண்டான். அப்போது கட்டிலின் அருகில் இருந்த இண்டர்காம் ஒலித்தது. இது வேறயா என நினைத்தான். ரிசீவரை எடுத்தான்.
கிருஷ்ணகுமாரின் அம்மா பேசினாள்.
”குமார், காப்பி கொண்டு வரட்டுமா?”
‘நானே கேக்கணும்னு நெனைச்சேன். கொண்டு வாங்கம்மா….”
“அப்பாவையும் கூட்டிட்டு வரட்டுமா?”
“இப்ப வேண்டாம்! குளிச்சி டிபன் சாப்பிட்ட அப்புறம் நானே போய்ப் பேசறேன் அவர்கிட்டே.”
“ஆமா; ஏன் உன்குரல் வேற மாதிரி மாறிப் போன மாதிரி கேக்குது?”
“ஆளே மாறிப் போயிருக்கேனேம்மா! அதான் வாய்ஸும் மாறியிருக்கு! அது வேற ஒண்ணும் இல்லம்மா இருபது நாள் ஊர் ஊரா மாத்தி மாத்திச் சுத்தியிருக்கேனே… கண்ட கண்ட தண்ணி; கண்ட கண்ட சாப்பாடு. அதான் குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு…”
”உனக்கு உடம்புக்கு வேற ஒண்ணும் இல்லையே?”
“உடம்புக்கா? நத்திங். ஐ’ம் அப்சல்யூட்லி ஆல்ரைட்…”
“ஒரு நிமிஷம் இரு. இதோ காப்பி எடுத்திட்டு வரேன்…”
“அப்பா ரொம்பக் கவலைப்பட்டாரா?” கரிகாலன் தேவையுடன் விசாரித்தான்.
”கவலைப்பட மாட்டாரா?”
“கவலைப்பட வேண்டான்னு சொல்லுங்க. இனிமே நான் எங்கேயும் இந்த மாதிரிஓடறதா இல்லை. ஆனா ஒரே ஒரு வேண்டுகோள்ம்மா.”
“சொல்லுப்பா.”
“ஒரு நாலைஞ்சி நாளைக்கு நான் திரும்பி வந்திட்டேன் என்கிற நீயூஸை யாருக்கும் சொல்ல வேண்டாம்.”
“எல்லோருமே கவலையோட இருக்காங்களே குமார்.”
“அப்ப சொல்லிடுங்க. ஆனா யாரும் வந்து என்ளை ஒரு வாரத்துக்கு பார்க்க வேண்டாம்னு கட் அன் ரைட்டா சொல்லிடுங்க. சும்மா வர்ரவங்க போறவங்களுக்கெல்லாம் அழுது வடிஞ்சிக்கிட்டு என்னால பதில் சொல்லிட்டிருக்க முடியாது. அதுக்காகச் சொல்றேன்… சும்மாவே நிம்மதி இல்லாம இருக்கேன். இதுல வேற யாராவது வந்து எரிச்சல் மூட்ற மாதிரி கேள்வி கேட்டா மறுபடியும் ஓடிடுவேன்.”
“யாரும் வந்து உன்னை எதுவும் கேக்கமாட்டாங்க போதுமா?”
“தேங்ஸ்” கரிகாலன் வெற்றிக் களிப்புடன் ரிசீவரை வைத்தான். மேடை துவங்கி விட்டது.
அத்தியாயம்-10
பகல் பன்னிரண்டு மணி அளவில் பொழுது போகாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த செல்வம், சிவசிதம்பரத்தின் கம்பெனிக்கு போன் செய்து பார்க்கலா மென்று நினைத்து, புரசைவாக்கத்தில் பப்ளிக் டெலிபோன் பூத் ஒன்றை நினைவுப்படுத்திக் கொண்டு நடந்தான். இன்று காலையில்தான் பெங்களூர் எர்ணா குளம்போய் கிருஷ்ணகுமாரை தேடிப் பார்த்து விட்டு பலன் இல்லாமல் திரும்பிவந்ததாகச் சிவசிதம்பரத்திடம் அளக்கவேண்டும் என்பதே அவனுடைய எண்ணம். மறுபடியும் புதன்கிழமை அவரை வந்து பார்ப்பதாகவும் சொல்லலாம் என்ற தீர்மானத்துடன் டயல் செய்தான். சிவசிதம்பரம் ஆபிசில் இருந்தார்.
“யெஸ் சிவசிதம்பரம் ஹியர்”.
“நான்தான் விக்ரமன் பேசறேன் சார்…”
”ஓ விக்ரமனா! நானே உங்களைப் பாக்கணும்னு நெனைச்சிட்டிருந்தேன். நல்ல வேளை நீங்களே போன் பண்ணிட்டிங்க… ஒரு குட் நியூஸ் விக்ரமன். என் சன் கிருஷ்ணகுமார் இன்னிக்கு மார்னிங் பத்திரமா வீடுவந்து சேர்ந்திட்டான்.”
செல்வத்திற்கு பகீர் என்றிருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் வாய் அடைத்துப் போய்விட்டது. மிகவும் பிராயாசைப்பட்டுக்கொண்டு கேட்டான்…
“நல்லபடியா வந்துட்டார்- இல்லீயா?”
“நல்லபடியா வந்து சேர்ந்திட்டான். மார்னிங் ஸ்டார் டிடெக்டிவ் கம்பெனி இல்லே?”
“ஆமா!”
“அவங்கதான் கண்டுபிடிச்சிக் கூட்டிட்டு வந்தாங்க..”
“ஊட்டியிலே இருந்திருக்கான். அங்கே பார்த்துத் தான் கூட்டிட்டு வந்தாங்க.”
“ஒண்ணும் ப்ராப்ளம் குடுக்காமே ஈஸியா வந்திட்டாரா?”
“முதல்ல கொஞ்சம் வரமுடியாது அது இதுன்னு தகரார் பண்ணியிருப்பான் போலிருக்கு.”
“எப்படியோ வந்து சேர்ந்தாரே – அது போதும் நமக்கு.”
எத்தனை மறைக்க முயன்றும் செல்வத்தின் குரலில் ஏமாற்றம் தொனித்தது.
“நீங்க என் மகனைக் கண்டு பிடிக்கறதுக்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்கெல்லாம் ரொம்ப நன்றி விக்ரமன்…”
“நன்றி சார்…”
சிவசிதம்பரம் ரிசீவரை வைத்துவிட்டார். செல்வத்திற்கு இன்னும் சில கேள்விகளைக் கேட்க முடியாமல் போய் விட்டதே யென்று எரிச்சலாக வந்தது. படாரென்று ரிசீவரைத் தொங்கவிட்டு விட்டு வெளியில் நடந்தான். ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வெண்ணெய் திரண்டு வந்து கொண்டிருந்தபோது தாழி உடைந்து விட்டாற் போலிருந்தது. எவ்வளவு திட்டம்… எத்தனை பார்வை… மணல் கோபுரமாய் அத்தனையும் கலைந்து போய்விட்டது. திட்டத்தின்படி நாளை காலை கரிகாலன் பயல்வேறு நான் தான் கிருஷ்ணகுமார் என்ற தோரணையோடு சிவசிதம்பரத்தின் வீட்டிற்குப் போய்த் தொலைவதற்கு இருக்கிறானே. எதிர்பாராத சிக்கல் விழுந்துவிட்டதே… கரிகாலன் நாளை அங்கு போய்விடாமல் நடவடிக்கை எடுக்கவேண்டுமே… கடைசியில் கதை இப்படி ஆகிவிட்டதே செல்வம் தலையை பிய்த்துக்கொண்டான். கரிகாலன் நாளை சிவசிதம்பரத்தின் வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிஷமே அவனுக்கு தர்ம அடிதான் கிடைக்கும்!
இந்த வெறுப்பிலே அறைக்குப் போய்ச் சேர்ந்த செல்வம் அறைக்கதவை காலால் உதைத்துத் திறந்தான். கிடைத்த பொருட்களையெல்லாம் மிதித்துத் தள்ளினான். கடைசியில் கடவுள் இப்படி மோசம் பண்ணிவிட்டானே…! வெகு நேரத்திற்கு கோபத்தின் கொந்தளிப்பிலேயே படுத்துக்கிடந்த செல்வம் பின்பு நிதானமாக யோசித்தான். பொழுது விடிவதற்கு முன்பாகவே ராஜா அன்ணாமலைபுரம் போய்விட வேண்டும். அந்தத் தெருவில் பஸ்ஸ்டாப் கூடக் கிடையாது. சும்மா அங்கும் இங்கும் நடக்கவேண்டும். சிவசிதம்பரத்தின் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது. எப்படியாவது கரிகாலனை அவர்களின் வீட்டிற்குள் சென்று விடாமல் தடுத்துவிடவேண்டும்…அது மட்டுமில்லை; இப்படி அநியாயமாய் ஏமாந்துவிட்ட கொடுமைக்கு என்றாவது ஒருநாள் இன்னும் நான்கு பேரை அழைத்து முக மூடிக் கொள்ளைக்காரன் போல் வேஷம் போட்டுக்கொண்டு நிஜமாகவே சிவசிதம்பரத்தின் வீட்டில் பயங்கர கொள்ளையே நடத்திவிடவேண்டும்…!
அப்போதுதான் செல்வத்தின் மனசு சாந்தி அடையும்…!
– தொடரும்…
– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.